Advertisement

 அத்தியாயம் இருபத்தி நான்கு :

ரகசியம் காப்பதின் முதல் நியதி!                                                                                “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்”                                                                  என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!

முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்… பின்பு அப்படியே பயமாய் மாறி “பர்சனல்னா… என்ன? என்ன பண்ணினான்?” என்று கலவரமாக கேட்டார்.

அவரின் பதட்டத்தை பார்த்தவள் “நத்திங் டு வொர்ரி பா.. just some personal conflicts..”

“பர்சனல்னா?” என்று பயந்து மீண்டும் கேட்டார்… அவரால் சில வார்த்தைகளை மகளிடம் கேட்க முடியவில்லை.. அவளின் பாவனைகளில் பெரிதாக எதுவும் இல்லை என்று தோன்றியது. ஆனாலும் ஒரு பயம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை… தகப்பனாக பயந்து தடுமாறினார்.

“என்னப்பா நீங்க? அவனை கொல்லுவோமான்னு கோவமா கேட்பீங்கன்னு பார்த்தா இப்படி பயந்து பாக்குறீங்க” என்றாள் ஈசியாக.. இரண்டு நாட்களாக நடந்தவைகளை நினைத்து நினைத்து மனது சிறிது சமனப்பட்டு இருந்தது.

அதுவும் காலையில் பார்த்த ஈஸ்வரின் தோற்றம் அவனின் முகத்தில் திமிரெல்லாம் மறைந்து தெரிந்த ஒரு குற்ற உணர்ச்சி அவளுக்கு சற்று திருப்தியே.. இப்போது இருவரின் படங்கள் வேறு வந்திருந்தால், என்னவென்று தெரியாத போதிலும் ஏதோ ஒன்று இருவரையும் இணைத்து எல்லோருக்கும் தெரிந்து விட்டது.. இனி எதிர் கொண்டு தானே ஆகிவிடும்…. என்னவாகிடும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியம் தானாக ஏறியிருந்தது.

“அவனைக் கொல்றது கொல்லாதது அடுத்த விஷயம். ஆனா உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்னால எப்படித் தாங்க முடியும். என்னோட பயம் உனக்குப் புரியலையா பாப்பா.. ஏதாவது செஞ்சிருந்தான்… இங்க இருந்து நான் அவன் வீட்டுக்கு போற நிமிஷம் தான் அவன் உயிரோட இருப்பான்” என்று அவர் சொல்லச் சொல்ல அவரின் கண்களில் தெரிந்த நெருப்பு பிழம்பில்..

சுதாரித்தவள்.. “ஐயோ அப்பா! அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. என்னை அவங்க எதுவும் பண்ணலை.. அது என் அம்மா பத்தி எதுவும் தெரியாது. நான் உங்க பொண்ணு மட்டும் தானே தெரியும்! அதனால கொஞ்சம் கீழ இறக்கிப் பார்ப்பாங்க.. அதுதான்!” என்றாள். அதுவும் கூட உண்மைதானே!

“வேற எதுவும் இல்லையே!”

“இல்லைப்பா! பாருங்க, என்னோட நல்லதனத்துக்கு அவங்க சர்டிஃபிகேட் கொடுக்கறாங்க… என் மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றாங்க… எல்லோரும் நம்பறீங்க” என்றாள் ஒரு புரியாத குரலில்.

என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவேயில்லை ராஜாராமிற்கு, தெளிந்த மனது மீண்டும் கொஞ்சம் குழம்ப.

“என்ன சொல்ல வர்றமா! எனக்குப் புரியலை..!”

“ஒன்னுமில்லை இதை விட்டுடுங்க.. இந்த மாதிரி பேப்பர்ல எதுவும் வராம பார்த்துக்கங்க.. ஈஸ்வர் ஒரு பிரச்சனையில்லை, நான் பார்த்துக்குவேன்!”

“நீ பார்க்குற மாதிரி என்ன இருக்கு! நீ எதுவும் பார்க்கக் கூடாது! அப்போ உனக்கு அவனோட சண்டையா?”

“ஐயோ அப்பா விடுங்க.. வேற பேசுவோம்” என்றவளைப் பார்த்து.

“ஆனா உன்னைக் கீழ பார்த்தானா? என்னால நம்பவே முடியலை! என்னைப் பார்த்த போதெல்லாம் உனக்காக தானேம்மா பேசினான்… நான் சொத்து பிரிக்கப் பேசினப்போ கூட என்கிட்டே உனக்காக எவ்வளவு பேசினான்” என்றார் நம்பாமல்.

“அப்பா, ப்ளீஸ்! அந்த ஈஸ்வர் பேச்சை விடுங்க..” என்றவளிடம்..

“சரி விட்டுடலாம்.. அவனை என்ன பண்ணலாம்?”

“எவனை?”

“ஈஸ்வரை!”

“ஐயோ! நான் தான் சொல்றேனோ.. ஒன்னும் பண்ண வேண்டாம், புரியுதா! எதுவும் பண்ணக் கூடாது!” என்றாள் மீண்டும் மீண்டும்..

மொத்தமாக குழம்பிப் போனார்… “சண்டைன்றாங்க, ஏதோ சரியில்லை, நல்லதா எதுவும் நடக்கலை, கீழ பார்க்கிறான், ஆனா எதுவும் பண்ண வேண்டாமா..?”

தன் தந்தையின் மனம் தெளியாததைக் கண்டு.. “அப்பா! ஒன்னுமில்லாததை ஊதிப் பெருசாக்கிடாதீங்க.. எனக்கு யாரும் என்னை பத்தி பேசறது எப்பவுமே பிடிக்காது!” என்றாள்.

ஆனாலும் அவர் அதோடு விட்டு விடுவார் என்று தோன்றாததால்.. ஏதாவது சமாளித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், “அப்பா பர்சனல்னா நான் கொஞ்சம் ஆர்வமா பார்த்தேன், அவர் அலட்சியமா பார்த்தார்! அதுதான் பிரச்சனை.. நீங்க மேல ஏதாவது செஞ்சு என்னை கீழ இறக்கிடாதீங்க! புரிஞ்சதா!” என்றாள் தன் மேல் பழியைப் போட்டு.

இனி ஒரு விஷயம் இதன் பொருட்டோ எதன் பொருட்டோ தன்னைக் குறித்து உருவாவதை விரும்பவில்லை. முற்றுப் புள்ளி வைக்க அவள் நினைக்க, அதனைக் கொண்டு அவளின் அப்பா கோலம் போட போவதை அறியவில்லை.

என்ன ஆர்வமாகப் பார்த்தாளா? அதை என்னிடம் சொல்வாளா? அப்போது நான் என்ன செய்ய வேண்டும்? மண்டை காய்ந்து போனார் என்றே சொல்ல வேண்டும்..

சரி, இதை இப்போதைக்கு விடுவோம்! இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறதே… பேசவேண்டுமே என்று சமாதானம் செய்து கொண்டவர்…

“அப்பாக்கு உடம்பு சரியில்லை! தெரியும் தானே!”

மகள் அவளைப் பார்க்க… “ரொம்ப நாள் இருக்க மாட்டேண்டா!” என்றார்.

“என்ன?” என்றாள் அதிர்ந்து…. எல்லாம் பின் போய்விட… “அப்பா இருக்க மாட்டாரா! அப்போது நான்?  நான் என்ன ஆவேன்?” அதுவரை இருந்த மனநிலை அப்படியே மாறியது.

“எஸ் டா!” என்றவர்.. “எனக்கு எந்த நேரமும் எதுவும் ஆகலாம்! நீ எதுக்கும் தயாரா இருக்கணும்” என,

“ட்ரீட்மென்ட் ரொம்ப அட்வான்ஸா இருக்கு! எல்லாம் சரியாகிடும்!  ஒன்னும் ஆகாது!” என்றாள் கலக்கமாக.

“எல்லா பெஸ்ட் ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டுத் தான் இருக்கேன்… என்னோட கடைசி நிமிஷம் வரைக்கும் வாழ போராடுவேன்.. இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள்ல சொத்துக்களை எல்லாம் பிரிச்சிடுவேன்.. என்ன ஏதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. எல்லோரும் இருக்கும் போது சொல்றேன்” என்றவர்..

“அவங்க யாருமே உன்னை விட மாட்டாங்க… நீ அவங்களை எப்பவும் விடக் கூடாது! அம்மாவையும் அண்ணனுங்களையும்!”

“எனக்கு யாரையும் விடற எண்ணம் கிடையாது! ஆனா எதிர் காலத்துல என்ன நடக்கும்ன்னு யாராலையும் சொல்ல முடியாதுப்பா! சில சமயம் எனக்குத் தெரியாம தள்ளி நின்னுடரேன்! இன்னைக்கு மாதிரி!”

வந்ததில் இருந்து மிகவும் முதிர்ச்சியான பேச்சு தான் வர்ஷினியிடம்.. இப்போது இந்தப் பேச்சைக் கேட்கவும்..

“அப்போ உனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கட்டுமா.. இப்படி என்னால எப்படி தனியா விட்டு போக முடியும்..”

“கல்யாணமா? எனக்கா?” என்று அவள் கேட்ட விதம்.. அவர் இன்னும் சிறிது நாள் தான் இருக்கப் போகிறேன் என்று சொன்னதை விடவும் அதிர்ந்து கேட்டாள்.

“உனக்கு ஈஸ்வர் மேல ஆர்வம் இருக்குன்னா பிடிச்சிருக்குன்னா” என்று ஆரம்பிக்கும் போதே “அப்பா” என்று ஏறக்குறைய அலறினாள்..

“என்ன பேசறீங்க?” இதை அவள் எதிர்ப் பார்க்கவே இல்லை..

“அப்போ இதுக்காகத் தான் மாத்தி மாத்தி கேள்வி கேட்டீங்களா”,

“இல்லை! இதுக்குன்னு இல்லை! என்னவோ உங்களுக்குள்ளன்னு எனக்கு யோசனை.. ஆனா எப்பவுமே உனக்காக ஈஸ்வர் என்கிட்டே பேசறான்.. இன்னைக்கு கூட விஷயம் உனக்கு தெரிய வேண்டியதில்லைன்னு சொன்னான்.. இப்போ நீயும் ஆர்வமா பார்த்தேன் சொன்ன, அதுதான் ஒரு திடீர்ன்னு இந்த யோசனை.. ஆனா காலையில இருந்தே தாத்தா சொல்லிட்டு தான் இருக்காங்க!”

“அவனை மாதிரி ஒரு வாழ்க்கை துணை உனக்கு அமைஞ்சா நல்லா இருக்கும்.. எனக்கு அவனை ரொம்ப வருஷமா தெரியும்”

“அப்பா!” என்றாள் பரிதாபமாக.. அவர் ஈஸ்வரை எதுவும் செய்யக் கூடாது என்பதற்காக தனக்கு ஆர்வம், அவன் பார்க்கவில்லை என்று சொல்ல, கூடவே முதலில் அவளுக்கும் அப்படித்தானே! ஆனால் அது இப்படி உருவெடுக்குமா.. இப்போது அவன் செய்ததை சொன்னால் கண்டிப்பாக அவனை ஏதாவது செய்து விடுவார்.. அதுவும் அவளால் முடியாது.

“எனக்கு இப்போல்லாம் கல்யாணம் வேண்டாம்!”

“சரி! வேண்டாம்! நிச்சயம் பண்ணிக்கலாம்!”

“அப்பா! நான் அவர் என்னைக் கீழ பார்க்கறார் சொன்னேன்… நீங்க கேட்டாலும், அவர் ஒத்துக்க மாட்டார்!”

“அப்போ ஈஸ்வர் ஒத்துக்கிட்டா உனக்கு ஓகே வா!”

“அப்போக் கூட எனக்கு ஓகே இல்லை!”

“இல்லை, என்னால தனியா விட்டுட்டுப் போக முடியாது… நான் இருக்கும் போதே ஏதாவது பிரச்சனையோன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால பயந்தது எனக்கு தான் தெரியும்!”

“இப்போ பேப்பர்ல வேற இப்படி.. பேசாம ஈஸ்வரையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

“அப்பா! என்னைப் பேச வைக்காதீங்க, ஈஸ்வர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க! ரஞ்சனி அண்ணி நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாம்! ஆனா என்னை எல்லாம் அவங்க வீட்ல கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்க மாட்டாங்க..!

“உண்மைன்னு ஒன்னு இருக்கு! நீங்க எந்த வித்தியாசமும் என்கிட்டே காட்டாம எல்லோர்கிட்டயும் உங்க பொண்ணுன்னு தைரியமா சொல்லலாம்! ஆனா மத்தவங்க அதை ஏத்துக்குவாங்க சொல்ல முடியாது! in other words. i am an illegitimate child… என்னோட கல்யாணம் யாரோடையும் அவ்வளவு ஈசி கிடையாது…” என்று உண்மையை சொல்ல…

அந்த உண்மை ராஜாராமை அதிகமாக! மிக அதிகமாக உசுப்பியது!

“தாஸ்! வீட்டுக்குப் போகலாம்!” என.. அதன் பிறகு அப்பா மகளிடத்தில் பேச்சுக்கள் இல்லை….

அவர்கள் வீடு வரும் வரை வீட்டில் அனைவரும் ஆளுக்கு ஒரு வேலை பார்த்து வாசலில் ஒரு கண் வைத்து என்று தான் இருந்தனர்.

வீடு வந்தவர்கள், ராஜாராமும் யாரிடமும் பேசவில்லை, வர்ஷினியும்.. இருவர் முகமும் மிகவும் சீரியசாக இருக்க… யாராலும் என்ன என்று கேட்க முடியவில்லை.

வர்ஷினியிடம் இருந்த தெளிவு பின் போய் இருந்தது… அப்பா கொஞ்ச நாள் தான் இருப்பேன் என்றது… இப்போது ஈஸ்வருடனான திருமணப் பேச்சு..

ஐயோ அவன் என்ன செய்திருக்கிறான் என்னிடம்… அவனுடன் திருமணமா.. என்று மனது ஒரு புறம் ஓலமிட… உனக்கு இந்தக் கவலை தேவையில்லை ஈஸ்வர் உன்னுடன் திருமணதிற்கு எல்லாம் சம்மதிக்கவே மாட்டான்.. என்று அடக்கியது.

இந்த யோசனைகள் ஓடும் போது தவித்துப் போனால்.. மீண்டும் எங்கே என்று தெரியாமல் ஒரு வலி..

யோசிக்காமல்  பத்மநாபனின் ரூம் கதவை தட்டினாள்.. பத்து கதவை திறக்க.. “எனக்கு வலிக்குது மாத்திரை வேணும்” என்றாள்.

“மாத்திரையா” என்று அவன் கேட்க..

“அண்ணி கிட்ட கேளுங்க” என்று எரிந்து விழுந்தாள்…

“என்ன ஆச்சுடா?” என்று அவன் கனிவாகக் கேட்க..

எரிச்சலில் திரும்ப நடக்கத் துவங்க… “இரு! இரு!” என்றவன்… “உள்ள வா!” என்று கைப் பிடித்து ரூமின் உள் இழுத்து சென்றான்…

“ரஞ்சனி” என்று அவளை எழுப்பினான்… “இவளுக்கு மாத்திரை வேணுமாம்” என்று வர்ஷினியைக் காட்ட,

“என்ன வர்ஷி? எதுக்கு?” என்று அவள் எழ

“பெயின் கில்லர்!”

“எங்க வலி?”

“அதெல்லாம் தெரியாது! எனக்கு மாத்திரை வேணும் குடுப்பீங்களா? மாட்டீங்களா?” என்று அவளிடமும் எரிந்து விழ…

“எதுக்கு வர்ஷி இவ்வளவு கோபம்! ரொம்ப வலிக்குதா! ஹாஸ்பிடல் போயிடலாமா” என்று கவலையாக ரஞ்சனி கேட்க ..

“ஒன்னும் வேண்டாம்!” என்று மீண்டும் வெளியே போகப் போக,

“பிடிங்க அவளை!” என்று ரஞ்சனி சொல்ல…

“ஒன்னும் பிடிக்க வேண்டாம்!” என்று அடிக்குரலில் சீறினாள்…

“என்னடா? எதுக்குடா இவ்வளவு கோபம்…? அண்ணா கிட்ட சொல்லுடா!”

“சொல்ல மாட்டேன்! எதுக்குச் சொல்லணும்! அப்பாவை பத்தி நீங்க என்கிட்டே சொல்லலை.. என்னோட ஃபோட்டோ வந்ததை சொல்லலை! எதுவும் சொல்லலை!” என்று அவனிடம் ஏகத்திற்கும் கோபப்பட..

“யாரு? யாரு இதெல்லாம் உன்கிட்ட சொன்னது?” என்று கவலையாகப் பத்மநாபன் கேட்க,

“முதல்ல நீ இந்த மாத்திரை சாப்பிடு!” என்று ரஞ்சனி அவளிடம் ஏதோ நீட்ட என்ன வென்று கூடப் பார்க்காமல் விழுங்கினாள்.

விழுங்கியவள் பத்மநாபனைப் பார்த்து முறைத்து நிற்க, இது வேலைக்காகாது என்றுணர்ந்து, “உட்காரு! முதல்ல உட்காரு!” என்று வர்ஷினியையும் விட அதட்டி அவளை அமர வைத்தான்..

ரஞ்சனி இருப்பதை மறந்து “நான் தான் உன்னை ஈஸ்வர் கிட்ட டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ண சொன்னேனே! நீ கேட்டியா?.. உன்னை பார்த்த நாள்ல இருந்து ஈஸ்வர் உன்னைப் பார்த்துட்டே இருக்கான். அவன் கிட்ட தள்ளி நில்லுன்னு படிச்சு படிச்சு சொன்னேனே கேட்டியா.. இப்போ நீ இழுத்து விட்டுகிட்ட?” என்று அதட்ட…

“ஐயோ! விஷ்வாவைப் பற்றி என்ன பேசுகிறான் இவன்” என அதிர்ந்து நோக்கினாள் ரஞ்சனி…

ஈஸ்வரின் பேச்சு வந்ததும் அதைப் பற்றி பேச விரும்பாமல் வர்ஷினி அமைதியாக கைகளில் முகம் புதைத்து இருந்தாள்.

“என்ன? என்ன பேசறீங்க விஷ்வா பத்தி?” என்று ரஞ்சனி பதைத்துக் கேட்டாள்.

“அச்சோ!  இவள் இருப்பது தெரியாமல் பேசிவிட்டோமா?” என்று ஒரு க்ஷணம் நினைத்தவன்.. “தெரியட்டுமே.. இனி நான் முக்கியமா? அவன் முக்கியமா?” என்ற ஒரு இறுமாப்பு தோன்றியது.

இந்தக் கேள்வியை ரஞ்சனியிடம் கேட்டால் திருமணமாகி விட்டது, திருமணத்தின் முக்கியத்துவம் தெரியும், அதனால் கணவன் முக்கியம் என்று வாய் வார்த்தையாக ரஞ்சனி சொன்னாலும், அந்தத் திருமணமே ஈஸ்வரின் பொருட்டு தான்.

“என்ன? என்ன பேசறீங்க?” என்றாள் திரும்பவும் பத்மநாபனை பார்த்து..

பத்மநாபன் பதில் சொல்லாமல் இருக்க…

“என்ன பேசறீங்க விஷ்வாவைப் பத்தி, சொல்லுங்க!” என்று ஆவேசமாக அவனிடம் கேட்க,

“முரளி கல்யாணத்துல வர்ஷியைப் பார்த்துக்கிட்டே இருந்தான்.. அதுதான் அவன் கிட்ட டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணச் சொன்னேன்!”

“என்ன? என்ன சொல்ல வர்றீங்க, என் அண்ணன் ஒரு பொறுக்கின்னா..” என்றாள் ஆற்ற மாட்டாமல்.

“தெரியலை! எனக்கு சொல்லத் தெரியலை என்னன்னு? ஆனா ஏதோ சரியில்லைன்னு ஃபீல் செஞ்சேன்”

“அழகா இருக்கா! பார்த்திருப்பான்! நான் கூட தான் முரளிண்ணா கல்யாணத்துல வர்ஷியை பார்த்தேன்! டால் மாதிரி இருக்கே சொன்னேன்!  ஏன் ஃபிரண்ட் கூட ஆனேன்..”

“விஷ்வா பத்தி இப்படி சொல்லாதீங்க.. அவன் பொண்ணுங்க விஷயத்துல எல்லாம் ரொம்ப நல்லவன், யாரையும் தப்பா பார்க்கக் கூட மாட்டான்!” என்றாள்..

அவள் பேச பேச தலை கவிழ்ந்திருந்த வர்ஷினியின் மனதில்.. “இதுதானே! இதற்கு பயந்து தானே! நான் யாரிடமும் சொல்லவில்லை… யாரும் நம்ப மாட்டர்! அப்படியே நம்பினாலும் இந்த பெண் என்ன செய்ததோ என்று என் பெயர் தானே கெடும்..” மளமளவென்று கண்களில் நீர் இறங்கியது.

“சே! சே! யாரிடமும் சொல்லாமல் இந்த அப்பாவிடம் உணர்ச்சிவசப்பட்டு என்ன வென்று சரியாக சொல்லாத போதும் உளறி வைத்திருக்கிறேன்.. என்ன செய்வாரோ..?”

“ஒருவேளை ஈஸ்வரிடம் கேட்டால்.. ஐயோ என்ன சொல்வானோ..?”

வேகமாக தலைநிமிர்ந்து எழுந்தவள்… “அண்ணி உங்க அண்ணா நம்பர் குடுங்க” என்றாள்.

“எதுக்கு?” என்று ரஞ்சனி கேட்க..

“குடுப்பீங்களா? மாட்டீங்களா?”

“எதுக்கு வர்ஷி? எதுக்கு கேட்கற?” என்று பத்மநாபனும் கேட்க..

“எனக்கு பேசணும், நம்பர் குடுங்க!” என்றாள் அவனிடமும்.

“என்ன பேசப் போற?”

“ஏதோ பேசறேன்! குடுங்க!” என்றவள் அவனிடம் கேட்காமலேயே அவனின் போன் எடுத்து நம்பரை தேடினாள்.

அவளின் முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்து “இதுலயே பேசு!” என்று பத்மநாபன் அழைத்து அவளிடம் கொடுக்க,

இவனின் நம்பர் பார்த்து எடுத்த ஈஸ்வர்.. “சொல்லு பத்து” என..

“நான் வர்ஷினி!” என்று பதிலளித்த வர்ஷினியின் முகத்தில் அவ்வளவு தீவிரம்..

“என்ன? என்ன வர்ஷினி?” என்றான் ஈஸ்வர் கலவரமாக.. பத்துவின் போனில் இருந்து இந்த நேரத்தில் கூப்பிடுகிறாள் என்று.

“ஒரு நிமிஷம்!” என்றவள், “நான் பேசிட்டு குடுக்கறேன் அண்ணா!” என்று வெளியேப் போக..

“என்ன நடக்கிறது?” என்று பத்து பார்க்க..

என்னவென்று தெரியாத போதிலும் மனது அலைபுற ரஞ்சனி அப்படியே கால்கள் தொய்ய அமர்ந்தாள். இவர்கள் என் அண்ணனைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்! ஐயோ ஐஷ்? ஐயோ என் திருமணம் எதற்கு? ஐயோ இந்த அஸ்வின்? யாரோ அவளின் தலைமேல் உட்கார்ந்து டம் டம் என்று அடித்தனர்.

தொம் தொம் தொம் த நம் தத் தொம் தொம்                                                         தொம் த நம் த தொம் தொம்!!!

 

Advertisement