Advertisement

அத்தியாயம் முப்பத்தி மூன்று :

நான்! எனது! மனது!

ரஞ்சனியும் பத்துவும் சென்று விட, முரளியும் அலுவலகத்தில் இருக்க, ஷாலினி சமையலை மேற் பார்வை பார்க்க, தாத்தா தோட்டத்தில் நடைப் பயிற்சியில் இருக்க, கமலம்மா ராஜாராமுடன் இருந்தார்.

முகம் கழுவி உடை மாற்றி என்ன இருக்கிறது சாப்பிட என்று பார்த்து, அப்படியே ஷாலினியுடன் ஒரு பத்து நிமிடம் பேசி, பின்பு அம்மா அப்பா இருக்கும் இடம் சென்று சாப்பிட்டுக் கொண்டே அங்கே ஒரு அரைமணிநேரம் இருந்து, பின்னர் ரூம் வந்து டி வீ பார்த்து திரும்பவும் உணவு உண்டு, மேலே உறங்க வந்த போது ஒன்பது மணி தான். பிறகு சற்று நேரம் தொலைபேசியில் தோழிகளுடன் அரட்டை..

எல்லாம் செய்தாலும் ஏதோ ஒன்று அவளுக்குக் குறைந்தது.. எல்லோரும் தன்னுடைய வயதில் இப்படித் தான் இருப்பார்களா? இல்லை நான் மட்டுமா என்ற நினைப்பும் கூடவே.

எப்படியோ ஒன்பது மணிக்கு படுக்கையில் விழுந்தவள், அப்படிப் புரண்டு, இப்படிப் புரண்டு படுக்க, அதற்கு மேல் இரண்டு மணிநேரம் ஆகியது. தினமுமே இப்படித்தான் உறக்கம் மட்டும் வருவதில்லை. உடல் சோர்ந்து உறக்கம் வேண்டும் என்றாலும் உறக்கம் வருவதில்லை.

சொல்லப் போனால் அன்று விரைவில் உறங்கி விட்டால் என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதும் ஒரு மணி ஆகிவிடும். இதற்கு உறக்கம் வரவில்லை என்று டீ வீ முன்போ இல்லை முகநூல் இல்லை கம்ப்யுடர் இல்லை போன் என்று எதற்கும் போக மாட்டாள். அப்பொழுதும் உறக்கம் வராது தினமுமே இப்படித்தான்.

யாரிடம் சொல்வாள் எனக்கு உறக்கம் வருவதில்லை என்று, யாரிடமும் சொல்ல மாட்டாள். இதற்கு எல்லோரும் பார்த்து பார்த்து தன அவளைக் கவனிப்பர்.

காலையில் லேட்டாக விழித்தவள், அவசரமாகக் கிளம்பி.. உணவு உண்ணாமல் செல்ல முயல..

“சாப்பிடாம போகாத!” என்று ஷாலினி நின்றாள்.

“அண்ணி லேட் ஆகுது!”

“காலையில சாப்பாடு சாப்பிடாம இருக்கக் கூடாது,  அப்புறம் வெயிட் தான் போடும்” என்றாள் ரஞ்சனி, அவளும் கிளம்ப அவசரமாக உண்டு கொண்டிருந்தாள்.

“நான் எப்போ அண்ணி ஒல்லியாகணும் சொன்னேன்!” என்ற வர்ஷினி கழுக் மொழுக் கென்று தான் இருந்தாள். குண்டு என்ற வரையறைக்குள் வரமாட்டாள், ஆனால் ஒல்லி கிடையாது.. பூசினார் போன்ற உடல் வாகு தான்.. உயரம் இருப்பதால் அதிகம் தெரிவிக்கவில்லை.

அது ஒரு வனப்பு, எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் வனப்பு.. முகத்தில் அந்தக் குழந்தைத் தன்மை, அந்தச் சருமம், அந்தக் கண்கள்..

“வர்ஷினி யூ நீட் டு பீ பிஃட்”

“அதெல்லாம் என்னால முடியாது… வயிறு நிறையச் சாப்பிடணும்”

“அப்போ சரி, வாக்கிங்காவது போ!”

“அதெல்லாம் வயசானா போயிக்கலாம்!” என்று சாப்பிடாமல் மீண்டும் கிளம்ப எத்தனிக்க,

“தாஸ் அவ சாப்பிடலைன்னா கார் எடுக்காத..” என்று பத்து சொல்ல,

எல்லோரையும் பார்த்து முறைத்துக் கொண்டே உணவு உண்ண அமர்ந்தவள்,

“தாசண்ணா! இன்னைக்கு நீங்க ரஞ்சனி அண்ணியைக் கொண்டு போய் விடுங்க, என்னை பத்துண்ணா கொண்டு போய் விடுவாங்க!” என்று கத்த..

ரஞ்சனிக்கு சிரிப்பு, அதையும் விட ஷாலினிக்கு இன்னும் சிரிப்பு, வாய் விட்டு சிரிக்க, “ஈசி ஷாலினி! இப்படிச் சிரிக்காத எங்கயாவது பிடிச்சிக்க போகுது என்றாள் ரஞ்சனி.

ஷாலினியை விட ரஞ்சனி பெரியவள் என்பதால் பேர் சொல்லித்தான் அழைப்பாள், அதுவும் இப்போது அதட்டியது மருத்துவராக, ஆம்! ஷாலினி ஏழு மாத கர்ப்பம்.

உணவு உண்டு, “எ,டுங்க காரை!” என்று பத்துவை நோக்கி சொல்ல திரும்பினால் அவன் ஆளே இல்லை, ரஞ்சனி அவளைப் பார்த்துக் கொண்டே “அதெல்லாம் முன்னமே போயிட்டாங்க, இனி நீ கிளம்பின பிறகு தான் வருவாங்க” என்று சொல்லி அவளும் போக,

சிரித்துக் கொண்டே வர்ஷினி கிளம்பியவள், தாஸுடன் கல்லூரி செல்ல, வழியில் ஒரு இடத்தில் பரபரப்பு அற்ற ஒரு சாலையில் ஒரு பெண்ணிடம் மூன்று  இளைஞர்கள் எதோ தகராறு செய்வது போல தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தோன்ற,

அருகில் வந்ததும் “நிறுத்துங்க தாசண்ணா!” என்றாள். வாகனங்கள் சில கடந்து சென்றன தான். ஆனால் யாரும் நிறுத்தவில்லை. ரோடின் அந்தப் புறம் அது நடக்க, “என்னன்னு போய்ப் பாருங்க தாசண்ணா!” என்றாள்.

“நீங்க காரை விட்டு இறங்காதீங்க பாப்பா!” என்று சொல்லிக் கொண்டே தாஸ் இறங்கி சாலையைக் கடக்க முற்பட, அதற்குள் ஒருவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.

தாஸ் நெருங்கி, “டேய்! என்ன அந்தப் பொண்ணு கை பிடிச்சு ஏன் இழுக்கறீங்க?” என்று ஒரு அதட்டல் போட.. அவனின் ஆஜானுபாகுவான தோற்றம் அங்கிருந்தவர்களுக்கு பயம் கொடுத்தாலும் பின் வாங்கவில்லை.

“தெரிஞ்சவங்க, ஃபிரண்ட்” என்ற ஒருவன், “வா போவோம்!” என்று மீண்டும் பெண்ணின் கைப் பிடித்து இழுக்க..

“அய்யோ, எனக்குத் தெரியாதுங்க அண்ணா, என்னை விட்டுட்டு போகாதீங்க!” என்று அந்தப் பெண் கத்த,

“டேய், என்னங்கடா பண்றீங்க?” என்று தாஸ் கேட்கும் போதே எதிர்பாராத விதமாக.. ஒருவன் கையினில் இருந்த இரும்புத் தடி போன்ற ஒன்றினால் தாஸின் தலையில் ஒரேப் போடாக போட..

அந்த இடத்தை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினியே எதிர்பார்க்கவில்லை, இதில் தாஸ் எப்படி எதிர்பார்ப்பான், அப்படியே மடங்கி அமர.. அந்தப் பெண்ணை ஒருவன் இழுக்க.. அவள் திமிர..

இங்கிருந்து பார்த்திருந்த.. வர்ஷினி பதறி அருகில் ஓடிப் போக முயன்றால். அதற்குள் தாஸ் எழ முற்பட, மீண்டும் அருகில் இருந்தவன் அடிக்க வர அதை தடுக்க முற்பட்டான் தாஸ்,

அதற்குள் அங்கே பைக்கில் வந்த இளைஞன் ஒருவன், பைக்கை அப்படியே விட்டு வேகமாக வந்து ஒரு எத்து விட, ஒருவன் ஓட ஆரம்பித்தான்.. தாஸை அடித்தவனும் ஓட ஆரம்பிக்க.. அந்தப் பெண்ணை பிடித்தவன் வேகமாக இழுக்க. அவளின் உடை கிழிந்தது. அதற்குள் அந்த இளைஞ்சன் அவனையும் அடிக்க, அவனும் விட்டு ஓட ஆரம்பித்தான்.

உடை கிழிந்த பெண் அப்படியே மடங்கி அமர.. வர்ஷினி அதற்குள் அருகில் வந்திருந்தாள், அவளிருந்தது ஒரு ஜீன்ஸ் டி ஷர்ட் என்ன செய்வாள், தடுமாறி நிற்க, அந்த இளைஞன் யோசிக்காமல் திரும்பி அந்தப் பெண்ணை மறைத்தவாறு நின்று ஷர்ட் கழற்றி, “அவங்க கிட்ட குடுங்க!” என்றான்.

அந்தச் செய்கை, அந்தப் பென்ன்னின் புறம் கண்களைச் சிறிதும் திருப்பாமல், அவளை மறைத்த செய்கை, வர்ஷினியை மிகவும் கவர்ந்தது.

“வாங்கிப் போடுங்க சீக்கிரம்!” என்று வர்ஷினி சொல்லும் போதே கூட்டம் கூட ஆரம்பிக்க… அவளை மறைத்தவாறு வர்ஷினி நின்று போட உதவவும்.. சில நொடிகளில் அந்தப் பெண்ணும் போட்டுக் கொள்ள,

அதன் பிறகு தான் தாஸின் புறம் திரும்பினால் வர்ஷினி..

தாஸ் கையைத் தலையில் பிடித்தவாறு இருக்க, “ரொம்ப அடியா தாசண்ணா?” என்ற படி வர்ஷினி கேட்க, அந்த இளைஞன் அவர்களை விழியகற்றாமல் பார்த்து இருந்தான். சொல்லப் போனால் அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.

அந்த பெண் அழ.. “யாரு அவங்க?” – வர்ஷினி,

“இந்தப் பக்கம் போகும் போதும், வரும் போதும் பார்ப்பாங்க, ஒரு நாள் ஐ லவ் யு சொன்னான், நான் கண்டுக்கலை இப்போ கல்யாணம் பண்ணலாம் வான்னு கைபிடிச்சு இழுக்கறான்” என்று தேம்பிக் கொண்டேச் சொல்ல..

“உங்க வீடு எங்க? விட்டுட்டுப் போறோம்!” என்ற வர்ஷினி,

“தாங்க்யூ வெரி மச்!” என்று அந்த இளைஞனைப் பார்த்து சொன்னவள், அவன் வெற்றுடம்புடன் நிற்க.. “உங்களுக்கு ஷர்ட்?” என்று இழுத்தாள்,

அவன் பதில் பேசாமல் பார்த்து நிற்க.. அதற்குள் எவனோ செல்லில் படம் எடுக்க முற்பட..

“டேய், வீணாப் போனவனுங்களா உங்களுக்குப் புத்தின்றதே கிடையாதா.. எங்க எது நடக்கும் எடுப்போம்னு திரிவீங்களா? போங்கடா! உங்க வீட்டுப் பொண்ணை எடுங்கடா..!” என்று தாஸ் சத்தம் போட, இருந்த இரண்டு மூன்று பேர் அவசரமாக களைந்து சென்றனர்.

“தாசண்ணா, நீங்க கார் போங்க!” என்றவள்,  “வா யாரும் பார்க்கும் முன்ன போயிடுவோம்!” என்று அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றாள்.

ரோட் கிராஸ் செய்து திரும்பிப் பார்க்க, அந்த இளைஞன்  நின்ற இடத்திலேயே நின்றிருந்தான். தாஸும் அவனைப் பார்த்தான்.. அவனின் முகம் தாடிக்குள் இருக்க.. தாஸிற்குத் தெரியவில்லை.

அந்தப் பெண்ணை காரில் அமர வைத்து, “இருங்க தாசண்ணா!” என்று அந்த இளைஞனிடம் விரைந்தவள், “உங்களுக்கும் ஏதாவது அடிப்பட்டதா? நான் கவனிக்கலை! யு நீட் எனி ஹெல்ப்!” என,

“தேவையில்லை” என்பது போலத் தலையசைத்தான்.

அந்த இளைஞனின் பார்வை ஏதோ செய்ய, அந்தப் பார்வையில் என்ன இருந்தது என்று ஆராய முற்பட்டாள். தெரியவில்லை!

“ஆர் யு ஃபைன்” என்றால் திரும்பவும், எதற்கு அப்படிப் பார்க்கிறான் என்று புரியாமல்,

“எஸ்” என்பது போலத் தலையாட்டினான்,

“நான் சங்கீத வர்ஷினி ராஜாராம்!” என்று முழுப்பெயரையும் சொல்லி அறிமுகம் செய்ய,

“ஐ அம் அஸ்வின் பிரகாஷம்!” என்று அவள் போலவேச் சொல்லி, தீர்க்கமாக வர்ஷினியைப் பார்த்தான், அதுவும் அவளின் நீல நிறக் கண்களை.

உலகின் ஒரு மூலையில் ஒருவன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க.. “ஒரு விடுமுறைக்கு போயேன்.. அவளின் முகத்தை கற்பனையிலாவது வேலையின் ஞாபகம் இல்லாமல் ரசி!” என்று மனது சொல்ல.. விடுமுறைக்குக் கிளம்பினான்.

அவன் சென்ற இடத்தில், ஆர்பரிக்கும் அலைகளின் சத்தம் மட்டுமே கேட்க, ஆங்கங்கே ஒன்றிரண்டு பேர் இருக்க… எல்லாம் இயற்கையின் ரசிகர்கள். அவர்கள் எதிரில் பரந்து விரிந்த கடல் மாதா.. நீல கடலும் நீல வானமும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் சந்தித்தது…  அந்தக் கடலில் ஒரு கப்பலும் இருந்தது.

கடலின் நீலம் பார்ப்பவர் கண்களை பறிக்க, எங்கிருந்து வானம் ஆரம்பிக்கிறது என்று பார்த்திருக்க, அப்படிக் கடலைவிண்ணையும்   வெறித்துப் பார்த்து,

கப்பலின் விளிம்பில் நின்று, அந்த நீல நிறத்தை நோக்கி இருந்தவன், அதன் அழைப்பை உணர்ந்து, சற்றும் யோசியாமல் குதித்து, தண்ணீரைப் பிளந்து உள்ளே வேகமாக சென்றவன், அதன் ஆழத்தில் எதைத் தேடுகின்றோம் என்று தெரியாமல் தேடலில் இருந்தான்.

அந்த ஒருவன் ஈஸ்வர் என்கின்ற விஸ்வேஸ்வரன்.

சில மணிநேரங்கள் அந்தத் தண்ணீரில் ஊறிக் கிடந்தவன், மெதுவாகத் திரும்ப கப்பலில் ஏறினான்.  அங்கிருந்த மாலுமி ஒருவன்  உணவு தயார் என்று கூற, சென்று அந்தக் கடலில் கிடைத்த சிலவற்றை சமைத்து வைத்திருந்தை ஒரு கட்டு கட்டியவன்,

“இன்றைக்கு இரவு இருப்போம், நாளை காலை கரை திரும்பி விடலாம்” என்றான். அப்படிச் சொல்லும் போதே, திரும்ப இந்த ஏகாந்ததிற்கு வர்ஷினியுடன் தான் வரவேண்டும் என்று தீர்மானம் எடுத்தது.

எப்போது வரும் அந்த நாள் என்று எதிர்பார்ப்பை வளர்த்தது.   பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனதினில் ஆக்ரோஷமாய் கிளம்ப, உன்னை யார் சிறிது மாதம் பார்க்க மாட்டேன் என்று சொல்லச் சொன்னது என்று எப்போதும் போல மனது சண்டை பிடித்தது..

அவளைக் கடைசியாகப் பார்த்த பொழுது “யாருமில்லாத இடத்துக்கு உன்னை தூக்கிட்டு போகணும் போலத் தோணுது” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தான், அப்படி ஒரு இடம் தான் அது..

ஆள் அரவமற்ற தனிமை.. சில வரையறுக்க முடியாத சப்தங்கள்.. காற்றா? கடலா? கப்பலா? கடல் வாழ் ஜீவராசிகளா?, சொல்ல முடியவில்லை.

பக்கத்தில் வர்ஷினி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. “அவளிடம் தவறாக நடந்திருக்காமல், காதல் சொல்லியிருக்கலாம் தானே ஏன் சொல்லவில்லை?” என்ற சப்தம் அவனின் மனதினில்.

“ஐஸ்வர்யாவுடன் நீ தீர்மானித்தது உன்னுடைய வாழ்க்கையை, அதைக் காதல் என்று சொல்லி அவளின் மனதை கலைத்த பெரும் பாவத்தையும் சேர்த்து வைத்திருக்கிறாய்”

வர்ஷினியிடம் செய்தத் தவறை விட, ஐஸ்வர்யாவிடம் காதல் சொன்ன தவறு இன்னும் மனதை அழுத்தியது.  அந்தத் தவறுக்கும் தண்டனையாய், நான், எனது, எல்லாமே என்று இருந்ததை கொடுத்து வந்திருக்கின்றான். நான் என்ற அகம்பாவத்தை விட்டு வந்திருகின்றான்.

“நான் ஐஸ்வர்யாவின் ஞாபகத்தில் சிறிதும் இல்லாத வாழ்க்கை அவளுக்கு அமைய வேண்டும்” என்று ஒரு பிரார்த்தனை மனதினில் ஓடியது.

இருள் கவிழ ஆரம்பிக்க, அந்தக் உப்புக் காற்றை ஆழமாக சுவாசித்தான். அந்த சுவாசத்தில் வர்ஷினி வேண்டும் என்ற உணர்வு அல்ல அந்தச் சுவாசமே அவளுக்காக என்பது போன்ற உணர்வு..

திரும்பப் போகலாமா இல்லை இன்னும் சிறிது அவளுக்கு அவகாசம் கொடுக்கலாமா என்ற தீவிர யோசனை மனதில் கவிழ்ந்தது.. இருளாய் அல்ல வெளிச்சமாய்…

எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும்                                                       மாயையே – நீ                                                                                              சித்தத் தெளிவெனுந் தீயின் முன்                                                                                       நிற்பாயோ – மாயையே  ( பாரதி )

 

 

 

 

 

 

Advertisement