Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும், அவன் மட்டுமே மனம் முழுவதும் இருந்தாலும், முழு மனதாக திருமணதிற்கு சரி என்று சொல்ல முடியவில்லை.

ஸ்ருதியின் கெஞ்சல் வேறு, “பண்ணிக்கோ வேதா, ஏன் வேண்டாம் சொல்ற, உனக்குப் பிடிச்சிருக்கு, எனக்குத் தெரியும். யார் கிட்டயும் நீ இப்படி பேசினதே இல்லை.. ஐ கேன் சென்ஸ் யு லவ் ஹிம், அப்புறம் ஏன் வேண்டாம் சொல்ற” என்று கேள்வி எழுப்ப..   

“என்னை விட சிறியவன்” என்று சொல்ல முடியவில்லை. “எனக்கு புரியுது, நீ அவரை லவ் பண்ற என்று தங்கை தெளிவாக சொல்கிறாள். அவளிடம் என்னை விட சிறியவன் என்று எப்படி சொல்ல பிறகு என்னை பற்றி என்ன நினைப்பாள்” என்ற பயம்..

ஸ்ருதியோடு கூட, சம்மதம் சொல்ல மற்றொரு காரணம் திருமலை சாமியே!

ஆம்! சில நாட்களில் ராஜேஷின் பிரச்னையை முடித்து, அப்பாவிடம் பேசிவிட்டு இருந்தான் காண்டீபன்..

அவர் நேரே சென்னைக்கே வந்து விட்டார் அவளின் அலுவலகதிற்கே! கூட கிருதிக்காவும், காண்டீபனை அழைத்து வரவில்லை, அலுவலகத்தை பார்வையிட கிருத்திகாவை ஸ்ருதியோடு அனுப்ப.. தன்னிடம் தனியாக பேச விழைகிறார் என புரிந்து,

“சொல்லுங்க சர்” என,

“ரொம்ப ஷார்ப் நீ” என்றவர், “உனக்கு காண்டீபனை பிடிச்சிருக்கா” என்றார் நேரடியாக,

“இல்லை” என்று சொன்னால், அது பொய் என்பதை விட, திரும்பவும் அப்பாவின் பார்வையில் அவன் கீழிறங்கக் கூடும் என்று உணர்ந்தவள், “பிடிச்சிருக்கு” எனச் சொல்ல,

“ஏன் பிடிச்சிருக்கு? உன்னோட ஒப்பிடும் போது அவன் பொருத்தமே இல்லை, அப்போ பணத்துக்காக பிடிச்சிருக்கா?” என்று கேட்டு விட..

“ஐயோ! இவர் என்ன மென்டலா?” என்று தான் தோன்றியது. அதை மறைமுகமாக உணர்த்தவும் செய்தாள். “பணத்துக்காக பிடிச்சிருந்தாலும், பணத்துக்காகன்னு யாராவது சொல்வாங்களா?” என கேட்க,

அசடு வழிய வில்லை திருமலை சாமிக்கு! அவ்வளவே!

“உங்க பையன்னு தெரியறதுக்கு முன்னாடி, ஏன் அவர் பேர் கூட தெரியறதுக்கு முன்னாடியே, அவரை எனக்குப் பிடிச்சிருந்தது.. அப்போ அவர் எனக்கு டிரைவர்ன்னு மட்டும் தான் தெரியும்.. இப்போ நீங்களா பொருத்தமில்லைன்னு சொல்றீங்க.. ஆனா அப்போ வெளிப்படையாவே எந்த பொருத்தமும் கிடையாது”

“திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம போயிட்டார். அப்போ நாங்க பிடிச்சிருக்குன்னு கூட சொல்லிக்கிட்டதில்லை, ஆனா அந்த ஒரு மாசம், ஏன் என்னை விட்டுட்டு போயிட்டார், எனக்கு என்ன குறைன்னு தான் தோணிச்சு. அவரை நான் எப்போவும் குறைவா நினைச்சதில்லை. என்னை தான் நினைச்சேன்” என்றவள்,

“எங்களுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வெக்கறீங்களோ இல்லையோ, அவரை கீழ கீழ இறக்கி பேசாதீங்க. ஏன் பேசறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்படி பேசாதீங்க!” என சொல்லும் போதே கண்கள் லேசாக கலங்கி விட்டது..

“நீங்க அவர் கிட்ட என்ன வேணா பேசுங்க! அவர் எதுவும் எடுத்துக்க மாட்டார். ஆனா என்கிட்டே இல்லை மத்தவங்க கிட்ட கீழ இறக்கிப் பேசாதீங்க” என கேட்க..

“அடங்கப்பா! இந்த பொண்ணுக்கு என்ர பையனை அவ்வளவு பிடிச்சிருக்கா” என்று தான் தோன்றியது..

பிறகு எதுவும் பேசவில்லை.. மகனுக்காக வேதா பேசும் போது, இனி என்ன பேசினாலும் தப்பாகி விடும் என புரிந்து…

“பிடிச்சிருக்கா, பின்ன எதுவும் குறை கிடையாதே” என,

“உங்களுக்கு என்னை பிடிக்கலையா அதுதான் அவர் கிட்ட குறை சொல்ற மாதிரி சொல்றீங்களா?” எனத் திருப்ப..   

சாமி திரும்ப பேசவேயில்லை.. கிருத்திகாவும் ஸ்ருதியும் வந்ததும்.. நேரே வேதாவின் வீட்டிற்கு பெண் கேட்டுப் போய் விட.. இவ்வளவு பரிந்து பேசிவிட்டு வேண்டாம் என எப்படி சொல்வாள்.. உன் கதை முடியும் நேரம் இது வேதா.. என மனம் சோர்ந்து விட்டது.

யாரவது கேட்டு விட்டால் வயது வித்தியாசத்தை என பயந்து பயந்து இருந்தாள், இதோ திருமணமே முடிந்து விட்டது.. முடிந்து தாரை வார்த்துக் கொடுக்கும் போது, பின்னே பரிசுப் பொருட்கள் கொடுக்கும் போது, இந்த நேரங்களில் பார்த்தவர்கள் எல்லாம்.. “பொண்ணு இவ்வளவு சின்னப் பொண்ணா இருக்கே.. கொஞ்சம் பார்த்து பையனுக்கு தக்க மாதிரி தேத்துங்க, நல்லா சாப்பிடணும் மா!” என்று என்று அவளிடமே சிலர் சொல்லி போனார்.

ஆம்! இந்த வயது கவலையில் இன்னும் இளைத்து இருந்தாள்..

“நான் சின்னப் பொண்ணு மாதிரி தான் தெரியறேனா” என்ற வேதாவின் முகம் அப்போது தான் சிறிது மலர்ச்சியைக் காட்டியது..

“இடுப்புல தூக்கி வெச்சு காட்டட்டுமா” என்றான் காண்டீபன்.

“அய்ய, ஜோக்கு!” என்று வேதா புன்னகைக்க,

“ஷப்பா” என்று பெரு மூச்சு விட்டவன்.. “என்னவோ அம்மணி, என் நெஞ்சுல பாலை வார்த்தீங்க!” என ரகசியம் பேச..

“என்ன” என்றவளிடம்..  “பின்ன இப்படி சிரிக்காம கொள்ளாம என்னை பயமுறுத்திட்டீங்க” என,

“என் டென்ஷன் எனக்கு”

“இப்போ போயிடுச்சா”

“கொஞ்சமா” என,

இருவருமே அப்போது தான் பேசிக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர்.. திருமலை சாமிக்கும் கிருதிகாவிற்கும் அப்போது தான் மூச்சே சரியாக வந்தது, பின்னே மகன் வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறானோ என்ற பயத்தில் கிருத்திகா இருக்க,

நிஜமாவே இந்த பொண்ணுக்கு என் பையனை பிடிச்சிருந்ததா என சாமி நினைத்திருக்க.. திருமணத்தில் இருவர் முகத்திலும் ஒரு அமைதி இருந்தது.. ஆனால் உற்சாகம் இல்லை, அது சற்று கலவரத்தை கொடுத்திருக்க.. இப்போது தான் தெளிந்தனர்.

வேதாவின் திருமணத்தில் எல்லா வேலைகளும் செய்தது அவளின் தாய் மாமன் வீட்டினரே.. கனகவள்ளி கணவரை விட்டு சிறிதும் நகரவில்லை. எல்லா வேலைகளும் அவர்கள் பார்த்துக் கொண்டனர்.

வெகு நாட்களுக்கு பிறகு ஸ்ருதி இப்போது தான் தன்னுடன் சிரித்துப் பேச, தனஞ்ஜெயன் ஓடி ஓடி வேலைகள் செய்து கொண்டிருந்தான்.

மொத்தத்தில் சிறப்பாக நடந்தது.. மணமக்களுக்கு எல்லோரும் பரிசுகள் கொடுக்க.. மணமக்கள் ஒருவனுக்கு பரிசு கொடுத்தனர். வேறு யாருக்கு வேலவனுக்கு.. சென்னையில் சொந்தமாய் ஒரு வீடு, ஒரு டாக்சி.. வெகு நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தவனுக்கு, சொத்து வந்து சேர, திருமணமும் கை கூடியது.   

யாரும் இனி மேடை ஏறுபவர்கள் இல்லை.. அவர்கள் கீழே இறங்கலாம் என்று நினைக்கும் போது, மேடையேறினான் ராஜேஷ்.. பார்த்த வேதா “நாம இறங்கலாம்” என்ற போதும், “இரு” என்று காண்டீபன் நிறுத்திக் கொண்டான்.

ஆம்! எல்லோரும் குடுத்து முடியும் வரை காத்திருந்து ஏறினான். வாழ்த்துக்கள் வேதா என்றான் உளமார.. வேதா எதுவும் பேசவில்லை.. காண்டீபன் தான் “வாங்க ராஜேஷ்” என,

“கங்கிராட்ஸ் சர்” என்றவன்.. பரிசுப் பொருளை கொடுக்க.. வாங்கிக் கொண்டான்..

திரும்ப போட்டோவிற்கு நிற்க .. முடித்து, “ஒரு ரெண்டு வார்த்தை” என்று காண்டீபனிடம் அனுமதி வாங்கியன், “எதோ ஒரு பைத்தியக்காரத்தனம் வேதா, என்னை மன்னிச்சுடு! ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன்! மென்டல் மாதிரி பிஃஹேவ் பண்ணிட்டேன்! சாரி!” என..

அந்த வார்த்தைகளும் கண்களும் அவன் பேசுவது மிகவும் உண்மை என சொன்னது.. கல்லூரியில் அவள் பார்த்த நண்பனாய் தோன்ற.. “விட்டுடு ராஜேஷ்” என..

“தேங்க்யு வெரி மச்” என்றவனின் முகம் மலர்ந்தது.

“சாப்பிட்டு தான் போகணும்” என காண்டீபன் வற்புறுத்தி அவனை ஒருவரோடு அனுப்பி வைத்து.. “இப்போ தான் நீ குட் கேர்ள், கோபத்தை கூட சுலபமா காட்டிடக் கூடாது, நம்ம கோபத்தை எதிர் கொள்ற தகுதி அவனுக்கு இல்லாத போது காட்டுறது வேஸ்ட்” என்றான்.

“என்னவோ போங்க பன் சர், உங்க பொறுமையும் எனக்கு கிடையாது, உங்க புத்திசாலித்தனமும் எனக்கு கிடையாது” என்றாள்.

“சத்தமா சொல்லிடாதீங்க அம்மணி, எங்கப்பா ஃபீல் பண்ணுவார்” என்றான்.

ஆம்! வேதா ராஜேஷை உண்டு இல்லை என்று செய்து விடும் ஆத்திரத்தில் தான் இருந்தாள்.. ஆனால் காண்டீபன் விடவில்லை.. “இப்போ எது செஞ்சாலும் உன் பேரை இன்னும் இழுத்து விடுவான்” என்று சொன்னவன்..

அவனை நேரில் பார்த்து “நான் காண்டீபன், காண்டீபன் ட்ராவல்ஸ் எங்களோடது.. நான் தான் வேதாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்று சொல்ல,  

“என்ன” என்றவன் அதிர்ந்து நின்று விட்டான்.. ராஜேஷ் இதனை  எதிர்பார்க்கவில்லை.. வேதா யாரையும் காதலிக்கவில்லை எனத் தெரியும். திருமணமும் கூடவில்லை எனத் தெரியும். அதன் பின் தான் தான் எண்ணத்தை ஸ்திரமாக்கிக் கொண்டு வேதாவின் நல்ல குணத்தை பயன்படுத்தி திருமணம் செய்ய கேட்டு, அவளை வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

இப்படி ஒரு ட்விஸ்டை அவன் எதிர்பார்க்கவில்லை..

“என்னடா அவளை பத்தி பேசிட்டு இருக்க எல்லோர்கிட்டயும்” என்று கேள்வி கேட்டு, அந்தக் கேள்வி அவனை சென்று அடையும் முன்னரே ஓங்கி ஒரு உதை விட்டு இருக்க..

காண்டீபனின் வலிமையின் முன் ராஜேஷ் என்ன செய்வான்.. தூரப் போய் விழ.. அப்படியே அவனின் சட்டையை பற்றி தூக்கியவன் “அவளை மிரட்டிட்டு இருக்க, அவளை மென்டலா டார்ச்சர் குடுத்து இருக்க, உன்னை என்ன செய்யலாம்?” என்று மாற்றி மாற்றி அப்பு விட..

பலவருட உடற்பயிற்சியின் வலிமையான் உடல் முன் ராஜேஷால் ஒன்றும் முடியவில்லை..  “பேசுடா” என்று திரும்ப அடிக்க,    

“நேத்து கூட பதிலுக்கு என்னை மிரட்டினா, ஆனா அப்போ கூட யாரையும் காதலிக்கறேன்னு சொல்லலை. என்னை வேண்டாம் வேண்டாம் தான் சொன்னா!” என்றான்.

“ஓஹ், அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு வரன் வரும் போது அதையும் இதையும் சொல்லி தட்டி விட்ட”

“வேதா கிட்ட தான் வற்புறுத்தி பேசியிருக்கேன். ஆனா யார் கிட்டயும் தப்பா எல்லாம் பேசினதில்லை.. என்னை தான் கல்யாணம் செஞ்சிக்க போறான்னு சொல்லியிருக்கேன் வேலை செய்யறவங்க கிட்டே எல்லாம். அதனால யாரு பொண்ணை பத்தி விசாரிச்சாலும், அவங்க அப்படி சொல்லியிருப்பாங்க!”

“மத்தபடி தப்பா பேசினதில்லை, தப்பா பார்த்தது கூட இல்லை, அப்படி ஏதாவது சின்னதா என்கிட்டே தப்பு தெரிஞ்சிருந்தாலும் வேதா என்னை விட்டிருக்க மாட்டா. அவளை கல்யாணம் பண்ணனும்ன்ற ஆசையில் தான் பண்ணிட்டேன்” என,

“கல்யாணம் பண்ணனும்ன்றது ஆசையினால வரக் கூடாது. காதல்னால வரணும்” என்று அப்போதும் அடித்து துவைத்து விட்டே வந்தான்.

பின்னர் ஒரே வாரத்தில் அவனை வேலைக்கு வர வைத்து அங்கேயே காண்டீபனும் வேலை செய்து.. அவன் பின்னிய மாயவலையை அவனே அறுக்க வைத்தான்.. கிட்ட தட்ட அதற்கே மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

“எனக்கு தான் மேடத்தை பிடிச்சிருந்தது, மேடத்துக்கு இஷ்டமில்லை போல” என்று மெதுவாக ஆட்களிடம் பரவ செய்து.. “இவர் தான் மேடத்துக்கு வீட்ல பார்த்திருக்குற மாப்பிள்ளை” என கண்டீபனை பற்றி அவனையே சொல்ல வைத்து.. காண்டீபன் ட்ராவல்ஸ் பையன் என்றதும்,

“ஓஹ், ரொம்ப பெரிய இடம்” என்ற வார்த்தை வர.. காண்டீபனும் எல்லோரோடும் இறங்கிப் பழக.. முன்பு நடந்தது எல்லாம் மாயமாய் மறைந்து போனது..

பேச்சுக்கள், பேச்சுக்கள், மட்டுமல்லாது, பணத்தையும் இறக்கிருந்தான் காண்டீபன்.. ஆம்! எல்லோருக்கும் பண உதவி தாராளமாய் செய்ய, ராஜேஷ் நல்லவனாய் இருந்தால் என்ன, வல்லவனாய் இருந்தால் என்ன, உழைப்பாளியாய் இருந்தால் என்ன?

காண்டீபனின் பணத்தின் முன் “நீங்க இந்த கம்பனிக்காக எவ்வளவு உழைச்சிருக்கீங்க என்ற வேலை செய்பவர்களின் வார்த்தை எல்லாம் காணாமல் போய் விட்டது.

இது தான் உலகம்! பணம் பத்தும் செய்யும்! பாதாளம் வரை பாயும்!

அது மட்டுமல்லாமல் நான்கு வருடமாய் வந்த லாபத்தை கணக்கிட்டு, அதில் முப்பது சதவிகிதத்தை திருமணம் நடக்க இருந்த ஒரு வாரத்திற்கு முன் ராஜேஷிடம் கொடுத்து, “நாங்க கல்யாணம் முடிஞ்சு வந்த கொஞ்ச நாள்ல, உனக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி குடுக்கற மாதிரி வேற வேலை பார்த்துக்க” என்று விட்டான்.

இத்தனை நாட்களில் வேதா ராஜேஷிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, இந்த திருமணத்தில் தான் பேசினாள்.

“ஆள் வெச்சு மிரட்டுற இல்லை, நான் இல்லாம என்ன வேலை நடக்கும் இங்க” என்று கேட்டவன் தான் ராஜேஷ்.. இதை யாருக்கும் தெரியவிடவில்லை, ஏன் காண்டீபனுக்கு கூட.. ஆனால் அவனிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தும் கைபற்றி இன்னும் சிறப்பாய் எல்லாம் செயல் பட வைத்திருந்தவள்..

உண்டு முடித்து வந்தவனிடம்,  

“எனக்கு தெரியாதுன்னு இல்லை, உன் மேல இருந்த நம்பிக்கைல விட்டிருந்தேன்.. அதுவுமில்லாம அது உன்னோட வேலையும் கூட, நீ நீட்டின இடதுல கையெழுத்து போட்டேன்னாலும், இதுவரைக்கு அந்த வேலைல நீ எந்த தப்பும் பண்ணலை, பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும், நீ நீட்டின இடத்துல நான் கையெழுத்து போட்டிருப்பேனா இல்லையான்னு”

“நாம தான் எல்லாம்! என்னால மட்டும் தான் முடியும்ன்ற நினைப்பு எப்போ ஒரு மனுஷனுக்கு வந்தாலும், அவனோட அழிவு அப்போ இருந்து ஆரம்பம் ராஜேஷ், அடுத்து நீ செய்யப் போற வேலைல அது இல்லாமல் பார்த்துக்கோ” என்றாள் தெளிவாக..  தன்னுடைய நம்பிக்கை பொய்த்துப் போனதில் எழுந்த ஆதங்கம் அது.     

“பொண்ணுன்னு தானே சுலபமா உனக்கு கீழ கொண்டு வந்துடலாம்னு நினைச்ச, தப்பு ராஜேஷ்! பொண்ணுங்க ரொம்ப புத்திசாலிங்க! என்னை மாதிரி சில முட்டாள்களும் இருப்பாங்க.. ஏன் முட்டாள்ன்னா, உன்னை நம்பினேன் தானே, நம்பிக்கை துரோகம் மாதிரி ஒரு பாவச் செயல் எதுவும் கிடையாது” என ஆக்ரோஷமாய் பேச, ராஜேஷ் முகம் கன்ற கேட்டிருந்தான்.

நல்ல மனிதனே எங்கேயோ தடம் மாறி விட்டான்.. முதலில் காண்டீபனுக்கு பயந்து அவன் சொன்னபடி கேட்டாலும், அவனுள் இருந்த நல்ல மனிதன் மீண்டு விட்டிருக்க, அதுவும் மாபாதகத்தை செய்தும், அவனின் உழைப்பின் கூலி எனக் காண்டீபன் கொடுத்தது, முற்றிலுமே மாற்றிவிட்டது.   

“ஒரு மொபைல் ஃபோன் கூட உன்னை நம்பி வாங்கினேன், அதுல கூட ஏமாத்திட்டியே!” என வேதா பொறும,

“இல்லை, நான் ஏமாத்தலை. நிறைய லேட்டஸ்ட் மாடல் இருந்தாலும், நீ எப்பவும் ஃபோன் கீழ போட்டுட்டே இருப்ப, அது உடையாம இருக்குற மாதிரி பார்த்து வாங்கினேன்.. வேற வாங்கினா ரெண்டு மாசத்துக்கு ஒன்னு மாத்துவ நீ, உனக்கு என்ன தேவையோ அதுதான் பார்த்தேன்..” என்றான் உண்மையாக..

ஆம்! காண்டீபன் கொடுத்த ஃபோனின் டிஸ்ப்ளே அதற்குள் போயிருந்தது.. அதை காண்டீபனும் உணர்ந்தவன் “வேதா” என்றான் பாவமாக.  

“என்ன?” என்று அவள் பார்க்க, “இன்னைக்கு தான் நமக்கு கல்யாணமாகியிருக்கு.. இது கல்யாணம் மண்டபம், நீ லெக்சர் குடுக்குற.. அவன் போறான் விடு!” என,

அவனை முறைத்தாள், “ஹி ஹி” என்று அவளைப் பார்த்து சிரித்தவன் “நீ போ” என்பது போல ராஜேஷை பார்த்து கையசைக்க..

காண்டீபனின் செய்கையைப் பார்த்து வாங்கின திட்டைஎல்லாம் மீறி ராஜேஷின் முகத்தில் புன்னகை.. “நன்றி” என்பது போல தலையசைப்போடு அவன் போக,

அவன் சென்றதும் “எதிரியை தண்டிக்க தெரியற அளவுக்கு, மன்னிக்கவும் தெரியணும், செத்த பாம்பை திரும்ப திரும்ப அடிச்சா, நாம தான் மென்டல்ன்னு அர்த்தம்!” என,

“என்ன? நான் மென்டலா?” என அவள் சுணங்க,

“எஸ், ரொம்ப!” என்று அவன் ரகசியம் பேச,

“என்ன அப்படி பண்ணினேன்?” என்று சந்தேகம் கேட்டாள்.

“என்னை பிடிச்சிருக்கு தானே! அதுதான்!” என,

“போடா! நீதான் மென்டல்!” என்றவளின் முகத்திலும் புன்னகை..  

 

 

Advertisement