Advertisement

அத்தியாயம் மூன்று :

வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது                                                                அந்த அந்த நிமிட தேவைகளே!!!

ஐஸ்வர்யாவிடம் கத்திவிட்டான் ஈஸ்வர், ஏன் இப்படி பேசுகிறோம் என்று உள்ளுக்குள் ஒரு சிறு உறுத்தல் இருந்தாலும் சமாதானம் செய்ய பிடிக்கவில்லை. எத்தனை தடவை சொல்வது என்ற எண்ணம் தான்.  ஆனாலும் அழுவாள் என்று அனுமானித்தவன்,

“உன்னோட ப்ரொஃபஸன்க்கு இது கொஞ்சமும் மேட்ச் ஆகாது. அதுக்கு நீ வேற ஏதாவது கோர்ஸ் படிச்சிருக்கணும்” என்றான் பொறுமையாக.

அப்போது பார்த்து அவன் அருகில் ரஞ்சனி வந்து அமர, அவளிடம் வாயசைவில் “ஐஷ், டார்ச்சர் பண்றா” என்றான்.

“நீ திட்டியிருப்ப?” என்று ரஞ்சனி சொல்ல,

“அவ செய்யறதுக்கு திட்டாம கொஞ்சுவாங்களா” என்றான்.

அதைக் கையில் வாங்கிய ரஞ்சனி “சொல்லு ஐஷ்” எனவும்,

“ஒன்னுமில்லை” என்று அவள் சொல்லிய விதத்திலேயே அழுகிறாள் என்று தெரிந்தது.

“நான் பொறந்ததுல இருந்து இவனைப் பார்க்கிறேன், இப்ப சில வருஷமா நீயும் பார்க்கிற, அவனோட குணமே அப்படி, இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு அப்செட் ஆகாத, எனக்கு தெரிஞ்சு விஷ்வா இந்த உலகத்துல கொஞ்சம் பொறுமையா தன்மையா அக்கறையோட பேசற ஓரே ஜீவன் நீதான், எங்க கிட்ட அதுக்கு மேல கத்துவான். புரிஞ்சு நடந்துக்கோ” என்றாள்.

“ம், சரி” என்றவள் “நான் அப்புறம் கூப்பிடறேன்” என்று வைத்து விட்டாள்.

“என்ன விஷ்வா?” என்ற தங்கையைப் பார்த்து,

“ப்ச், நைட் பேசறேன், காலையில பேசறேன், இங்க வந்து மெசேஜ் பண்றேன், திரும்ப கூப்பிட்டு என்ன பண்றன்னு கேட்டா”

“எனக்கு வேற வேலையே இல்லையா? இவ பின்னாடி சுத்தறது தான் வேலையா? பல தடவை நல்ல மாதிரி சொல்லிட்டேன், திட்டிட்டேன், கெஞ்சிட்டேன், ஏன் கொஞ்சிக் கூட சொல்லிட்டேன், இதுக்கு மேல என்ன பண்ண? இப்போவே இப்படின்னா! வாழ்க்கை முழுமைக்கும் என்ன பண்ணன்னு பயம் வருது” என்றான் சீரியசாக.

ஈஸ்வர் வெளியில் சொல்லிவிட்டான் ரஞ்சனி சொல்லவில்லை, ஈஸ்வரின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் ஐஸ்வர்யாவால் ஈடு கொடுக்கவே முடியாது. அது   ரஞ்சனியை விட நன்கு அறிந்தவர் எவரும் கிடையாது. ஏனென்றால் ஈஸ்வரையும் நன்கு அறிவால், ஐஸ்வர்யாவையும்.

ஐஸ்வர்யா ரஞ்சனியின் தோழி, எம் பி பி எஸ் படிப்பில் கூட படித்தவள் என்பதோடு கூடவே ரூபாவின் தங்கை, அப்படி உறவுக்காரர்கள் கூட. எப்படியோ சுற்றி வளைத்து ரூபாவின் வீட்டினர் இவர்களுக்கு உறவு, அப்படி வந்த சம்மந்தம் தான் அவர்கள். ஈஸ்வரின் வீட்டினருக்கு அவ்வளவு திருப்தியில்லை, ஏனென்றால் ரூபாவின் அப்பாவைப் பற்றி அவ்வளவு நல்ல அப்பிராயம் ஈஸ்வரின் தந்தைக்கும் அவனின் பெரியப்பாவிற்கும் இல்லை.

இவர்கள் வேண்டாம் என்று நினைக்க ஜகனுக்கு ரூபாவைப் பிடித்து விட்டதால் அவள் தான் வேண்டும் என்று நின்றான்.

ஈஸ்வர் தான் துணை நின்றான், “அப்பா ரூபாவை எனக்குத் தெரியும், என்னோட கிளாஸ் மேட் ஸ்கூல்ல நல்ல பொண்ணு” என்றான். ஆம் ரூபா அவனின் பள்ளி வகுப்புத் தோழி சிறு வயதில் இருந்தே, பல வருடம் ஒன்றாகப் படித்தவர்கள் அதனால் அவனுக்கு நன்கு தெரியும்.

ஜகன் அப்படி ஒன்றும் பெரிய புத்திசாலி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ரூபா அப்படிக் கிடையாது மிகுந்த புத்திக் கூர்மை உடையவள், நல்ல அழகியும் கூட. அதனால் அண்ணனுக்கு இப்படி மனைவி அமைந்தால் அவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தான் அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் சொன்னான்.

ஈஸ்வர் வயதில் சிறியவன் என்றாலும் எப்போதும் மிகவும் பொறுப்பானவன், ஆட்களை தெரிந்தவன் என்பதால் சரி என்று திருமணத்தை நடத்தினர்.

ஈஸ்வர் செய்த முட்டாள் தனம் அவன், ரூபாவை மட்டும் தான் பார்த்தான், பெண் தானே நம் வீட்டிற்கு தானே வரபோகிறாள் என்பது போல. அவன் அதிகம் கருத்தில் கொள்ளாத அவளின் தந்தை பிரகாசம்… ஈஸ்வரின் புத்திசாலித்தனதிற்கும் அப்பாற்பட்டவர்.

அவருக்கு மூன்று மக்கள், ரூபா பெரியவள், அதற்கு அடுத்து அஷ்வின், அதற்கு பிறகு தான் ஐஸ்வர்யா, வரிசையாக இருபத்தி ஐந்து, இருபத்தி நான்கு, இருபத்தி மூன்று வயதில் இருந்தனர்.

அஸ்வின் அவனின் அப்பாவிற்கும் மேல், ஆண்மக்கள் இப்படி இருக்க பெண்கள் ரூபா, ஐஸ்வர்யா அவளின் அம்மா மூவருமே நல்ல குணத்தை உடையவர்கள்.

அந்த குணமே ஐஸ்வர்யாவின் பால் ஈஸ்வரை ஈர்த்தது. சில வருடங்களாக தெரியும் என்றாலும், இப்போது ஒரு ஆறு மாதத்திற்கு முன் தான் காதல் என்ற வார்த்தையை இருவருமே பரிமாறிக் கொண்டனர். அதுவும் ரஞ்சனிக்கு மட்டும் தான் தெரியும். இன்னமும் வேறு யாருக்கும் தெரியாது.

“விடு விஷ்வா சரியாகிடுவா” என்றாள் ரஞ்சனி. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் நல்ல தோழமை உண்டு. அண்ணன் என்ற மரியாதை, அன்பு, பாசம் எல்லாம் இருந்தாலும் “அண்ணா” என்ற வார்த்தை ரஞ்சனியின் வாயில் இருந்து வராது.

இவர்கள் பேசியபடி அமர்ந்திருக்க, மேடையில் நிற்காமல் இப்போது ஒரு ஓரமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த வர்ஷினி ரஞ்சனியின் பால் பார்வையை செலுத்த, அருகில் இருந்த ஈஸ்வரும் பார்வை வட்டத்திற்குள் வந்தான்.

சற்று நேரம் அவனைப் பார்த்திருந்தாள் அப்பா சொல்லிய ஹேண்ட்சம் வார்த்தையைக் கொண்டு.

“எஸ், ஹி இஸ் ஹேண்ட்சம் அண்ட் மேன்லி” என்ற எண்ணம் அவளின் பருவ வயதை ஒட்டிய எண்ணமாக தானாக உதித்தது. சிறிது நேரம் அவனை யாரும் அறியாமல் ரஞ்சனியைப் பார்ப்பது போல சைட் அடித்தாள்.

ஈஸ்வரின் வீட்டினர் எல்லோரும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட, மதிய உணவு உண்ணும் வரை இருந்தே கிளம்பினான்.

கண்கள் என்ன முயன்றாலும் வர்ஷினியை நிமிடத்திற்கு ஒரு முறை வட்டமிட்டு தான் இருந்தது. கண்கள் அவளின் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்தது.

காதல் சொன்ன ஐஸ்வர்யாவிடம் கூட இப்படிப் பார்வை நிலைத்ததில்லை. இது ரசிக்கும் பார்வை அல்ல, கட்டுப்பாட்டையும் மீறி செல்லும் பார்வை. அதை ஈஸ்வரும் உணர்ந்தான்.

“what am i doing , developing a crush at this stage, oops” என்று மனம் அவனை அவனே கேள்வி கேட்டது. தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் “நீ வேறொரு பெண்ணைக் காதலிக்கிறாய்” என்று.

அவனாகவே ஐஸ்வர்யாவிற்கு அழைத்துப் பேசி மனதை திசை திருப்பினான்.

காலையில் அழுதது எல்லாம் பின்னுக்கு தள்ள முகம் மலர்ந்து அவனுடன் ஆசையாய் பேசினாள்.

முரளியிடம் சொல்லிக் கொள்ளப் பார்க்க, அவனருகில் தான் வர்ஷினியும் இருந்தாள், அதன் பொருட்டு அருகே போக மனமின்றி அங்கிருந்தே முரளிக்கு கிளம்புகிறேன் என்பது போல கையசைத்துக் கிளம்பினான்.

அவன் காரிடம் வந்து காரை ரிவர்ஸ் எடுத்து திருப்பின சமயம், காரருகில் வேகமாக வந்தாள் வர்ஷினி,

“ஏதடா இது? இவள் என் கண்ணில் படவேண்டாம் என்று தப்பி ஓடி வந்தால் இந்தப் பெண் எதற்கு இப்போது வெளியில் வந்தாள்” என்று மனதினில் ஓடினாலும் அவன் பாட்டிற்கு காரை நேரே செலுத்த முயல,

தன்னைப் பார்த்தவன் தான் அவனிடம் தான் வருகிறோம் என்று நிறுத்துவான் என்று வர்ஷினி நினைக்க, ஈஸ்வர் பாட்டிற்கு செல்ல, சட்டென்று எப்படி அழைப்பது என்று தெரியாமல்,

“ஹலோ மிஸ்டர், இருங்க” என்று அவனைப் பார்த்து சப்தமாக கூறிக் கொண்டு கையை வேறு ஆட்டினாள்,

“என்னையா? வேறு யாரையுமா?” என்று பார்வையை மட்டும் ஈஸ்வர் சுழல விடாமல், தலையையும் வேறு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி பார்த்தான்.

அவனை புரிந்தவளாக “உங்களைதான்” என்றாள்.

“ஹலோ மிஸ்டர் ரர்ர்ர்ர்ரா” என்று சற்றுக் கடுப்பானவன், காரை நிறுத்தினான், ஆனாலும் இறங்கவில்லை.

இறங்கவில்லை என்றதும் அருகில் வந்தவள், “கமலம்மா இதை உங்க கிட்ட குடுக்கக் சொன்னாங்க” என்று ஒரு பெரிய பேக்கிங்கை நீட்டினாள்.

மிக நெங்கிய உறவினர்களுக்கு வழங்கும் பரிசுகளும் பலகார வகைகளும், கார் கதவு திறந்து தான் வாங்க முடியும், அதனால் அப்படியே டிக்கியின் லாக்கை விடுவித்து, “டிக்கி திறந்து வெச்சிடு” என்று சொல்ல,

வர்ஷினியின் முகம் நொடியில் மாறியது, ஏனென்றால் ஈஸ்வர் சிநேக பாவத்தோடு சொல்லவில்லை, ஏதோ வேலையாளை ஏவுவது போல சொன்னான்.

“கமலம்மா கைல தான் குடுக்க சொன்னாங்க”, என்று அப்படியே நின்றாள்.

டிக்கியில் வைப்பது அவளுக்கு ஒன்றும் பெரிதில்லை ஆனால்  ஈஸ்வர் ஒரு அலட்சியத்தோடு சொல்ல, நேற்றில் இருந்து இருந்த அவனைப் பற்றின பிரமிப்பு விலகியது.

என்ன ஒரு அலட்சியம், ஒரு வேளை தன் பிறப்பைக் கொண்டோ என்று தோன்றிய நொடி, முகம் இறுகியது ஒரு கடினம் தானாக முகத்தில் ஏறியது.

“பாருடா ரோஷத்தை” என்று ஈஸ்வரின் மனதில் மீண்டும் ஓட,

அவன் பார்க்கும் போதே அந்தப் பேக்கிங்கை தூக்கிக் கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் திரும்ப கொண்டு போனால் அது மரியாதையில்ல என்று உணர்ந்தவன் அவசரமாக இறங்கி அவளை நெருங்கும் முன்னே மீண்டும் மண்டப படியை எட்டி இருந்தாள்.

என்ன வேகம் என்று தோன்ற, வேகமாக முன் சென்று நின்று, கொடு என்பது போல கையை நீட்டினான்,

அவனைப் பாராது அதைக் கையினில் கொடுத்து நகர முயல,

“அதென்ன ஹலோ மிஸ்டர்ன்னு கூப்பிடற, மரியாதையா அண்ணா கூப்பிடத் தெரியாதா?” என்றான்.

“நான் ஏன் உங்களை அண்ணா கூப்பிடணும்”,

“என்ன பதில் இது” என்பது போலப் பார்த்தவன், “உங்க அண்ணனை அண்ணான்னு தானே கூப்பிடுவ,  உங்க அண்ணாக்கு ஃபிரண்ட் அப்போ என்னை அப்படிதானே கூப்பிடணும்”

“நான் இனிமே அண்ணனை அண்ணா கூப்பிடலை is that fine”, என்றவள் பார்த்த பார்வை, அது என்ன என்று ஈஸ்வர் எடை போடும் முன்  வர்ஷினி நிற்காமல் சென்று விட, வர்ஷினியின் பதில் சொன்ன விதத்தில், பார்வையில், அசந்து நின்று விட்டான் ஈஸ்வர்,,

பின்பு “மரியாதை தெரியாதவ, என்ன ரோஷம்? என்ன வேகம்? ஆளையும் அவளையும் பாரு, இப்ப தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கா, அதுக்குள்ள என்ன திமிர், இதெல்லாம் இன்னும் முறையா பொறந்திருந்தா” என்று மனதிற்குள் சாடிக் கொண்டே சென்றான்.

யாரிடமும் பயம் இல்லாதவன் ஈஸ்வர், தப்பென்று தெரிந்தாலும் நான் இப்படி தான் என்று துணிந்து செய்பவன், இந்த வார்த்தைகளை சத்தமாக உச்சரிக்க நினைத்தாலும் வெளியில் வரவில்லை என்பது தான் உண்மை.

வர்ஷினியின் பார்வை, ஹப்பா என்ன உக்கிரம் பார்வையில், எரிப்பாளோ என்று தான் தோன்றியது.

ஈஸ்வருக்கு தெரியவில்லை பார்வையே இப்படி என்றாள், வார்த்தைகள், அவளின் செயல்கள்… அதற்கு எந்தக் கட்டுப் பாடும் வார்ஷினியிடம் கிடையாது என்று.

உள் சென்ற வர்ஷினிக்கு ஓரே யோசனை நேற்று இருந்து “எல்லோரும் இவனிடம் நன்றாக பேசினார்கள், இவனும் நன்றாகத் தான் எல்லோரிடமும் பேசினான், மரியாதையான தோற்றம், அப்படி தான் அவன் நடத்தை எல்லோரிடமும் அவள் பார்த்த வரையிலும், ஆனால் என்னிடம் மட்டும் எவ்வளவு அலட்சியம் அவனின் பார்வையில். வேலையாள் மாதிரி டிக்கியில் வை என்கின்றான்”.

“அதுவும் என்னை அடிக்கடி பார்த்த மாதிரி வேறு இருந்தது. அதனால் தானே பெரியம்மா கொடுத்து அனுப்பிய உடன் நான் சென்றேன், இல்லை சென்றிருக்க மாட்டேனே”

“எது கொடுத்த தைரியம் இது, என் பிறப்போ!!!”, என்ற எண்ணம் உதித்த நேரம், வர்ஷினி அவனைத் திட்ட உதிர்த்த கெட்ட ஆங்கில வார்த்தை, ஒரு பெண் தன்னை இப்படித் திட்டக் கூடும் என்று அதுனாள் வரையிலும் விஷ்வேஷ்வரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

இருவருள்ளும் அந்த நாள் முழுவதும் ஏதோ ஒன்று கனன்று கொண்டிருந்தது. ஈஸ்வர் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டிருந்தான். ஆனால் வர்ஷினி அதற்கு முயலவேயில்லை.

முரளியின் திருமண நாளாக இல்லாதிருந்தால் அவனிடமே சென்று கேட்டிருப்பாள், “நீங்க உங்க ஃபிரிண்ட் கிட்ட என்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கீங்க? ஏன் என்னை வேலைக்காரங்க மாதிரி கைல வாங்காம டிக்கில வை சொன்னாங்க” என்று.

கேட்காவிட்டாலும் முகத்தில் கோபம் அப்படியே இருந்தது. ஒதுங்கி அமர்ந்து கொண்டாள். வீடு வந்ததும் ரூமின் உள் புகுந்து கொண்டாள்.

முகம் பார்த்தே ஏதோ சரியில்லை என்று சுற்றம் மொத்தமும் அறிந்தது. ஏனென்றால் சங்கீத வர்ஷினியின் முகம் பல சமயம் பாவனைகளை மறைக்க முற்பட்டாலும் சில சமயம் உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக் கண்ணாடி.

கமலா கேட்க விழைய, பத்மநாபன் ஒரே வார்த்தையால் அடக்கினான் “வேண்டாம்” என்று,

ராஜாராம் “ஏன்” என்க,

“கல்யாண வீடு, இத்தனைப் பேர் இருக்காங்க, காட்சிப் பொருள் ஆக்க வேண்டாம். அவ ரூம்ல தான் இருப்பா, நாளைக்குப் பேசிக்கலாம்” என்று விட்டான்.

அவன் சொல்வதும் நியாயமாக பட்டதால் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்தனர்.

அடுத்த நாள் சற்று தெளிந்திருந்தால் வர்ஷினி, “யாரோ எவனோ விட்டுத் தள்ளு, கொஞ்சம் அப்நார்மல் போல அவன்” என்றது மனது.

“என்ன அப்னார்மலா? ஏன்?” என்று ஒரு புறம் அறிவு கேட்க

“பின்ன ரொம்ப அழகு இல்லைன்னாலும் நான் அழகு தான், என்னைப் போய் அண்ணான்னு மரியாதையா கூப்பிட மாட்டாயான்னு கேட்கறான். அப்போ அவன் அப்நார்மல் தான்” என்று மனது சொல்ல,

அறிவு சிரித்தது. அதைப் பார்த்து மனதும் சிரித்தது.

இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல என்று வர்ஷினிக்கு புரியவில்லை, பின்னே “அண்ணா என்று அழைக்க மாட்டாயா” என்று ஈஸ்வர் கேட்டது,

அவளின் புறம் செல்லும் கண்களையும் மனதையும் அடக்க,

அவனை அவனே கட்டுக்குள் வைத்துக் கொள்ள,

அடங்காமல் அலைபாயும் உணர்வுகளைக் கடிவாளமிட,

இது ஒரு புது வித உணர்வு அவனுக்கு, பெண்ணைப் பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றங்கள் நிகழும் என்று அவன் முதன் முதலில் உணர்ந்து கொண்டது வர்ஷினியை கண்ட பிறகு தான்.

இவளானால் “உன்னை அண்ணான்னு கூப்பிடணும்னா என்னோட அண்ணனையே அப்படிக் கூப்பிட மாட்டேன்” என்று திமிர் செய்து வந்திருந்தாள்.

இளம் கன்று பயமறியாது என்பது இதுதானோ..

மண்ணாசை, பொன்னாசை, இதை விட பெண்ணாசை மிகவும் கொடிது… மனிதனின் நற்பண்புகள் இயல்புகள் என்று அத்தனையும் மாற்ற வல்லது.

அழித்தது ஆண்…. அழிவது பெண்…. என்பது முடிவா என்று அறியப் படாத போதும், பெண்ணாசை வைத்த ஆண் வைத்த நிமிடத்தில் இருந்து அழிவை நோக்கி பயணத்தை தொடங்குகிறான்.

அது இயற்கை உடனுக்குடனோ அல்லது ஜென்மங்கள் கழித்தோ அவனுக்குக் கொடுப்பது.

இது அவனுக்கு நேராமல் இருக்க ஒரே வழி, அந்தப் பெண்ணும் ஆசைவைத்தால் மட்டுமே,

வைத்து விட்டால், அது அழிவிலிருந்து அவனை மீட்டு விடும், உலகின் மாபாதக செயலான காமம், உலகின் உன்னத செயலான காதலாக மாறிவிடுகிறது.

மீட்சியோ? மாட்சியோ?

காதலில்லாத காமம் உண்டு!!!

காமமில்லாத காதல் இல்லை!!! 

 

 

Advertisement