Advertisement

அத்தியாயம் ஆறு :

ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.

மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும் இருட்டும் பயம், தனிமையும் பயம். பகலிலாவது சமாளித்துக் கொள்வாள், இரவில் மிகுந்த பயம்.

அதனால் உறக்கம் வராமல் அமர்ந்து இருந்தாள். பயம் அப்போதைய சூழலைக் கொண்டு மட்டும் அல்ல எதிர்காலம் குறித்தும், வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முறை தான் என்பது அவளின் கோட்பாடு, அது அவளுக்கு மட்டுமே! மற்றவர்களை குறை சொல்லவில்லை!

இப்போது அது முடிந்து விட்டது. அதற்கு தான் திருமணத்தை நிறுத்த அவ்வளவு போராடினாள். குருபிரசாத் பிடிக்கவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டான். அப்பாவின் மேல் தான் அவ்வளவு கோபம் வந்தது, நம்பாமல் போய் விட்டாரே என்று.

இனி வாழ்க்கை முழுவதும் தனக்குத் தனிமை தானா? அதுதான் அச்சத்தைக் கொடுத்தது.

அந்த ஒரு நாள் தனிமையிலேயே அதுவரை கடந்த இரண்டு மணிநேரத்திலேயே ஏதேதோ நினைக்க ஆரம்பித்து விட்டாள், “எங்காவது அனாதை ஆஸ்ரம் சென்று சேர்ந்து கொள்ளாமா? முதியோர் இல்லம் அங்கு சேவை செய்யப் போகலாமா? நிறைய பேர் இருப்பார்களே தனியாக இருக்க வேண்டாமே!” என்று தோன்றியது.

ஆனால் அம்மா செத்தே போய் விடுவார் என்றுத் தோன்ற அந்த யோசனையைக் கைவிட்டாள்.

“எப்படி வளர்த்து இப்படித் தள்ளி விட்டார்களே” என்று ஒரு புறம் தோன்றியது. “உன்னுடைய தலையெழுத்து அப்படி என்றால் பெற்றவர்களை ஏன் குறை சொல்கிறாய்? தெரிந்திருந்தால் இப்படி செய்வார்களா?” என்றும் தோன்றியது.

இப்படியே நேரம் ஒரு மணியை நெருங்க, “இந்தப் பேய் எல்லாம் ஒரு மணிக்குத் தான் வருமாமே” என்று தோன்ற திக் திக் என்று அமர்ந்து இருந்தாள்.

குரு உறங்கியவன் உறக்கம் கலைய, எழுந்து அரசி உறங்கி விட்டாளா என்று பார்க்க வந்தவனுக்கு, அவள் உறங்காமல் அமர்ந்து இருப்பாள் என்றா தெரியும்,

கதவைத் திறந்து குரு வெளியே வரவும், அவன் வருவான் என்று எதிர்பாராததால் எதோ யோசனையில் இருந்தவள், அவன் வரும் அரவத்தில் வீல் என்றுக் கத்தி விட்டாள்.

அரசி கத்திய கத்தலில் குரு பயந்து விட்டான். பின்பு தான் அவள் கத்திக் கொண்டு இருக்கிறாள் என்று புரிய,

“ஹேய்! கத்தாத நான் தான்!” என்று பேச, இமைதட்டி குரு தானா என்று பார்த்தவள், ஆசுவாசப்பட்டு சுவரில் அப்படியே தலை சாய்த்தாள், கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிய,

“ஏன் இங்க உட்கார்ந்து இருக்க?” பதில் சொல்லாமல் இருக்க, “சொல்லு அரசி!” என்று அருகே சென்று அதட்ட,

“எனக்கு இருட்டா இருந்தா பயம்!” என்றான் அவனின் அதட்டலில், “சரி! லைட் போட்டுட்டு தூங்க வேண்டியதுதானே!”

“இல்லை! தூக்கம் வரலை!” என்றாள். உணவு பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

“ப்ச்!” என்று சலித்தவன், “சாப்பிடாம பசில இருந்தா, எப்படித் தூக்கம் வரும்! பயம்னா சொல்லணும் தானே!” என்று அதட்டினான்.

“நான் எதோ சாமான் மாதிரி, இங்க விட்டுட்டு உங்க ரூம் போய் கதவை சாத்திக்கிட்டீங்க, நான் வந்து எனக்கு பயம்ன்னு சொல்வேனா? பயத்துல இப்படியே செத்தாலும் சொல்ல மாட்டேன்?” என்றாள் ஆவேசமாக.

“அம்மாடி! திமிரை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருப்பா போல!” என்றுத் தோன்றியது. பாவமாக இருந்தாலும் அவள் வெறுக்க வேண்டும் என்பதற்காகவே “அப்போ இப்படியே கிட!” என்று சொல்லி எழுந்தான். கூடவே “உங்க வீட்ல நீ செல்லமா வளர்ந்து இருக்கலாம், அதுக்காக இங்க வந்து என் உயிரை எடுக்கக் கூடாது!” என்றான்.

“நான் உங்க உயிரை எடுக்கறனா, ஒரு வார்த்தைக் கூட நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேசலை!” என்றாள் ஆத்திரமாக.

“ஏன் பேசலை? பேசணும் தானே! இப்படி உன்னைப் பிடிக்கலைன்னு சொல்ற என்கிட்டே நீ வரவேண்டிய அவசியம் என்ன?” என்று காட்டமாகக் கேட்க,

பதில் சொல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தாள். இதற்கு அவளால் பதில் சொல்ல முடியாது. திருமணம் தப்பாகிப் போய்விட்டது என்று தெரிந்தால் அவளின் அப்பாவும் அம்மாவும் தாங்க மாட்டர், கலையரசியின் கணவனையும் உண்டு இல்லை என்று செய்து விடுவர்,

அதுவும் மகள் சொல்லியும் தாங்கள் நம்பாமல் இப்படி யாகிவிட்டதே என்று அவர்களை அவர்களே மன்னித்துக் கொள்ள மாட்டார். திருமணமே முடிந்து விட்டது, இனி தான் அந்த உணர்வை தன் பெற்றோருக்குக் கொடுக்க வேண்டாம் என்று திரும்ப அதைப் பற்றி பேசவில்லை.  

இங்கே இவர்களின் குடும்பத்தையும் ஒரு வழியாக்கிவிடுவர், அதன் பொருட்டே “மாப்பிள்ளை இங்க வந்துட்டாராம் மா! நாளைக்கு வேற மாசம் பொறக்குது, அனுப்ப முடியாது, வா கொண்டு போய் விடறோம்!” என்று சொன்ன போது உடனே கிளம்பி வந்து விட்டாள்.

“என்ன முறைக்கிற?” என்றான் அதற்கும்.

“கொஞ்சம் பொறுத்துக்கங்க, பிடிக்கலை பிடிக்லைன்னு சொல்றவங்க வீட்ல மானங்கெட்டு எல்லாம் உட்கார்ந்து இருக்க மாட்டேன்! எதாவுது வேலை தேடிக்கறேன், ஹாஸ்டல் எங்கயாவது போயிடறேன்!” என்றாள்.

“ஆங்! என்ன இது?” இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளின் அப்பா அம்மாவிடம் போக வேண்டும் என்று தான் நினைத்தான், மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடுவர் என்றும் நினைத்தான்.

இப்படி வேலை தேடி தனியாக போவதா? தலையைப் பிடித்து சோபாவில் அமர்ந்து விட்டான். தன்னால் ஒரு பெண் நிற்கதியாய் நிற்பதா?

அவன் அங்கேயே அமரவும், சண்டையின் பொருட்டாவது அமர்ந்தானே என்று அப்படியே தரையில் படுத்துக் கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து உறங்க ஆரம்பித்தாள்.

ஆனால் குருபிரசாத் மீண்டும் உறக்கத்தை தொலைத்தான், இதயத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் நிமிர்ந்த போது அந்த மார்பிள்ஸ் தரையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அரசி.

விட்டு விட்டுப் போக மனதில்லாமல் அங்கேயே அமர்ந்தான். பிடித்தம் பிடித்தமின்மை என்பது வேறு, தன்னை நம்பி விட்டு விட்டு சென்றிருக்கும் பெண்ணை இப்படி பயந்து உறக்கம் வராமல் கொட்ட கொட்ட முழித்திருக்குமாறு செய்வது தவறல்லவா?

அவ்வளவு கீழாகவா இறங்கிவிட்டாய் நீ என்று அவனுக்கு அவனே திட்டிக் கொண்டான். பிறகு அவன் சோபாவில் அமர்ந்தபடி உறங்க முற்பட, அவள் அப்படியே கீழே தரையில்.

சிறிது நேரத்தில் ஜிலுஜிலுப்பு ஏற, அரசி குளிரில் உடலை குறுக்க ஆரம்பித்தாள். அதனை பார்த்தவன் போர்வையை எடுத்து வந்து போர்த்தி விட்டான். பின்பு உறக்கம் விடைபெற்று விட, லேப் எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான்.

காலை ஐந்து மணிவரை வேலை செய்தவன், பின்பு வீட்டை பூட்டி பால் வாங்கி வந்து காபி வைத்துக் குடித்தான். அப்போதும் பசிக்க, ஏழு மணி ஆகவும், சற்று தூரம் இருந்த அண்ணாச்சி மளிகைக் கடை சென்று முக்கியமாக தேவையானதை வாங்கி வந்து சமைக்க நின்றான். 

அப்போது தான் அரசி எழுந்து அமரும் அரவம் கேட்டது. காய் கறி நறுக்கி வெளியே வரவும், சோஃபாவில் அமர்ந்து இருந்தாள்.

“என்ன சாப்பிடுவ காபி இல்லை டீ” என்றவனுக்கு, “என்னிடம் தான் பேசினாயா?” என்பது போல ஒரு லுக் விடவும், “உன்கிட்டத் தான் கேட்கறேன்” எனவும்,

“அச்சோ! நம்ம போய் இப்போ சமைக்கணுமோ? இந்த அம்மா நேத்து என் காது தீயற அளவுக்கு பேசிச்சே” என்ற எண்ணம் ஓட எழுந்தவளிடம், பார்வையை பதித்து நின்றான்.

“நான் காஃபி போடணுமா?” என்று பதிலுக்குக் கேட்க, “நீ என்ன சாப்பிடுவன்னு கேட்டேன்!” என்றான் அழுத்தமாக, “பால்” என்றாள், அவன் திரும்பி உள்ளே சென்று விட,

“இது அவன் வீடு! அவன் சமையல் கட்டு! உன்னை வேண்டாம்னு சொல்றான் போல!” என்று நினைத்தாள். “நடந்து விட்டது! இனி உன்னை நீ வருத்தப்படுத்திக் கொள்ளாதே! இது நதியின் போக்கு! அதனோடு செல்! கரை வரும் நேரம் பார்த்துக் கொள்ளலாம்!” என்று பலமுறை மனதோடு சொல்லி விட்டால் தான். ஆனாலும் என்னவோ மனது வலித்தது. எதிர்காலம் அச்சுரித்தியது.

சிறிது நேரத்தில் அவன் வந்து கொடுக்க கையினில் வாங்கிக் கொண்டாள். குடித்த போது அதில் சர்க்கரை மிகவும் குறைவாக இருக்க, ருசியே தெரியவில்லை. ஆனாலும் திரும்ப சர்க்கரை போட்டுக் கொள்ள மனதில்லாமல் அப்படியே குடித்தாள்.

அந்த டம்ளரை சிங்கிள் கழுவச் செல்ல, அவன் சமைத்துக் கொண்டிருந்தான். எதோ குக்கரில் தாளித்துக் கொண்டு இருந்தான். இவள் டம்ளர் கழுவி நிற்க “என்ன?” என்று திரும்பிப் பார்க்க,

“நான் குளிக்கணும்! அந்த பாத்ரூம் நேத்து நீங்க காட்டினது யூஸ் பண்ணிகிட்டா?” என்று அரசி கேட்ட விதமே குருப்ரசாதிற்கு மனதை பிசைந்தது. அப்போது காலையில் எழுந்ததில் இருந்து அப்படியே அமர்ந்து இருக்கின்றாள் என்று புரிந்தது.

“ம்” என்பதுப் போல தலையசைக்க, “தேங்க்ஸ்” என்ற சொல் உதிர்த்து நடந்தாள். அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்றதும் திருமணத்தை நிறுத்தாத தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.

அப்பாவிடம் “சொல்லாம கொள்ளாம இப்படி செஞ்சிட்டீங்களே” என்று சண்டையிட்ட போது, அவர் தெளிவாக சொல்லி விட்டார், “நீ காதலிக்கிறேன் என்று என்னிடம் எப்போதும் சொல்லியதில்லை, எப்போது எந்தப் பெண்ணைக் காட்டினாலும் இப்போது திருமணம் வேண்டாம் என்று தான் சொன்னாய், அதனால் தான் இது நல்ல இடம் என்றது விட மனதில்லாமல் இப்படி செய்தேன்”

“எப்போதும் உன்னுடைய வாழ்க்கையில் எங்களுக்கு இருக்கின்றதோ இல்லையோ, உணவு, உடை, கல்வி, எல்லாம் சிறப்பாய் இருக்க வேண்டும் என்று தான் என் சக்திக்கு மீறி எல்லாம் செய்தேன்”

“அதைப் போலத்தான் உனது வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று செய்தேன், என்னோட பையனுக்கு எல்லாம் பெஸ்டா கிடைக்கணும்னு செஞ்சேண்டா! அந்தப் பொண்ணு கிட்ட ஒரு சின்ன குறை சொல்லு பார்ப்போம். நாமல்லாம் எட்ட நின்னு பார்க்கறவங்க அவங்க. அந்தப் பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சி வெச்சிருக்கேன்!” என்று அவர் சொல்லும் போது அவனால் பதிலே பேசமுடியவில்லை.

“நீ சும்மா கல்யாணம் வேணாம்னு சொன்னா எப்படி? இதுவரை எல்லாம் உனக்குத் தான் செஞ்சேன்! இந்தப் பிள்ளைங்களை ஒரு நல்ல இடத்துல கொடுக்க வேண்டாமா, பணம் இருந்தா மட்டும் முடியாது. ஜனக் கட்டும் வேணும், அது தமிழரசி வீட்ல நிறைய இருக்கு!”

“நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா என் பொண்ணுங்களுக்கு எப்படி நல்ல இடம் அமையம். நான் ஒத்தை ஆள், உனக்குக் கல்யாணம் பண்ணினா உன் மனைவியோட நீ நல்ல படியா கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நினைச்சேன்!”  

“நீ என்னைக்குமே சுயநலவாதியா இருந்தது இல்லை! இந்த விஷயத்துல இப்படி இருப்பேன்னு நான் கனவா கண்டேன்!” என்று அவர் பொரிய…

அவனால் பதில் பேசவே முடியவில்லை.  

இரு தங்கைகள் இருக்கும் பொழுது காதல் என்று அவனால் சொல்ல முடியவில்லை. தன் தங்கைகளுக்கு இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணமாய் இருக்க முடியாது. அவன் காதலித்தாலும் தங்கைகள் அப்படி வந்து நின்றால் அதை ஏற்றுக் கொள்வானா சொல்ல முடியாது.  அதனால் அவன் காதலை சொல்லாமல் தயங்கி இருக்க, அப்பா இப்படி செய்வார் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை.

குக்கர் விசில் அவனை நிகழ்வுக்கு கொண்டு வர, அடுப்பை அணைத்து, அவன் தயாராக சென்றான்.    

 தயாராக வெளியே சென்ற போது சோபாவில் அமர்ந்திருந்தாள், இவன் வெளியே வந்ததும் இவனையேப் பார்த்தாள். ஏதாவது சொல்லனுமா?” என்று அவன் கேட்க, “ஆம்” என்பதுப் போல தலையசைத்தவள்,

“சோப், டூத் பேஸ்ட், எதுவும் இல்லை, பிரஷ் இல்லன்னா பரவாயில்லை கைல தேசிக்குவேன். ஆனா சோப் பேஸ்ட் வேணும்!”

“ஹய்யோ!” என்ற தன் மடத்தனத்தை நொந்தவன், “பேஸ்ட், சோப்!” என்று அவனின் பாத்ரூமில் இருந்து கொண்டு வர, “பேஸ்ட் ஓகே! சோப் புதுசு இல்லையா?”

“இல்லை” என்று தலையாட்டியவன், “நேத்து தான் இதை எடுத்தேன்! புதுசு தான்” என்று சொல்ல,

“நீங்க யூஸ் பண்ணினது வேண்டாம்!” என்று சொல்ல முடியாமல். “பக்கத்துல கடை இருக்கா? நான் வாங்கிக்கட்டுமா?” என்றாள்.

“ஹேய்! எனக்கு டைம் ஆகுது. என்ன உன் பிரச்சனை, இது புதுசுன்னு சொல்றேன் தானே!” என்று கடுப்பாகச் சொல்ல,

அந்தத் த்வனி அரசியைக் கோபப்படுத்த, “அது நீங்க யூஸ் பண்ணிட்டீங்க வேற ஆளுங்க யூஸ் பண்ணினதை நான் எப்படி யூஸ் பண்ணுவேன்!” என்று பளிச்சென்று சொல்ல,

“அப்புறம் எப்படி என்னோட வீட்ல மட்டும் தங்கற” என்றான் காட்டமாக.

“தங்கினா! மேல தேச்சிக்கிட்டா இருக்கேன், சோப் மாதிரி!” என,

“ஆங்!” என்று வாய் பிளந்தவன் “என்னமா பேசறாடா இவ, இவ கிட்ட எல்லாம் வாய் குடுக்க முடியாது போலடா” என்றவன் திரும்பி நடந்து கொண்டே “நான் குளிச்சிட்டு கடைக்குப் போறேன்!” என்று சொல்லியபடி செல்ல,

அமர்ந்து கொண்டாள், அமர்ந்த நேரம் அம்மாவின் தொலைபேசி அழைப்பு, “கண்ணு எப்படி இருக்குற?” என்று ஆரம்பிக்க,

“நேத்து நைட் தான்மா என்னை இங்க விட்டுட்டு போனீங்க!” “அதுதான் கண்ணு கேட்கறேன், எப்படி இருக்க?” என்றார்.

“இப்ப தான் எழுந்தேன்! இங்க இருக்குறவர் பால் குடுத்தார்! குடிச்சிட்டு உட்கார்ந்து இருக்கேன்! இனிமே தான் குளிக்கணும்!” என,

“என்ன மாப்பிள்ளை குடுத்தாரா?” என்று அவர் கேட்கும் போதே அவர் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி, “மாப்பிள்ளை நல்லா பாத்துக்கறார் போல” என்று, “அப்பா எல்லாம் கண்ணு, சமையல் கட்டுப் பக்கம் கூட வரமாட்டார், உங்க அக்கா வீட்டுக்கராரும் அப்படித் தான் கண்ணு! மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரி போல!” என்றார்.

எந்த பதிலும் அரசி சொல்லவில்லை, அதையும் வெட்கம் என பூமா நினைத்தார். நேற்று முகத்தை தூக்கிக் கொண்டு வந்த பெண், இன்றைக்கு வெட்கப்படுவாளா என்றெல்லாம் யோசிக்கவில்லை. பூமாவைப் பொறுத்தவரை தாலியின் மகிமையாகத் தான் எல்லாம் நினைப்பார்.

“பால் குடுத்தார்ன்னு நீ அப்படியே இருந்துடாத கண்ணு, நீ சமைக்கணும்!” என்றார் பொறுப்பான அம்மாவாக, கூடவே “அப்புறம் கண்ணு!” என்று இழுக்க,

“அம்மா அவர் ஆஃபிஸ் கிளம்பறார். நான் அப்புறம் கூப்பிடறேன்!” என்று சொல்லி வைத்தவள், “ஹய்யோ என் அம்மாவே!” என்று நொந்தபடி சோபாவில் சமணமிட்டு, கன்னத்தில் கை கொடுத்து அமர்ந்தாள்.  

 

Advertisement