Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு :

துரோகம் போய் கயமை,                                                                                                                                   கயமை போய் எதுவோ ??                                                                                                                                                    சில சமயம் கயமைக்கு பெயர்,                                                                              ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்…                                                இது எதுவோ???                                                                                துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட,                                   இல்லாவிட்டால் இது என்ன??? 

சூழல்  இலகுவானது போல இருந்தாலும் ஒரு இறுக்கம்                        அனைவருமே உணர்ந்தனர். என்ன என்று புரியவில்லை.

ஆளுக்கு ஒரு புறம் பேசிக் கொள்வது போல இருந்தாலும் அப்படி தான்.. முரளிக்கும் பத்மநாபனுக்கும் தான் என்ன வென்று புரியாத ஒரு தோற்றம்.

மதிய விருந்தும் கூட ஏற்பாடு செய்யப் பட்டிருக்க.. அதை மேற்பார்வை பார்த்தவாறு கமலம்மா இங்கே வருவது அங்கே பார்ப்பது என்றிருந்தார்.

ஈஸ்வர் அங்கே வந்ததும் சிறிது நேரமே இருந்த வர்ஷினி. குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ரூமிற்கு சென்று விட்டாள். அதன் பிறகு தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

ஈஸ்வர் அங்கே இருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் கவனமாக தன்னைப் பார்ப்பதை தவிர்ப்பது புரிந்தது.. ஆனாலும் மனது சொல்லியது முழுவதும் தன்னைப் பற்றி தான் நினைத்துக் கொண்டு இருப்பான் என்று.

இது மனதில் ஓடும் போது தன்னுடைய பார்வை அடிக்கடி அவன் புறம் செல்வதை உணர்ந்தவள், எதற்கு வம்பு என்பது போலத் தோன்ற வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.

கீழே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தாலும்… “தள்ளி நில்! திரும்பவும் எதையும் இழுத்து விட்டுக் கொள்ளாதே! எல்லோரையும் ஓரளவு சரியாக கணிக்கும் உன்னால் அவன் என்ன மாதிரி என்று இதுவரை கணிக்கவோ உணரவோ முடியவில்லை.. எத்தனை முறை நீயாக அவனுடன் சென்று பேசி இருக்கிறாய்.. ஒரு முறை கூட அவனின் எண்ணத்தை உன்னால் உணர முடியவில்லை. அது ஏன்?”

“வேறு எவனாவது உன்னிடம் இப்படி நடந்து இருந்தால், வீட்டினரிடம் சொல்லாமல் இருந்திருப்பாயா இல்லை மறுபடியும் அவனை பார்க்கும் போது எதுவும் நடவாதது போல இப்படி இருப்பாயா?”

“அடுத்தவர்கள் உன்னைத் தவறாக நினைக்கக் கூடும் என்று வெளியே தெரிவதை தவிர்த்தாலும் இந்த மாதிரி தான் நீ மற்றவர்களிடமும் நினைப்பாயா..?” இது இப்பொழுது தோன்றிய எண்ணம் அல்ல..

முதல் இரண்டு மூன்று நாட்கள் ஒரு அதிர்ச்சியிலும் ஒரு சுய பட்சாதாபத்திலும் இருந்தாள் தான்.. ஆனால் அன்று தந்தையிடம் உளறி வந்ததில் இருந்து.. உடலிலா மனதிலா என்று தெரியாத ஒரு வலியை உணர்ந்ததில் இருந்து… ஒரு சுய அலசல் தான். ஏன் நான் இப்படி என்பது மாதிரி?

“அவனின் செய்கை எவ்வளவு பெரிய தவறு? நான் அவனை அப்படியே விட வேண்டிய அவசியம் என்ன? அப்பாவிடம் நான் அவனை ஆர்வமாக பார்த்தேன் என்று பொய் சொல்லிக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?”

அதுவும் இன்று ஈஸ்வர் இப்படி ஒரு தோற்றப் பொலிவோடு வந்து நிற்க. என்ன இப்படி எதுவுமே நடவாதது போல எப்படி இவனால் இருக்க முடிகிறது என்ற ஆராய்ச்சி?

குழந்தைகளுக்கு சரி சமமாக விளையாடிக் கொண்டு இருந்தாலும் மொத்தத்தில் ஈஸ்வரை சுற்றி வட்டமிட்டன எண்ணங்கள்.

கீழே ஈஸ்வர் நேரடியாகவே ராஜாராமிடம் “பாதி பாதியா பிரிச்சு எழுதிடலாம், ஜகன்கும் ரஞ்சனிக்கும்” என்று சொல்ல…

“உங்க எல்லோரையும் நான் வரவழைச்தும் அது வேண்டாம்னு சொல்லத் தான்.. நான் எதையும் எதிர்பார்த்து இதைச் செய்யலை.. பலவருஷமா நீ முரளி ஃபிரண்ட், அதுக்காகவே நான் உதவி செய்யறேன்னு சொன்னேன். நடுவுல ஏதேதோ குழப்பங்கள்.. இப்போ எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு.. நீங்க என் மருமகளோட வீடு கூட.. இப்போ அதுக்காகவும் செய்யறோம்… நீங்க பணத்தைத் திரும்பக் குடுக்கணும்னு கூட இல்லை”

“ஆனா இப்படி வாங்கறது சரி படாதுன்னு நினைச்சா… உங்களால முடியும் போது பணத்தைத் திரும்பக் குடுங்க. இல்லை, கொஞ்ச கொஞ்சமா குடுங்க.. அதை விட்டு இப்படி எழுதிக் கொடுக்க வேண்டாம், பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சொத்தையும் பிடிங்கிட்டோம்னு ஊர்ல இருக்குறவங்க சொல்லவா. எங்களுக்கு அந்த பேர் வேண்டாம்” என்றார் தீர்மானமாக..

“இது என்னடா புதிய பிரச்சனை?” என்பது போல ஒரு க்ஷணம் ஈஸ்வர் தயங்கிப் பார்த்திருந்தவன் உடனே திரும்ப பதிலளிக்க ஆரம்பித்தான்.

“நாங்க அப்படி ஒரு மைன்ட் செட்ல தான் வாங்கினோம். நீங்க இப்படி திடீர்ன்னு சொன்னா எப்படி? முன்னமே சொல்லியிருக்க வேண்டாமா?”

“முன்னமே சொல்லியிருந்தா?”

“கண்டிப்பா வாங்கியிருக்க  மாட்டேன்! வாங்கவும் விட்டிருக்க மாட்டேன்..” என்றான் அவரையும் விட தீர்மானமாக.

அவனை விட்டு நமஷிவாயதிடம் திரும்பியவர்.. “நீங்க சொல்லுங்க சம்மந்தி, சிறுபிள்ளை தனமா இருக்கு ஈஸ்வர் பேச்சு!” என்று சொல்ல…

மாற்றி மாற்றி ஆளாளுக்கு பேசினார்… யார் எப்படி பேசினாலும் ஈஸ்வரும் அவனின் நிலையில் இருந்து இறங்கி வரவில்லை ராஜாராமும் வரவில்லை.

சளைக்காமல் அவரவரின் காரணங்களை சொன்னர். உண்மையில் கேட்டவர்களுக்கு ஈஸ்வர் பேசும் பொழுது அவன் பேசுவது சரி என்பது போலத் தோன்றியது. ராஜாராம் பேசும் பொழுது அவர் பேசுவது சரி என்பது போலத் தோன்றியது.

இதில் ரூபா வேறு, “தவறு செய்தது என் கணவர்.. நீ ஏன் இப்படி செய்கிறாய்” என்று அவள் ஒரு பக்கம் பேச… “உனக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம்” என்று ஜகன் சொல்ல… ஜகன் சொல்வதை பார்த்து ரஞ்சனியும் சொல்ல..

பேச்சுக்கள்…. பேச்சுக்கள்… ஆக்ரோஷமான பேச்சுக்கள் அல்ல அமைதியான பேச்சுக்கள்… ஒரு கட்டத்தில் மேல் எதற்கு இப்படி இருவரும் வாதாடுகிறார்கள் என்று எல்லோரும் பார்த்து இருந்தனர்.

சற்று நேரமாகி விட்டது, ஆனாலும் குழந்தைகளைத் தேடிக் கூட யாரும் வராததை உணர்ந்த வர்ஷினி மெதுவாக கீழே எட்டிப் பார்க்க..

ஏதோ அப்பாவும் ஈஸ்வரும் பேசிக் கொண்டு இருப்பதையும் எல்லோரும் சுற்றி நின்றோ அமர்ந்தோ பார்த்துக் கொண்டு இருப்பதையும்.. கமலம்மா கையை பிசைந்து நிற்பதையும்..

தாத்தா நடுவில் நடுவில் ஏதோ பேசினாலும் இருவரும் கண்டு கொல்லாததையும்.. அதுவும் முரளியும் பத்துவும் அப்பாவை நிறுத்த முடியாமல் நிற்க, ஈஸ்வர் குடும்பத்தினர் அவனை நிறுத்த முடியாமல் பார்த்து இருந்தனர்.

என்ன நடக்கிறது என்று புரியாத போதும் அவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று புரிந்து… பிரணவியை கையினில் வைத்த படி இறங்கி வந்தவள்..

அவள் இறங்கும் போதே ஈஸ்வர் பார்த்து விட்டான். அவன் பார்த்ததை வர்ஷினியும் பார்த்து விட்டாள்.

அப்பாவின் அருகில் வந்ததும், “என்னப்பா பண்றீங்க?” என்றாள் சற்று சத்தமாக… அவரைக் கேட்ட நொடியில், ஒரு மாத்திரை கூட அல்ல அரை மாத்திரை அளவு ஈஸ்வரையும் பார்வை தொட்டு மீண்டது.

ஈஸ்வர் அப்படியே பேச்சை நிருத்திக் கொண்டான்.

ராஜாராம் நிறுத்தி வர்ஷினியைப் பார்க்க…

“இட்ஸ் டைம் பா லஞ்ச்க்கு போகலாம்.. அம்மா எவ்வளவு நேரமா பார்த்துப் பார்த்து செய்யறாங்க.. சாப்பிட்டு பேசுங்க.. எல்லோரையும் வெயிட் பண்ண வைக்காதீங்க. பாருங்க சின்ன குட்டிக்கு கூடப் பசிக்குது” என்று சூழலை சற்று இன்முகத்தொடே லகுவாக்கியவள்..

“வாங்க அக்கா!” என்றாள் ரூபாவை பார்த்து.. குழந்தையை அவளிடம் கொடுத்தவள்.. “வாங்க பாட்டி!” என்று சௌந்தரி அம்மாவையும் அழைத்தாள்.

முரளி நமஷிவாயத்தை அழைத்துச் செல்ல, ரஞ்சனி ஜகனையும் ரூபாவையும் அழைத்து செல்ல. ஷாலினியும் கமலம்மாவும் ஈஸ்வரின் பாட்டியை அம்மாவை பெரியம்மாவை தாத்தாவை என்று எல்லோரையும் கிளப்பினர்.

“அப்பாடி! இப்போதைக்கு நிறுத்தினார்களே!” என்று அவர்கள் நகர ஆரம்பித்ததும்…

“உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணி தான் குடிக்கணும்.. இவ்வளவு பேசினா அது போதுமா? பேசாதீங்க!” என்று சற்று கடுமையாகவே அப்பாவிடம் கூறினாள். ஆம்! அவருக்கு அந்த அளவு தான் தண்ணீர் கொடுக்க வேண்டும்.. சிறுநீரகத்திற்கு வேலை குறைவாக கொடுக்க…

இப்போது அருகில் இருந்த ஈஸ்வரிடம் “என்ன நிறுத்தாம பேசிட்டே இருக்கீங்க! அவர் கிட்ட இப்படிப் பேசக் கூடாது! தெரியாதா? ஹி இஸ் சிக்!” என்றாள் அதற்கு சற்றும் குறையாமல்..

“அது எனக்கு மட்டும் தெரியாதா? ஆனா ஒத்துக்க மாட்டேங்கறார்!” என்றான் அவளை, அவளின் கண்களைப் பார்த்தவாறே…

அருகில் இருந்த பத்து வியந்து தான் பார்த்து இருந்தான்.. ஈஸ்வரிடம் யாரும் இப்படி அதட்டி பேசி அவனுக்கு தெரிந்து அவன் பார்த்தது இல்லை. அதுவும் இருவரும் பேசிய விதம் ஏதோ நெடு நாள் பேசியவர்கள் போல.. என்ன நடக்கிறது?.. இவளைத் தள்ளி நிற்கச் சொன்னால் ஏன் கேட்க மாட்டேன் என்கிறாள். இவனுடன் பேச வேண்டிய அவசியமென்ன என்று யோசனைகள் ஓடப் பார்த்து நின்றான்.

“என்ன கேட்க மாட்டேங்கறார்?” என்றவளிடம்.. மிகவும் சுருக்கமாக விஷயத்தை ஈஸ்வர் சொல்ல..

“ஓஹ்!” என்றவள், அவனை நேர் பார்வை பார்த்து பெரிய மனுஷியின் தோரணையோடு “சரி அப்புறம் பேசிக்கலாம்.. கொஞ்சம் அப்பாக்கு டைம் குடுங்க! யோசிக்கட்டும்!” என்றவள்..

திரும்ப அவனிடம் திரும்பாது “வாங்கப்பா!” என்று அவரை எழுப்பி அழைத்து போனாள். ராஜாராம் எதுவும் சொல்லவில்லை. வர்ஷினியின் சொல்லுக்கு பணிந்து அவளோடு சென்றார்.

ஆளுமையோடு வர்ஷினி பேசும் போது அதில் வர  ராஜாராமிற்கு விருப்பமில்லை. அப்போதைய அவரின் எண்ணம் இதை ஏன் தன்னுடைய ஆண்மக்கள் இருவரும் செய்யவில்லை.

அவர்காளால் ஏன் தன்னையோ ஈஸ்வரையோ நிறுத்த முடியவில்லை. வந்து ஓரே நொடியில் எங்களை நிறுத்தினாளா? இல்லையா? ஏன் வர்ஷினி என்னைப் போல இருப்பதைப் போல, அவர்கள் இல்லை என்ற சிந்தனை தான். அதில் வர்ஷினியைப் பற்றியோ ஈஸ்வரைப் பற்றியோ மறந்து போனார்.

அந்த நிமிடத்தில் தான் இல்லாது போனால் என் மக்கள் என்ன செய்வர் என்ற சிந்தனை தான். அவர்களால் தன்னைப் போல தொழில் செய்ய முடியுமா? வாழ்கையைச் சரியாக கொண்டு செல்வார்களா? ஏன் இவ்வளவு விரைவாக நான் என் முடிவை நோக்கி செல்ல வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்தது தவறோ..  நான் வாழ்ந்த வாழ்க்கை என் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஆகிவிடுமோ என்ற இனம் புரியாத பயம் மனதில்.

தன்னை அஞ்சாது நேர் பார்வை பார்த்த விழிகள் தயக்கமில்லாமல் தன்னை விட்டு விலகியது ஒரு கோபத்தை ஈஸ்வருக்கு கொடுத்தது. செல்லும் அவர்களை தீர்க்கமாகப் பார்த்து இருந்தான்.

பத்து எதற்கு ஈஸ்வர் இப்படிப் பார்க்கிறான் என்பது போலப் பார்த்து நின்றிருந்தான். ஈஸ்வர் அவர்களை விட்டு பார்வையைத் திருப்பியதும் “சாப்பிட வாங்க!” என்றழைக்க..

“முரளி வரட்டும்” என்று சொல்லி ஈஸ்வர் அப்படியே அமர்ந்து தான் இருந்தான்.

அங்கே வேறு யாரும் இல்லை. பத்துவிற்கு அவனைத் தனியே விட்டு போவதா? இல்லை நிற்பதா?.. நின்றாலும் என்ன பேசுவது?.. ஈஸ்வர் என்னவோ தன்னிடம் பேச விருப்பமில்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வது போல ஒரு உணர்வு.

யோசனைகள் ஓட அதற்குள் ரஞ்சனி அங்கே வந்தவள் “வா விஸ்வா! ஏன் உட்கார்ந்து இருக்க…?”

“முரளி வரட்டும்!” என்றான் அவளிடமும்..

“நீங்க போய் முரளிண்ணாவை வரச் சொல்லுங்க!” என்று பத்து விடம் சொல்ல,

“ஹப்பாடா” என்று மனதிற்குள் நினைத்தவாறு நகர்ந்தான்… உடனே முரளியும் வந்து விட..

“நானும் முரளியும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறோம்! நீங்க எல்லோரும் சாப்பிடுங்க! வெயிட் பண்ணாதீங்க! யார் கேட்டாலும் சொல்லிடு!” என்று சொல்லி வெளியே நடக்க…

“இவன் என்னடா வா என்று கூடச் சொல்லாமல் இப்படிச் செல்கிறான்” என்று நினைத்த முரளி.. ரஞ்சனியிடம் அம்மாகிட்டயும் ஷாலினிகிட்டயும் சொல்லிடு…. என்ற படி அவன் பின்னோடு செல்ல,

“வர வர என்ன தான் பண்றான் இந்த விஷ்வா? இவன புரிஞ்சிக்கவே முடியலை!” என்று நொந்த படி ரஞ்சனி சென்றாள்.

முரளி செல்வதற்குள் காரை ஸ்டார்ட் செய்திருந்தான்… முரளி வேகமாக அருகில் அமர்ந்தவன் “என்னடா? எதுக்கு இப்போ வெளில போறோம்” என்று கேட்க… பதில் சொல்லாமல் வெளியே காரை செலுத்தியவன்.. சிறிது தூரம் சென்றது ஒரு ஓரமாக நிறுத்தினான்..

“முரளி, நான் வர்ஷினியை பொண்ணு கேட்கலாம்னு இருக்கேன்! நீ என்ன சொல்ற?” என்று சொல்ல…

“என்ன?” தன் காதுகள் சரியாகத் தான் கேட்டதா என்று ஸ்தம்பித்தான் முரளி, கூடவே தன் கன்னத்தில் வேறு தட்டி பார்த்துக் கொண்டான்.

“சீரியசா தான் கேட்கறேன்!” என்று ஈஸ்வர் சொல்ல…

“யாருக்குப் பொண்ணு கேட்கற” என்றான் அப்போதும் நம்பாமல்.

“எனக்குத் தான்டா!” என்று அப்போதும் பொறுமையாக பதில் சொன்னான்.

“ஏன்? எதுக்கு திடீர்ன்னு இப்படிக் கேட்கற? அதுவும் அவ இப்போ தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கா.. நீ அவளைக் கல்யாணம் பண்ண கேட்கறியா? என்னால நம்பவே முடியலை? ஏன்? எங்கப்பா அவளை பொண்ணுன்னு எல்லோர் கிட்டயும் சொல்லும் போதே.. உனக்குப் பிடிக்காது! உங்கப்பாக்கு தைரியம்டான்னு க்ரிடிசைஸ் பண்ணுவ.. நீயா ஏன்?”   அத்தனை ஏன்கள் போட்டான்…

“அதுவா உங்க பாதி சொத்து அவளது இல்லையா, அதனால!” என்று ஈஸ்வர் அலட்சியம் போல சொல்லவும்.

“பாதி என்ன? முழுசாவே அவ பேர்ல சொத்து இருந்தாலும் நீ பண்ணிக்க மாட்டே! எனக்குத் தெரியும்! வேற என்ன விஷயம்?” என்றான் மிகவும் சீரியசாக… காதல் போலவும் முரளியால் நினைக்க முடியவில்லை.

“சொன்னாப் புரிஞ்சிக்குவியா!” என்றான்.

“என்ன? என்ன விஷயம்?” என்று பயந்து தான் முரளி கேட்டான் ஈஸ்வர் சொன்ன விதத்தில்..

“நீ இதை ஒரு அண்ணனா கேட்கக் கூடாது! என்னோட ஃபிரண்டா கேளு!” எனவும்,

“எதுக்குடா இவ்வளவு பில்ட் அப். இப்போவே பாரு, என் ஹார்ட் பீட் எகிறுது! சொல்லு!”

“அது, எனக்கு அவளைப் பிடிச்சிருக்கான்னு தெரியலை… ஆனா இந்த முறை அவளை உன் கல்யாணத்துல பார்த்த நாள்ல இருந்து, அவ மட்டும் தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கா… என்னால மனசை அலைபாய விடாம எந்த வேலையும் செய்ய முடியலை. இவ்வளவு பிரச்சனை கழுத்து அளவுக்கு வந்த போதும் அவ தான் அதிகமா ஞாபகத்துல! என்னெனவோ செஞ்சு பார்த்துட்டேன்! ஆனா நினைக்காம இருக்க முடியலை!” என்றான்.

“இது வர்ஷிக்குத் தெரியுமா?”

“இல்லை!” என்பது போலத் தலையசைத்தான்.

“ஆனா அப்பா ஏன் உன்கிட்டப் பேசவேயில்லை.. எல்லாமே என்னை வெச்சு தான் பேசினாங்க.. நான் யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.. அந்த பேப்பர் விஷயதுனாலயோன்னு.. அதை விட்டு ஏதாவது இருக்கா?”

“எனக்கும் வர்ஷினிக்கும் ஒரு சின்னப் பிரச்சனை… அது அவர்கிட்ட சொல்லியிருப்பா போல, அதனால அப்பா என்னைப் பார்க்காம இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன்..”

“என்ன?” என்றான் இன்னும் அதிர்ந்து… “நான் இங்கே தானேடா இருந்தேன்! ஏன் எனக்கு எதுவுமே தெரியலை…? என்ன பிரச்சனை..?”

“சொல்ற மாதிரி இருந்தா, சொல்ல மாட்டேனா?”

“சொல்லக் கூட முடியாத அளவுக்கு அப்படி என்ன பிரச்சனை…” என்றான் முரளி மனம் பதை பதைக்க…

ஈஸ்வர் அமைதியாக இருக்கவும்…

“பிரச்சனையை யார் பண்ணினா? நீயா.. வர்ஷியா…?

“நான் தான்!” என ஒப்புக் கொடுக்கவும்.. அப்படியே அமர்ந்து விட்டான் முரளி. என்ன இது? எப்படி இது? அதுவும் இவனே இப்படி சொல்கிறான் என்றால்?

முரளியும் எதுவும் பேச முயலவில்லை.. ஈஸ்வரா? என் நண்பனா? அதுவும் வர்ஷினியிடமா? என் தங்கை அவள்! எப்படி முடிந்தது! என்பது போல அதிர்ந்து பார்க்க..

அவன் பார்வையைப் பார்த்த ஈஸ்வர் தான் அவனைத் தேற்றும் படி ஆகிற்று… “அட என்னடா இப்படிப் பார்க்குற! பெரிய தப்பெல்லாம் ஒன்னுமில்லை.. வர்ஷினி ஒரு நல்ல பையனைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு முழு தகுதியும் இருக்கு. அந்த நல்ல பையனா நான் ஏன் இருக்கக் கூடாதுன்றது தான் என் எண்ணம்!” என..

“டேய்! புரியற மாதிரி பேசுடா! எனக்கு ஏதாவதுன்னாலே உன் கிட்ட தான் வருவேன்! இப்போ நீ இப்படிச் சொன்னா நான் யார் கிட்டப் போவேன்!” என்று கலவரமாகக் கேட்க..

“சாரி!” என்று முரளியின் கையை பிடித்துக் கொண்டவன்… “இப்பவும் சொல்றேன் பெரிய தப்பெல்லாம் இல்லை… சின்னது தான்!”

முரளி மௌனத்தையே பதிலாக கொடுக்க…

“பேசுடா!”

“வர்ஷினி இதை ஏன் யார் கிட்டயும் சொல்லலை! உனக்கு பயந்தா?

“என்கிட்டே அவளுக்குப் பயமா?” என்றவன், “அதுக்கு தான் என் மண்டையை உடைச்சா” என்று சொல்ல,

என்ன அடித்தாளா? இன்னம் அதிர்ந்து விட்டான் முரளி..

“இதை எப்பவும் நீ வர்ஷினிக்கிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.. யாருக்கும் தெரியறதை அவ விரும்ப மாட்டா.. உனக்கு தெரியும்னு தெரிஞ்சா உன்கிட்ட இருந்து தள்ளிப் போக வாய்ப்பிருக்கு!” என்று சொல்ல..

“என்ன பேசுகிறான் இவன்?” என்று ஈஸ்வரை பார்த்து இருந்தான்.

“எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை. ஆனா உன் சம்மதம் வேணும்.. உங்கப்பா என்ன நினைப்பார்,  வர்ஷினி என்ன நினைப்பா எனக்கு கவலையில்லை!  உங்கப்பா கிட்ட வர்ஷினி என்ன சொன்னான்னு தெரியலை ஒரு வாரமா அவர் என்னை அவாயிட் பண்றார். ஆனா தப்பா சொல்லியிருக்க வாய்ப்பில்லை… சொல்லியிருந்தா இந்நேரம் என்னை விட்டு வெச்சிருக்க மாட்டார்..  அது எனக்கு தெரியும்”

“வர்ஷினி! அவளுக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிக்கிற ஸ்டேஜ், அதுக்கு வெயிட் பண்ற ஸ்டேஜ், எல்லாம் தாண்டிட்டேன்.. ஒரு மனநல மருத்துவரை பார்க்கற ஸ்டேஜ்ல இருக்கேன்..”

“உனக்கு என்னைப் பத்தி தெரியாதது இல்லை… இருந்தாலும் ஒரு ப்ராமிஸ் கொடுக்கறேன்.. கல்யாணம் நடந்தாலும் நடக்கலைன்னாலும் இந்த ஜென்மத்திற்கு வர்ஷினி மட்டும் தான் எனக்கு.. அண்ட் கமலம்மா நிலைமை என்னைக்கு அவளுக்கு வராது!” என்றான்.

“என்ன பேச்சு இது?” என்று இன்னம் அதிர்ந்து முரளி பார்க்க..

“உன்னோட சம்மதம் எனக்கு வேணும்! அதுக்கு அப்புறம் நான் பார்த்துக்குவேன்!”

“என்ன பார்த்துக்குவ?”

“கல்யாணத்தை!”

“எப்படிப் பார்ப்ப?”

“உங்கப்பாக் கிட்ட பொண்ணு கேட்பேன், அவளை லவ் பண்றேன்னு சொல்லி”

“என்ன?” என்றான் நம்பியும் நம்பாமலும் “அந்த மாதிரி ஏன் என்கிட்டே சொல்லை?”

“உன்கிட்ட என்னாலப் பொய் சொல்ல முடியாது!”

“என்னடா சொல்ற? எனக்குத் தலையே பிச்சிக்குது! எனக்கு ஒன்னும் புரியலை?” என்று இரு கைகளாலும் தலையைப் பிடித்தான் முரளி.

“உனக்கு எதுவும் புரிய வேண்டாம்… நீ ஓகே சொல்லு! உங்கப்பாக் கிட்ட நான் பேசறேன்.. அப்புறம் வர்ஷினி கிட்ட வேணா கொஞ்சம் ஈஸ்வர் நல்லவன்னு சொல்லு!”

“நீயே அவ கிட்ட லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது தானே!”

“நான் சொன்னா அவ நம்ப மாட்டா!”

“ஏன் நம்ப மாட்டா?”

“அதெல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை… இப்போதைக்கு உங்க வீட்ல உன்னைத் தவிர என்னை யாரும் நம்ப மாட்டங்க!”

“ஏன்? ரஞ்சனி கிட்ட சொல்ல வேண்டியதுதானே!”

“அவளா அவ சுத்தம், பத்து அதுக்கு மேல..”

“இப்போ நான் ஓகே சொல்லலைன்னா என்ன பண்ணுவ?”

“இனிமே தான் யோசிக்கணும்.. அவளை தூக்கிட்டு எங்கயாவது போயிடுவேன்!” என,

“டேய்! இதென்ன நாடா? காடா?  இவ்வளவு நேரமா நீ என்னை வெச்சு காமெடி பண்ணுனியா?” என்றான் ஈஸ்வரின் பதிலில்.

“அய்ய! நான் சீரியஸா சொல்றேன்!”

“நான் அவளோட அண்ணன் டா!”

“பேச ஆரம்பிக்கும் போதே என்னோட ஃபிரண்டா மட்டும் கேளுன்னு சொல்லிட்டேன்” என்றான் இன்னம் சீரியசாக..

“ஒரு ஃபிரண்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒரு அண்ணனா ஈஸ்வர் மாதிரி ஒரு மாப்பிள்ளை வரும் போது கண்ணை மூடிகிட்டு என் தங்கையை கல்யாணம் செஞ்சு கொடுப்பேன். ஆனா இப்போ நீ பேசறதை கேட்டா பயமா இருக்கு, என்ன சொல்லன்னு தெரியலை….?”

“யோசி!” என்ற ஈஸ்வர்.. காரை விட்டு இறங்கி..

“நான் இப்படியே வீட்டுக்குப் போறேன்.. நீ கார் எடுத்துட்டுப் போ.. பாட்டியும் பெரியம்மாவும் என்னோட வந்தாங்க, அவங்களை இதுல அனுப்பி விட்டுடு!” என்று சொல்லி ரோடில் நடக்க ஆரம்பிக்க..

ஈஸ்வரின் இந்த பரிமாணத்தில் ஸ்தம்பித்து அமர்ந்து இருந்தான் முரளி.

ஈஸ்வரை பற்றி முரளிக்கு தெரியாதது என்ன இருக்கிறது. அவனின்  வகுப்பு தோழிகள் மட்டுமல்ல.. கல்லூரியில் பல பெண்களும் தங்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால், ஈஸ்வர் என்றோ சர் என்றோ அவனிடம் தான் சென்று நிற்பர்.

இப்படி ஒரு முகம்!

பெண்களை அப்படி ஒன்றும் பார்க்க கூட செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு திரிபவர்கள் அல்ல இருவரும். ஈஸ்வரும் முரளியும் சேர்ந்தே எத்தனைப் பெண்களை கிண்டல் செய்திருப்பர்.. சூப்பர் பிகர் மச்சி என்று சொல்லியிருப்பர்..   பலப் பல.. ஏன் அங்கங்களை கூட வர்ணித்திருப்பர்.

இப்படியும் ஒரு முகம்!

எல்லாம் முரளி அறிந்ததே!

முரளி அறியாத ஒன்றே ஒன்று ஐஸ்வர்யா!!!

ஈஸ்வர் எனக்குப் பிடித்திருக்கிறதா தெரியவில்லை? காதலிக்கிறேன் என்று பொய் சொல்ல முடியவில்லை! இப்படி என்ன சொன்னாலும் முரளிக்கு இது ஈஸ்வரின் காதலின் பரிமாணமாகத் தான் தோன்றியது.

அவனே இன்னும் உணரவில்லை என்று தான் தோன்றியது.   ஏதோ ஒரு நல்லதனம் இல்லாவிட்டால் எப்படி என்னிடம் இப்படி அவனால் பேசமுடியும்?

எந்த பெண்ணைப் பற்றி பேசும் போதும் இந்த தீவிரம் இருந்ததில்லை! இது நிச்சயம் ஒரு அதீத காதலாகத் தான் முரளிக்கு தோன்றியது.

காதலில் தீவிரவாதம் உண்டு!   தீவிரவாதியும் உண்டு! 

 

 

 

Advertisement