அத்தியாயம் 8 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-8

அத்தனை நேரம் இருவருமே அவரவர்
கற்பனையில் மூழ்கி இருந்தனர். ஒரு
முடிவு செய்த கார்த்திக் கோயம்பத்தூர்
மெரைன் கல்லூரி கடந்தவுடன் காரை
ஒரு ஓரமாக நல்ல மரங்கள் நிறைந்த
சாலையில் நிறுத்தினான்.

கார் நின்றதை உணர்ந்த மது
கார்த்திக்கை யோசனையோடுப்
பார்த்தாள். அவளை ஒரு கணம் ரியர்
வ்யூ மிரர் வழியாகப் பார்த்தவன்
காரை விட்டு இறங்கி கதவைச்
சாத்திவிட்டு, கீழே குனிந்து "உன்னிடம்
பேச வேண்டும் மதுமிதா. கீழே
இறங்கு" என்ற கட்டளைக் குரலில்
சொல்லிவிட்டு காரை முன்புறமாகச்
சுற்றி வந்து முன்னால் இருந்த
கதவின் மேல் சாய்ந்தபடி நின்றான்.

சுற்றி வரும் போது தான் அவனை
முழுதாகப் பார்த்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களுக்கு முன்னால்
பார்த்தவனுக்கும் இப்போது
இருப்பவனுக்கும் நிறைய
வித்தியாசங்கள். அன்று கொஞ்சம்
மெலிதாகவே காணப்பட்டவன் இன்று
கம்பீரமான தோற்றத்துடன் அவன்
தொழிலுக்கே உண்டான நிமிர்வுடன்
இருப்பதைப் பார்த்தவளுக்கு மனம்
ரசிக்கவில்லை என்று சொன்னால்
அவளே நம்ப மாட்டாள்.

"ஏய் சைட் அடிக்கிற நேரமா இது?"
என்று தன் மூளை எச்சரிக்கை செய்ய
சுயநினைவு திரும்பியவள் கார்
கதவைத் திறந்தாள்.

என்ன சொல்லப்போறானோ என்று
நினைத்தபடியே காரை விட்டு கீழே
இறங்கிய மது சற்றுத் தள்ளி, அவன்
முகம் காண சக்தி இல்லாமல் தலை
குனிந்து அவன் புறம் திரும்பி
நின்றிருந்தாள்.

"என்ன இன்னும் லவ் பண்றையா
மதுமிதா?" என்று நேரிடையாகக்
கேட்டு அவளை அதிர வைத்தான்
கார்த்திக்.

திட்டப்போகிறான் அல்லது இந்த
எண்ணத்தை விட்டுவிடு என்று
சொல்லுவான் என அதிகாரக் குரலை
எதிர்ப்பார்த்த மதுவிற்கு இது அதிர்ச்சி
தான். என்ன சொல்லுவது என்று
மதுவிற்கு புரியவில்லை.

"நான் கேட்டால் எனக்கு பதில் வர
வேண்டும் மதுமிதா" என்றான்
அதிகாரக்குரலில் இப்போது.

"ஆமாம்" என்று தலை அசைத்தாள் மது.
காதலித்தாலும் அவள் கல்யாணம்
என்ற ஒன்றே தனக்கு வேண்டாம்
என்று தானே நினைத்தாள்.
"ஆனால்...." என்று மது ஆரம்பிக்க..
அவளது பேச்சைக் கண்டு கொள்ளாது
அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.

"அப்போ நான்கு வருடங்களுக்கு
முன்னால் நான் சொன்னது எதையும்
நீ உன் மண்டையில்
ஏற்றிக்கொள்ளவில்லை.
அப்படித்தானே? "என்றான் குத்தலாக.

மதுவிற்கு அவன் குத்தலாகப் பேசியது
புரியாமல் இல்லை. அவன் பேச்சு
கொஞ்சம் கோபத்தையும் கிளப்பியது.
"என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் உங்களை கல்யாணம் செய்ய
நான் நினைக்கவில்லை" என்று
எங்கோ பார்த்தபடி தன் மனதில்
உள்ளதைச் சொல்லிவிட்டாள் மது.

"அப்படி இருக்க ஏன் எல்லாரிடமும்
சொன்னாய்" என மேலும் குத்தினான்.

"நான்...." என்று நிமிர்ந்து அவன்
முகத்தைப் பார்த்தவள் அவன்
பார்வையைத் தாங்காது தன்
விழிகளை அவன் விழிகளில் இருந்து
பிரித்து எங்கோ பார்த்தபடி, அன்று
அவன் அன்னை வந்த போது நடந்த
அனைத்தையும் கூறினாள்.

மேலும் "என்னால் மனதில் ஒருவரை
வைத்துக் கொண்டு
இன்னொருவனுக்கு துரோகம் செய்ய
முடியாது. அதான் உண்மையைச்
சொல்லிவிட்டேன். விஷயம்
தெரிந்தால் என்னை யாரையும்
கல்யாணம் செய்து கொள்ளச்
சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
உங்களைக் கல்யாணம் செய்ய
எண்ணி நான் அதை சொல்லவில்லை.
ஏதோ எல்லோரும் குடுத்த பிரஷரில்
சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள்.. சாரி" என்றாள் மது.
அப்போதும் அவனது நிலை வீட்டில்
என்னவோ என்று மனதில் யோசிக்கத்
தவறவில்லை.

"அப்போ நீ என்னைக் கல்யாணம்
செய்ய எண்ணி எல்லாரின்
முன்னிலையில் என்னைக்
காதலிப்பதாகச் சொல்லவில்லை..
அப்படித்தானே?" எனக் கேட்டான்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினாள்
மது.

"சரி. நான் இல்லை என்றாலும்.. உன்
வீட்டில் உனக்கு வேறு யாருடனாவது
கட்டாயக் கல்யாணம் செய்து
வைத்தால்?" என அடுத்தக் கார்த்திக்
கேட்டு அவளது உள்ளத்தை நடுங்க
வைத்தான்.

"அப்படி என் கை கால்களைக் கட்டி
மணமேடையில் யாராலும் உட்கார
வைக்க முடியாது" எனத் தெளிவானக்
குரலில் மதுவிடம் பதில் வந்தது.
இப்போ எதுக்கு இந்தக் கேள்வி
எல்லாம் கேட்கிறான் என்று மது
நினைக்கவில்லை.

"நம்ம ஊர்ல இந்த எமோஷனல் ப்ளாக்
மெயில்னு ஒன்னு இருக்கு அத
யோசிச்சுப் பாத்தையா?" என்று
கைகளை மார்பிற்கு குறுக்காகக்
கட்டியபடிக் கேட்டான்.

"அப்படி யாரும் என் வீட்டில் என்னைப்
புரிந்து கொள்ளாமல் நடக்க
மாட்டார்கள்.. என்னை
கஷ்டப்படுத்தவும் மாட்டார்கள்"
என்று திடமானக் குரலில் கூறிய
மதுவை அவன் கண்கள் இடுங்கப்
பார்த்ததை அவள் அறியவில்லை.

"அப்போ உன் வீட்டினரை நீ புரிந்து
கொள்ளாமல் நடக்கப் போகிறாய்..
அதாவது அவர்களை கஷ்டப்படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே" எனக்
கேட்டான்.

"நானா? நீங்க சொல்றது எனக்குப்
புரியவில்லை" என்றாள் அவனை
நேராகப் பார்த்து.

"அதாவது கல்யாணம் பண்ணிக்
கொள்ளாமல் இருந்து உன்
குடும்பத்தினரை கஷ்டப் படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே?" என
மதுவிடன் தன் கேள்வியை வைத்து
குழப்பினான்.

மதுவிற்கு அவன் என்ன சொல்ல
வருகிறான் என்பது புரிந்துவிட்டது..
"அதற்காக இஷ்டம் இல்லாத
கல்யாணத்தைச் செய்து கொண்டு
என்னால் நோக முடியாது. அது
எனக்கு மட்டும் இல்லாமல்
அடுத்தவருக்கும் பாதிப்பே.." என்றாள்
மது.

"அப்போது உன் குடும்பத்தினரைப்
பற்றி உனக்குக் கவலை இல்லையா?"
என்று கேட்டான்.

"நீங்க என்னைக் கேள்வி கேட்டே
குழப்பறீங்க" என்றாள் மது
வெடுக்கென.

"நீ ஒன்னும் கன்ப்யூஸ் ஆக வேண்டாம்
மதுமிதா. நேரடியாகவே சொல்றேன்
கேள்.. இப்போ நீ உன் கஷ்டத்தப் பத்தி
மட்டும் யோசிக்கற.. ஆனா நீன்னா நீ
மட்டும் இல்லை. உன்ன சுத்தி
இருக்கவங்க சந்தோஷம் தான் உன்
சந்தோஷம்.. உன் சந்தோஷம் தான்
அவங்க சந்தோஷம்.. சரி உன்
சந்தோஷத்துக்காக அவங்க உன்ன
அப்படியே உன் இஷ்டப்படி
விட்டுவிடுகிறார்கள் என்றே வைத்துக்
கொள்வோம். ஆனால் நமது சமதாயம்
என்று ஒன்று இருக்கிறதே.. அது
நியாபகம் இருக்கிறதா உனக்கு.. உன்
முன்னால் பேசவில்லை என்றாலும் நீ
இல்லாத போது உன்னை ஏசுவார்கள்..
நீ இவ்வளவு நாள் டாக்டர் படிச்சது..
லண்டன்ல படிச்சது எல்லாமே மறந்து
போய் இந்த கல்யாண விஷயத்தைப்
போட்டு அலசிவிடுவார்கள். நீ மட்டும்
இதில் பாதிக்கப்படப் போவதில்லை..
உன் குடும்பமும் உன் குடும்ப
கவுரவமும் தான்" என்று தெளிவாக
மதுவிற்கு விளக்கினான்.

எல்லாவற்றையும் கேட்ட மதுவிற்கு
தலை வலி வராதக் குறைதான்.
"இப்போது நான் என்ன செய்ய
வேண்டும் என்று சொல்ல வரீங்க"
என்று ஒரு பக்கமாகத் தலையைத்
தேய்த்து விட்டுபடிக் கேட்டாள்.

"வேறு வழி இல்லை மதுமிதா.
எனக்கும் உனக்கும் தான் திருமணம்
நடக்கப்போகிறது" என்றான்
அமைதியான குரலில்.

மது அவன் சொன்னதைக் கேட்டு
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
"எ.. என்ன சொல்றீங்க நீங்க?"
என்றாள்.

"ஆமாம்" என்றான் கூலாக.

"நீங்க சொல்றது எனக்கு புரியல?"
என்று விழித்தாள் மது.

"கல்யாணம் வேண்டாம் என்று
சொன்ன நீயும், உங்கள் வீட்டில் என்
அம்மாவின் முன்னால் என்னைக்
காதலிப்பதாக, அதுவும் எட்டு
வருடங்களாக காதலிக்கிறேன் என்று
கூறிவிட்டாய், அதான் சான்ஸ் என்று
கல்யாணத்தைத் தள்ளி போட்டுக்
கொண்டிருந்த என்னிடம், என் அம்மா
இப்போது விடாப்பிடியாக நிற்கிறார்.
நானே இது விஷயமாக உன்னிடம்
பேச வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் தானாக
நடந்த இந்த சந்திப்பு சாதகமாகிப்
போனது பார். இன்னும்
யோசித்துப்பார் உன்னை
என்னைவிட்டுக் கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள். உன் வீட்டிலும் சரி
என் வீட்டிலும் சரி இந்தக் கல்யாணம்
அனைவருக்கும் சம்மதமே. நான்
இரண்டு நாட்களில் சொல்கிறேன்
என்று என் அம்மாவிடம் சொன்னதால்
தான் என் அம்மா உன் வீட்டில்
இன்னும் பேசவில்லை.. நானும் என்
அம்மா கிட்ட என் முடிவ
சொல்லிடறேன் " என்று தன் செய்த
முடிவுகளைச் சொன்னான்.

"உங்க அம்மா கிட்ட என்ன சொல்லப்
போறிங்க?" என மது கேட்டாள்.

"என் அம்மா என்னை விடமாட்டார்.
அதுவும் இல்லாமல் மறுப்பதற்கும்
காரணம் இருப்பதாகத்
தெரியவில்லை" என்று தோளைக்
குலுக்கியபடி பதில் அளித்தான்.

"ஆனால் என்னால் உங்களுக்கு நல்ல
மனைவியாக இருக்க முடியும் என்று
தோன்றவில்லை" என்று மேல்
உதட்டைக் கடித்தபடி மது சொல்ல
இப்போது அதிர்ச்சி அடைந்தது
கார்த்திக் தான்.

"ஏனோ?" என்றான் கார்த்திக்.
"அது.. என் வாழ்க்கையில் நடந்த சில
சம்பவங்கள் காரணம் ஆயிருச்சு..
அதனால் தான் சொல்கிறேன்.."
என்றாள் மது. தொண்டை வறண்டது
போல உணர்ந்தாள் மது. 'அது மட்டும்
நடக்காமல் இருந்திருந்தால்
இப்போது..' என்று மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது.

"என்ன நடந்தது மதுமிதா.. நான் தான்
கல்யாணத்தில் பிரச்சினையாக
இருப்பேன் என்று நினைத்தேன்..
ஆனால் இப்போது நீயே வேண்டாம்
என்கிறாய். நீ கல்யாணமே வேண்டாம்
என்று சொல்லும் அளவிற்கு என்ன
ஆயிற்று.. நான் உன்னை பர்ஸ்ட்
வேண்டாம்-ன்னு சொன்ன கோபமா? "
என வினவினான்.

"அதெல்லாம் இல்லை.." என்று கதவை
இடமும் வலமும் ஆட்டியவள் "இல்லை
வேண்டாம்.. கிளம்பலாம்.. காரை
எடுங்க" என்று மது கார் கதவைத்
திறக்க.. கதவைப் பிடித்து கார்த்திக்
சாத்தினான் கார்த்திக்.

"நீ சொல்லாமல் காரை எடுக்க
மாட்டேன் மதுமிதா.. என்ன என்று
சொல்லு.. அப்படித் தீர்க்க முடியாத
பிரச்சினை என்று எதுவும் இல்லை..
உன்னைக் கட்டாயப் படுத்துகிறேன்
என்று நினைக்காதே.. நீ இன்று
வாயைத் திறந்து சொன்னால் தான்
இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல
முடியும்" என்று அழுத்தமானக் குரலில்
கூறினான்.

"......"

"நீ அமைதியா இருந்தா நான்
கிளம்பலாம்ன்னு சொல்லிடுவேன்னு
மட்டும் நினைக்காதே" என்று விடாமல் இடும்புப் பிடியின் உறுதியோடு
நின்றவனிடம் மதுவால் இனியும்
முடியாது என்று தோன்றியது.

"அ..அது " என்று தயங்கியவள் பின்பு
அந்த ஸ்போக்கன் இங்லீஷ் க்ளாஸில்
நடந்ததைக் கூறினாள். சொல்லி
முடிக்கும் போதுதான் மது கண்களில்
கண்ணீர் உருண்டு ஓடியதை
உணர்ந்தாள். ஒரு வித நடுக்கத்துடன்
சொல்லி முடித்தவள் நிமிர்ந்து
அவனைப் பார்க்க அவன் முகம் இறுகி
இருந்தது.

"எதுவும் நடக்கலனாலும் அந்த
விஷயம் எனக்கு அருவெருப்பு
தந்திருச்சு. எத்தனையோ நாள் அது
கனவில் வந்து தூக்கம் இல்லாமல்
தவித்திருக்கிறேன். இப்போதும் அது
சில நாள் தொடர்கிறது. அதனால
தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.
எனக்கு பயமாவும் இருக்கு" என்று
தவிப்புடன் கூறினாள் மது.

"புரிகிறது. ஆனால் இப்படி தவிக்கும்
அளவிற்கு ஒன்றும் இல்லை என்று
நான் சொல்ல வரவில்லை. உன்
இடத்தில் இருந்து பார்த்தால் தான்
தெரியும். ஆனால் அதை மறந்து விடு
மதுமிதா. ஒரு வாழ்க்கை இருக்குல
எல்லாருக்கும். அதை நீ வாழ
வேண்டாமா?" என்று புரிய வைக்கும்
எண்ணத்துடன் பேசினான் கார்த்திக்.

"எனக்கு என்று ஒரு வாழ்க்கை
இருக்கு தான். நான் இல்லை என்று
சொல்லவில்லை.. ஆனால் என்னால்
நார்மல் கப்பில்ஸ் மாதிரி இருக்க
முடியும்னு தோனலை" என்று
அவனிடம் கூறினாள்.

"மதுமிதா ஒரு விஷயத்தைப்
புரிஞ்சிக்கோ. நான் உன்ன அந்தக்
கடந்த கால விஷயத்தில்
பாராட்டத்தான் செய்வேன்.. நீ தப்பிச்சு
வந்ததும் இல்லாம அவனை
அடிச்சுட்டுதான் வந்திருக்க.. எனக்கு
புரியுது நீ என்ன மாதிரியான
கஷ்டத்தை அனுபவிச்சிருக்கன்னு..
என்ன பொருத்த வரைக்கும் இஷ்டம்
இல்லைனா மனைவியா இருந்தாக்
கூடத் தொடக்கூடாது என்று தான்
நினைப்பேன்.. எனக்குத் தெரிந்து உன்
பதினாறு பதினேழு வயதில் அந்த
சம்பவம் நடந்திருக்கு என்று
நினைக்கிறேன்.. முழுதாக விவரம்
தெரியாத வயதிலேயே தப்பித்து
வந்திருக்கிறாய்.. இது எல்லாப்
பெண்களுக்கு நடக்கும்.. ஆனா அது
எல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல.. பட்
உனக்கு வேற மாதிரி.. நீ ஒரு டாக்டர்..
நீயே இந்த மாதிரி விஷயங்களுக்கு
இப்படி குறுகி உட்காரலாமா? இந்த
மாதிரி நாய்கள் எல்லாப்
பக்கங்களிலும் இருக்கானுக.. அந்த
மாதிரி நாய்களை" என்று பல்லைக்
கடித்தவன்.. பின் கோபத்தை அடக்கி
"அந்தச் சம்பவத்தை மறந்துவிடு
மதுமிதா.." என்றான் அமைதியான
குரலில்.

"தயவு செய்து நான் சொல்ல
வருவதைப் புரிஞ்சுக்கோங்க.
என்னால உ..உங்க கூட...ஒரு ஆணின்
எதிர்பார்ப்புக்கு இருக்க முடியுமானு
தெரியல. என்னால ஓப்பனா சொல்ல
முடியல" என்றாள் மது சங்கடமானக்
குரலில்.

"ஒரு தம்பதி என்றால் தாம்பத்தியம்
என்று மட்டும் இல்லை மதுமிதா..
அதையும் தாண்டி நிறைய உள்ளது.."
என்றான் கார்த்திக்.

"அது எனக்கும் தெரியும்.. ஆனால்
அத்தனைகளில் ஒன்று இல்லை
என்றால் கூட நமது இரண்டு பேரின்
வாழ்க்கையும் முழுமை அடையாது.
அதுவும் இல்லாமல் என்னால் நீங்கள்
அதில் கஷ்டப்பட நேரிடும். எல்லோரும்
சாதாரண மனிதன் தானே. என்
சுயநலத்திற்காக என் குடும்ப
சந்தோஷத்திற்காக நான் ஏன்
உங்களைச் சிரமப்பட வைக்க
வேண்டும் சொல்லுங்க" என்று
அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
 

Yaazhini madhumitha

Well-Known Member
"எனக்கு நீ என்ன சொல்ல வரன்னு
புரியுது மதுமிதா. கல்யாணம் ஆன
உடனே நம்ம வாழ்க்கையைத்
தொடங்க வேணாம். முதலில்
ப்ரண்ட்ஸா இருப்போம். நமக்கு
எப்போ நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட்
பண்ணனும்னு தோனுதோ அப்ப
வாழலாம்" என்றான் கார்த்திக்.

மது யோசித்தபடியே நிற்க "ஏன்
மதுமிதா என் மேல் அந்த விஷயத்தில்
நம்பிக்கை இல்லையா. உன்னிடம்
கல்யாணத்திற்குப் பிறகு எல்லை
மீறிவிடுவேன் என்று பயப்படுகிறாயா"
என்று கேட்டான்.

"சீச்சீ அதெல்லாம் இல்ல.." என்று
டக்கென்று மது சொல்ல கார்த்திக்கின்
முகம் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.

மது ஏதோ சொல்ல வாய் எடுக்க "பார்
மதுமிதா. நமக்கு இதைவிட்டா வேற
வழி இல்ல. நம்ம இரண்டு பேமிலி
சந்தோஷத்திற்காக சொல்றேன். நான்
சொன்னபடியே உன்னிடம்
நடந்துகொள்வேன். இப்போது
இரண்டு குடும்பத்தின் மகிழ்ச்சியும்
உன் கையில் தான் உள்ளது" என்றான்
அழுத்தமானக் குரலில்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அவன்
இரண்டு குடும்பங்களின் மகிழ்ச்சி
என்றதும் அவளால் எதுவும் பேச
முடியவில்லை. கொஞ்ச நேரம்
இருவருமே பேசவில்லை.

"சரி கிளம்பலாம். டைம் இப்பவே
ஐந்திற்கு மேல் ஆச்சு" என்றுவிட்டு
காரை சுற்றி சென்று கார் கதவைத்
திறந்தவன் மது பின் சீட்டின்
கதவைத் திறப்பதைக் கண்டு "நான்
உன் ட்ரைவர் இல்லை மதுமிதா. முன்
சீட்டில் வந்து உட்காரு" என்று
கட்டளையிட மது எதுவும் பேசாமல்
முன்னால் ஏறி அமர்ந்தாள்.

பொள்ளாச்சி செல்லும் வரை
இருவருமே எதுவும் பேசவில்லை.
இருவரும் அவரவர்
சிந்தனைகளிலேயே மூழ்கி
இருந்தனர். பொள்ளாச்சியை
அடைந்தவுடன் "மதுமிதா எல்லாரும்
கோயிலில் இருக்கிறார்கள். நாம்
நேரே அங்கேயே சென்று விடுவோம்.
நீ எதுவும் பேச வேண்டாம். நான்
பேசுவதற்கெல்லாம் 'ஆம்' என்று தலை
ஆட்டிவிடு" என்றான்.

சரி என்று தலையை ஆட்டியவள்,
"பிடிவாதக்காரன்! அன்றும்
அப்படித்தான் பெயரைக் கேட்டு
வாங்கிவிட்டான். இன்றும்
கல்யாணத்திற்கு சம்மதிக்க
வைத்துவிட்டான். நினைத்ததை
சாதித்துவிடுகிறான்" என்று
மனதிற்குள் நினைத்தவள் தானும்
அதற்கு தலை ஆட்டுகிறோமே என்று
அப்போது தான் அவளுக்கு நியாபகம்
வந்தது.

கோயில் வந்ததும் இருவரும் காரில்
இருந்து இறங்கினர். அதற்குள்
பூஜையை முடித்துவிட்டு வெளியே
வந்த இரு குடும்பமும் இருவரையும்
பார்த்துவிட்டது. தன் அம்மாவிடம்
நேரே சென்றவன் "அம்மா எனக்கு
மதுமிதாவை கல்யாணம் செய்து
கொள்ளச் சம்மதம்" என்றான்.
எல்லாரும் ஆனந்தத்தில் மிதந்தனர்.

மேலும் "வந்து ஒரு மாதத்தில்
கல்யாணத்தை வைத்து விடுங்கள்"
என்றான் கார்த்திக். ஒரே மாதத்தில்
கல்யாணம் என்றதும், சற்று
அதிர்ந்தாலும் வெளியே காட்டாமல்
ஏற்கனவே அவன் சொல்லி வைத்தது
போலத் தலையை ஆட்டினாள் மது.
வருண் தனது தமக்கையின் தோளில்
இடித்துக் கேலி செய்ய ஒரு
புன்னகையை மட்டுமே சிந்தினாள்.
சுந்தரமூர்த்தியும் வேலுமணியும்
கைகளைப் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் கார்த்திக்கும் மதுமிதாவும்
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியினர்
காலில் விழுந்து ஆசி வாங்கினர்.

"உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு
வாங்க" என்று ஜானகி சொல்ல "இல்ல
ஆன்ட்டி ஹாஸ்பிடல்ல இருந்து
அப்படியே வந்துட்ட உள்ள போக
முடியாது" என்றாள் மது.

"சரிசரி ... நாங்கள் நாளை மாலை
வீட்டிற்கு வருகிறோம்" என்று ஜானகி
சொல்ல இருவீட்டாரும் அவரவர்
வீட்டிற்குச் சென்றனர்.

மது வீட்டார் வீடு வந்து சேர்ந்த பிறகே
திருமுருகன் திருப்பூரில் இருந்து வந்து
சேர்ந்தார். விஷயத்தை அறிந்து
ரொம்பவும் மகிழ்ந்தார். போய் தன்
நண்பனும் சகலையும் ஆன
சுந்தரமூர்த்தியை அணைத்தவர் தன்
சந்தோஷத்தைப் பகிர்ந்தார். அன்று
அனைவரும் வெகு நேரம் பேசிவிட்டு
உறங்கச் சென்றனர்.

தன் அறைக்கு வந்த மது
ஸ்வேதாவிற்கும் மிதுனாவிற்கும்
கான்பரன்ஸ் காலில் விஷயத்தை
தெரிவித்தாள் மதுமிதா. தோழிகள்
இருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து
விட்டு, ஒரு அரைமணி நேரம்
ஒருவரை ஒருவர் கேலி செய்து
விட்டுப் போனை வைத்தனர்.

தன்னால் அனைவரும் அன்று
மகிழ்ச்சி அடைந்ததை நினைத்து மது
நிம்மதி அடைந்தாள். அந்த
மகிழ்ச்சிக்குக் காரணமானவனை
மனதில் நினைத்து நன்றி சொன்னபடி
உறங்கச் சென்றவள் ஏனோ தூக்கம்
வராமல் படுத்திருந்தாள் மது.

அதே நேரம் மதுவை நினைத்தபடி
அவனது அறை பால்கனியில்
நின்றிருந்தான் கார்த்திக்.
"அழகுதான்" என்று மனதில்
நினைத்தவனுக்கு "ஒரு தடவை
முகநூலில்(facebook) மது ப்ரபோஸ்
செய்த பிறகு அவளது போட்டோவைப்
பார்த்திருக்கிறான்.

அதன் பிறகு முகநூலில் அவளை
ப்ளாக் செய்த நியாபகம் வந்தது
அவனுக்கு. உடனே தன் மொபைலை
எடுத்து முகநூல் சென்று அன்ப்ளாக்
செய்து ப்ரண்ட் ரிக்வஸ்ட்-ஐ
அனுப்பினான். அவளுக்கு ஏன்
தன்னைப் பிடித்தது என்று
யோசித்தவன் பிறகு ஒரு சிகரெட்டைப்
பிடித்துவிட்டு வந்து படுத்துவிட்டான்.

அடுத்த நாள் வழக்கம் போல மது
ஹாஸ்பிடல் சென்று மாலை வீடு
வர, கார்த்திக் மற்றும் அவனது
பெற்றோர் அங்கு இருந்தன.
வந்தவர்களை வரவேற்று விட்டு
டக்கென்று குளித்துவிட்டு ஒரு
சுரிதாரை அணிந்து கீழே வந்தாள் மது.

மது கீழே வரும்போது "அப்போது
வருகிற ஞாயிறு நல்லநாள் தான்
அப்போதே நிச்சயதார்த்தத்தை
வைத்துவிடுவோம்" என்று சுந்தர
மூர்த்தி பேசுவது கேட்டது.

"ம்ம் அதுவும் சரிதான்" என்றார்
வேலுமணி.

கீழே வந்தவளை ராதா சமையல்
அறைக்கு அழைத்துச் செல்ல, உமா
மது கையில் ஒரு காஃபி ட்ரேவைத்
தந்தார்.

"போ மது. போய் எல்லாருக்கும்
கொடுத்துவிட்டு வா" என்றார்.
அன்னை சொன்னது போல
அனைவருக்கும் சிரித்த முகத்துடன்
காஃபியைத் தந்துவிட்டு வந்தவள், ஒரு
போன் வர எடுத்து பேசிவிட்டு கட்
செய்யும் போதுதான் முகநூலில் ஒரு
அறிவிப்பு (notification)
வந்திருந்ததைக் கவனித்தாள்.

கார்த்திக்கைப் ப்ரபோஸ் செய்துவிட்டு
இரண்டு நாட்கள் கழித்து முகநூல்
சென்ற மது அவன் ப்ளாக் செய்ததை
அறிந்தாள். ஆனால் அவனே இன்று
ப்ரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியதைப்
பார்த்தவள் அதை அக்சப்ட்
செய்துவிட்டு சிரித்தபடியே வெளியே
ஹாலிற்கு வந்தாள். அதேநேரம்
ஆபிஸிற்கு போனில் ஒரு
குறுஞ்செய்தி அனுப்பிய
கார்த்திக்கிற்கு, அவனது முகநூலில்
மது ப்ரண்ட் ரிக்வஸட் அக்செப்ட்
செய்த அறிவிப்பைப் பார்க்க அவனும்
புன்னகையுடனே உட்கார்ந்திருந்தான்.
மது சிரித்தபடியே வெளியே வர,
போனைப் பார்த்துவிட்டு கார்த்திக்
புன்னகையுடன் நிமிர... இருவருக்கும்
ஒருவரை ஒருவர் பார்க்க தானாக
புன்னகை மலர்ந்தது. இருவருக்கும்
அன்று ஒரு வித நட்பும் உருவானது.

ஞாயிற்றுக்கிழமை வர
நிச்சியதார்த்தம் எளிமையான
முறையில் இருவீட்டார்களோடு மட்டும்
மது வீட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டு
இருந்தது. மெரூன் கலரில் தங்க
பார்டர் வைத்த பட்டு புடவையில் தங்க
ஜிமிக்கி, ஆரம், வளையல் அணிந்து
மது கீழே இறங்கி வந்தாள். மதுவை
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு
புடவைக் கட்டி இருந்தாள். கீழே வந்த
மது தன் வீட்டினரே தன்னை
வியப்பாகப் பார்ப்பதை உணர்ந்தாள்
நெழிந்தாள். தன் அம்மாவிடம் சென்று
"நல்லா இருக்காமா?" என்று கேட்டாள்.

"மது ரொம்ப அழகா இருக்கே" என்று
மகளைக் கட்டிக் கொண்டார் உமா.

பிறகு நல்ல நேரத்திற்கு
நிச்சயத்தாம்பலத்தோடு வந்து
சேர்ந்தனர் கார்த்திக் வீட்டார்.
மது நினைத்தும் பார்க்கா தருணம்
இது..

நிச்சயதார்த்தம் நன்றாகவே நடந்நு
முடிந்து கல்யாணத் தேதியும்
குறித்தனர். மோதிரம் மாற்றும் போது
கார்த்திக்கும் மதுவும் புன்னகை
மட்டுமே சிந்தினர். பத்திரிகை
அடிப்பது, மண்டபம் பார்ப்பது,
கேட்டரிங்கிற்கு சொல்லுவது என
அனைத்தையும் கலந்து
ஆலோசித்தனர். நிலாவும்
நிலாவுடைய கணவர் அரவிந்தும்
வந்திருந்தனர். அரவிந்தை மதுவிற்கு
அறிமுகம் செய்து வைத்தான்
கார்த்திக். அரவிந்த் கோவை மாநகர
அசிஸ்டெண்ட் கமிஷனராக
இருப்பவன்.

நிச்சய நேரத்தின் போது மதுவால்
நிலாவிடம் சரியாகப் பேச
முடியவில்லை. நிலாவும் தன் அன்னை
ஜானகி சொன்ன வேலையில்
மும்முரமாக இருந்தபடி இருந்தாள்.

"எப்படி இருக்க நிலா? நீ வந்தபோது
சரியாகப் பேச முடியவில்லை.. நீயும்
ஆன்ட்டியிடம் ஏதோ வேலையாக
இருந்தாய்" என்று பேச்சைத்
தொடங்கினாள் மது.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை
அண்ணி.. நானும் நீங்கள் பிசியாக
இருப்பீர்கள்.. மோதிரம் மாத்திய பிறகு
பேசிக் கொள்ளலாம் என்று
இருந்தேன்" என்றாள் நிலா.

"இந்தப் புடவை உங்களுக்கு அழகா
இருக்கு அண்ணி. உங்களைப் பார்த்து
எவ்வளவு வருடம் ஆச்சு. காலேஜ்
சேர்ந்தவுடனே ரொம்ப பிஸி
ஆகிட்டிங்க. ஊரூக்கு கூட அவ்வளவா
வரவே இல்ல" என்ற நிலா "மது
அண்ணியும் நானும் பெயின்டிங்
க்ளாஸ்ல ப்ரண்டஸ் ஆனோம்" என்று
தன் கணவன் அரவிந்த்திடம்
கூறினாள்.

கார்த்திக் தன்னை யோசனையாய்ப்
பார்ப்பதை உணர்ந்த மது "நிலா
இப்போது எத்தனாவது மாதம்?" என்று
பேச்சை மாற்றினாள்.

"இரண்டு மாதம் அண்ணி" என்றாள்
நிலா. கார்த்திக்கிற்கு மது பேச்சை
மாற்றுகிறாள் என்று நன்கு புரிந்தது.
இருக்கட்டும் எவ்வளவு நாள் இப்படியே
இருக்கிறாய் என்று பார்க்கிறேன்
என்று மனதில் நினைத்தான்.
கார்த்திக் அரவிந்த் வருணிடம்
உட்கார்ந்து பேசிக் கொண்டு
இருந்தாலும் மதுவையே கவனித்துக்
கொண்டு இருந்தான். மது நிலாவிடம்
இயல்பாகப் பேசிக் கொண்டு
இருப்பதைக் கண்டவன் 'ஏன்
தன்னிடம் இவ்வாறு முகம் கொடுத்து,
இயல்பாக பேச மாட்டேன்கிறாள்'
என்று எண்ணினான்.

அதற்குள் ராதா வந்து சாப்பிட
அழைக்க அனைவரும் ஒன்றாக
அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு
முடித்துவிட்டு ஜானகி மது அருகில்
வந்து அமர்ந்தார். "அடுத்த வாரம் உப்பு
சர்க்கரை மாற்றி விடலாம்" என்று
பேச்சை ஆரம்பித்தார் ஜானகி. சீர்
விஷயம் பேசும் போது வேலுமணியும்
ஜானகியும் உங்கள் பெண்ணிற்கு
எவ்வளவு செய்ய ஆசைப்
படுகிறீர்களோ அதையே செய்யுங்கள்
என்று சொல்லிவிட்டனர். கல்யாணச்
செலவைப் பாதிபாதியாக இரு
குடும்பமும் ஏற்றுக் கொண்டது.

பிறகு ஜானகி அம்மாளிடம் கிடைத்த
தனிமையில் "என் மேல் உங்களுக்கு
கோபம் இல்லையா ஆன்ட்டி" என்று
மது கேட்டாள். மதுவிற்கு இந்த
விஷயம் உறுத்திக் கொண்டே இருந்த
ஒன்று.. அவருக்கு கோபம்
இருந்தாலும் நியாயமானதும் கூட
என்று நினைத்தாள்.

"என்ன கோபம் மது?" என்று முகம்
மாறாமல் கேட்டார் ஜானகி.

"அதான் ஆன்ட்டி.. உங்கள் மகனை
நான் விரும்புவதாகச் சொன்னது.
உங்களுக்கு என்னிடம் கோபம்
வரவில்லையா" என்று கேட்டாள்.

"முதலில் கொஞ்சம் கோபம் வந்தது
மது. அது நான் கார்த்திக்கின் அம்மா
ஸ்தானத்தில் இருந்து பார்த்தபோது.
ஆனால் நீ என் மகனை நினைத்துக்
கொண்டு வேறு கல்யாணமே
வேண்டாம் என்று நினைத்தாய் பார்..
அப்போது என் மகனிற்காக ஒருத்தி
இப்படி இருக்கிறாளே என்று
கொஞ்சம் கர்வமாக இருந்தது...
அதனால் தான் கல்யாணத்தைத்
தள்ளிப் போட்டுக் கொண்டு
இருந்தவனிடம் பிடிவாதமாகப்
பேசினேன். என் மகனிற்கு கல்யாணம்
ஆக வேண்டும் என்ற சுயநலம் என்றும்
வைத்துக் கொள்ளேன்" என்றவர்
"உன்னை விடவும் மனதில்லை மது.. நீ
கார்த்திக்கிற்கு ஏற்ற துணையாக
இருப்பாய் என்றும் தோன்றியது "
என்று மருமகளின் கையைப்
பற்றினார்.

"தாங்க்ஸ் ஆன்ட்டி.." என்ற மதுவின்
மனம் உறுத்தல் நீங்கி நிம்மதி
அடைந்தது.

"இப்போது தான் கோபம் வருகிறது"
என்று பொய்க்கோபம் காட்டினார்.

"ஏன் ஆன்ட்டி?" என்றாள் மது
புரியாமல் தன் விழியை விரித்தபடி.

"அதென்ன ஆன்ட்டி.. அத்தை என்று
சொல்ல வேண்டியது தானே" என்றார்
குறையாக.

"சரி அத்தை" என்று டக்கெனச்
சொல்லி மாமியாரைச் சிரிக்க
வைத்தாள். அவரிடம் இன்னமும்
பேசிப் பழகினாள். ஏனோ அவரிடம்
சகஜமாகப் பேச முடிந்தது.
இருவருக்குமான உறவில் நல்ல
பிணைப்பும் ஏற்பட்டதை உணர்ந்தாள்
மது.

ஆனால் கார்த்திக்கோடு எப்போது
இவ்வாறு பழக முடியுமோ என்று
யோசிக்க ஆரம்பித்தது மதுவின் மனம்.
 

Nagaspriya

Well-Known Member
இந்த கதை வேறு எதிலும் ஏற்கனவே வந்து உள்ளதா? படித்தது போல் இருக்கிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top