சூர்யா கிளம்பு என்றதும் அறைக்குள் சென்றவள் தேவையானவற்றை எடுத்து செக்யூரிட்டியிடம் தந்து விட்டு , சமையலறைக்குச் செல்லப் போனவளை , “அங்க என்ன எடுக்கப் போற … எதுவும் வேண்டாம்.”
அவன் சொன்னதைக் காதிலேயேப் போட்டுக் கொள்ளாதவள் அங்கிருந்த இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்தவன் , “வேற வாங்கிக்கலாம் வா”
அவனைப் பார்த்தவள் , “இத்தனை வருஷம் என்னைய வயிறு வாடாம பார்த்துக்கிட்டது அது தான். அதை எப்படி விட்டுட்டுப் போவேன்”
அந்த ஸ்டவ்வையும் அவளையும் பார்த்தவன் , அது வாங்கியதற்கான காரணம் ஞாபகம் வர முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவளுக்கும் ஞாபகம் வர அவனது புன்னகைக்கான காரணம் அறிந்து , ” சார் அது அப்போ … இப்போ எந்த ஸ்டவ்வானாலும் , எத்தனை பேருக்குனாலும் சமைத்து தந்திடுவேன் ….. எக்ஸ்பர்ட் ஆகிட்டேனாக்கும்.” என்று புன்னகைத்தவள், வெளியே நின்றவர்கள் யாரையும் சட்டை செய்யாது சூர்யா பின்னாலயே சென்று விட்டாள்.
போய் காரில் அமர்ந்துக் கொண்டு குழந்தையையும் வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அமைதியாக காரை எடுத்தவன் , “எங்க போறோம்னு கேட்க மாட்டியா”
“ஒரு ஒரு வாரம் எங்களுக்கு நிரந்தரமா தங்க இடம் பார்க்கிற வரைக்கும் எங்களை சேஃபா ஒரு இடத்துல விடுவீங்க அப்படிங்கிற நம்பிக்கை இருக்கு ….”
“பரவால்லயே அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கா என் மேல “
“நான் வர்ற வரை அன்னம்மா கூட இருனு நீங்க தானே சார் சொன்னீங்க. நீங்க திரும்ப வருவீங்கன்ற நம்பிக்கைல தானே சார் நாலு வருஷமா யாருனே தெரியாத அன்னம்மா கூட இருந்தேன்”
“ஓ…. தேங்க்யூ தேங்க்யூ வெரி மச்.ஆனா உனக்கு நான் தந்த பணத்தை நீ தொடக் கூட இல்லை…”
“அது … நீங்க என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறவரை என் பணம் தான்ங்கிற எண்ணம் இருந்தது. அதற்கப்புறம் அது உங்க பணம் அப்படிங்கிற எண்ணம் வந்துருச்சு ….இன்னொருத்தர் காசுல வாழ எனக்கு விருப்பமில்லை. கவர்மென்ட் ஸ்காலர்ஷிப்ல இன்ஜினியரிங் சேர்ந்துட்டேன். அதை தக்க வச்சுக்க நல்லா படிச்சு மார்க்கும் எடுத்துட்டேன். எனக்கான தனிப்பட்ட செலவுகளுக்கு என்னால முடிஞ்ச சின்ன சின்ன வேலைகள் செய்தேன். இப்ப கை நிறைய சம்பளம் இருக்கே சார்…அது போதும் எனக்கும் என் பையனுக்கும்.”
அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை .ஒரு பெரிய கேட்டின் முன் வண்டியை நிறுத்த , செக்யூரிட்டி கதவைத் திறந்து விடவும் உள்ளே காரைக் கொண்டு நிறுத்தியவன் , இறங்கி இந்தப் பக்கமாக வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான்.
“வா உள்ளே போகலாம்” , அவன் முன்னாடி வீட்டிற்குள் செல்ல பின்னேயே மெதுவாகச் சென்றவளை , ” செல்லம் … என் பட்டு … எப்படிம்மா இருக்க , எங்க பட்டு இத்தனை நாளா இருந்த … படிக்க போன புள்ளைய பத்தி யாருகிட்ட கேட்கனே தெரியல … நல்லாருக்கியா பட்டு “
வந்து கட்டிக் கொண்ட பாக்கியத்தைக் கண்டு திகைத்தவள் , அவரை விட அதிகமாக இறுக்கி கட்டிக் கொண்டவள் , “பாகீமா…. பாகீமா ” என்று தேம்பி தேம்பி அழுதவள் ,
” எப்ப இந்த ஊருக்கு வந்தீங்க பாகீமா,  உங்க கூட தங்க தான் கூட்டிட்டு வந்துருப்பார் போல …. சென்னைல இருந்துட்டே என்னைப் பார்க்க வரலைல… போங்க உங்க கூட சண்டை… நான் உங்களை எவ்வளவு தேடுனேன் தெரியுமா”
அவள் தாடையைப் பிடித்துக் கொண்டவர் , “நீ மாறவே இல்ல பட்டு … பெரிய ஐயா போனதுக்கு அப்புறம் நான் யாருக்கிட்ட பட்டு உன்னைக் கேக்கிறது. இந்த வீடு உ… “
குர்யா கையில் குழந்தையோடு வந்தவன் ,”ஆண்டி உங்க ரோஸ் பட் அது என்ன ….. ஆன்.. பட்டு ரோஸ் பார்த்ததும் என்னைய மறந்துட்டீங்களா , காலையிலருந்து நாங்க யாரும் சாப்பிடல … சாப்பிட ரெடி பண்ணுங்க”
“இதோ போறேன் சின்னய்யா…  இல்ல சார்.. ” என்றவர்  அவன் கையில் சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து திகைத்து , அருகில் வந்தார்,
“சார்… சார் இது இது யார் குழந்தை ….”
“நல்லாப்பாருங்க ஆண்டி ….குட்டிப்பையன் யார் போல இருக்கார்.. ” என்று புன்னகையுடன் கேட்டான்.
குழந்தையை நன்கு உற்றுப் பார்த்தவர் , “அது …அது.. நம்மப் பெ… ” என்று மேலும் பேசப் போனவரை “என் குழந்தை பாகீமா ” என மாலா கூறவும் , மேலும் திகைத்துப் போனவர் .அவளருகில் வந்து  மேலும் கீழுமாகப் பார்த்தவர் , அவள் கையை இழுத்துக் கொண்டு சமையலறை நோக்கிச் சென்றவர் ,
” பட்டு … கழுத்துல தாலி இல்ல , நெத்தியில குங்குமம் இல்ல … யாரும்… யாருகிட்டயும்… ஒரு வேளை தாலிலாம் போட்டுக்காத வேற மதத்துக்காரவுகள காதலிச்சு கட்டிகிட்டியா பட்டு .. உன்னைய படிக்க வைக்கத்தானே கூட்டிக்கிட்டு வந்தாவ… சொல்லுபட்டு … பேர புள்ள அப்படியே பெரிய ஐயாவ உரிச்சு வச்சாப்புல இருக்காங்களே… ஒரே குழப்பமா இருக்கு பட்டு”
அவரது பதட்டத்தையும் ,பேச்சையும் கேட்டு நெகிழ்ந்தவள், “பாகீமா… உங்க பட்டு படிக்கத்தான் வந்தேன். எனக்கு அந்த வயசுல படிப்பு மட்டும் தான் மண்டைல இருந்துச்சு … காதலா… அப்படின்னா என்னனுக் கூட இப்ப வரைக்கும் தெரியாது….வந்த இடத்துல மாமா கல்யாணம் பண்ணி வச்சு, படிப்பு முடிஞ்சு வேலைல சேர்ற வரை சார் தான் பொறுப்புனு சொல்லிட்டார்..”
” என்கிட்ட சொல்லவே இல்லயே தங்கம் … மாப்ள யாரு .. எங்க இருக்காங்க … உன்னைய சந்தோஷமா வச்சுருக்காங்களா”
“பெரிய மாமா பார்த்து வச்சவங்க எப்படி குணமா இல்லாம இருப்பாங்க பாகீமா. பெரிய மாமா சொன்னபடி சொல் தவறாமல் என்னைப் பார்த்துக்கிட்டார்… அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். போலி முகமூடி போட்டு வாழ்ற இந்த உலகத்துல , உண்மையா இருக்கிறவர்.  நேரம் வரும் போது அவரே உங்க முன்னாடி வந்து நிப்பார். என் மேல நம்பிக்கை இருக்கில்லயா பாகீமா. நான் நீங்க வளர்த்த பொண்ணு பாகீமா … நான் தப்பான வழில போகமாட்டேன்.”
அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் சமையலறை பின் வாசலை அடைந்து அந்த தோட்டத்தையேப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் , “எனக்கு காலேஜ் போக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு என்னைய ஹாஸ்டல்ல சந்தோஷமா விட்டுட்டு வந்த மாமாவ திடீர்னு ஆஸ்பத்திரில படுக்கைல பார்த்ததும் , உலகமே இருட்டிருச்சு பாகீமா…. “கைகளைக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு அழுதவள் ,
“எனக்கு மாமாவும் இல்லாம போயிட்டாருன்னா , நான் என்னாவேன்… ஆனா மாமா , மாமா ….” கண்களை துப்பட்டா கொண்டு அழுந்த துடைத்தவள் ,
 “எனக்கு பெரிய மாமா படிப்ப மட்டும் தரல பாகீமா… வாழ்க்கையே தந்துட்டு போயிருக்கார். இந்த உலகத்துல  நான் வாழ்ந்தே ஆகணும்னு அவரே எனக்கு  மகனா பிறந்து சொல்லாம சொல்லிட்டார். அவர நான் நல்லபடியா வளர்க்கணும் , எனக்கு அது போதும்.”
“என்ன பட்டு சொல்ற … எனக்கு இன்னும் விளங்கலயே…. உன் வீட்டுக்காரர் இப்ப உன் கூட இல்லையா… எங்க இருக்கார் பட்டு… “
அதற்குள் குழந்தை அழுகைச் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர். “ரோஸ் பட் ரொம்ப பசி போல , சாப்பிட எடுத்து தாங்க ஆண்டி… “
“இதோ” என்றவர் சாப்பாடு எடுத்து வைக்க சென்றார்.
“ரோஸ் பட் வா சாப்பிடலாம்” என அழைக்கவும் அவளும் சென்றாள்.மேஜையில் குழந்தையை அமர வைத்தவனிடம் , “நீங்க சாப்பிடுங்க சார் , நான் அவருக்கு ஊட்டுறேன்…. இது உங்க வீடுங்களா சார்… பாகீமா இங்க எப்ப வந்தாங்க”
” இருக்கட்டும் … நானே ஊட்டுறேன். அப்புறம் என்னக் கேட்ட .. இது என் வீடு இல்ல .. உங்க மாமா வீடு .. பாக்யம் ஆண்டி ஒரு ரெண்டு வருஷமா இங்க தான் இருக்காங்க…”
நாற்காலியில் இருந்து பட்டென்று எழுந்தவள், வாயில் உணவை வைத்திருந்த குழந்தையையும் அழ அழ தூக்கிக் கொண்டு , ” நான் என் கூட வேலைப் பார்க்கிற பொண்ணுக்கூட தங்கிக்கிறேன். அவ தனியா வீடு எடுத்து இருக்கா. அவளுக்கு சிரமம் இருக்க கூடாதுனு தான் நான் உங்களுக்கு ஃபோன் போட்டேன். இல்லைனா நான் அங்க போகலாம்னுதான் இருந்தேன். நான் வாறேன் சார்.பாகீமாகிட்டயும் சொல்லிடுங்க “என்றவள் பேசிக் கொண்டே வெளிவாசலை அடைந்தாள்.
வேகமாக அவள் முன் வந்து நின்றவன் , “என்ன செய்ற நீ, சாப்பிட்டுட்டு இருக்கிற பிள்ளைய தூக்கிட்டு வாறே . எதுவானாலும் உள்ள வந்து பேசலாம் வா” என குழந்தையை வாங்கி சமாதனப்படுத்தினான்.
“இல்ல சார் … இது மாமா வீடுனு தெரியாது .. நாங்க போறோம்… “
“ஏன் உங்க மாமா உயிரோட இல்லனாலும் இது அவர் வீடு தானே.. “
“அது ..அது.. அத்தை ..”
“அத்தை அத்தை….அவங்க அப்ப உங்கிட்ட என்ன சொன்னாங்க தெரியாது. ஆனா இப்ப அவங்களால எதுவும் செய்ய முடியாது. வா .. அவங்களப் போய் பார்க்கலாம் “
“இல்ல சார் நான் போறேன். ஆதிய எங்கிட்ட கொடுத்துருங்க… நான் போறேன்…”
“சரி போ… இப்ப அவங்கள நீ பார்க்கலனா .. இனி எப்பவும் நீ மட்டுமல்ல யாருமே பார்க்க முடியாது”
” என்ன சொல்றிங்க சார்”.. அங்கு இவர்களைத் தேடி வந்த பாக்கியம்மாவை அழைத்து , “ஆண்டி இவள அவங்கத்தைகிட்ட கூட்டிட்டுப் போங்க”
” வா பட்டு ” என்றுக் கைப் பிடித்து அழைத்துப் போனவர் ,  வெள்ளியிலயே வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு அறையின் முன் நிறுத்தி , நீ இங்க இரு , நான் வாறேன் என்றவர் , உள்ளே சென்று விட்டு வரும் போது ஒரு செவிலியப் பெண்ணுடன் வெளியே வந்தார்.
” உள்ள வா பட்டு… உங்க அத்தையப் பார். எப்படி இருந்தவங்க .. எப்படி ஆகிட்டாங்க பார்” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள். அன்று கல்லூரிக்கு அவளைப் பார்க்க அவர் வந்தபோது கடைசியாகப் பார்த்தது. அவள் கல்லூரி தோழிக்கூட அவரைப் பார்த்து,
“யார் டி அது. ஆள் சைசும் நகையும் டிரஸ்ஸிங்கும் அப்படியே சீரியல் வில்லி மாமியார் மாதிரி இருக்காங்க.”
” பெரியவங்கள அப்படி எல்லாம் சொல்லாதடி , அவங்க என் அத்தை , ரொம்ப நல்லவங்க தெரியுமா”
அன்றைய தினத்தை நினைத்துப் பார்த்தவள்.. பாக்கியத்தின் பேச்சில் நிகழ்வுக்கு வந்தாள். ” பட்டு , ரெண்டு வருஷமாச்சு , சுகர்னாங்க , பிரஷர்னாங்க அப்படியே எல்லா வியாதியும் சொல்லிட்டாங்க… அவங்களால பேச முடியாது நடக்க முடியாது பட்டு… எல்லாம் மெஷினுல தான் … சாரு வெளிநாட்டுக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டுனாரு … எங்கயும் முடியாது சொல்லிட்டாங்க … அதான் வீட்லயே ஆஸ்பத்திரில உள்ளத வச்சாச்சு, இன்னைக்கோ நாளைக்கோனு சொல்லப் போய் தான் சாரு வெளிநாட்டிலருந்து சீக்கிரம் திரும்பி வந்துட்டார்.”
அவளால் பேசவே முடியவில்லை. நின்றது நின்றபடி , பார்த்தது பார்த்தபடி நின்றாள். உடல் இருக்கிறதா என்றுக் கூட தெரியவில்லை. கண்கள் குழிக்குள் இருந்தன தோற்றத்திலும் , செயலிலும் எப்போதும் கம்பீரமும் , ஆளுமையும் காட்டும் அவளது அத்தைக்கு .
பாக்கியம் அவளை அருகழைத்துச் சென்றவர் , ” அம்மா இங்க பாருங்க உங்களைப் பார்க்க யாரு வந்துருக்காங்கனு … “
மெல்ல கண் திறத்துப் பார்த்தவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.பாக்கியம்மாள் கண்களைத் துடைத்து விட மூச்சு வாங்க ஆரம்பிக்கவும் , வெளியில் போய் “நர்சம்மா, நர்சம்மா வாங்க” என அழைத்து வந்தார். உடனே என்னவென்றுப் பார்த்தவர் ,முதலுதவிகள் சில செய்து விட்டு மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார்.
அதற்குள் உள்ளே வந்த சூர்யா என்னவென்று விவரம் கேட்க , நடந்ததைத் தெரிவித்தார் பாக்கியம்மாள். சட்டென்று மாலாவை அறையை விட்டு வெளியே அழைத்து வந்தவன்.
” உன்னைப் பார்த்ததும் இவ்வளவு எமோஷனல் ஆகிறாங்கனா …. நீ … நீ …   அவங்கள நீ இடையிலப் பார்த்தியா”
கண்ணில் நீர் வருவேன் என்றுக் காத்திருக்க , அவனிடம் , “ம் …. நீங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகறதுக்கு முன்ன காலேஜ்க்கு வந்து என்னைப் பார்த்தாங்க”
“அப்ப … நீ அந்த வீட்லயும் இருக்காம, யாருடனும் தொடர்புலயும் இல்லாம இப்படி ஒதுங்கி இருக்க அவங்கதான் காரணமா”
“இல்ல … இல்ல… நான்தான் காரணம் , நான் மட்டுமே தான் காரணம் , அத்தைக்கு… அத்தைக்கு.. என்னாச்சு .. நீங்க fbலயும் அவங்களப் பத்தி ஒண்ணுமே சொல்லல… “
“அது … ஆமா நீ fbல என்னை எந்த நேம்ல ஃபாலோப் பண்ற “
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் , குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கவும் அங்கேச் சென்று விட்டாள்.
அதற்குள் மருத்துவர் வந்துவிட ,பரிசோதித்தவரிடம் “ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிரலாமா டாக்டர் ” எனக் கேட்ட சூர்யாவிடம்,
“உங்க திருப்திக்கு கூட்டிட்டுப் போகலாம்.… ” என்றவரிடம் மேலும் கேட்க முடியவில்லை. அந்தப் பெரிய ஹாலின் சோபாவில் தலை சாய்த்துப் படுத்தவன் கரங்கள் முகத்தை மூடியிருந்தன.
அதுவரை குழந்தைக்கு உணவூட்டி ,தூங்க வைத்தவள் பாக்கியம்மாவிடம் கேட்டு அவரறையில் படுக்க வைத்துவிட்டு வந்தாள்.
சூர்யா படுத்திருந்தக் கோலத்தைப் பார்த்தவள் , அவனருகே சென்று , ” சார் அத்தைக்கு ஒன்னும் ஆகாது” என்றாள்.
குரல் கேட்டதும் கைகளை எடுத்தவன் , விரக்திப் புன்னகை ஒன்றை சிந்தி எழுந்தமர்ந்தான். போனில் சிலரிடம் பேசியவன் அதை அணைத்து வைத்து விட்டு ,
“பையன் தூங்கிட்டாரா “
“ம், காலையிலயே அவங்கலாம் எழுப்பினதுல சீக்கிரம் எழுந்துட்டார். அதான்…. இப்போ தூங்கறார்”
“எங்க படுக்க வச்ச ” , “பா… பா.. பாகீமா ரூம்ல” , எழுந்து நேரே அவரறைக்குச் சென்று , குழந்தையைத் தூக்கிக் கொண்டவன் , படியேறி மாடிக்குச் சென்று அவனறையில் அவன் கட்டிலில் படுக்க வைத்து , தானும் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.
திடீரென்று கதவு தட்டப்படும் சத்தத்தில் விழித்தவன் , குழந்தையும் விழித்துவிடக் கூடாதே என்று வேகமாக கதவருகேச் சென்றான்.
அந்த செவிலியர் தான் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். சூர்யாவின் பயந்த முகத்தைப் பார்த்த அவர் , “அம்மா பூமாலை பூமாலை னு சொல்றாங்க சார். முடிஞ்சா பூமாலை கொண்டு வாங்க… ” சொல்லி முடிக்கவில்லை , வேகமாக உள்ளே நுழைந்தவன் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு, படியிலிருந்து இறங்கி , இவன் வருவதையே மாடிபடியருகில் நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த ‘ மாலா’வையும் அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றான்.
கையில் பிள்ளையோடு சூர்யாவைப் பார்த்தவர் கண்கள் மறுபடியும் குளமாகின. தன்னால் இயக்க முடிந்த இடது கையை எடுத்து ,சுவாசத்திற்காக போட்டிருந்த குழாய்களை தடுத்த செவிலியரையும் மீறி அகற்ற முயல , 
“சார் … சார்…. ரிஸ்க் சார்… நீங்க சொல்லுங்க”
சூர்யா ஏதோ சொல்ல வர , “பாக்யம் ” என அழைத்தார். அருகில் வந்தவரிடம் மெதுவாக ஏதோ சொல்லவும் , அதைப் புரிந்துக் கொண்டவர் வேகமாக வெளியே சென்ற பாக்யம்மாள் அவர் சொன்ன பெட்டியை எடுத்து வந்து திறந்து அவர் மெத்தையருகே வைக்க , அதில் இருந்த மாங்கல்யம் கோர்க்கப்பட்ட பொன்தாலியை எடுத்து சூர்யாவை நோக்கி நீட்டினார்.
பார்த்தவன் திகைத்து மாலாவைப் பார்க்க , அவளோ அவள் மாமன் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பாக்கியம்மாளிடம் குழந்தையை தந்தவன் , மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு அவள் முன் நின்று, “போட்டு விடவா, நீ வேண்டாம் சொன்னா போட மாட்டேன்” என்றான்.
அவள் அத்தையைப் பார்க்க , செயல்படாத மடங்கியிருந்த வலது கைப் பக்கம் , இடக்கை கொண்டு சென்று “ம …. ம… மன்னி… “வேகமாக வந்து அவர் கையை பிடித்துக் கொண்டு வாயை மூடியவள் , கண்ணீர் மல்க தலையை ‘வேண்டாம்’ என்பது போல் அசைத்து சூர்யா அருகில் சென்று தலை குனிந்து நின்றாள்.
‘போட்டுவிடு’ என்பது போல் நின்றவள் கழுத்தில் , ‘மறுபடியும்’தாலி கட்டினான் சூர்யா .
 பாக்கியம்மாளிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு ‘மாலா ‘என்கின்ற ‘பூமாலை’யின் கையினையும் பிடித்துக் கொண்டு, மனைவி குழந்தையோடு அவனைப் பெற்றவள் முன்பு குடும்பமாக நின்றான் ஆதவ மூர்த்தி , தில்லை நாயகியின் மகனான சூர்யேதவன்.
பாக்கியாம்மாள் கொண்டு வந்த குங்குமத்தை மகனிடம் தர, “சின்னய்யா .. உங்க பொண்டாட்டி நெத்தில வைங்கய்யா “என்ற பாக்கியம்மாளின் குரலுக்கு பணிந்து அவள் நெற்றியில் வைத்த அடுத்த நொடி மூச்சு அதிகமாக வாங்க , குழந்தையின் காலைத் தொட்டுப் பிடித்த தில்லை நாயகியின் இடக்கை அதன் செயலையும் முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.