Advertisement

அத்தியாயம் நாற்பத்தி இரண்டு:

நில்லாமல் வீசிடும் பேரலை!

அவளிடம் பதில் சொல்லாமல் போனை எடுத்து ராஜாராமிற்கு அழைத்தான், “அப்பா நான் ஈஸ்வர், இங்க வர்ஷி காலேஜ்ல தான் இருக்கோம், நான், சரண், ப்ரணவிக் குட்டி, நாளைக்கு வர்ஷினி பர்த்டே! நாங்க இன்னைக்கு செலப்ரேட் பண்ண இஷ்டப்படறோம், இருங்க அவ கிட்ட குடுக்கறேன்!” என்று அவளிடம் கொடுத்தான்.

“என்னடா இது?” என்று மனதிற்குள் சற்று கலவரமானார். “திருமணமாகாத பெண்! எப்படி அனுப்ப? தெரியாமல் போனால் வேறு, என்னிடம் பெர்மிஷன் கேட்கிறானா? சொல்கிறானா?” என்று குழம்பிப் போனார்.

அதனை வாங்கியவள் “அப்பா! சரணும், ப்ரணவியும் வந்திருக்காங்க! நான் அவங்க கூட போகட்டுமா?” என்றாள். காலையில் மகளின் குரலில் இருந்த சோர்வு இல்லவே இல்லை,

“சரிங்க பாப்பா!” என்று விட்டார்.

வைத்தவர் “நாளைக்கு பாப்பா பர்த்டே, என்ன பண்றோம்?” என்றார் கமலாம்மாவைப் பார்த்து.

“எப்பவும் ட்ரெஸ் எடுப்பேன்! ஏதாவது நகை வாங்குவேன், ரெண்டு நாளா ஹாஸ்பிடல்ல இருக்குறதால இன்னும் எதுவும் பண்ணலை, ஷாலினிக்கு கூப்பிடறேன்!” என்று ஃபோனை எடுத்தார்.

“வேண்டாம்! அவங்களா ஏதாவது பண்ணினா பண்ணட்டும், நீ அவளுக்கு பர்த்டேன்னு ஞாபகப் படுத்தாத!” என்றார்.

“ஏன்? ஏதாவது பண்ணலைன்னா பாப்பா ஏமாந்து போயிடுவா!”

“விடு! அப்புறம் பார்த்துக்கலாம்! நீ யாருக்கும் ஞாபகப் படுத்தக் கூடாது!” என்று விட்டார்.

“என்ன? உங்கப்பா பெர்மிஷன் குடுத்துட்டாரா?” என்றான்.

“ம்ம்ம்!” என்று தலையாட்டியவள், தாஸை பார்த்து கையசைத்தாள். அவன் வரவும் “என் பேக் எடுத்துட்டு வாங்க, நான் இவங்களோட கிளம்பறேன். அப்பா கிட்ட சொல்லிட்டேன்!” என்றாள்.

“நான் வேண்டாங்களா பாப்பா! நீங்க பேசிட்டு வாங்க! நான் கார் ஓட்டறேன்!” என்று தாஸ் நிற்க,

“உங்க வேலையை இவர் பார்ப்பார் அண்ணா! நீங்க கிளம்புங்க! என் பேக் கொண்டு வாங்க!” என்றாள்.

“இப்போ என்ன சொல்றா? என்னை வேலைக்காரன் சொல்றாளா? இல்லை டிரைவர் சொல்றாளா?” என்று ஈஸ்வர் பார்த்து நின்றான். ஆனால் கோபமும் வரவில்லை, காயப் படவும் இல்லை.

நேற்று பெஸ்ட்டா என்று பத்து கேட்டதும் அப்படிக் கோபம் வந்தது, காயமும் ஆனான். ஆனால் இன்று ஒன்றுமே தோன்றவில்லை. ஒரு சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான். அவனைக் குறித்து அவனிற்கே ஆச்சரியமாக இருந்தது.

“அச்சோ! இந்த பாப்பா ஈஸ்வர் சாரை என்ன சொல்கின்றது!” என்று யோசித்த போதும். மறுத்துப் பேச முடியாமல் சொன்னதை செய்தான்.

“நாம முதல்ல கோயிலுக்கு போறோம்!” என்று காரில் அமர்ந்தான்.

“ம், சரி!” என்பது போல தலையாட்டி சரணிடம் பேச துவங்கிவிட, அவன் முதலில் நேராக சென்றது ஒரு பொடிக், அப்போதுதான் அதை திறந்து கொண்டிருந்தனர்.

“இங்க எதுக்கு?”

“இந்த ட்ரெஸ்ல கோயிலுக்கு வேண்டாம்!”

“ஏன், இதுக்கு என்ன?” என்றவள் அணிந்திருந்தது ஒரு ஜீன்ஸ் பேன்ட் அண்ட்   காட்டன் ஷர்ட்.

“நீட் டிரஸ் தான், ஆனா இது நம்ம ட்ரெஸ் இல்லை, கோவிலுக்கு இதோட போனா அய்யர் என்னை முறைச்சு பார்ப்பார்!”

“ஏன் பார்ப்பார்?”

“நம்ம தான் அங்க ட்ரஸ்ட்டி, இப்படி வரலாமான்னு பார்ப்பார், நீ இவங்களோட இரு!” என்றவன்,

சென்று ஐந்தே நிமிடங்களில் ஒரு கவரோடு வந்தான், “இது போட்டுக்கலாம்!” என்று காரில் அமர்ந்தான்.

“வீட்டுக்கு போயிருந்தா வேற டிரஸ் மாத்தியிருப்பேன்!”

“எனக்கு அங்க யாரையும் பார்க்கப் பிடிக்கலை. அதுதான் காலேஜ் வந்தேன்!” என்றான் இறுக்கமாக. குரலின் மாற்றம், முக மாற்றம் எல்லாம் நன்கு வர்ஷினிக்கு புரிந்தது.

வர்ஷினி பேச வர, “அதை பத்தி பேச வேண்டாம்!” என்றான் எதிரில் இருப்பவர் எதிர்த்தோ மறுத்தோ பேச முடியாத குரலில்.

வர்ஷினியும் அதை விட்டு, “நான் எங்க மாத்துவேன்?” என்றவளிடம்,

“கூட்டிட்டு போறேன்!” என்றவனின் முக பாவம் அப்படியே மாறியது. முகமும் இறுக்கத்தை விட்டது. எல்லாம் பார்த்திருந்தாள். சிறிது தூர பயணம்,  ஒரு குடியிருப்பு, பெரிய கம்யுனிடியாக இருந்தது. ஒரு அப்பார்மென்டின் உள் சென்றான், லசுரி அபார்மென்ட், “பிரணவியை தூக்கிக்கோ!” என அவன் கீழே இறங்க, பின்னோடு அவன் சொன்னதை செய்தாள்.

மறுக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை!!!

அங்கே ஃபர்ஸ்ட் ப்ளோரில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று கதவை திறந்தவன், “இங்க எந்த ரூம்ல வேணா மாத்திக்கோ!” என,

“யாரோடது இது?” என்றாள் பார்வையால் வீட்டை அளந்து, வீட்டில் எந்த பொருட்களும் இல்லை.

“நம்மது தான், மாத்து டைம் ஆகுது!” என்றான், முகத்தைப் பார்த்து பேசினாலும், கண்ணைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தான்.

பிரணவி கீழே விட்டதும் குதிக்க, அந்த வெறுமையான வீட்டில் சத்தம், சரண், “குதிக்காத ப்ரணி!” என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதை வேடிக்கை பார்த்து நின்றிருந்த வர்ஷினியிடம்,

“டைம் ஆகுது. எனக்கு ஒண்ணுமில்லை, நாள் முழுதும் கூட உன்கூட சுத்துவேன்!” என,

வேகமாக ஒரு ரூமின் சென்றாள். அந்த கவரைப் பார்க்க, ஒரு சுரிதார், இளம் மஞ்சள் நிறத்தில் கண்ணை உறுத்தாத வகையில், துப்பட்டா பச்சை கலரில். சிம்பிள் போல தோன்றினாலும் அணிந்தவுடன் ஒரு ரிச் லுக் வந்தது. எப்போது ஃபிட்டாக அணிபவளுக்கு கொஞ்சம் லூசாக இருந்தது. அப்படி ஒன்றும் லூஸ் எல்லாம் இல்லை அவளுக்கு அப்படி ஒரு தோற்றம்.

வெளியே வந்தவளை ஆராய்ந்தவன், “இட்ஸ் குட் கிளம்பலாமா?” என,

அவனை பார்திருந்தவளிடம், “எப்பவும் ரஞ்சனிக்கு நான் தான் எடுப்பேன். நான் இல்லாம டிரஸ் எடுக்கவே மாட்டா. அந்தப் பழக்கம்!” என்று விளக்கமும் கொடுத்தான்.   ஈஸ்வரின் குரலில் இருந்தது என்ன என்று ஆராய முற்பட்டாள்.

மீண்டும் ப்ரணவியை தூக்கி கொண்டு, சரனை அழைத்துக் கொண்டு கோவிலை அடைந்தனர். சென்னையில் புகழ் பெற்ற பெரிய கோவில்.

கோவில் உள் நுழைந்ததும் ப்ரணவியை கீழே விட, அவள் தளிர் நடை போட்டு நடக்க, அவளுடன் நடப்பதே அப்படி ஒரு சந்தோஷத்தை வர்ஷினிக்குக் கொடுத்து.

“இந்தப் பக்கம்..” என்று நேராக பிரகாரம் செல்ல ப்ரணவியின் கை பிடிக்க..

“இல்லை, அந்த பக்கம் இல்லை, இப்படி தான் போகணும்!” என்று முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் புறம் நகர்ந்தனர்.

“தனக்கு தெரியவில்லையோ?” என்ற ஒரு பாவனையை வர்ஷினியின் கண்கள் காட்ட, அதில் தொலைய இருந்தவன்,

“அது ஒண்ணுமில்லை, நீ கிறிஸ்டியன் இன்ஸ்டிடுயுஷன்ல படிச்ச, உங்க அப்பா வீட்லயும் ரொம்ப நாள் இருந்தது இல்லை, லீவ்க்கு மட்டும் தான் வருவ. அதோட அவங்களுக்கும் அதிகம் கோவில் வந்து நான் பார்த்தது இல்லை. இதெல்லாம் தெரியுமா எனக்கு தெரியாது, அவங்க எப்பவாவது தான் கோவில் போவாங்க!”

“நாங்க போகாத நாளை விரல் விட்டு எண்ணிடலாம், வீட்ல யாரவது போவாங்க, அதனால சின்ன சின்ன விஷயம் கூட கவனிப்போம். சரண் கூட போ! சரண் என்ன செய்யறானோ அதை செய்!” என்று விளக்கம் கொடுத்தவன்..

“நீ போ!” என்று அவர்களை முன் அனுப்பி பின் தங்கினான்.

ஈஸ்வரின் சமாதானம் வர்ஷினிக்கு புரிந்தது. மனது இதமாகவும் உணர்ந்தது.

இடைவெளி விட்டு தொடர்ந்தான். சரண் செய்வதை வேடிக்கை பார்த்து பார்த்து வர்ஷினி செய்தவள், அவன் செல்லும் சன்னதிகளுக்கு சென்று அவன் செய்வது போல செய்ய.

சரணுக்கும் அவளிற்கும் ஈஸ்வருக்கு வித்தியாசமே தெரியவில்லை! கண்களால் படம் எடுத்துக் கொண்டே இருந்தான்.  இவர்களைப் போலவே ப்ரணவியும் செய்ய பார்க்கவே கவிதையாய் இருந்தது.

சரண் சாஷ்டாங்கமாய் ஒரு இடத்தில் விழுந்து எழ, ப்ரணவியும் அண்ணன் செய்ததை போல செய்தாள்.

“நானும் விழ வேண்டுமோ?” என்று யோசனை செய்து விழப் போனவளை,

“நீ அப்படி கும்பிடக் கூடாது , மண்டியிட்டு விழுந்து எழுந்தா போதும்!” என்று சொல்லி,

“டேய், பெரிய மனுஷா! உனக்கு தெரியும்னு நான் ஃபில்ட் அப் கொடுத்தா, நீ தப்பு தப்பா செய்யற, இங்க இப்படி விழுந்து கும்பிடக் கூடாது! எழுந்து வா!” என்று சரனை அதட்டினான்.

“விழுந்து கும்பிடுவோம் சித்தப்பா!” என்று சரண் பெரிய மனிதனாய் பேச,

“சரண், அது இங்க இல்லை. முன்னாடி தான் கும்பிடணும்!” என்று சொல்லி, ப்ரணவியை தூக்க முயல, அவள் வேகமாக சென்று வர்ஷினியை பிடித்தாள்.

“குட்டிம்மா! விழுந்துடப் போறீங்க!” என்று அவளை தூக்கியவள்,

“எதுக்கு இந்த அப்பியரன்ஸ், மாத்துங்க! குழந்தை பயப்படறா!” என்று ஈஸ்வரிடம் சொல்லி அவள் பாட்டிற்கு செல்ல, சரணும் அவளை தொடர்ந்து செல்ல..

ஒரு முறுவலோடு பார்த்து இருந்தவன், “கடவுளே! எல்லாம் சரியாக்கிவிடு! இவளை எனக்கு கொடுத்து விடு!” என்று வேண்டுதல் வைத்து அங்கேயே நின்றிருந்தான்.

“சித்தப்பா!” என்ற சரணின் குரலில் வேகமாக சென்று, அவர்களோடு சேர்ந்து சன்னிதானம் சென்றனர். அங்கே நிறையக் கூட்டம், ஆனால் அவர்களை தாண்டி இவர்கள் உள்ளே சென்றனர்.

“அய்யர், அவனிடம் ரொம்ப நாளாக் காணோம்! அம்மா சொன்னாங்க, சிங்கப்பூர்ல இருக்கிறதா!” என்று பேசிய போதும் யார் என்று பார்வை வர்ஷினியை ஆராய்ந்தது.

ரஞ்சனியோட நாத்தனார் என்று சொல்லியிருக்காலாம், ஆனால் “என் ஃபிரண்டோட தங்கை, இன்னைக்கு அவங்களுக்கு பர்த்டே!” என்று  அய்யரிடம் விளக்கம் கொடுத்து, அவளின் பெயரை சங்கீத வர்ஷினி என்று அர்ச்சனைக்கு சொல்லி, “உன் நட்சத்திரம் என்ன?” என்று கேட்க விழித்தாள்.

உடனே கண்டு கொண்டவன், அய்யரிடம், “சாமி பேருக்கே செஞ்சிடுங்க!” என்று சொல்ல, இவனை திரும்பி பார்த்தவளிடம், “அங்கே பாரு!” என்று கடவுளை காட்டினான்.

அந்த தீப ஜோதியில் மிளிர்ந்த அரங்கநாதனை பார்திருந்தவளிடம், “ஸ்வாமி பாதத்துல இருந்து மேல முகம் பார்க்கணும்!” என்றும் சொல்லிக் கொடுத்தான்.

பூஜை முடித்து, அவர் மாலை கொண்டு வந்து ஈஸ்வருக்கு போட முற்பட, சரனை காட்டியவன் “அவனுக்கு போடுங்க!” என்றான்.

எல்லாம் மெளனமாக பார்த்திருந்தாள், மனதில் ஒரு அமைதி, இதம் பரவியது.  எத்தனை பேர் அவளின் வீட்டில் அவளை பார்த்து பார்த்து கவனித்தாலும் இப்படி உணர்ந்தது இல்லை.

பிறகு வெளியே வந்து பிரகாரத்தில் அமர்ந்தவன், “உட்காரு!” என அவளுக்கும் சைகை காட்ட,

அமர்ந்தவள், “நான் உங்களோட தனியா வரமாட்டேன்னு இவங்களை கூட்டிட்டு வந்தீங்களா?” என,

முறுவளித்தவன், “இல்லை!” என்பது போல தலையசைத்து, “நீ இவங்களோட இருக்கும் போது என்ஜாய் பண்ற இல்லையா! அதுக்கு தான்! அண்ட், உன்னோட தனியா வர்ற ஐடியா எனக்கு இல்லவே இல்லை” என்று சொல்லும் போதே,

பிரணவி “தண்ணீர் வேண்டும்!” என்று சொல்ல,

சரண் “பசிக்குது” என்று சொல்ல,

“அதுதானே, உனக்கு ஓடிட்டே இருந்தா ஒன்னும் தெரியாது! உட்கார்ந்தா பசிக்கும்!” என்று சரணிடம் பேசிக் கொண்டே,

அவர்களை அழைத்துக் கொண்டு கார் சென்று, “இந்த பேக்ல அவங்கம்மா எல்லாம் குடுத்திருக்கா பாரு!” என்று எடுத்துக் கொடுக்க,

அவர்களுக்கு சாப்பிடக் கொடுத்து, தண்ணீர் கொடுத்து, என வர்ஷினி அவர்களுடன் பிசியாகி விட்டாள்.

எல்லாம் முடித்து திரும்பியவள், “நீங்க கோவிலுக்கு கூட்டிட்டு வந்தீங்க, இதுல நான் எங்க ட்ரீட் கொடுத்தேன்!” என்று கேட்க,

“இனிமே தான் குடுக்கப் போற..” என்றவன், “போகலாமா!” என்று சரணை பார்த்துக் கேட்டான்.

“ஓகே சித்தப்பா!” என்று அவன் சொல்ல,

காரில் ஏறி அமர்ந்தனர், மூவருமே பின் தான் அமர்ந்தனர். ஈஸ்வர் மட்டுமே முன்புறம்.

வர்ஷினியை  திரும்பிப் பார்த்தவன்,

“இதை போட்டுக்கோ!” என்று கையினில் நீட்டியது கூலர்ஸ்.

வர்ஷினி “என்ன திரும்பவுமா?” என்று விழிவிரித்துப் பார்க்க,

“நான் பார்க்கக் கூடாது நினைச்சாலும், உன் கண்ணு என்னை பார்க்க சொல்லுது, டிஸ்டர்ப் பண்ணுது, போட்டுக்கோ! இந்த டே உன்னோட டே! உனக்கு ப்லசன்ட் மெமரீஸ் கொடுக்க, என்னோட மேரேஜ் ப்ரப்போசல்க்கும் இதுக்கு எந்த சம்மந்தமும் இல்லை! அது வேற, இது வேற” என்றான்.

மறுபேச்சு பேசாமல் வாங்கி போட்டுக் கொண்டாள்.

“எனக்கு!” என்ற ப்ரணவியிடம், அவளுக்கு ஒன்றும், சரணுக்கு ஒன்றும் என்று கொடுக்க..

“எனக்கு எடுத்து வந்திருக்க வாய்ப்பு உண்டு, இவர்களுக்கும் எப்படி?” என்று வர்ஷினி பார்க்க,

“குழந்தைங்க, எப்பவும் கேட்பாங்க.. அவங்க அப்படிதான்” என்று சொன்னவன்,

“இது உன்னோட கூலர்ஸ் ஞாபகம் இருக்கா, ஒரு முறை ஒரு ஷாப்பிங் மால்ல, நாம பார்த்தப்போ உன் கண்ல இருந்து கழட்டினது!” என்றான்.

ஆம்! அந்த நாள் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது, அவள் பேசும் போதே கண்களில் இருந்து கழற்றியது. “என்னவோ அப்போதே எனக்கு புரியாத மாதிரி பேசினானே!” என்று நினைவு படுத்த முயன்றாள், நினைவில் வரவில்லை.

சொன்னவன் பதில் பேசாமல் கார் ஓட்ட ஆரம்பிக்க, சரண் தான் வளவளத்து வந்தான், பிரணவி தூங்கி விட்டாள். யோசனையாக இருந்தவள், கார் ஓட்டும் ஈஸ்வரையே பார்த்து வந்தாள்.

ஈஸ்வர் காரை நிறுத்திய போது சற்று தொலைவில் அவர்களின் முன் பறந்து விரிந்த கடல்.

அதை பார்த்ததும், என்ன தீவிரம் இது? என்னால் புரிந்து கொள்ள முடிகின்றதா? என்று வர்ஷினியும் அந்த கடலை, அதன் நீல நிறத்தை, வானும் கடலும் இணைத்திடும் இடம் தெரியாத அந்த இணைப்பை பார்த்திருந்தாள்.

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா                                                         நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா                                                   வராமல் வந்த என் தேவி!

 

 

Advertisement