Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று :

ஏன் எனக்கு மட்டும்!!!

வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்… அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது.

உடல் மயங்காமல் இருந்து என்ன பயன்.. மனம் மயங்கி???.. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்து இருந்ததே.

அவளை நோக்கி கைகள் தூக்கி விடுவதற்காக நீள, வர்ஷினியின் முகத்தில் வெறுப்பு, துவேஷம், அவனைக் கொல்லும் ஆவேசம்.

“செத்துப் போகட்டும்னு தோணுதா? இப்போ வேண்டாம்!” என்று அவன் சொல்லும் போதே கண்கள் வலியில் மூடின.

அதற்குள் வர்ஷினியின் மொபைல் அடித்தது… கமலம்மா அழைத்துக் கொண்டு இருந்தார். அப்போதுதான் சுற்றுப் புறம் ஞாபகத்தில் வர… “ஐயோ! இது எல்லோருக்கும் தெரிந்தால் எனக்கு எவ்வளவு அசிங்கம்?” என்று தோன்ற ஆரம்பித்தது.

எடுக்காவிட்டாள் அவர் இங்கே தேடி வரும் அபாயம் இருப்பதை உணர்ந்தவள், அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என தீர்மானித்து தன்னை  சுதாரித்துக் கொண்டு எடுத்தாள்..

வர்ஷிம்மா எங்க இன்னும் உன்னைக் காணோம்…

“இதோ வந்துட்டே இருக்கேன் மா… வயிறு சரியில்லை! அதுதான் லேட், பாத்ரூம்ல தான் இருக்கேன்.. அஞ்சு நிமிஷம் வந்துடுவேன்” என்றாள்.

கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடி “எழுந்திருங்க! வெளிய போங்க! யாரும் பார்க்கும் முன்ன!” என்றாள்.

“முடியலை” என்றபடி அவளை நோக்கி மீண்டும் கை நீட்ட..

“எழுந்திருங்க! யாரும் வந்திடப் போறாங்க” என்று அவனை கைப் பற்றி இழுத்தாள், அவளாலும் முடியவில்லை.

“என்ன அச்சு? ஏன் எழுந்திருக்க மாட்டேங்கறீங்க! யாரும் வந்திடப் போறாங்க!” என்று பதட்டமாக ரூமின் வாயிலைப் பார்த்தபடி பேசி அவனை தம் கொடுத்து இழுக்க.. அவனும் கூட முயல… ஒருவாறு எழுந்து அமர்ந்தான்.

அப்போது தான் தான் தரையில் இருந்த ரத்தம், அவளுக்கு தெரிந்தது. ஈஸ்வரின் முதுகுப் புறம் வெள்ளை சட்டையில் இருந்த ரத்தம்.

“ஐயோ!” என்று அவளின் கைகள் தானாக அவளின் வாயைத் தானே மூடிக் கொண்டது.

இப்படி நடந்தது ஒரு புறம்… இதில் அவனுக்கு அடிப்பட்டு இருக்கிறது. யாரும் வரும் முன் அவனால் அங்கே இருந்து போக முடியாது… இப்படி இவன் தன்னிடம் நடந்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்து.. அது தனக்கு அசிங்கம் என்பது ஒரு புறம்… பதட்டதில் பயத்தில் அப்படி ஒரு அழுகை வந்தது. அப்படியே சரிந்து அமர்ந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

பின்பு அவசரமாக முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

“ப்ளீஸ்! இங்க இருந்து போயிடுங்க! யாரும் வந்துடப் போறாங்க!” என்று ஏறக்குறைய கெஞ்சினாள் என்றே சொல்ல வேண்டும்.. அவன் அப்படி நடந்து கொண்ட பயத்தை விட எல்லோருக்கும் தெரிந்தால் தன்னை தவறாக நினைப்பர் என்றே தோன்றியது.

ஊர் உலகத்தில் பெரிய உத்தமனாகத் தன்னை காட்டிக் கொண்டிருப்பவன்… என்னுடைய பிறப்பு எல்லோராலும் விமர்சிக்கப் படும் ஒன்று..

அப்படியிருக்க அவன் மீது தவறு என்று எத்தனை பேர் ஒத்துக் கொள்வர் என்று தெரியாது… ஒரு வேலை தவறு என்று உணர்ந்தாலும் இந்தப் பெண் என்ன செய்ததோ என்ற பேச்சு வர அபாயங்கள் அதிகம்..

நல்லதோ கெட்டதோ தன்னை யாரும் விமர்சிப்பதை அவள் விரும்பவில்லை.

மடிந்து அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தான். பார்த்த நாளில் இருந்து தன்னிடம் ஆர்வத்தோடு வந்து பேசுபவள்… வேறு யாரிடமும் பேசாதவள் கூட…

தன்னுடைய செயல்… மற்றவர்களை விட்டுவிட்டாளும்…. அவனுக்கு எப்போதும் யார் என்ன பேசுவர் என்பது எல்லாம் கிடையாது. ஆனால் தன் செயலை தன்னால் எப்போதும் மன்னிக்க முடியாத ஒன்று என்று தெரியும்.

இப்போது வெளியில் தெரிந்து எல்லோரும் தன்னைக் கீழாக பார்க்கும் தண்டனை.. ஏற்றுக் கொள்வான். ஏன் அது மட்டுமல்லாமல் அவளைச் சேர்ந்தவர்கள் என்ன செய்தாலும் தன்னைக் கொன்று போட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருந்தான்.

ஆனால் இந்தப் பெண் இப்படிக் கதறுகிறேளே!!!

“அழாதே! அழாதே!” என்றவன்…  தம் கட்டி எழுந்தான்… தலையில் ரத்தம் இன்னும் வர… அங்கே சோபா கவரை எடுத்து கிழித்து தலையில் கட்டினான்.

“உன்னை சரி பண்ணு..” என்றான்.

அவன் நிற்பதை பார்த்ததும் அவசரமாக மீண்டும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று புடவை ஈரமாவதை எல்லாம் பொருட் படுத்தாமல் தன்னை சரி செய்தாள்.. கிழிசல் தெரியாதவாறு எப்படியோ மீண்டும் பின் செய்தாள்.

அங்கேயே தலை எல்லாம் சரி செய்து, முகம் எல்லாம் துடைத்து…. என்ன செய்த போதும் வித்தியாசம் தெரிந்தது.

மனம் சோர்ந்து போனது… கண்ணாடியில் தெரிந்த தனது முகத்திடம்… எப்படி அவனால் உன்னிடம் இப்படி நடக்க முடிந்தது? என்ன காரணம்? யாரிடமும் அப்படி நடப்பான் என்று தோன்றவில்லை.. இன்னம் தன்னிடம் நடந்து கொண்டதயே நம்ப முடியவில்லை. ஆனால் தொட்ட இடங்கள்… அது கொடுத்துக் கொண்டிருந்த உணர்வு.. என்ன செய்தால் போகும் என்று தெரியவில்லை”

“என்ன தவறு என்னிடம்…?” மீண்டும் அழுகை வந்தது. என்னால் அங்கே போக முடியாது. யாரையும் பார்க்க முடியாது என்று மனம் ஒரு புறம் நினைக்கத் துவங்கியது.

எல்லோரும் தன்னை பார்த்தால் கண்டு கொள்வர் என்று தோன்றத் துவங்கியது. இதை யோசித்துக் கொண்டே இருந்ததால் நேரம் போவது தெரியவில்லை…

எங்கே வர்ஷினியைக் காணோம் என்று பயந்து போன ஈஸ்வர் கதவைத் தட்ட..

திறந்தாள்.. திறந்தவள்.. “இப்படியே வெளிய போனா எல்லோருக்கும் தெரிஞ்சிடும்” என்று கலங்க…

அந்தக் கண்கள் இப்போது கொல்லாமல் கொன்றது. அப்போதும் கண்களை பார்க்க முற்பட்ட தான் செய்கையை தானே வெறுத்தான்.

எல்லாம் முடிந்தது போன்ற நிராசை அவளிடம்..

“என்னை கீழத் தள்ளிவிட்டு எவ்வளவு தைரியமா சிச்சுவேஷன் ஹேண்டில் பண்ணியிருக்க.. தைரியமா இரு… யு ஆர் அ ப்ரேவ் கேர்ள்” என்றான்.

“அதை நீங்க சொல்லாதீங்க.. யு ……… idiot” என்று திட்ட…

எவ்வளவு மரியாதையாக தமிழில் வாங்க போங்க என்று பேசி… கூடவே ஆங்கிலத்தில் சொல்லும் ஒரு மிக கேவலமான வார்த்தை…

அடிபட்டதை விடவும் வலித்தது. தான் செய்த காரியம் அப்படி? அதுவும் ஒரு பெண் தன்னை பார்த்து இந்த வார்த்தைகளை சொல்லும் அளவிற்கு தான் இருந்திருக்கிறேன்.. என்றுமே அவன் நினைத்துப் பார்த்திராத ஒன்று.

அவனுக்கு தெரியவில்லை தமிழில் இன்னம் கெட்ட வார்த்தைகள் அவளுக்கு பழக்கமில்லை என்று.

அவளைப் பார்ப்பதை தவிர்த்தவன்.. “போகலாமா” என்றான்.

“எங்கே?” என்று அவள் வெடிக்க..

“நீ ஃபங்க்ஷன் நடக்கற இடத்துக்கு… நான் இந்த இடத்தை விட்டு வெளியே!”

எவ்வளவு தைரியம்! எப்படி அசராமல் பேசுகிறான் என்று இன்னம் ஆத்திரமாக வந்தது.

“இப்படியே போனா கண்டிப்பா ஏதோன்னு எல்லோருக்கும் தெரிஞ்சிடும். என்னால போக முடியாது. நான் வீட்டுக்கு போறேன்” என்றபடி ரூமை பூட்ட சாவியை தேடினாள்.

எதுவும் பேச முடியாதவனாகி… அமைதியாக வெளியேறினான். யாரும் பார்க்கும் முன்னர் வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்தவள் அவசரமாக பூட்டி.. ஈஸ்வர் சென்று விட்டானா என்று பார்க்க.. அங்கே தான் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்தவள், “உங்களை விட இன்னும் யாரும் எதுவும் என்னை செய்ய முடியாது அண்ட் நீங்கன்றதால தான் உயிரோட இருக்கீங்க.. கிளம்புங்க” என்று சொல்லி அடி எடுத்து வைக்க…

தாஸ் இவளைத் தேடி அங்கே வந்து விட்டான்.

வர்ஷினியின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

“இங்க என்ன பண்றீங்க… அய்யா உங்களை பார்த்துட்டு வர சொன்னார்” என்று பேசிக் கொண்டே வந்தவன்… இவளுடய அலுங்கிய தோற்றம்.. அழுத முகம்… கூட ஈஸ்வர் தலையில் கட்டுடன்… அதுவும் அவனின் வெண்ணிற சட்டையில் ரத்தம்…

“என்ன? என்ன ஆச்சு?” என்று அருகில் ஓடி வந்தான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் வர்ஷினி தடுமாற.. கூடவே முகத்தில் பயம்… முகமே வெளுத்து விட்டது.

அவளின் இந்த பாவனையில் இன்னம் பதறி “என்ன ஆச்சு… உங்க தலையில என்ன கட்டு?” என்று ஈஸ்வரையும் கேட்டான். சற்றும் அவனுக்கு ஈஸ்வர் ஏதாவது செய்திருப்பான் என்று தோன்றவேயில்லை.

அந்த நொடியைத் தனக்கு சாதகமாக்கிய ஈஸ்வர்… “எனக்கும் சில பேருக்கும் அடிதடி… அதைப் பார்த்து பயந்துட்டா” என்றான்.

“எதுக்கு? எதுக்கு அடிதடி?”

“எங்க ஃபைனான்ஸ் பிரச்சனையால” என்றான்.

வர்ஷினியின் முகத்தில் இருந்த பதட்டம் படிப்படியாக குறைந்தது.

“எவன் அவன் சொல்லுங்க, அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தாஸ் ஆவேசமாக பேச…

“அது பார்த்துக்கலாம்! முதல்ல நீ வர்ஷினியை வீட்டுக்கு கூட்டிட்டு போ!”

“உங்க தலை… ரொம்ப அடி போலவே! நான் முரளி சார்க்கு சொல்றேன்” என்று தொலைபேசி எடுத்தான்.

“தாஸ் எனக்கு ஒன்னுமில்லை..” என்று அதட்டலாக சொன்னவன்… “முதல்ல இவளை வீட்டுக்குக் கூட்டிட்டு போ!”

“ஆனா அய்யாக் கிட்ட சொல்லாம எப்படி?” என்று தாஸ் யோசிக்க…

“நான் சொல்லிக்கறேன்! நீங்க கார் எடுங்க தாஸண்ணா..” என்றவள்.. “போங்க! நான் வர்றேன்!” என்று சொல்லிய விதமே.. தன்னை அங்கே இருந்து வர்ஷினி போக சொல்கிறாள் என்று புரிந்து தாஸ் நடக்க ஆரம்பிக்கவும்..

ஈஸ்வரை பார்த்து அப்போதும் மெல்லிய குரலில் “யார் கிட்டயாவது சொன்னீங்க…” என்று விரல் நீட்டி எச்சரிக்க…

குரல் கடுமையாக எச்சரிக்கும்படி தான் இருந்தது.. ஆனாலும் அந்தக் கண்களில் தெரிந்த பயம்.. ஈஸ்வர் என்ன மாதிரி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

“தப்பு செய்தது நான்! ஆனால் நான் பயமின்றி நிற்கின்றேன்… இவள் எப்படி பயம் கொள்கிறாள்.. என்ன செய்திருக்கிறேன்.. இன்னொரு வார்த்தையில் பலாத்காரமா… அன்றாடம் நான் செய்தியில் படித்து… அதில் கூட ஒரு செய்தி என்று கொள்ளாமல் வெறுக்கும் ஒரு செயலை நான் செய்திருக்கின்றேன்”.

“இறைவா! எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு… ஆனால் எனக்கு மட்டும்… இந்தப் பெண்ணை எந்தத் துயரமும் அண்ட வேண்டாம். என் பாவம் என்னோடு… என்னை மட்டுமே  சேர வேண்டும்”.

இதையெல்லாம் வேண்டியபடி வர்ஷினியைப் பார்த்து… “எப்பவுமே வெளில வராது.. என்னோட மட்டும் தான் போகும்” என்றான்.

அவனின் கண்களில் என்ன கண்டாளோ…???

“ஏன் இப்படிப் பண்ணுனீங்க… என்ன தப்பு என்கிட்டே.. யார் கிட்டயும் நீங்க இப்படி பண்ண மாட்டீங்க தானே! ஏன் என்கிட்டே மட்டும் பண்ணுனீங்க!” என்று கண்களில் நீரோடு கேட்க..

ஈஸ்வருக்கு இறக்காமல் இறந்த தருணம்!!!

“இல்லை! உன்கிட்ட எந்த தப்புமில்லை.. நான் நல்லவனில்லை.. தப்பு என் மேல தான்” என்று சொல்லிக் கொண்டே தாஸைப் பார்க்க.. அவன் இவர்களை தான் பார்த்து நின்றிருந்தான்.

“நீ போ!” என்றபடி.. ஈஸ்வர் வேகமாக விரைந்து விட்டான்.

தாஸிற்கு அவர்களைப் பார்த்து ஓரே யோசனை…

கமலம்மாவை அழைத்தவள்… “அம்மா எனக்கு ரொம்ப வயிறு வலி… எனக்கு வீட்டுக்குப் போகணும் தாஸண்ணாவோட போறேன்”

“என்னடா? என்ன ஆச்சு?” என்று வர்ஷினின் குரலைக் கேட்டு அதில் தெரிந்த வலியில் அவர் பதற

“ஒன்னுமில்லைம்மா.. நான் கொஞ்சம் கவனிக்காம விட்டுடேன்.. பீரியட்ஸ்…” என்று பொய் சொல்லி ஈஸ்வர் கேவலப்படுத்தியதையும் விட இப்போது தன்னை தானே கீழாய் உணர்ந்தாள்.

“அப்பாக் கிட்ட ஏதாவது சொல்லி சமாளிங்க அம்மா! எனக்கு போகணும்!” என்றவள் “தாஸண்ணா….” என்றுக் கூப்பிட..

“சொல்லுங்க பாப்பா!” என்று அவன் சொல்வது தொலைபேசியில் கேட்க.. “சரி! பத்திரமா போடா!” என்றார்.

தாஸ் வர்ஷினியை வீட்டில் விடவும்…. அவளின் ரூம் நோக்கி விரைந்து விட்டாள்.

இங்கே கமலம்மா அவளுக்குத் தலைவலி அதிகமாக இருந்தது அதனால் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன் என்று சொல்லி சமாளித்தார். கமலம்மா சொல்வதால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. எல்லாம் நிஜம் என்றே நினைத்தனர்.

ஏன் தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டாள் என்று ராஜாராமிற்கு யோசனை…

ஒரு வழியாக உறவினர்களுக்கு விடைக் கொடுத்து எல்லோரும் அவரவர் வீடு வந்து சேர பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.

தாஸ் ராஜாரமிற்காகக் காத்திருந்தான். அவனின் முகத்தை பார்த்ததுமே ஏதோ விஷயம் என்று அவர் பின் தங்க.. எப்போதும் அவர்கள் தனியாக பேசுவது வழமை என்பதால்.. “சீக்கிரம் தூங்குங்கப்பா! நேரம் ஆகிடுச்சு!” என்று பிள்ளைகள் செல்ல.. தாத்தாவும் உறங்க சென்று விட… கமலம்மா உடை மாற்றி வர சென்றார்.

“என்ன தாஸ்?”

“அய்யா!” என்றவன்… தான் பார்த்ததை அப்படியே உரைத்தான்…

“என்ன?” என்று அதிர்ந்தார்… அவருக்கு புரிந்த சாராம்சம்… ஏதோ அடிதடி ஈஸ்வருக்கு அடிப் பட்டு இருக்கின்றது. அதற்காக தன் மகள் அழுதிருக்கின்றாள்… அண்ணனின் திருமண வரவேற்பைக் கூட விட்டு வந்திருக்கிறாள் என்பது தான்.

தாஸை பார்க்க.. “என்னை அனுப்பிட்டு தனியா பேசினாங்க… ஒரு வேலை நம்ம பாப்பாக்கு ஈஸ்வர் சர் மேலே இஷ்டமோ” என்ற அதி முக்கியமான கேள்வியைக் போட்டான்.

“அப்படியும் இருக்குமோ” என்ற யோசனை ராஜாராமின் மனதில் ஓட ஆரம்பித்தது. அவரும் தானே பார்த்தார் ஈஸ்வரும் வர்ஷினியும் அங்கேயே தனியாகப் பேசியதை.

“அப்படியா சொல்ற…?”

“எனக்கு என்னமோ அப்படி தான் தோணுதுங்க அய்யா.. நம்ம பாப்பா யாரோடையும் பேசாது.. நிறைய தடவை ஈஸ்வர் சாரோட தனியா பேசி பார்த்துட்டேன். ஒரு வாரம் முன்னக் கூட ஷாப்பிங் மால்ல பேசினாங்க!”

“நீயேன் என்கிட்டே சொல்லலை…?”

“அது சும்மா நேர்ப் பட்டு இருக்கும்னு நினைச்சேன். இப்படி நினைக்கலை…”

“ரொம்ப அடியா ஈஸ்வருக்கு”

“ஆமாங்கய்யா நிறைய ரத்தம்…”

“ஃபோன் போடு! எடுக்கறானான்னு பார்ப்போம்..”

ஃபோன் எடுக்கப்படவில்லை..

“வீட்டுக்கு பத்திரமா போயிட்டானா தெரியலையே” என்றார் கவலையாக…

எங்கேயும் யாருக்கும் ஈஸ்வர் மேல் சந்தேகம் இல்லை.

“யார் அடிச்சிருப்பா? என்ன தைரியம்..? நீ முதல்ல போய் அங்க ஹோட்டல் காரிடார்ல.. ஸீ ஸீ டீ வீ கேமரா இருக்கும்… எப்படியும் ஆளுங்க பதிஞ்சிருப்பாங்க. என்ன அடி தடி பாரு!” எனவும்…

“தோ! கிளம்பறேன் அய்யா… ஈஸ்வர் சார் வீட்டுக்குப் போயிட்டாரா நான் பார்த்துக்கறேன்… நீங்க தூங்குங்க…” என்று சொல்லி தாஸ் கிளம்ப..

ராஜாராம் ஃபோன் செய்த நேரம்… ஈஸ்வர் அந்த ஹோட்டலின் ஸீ ஸீ டீ வீ கேமரா பதிவுகள் இருக்கும் கம்ப்யுட்டர் அறையில் தான் இருந்தான்.

முதலில் வர்ஷினி அறைக்குள் போவது சிறிது நேரம் கழித்து.. இவன் போவது.. பிறகு நேரம் கழித்து இருவரும் வெளியே வருவது. அதில் அவனின் தலையில் கட்டு… சட்டையில் ரத்தம்.. வர்ஷினியின் அழுது ஓய்ந்த முகம் எல்லாம் தெரிய….

. பக்கத்தில் நின்று இருந்த மேனேஜருக்கு பெரும் பணம் கொடுத்து  அதை அழிக்க ஆரம்பித்தான். “நான் இதை அழிச்சிட்டேன்.. இதுல ஒன்னுமில்லை.. ஒன்னும் நடக்கவும் இல்லை. நான் அழிச்ச காரணம் வேற.. நான் இங்க வந்தேன், என்னவோ அழிச்சேன்ன்னு விஷயம் உன் மூலமா வெளிய வந்தது, உனக்கும் இந்த கதி தான்!” என்று சொல்லியபடி எழுந்தான்.

வார்த்தைகள் என்ன அவனின் பார்வையே பயத்தைக் கொடுக்க… “சே! சே! ஒரு வார்த்தை வராது!” என்றான் மேனேஜர். உண்மையில் அதில் ஒன்றுமில்லை தான். என்னவோ காரணம் பா நமக்கு எதுக்கு வம்பு என்று அவன் நகர்ந்து விட்டான்.

மீண்டும் அந்த இரவில் ஈஸ்வர் காரை ஓட்ட… எதுவோ தன்னை துரத்துவது போன்ற உணர்வு.. அந்தக் காரிருள் ஒரு அச்சத்தைக் கொடுத்தது. அவன் செயல்.. அவனுக்குக் கொடுத்தது.

அதுவரை சிறிதாக இருந்த வலி இப்போது பலமடங்காக தோன்ற.. எந்த ஹாஸ்பிடல் போகலாம் என்று யோசித்துக் கொண்டே ஓட்டினான்.

என் வலி தீர… ஒரு வழி என்ன?

 

Advertisement