Advertisement

அத்தியாயம் ஏழு:

“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.

“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான் சாப்பிட்டுக்கோ!”  

“வீட்டோட சாவி வேணும்” என்றவளிடம், “எதுக்கு” என்று பதில் கேள்விக் கேட்க, “நான் எங்கயாவது வெளில போகணும்னா?”

“எங்கே போவ தனியா, எங்கேயும் போகாத!” என்றவனிடம், “நான் இங்கே தான் காலேஜ் படிச்சேன், சென்னை எனக்குப் புதுசு இல்லை, அண்ட் தனியா போகாதன்னு நீங்க சொல்லக் கூடாது, நான் தனியா இருக்க பழகணும்!” என்றாள்.

குருபிரசாத் பேச வர, ஒற்றை விரலை வாய் மேல் வைத்து “பேசாதே” என்று கட்டளையிடும் விழிகளோடு சொன்னவள், கையை சாவியிற்காக நீட்ட,

“யம்மா! இது என்னடா இப்படி? என்னைக் கண்லயே மிரட்றா, சண்டையா போடமுடியும் இவளோட?” என்று சலித்துக் கொண்டே மனதில்லாமல் வைத்தான், அவன் சாவியை வைத்தவுடன் “ஒன்னும் பண்ண மாட்டேன்! உங்க வீடு பத்திரமா இருக்கும்! ட்ரஸ்ட் மீ!” என்றாள்.

“ப்ச்!” என்று வாய் விட்டே சலித்தவன், “புது இடம்னு நான் உன்னோட பத்திரத்துக்காகத் தான் சொன்னேன்!”

“ப்ச்!” என்று அவனைப் போலவே பாவனை காட்டியவள், “நான் சின்னப் பொண்ணு இல்லை. எங்கப்பா அப்படி நினைச்சு தான் இங்க கொண்டு வந்து என்னை நிறுத்திட்டார். யு டோன்ட் டூ தட் ஓகே!” என்று சொன்ன விதம் அவ்வளவு ஸ்டைலாக இருந்தது. கூடவே கண்களில் இருந்த அலட்சிய பாவனை, அவனையும் மீறி சில நிமிடங்கள் அதை பார்த்து இருந்தான்.

“நம்ம ஊர்ல இருந்து எங்க இருந்துடா இவ்வளவு ஸ்டைல் கத்துகிட்டா, நான் இருந்த வரை என் கண்ல எல்லாம் இந்தப் பொண்ணு பட்டதே இல்லையே!” என்று தான் யோசனை ஓடியது.  

பின்பு கிளம்பியவன் “உன்னோட ஃபோன் நம்பர் சொல்லு!” என, கண்களில் அலட்சியத்தையும் மீறி ஒரு கோபம் தெரிந்தது, “என்னடா இது! ஃபோன் நம்பர் தானே கேட்டேன்!” என நினைக்க,

“கல்யாணத்துக்கு ஒரு மூணு நாள் முன்னால நீங்களா தான், எனக்கு கூப்பிட்டீங்க!” என,

“அட ஆமாமில்லை! எப்படி மறந்தேன்! என்கிட்டே இருக்கே!” என்று அவன் யோசிக்கும் போதே அவனின் யோசனை புரிந்தவள், 

“நான் ஞாபகமில்லாததால, என் நம்பர் உங்க கிட்ட இருக்கறதும் ஞாபகம் இருக்காது!” என்றாள்.

“டேய் குரு! இந்தப் பொண்ணு எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கறா! நீ மனசுல நினைச்சா பதில் சொல்றா! மைன்ட் ரீடிங் நல்லா பண்றா, ஜாக்கிரதை!” என்று சொல்லிக் கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தான். கூடவே “தைரியம் தான் போல, சோ அவ வாழ்க்கை அவ பார்த்துக்குவா, நீ அதிகம் கவலைப் பட தேவையில்லை!” என்ற எண்ணமும் வலுப்பெற்றது.

நடக்கும் போதே முகத்தில் ஒரு புன்னகை கூட, “நான் என்ன சோப் மாதிரி உங்களை தேச்சிக்கிட்டா இருக்கேன்னு எவ்வளவு தைரியமா சொல்றா! சரியான ஜக்கம்மா போல!” என்று அவனின் வாய் முணுமுணுத்தது.

ஆம்! அரசி தைரியசாலி தான். ஆனால் தைரியசாலிகள் என்றால் சுலபமாகப் பிரிய ஒத்துக்கொண்டு விடுவர் இல்லை டைவர்ஸ் கொடுத்து விடுவர் என்று அவனுக்கு யார் சொன்னர் என்று தெரிவில்லை. 

அலுவலகம் சென்றால் மேக்னா அன்றைக்கு வரவில்லை. அதுவரை அரசி ஆக்ரமிக்க இப்போது தான் மேக்னா நினைவில் வந்தாள். நேற்று வீடு சென்றதுமே அப்பாவும் அரசியும் அவளின் பெற்றோர்களும் இருந்ததால், அரசியுடன் இருந்ததால் பின்பு மேக்னாவைப் பற்றி மறந்து போனான்.

இப்போது வரும் வரையிலும் ஞாபகமில்லை. போன் செய்ய, அது சுவிச் ஆஃப் என்றது. அவளின் ப்ராஜக்ட் லீடரிடம் “லீவ் சொன்னாளா?” என்று கேட்க,

அவன் கத்தினான் “இப்போதான் டென் டேஸ் லீவ், இன்னைக்கு திரும்ப நான் இன்னைக்கு வரமாட்டேன்னு மெயில் பண்ணியிருக்காங்க. எப்படி வேலை முடிப்போம். இவங்களால ப்ராஜக்ட் லாஸ்ட் மினிட் ரஷ் அப் பண்ணனும். நீங்க சொல்ல மாட்டீங்களா குரு, என்ன ஆச்சு?” என்றான் டென்ஷனாக.

“தெரியலை! ஃபோன் சுவிச் ஆஃப். அதுதான் கேட்க வந்தேன்!”

“போங்க குரு, இவங்க கிட்ட வேலை வாங்கறதுக்குள்ள ஊருக்குள்ள நாலு எரும மாடு மேய்க்கலாம்!” என்று சலிப்பாக சொல்லிப் போனான்.

“என்ன ஆச்சு? ஏன் வரலை?” என்று மெசேஜ் அனுப்பினான், மெயிலில், வாட்ஸ் அப்பில், மெசஞ்சரில், ஃபோன் மெசேஜில், எல்லாவற்றிலும். எதற்கும் பதிலில்லை! கவலையாகிப் போனது!

மதியம் வரை தாக்குப் பிடித்தவன், கிளம்பி அவளின் ஹாஸ்டல் சென்றான். அங்கே இருந்த பெண்மணியிடம் சொல்லி அனுப்ப, அவனின் தொலைபேசி சில நிமிடங்களில் அடித்தது.

“எனக்கு உன்னைப் பார்க்க, பேசப் பிடிக்கலை, ப்ளீஸ்! இப்போதைக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாத!”

“உனக்கு என்னவோன்னு பயந்துட்டேன்!” என்றவனிடம், “எனக்கு ஒண்ணுமில்லை ஐ அம் ஆல்ரைட், நீ கிளம்பு!” என,

குரு அங்கிருந்து மீண்டும் வீடு வந்தான், மனது என்ன வாழ்க்கை என்று சலிப்பாக உணர்ந்தது. ஓடி ஓடி நாய் மாதிரி, பேய் மாதிரி உழைத்தும், இப்படி என் வாழ்க்கை சிக்கலாகி விட்டது.

“எல்லோருக்கும் நம்பிக்கை அற்றவன் ஆகிவிட்டேன்!” என்றபடி வீட்டின் பெல் அழுத்த, கொஞ்சமாக கதவை திறந்து “யார்?” என்று பார்த்து, பிறகு அதன் சங்கிலி விடுவித்து நன்றாக கதவை திறந்தாள் அரசி.

கதவில் இருந்த சிறிய துவாரம் மூலமாக பார்க்க முடியும், “இதுல பார்க்கலாமே!” என்று குரு இயந்தர கதியில் சொல்ல.

“நான் அதுல கண் வைச்சுப் பார்க்கும் போது யாராவது என் கண்ணைக் குத்திட்டா!” என

“அம்மா! இவ நிஜமா ஜக்கம்மா தான்! இவ கண்ணை யாராவது குத்த முடியுமா?” என்று நினைத்தவனாக, ஒன்றும் பேசாமல் உள் நுழைந்தான்.  

சமையலறை சென்று, அவன் சாப்பிடாத அவனின் டிஃபன் பாக்சை திறக்க, காலையில் சமைத்தது இப்போது மணி நான்கு, அது கெட்டு வாசம் வந்திருந்தது.

அதைப் போட ஒரு கவரைத் தேட, என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்த்தவள், அவளின் புடவையின் தலைப்பில் மூக்கை மூடிக் கொண்டு எதோ கேட்க,

அவனுக்கு புரியவில்லை “என்ன?” என்றவனிடம் “சாப்பிடலையா?” எனக் கேட்க,

“இல்லை!” என்பது போலத் தலையசைத்தவன், ஒரு கவர் எடுத்து, அதில் கொட்டி, டஸ்ட் பின்னில் போட்டு கை கழுவி அவன் ரூம் செல்ல,

செல்லும் அவனையேப் பார்த்து இருந்தாள். குருபிரசாத் முகம் முழுவதும் கவலை அப்பிக் கிடந்தது. கூடவே அப்படி ஒரு சோர்வு! பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். “பாதிக்கப்பட்ட நானே நன்றாக இருக்கின்றேன். இவன் ஏன் இப்படிச் சுற்றுகின்றான்” என்று மனது குருபிரசாத்திற்காகப் பரிதாபப்பட்டது. 

சென்றவன் உள்ளே படுத்துக் கொள்ள, அரை மணிநேரமாகியும் குரு வெளியே வராததால், அவனின் அரைக் கதவை தட்டினால் அரசி. ஆனால் குருவின் கவனம் சுற்றுப் புறத்தில் இல்லாததால், அவனுக்குக் கேட்கவேயில்லை.

மெதுவாகக் கதவை திறந்து எட்டிப் பார்த்தாள், இவன் கைகளை நெற்றியில் வைத்து விட்டத்தை நோக்கிப் படுத்து இருக்க, கதவை இப்போது பலமாகத் தட்ட திரும்பி பார்த்தவனிடம்,

“உங்க மொபைல் ரொம்ப நேரமா அடிக்குது! நிறைய கால்ஸ், ஏதாவது இம்பார்ட்டண்ட்டா இருக்கப் போகுது” என

கைப்பேசியை ஹாலில் வைத்து வந்து இருந்தது புரிய, ஒன்றும் பேசாமல் எழுந்து வந்தான், ஆஃபிஸ் கால், அங்கேயே அமர்ந்தபடி பேசி முடிக்க,

“சாப்பிடறீங்களா?” என்றவளிடம் பார்வையைப் பதிக்க,

“சாரி! உங்களைக் கேட்காம கிட்சன் யூஸ் பண்ணிக்கிட்டேன், நீங்க செஞ்சது காலையிலயே தீர்த்துட்டேன்! திரும்ப பசிச்சது அதுதான்!” என்று விளக்கம் கொடுத்தாள்.

“அங்க சமைக்க அதிகம் இருந்திருக்காதே!” என்றவனிடம், “நான் கடைக்குப் போய் வாங்கினேன்! சாப்பிடறீங்களா?” என்றாள் திரும்ப,

பசித்தது தான்! ஆனாலும் “இல்லை, வேண்டாம்!” என,

“காலையில நீங்க குடுத்த பால், சாப்பாடு, எல்லாம் சாப்பிட்டேன்! நீங்க செஞ்சதை நான் சாப்பிடுவேன்! நான் செஞ்சதை நீங்க சாப்பிட மாட்டீங்களா! அப்போ நானும் நீங்க செஞ்சதை சாப்பிட மாட்டேன்!” என்று நிற்க,

“இந்தப் பேச்சைக் கேட்க சாப்பிட்டு விடுடா!” என்று நினைத்துக் கொண்டு, டைனிங் டேபிள் சென்றான். அரசி பக்கத்தில் எல்லாம் வரவில்லை, குரு டைனிங் டேபிள் சென்றதும் வேலை முடிந்தது என்பதாக அவள் சோபாவில் அமர்ந்து சமணமிட்டு டி வீ ஆன் செய்துக் கொள்ள,

பசியில் நன்றாகத் திருப்தியாக உண்டான், உணவும் சூடாக சுவையாக இருந்தது. குரு வருவதற்கு முன் தான் சமைத்து இருந்தாள் அரசி. இன்னும் அவளே உண்ணவில்லை.

சாதம் மிருதுவாகப் பூப்போல இருக்க, “நம்ம சமைச்சா இப்படி வர்றது இல்லையே!” என்று யோசித்தபடி உண்டு முடித்தான். கை கழுவி வந்தவன், “தேங்க்ஸ்! நல்லா இருந்தது!” என,

அதற்கு பதில் சொல்லாமல், “காலையில நீங்க குடுத்த பால்ல சர்க்கரையே இல்லை, சாப்பாடு வேகவே இல்லை” என,

“இது வேறையா!” என்பதுப் போல குருபிரசாத் லுக் விட,

“எதுக்கு சொல்றேன்னா, ஏதாவது டிப்ஸ் வேணும்னா கேளுங்க, அந்த மாதிரி வெந்தும் வேகாம சாப்பிட்டா, சில சமயம் வயிறு வலிக்கும்!” என சீரியசாக சொல்ல,

“என்ன பீஸ் டா இவ! ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படிப் பேசறா?” என்று பார்க்க.

அவனின் பார்வை புரிந்து, “ஒரே வீட்ல இருக்கோம்! எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்க முடியாது, என்னால பேசாமையும் இருக்க முடியாது!” என்றாள்.    

“நான் நிறையப் பேசமாட்டேன்!” என்று குரு பதில் பேச,

“என்னால பேசாம இருக்க முடியாதுன்னு சொன்னேன்! நீங்க பேசணும்னு சொல்லலை!”

“ஷ்! இவக் கிட்ட வாய் குடுக்கறியே!” என்பதுப் போல குரு லுக் விட,

“இது மேனிஃபாக்சரிங் டிஃபக்ட்” என்று தோளைக் குலுக்கி சொல்ல,

குருபிரசாத்திற்கு முறுவல் பூத்தது. “டேய் ஜக்கம்மாடா இவ!” என நினைத்தவன், “நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன்!” என்று அவளிடம் சொல்லி, “ஃபோன் அடிச்சா அடிக்கட்டும், எழுப்பாத!” என்று சொல்லி கைப்பேசியை ஹாலில் வைத்துச் சென்றான்.

வயிறு நிறைய உண்டதால், நல்ல உறக்கம். மூன்று மணிநேரம் அடித்துப் போட்டார் போலத் தூங்கிவிட்டான்.

அந்த உறக்கம் மனதை சற்று லேசாக்கியிருக்க, வெளியே வந்தான். அரசி சமையலறையில் இருந்தாள். எப்படித் தெரிந்தது என்றால், அவள் பாடும் சத்தத்தில் இருந்து. அதுவும் என்ன பாட்டு

“ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆகிடுவோமே வாழ்நாளிலே”  

என்று அதன் மெட்டில் இல்லாமல், இவள் இந்தக் காலத்திற்கு தகுந்த மாதிரி ரீமிக்ஸ் போட்டுக் கொண்டிருக்க,

“ஐயோ! என்ன கொடுமை இது?” என்றபடி அவன் எட்டிப் பார்க்க,

அவனை எதிர்பாராமல் “ஆஆஆஆஆஆஅ” என்று கத்தப் போனவள், பின்பு ஆசுவாசப்பட்டு நின்று, நெஞ்சைப் பிடித்தவள், “வரும் கூப்பிட்டுக்கிட்டே வரணும்! நானே பயமா இருக்குன்னு தான், ஏதாவது பேய் வந்தா என் பாட்டைக் கேட்டு ஓடிடட்டும்னு, கர்ண கடூரமா கத்திக்கிட்டு இருக்கேன்!” என்று சிரிக்காமல் சீரியசாக சொல்ல,

இந்த முறை முறுவல் அல்ல, பெரிய சிரிப்பே வந்து விட்டது குருப்ரசாதிற்கு, “ஹப்பா! நான் ஓடலை! அப்போ நான் பேய் இல்லை!” எனவும் அரசியின் முகத்திலும் சிரிப்பு.

சிரித்துக் கொண்டே “அது யாரு டாலி?” என அரசி கேட்கவும்,  

குருப்ரசாத்தின் சிரிப்பு அப்படியே நின்று அவளைப் பார்க்க, “இல்லை! நிறைய ஃபோன் கால்ஸ் வந்துக்கிட்டே இருக்கு!” என,

“என்னை எழுப்பியிருக்கலாம் தானே!” என்று அவளிடம் சொல்லிக் கொண்டே அவசரமாக ஃபோனை எடுக்கப் போனான். 

“இவன் தானே எழுப்ப வேண்டாம் என்று சொன்னான்!” என்று அரசி நினைக்க, அப்போது உதித்த ஒரு இனிமை அப்படியே மறைந்தது.

 

Advertisement