அத்தியாயம் 9 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-9

கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் கல்யாண வேலையை
இரு வீட்டாரும் விரைவாக செய்ய
ஆரம்பித்தனர். பத்திரிகைத் தயாராகி
வர இருவீட்டாரும் உறவுகளுக்குக்
கொடுக்க ஆரம்பிக்க எல்லாம்
பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது..
கார்த்திக் வீட்டில் வேலுமணி-ஜானகி
தம்பதியர் பத்திரிகை தர, மது வீட்டில்
சுந்தரமூர்த்தியும் உமாவும் தர
ஆரம்பித்தனர். திருமுருகன் மண்டபம்,
கல்யாண வேலைகளுக்கு ஆள்
பிடிப்பது எனப் பார்க்க எல்லா
வேலைகளும் சுறுசுறுப்பாக நிற்க
நேரம் இல்லாமல் சுழன்று கொண்டு இருந்தது.

மது தான் தன் சிந்தனைகளிலேயே
இருந்தாள். எட்டு வருடங்களுக்கு
முன்னால் அவனிடம் காதல்
வயப்பட்டது எல்லாம் அடிமனதில்
இருந்து மறுபடியும் எழுந்து
மின்னலாய் உள்ளே பரவின. அன்று
அவனின் மேல் வைத்த காதல்
மனதிற்குள் எழுதி வைத்த சித்திரமாய்
இருப்பதை உணர்ந்தவள்
கார்த்திக்கின் நினைவுகளிலேயே
உழன்று கொண்டு இருந்தாள். அவன்
அன்று மறுத்ததும் இன்று அவனே
தன்னைச் சம்மதிக்க வைத்ததும் என
அனைத்தையும் நினைத்து தன்னை
அறியாமல் பல நாட்களுக்குப் பிறகு
சிரித்தாள்.

மேலும் ஒரு வாரம் செல்ல அடுத்து
வந்த ஞாயிறு அன்று, கொஞ்சம்
தாமதமாக எழுந்த மது பல் துலக்கி
முகத்தை கழுவிக் கொண்டு டீ
குடிக்கப் படி இறங்கினாள். படி பாதி
இறங்கிய மது ஹாலில் கார்த்திக்
அமர்ந்து இருப்பதைப் பார்த்து
அப்படியே நின்று விட்டாள். இவன்
என்ன இங்கே? என்று நினைத்தவள்
அப்போதுதான் தான் இரவு உடையில்
இருப்பதை உணர்ந்து அப்படியே
திரும்பி ஓடி அறைக்குள்
புகுந்துவிட்டாள். திடீரென யாரோ
ஓடும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்
சத்தம் கேட்ட திசையைப் பார்க்க.. மது
மறைவது மட்டும் தான் அவனுக்குத்
தெரிந்தது. 'இவள் ஏன்
இப்படி ஓடுகிறாள்' என்று மனதிற்குள்
நினைத்துச் சிரிக்க, அதற்குள்
அவனை வரவேற்று விட்டு உள்ளே
சென்ற உமா.. சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் அழைத்து வந்தார்.

"வாங்க மாப்பிள்ளை" என்றபடி
இருவரும் வந்து சோபாவில்
அமர்ந்தனர்.

"என்ன சாப்பட்றீங்க?" என உமாக்
கேட்டார்.

"இல்லை அத்தை. எதுவும் வேண்டாம்.
இப்போது தான் சாப்பிட்டு விட்டு
வந்தேன்" என்றான் கார்த்திக்.

"அப்போ ஒரு ஜூஸ் ஆவது குடிங்க"
என்று வற்புறுத்தி திருமுருகன்
சொல்ல சரியென்று தலை ஆட்டினான்
கார்த்திக். பின் வருணும் வந்து
சேர்ந்தான்.

பொதுவாக கல்யாண வேலையைப்
பற்றி பேசிக் கொண்டிருக்க, உமா
பழச்சாறை கொண்டு வந்து தந்தார்.

"கல்யாணத்திற்கு ஏதோ நம்
முறைப்படி மதுவிற்கு நகை வாங்க
வேண்டும் என்று அம்மா
சொன்னாங்க.. மதுமிதாவை கூட்டிச்
சென்று அவளுக்கு பிடித்த மாதிரி
வாங்கித் தரச் சொன்னார்கள்.
அதனால் உங்களிடம் கேட்டு மதுவை
கோவை வரை அழைத்துச்
செல்லலாம் என்று வந்தேன்" என்று
ஜூஸ் டம்ளரை கையில் வைத்தபடியே
பேசினான்.

முதலில் அனைவரும் ஒருவரை
ஒருவர் பார்க்க அவர்களின் நிலையும்
அவனுக்குப் புரிந்தது. "வந்து நம்ம
வழக்கப்படி இது பழக்கமில்லை தான்
மாமா.. ஆனால் மதுமிதாவைக் கூட்டிப்
போனால் அவளிற்குப் பிடித்த மாதிரி
வாங்கி விடலாம். ஈவ்னிங்குள்ள வந்து
விட்டுவிடுவேன்" என்று கார்த்திக்
சொல்ல பெரியவர்களால் மறுக்க
முடியவில்லை.

அனைவரும் சரி என்றுத் தலையாட்ட
"ஜூஸ் எடுத்து குடிங்க. நான் மதுவை
கிளம்பி வரச் சொல்கிறேன்" என்று
உமா மதுவின் அறைக்குச் சென்றார்.

சரி குளித்துவிட்டுக் கீழே செல்லலாம்
என்று குளித்து முடித்து ஒரு பழைய
சுடிதார் செட்டை அணிந்தவள் தன்
அன்னை வந்ததைக் கவனித்து
"என்னமா?" என்று வினவினாள்
மதுமிதா..

"மாப்பிள்ளை வந்து இருக்கிறார்..
ஏதோ முறைப்படி நகை வாங்க
வேண்டுமாம்.. அதான் உன்னைக்
கோவை வரை கூட்டிப் போக
வந்திருக்கிறார்" என்றார் உமா
மகளிடம்.

"அப்பா என்ன சொன்னார்?" என்று
யோசனையாகக் கேட்டாள் மது.

கீழே நடந்த உரையாடலை உமா
மகளிடம் தெரிவிக்க 'பரவாயில்லை
வருங்கால மாமனார் மாமியாரைக்
கூட பேச்சில் கையாலும் சாமர்த்தியம்
இருக்கு.. அதாவது நயமாகப்
பேசிகிறான்' என்று நினைத்தாள் மது.

"சரி துணி மாத்தீட்டு வரேன்" என்று
அன்னையை அனுப்பி விட்டு ஒரு ப்ளூ
ஜீன்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான
ஒரு வெந்தய நிறக் குர்தா டாப்பை
அணிந்து கீழே வந்தாள். மது
சாப்பிடவில்லை என்று தெரிந்து
அவளை சாப்பிட்டு வரச் சொன்ன
கார்த்திக், சுந்தரமூர்த்தி திருமுருகன்
மற்றும் வெளியே சென்றுவிட்டு வந்த
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியரோடு
பேசிக்கொண்டிருந்தான்.

மது சாப்பிட்டு விட்டு வர "சரி நாங்க
கிளம்பறோம்" என்று எழுந்தவன்
அனைவரிடமும் விடைபெற்று விட்டு
முன்னால் நடந்து சென்றான். மதுவும்
அவன் பின்னால் வந்து ஏறிக்கொள்ள
காரை எடுத்தான் கார்த்திக்.

இருவருமே கொஞ்ச நேரம் எதுவும்
பேசவில்லை. கார்த்திக் தான் முதலில்
பேச்சை எடுத்தான் "உன் காதுல
அத்தை என்ன மதுமிதா
சொன்னாங்க" என்று கேட்டான்.

இவன் முன்னே கார் எடுக்க
சென்றபோது அம்மா சொன்னது
இவனுக்கு எப்படித் தெரியும் என்று
நினைத்தவள், "வந்து... ஒரு சுடிதார்
அல்லது சாரி அணிந்து செல்ல
வேண்டியதுதானே-ன்னு
சொன்னாங்க" என்று கை நகத்தைப்
பார்த்தபடிக் கூறினாள்.

"ஏன் இதுவே உனக்கு நல்லாதானே
இருக்கு" என்று சொன்னான்
கார்த்திக் இயல்பாக. மது ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாளே தவிர
எதுவும் பேசவில்லை.

நகைக்கடையை அடைந்தவுடன் "மது
எந்த நகைப் பிடிக்குதோ அதையே
எடுத்துக்கோ" என்றான் கார்த்திக்.
காரை பார்க் செய்து விட்டு இருவரும்
உள்ளே சென்றனர். மது ரொம்பவும்
சிறிதும் இல்லாமல் பெரிதும்
இல்லாமல் ஒரு நடுத்தர சைஸ் செட்
நகைகளையேப் பார்த்தாள்.
அவளுக்கும் இந்த மாதிரி வந்து
பார்த்துப் பழக்கம் இல்லை.. சிறிய
வயதில் எப்போதோ அம்மா
சித்தியுடன் வந்து பார்த்த நினைவு..
அதுவும் 'எனக்கு அங்க வந்தால் போர்
அடிக்கும்.. நான் வரல.. நீங்களே
ஏதாவது வாங்கிட்டு வாங்க' என்று
அடுத்த தடவை அழைத்த போது
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு. அப்போதே வந்து
இதெல்லாம் பழகி இருக்க வேண்டும்
என்று தன்னையே திட்டினாள்.

"இதில் எது நல்லா இருக்கு?" என்று
கஷ்டப்பட்டு இரண்டு செட்டைத்
தேர்ந்து எடுத்துக் கார்த்திக்கிடம்
காண்பித்துக் கேட்டாள்.

"இப்படிப் பார்த்தால் எப்படித்
தெரியும்?" என்றவன் எழுந்து அவள்
பின்னால் நின்று அந்த செட்டுகளை
வாங்கி அவள் கழுத்தில் வைத்து,
இருவரின் முன்னால் இருந்த
ஆளுயரக் கண்ணாடியைச்
சாதரணமாகப் பார்த்தான் கார்த்திக்.
அவன் தங்கை கல்யாணத்தின் போது
அம்மாவும் தங்கையும் இப்படிப் பார்த்த
நியாபகம், அதுதான் சாதாரணமாக
மதுவிடம் அப்படி வைத்துப் பார்த்தான்.

மதுதான் அவ்வளவு அருகில் அவன்
நின்றதில் மூச்சடைத்துப் போனாள்.
இவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது
என்று எண்ணினாள்.

"இந்த லோட்டஸ் டிசைன் நல்லா
இருக்கு மது" என்று நகையைத்
தேர்ந்து எடுத்தான்.

"சரி இதையே பில் போட்ருங்க" என்று
கடை ஊழியரிடம் தந்து பில்போட்டு
வாங்கி வெளியே வந்தனர்.

அவர்கள் இருவரும் கார்
பார்க்கிங்கிற்கு வர கார்த்திக்கிற்கு
ஒரு போன் கால் வந்தது. அவளைக்
காரில் உட்காரச் சொல்லிவிட்டுப்
போனை எடுத்துப் பேசிக் கொண்டு
இருந்தான்.

காரின் வலது பக்கமாக இருந்த
பில்லரின் மீது சாய்ந்தபடி நின்று
பேசிக் கொண்டு இருந்தான்
கார்த்திக்கை கவனித்தாள் மது..
காற்றில் ஆடிக் கொண்டிருந்த
அவனது அடத்தியான கேசமும்,
சுறுசுறுப்பான விழிகளும், கம்பீரமான
ஆளுமைத்தனத்துடன் ஒரு கையை
பான்ட் பாக்கெட்டில் விட்டபடி
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தவனைக் காணத்
தெவிட்டவில்லை மதுவிற்கு.
மதுவின் பார்வையைக் கண்டவன்
புருவத்தைச் சுருக்க மது டக்கென்று
பார்வையைத் திருப்பி விட்டாள்.

மனம் மறைத்தாலும்
என் செயல் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை..
உன் பார்வையைக்
காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
மாறுகிறது
என் இதயத்துடிப்பு!

என்று மதுவின் மனம் கவிதை
பாடியது.

போனை வைத்துவிட்டு வந்தவன்
"மதுமிதா.. ஒரு சின்ன வேலை.. இங்க
பக்கத்தில் தானே ஒரு மால் இருக்கு..
அங்க போயிட்டு ஒரு பத்து நிமிடத்தில்
கிளம்பி விடலாம்" என்று காரை
ஸ்டார்ட் செய்த படியே சொன்னான்.

"ம்ம்" என்று தலையை ஆட்டினாள் மது.

கார் பார்க்கிங்கில் காரை
நிறுத்திவிட்டு லிப்டில் ஏறினர்
இருவரும்.. முதல் தளம் வர கூட்டம்
கொஞ்சம் சேர்ந்தது.. இரண்டாம்
தளத்தில் இன்னும் மூன்று பேர்
சேர்ந்தனர். கூட்டம் கொஞ்சம் நெருக்க
மது தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் நெருங்கி அவன்
கையைப் பற்றியபடி நின்றாள்.
மது தன் கையைப் பிடித்தவடன்
கார்த்திக்கிற்கு ஏனோ
வித்தியாசமான.. மென்மையான
உணர்வு.. கார்த்திக்கும் மதுவின்
கைகளை மென்மையாக அவளுக்கு
வலிக்காதவாறு அழுத்திப் பிடித்தான்.
அவளின் முகத்தைக் கீழ்க்கண்ணால்
அவள் என்ன ரியாக்ட் செய்கிறாள்
என்று பார்த்தான். மதுவோ இந்தக்
கூட்டம் எப்போது செல்லும் என்றபடி
முகத்தை வைத்துக் கொண்டு நேராகப்
பார்த்து நின்று கொண்டு இருந்தாள்.
"இதை எல்லாம் வைத்துக் கொண்டு
கஷ்டம் தான்.. கடவுளே.." என்று
முணுமுணுத்து மௌனமாகச்
சிரித்தபடி பெருமூச்சை விட்டான்.

பிறகு நான்காவது தளத்தில் இவர்கள்
லிப்டை விட்டு வெளியே வர மதுவிற்கு
அப்போது தான் 'அப்பாடா' என்று
இருந்தது.

இருவரும் சென்று ஒரு காஃபி
ஷாப்பில் அமர, ஒரு நாற்பது வயது
மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவர்கள்
இருவரின் எதிரில் அமர்ந்தார்.

"ஹலோ கார்த்திக் சார்" என்றார் அவர்
அமர்ந்தபடி.

"ஹலோ மூர்த்தி அங்கிள்.." என்றவன்
"டாக்குமென்ட் ரெடி தானே" என்று
வினவினான்.

"ரெடி தம்பி.. இந்தாங்க ஒரு தடவை
சரி பார்த்துக்கோங்க" என்று ஒரு
பைலைக் கார்த்திக்கிடம் தந்தார்.

அதை வாங்கிச் சிறிது நேரம் சரி
பார்த்தவன்.. "ஓகே பக்கா.. எல்லாம்
சரியாக இருக்கு.. நாளைக்கு ஆன
சீக்கரமே வந்து விடுங்க.. டைப் செய்து
மெயில் அனுப்பி விடலாம்" என்றான்
கார்த்திக். குரலில் கடினம் இல்லை
என்றாலும் அவனது குரல்
கட்டளையிட்டது போலத் தான்
உணர்ந்தாள் மது.

"மூர்த்தி சார் இதுதான் என் fiancee
மதுமிதா.." என்றவன் மதுவிடம்
திரும்பி "மதுமிதா இது மூர்த்தி
அங்கிள்.. என் பி.ஏ .. அப்பா
காலத்தில் இருந்து நம் ஆபிசில்
வேலையில் இருக்கிறார்" என்று
இருவருக்கும் இருவரையும் அறிமுகம்
செய்து வைத்தான்.

பின் அவரும் எழுந்து கிளம்ப
கார்த்திக்கும் மதுவும் எழுந்து
கிளம்பினர். கீழே வரும் போது
escalator இல் வந்தனர்.. இரண்டாவது
தளத்திற்கு வந்த போது தான் மது
மிதுனாவைப் பார்த்தது. தோழியைக்
கண்டவளுக்கு மிகவும் குஷியாகிப்
போனது.
 

Yaazhini madhumitha

Well-Known Member
"ஹே.. மிதுனா" என்ற மது அவளை
நோக்கிச் சென்றாள். மிதுனா அங்கு
யாருடனோ போனில் பேசியபடியே
திரும்பினாள்.

"ஏய் மது நீ என்னடி இங்க?" என்று
போனை வைத்த மிதுனா மதுவின்
அருகில் கார்த்திக் இருப்பதைப்
பார்த்து விட்டு மதுவைக் கேலியாகப்
பார்த்தாள்.

"இல்லை அவரும் நானும் ஒரு ஜுவல்
வாங்க கோவை வந்தோம்" என்று
சற்று நெளிந்தபடி பதில் கூறினாள்
மதுமிதா.

"ஒ... ஒகேஒகே" என்றாள் மிதுனா
கேலியோடு மதுவின் காதில்.

"ஹாய் அண்ணா" என்றாள்
கார்த்திக்கிடம். கார்த்திக்கிடம் மிதுனா
அவ்வப்போது வீட்டில் வைத்து
பேசுவது உண்டு. அப்படி இருவருக்கும்
ஒரு நல்ல அறிமுகம் இருந்தது.

"ஹாய் மா.. நீயா மிதுனா என்னிடம்
போனில் பேசியது" என்று கேட்டான்
கார்த்திக்.

"அய்யோ அண்ணா.. நான் பேசினால்
நீங்க கண்டுபிடித்து விடுவீர்கள் என்று
ஸ்வேதா தான் பேசினாள்" என்றாள்
மிதுனா அவசரமாக.

"அது யாரு?" என்று மதுவைக்
கேள்வியாகப் பார்த்துக் கேட்டான்
கார்த்திக்.

ஸ்வேதாவைப் பற்றி சொன்ன மது
"அவளை இங்கு கோயம்பத்தூரில்
தான் கல்யாணம் செய்து
தந்திருக்கிறார்கள்.. RS புரத்தில் தான்
அவ வீடு" என்றாள் மது.

"ஒ.. சரி.. எனக்கு பசிக்கிறது.. லஞ்ச்
சாப்பிடப் போகலாம்" என்றவன் "நீயும்
கூட வா மிதுனா.." என்று கார்த்திக்
அழைக்க "அண்ணா வந்து.." என்று
மிதுனா இழுக்க கார்த்திக் என்ன
என்பதைப் போலப் பார்க்க, தன்னால்
சரி என்று ஒத்துக்கொண்டாள் மிதுனா.
தோழி தலையை ஆட்டுவதைப்
பார்த்தவளுக்கு(மது) சிரிப்பு தான்
வந்தது.

"ஸ்வேதாவையும் அழைப்போமா?"
என்று மது கார்த்திக்கிடம் கேட்க சரி
என்று தலை அசைத்து விட்டுக் காரை
நோக்கி நடந்தான்.

ஸ்வேதாவிடம் பேசிவிட்டு போனை
வைத்த மது "ஆமாம் நீ எங்க இங்கே?"
என்று மிதுனாவிடம் வினவினாள்.

"நான் என் காலேஜ் பிரண்ட்ஸைப்
பார்க்க வந்தேன் டி" என்றாள் மிதுனா.
இருவரும் பேசிய படியே மாலில்
இருந்து வெளியே வர கார்த்திக் காரை
எடுத்துக் கொண்டு வந்தான்.

"ஸ்வேதா நேராக அங்கு விடுவதாக
சொல்லிவிட்டாள்" என்று மது ஏற
மிதுனாவும் பின்னால் ஏறிக்
கொண்டாள்.

இவர்கள் அங்கு சென்ற பதினைந்து
நிமிடங்களில் ஸ்வேதா அங்கு
வந்துவிட்டாள். வந்தவள் மதுவையும்
மிதுனாவையும் கட்டிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட ஸ்வேதாவை இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறாள்
மது. 'தன் இன்பத்திலும் துன்பத்திலும்
எப்போதுமே கூட இருக்கிறாளே..
துன்பத்தில் ஆறுதல் தேற்றி
தூக்கிவிட்டு, இன்பத்தில் தனக்குச்
சமமாக துள்ளி.. இவர்களை மாதிரி
பிரண்ட்ஸ் கிடைக்க குடுத்து வைத்து
இருக்க வேண்டும் என்று
எண்ணினாள் மது.

"வாழ்த்துக்கள் புதுப் பெண்ணே" என்ற
ஸ்வேதா "உங்களுக்கும் அண்ணா"
என்று கார்த்திக்கை பார்த்து தன்
வாழ்த்துகளைத் தெரிவித்தாள்.

பிறகு நால்வரும் ஹோட்டலுக்குள்
நுழைய மிதுனாவும் ஸ்வேதாவும்
ஒருபக்கம் அமர்ந்தனர். அவர்கள்
எதிர்ப்பக்கம் மதுவும் கார்த்திக்கும்
அமர்ந்தனர். சர்வர் வரவும் அவரவர்
ஆர்டர் செய்து விட்டுப் பேச
ஆரம்பித்தனர்.

"ஏன் ஸ்வேதா ஹஸ்பண்டையும்
பாப்பாவையும் கூட்டிட்டு வரல" என்று
குறையாகக் கேட்டாள் மது.

"அவர் ஒரு வேலையாக
காலையிலேயே மேட்டுப்பாளையம்
சென்று விட்டார் டி. பாப்பாவும்
வெளியே வந்தால் அழுவாள். அதான்
தூங்க வைத்து அத்தையிடம்
சொல்லிவிட்டு வந்தேன்" என்ற
காரணத்தை ஸ்வேதா சொன்னாள்.

மேலும் "ஆனால் மது மேடம் என்
கல்யாணத்திற்கே வரவில்லை
அண்ணா" என்று கார்த்திக்கிடம்
சொல்லிவிட்டு "நியாபகம்
இருக்கட்டும்" மதுவை கையை
உயர்த்தி மிரட்டினாள்.

"ஏன்?" எனக் கேட்டான் கார்த்திக்.

"அதான் மேடம் ஊருக்கு அவ்வளவாக
வருவதையே நிறுத்திவிட்டாளே.
நாங்களே கிட்டதட்ட இரண்டரை
வருடம் கழித்துப் பார்க்கிறோம்
அண்ணா" என்றாள் மிதுனா.

கார்த்திக் மூவரையும் கேள்வியாகப்
பார்க்க ஸ்வேதாவோ "அண்ணா
முதலில் இருந்து சொன்னால் தான்
புரியும்" என்று சொல்ல, "வேண்டாம்"
என்றபடி சைகை செய்தாள் மது.
கார்த்திக் மது சைகை செய்ததை
பார்த்துவிட்டான்.

"நீங்க சொல்லுங்க" என்று மதுவை
கேலியாகப் பார்த்தபடி மிதுனா
ஸ்வேதாவிடம் சொன்னான் கார்த்திக்.

பள்ளியில் கேம்ஸ் ரூமில் அவன்
போட்டோ எடுத்தது, அதை அவள்
அறையில் யாருக்கும் தெரியாமல்
வைத்தது. தனியாக அவள் சில சமயம்
சிரித்தது, அவனைப் பற்றி
மிதுனாவிடம் விசாரித்தது, அவனைப்
பார்த்து கோவிலில் ஓடி மறைந்தது.
அடுத்து அவனிடம் போனில் பேசிய
பின்பு அவ்வளவாக ஊருக்கு வராமல்
இருந்துவிட்டு அப்படியே லண்டன்
சென்றது என அனைத்தையும்
சொல்லிவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு
"இவ்ளோ நடந்துச்சா?" என்று
வியப்பாக கேட்டான். அவன்
நினைத்தது மது அவன் வேண்டாம்
என்று சொன்ன அன்றே
மறந்திருப்பாள் என்று. கார்த்திக்கிற்கு
தான் சிம்மாசனம் போட்டு மது மனதில் அமர்ந்திருப்பது தெரியவில்லை.
மதுவை திரும்பிக் குறும்பாக ஒரு
பார்வை பார்க்க மது திருதிருவென்று
விழித்தாள்.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு
வந்துவிட அனைவரும் சாப்பிட
ஆரம்பித்தனர். பழைய கதைகள்
எல்லாம் பேசி சாப்பிட்டு முடித்துவிட்டு
நான்கு பேரும் வெளியே வர
சிலுசிலுவென கோயம்புத்தூர் காத்து
அனைவரையும் தழுவிச் சென்றது.

ரெஸ்ட்ரூம் சென்று வருகிறேன் என்று
பேக்கை கார்த்திக் கையில் குடுத்து
விட்டு மது சென்றாள்.

மது சென்ற பின் "அண்ணா அவ
ரொம்ப கஷ்டப்பட்டுட்டானா. அவ
உங்கள அவ்ளோ லவ் பண்றா. அந்த
ஆக்ஸிடெண்ட் காரணம் உங்க கிட்ட
சொன்னாளா?" என்று ஸ்வேதா
வினவ "ம் சொன்னாமா" என்றான்
கார்த்திக்.

"மது அந்த டைம்ல உங்களைத் தான்
அண்ணா ரொம்ப மிஸ் பண்ணா.
நீங்க கூட இருந்தா எல்லாம்
சரியாகிவிடும் என்று சொல்லி
அழுதாள். ஆனா உங்க முகத்தைப்
பார்க்க முடியாது என்று அவளே
ரொம்ப குழப்பிக்கிட்டாள் அண்ணா.
உண்மையைச் சொல்லனும்னா
எல்லாத்துலையும் ஸ்டாராங்கா
இருக்க மது உங்க விஷயத்துல
ரொம்ப வீக் அன்ட் சென்சிட்டிவ்..
அவளை நல்லா பாத்துக்கோங்க
அண்ணா"என்று கூறி முடித்தாள்.
அவள் முடிக்கும் போது மதுவும் வந்து
விட்டாள்.

"சரி அண்ணா அப்போ கிளம்பறேன்"
என்றாள் ஸ்வேதா.

"நானே வீட்டில் இறக்கிவிடுகிறேன்"
என்று கார்த்திக்கே ஸ்வேதாவை
வீட்டில் விட்டான். ஸ்வேதா
குழந்தையையும் பார்த்து விட்டு
பதினைந்து நிமிடத்தில் கிளம்பி
விட்டனர்.

"அண்ணா என்னை பஸ் ஸ்டாண்ட்ல
இறக்கி விட்ருங்க" என்றாள் மிதுனா.

"ஏன் மிதுனா.. எங்களுடனே
பொள்ளாச்சி வந்து விடு" என்றான்
கார்த்திக்.

"இல்லை அண்ணா ஒரு வேலை
இருக்கிறது. முடித்து விட்டு
அண்ணாவுடன் வந்துவிடுவேன்"
என்று சொல்ல சரியென்று
இறக்கிவிட்டான்.

கோவையைத் தாண்டும் வரை
இருவரும் பேசவில்லை. ரியர் வ்யூ
மிரரைத் திரும்பித் தன் முகத்தைப்
பார்த்தவன் "என்ன எப்படி மது லவ்
பண்ண? எதுனால பிடித்தது? என்று
ஒரு கையால் தலையைக்
கோதியபடியே மதுவிடம் வினவினான்.

இந்த கேள்வியைக் கேட்பான் என்று
எதிர்பார்க்கவில்லை என்று மதுவால்
சொல்ல முடியாது. தன் தோழிகள்
பண்ணின வேலையால் ஏதாவது
கேள்வி வரும் என்று எதிர்பார்த்து
இருந்தாள் தான். "அ... அது தெரியல"
என்றாள் நேராக ரோட்டைப் பார்த்தபடி.

"சரி என்ன பாத்து எதுக்கு திருவிழால
ஓடின?. பிடித்தவர்களைப் பார்த்தால்
ஓடுவார்களா என்ன?" என
யோசிப்பவன் போலப் பாவனை
செய்து கேட்டான்.

"அது ஏதோ... எ.. எனக்குத் தெரியல"
என்று தலைக் குனிந்தபடி பதில்
அளித்தாள் மது. என்னன்னு
சொல்லுவா உன்ன பாத்தா
அடிவயிற்றில் ஏதோ பயமும்
சந்தோஷமும் கலந்த உணர்வுன்னா?

"அதுசரி.. ஒரு கேள்வி கேக்கறேன்.
அதற்காவது சரியான பதில் சொல்லு"
என்றான் கார்த்திக்.

"ம்ம்" என்றாள் மது.

"எனக்குப் போன் பண்ணி லவ்வ
சொன்னப்போ மட்டும் 'கார்த்திக்' ,
'கார்த்திக்' என்று கூப்பிட்ட. இப்போ
எங்க அதெல்லாம் காணோம்" எனக்
கேட்டான்.

"அது...அ..ப்போ...எனக்கு..." என்று
ஆரம்பித்தவள் திருதிருவென விழித்து
"தெரியவில்லை" என்ற பதிலையே
தந்தாள்.

"ஏன்னு எனக்கு தெரியும்" என்றவன்
ஸ்டியரிங்கில் கையை வைத்தபடி
கண்களால் மௌனமாக சிரித்தான்.

"ஏன்" என்று கேட்ட மதுவிற்கும் ஏதோ
புரிந்த மாதிரிதான் இருந்தது.

"அப்போ லவ்வர் பாயா நினைச்ச,
இப்போ கல்யாணம்
பண்ணிக்கொள்ள போகிறவர்
அதாவது கணவனாகப் போறவன்.
அதான் மரியாதை எல்லாம் பலமா
இருக்குன்னு தோனுது.. கரெக்டா? "
என்றான் அவளைப் பார்த்து
ஊடுருவும் பார்வையால்.

மதுவால் மறுக்க முடியாத
உண்மைதான். அவன் சொன்ன
காரணத்தில் மதுவிற்கு முகம் சிவந்து
விட்டது. முகத்தை வெளியே
வேடிக்கைப் பார்ப்பது போலத் திருப்பி
விட்டாள் மது. அவனும் அவளது
செய்கையைக் கண்டு மனதிற்குள்
சிரித்துவிட்டு "மது உனக்கு ஏதாவது
என்னிடம் கேட்க வேண்டுமா?" என்று
சீரியஸாகக் கேட்டான்.

"எதுவும் இல்லை" என்றாள் அவனைப்
பார்த்தபடி.

"எதுவுமே இல்லையா? இந்த
கன்டிஷன் அல்லது ஏதாவது உனக்கு
கேட்க வேண்டும் என்று தோன்றியது.."
என்றவன் "எதுவுமே இல்லையா?"
என்று புருவ முடிச்சுடன் வினவினான்.

"இருக்கு.." என்றாள் மது அமைதியான
குரலில் தலையைக் குனிந்தபடி.

"என்ன மது.. எதுவாக இருந்தாலும்
கேள்".

"நீங்க உங்க கல்யாணத்தை தள்ளிப்
போட்டதுக்கு ஏதாச்சும் காரணம்
இருக்கா?" என்று கேட்டாள்.

மது இது ரொம்ப நாளாக யோசித்துக்
கொண்டு இருந்த ஒன்று. இன்று
அவனே கேட்க இதுதான் சமயம் என்று
கேட்டுவிட்டாள்.

"என்னக் காரணம்" என்று ஒரு நிமிடம்
யோசிப்பது போல பாவனை
செய்தவன் "அது ஒன்றுமில்லை மது..
உனக்கே தெரியும் நான் பாஸ்ட்
ரிளேஷன்ஷிப்ல இருந்தது. அது
போனது அப்புறம் பிசினஸ்ல கவனம்
அதிகப் படுத்துக்கிட்டேன். ஆனால்
கல்யாணம் வேண்டாம் என்று எல்லாம்
முட்டாள் தனமான முடிவு
செய்யவில்லை" என்று
ஓரக்கண்ணால் மதுவை ஒரு நிமிடம்
பார்த்தவன் "இப்போது வேண்டாம்
என்றுதான் இருந்தேன்" என்றான்
கார்த்திக்.

அவன் தன்னை முட்டாள் என்று
சொல்லுவது புரிந்தது மதுவிற்கு. ஒரு
நிமிடம் அவனைப் பொய்க்கோபமாகப்
பார்த்தவள் பின்பு உதட்டைச் சுழித்து
வெடுக்கென வெளியே பார்த்தபடி
திரும்பி விட்டாள்.

மது வீட்டில் அவளை உள்ளே வரை
சென்று விட்டவன் அனைவரிடமும்
சொல்லி விட்டு "பை மது" என்று
விட்டுப் போனான்.

அப்போது தான் போகும் போது
மதுமிதா என்று அழைத்தவன் இப்போ
மது என்று சொல்லுவதை மது
கவனித்தாள்.

வீடு வந்து தன் அறையில் புகுந்த
கார்த்திக்கிற்கு மது தன்னிடம் ஒரு
மாதிரி அமைதியாக இருப்பதும்
பிடித்திருந்தது. எல்லாரிடமும் ஏதாவது
திருப்பிப் பேசுபவள் தன்னிடம்
தடுமாறுவதைக் காண சுகமான
அனுபவமாக இருந்தது கார்த்திக்கிற்கு.
போனை எடுத்தவன் "குட் நைட்" என்று
வாட்ஸ்ஆப்பில் மதுவிற்கு
அனுப்பினான். இரண்டு நிமிடம்
கழித்து "குட் நைட்" என்று அதன்
பக்கத்தில் நாக்கை வெளியே
தள்ளியபடி கண்கள் கோனலாக
இருப்பது போன்ற ஒரு
நகைச்சுவையான ஸ்மைலி சிம்பள்
பொம்மையோடு மது அனுப்ப
கார்த்திக் 'அடியேயேயே' என்று
நினைத்தவாறு சிரித்தான்.
'இருக்கட்டும் இந்த வீட்டிற்கு வந்ந
பிறகு உன்னைப் பார்த்துக்
கொள்கிறேன்' என்று சிரித்தபடியே
முடிவு செய்தவன் படுக்கையில்
சாய்ந்து கண்களை மூடினான்.

திருமணம் இன்னும் பதினைந்து நாள்
என்ற நிலையில் இருந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top