Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது :

முடிவுகள் எடுக்கப் படுவது வேறு! திணிக்கப் படுவது வேறு!

வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ரஞ்சனியின் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்லை. வரும் கண்ணீரை துடைத்து விடுவதே வேலையாகிப் போனது.

பத்து பேசியதில் ஒரு மாதிரி விரக்தியின் விளிம்பில் இருந்தாள். இந்த வருடத்தில் ஒரு நிமிஷம் கூட என்னை புரிந்து கொள்ளவில்லையா.

வீடு வந்ததும் ரஞ்சனியின் அழுத முகத்தை பார்த்து வீடே பதறியது. “என்ன? என்ன ஆச்சு?” என்று சௌந்தரி பாட்டி பதற, அவர் பதறிய விதத்தில் “ஏதாவது இழுத்து விட்டுக்காதீங்க பாட்டி அமைதியா இருங்க!” என்று ஈஸ்வர் அதட்டினான்.

ரஞ்சனி ஈஸ்வரை விடுத்து மலர் வர்ஷினியிடம் “என்ன ஆச்சு வர்ஷினி?” என,

வர்ஷினி உடனே சொல்லி விட்டால் “பத்துண்ணாக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம், அதுல அண்ணா இவர் மேலே தப்பு சொன்னாங்களா, அது அப்படியே பெருசாகி பத்துண்ணா தேவையில்லாம தப்பா பேசி, இவருக்கு கோபம் வந்து அண்ணியை கூட்டிட்டு வந்துட்டாங்க” என கதை சொல்ல,

“என்ன?” என்று அதிர்ந்தார் மலர். ஆம்! வர்ஷினிக்கு அது கதை சொல்வது போல தான்.. அந்த சூழ்நிலைகளின் தாக்கம் புரிந்தாலும் அது அவளிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

முழு விவரமும் தெரியாத போதும் “என்னவாயிருந்தாலும் பேசி தானே தீர்த்திருக்கணும்? உன்னை யாருடா கூட்டிட்டு வர சொன்னா? உன்னை யார் முடிவெடுக்க சொன்னா? அடங்கவே மாட்டியா நீ! என்ன ஏதுன்னு எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கமாட்டியா?”

“என்ன கேக்கறது? என்ன கேக்கறது? நம்ம பணப் பிரச்சனைக்காக தான் இவ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்றான், அதை கேட்டுகிட்டு என்னை வரச் சொல்றீங்களா முடியாது! அதான் ஃபைனான்ஸ் பேப்பர்ஸ் இவளுக்கு எழுதிக் கொடுத்ததை கிழிச்சி போட்டுடேன், நாம பணத்தை திரும்பக் கொடுக்கிற வரை இவளை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டேன்” என சொல்ல,

வீடே வாயடைத்து போனது, “என்ன பத்திரத்தை கிழிச்சு  போட்டுட்டியா, பணத்தை திரும்பக் கொடுத்த பிறகு அனுப்பிவியா?” என்ற மலர் இடிந்து போய் அமர்ந்து விட்டார். அதற்குள் ரூபா  விஷயத்தை சொல்லியிருக்க, ஜகனும் நமஷிவாயமும் வீடு வந்து கொண்டிருந்தனர்.

வீட்டில் அப்படி ஒரு அமைதி.. மதிய உணவு உண்ணும் நேரம் கூட  ஆகவில்லை, “ஐயோ, திரும்ப பணப் பிரச்சனையா, இன்னும் ஜகனால் ஆரம்பித்த பிரச்சனைகள் முடியவில்லையா” எல்லோரையும் விட ரூபா இன்னும் பயந்து போனாள்.

“இந்த ஒரு வாரமாக தான் ஜகன் சற்று சிரித்துப் பேசுவதே, மீண்டும் தனக்குள் சுருங்கிக் கொள்வானே.. ஏன்? ஏன் தங்களை இப்படி பிரச்சனைகள் தொடர்கின்றது? எப்போது இது தீரும்!” என்று அவளுக்கும் அப்படி ஒரு அழுகை பொங்க, தன்னுடைய மாமியாரிடம் “பிரணவியை அழைசிக்கங்க அத்தை!” என்று சொல்லி ரூமின் உள் முடங்கிக் கொண்டாள்.

நமஷிவாயம் வர, அவரிடமும் விஷயம் சொல்லப்  பட, அவருமே ஈஸ்வரிடம் “அவங்க தான் பணத்தை ஒரு விஷயமாக்கினாங்கன்னா நீ என்ன செய்து வெச்சிருக்க.. நீ பணத்தை குடுத்த பிறகு தான் திரும்ப அனுப்புவேன்னு சொல்லியிருக்க, நீயும் அதே தப்பை தான் செஞ்சிருக்க” என்று ஈஸ்வரை கண்டித்தவர்,

“பத்திரம் நான் எழுதிக் கொடுத்தேன், அதை நீ எப்படி கிழிச்சுப் போடலாம். அவளை அனுப்ப மாட்டேன்னு நீ எப்படி சொல்லலாம்” என்று அவரும் தன் பங்கிற்கு கோபப்பட.. 

“ஓஹ்! உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் ஓடி வரணும்! ஆனா நான் பிரச்சனை பண்ணினா நீ யார் செய்யறதுக்குன்னு என்னை கேள்வி கேட்பீங்க!” என்று ஈஸ்வர் எகிற..

இவனிடம் இப்படி பேசினால் வேலைக்கு ஆகாது எனப் புரிந்து, “டேய், புரியாம பேசாதே! இது ரஞ்சனி யோட வாழ்க்கை.. அதுல நீ முடிவெடுக்கக் கூடாது!” என்று அவர் பொறுமையாகவே பேசினார்.

அப்போதும் ஈஸ்வர் முறைத்து நிற்க, “விடு! இதை நீ விட்டுடு! நான் பார்த்துக்கறேன்! நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்! நான் கொண்டு போய் விடறேன்! நீ இதுல வராத, பணம் என்ன பண்ணலாம்னு பிறகு யோசிக்கலாம்!”

வர்ஷினி இருப்பதையும் பொருட்படுத்தாது “என்ன? கொண்டு போய்விடுவீங்களா! முடியாது! கண்டிப்பா  நான் விட மாட்டேன், என்ன நினைச்சிருக்கான் அவன், அவங்கப்பா பொண்ணு கேட்டப்போவும் அப்படி தான் கேட்டார். அப்போவே பெரிய ப்ராபளம் ஆச்சு, திரும்பவும் அதையே இழுக்கறாங்க! எப்படி நான் அதை விட.. எத்தனை தடவை சொல்றது.. என்ன அவங்க பெரிய ஆளுங்க, நாம குறைஞ்சு போயிட்டோம், அவங்க நம்ம குடும்பத்துக்கு ஒன்னும் சமதை இல்லை.  இன்னைக்கு வந்த பணம் தானே! அதான் பணத்தை கொண்டே எல்லாம் பார்க்கறாங்க!” என கத்தினான்.

“அந்தப் பணத்தை நம்மளால புரட்ட முடியாதா? ஆறு மாசம்.. நான் சரி பண்றேன் எல்லாம்.. அப்போ ஒரு மாசத்துல பணம் குடுக்கணும்னு பிரஷர் இருந்ததால, என்னால அதிகம் யோசிக்க முடியலை! என்கிட்டே விடுங்க! இந்த பண விஷயத்தை நான் சரி பண்றேன்!” என,

“பணத்தை என்னவோ பண்ணு விஷ்வா! அதுக்காக இவளை கூட்டிட்டு வந்தது சரியில்லை!” என்று பெரியம்மாவும் சொல்ல,

“அதெல்லாம் முடியாது! அப்போ என்னை யாரும் நம்பலையா? ஆறு மாசம் தானே அனுப்பிடலாம். உடனே அனுப்பினா, திரும்ப நாம குடுக்க முடியாதுன்ற பயத்துல அனுப்பறோம்ன்னு சொல்வான்” என ஈஸ்வர் அவன் பிடியிலேயே நிற்க..

யார் பேச்சும் காதில் ஏற்றும் நிலையிலே இல்லை அவன்.. அவன் முகத்தில் தெரிந்த ஆவேசத்திலும் ஆக்ரோஷதிலும் வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

“எப்படி அதை சரி செய்யலாம்” என நமஷிவாயம் யோசிக்க..

வர்ஷினி எல்லோரையும் வேடிக்கை பார்த்திருந்தாள். இந்த மாதிரி சூழல்கள் எல்லாம் அவளுக்கு மிகவும் புதிது அதையும் விட, தன்னால் தான் இது ஆரம்பித்ததோ என்றும் இருக்க, மிகுந்த குற்ற உணர்ச்சியாகப் போயிற்று. முன்பும் அவளால் தான் பத்து ரஞ்சனியை அடிக்கும் நிலை வந்தது.  இப்போது அவள் பேசப் போய்  தான் ஏதேதோ ஆகிவிட்டது.

ரஞ்சனி “தானே திருமணம் செய்து கொண்டதால், இப்படியாகிட்றோ” என நினைக்க… “என்ன வளர்த்து வைத்திருக்கின்றேன் நான் மக்களை” என்று மலர் குற்ற உணர்ச்சிக்குப் போக.. “தன் மகனால் தானே” என்று பெரியம்மா நினைக்க, “தன்னால் தானே!” என்று ஜகன் நினைக்க..    

மொத்தத்தில் வீடே குற்ற உணர்ச்சியில் இருக்க…

அதன் சாயல் எதுவும் இன்றி அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்கு அப்போதே போய் விட்டான் ஈஸ்வர்…

“எப்படி நான் இவ்வளவு சொல்லியும் இவர்கள் பணத்தை இழுத்து விட்டார்களே!” என்ற ஆதங்கம் தான் அவன் மனதில், சிந்தனைகளும் அதனை ஒட்டியே.

மதிய உணவு உண்ணும் எண்ணம் யாருக்கும் இருப்பதாய் கூடத் தெரியவில்லை.

இப்படி ஓடிக் கொண்டிருக்க, பத்துவும், தாத்தாவும், கமலம்மாவும் அங்கே வந்தனர். அவர்கள் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. வீடு உடனே பரபரப்பாக..

“வாங்க!” என்று நமஷிவாயம் எதையும் முகத்தில் காட்டாது இன்முகமாகவே வரவேற்க, அதையே வீட்டினர் அனைவரும் பின்பற்றினர், ஈஸ்வர் மட்டுமே இறுக்கமாய் முகத்தை வைத்து “வாங்க” என்றான்.

வர்ஷினி இதை விழியகற்றாமல் பார்த்திருந்தாள் “என்னடா நடக்குது” என்பதை போல.. ஒன்று மனதில் இருப்பதை பேச மாட்டாள், அல்லது இருப்பதை உள்ளது உள்ளபடி பேசிவிடுவாள்.. இந்த உறவுகள், அதன் சம்ப்ரதாயங்கள், பூச்சு வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு புதிதே. 

“ரஞ்சனி அண்ணியை பேசியிருக்காங்க, அவங்க கிட்ட கோபப்படாம இப்போ வான்னு சொல்றாங்க!” என்று பார்த்திருக்க..

“வர்ஷினி என்ன பார்த்திருக்க? போ! போய்  தண்ணி கொண்டு வா!” என மலர் அதட்ட, “சரி அத்தை” என்று உடனே உள்ளே சென்றாள். அந்த நேரத்திலும் எதற்கு இப்படி வர்ஷினியை அதட்டுகிறார்கள் என்று தான் பத்துவிற்கு தோன்றியது. அது உரிமையான அதட்டல் என்று அந்த முட்டாளுக்கு புரியவில்லை.

தாத்தா நேரடியாக “என்னவோ ஒரு பதட்டம், கோபம், பத்து தப்பா வார்த்தைகளை விட்டுட்டான் மத்தபடி மனசால கூட அவன் அப்படி நினைக்க மாட்டான். அந்த கோபத்துல ஈஸ்வர் ரஞ்சனியை அழைச்சிட்டு வந்துட்டான்.. நீங்க பொண்ணை திரும்ப அனுப்பி வைக்கணும்.. என் பையன் இறந்து பத்து நாள்ல இப்படி ஆகறது நாங்களே எதிர்பாராதது, வேணும்னா பத்துவை நான் மன்னிப்பு கேட்க சொல்லட்டுமா?” என்றார் தன்மையாக..

தேர்ந்த அரசியல்வாதி வேறெப்படி பேசுவார் என்று தான் ஈஸ்வருக்கு தோன்றியது.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க!” என்று அவசரமாக மறுத்த நமஷிவாயம் “இது சின்ன பசங்க சண்டையா நினைச்சு விட்டுடுவோம்.. நீங்க எப்போ வேணா ரஞ்சனியைக் கூட்டிட்டு போங்க!” என்று அவர் பட்டென்று சொல்ல,

ஈஸ்வரின் முகம் கோபத்தில் மாறுவது அங்கிருந்த அத்தனை பேருக்குமே தெரிந்தது. ஆனாலும் அப்பாவை மறுத்து எதுவும் அவன் பேசவில்லை.

நமஷிவாயதிற்குமே இது தன் பெண்ணிற்கு கிடைத்த சரியான மரியாதை அல்ல என்று தெரியும்.. ஈஸ்வர் ஒரு வகையில் “போங்கடா” என்று ரஞ்சனியை அழைத்து வந்தது ஒரு தகப்பனாக அவருக்கு பெருமை தான்..

ஆனால் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க.. இப்போது தளைந்து போய் விடுவது தான் சரி என்று தோன்றியது. ராஜாராம் இறந்து பத்து நாட்கள் தான் ஆகின்றது. அங்கிருந்து பெண் வேறு எடுத்திருக்க சண்டை போடுவது முறையாகாது என புரிந்து, அதுவும் அவர்களாக மன்னிப்பு வேறு கேட்கும் போது விட்டுவிடுதல் சரி என்று தோன்ற, அழைத்துச் செல்லுங்கள் என பேசினார்.

ஆனால் ஈஸ்வர்.. அவனை மறந்து போனார்.. முகம் இறுக நின்றிருந்தான்…

தண்ணீர் கொண்டு வந்தவளிடம், “அவங்க வேற என்ன இந்த நேரத்துல குடிப்பாங்க, பார்த்து கொண்டு வா!” என்று மலர் சொல்ல..

“எனக்கு தெரியாதே அத்தை!” என்றாள் வர்ஷினி அவரிடம் மெதுவாக..

“என்ன தெரியாதா?” என,

“நிஜம்மா தெரியாது!” என்றாள். ஆம்! அவளை தானே எல்லோரும் கவனிப்பார், அவள் யாரை கவனித்து இருக்கின்றாள்.  

பின்பு ரஞ்சனியிடம் “போ ரஞ்சனி, குடிக்க என்னன்னு பார்த்து வர்ஷினி கிட்ட குடுத்தனுப்பு” என்று மலர் சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர்..    

வர்ஷினி ரஞ்சனியின் முகத்தை பார்த்து பார்த்து திரும்ப…

“எதுக்கு இப்படி பார்க்கிற?” என்று ரஞ்சனி கேட்கவும்,  

“சாரி அண்ணி! அண்ணா பேசினது தப்பு தானே! என்னால தான் திரும்ப சண்டை” என,

“உங்கண்ணா பண்ற முட்டாள் தனத்துக்கு நீ என்ன பண்ணுவ? விடு!” என்றவள், தேவையானதை வேலைக்காரர்களிடம் சொல்லி வாங்கி வர்ஷினியிடம் குடுத்து அனுப்பிய போதும் வெளியே வராமல் அங்கேயே நின்று கொண்டாள். மனம் ஆய்ந்து ஓய்ந்து போனது.   

பத்துவின் கண்கள் ரஞ்சனியை தான் தேடியது… செய்தது மிகப் பெரிய தவறு என்று புரிந்திருந்தான்.. “என்ன ஆகிற்று எனக்கு? இந்த ஈஸ்வரை இழுத்து என்னை நானே கீழே இறக்கிக் கொண்டேனே! அதையும் விட ரஞ்சனியை இறக்கி விட்டேனே!  அதையும் விட பேசிய வார்த்தைகள்.. எப்படி தீர்ப்பேன் அதை. சே! இவர்கள் அனுப்புகிறேன் என்று சொன்னாலும், அவள் வருவாளா? அப்படி வந்தாலும் ஈஸ்வர் விடுவானா?” என்றே பார்த்திருந்தான்.

பின்பு மாறி மாறி தாத்தாவும், கமலம்மாவும், பத்துவின் சார்பாக பேச, “இவ்வளவு ஏன் விளக்கம் குடுக்கறீங்க விட்டுடுவோம்! ஈஸ்வர் செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன்” என்று நமஷிவாயம் சொல்ல..

அதற்கு மேல் ஈஸ்வரால் அங்கு நிற்க முடியவில்லை.. தன்னுடைய எதிர்ப்பை வார்த்தையால் தெரிவிக்காமல் மாடி ஏறி தன்னுடைய ரூமின் உள் புகுந்து கொண்டான்.

“என்ன நான் தவறு செய்தேன்? இந்த அப்பா இப்படி பேசுகிறார்” என்று கோபம் கனன்றது மட்டுமல்லாது, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.   

மலர் உள்ளே வந்து ரஞ்சனியிடம் “கிளம்பறியா ரஞ்சனி” என, நிமிர்ந்து முகத்தை பார்த்த மகளிடம், “நீயா அமைச்சிக்கிட்ட வாழ்க்கை, இதுல தோத்துப் போயிடாத, விஸ்வா இந்த விஷயத்துல தோத்துப் போனா போயிட்டு போறான்! அவன் வார்த்தையை கடைபிடிக்கணும்னு ஒன்னும் இல்லை”

“கண்டிப்பா உன் வீட்டுக்காரர் பேசினது தப்பு தான்! ஆனா அதை அவர் உணரணும், நாம உணர்த்தி பிரயோஜனமில்லை, பணம் விஸ்வா சொன்ன மாதிரி திரும்பக் குடுத்துக்கட்டும். ஆனா நீ  இங்க இருக்காத, கிளம்பிரு, பிரச்சனைகளை மேல மேல வளர்க்க வேண்டாம்!”

“நீ போய் எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா குடும்பம் நடத்துன்னு நான் சொல்லலை, சரியோ தப்போ அங்க இருந்து சண்டை போடு என்ன..?” என நிறுத்தியவர்,

“இந்த ஒரு தடவையாவது அம்மா சொல்றதை கேளு!” என வற்புறுத்தியே பேசினார்.

“விஸ்வா…” என ரஞ்சனி இழுக்க,

“அவனை நான் பார்த்துக்கறேன்! முடியலையா.. என்ன நடக்குதோ நடக்கட்டும்!” என்றார் மகனை புரிந்தவராக.. நிச்சயம் கோபப்படுவான், ஆடித் தீர்த்து விடுவான், தங்களோடு பேசாமல் கூட இருப்பான்” என்று எல்லாம் அறிந்தே சொன்னார். ஆனால் மகன் செய்யப் போவதை அவர் அறியவில்லை.

“தப்போ? சரியோ? நீ உன் வீட்டுக்காரரோட தான் நிற்கணும்! இனிமே விஸ்வா உனக்கு இரண்டாம் பட்சம் தான்! புரிஞ்சதா? உன் முடிவு உனக்கு போக விருப்பமில்லைன்னா வேற, ஆனா அவன் சொன்னான்னு நீ போகாம இருக்காதே!” என மீண்டும் சற்று அழுத்தியே கூறி, “கிளம்பு” என்று மகளை அழைத்து வந்தார்.

சிறிது நேரம் பேசியிருந்தவர்கள் ரஞ்சனியை அழைத்துக் கொண்டு கிளம்ப, “நான் போய் விஸ்வா கிட்ட சொல்லிட்டு வர்றேன் மா!” என்ற போதும் வீட்டினர் விடவில்லை,

“நீ கிளம்பு! நாங்க சொல்லிக்கறோம்!” என்று அவளை அனுப்பி விட்டனர்.

இந்த பத்துவாவது போய் பேசியிருக்க வேண்டும் அவனும் செய்யவில்லை. ரஞ்சனி வந்தால் போதும் எதுவாகினும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து சென்று விட.. ஈஸ்வர் ரஞ்சனியின் அண்ணன் என்பது ஒரு புறம் இப்போது வர்ஷினியின் கணவன் அல்லவா அவனுடைய கோப தாபங்கள் வர்ஷினியையும் சேர்ந்து தானே பாதிக்கும். அதை மறந்து போனான்.

விளைவு வர்ஷினிக்கு பிறந்த வீடு விடுமுறைக்கென்று இருந்தது, இப்போது முற்றிலும் இல்லையென்றாக, புகுந்த வீடும் இல்லை என்று சொல்லி விட்டான் ஈஸ்வர். அன்று மாலையே யார் சொல்லியும் கேட்காமல், நிற்காமல், நான் தனியாகப் போகிறேன்.. என்று கிளம்பிவிட்டான்.

“டேய் விஸ்வா” என்று மொத்த வீடும் அலறிய போதும், “இவ்வளவு தான் இந்த வீட்ல எனக்கு மரியாதை இல்லையா? எதுக்கு போய் மன்னிப்பு கேட்டார். நான் என்ன தப்பு பண்ணினேன்?”

“அவ கல்யாணம் பண்ணி வந்த போதே அதை ஏத்துக்க வேண்டாம் சொன்னேன். அப்படியிருந்திருந்தாலாவது கொஞ்சம் அவனுக்கு பயம் இருக்கும். ரஞ்சனிக்காக அவளை விட்டுக் கொடுக்க முடியாம நாம ஏத்துகிட்டோம். அவன் பணத்துக்குன்னு முடிவு பண்ணிட்டான். என் பேச்சை அப்போவும் கேட்கலை இப்போவும் கேட்கலை”

“டேய் நம்ம பொண்ணு வாழ்க்கைடா” என்று பாட்டி பேச, 

“ஓஹ், நீங்க மட்டும் தான் அங்க பொண்ணு குடுத்திருக்கீங்களா, அவங்க எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கலையா?அப்பா இல்லாத பொண்ணுன்னு அவங்க வீட்ல காட்டிட்டு போயிட்டாங்க” என்று கேள்வி எழுப்பி, உடனே வீட்டை விட்டு அப்போதே வர்ஷினியை அழைத்துக் கொண்டு சென்றான்.  

மலரும் நமஷிவாயமும் இடிந்து போய் அமர்ந்தனர். ரூபாவும் ஜகனும் என்ன பேசியும் ஈஸ்வர் கிளம்பி விட்டான்.

என்ன ஏதென்று காரில் செல்லும் போது ஈஸ்வரின் முகத்தையே வர்ஷினி பார்த்திருந்தாள். திரும்ப ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டது போன்ற உணர்வு. ஆம்! இனி அவளுக்கு வீடு?

அவளை உணர்ந்தவனாக திரும்பிப் பார்த்தவன், “நான் இருக்குற இடம் தான் உனக்கு வீடு! நாம நம்ம வீட்டுக்கு போவோம்!” என,

அப்போதும் பார்திருந்தவளிடம், “என்ன சொல்லு?” என,

“கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோ? ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்ணிட்டீங்களோ” என மனதில் பட்டதைப் பேச,

“இது தான் நான் வர்ஷி.. இப்படிதான்.. நான்”

“நான் எதுக்காவது பணிஞ்சு நிற்கணும்னா அது உன்கிட்ட மட்டும் தான். அது என்னோட முந்தைய செய்கைனால. மத்தபடி என் வீட்டு ஆளுங்க யார் கிட்டயும் கிடையாது.. அந்த பணப் பிரச்சனையினால பாதிக்கப்பட்டது யார். யாரும் கிடையாது! நான் மட்டும் தான்!”

“அவங்களோட வாழ்க்கை முறையில என்ன மாற்றம் வந்திருக்கு, எல்லோரும் அப்படியே சொகுசா தான் இருக்காங்க, ஒரு கஷ்டமும் கிடையாது. ஆனா அந்த ப்ரச்சனை வெடிச்சிருந்தா, ஏமாத்துக் குடும்பம் ஆகியிருப்போம். யார் கிட்டயும் தலைநிமிர்ந்து பேசி என்ன.. பார்க்கக் கூட முடியாது.. அவ்வளவு கேவலமா போயிருப்போம்!”

“அந்த நிமஷம்.. அந்த நேரங்கள்… எவ்வளவு பிரஷர்ல இருந்தேன் தெரியுமா நான். உன்னோட பிரச்சனையும் கூட அப்போ சேர்ந்துட்டதால அதுல இருந்து கொஞ்சம் மாறினேன்.  இப்போவும் நான் தான் ஒன்னுமில்லாம நிக்கறேன். ரஞ்சனியை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதுன்னு தூக்கி கொடுத்தேன். சரணும் பிரணவியும் இதுல பாதிக்கக்கூடாதுன்னு ஜகனோடது எதுவுமே குறைக்கலை.  இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை”

“அது என்னோட சொத்துன்னு எவ்வளவு ஆணவத்தோட திரிஞ்சி இருந்தேன் தெரியுமா! இப்போ அது என்னோடது இல்லை! நான் பேசி பழகற அத்தனை பேர் முன்னாடியும் எவ்வளவு கீழ போயிட்டேன் தெரியுமா? ஆனாலும் ஒன்னுமில்லாம கெத்தா காட்டிக்கறேன்”

“ஆனா உணமையில் ஒன்னுமில்லாம தான் போயிட்டேன்! எவ்வளவு அகம்பாவத்தோட இருந்தேன் தெரியுமா? யாரோ செஞ்ச தப்புக்கு நான் ஒன்னுமில்லாம போயிட்டேன். எதுக்காக செஞ்சேன், என்னோட குடும்பத்துக்காக தானே! ஆனா எங்கப்பா மன்னிப்பு கேட்கறார்.. ரஞ்சி என்கிட்டே சொல்லாம போயிட்டா” என உணர்ச்சி பிழம்பாய் பேசியவனையே,

வர்ஷினி பார்த்திருந்தாள், இது எல்லாம் அதிகம் புரியவேயில்லை அவளுக்கு.. இது எல்லாம் அவளுக்கு காட்சி பொருள், அதற்கு எப்படி ஒரு பிரதிபலிப்பை கொடுப்பது என்றோ, சமாதானம் சொல்வது என்றோ அவளுக்கு தெரியவேயில்லை.

“நீ சொல்லு! பத்துக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? ஆனா சமீபமா அவன் என்னை இழுக்காம இருக்கலை. அப்போ என்கிட்டே பணம் இல்லைன்னு தானே அவன் அப்படி நடந்துக்கறான். இவ்வளவு நாளாவும் நான் இப்படி தான், ஆனா அவன் முன்னாடி நின்னதே கிடையாது. இப்போ நிக்கறான், என்னை குற்றம் சொல்றான். அப்போ என்கிட்டே பணம் இல்லைன்னு தானே!”  

ஆனால் ஈஸ்வரின் வருத்தத்தை அவளால் சகிக்க முடியவில்லை. அவனின் கை பிடித்துக்கொண்டாள். உணர்வு வந்து வர்ஷினியை பார்த்தவனின் கண்களில் பட்டது அந்த நீல நிறக் கண்களின் கலவரம் மட்டுமே!

“ஹேய்! நீ எதுக்கு இவ்வளவு வொர்ரி பண்றே பேபி!” என,

“நான் ஒரு கையெழுத்து போட்டிருந்தா எதுவும் ப்ராப்ளம் இல்லை தானே!” 

“நீ கையெழுத்து போடாதது ப்ராப்ளம் இல்லை, பத்து என்னை இழுத்தது ப்ராப்ளம்… அதுக்கு ரீசன் அவங்களுக்கு உன்னை தெரியலை, நீ கேட்பன்னு அவங்க யோசிக்கவே இல்லை. விடு! எதுன்னாலும் பார்த்துக்கலாம்!”

அப்போதும் அவளின் முகம் தெளியாததைக் கண்டு..

“கடவுள் எனக்கு குடுத்த குடும்பத்துக்காக நான் இவ்வளவு விட்ட போது… நானா எடுத்துக்கிட்ட உனக்காக எவ்வளவு செய்வேன். விடு பார்த்துக்கலாம்!” என்றவனின் குரலில் இருந்த உறுதி.. ஆணவக்காரன் தான் நான் என்று சொல்லாமல் சொல்லிய போதும்,

அந்த வார்த்தைகள் வர்ஷினிக்கு மிகுந்த தைரியத்தை கொடுத்தது.  மெல்ல மெல்ல அவளின் தைரியமாக மாறிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

   நானென்பது… நீயல்லவோ!

Advertisement