Advertisement

அத்தியாயம் இரண்டு :

மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன் வந்து விட்டானோ என விழித்தார். கைபேசி அடித்தாலும் புலன்கள் அனைத்தும் மகனா எனப் பார்க்கும்.

அவர்களின் வாழ்க்கை முறையே தலைகீழாய் மாறிவிட்டது. கிருத்திகா அன்று கணவரிடம் பேச்சை நிறுத்தியவர் தான், கணவரிடமும் பேசவில்லை யாரிடமும் பேசவில்லை.. வீட்டை விட்டு வெளியேயும் செல்லவில்லை. தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டார்.

கணவரிடம் கடைசியாகப் பேசிய வார்த்தைகள், “எப்பவும் மென்டல் மாதிரி பேசுவீங்க, அவங்க வீட்டுப் பையன் அப்படி, இவங்க வீட்டுப் பையன் இப்படி, பேப்பர்ல பாரு இந்த பையனை பத்தி வந்திருக்கு.. நீ இந்த மாதிரி ஏதாவது செய்யறியான்னு அவனை எப்பவும் டார்ச்சர் பண்ணுவீங்க.. ஆனா கடைசியில மென்டல்ன்னு நிரூபிச்சிடீங்க”

“என்ர மவன் போயிட்டான், அவன் ரோஷக்காரன், திரும்ப வருவானோ மாட்டானோ, வந்தாலும் இதையெல்லாம் இனி தொடுவான்னு தோணலை” என்றபடி கண்ணீர் விட ஆரம்பித்தவர்.. இன்று வரையிலும் வற்றாத நதியாய் கண்களில் கண்ணீர் ஓட விட்டார்.

இன்னும் கூட நம்ப முடியவில்லை.. ஒன்றுமே இல்லாத ஒரு பேச்சு.. காலம் காலமாய் திருமலை சாமி பேசும் பேச்சு, காண்டீபனும் பேசும் பேச்சு, திடீர் என்று இப்படியாகும் என்று கனவிலும் நினைத்ததில்லை. இப்போது நனவில் நடந்து விட்டது.

காண்டீபன் என்ன செய்கிறானோ என நினைக்க நினைக்க ஒன்றுமே முடியவில்லை.. கிடைத்ததையெல்லாம் கணவர் மேல் வீச.. திருமலை சாமிக்கு வாழ்க்கையே நரமாகிற்று.. கிருதிக்காவின் அடிகளை விட பேச்சுக்கள்.. காது கொடுத்து கேட்க முடியவில்லை . 

அவருக்கு மட்டுமல்ல காண்டீபனுக்கும் ஒன்றும் முடியவில்லை.. சாமான்யர்களின் உலகம் அவனுக்கு மிகவும் புதிது… அவன் அப்போது இருந்தது மத்திய சென்னையில் ஒரு பகுதி.. இந்த நாட்களாக அவன் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல..

அவன் சொல்லும் கஷ்டங்கள் கேட்பவருக்கு சிரிப்பை கொடுக்கும், ஆனாலும் அவன் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு அது கஷ்டம் தான்.. ஆம் முதல் கஷ்டம் தண்ணீர்.. ஏதாவது ஒரு தண்ணீரை குடிக்க முடியவில்லை.. பிசிலெறி வாட்டர் மட்டுமே குடித்தான்..

அவன் சம்பாத்தியத்தில் பாதி பணம் அதற்கே போனது.. பின்பு கொசுக்கடி.. ஏசி இல்லாமல் தூக்கம் வரவில்லை. கட்டாந்தரை மட்டுமே மெத்தை.. அதையும் விட பாத்ரூம்.. யாராவது உபயோகித்தார்கள் என நினைத்தாலே இவனிற்கு வயிறு கட்டிக் கொண்டது.. இப்படிப் பல.    

வீட்டை விட்டு வந்த அந்த இருட்டிய நேரம் எங்கே போவது என்று தெரியவில்லை.. அவனுக்கு அதிகம் யாரும் பழக்கமும் கிடையாது.

தனிமை விரும்பி எப்போதுமே! நண்பர்கள் இருந்தாலும், ஆத்மார்த்த நண்பர்கள் என்று கிடையாது.. மற்ற நண்பர்களிடம் வீட்டை விட்டு அப்பா அனுப்பிவிட்டார் என்று சொல்ல முடியுமா? இல்லை நான் வந்து விட்டேன் என்று சொல்ல முடியுமா? அது அவனுக்கு பெரிய தலைகுனிவு!

ஒற்றை பைசா இல்லை கையினில்.. சாப்பிடவும் இல்லை.. பசித்தது.. பசி தாங்கமாட்டான் என்பதை விட பசி என்ற ஒன்றை அறியாதவன்.. எந்த தடையும் இல்லாமல் வேண்டிய மட்டும் உண்பவன்.. ருசிகளுக்குப் பழக்கப்பட்டவன்..

அதனாலேயே தேவையான அளவு உடற்பயிற்சி செய்து உண்டதை ஜீரணம் செய்பவன்..

ரோடில் ஒரு கார் நின்று கொண்டிருக்க.. டிரைவர் அதன் பானெட் திறந்து பார்த்துக் கொண்டிருக்க.. மெக்கானிகல் எஞ்சினியர் என்பதால் “என்னங்க?” என்று அவனை அறியாமல் கேட்டுவிட..

அப்போது தான் அவனை கவனித்த அந்த டிரைவர்.. “தெரியலீங்க, கார் நின்னுடுச்சு.. என்னன்னு எனக்கும் தெரியலை.. நான் சென்னை, இந்த ஊரும் இல்லை, மெக்கானிக் பார்க்கணும். ஆனா புது மாடல் கார் யாருக்கும் தெரியுமா தெரியலை.. முதலாளி போன் பண்ணினாலும் எடுக்க மாட்டேங்கறார்!” என்று சொன்னவனின்  குரலில் அவ்வளவு கவலை கூடவே ஒரு பயம் கூட.

முதலாளியை நினைத்து பயம் என புரிந்தவன்.. “இருங்க, நான் மெக்கானிக் கூப்பிடறேன்” என்று ஜோபில் கைவிட அப்போதுதான் போன் இல்லாதது நினைவு வர..

“ப்ச்” என அவனையறியாமல் சலித்தான்.

“என்னாச்சுங்க” என அந்த டிரைவர் கேட்க..

“ஒன்றுமில்லை” என்பது போல தலையாட்டியவன்.. “நான் பார்க்கிறேன்” என்று பார்க்க, ஒரு ஐந்து நிமிட வேலை அது சரியாகிவிட்டது.. காண்டீபனின் மனதில் அவ்வளவு உற்சாகம்! பின்னே அவன் சரி செய்திருக்கிறானே!

“நீங்க மெக்கானிக்ங்களா?” என அந்த டிரைவர் கேட்க, “ஆம்” என அவன் சொல்ல…

“அதிகமா என்கிட்டே பணம் இல்லை, இது மட்டும் வெச்சிக்கங்க” என்று ஒரு இரு நூறு ரூபாய் கொடுக்க..

எப்போழுதும் போல “இல்லையில்லை, வேண்டாம்” என்று சொல்லி விட்டவன்.. பின்பு தான் கையில் காசில்லாததை உணர்ந்து தடுமாற.. 

“என்னாச்சுங்க தம்பி” என்றான் அவன் திரும்பவும்..

“நீங்க சென்னைங்களா?” என்ற ஒரு பதில் கேள்வி கேட்டான்,  அவ்வளவு தான் அந்த டிரைவர் மடை திறந்த வெள்ளமாய், “ஓஹ், நீங்களும் சென்னை போகணுமா.. வாங்களேன், நான் மட்டும் தான் தனியா போறேன், உங்களை அங்க விட்டுடறேன்” என,

“நான் எப்போடா இப்படி கேட்டேன், இவன் என்ன மென்டலா?” என்ற யோசனை தான் காண்டீபனுக்கு.. ஆனாலும் “ஆம்” என்று தலையாட்ட.. “வாங்க” என்று ஏற்றிக் கொண்டவன்.. “நீங்க மெக்கானிக்ங்களா” என்று திரும்ப பேச ஆரம்பித்து.. கேள்வியும் அவனே… பதிலும் அவனே.. என்பது போல பேசிக் கொண்டே வர.. அவன் என்ன பேசுகிறான் என்று தெரியாத ஒரு பசி, காண்டீபனுக்கு காதை அடைத்தது.

வழியில் அவனே உணவு உண்ணவும் வாங்கிக் கொடுக்க.. அப்படியாக அன்று ரோட்டுக்கடை பரோட்டாவை உண்ண ஆரம்பித்தவன் தான், இன்று வரை தொடர்கின்றது.  

அன்று அவனுடன் வந்த டிரைவர் வேலவனுடன் தான் அவன் வாசம் அங்கு ஒரு மேன்ஷனில்… “யார் இவன்? ஏன் வந்தான்?” என்ற ஒரு காரணங்களும் காண்டீபனின் வாய் மொழியாக வராத போதும்.. வேலவன் அவனே காரணங்களையும் அவனின் புலனாய்வும் திறமையால் அடுக்கி விட.. பசி அடங்கியதும் வேலவனின் பேச்சு அப்படி ஒரு சிரிப்பை தான் காண்டீபனுக்கு கொடுத்தது.

அதுவும் “உங்க பேர் என்ன?” என்ற வேலவனின் கேள்விக்கு, காண்டீபன் என்று ஒரு பதிலை கொடுத்தவனை பார்த்து, “என்ன கே. டி. பன்.. னா? இப்படி ஒரு பேரா?” எனக் கேட்டவனை பார்த்து அப்படி ஒரு சிரிப்பு.. “எங்கப்பா மட்டும் இதை கேட்டிருந்தாரு, இவனை துரத்தி துரத்தி இல்லை அடிப்பாரு” என தோன்ற, ஆனாலும் தந்தை மேல் இருந்த கோபத்தில் “ஆமுங்கண்ணா!” என.. 

“அண்ணான்னா சொன்னீங்க” என்ற வேலவனுக்கு அப்படி ஒரு மகிழ்வு மனதினுள்.. பின்னே இத்தனை மரியாதையாக யாரும் அவனை நடத்தியது இல்லை .

முடிவில் வேலவன் காண்டீபனை பற்றி அவனாக புனைந்த சாராம்சம் இதுதான்.. “யாரு மற்ற அனாதை, மெக்கானிக் வேலை பார்த்தவன்.. ஒரு பெண்ணோடு காதலில் விழ.. அந்தப் பெண்ணின் பெற்றோர் ஊரை விட்டு துரத்த.. இப்போது வேறு வழியில்லாமல் ஊரை விட்டு ஓடுகின்றான்”

“சமீபமா இவர் காதல் படம் பார்த்திருப்பாரோ, ஆனாலும் அதுல ஹீரோயினோட தானே ஓடுவாங்க”.. காண்டீபனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. வாழ்க்கையில் அவன் இப்படி சிரித்திருப்பானா என்று அவனுக்கு நினைவேயில்லை.

“தள்ளுங்கண்ணா, நான் கொஞ்ச நேரம் ஓட்டுறேன்” என சொல்லி அமர்ந்தவன் சீராக காரை ஓட்ட.. அங்கே சீராக கார் மட்டுமல்ல, சிரிக்க சிரிக்க பேசும் வேலவன் மேல் ஒரு நட்பும் ஆரம்பிக்க..

இன்று வரை அது தொடர்கின்றது.. முதல் பத்து பதினைந்து நாட்கள் கிடைத்த வேலையை செய்ய.. அதன் பிறகு டுப்ளிகேட் லைசன்ஸ் எடுத்துக் கொள்ள.. இப்போது அவனின் வேலை ஆக்டிங் டிரைவர்.

வேலவனுக்கு பல பேருடன் பழக்கம் இருந்ததால்.. அவனுக்கு நிறைய வாய்ப்புகள் வர, அதனை காண்டீபனுக்கும் பகிர்ந்தளித்தான். அதனால் வாழ்க்கை சிரமமாக இருந்தாலும், சிரமமில்லாமல் சென்றது.

அதுவும் நேற்று ஒரு சினிமா டைரக்டருக்கு ட்ரைவராக செல்ல.. அவர் “என் படத்துல ஒரு வில்லன் கூட வர்ற ஒரு அடியாள் வேஷம் இருக்குது.. புது ஆள், கட்டுமஸ்தான உடம்போட தேடிக்கிட்டு இருக்கேன், நடிக்கறியா?” என,

 கேட்டவுடன் சிரிப்பு தான் காண்டீபனுக்கு.. ஆனால் அவனின் தோற்றம் அப்படி தான் இருந்தது.. கரிய நிறம், ஆறடி உயரம், அவன் உடற்பயிற்சியில் டெவலப் செய்திருந்த சிக்ஸ் பேக் உடல்.. மொத்தத்தில் கரடு முரடான தோற்றம் உடையவன்.. இதையெல்லாம் மீறி ஒரு வசீகரம் இருக்கும்..

கோவையில் பிறந்து வளர்ந்தவனுக்கு அவரின் ஒருமை அழைப்பு பிடிக்காமல் போக, “இல்லீங்க, வேண்டாமுங்க!” என்றான்.. கூடவே “நீங்க எத்தனை படம் பண்ணியிருக்கீங்க” எனக் கேட்க,

அவர் முறைத்த முறைப்பு இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது.

“தம்பி கிளம்பலாமா?” என்று வேலவன் வந்து நிற்க.. எழுந்தவன் “இன்னைக்கு எங்க போகணும்?” என கேட்டபடி எழுந்தாலும், அவரின் “தம்பி” என்ற அழைப்பு, “தம்பு” என்ற அம்மாவின் அழைப்பை ஞாபகப் படுத்த.. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதில் ஓங்கியது.

ஆனாலும் என்னவென்று போய் நிற்பான், “நான் டிரைவராக இருக்கிறேன்” என்றா.. வேலைக்கும் முயல முடியாது, ஒரு செர்டிஃபிகேட்டும் அவனிடம் இல்லை.. அதுமட்டுமல்லாது அப்பாவிடம் எதையும் உபயோகிக்க மாட்டேன் என்று சூளுரைத்து வந்திருக்கின்றானே.. இப்போது வெட்கம் கெட்டுப் போய் நிற்கவும் மனதில்லை. 

வேலவன் அழைத்து சென்ற இடத்திற்கு செல்ல.. அது சற்று பெரிய பங்களா.. டூ வீலரில் இவர்கள் சென்றனர்.. அவர்கள் அதில் உள்ளே நுழையவும் வெளியே வராண்டாவில் இருந்த பெண் இவர்களை பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்தாள். அப்படி ஒரு பொங்கிய சிரிப்பு..

அந்த டீ வீ எஸ் ஃபிப்டியை காண்டீபன் நிறுத்தவும், இறங்கிய வேலவன்.. “எதுக்கு இப்படி சிரிக்கறீங்க ம்மா” எனக் கேட்க..

“ஒன்னுமில்லை” என்று அந்தப் பெண் சொல்லிய விதத்திலேயே ஏதோ தங்களை கிண்டலாக நினைத்து சிரித்திருக்கின்றாள் என்று புரிந்த போதும், முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் கையை கட்டி நிற்க,

“யார் இது வேலு?” என்று கேட்ட அந்தப் பெண்ணிடம்.. “இவர் தானுங்க உங்களுக்கு வண்டி ஓட்டப் போறார்” என,

“ஏன்? நீ ஏன் வரலை?” என,

“எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. என்னை நம்பற அளவுக்கு நீங்க இவரை நம்பலாம். நமக்கு தம்பி மாதிரி, ஒரு பயமும் வேண்டாம்” என்று சொல்லும் போதே வெளியே வந்தால் வேதா..

வேதா வந்தவுடனேயே “பாரு வேதா, இவரை வரச் சொன்னா யாரையோ கூட்டி வந்திருக்கார்.. நான் இவரை தான் வர சொன்னேன்.. நீ என்னை திட்டக் கூடாது” என்று படபடவென்று பொரிய…

“ஸ்ருதி, கொஞ்சம் அமைதியா இரு!” என்றவள், “என்ன வேலண்ணா, யார் இது?” என,

அவசரமாக காண்டீபனிடம் திரும்பி “உனக்கு அப்புறம் என்னை அண்ணான்னு கூப்பிடற இன்னொரு ஆள்” என்று சொல்லி..

“எனக்கு தம்பி மாதிரி வேதாம்மா, என்கூட இந்த மூணு மாசமா இருக்கார்.. நல்லா வண்டி ஓட்டுவார், யாரையாவது உங்களுக்கு வண்டி ஓட்ட அனுப்புவேனா”

“மதுரை வரை போகணும், போயிட்டு நைட்டே ரிடர்ன் வரணும், முடியுமா?” என கண்டீபனை பார்த்துக் கேட்க..

“முடியும்” என்று பதில் சொல்லாமல், தலையை மட்டும் முடியும் என்பது போல அசைத்தான், முகத்தை பார்த்தபடி.. அந்த முகம் ஏதோ செய்தது.

“ஒரு அஞ்சு நிமிஷம் கிளம்பிடலாம், ரெடியா தான் இருக்கோம்”  என்றவள், “ரெண்டு நிமிஷத்துல கிளம்பணும்” என ஸ்ருதியிடம் சொல்லியபடி நடக்க.. செல்லும் அவளையே பார்த்தான்..

சொன்னபடி ஐந்து நிமிடங்களில் வந்தார்கள்.. அதற்குள் வேலவன் இன்னோவாவை வாயிலில் நிறுத்தி இருந்தான். வேதா, ஸ்ருதி, கூட அவளின் அம்மா அப்பா.. அம்மா பிடிக்க அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள்.. அப்பாவிற்கு பக்கவாதம் போல.. பார்த்தாலே தெரிந்தது.

வேலன் ஓடிச் சென்று உதவ.. கூடவே வாயில் காவலாளியும் உதவ.. பெண்கள் விடுத்து அந்த ஆண்கள் அழைத்து வந்தார்கள். இறங்கி வந்தவர்கள் எப்படி அவரை ஏற்றுகிறார்கள் என்று பார்க்க.. இரண்டு பேரும் தூக்க முடியாமல் தூக்க.. “தள்ளுங்க” என்றவன் அனாயாசமாக அவரை தூக்கி அமர்த்தினான்.

“ஆங்” என்றபடி பார்த்த ஸ்ருதி, “செம ஸ்ட்ரெந்த்” என்று கமன்ட் வேறு அடிக்க.. திரும்பி அவளை ஒரு கண்டனப் பார்வை பார்த்த வேதா.. “தேங்க்ஸ்” என்ற ஒரு வார்த்தையை உதிர்த்து.. அம்மா, அப்பா, ஸ்ருதி, பின் அமர அவள் முன் ஏறிக்கொண்டாள்.

அம்மாவை தவிர்த்து முன் சீட்டில் அவனுடன் ஒரு பெண்.. இதுவே காண்டீபனுக்கு முதல் முறை.. கார் கிளம்பிவிட ..

“ஒரு கண்டோலன்ஸ், எத்தனை மணிக்குள்ள நம்மளால அங்க இருக்க முடியும்?” என்று நேரம் கேட்க..

“உங்களுக்கு எத்தனை மணிக்கு அங்கே இருக்கணும்?” என்று திரும்பக் கேட்டான்.

வேதா நேரம் சொல்ல.. “அதுக்கு ஒரு மணி நேரம் முன்னமே அங்கே இருக்கலாம்” என்று சொல்லி கார் வேகமெடுக்க…. அதன் பிறகு வேதாவிற்கு அடுக்கடுக்காக தொலைபேசி அழைப்புகள்.. பதில் சொன்ன வண்ணம் இருந்தாள் வேதா..

அதுவே சொன்னது ஏதோ கார் சம்பந்தமான கம்பெனியை நிர்வகிக்கின்றாள் என..

பத்து நிமிடத்திற்கு ஒரு அழைப்பு.. “வேதா, அந்த ஃபோனை தூக்கிப் போடேன், எதுக்கு இவ்வளவு கால்ஸ்” என ஸ்ருதி சொல்ல..

“ஆஃப் பண்ணு வேதா” என்று அம்மாவும் சொல்ல..

“மா! அந்த நேரம் பார்த்து நீங்க ஃபோன் எடுக்கலைன்னு ஏதாவது சொதப்பி வெப்பாங்கம்மா, விடுங்க!” என..

“கொடு, நான் பேசறேன்” என்று ஸ்ருதி சொல்ல..

“வேண்டாம்! நீ கத்துவ! அப்புறம் இன்னும் பிரச்சனையாகும்”

“அப்போ யார் தான் அந்த பக்கி கிட்ட பேசுவா” என்று ஸ்ருதி புலம்ப..

“மரியாதையில்லாம பேசாதே ஸ்ருதி, நமக்காக ராப் பகலா உழைக்கிறான்” என்று வேதா பரிந்து பேச,

“அவன் ஒன்னானம்பர் ஃபிராடு” என்றவளிடம், “உனக்கு பிடிக்கலைன்னா அப்படி பேசக் கூடாது” என,

“அப்பா இப்போ தான் தூங்கறார், ரெண்டு பேரும் திரும்ப ஆரம்பிக்காதீங்க!” என அம்மா அதட்ட..

மக்கள் இருவருமே கப்பென்று வாயை மூடிக் கொண்டனர்.

திரும்பவும் தொலைபேசி அழைப்பு.. தொல்லை பேசியாக தான் காண்டீபனுக்கு தெரிந்தது.. அழைப்பு மட்டும் தொல்லை அல்ல அழைக்கும் ஆளும் அப்படிதான்.. அவன் பெயர் ராஜேஷ். காண்டீபனின் யோசனைகளின் நிறைய நேரத்தை அவன் எடுத்துக் கொள்ளப்போகின்றான் என்று கனவிலும் காண்டீபன் நினைத்திருப்பானா என்ன?

 

Advertisement