Advertisement

அத்தியாயம் இருபத்திரண்டு :

நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!! 

அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக… அங்கே ஆயிரம் கேள்விகள்… கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை நம்பச் செய்ய.. அங்கே இருந்த டியூட்டி டாக்டர்.. காயத்தைச் சுத்தம் செய்தார்.

ஆனாலும் தையல் போட வேண்டும் என்று சொல்ல… “முதலுதவி செய்யுங்கள்! காலையில் பார்த்துக்கொள்ளலாம்!” என்று சொல்லி.. ஒரு கட்டைப் போட்டு, டீ டீ இஞ்சக்ஷன் செய்து, வலிக்கு மாத்திரை வாங்கி வீடு வந்த போது இரண்டு மணி.

ஜகன் மட்டுமே அவனை இன்னம் காணோம் என்று விழித்திருந்தான். இவனைப் பார்த்தும் பதறி விட்டான்… “என்னடா கட்டு?”

“ஷ், கத்தாதே! யாராவது எழுந்துக்கப் போறாங்க… கீழ விழுந்துட்டேன்… ஒன்னுமில்லை! ஹாஸ்பிடல் போயிட்டு தான் வந்தேன்! காலையில பார்க்கலாம், ரொம்ப டயர்ட்” என்று சொல்லி அவனிடம் இருந்து தப்பித்து வந்து… உடை மாற்றி படுக்கையில் விழுந்த போது தான்… அவனின் செயலை அவனால் யோசிக்க முடிந்தது.

அவன் செய்த தப்பின் வீரியம் முற்றிலுமாய் அவனைத் தாக்கியது. “என்ன செய்து விட்டேன் நான்… இதிலிருந்து மீளுவது என்பது ஆகக் கூடியது அல்ல” என்று புரிந்தது.

யார் முகத்திலும் விழிக்க தகுதியற்ற செயல் என்பது ஒரு புறம்… “அச்சோ! அந்தப் பெண்ணை நான் என்ன செய்திருக்கிறேன். அவள் யாரிடமும் சொல்லாததால் தான் நான் தப்பித்து இருக்கிறேன்” என்று புரிந்தது.

இதையெல்லாம் விட அவனின் செய்கை ஒரு முறையற்ற செயல்!!! எப்போதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல்!!! உலகில் வாழ சில நிமிடங்களில் நானே என்னை தகுதியற்றவனாகச் செய்து கொண்டேன்.

அதுவும் நண்பனின் தங்கை… என்னை நம்பி வீட்டுக்குள் விட்டதற்கு நான் செய்த செயல் என்ன?

வாழ்க்கையில் அவன் விவரம் தெரிந்த நாளாக செய்யாத ஒரு செயலை செய்தான். அழுகை வர தலையணையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தான்.

எப்படி ஒரு பெண்ணிடம் காதல் சொல்லி.. இன்னொரு பெண்ணிடம் இப்படி நடந்து? எனக்குப் பெயர் என்ன?

எங்காவது தூரமாய்ப் போய் விட வேண்டும்! யாரையும் இனி பார்க்க முடியும் பேச முடியும் என்றே தோன்றவில்லை.

ஐஷிடம் எப்படி சொல்வது என்னை விட்டு விடு என்று.. நான் உனக்கு சற்றும் தகுதியில்லாதவன் என்று எப்படி சொல்வது. இனி யாரையும் எந்தப் பெண்ணையும் என்னால் திருமணம் செய்ய இயலுமா? என்னுடைய வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்.

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் அழிக்க இருந்தேன்… கடவுளே அவளை இந்த நிகழ்வை மறக்க வைத்து விடு.. அவளை இதிலிருந்து மீட்டு எடுத்து விடு? விடாத பிரார்த்தனைகள்.

என்னால் தானாக எல்லாம் சாவை நோக்கிப் போக முடியாது. நீயே என்னைக் கொன்று விடு! கொன்று விடு!

எப்படிப்பட்ட செய்கை? என்னுடைய பிரணவியைக் கூட என்னால் இனி எப்படித் தூக்க முடியும்.. எவ்வளவு நீச்சனாகி விட்டேன் நான். என் அம்மா! என் தங்கை! என் தோழி! இது தெரிந்தால் அவர்கள் என்னை எப்படிப் பார்பார்கள்.

எது வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்று இருந்த தைரியம் இப்போது முற்றிலும் தொலைந்தது!!!

எங்காவது யாருமற்ற தீவிற்கு ஓட தோன்றியது!!!

அலைபாய ஆரம்பிக்கும் மனதை முன்பே கடிவாளமிட்டு இருக்க வேண்டும். அவளுடன் தனிமையைத் தவிர்த்திருக்க வேண்டும்! என்ன ஒரு இறுமாப்பில் என்ன முட்டாள் தனம் செய்து விட்டேன்… ஏன் இப்படி செய்தேன்?

அவனின் கர்வம் முற்றிலுமாக அழிய… உயிரோடு தன்னை தானேப் புதைக்க வழி தேடியது நெஞ்சம்.

தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அங்கே வீட்டில் வர்ஷினி வந்த நேரமாக அதுவரை ஒரு பத்து தடவையாவது குளித்து இருப்பாள்.. அவன் தொட்டது உடை மேல் தான்… ஆனாலும் ஒரு அருவெறுப்பு. உடையினுள் கை நுழையும் போதே கட்டுக்குள் வந்திருந்தான். அவனும் வீழ்த்தி இருந்தாள். ஆனால் கை தொட்ட அந்த இடத்தை நகத்தைக் கொண்டு தேய்த்து தேய்த்து இப்போது எரியத் துவங்கி இருந்தது.

மனமும் எரிந்தது… இப்போது அவனை விட்டது தவறோ? கொன்றிருக்க வேண்டுமோ.. இன்னம் பெரிதாக ஏதாவது செய்திருக்க வேண்டுமோ… அப்படியே விட்டிருக்க கூடாதோ.. ஏதாவது செய்ய வேண்டுமே அவனை  என்று மனம் பரபரத்தது.

அழுகை எல்லாம் நின்றிருந்தது.. ஆத்திரம்! ஆத்திரம்! ஆத்திரம் மட்டுமே!

“என்ன தைரியம் அவனுக்கு என்னிடம் அப்படி நடக்க… இதில் நான் வேறு அவனிடம் நியாயம் பேசி வந்திருக்கிறேன்.. யாரிடமும் அல்லாமல் என்னிடம் மட்டும் ஏன் என்று…”

“நீ இப்படிப் பட்ட நினைப்பை தவிர்க்க வேண்டும் வர்ஷினி.. உன்னை நெருங்கும் தைரியத்தை எதுவும் யாருக்கும் கொடுக்க கூடாது! அதை நீ வளர்த்துக் கொள்! என்னிடம் மட்டும் ஏன் என்ற கேள்வி அவசியமற்றது! நீ எந்த விதத்தில் குறைவு?” என்று அவளை அவளே திட்டிக் கொண்டாள்.

“அவனை நீ ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டாயே.. அவன் முன் அழுது விட்டாயே! என்ன செய்திருக்கிறாய் நீ!”

மனம் கொதிக்க ஆரம்பித்தது.

ஆனால் அறிவு தெளிவாக சொன்னது “இப்போது எதுவும் செய்து உனக்கு நடந்ததை நீயே காட்டி கொடுத்துக் கொள்ளாதே! பொறு! கடவுள் உனக்கு அந்த வாய்ப்பைக் கொடுப்பார்!”

அறிவு மனதை சமாதானம் செய்ய ஆரம்பித்தது.

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை காலமும் நேரமும்!!! தனி மனித வாழ்க்கைப் பயணமும்!!!

அடுத்த நாள் எப்பொழுதும் போல விடிந்தது..

கதவைத் தாளிட்டு இருந்தான் ஈஸ்வர்…  எப்போதும் தாளிட்டு உறங்க மாட்டான். காலையிலேயே ஜகன் வீட்டினரிடம் சொல்லி இருக்க, அம்மாவும் அப்பாவும் வந்து கதவை திறக்கப் பார்க்க.. அது திறக்கவில்லை.

தட்ட ஆரம்பித்தனர்… முதல் தட்டலுக்கே விழித்து விட்டான். ஆனால் எல்லோரையும் எப்படிப் பார்க்க.. இன்னம் யாருக்கும் தெரியாது.. நீயாக காட்டிக் கொடுத்து விடாதே… திரும்பவும் முட்டாள்தனம் செய்து விடாதே..

இது உன் விஷயம் மட்டுமல்ல… வர்ஷினி உன்னிடம் வேண்டியது அது மட்டுமே! யாருக்கும் தெரிய விடாதே!!

கதவைத் திறந்தான்.

“என்ன கண்ணா? என்ன ஆச்சு?” என்று அம்மா பதறி உள்ளே வர… “விஷ்வா என்ன அச்சு?” என்று அவனின் முகம் பார்த்து அப்பா கேட்டார். முகமெல்லாம் சோர்ந்து வீங்கி.. பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.

அங்கே காலையில் ராஜாராம் மகன்களிடம் ஈஸ்வரை யாரோ அடித்து விட்டனர் என்று சொல்ல..

முரளி ஒருபக்கம் பதறிக் கிளம்ப.. ரஞ்சனி ஒரு பக்கம் பதறிக் கிளம்ப..

தலைவலி என்று வந்து படுத்த பெண்.. இன்னம் கதவை திறந்து வெளியே வரவில்லை! அதை கவனிக்க ஆள் இல்லை! அவளை அவளே சமாதானம் செய்து கொண்டிருந்தாள். யாரையும் மனது தேடவும் இல்லை. தனிமை என்று உணராத தனிமை!!!

திருமண வரவேற்பு அலைச்சல், கமலம்மா எழுந்து கணவருக்கு வேண்டியதை செய்து மீண்டும் சற்று உறங்கலாம் என்று உறங்கினார்.

வீட்டில் இரண்டொரு உறவினர் இருக்க, “அவங்களை கொஞ்ச நேரம் பார்த்துக்கோ ஷாலினி” என்று பெரிய மருமகளிடம் சொல்ல.. அவளுக்கு அவர்களை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.

பத்து மணி வாக்கில் ராஜாராம் “எங்க பாப்பா இன்னும் எழுந்துக்கலையா” என்று கேட்ட பிறகு தான் ஷாலினி கவனித்து, ரூமின் கதவைத் தட்டவும், வெளியே வந்தாள் வர்ஷினி.

“என்ன வர்ஷி? முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு! இன்னம் தலைவலி சரியாகலையா!”

“பரவாயில்லை அண்ணி”

“வா! அப்பாக் கேட்டாங்க! ஒரு வார்த்தை பரவாயில்லைன்னு சொல்லிடு… என்ன குடிக்கற… காஃபி கொடுக்கட்டுமா! தலைவலிக்கு நல்லா இருக்கும்”

“பசிக்குது அண்ணி! சாப்பிட்டு சாப்பிடறேன்!” என்று நேராக டைனிங் டேபிள் செல்ல, ஷாலினி பரிமாற முற்பட,

“நான் எடுத்துக்கறேன் அண்ணி!” என்று அவளைத் தவிர்த்து, உணவை எடுத்துக் கொண்டு அப்பாவை பார்க்கப் போக… அவருடன் தாத்தா பேசிக் கொண்டு இருந்தார்.

எப்போதும் தாத்தா பேசிக் கொண்டு இருந்தால் நகர்ந்து விடுவாள்.. அன்று அப்போதும் போய் அமர்ந்து கொண்டாள்… அதுவும் உணவோடு…

அவர்கள் பேசிக் கொண்டு இருந்தது முக்கியமான பேச்சு.. சொத்துக்களைப் பற்றி.. வர்ஷினி வந்ததும் தாத்தா பேச்சை தொடரவில்லை.

அதைப் பற்றி எல்லாம் வர்ஷினி கவலைப் படவில்லை. அமைதியாக உண்ண ஆராம்பித்தாள்.

சரியாக அப்போது தாஸ் வந்தான். “அய்யா! ஈஸ்வர் சாரை யார் அடிச்சான்னு கண்டு பிடிக்க முடியலை… சீ சீ டீ வீ ல அந்த மாடில நடந்தது எதுவும் ரெகார்ட் ஆகலை! ஏதோ பிரச்சனை போல” என்று சொல்லச் சொல்ல..

வர்ஷினியின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது. இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

“நம்ம ஈஸ்வர் சர் கிட்ட தான் பேசணும்” என்றான்.

பிறகு “பாப்பாக்கு தெரியுமா அய்யா? ரொம்ப அழுதுச்சுங்க!” என்று சொல்ல…

வர்ஷினிக்கு வந்ததே கோபம்!!!

“தாஸண்ணா! உங்க வேலை என்ன?” என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.

“ஏன் பாப்பா? ஏன் கேட்கறீங்க?” என்றான் புரியாமல்.

“உங்க வேலை என்னை பார்த்துக்கறது மட்டும் தான்! நான் என்ன பண்றேன்! அழுதேனா சிரிச்சேனான்னு வந்து சொல்ற வேலை கிடையாது. ஏதாவது அப்பாக்கிட்ட சொல்லணும்னா நான் சொல்லுவேன்! இனிமே இந்த அதிகப் பிரசிங்கித்தனம் பண்ணாதீங்க” என்று தாஸைப் பார்த்து சொல்ல, அவளின் அந்த பார்வையில், பாவனையில், தாஸிற்கே சற்று பயம் வந்தது.

அங்கே ஒரு கணம் எல்லோரும் ஸ்தம்பித்தனர்… அப்பா! தாத்தா! என்று அவளைப் பார்க்க..

சொல்லிவிட்டு திரும்ப உண்ணத் துவங்கி இருந்தாள்.

தாஸ் இதை எதிர்பார்க்கவில்லை… “சரிங்க பாப்பா” என்றான்.

“அப்பா! தாஸண்ணா நம்ம என்ன சொல்றோமே கச்சிதமா செய்வார். ஆனா புத்திசாலி எல்லாம் கிடையாது, அவர் ஏதாவது உளறி வைப்பார்” என்றாள் திரும்பவும் தாஸையேப் பார்த்துக் கொண்டு!

“அச்சோ! என்ன பிரச்சனையோ தெரியவில்லையே! அய்யா முன்னிலையிலேயே இவ்வளவு திட்டு தனியாக மாட்டினால் கைமா தான்  போலவே” என்று சரியாக கணித்தான்.

அழுதால் என்று சொன்னதற்கே இப்படி காய்ச்சினால் வர்ஷினி! இதில் விருப்பம் என்று அவன் சொன்னது மட்டும் தெரிந்தால்! அவ்வளவு தான்!

அவள் உண்டு முடித்து எழுந்துப் போக… “சாயந்தரம் ஆறு மணில இருந்து நைட் பண்ணிரண்டு வரை ரெகார்ட் ஆன எல்லாம் கொண்டு வந்துட்டேன்… அந்த நேரம் அந்தத் தளம் மட்டுமில்லை” என்றான்.

“சரி பார்க்கலாம் விடு, முரளி என்னன்னு கேட்டுட்டு வருவான்! பேசிக்கலாம்!” என்றார்.

அதற்குள் வர்ஷினி கை கழுவி வந்து விட… அவர்களின் பேச்சு நின்றது.

அங்கே ஈஸ்வரின் வீட்டில் முரளி ஒரு பக்கம் “யாருக்குடா இந்த தைரியம்! கை வைக்கிற அளவுக்கு! சொல்லு! அவனை ஒரு வழி பண்ணிடலாம்!” என்று குதிக்க…

ரஞ்சனி “காயம் காட்டு விஷ்வா!” என்று ஒரு பக்கம் கேட்க…

செத்துச் செத்துப் பிழைத்தான் அவர்களின் கவனிப்பில்.

முரளியிடம் “தெரியலை” என்றான்.. ரஞ்சனியிடம் “நீயே பார்த்துக்கோ!” என்றான்.

கட்டவிழ்த்து பார்த்தவள்… “விஷ்வா! இதுக்கு தையல் போடணும். அந்த இடமும் ரொம்ப வீங்கி இருக்கு எம் ஆர் ஐ ஒன்னு பண்ணிடலாம்…”

பத்மநாபன் எல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அவனும் தான் என்ன செய்வான்? அண்ணன் ஒரு புறம், மனைவி ஒரு புறம் என்று ஒரு மனிதனை அப்படி கவனிக்க, அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஹாஸ்பிடல் சென்று அவனை காட்டித் தையல் போட்டு ஸ்கேன் எடுத்து ஒன்றுமில்லை என்று வந்த பிறகு தான் ரஞ்சனி ஓய்ந்தாள்.

முரளியும் பத்துவும் அதுவரை அவர்களுடனே!!! நான் இவர்கள் வீட்டுப் பெண்ணிற்கு என்ன செய்திருக்கிறேன் என்று தெரிய வந்தால் இவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற யோசனைகள் மனதில் ஓட,,, அவனுக்கு எதுவுமே மூளையில் ஓட வில்லை.

வெகு நாட்களுக்கு பிறகு அண்ணனின் அருகாமை கிடைக்க ரஞ்சனி வளவளவென்று பேச.. ரஞ்சனி அவ்வளவு பேசுவாள் என்று அன்று தான் பத்மநாபனுக்கு தெரியும்.

ரஞ்சனி தான் பேசுகிறாள், அதை ஈஸ்வர் கவனத்தில் கொள்ளவில்லை என்று பார்த்ததுமே தெரிய… “அவருக்கு வலி போல, அவர் உன்னை கவனிக்கலை” என்று சொன்ன பிறகே அமைதியானாள்.

“எனக்கு உங்க அப்பாவைப் பார்க்கணுமே!!!” என்றான் ஈஸ்வர்.

“எதுக்குடா?” என்று முரளி கேட்க… “பண விஷயமா பேசணும்” என்றான்.

“இப்போ போகலாமா” என்று முரளி கேட்க..

“இல்லை! நாளைக்கு நான் அப்பாவோட ஜகனோட வர்றேன்” என்றான். அவனுக்கும் அப்பாவிடம் பேச வேண்டி இருந்தது.

ரஞ்சனி ஏதோ பேச வர.. “விடு! அவர் இஷ்டம் போல செய்யட்டும்” என்று பத்மநாபன் அதட்ட.. ரஞ்சனி அமைதியானாள்.

அடுத்த நாள் காலை சொன்னது சொன்னபடி வந்து விட்டான் ஈஸ்வர் அப்பாவோடும் ஜகனோடும். வந்து பேசிய விஷயம் யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் அப்படியே அமர்ந்து விட்டனர்.

ஆம்! பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றான். திரும்பக் கொடுக்க மாட்டோம் என்றான். அவனின் பங்குகள் எல்லாம் அப்படியே ரஞ்சனியின் பெயரில் மாற்றி விடுவோம். இனி அவளும் ஜெகனும் மட்டுமே அதன் உரிமையாளர்கள் பங்கு தாரர்கள்.. என்றான்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“இல்லையில்லை! நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்” என்று ரஞ்சனி பதறி மறுக்க…

“அப்படின்னா பணம் வாங்கறேன்! இல்லை என்னவோ ஃபேஸ் பண்ணிக்கறோம்!” என்றான்.

ஜகனுக்குமே அது புதிய செய்தி.. நமஷிவாயதிற்கும் ஈஸ்வருக்கும் மட்டுமே தெரியும். அவரிடம் முன்பே பேசியிருந்தான்.

“இல்லையில்லை! நான் ஒத்துக்க மாட்டேன்! தப்பு செஞ்சது நான்! எல்லோருக்கும் தண்டனையா” என்று ஜகனும் பதற..

“இது பெரியப்பா வளர்த்தது ஜகன்… இது உனக்கு உரிமையானது.. இதுல உன் சம்மதம் தேவையேயில்லை” என்றான்.

வார்த்தைக்கு வார்த்தை ஈஸ்வர் பைனான்ஸ் என்னோடது என்ற சொன்னவனா இவன்? இதற்காகவா என்னுடைய இந்த திருமணம்.. ரஞ்சனி மனம் பதறி பார்த்து நின்றாள்.

ராஜாராம் பொறுமையாக “எதுக்கு இப்படி ஒரு முடிவு ஈஸ்வர்! நாங்க தான் உனக்கு உதவ தயாரா இருக்கோமே எப்பவுமே.. என் மகன் விருப்பப்பட்டான்னு தான் பெண் கேட்டேன்! அப்போ தெரியாம தப்பா அர்த்தம் வர்ற மாதிரி சில வார்த்தைகள் விட்டுடேன்… ஆனா கண்டிப்பா எண்ணத்துல எதுவும் தப்பு இல்லை. அதுக்காக நீ இப்படி செய்வியா?” என்றார்.

“உங்க எண்ணத்துல தப்பு இல்லை! நான் தான் தப்பு! எல்லாமே தப்பா போச்சு! எதுக்குமே எனக்கு தகுதியில்லை” என்று மனதிற்குள் நினைத்தான்.

“இல்லை! அதுக்கும் இப்போ என் முடிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை… நாங்க சத்யா அக்காக்கு நிறைய செஞ்சோம்… பொண்ணுங்களுக்கு குடும்ப தொழில்ல பங்கில்லைன்றதால அதுக்கு ஈடா சொத்துக்கள் கல்யாணதப்போவே கொடுத்தோம்… பெரியப்பாவோட முடிவு இது… நீங்க முரளியை கேட்டுப் பாருங்க..” என்றான், அது உண்மையும் கூட.

“இப்போ நாங்க ரஞ்சனிக்கு ஒன்னும் பண்ணலை.. இதுல பணம் வேற வாங்கறோம்! இது தான் நியாயம்…  ப்ளீஸ் பிரச்சனைங்க அதிகமாகிட்டேப் போகுது! பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிடலாம்!” என்று சொல்ல…

எல்லோரும் அன்று இரவு நடந்த பிரச்சனையில் ஈஸ்வர் பயந்து விட்டான் போல என்று தான் நினைத்தனர்.

“விஷ்வா! ப்ளீஸ் இப்படி சொல்லாத.. உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்! ஜகன் அண்ணாக்கு வேணா கொடுத்துடுவோம்…”

“ஷ்” என்று ஒற்றை விரல் வைத்துப் பேசாதே என்பது போல காட்டியன்… “நான் சொல்ற இதையாவது கேளு..”

“நீ… நீ என்ன பண்ணுவ…?”

“ஏதாவது பண்ணுவேன்.. ப்ளீஸ் எல்லோருக்கும் பணத்தைக் குடுத்து முதல்ல கன்சர்ன் பேரைக் காப்பாத்துவோம்” என்றான்.

“ஓகே! நீ சொல்றபடியே பண்ணலாம்! பணத்தைக் கொடுத்து முதல்ல செட்டில் பண்ணலாம்! அப்புறம் பேசிக்கலாம்!” என்று அண்ணனின் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தாள்.

அண்ணனும் தங்கையும் பேச எல்லோரும் பார்த்து தான் இருந்தனர்.

எல்லோரும் என்பதில் வர்ஷினியும் அடக்கம்.

இவர்கள் மூவரும் வந்து ஹாலில் அமர்ந்ததுமே பார்த்து விட்டாள்.. ஆனால் கீழே இறங்கவில்லை. ஈஸ்வரின் தலையில் இருந்த கட்டைப் பார்த்து இருந்தாள். “இவன் தலையை மட்டும் உடைத்தோமே.. வேறு எதுவும் செய்யாமல் விட்டு விட்டோமே” என்று பார்த்து இருக்க..

அவள் எதற்கு பார்க்கிறாள் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரியாது. ஆனால் பார்க்கிறாள் என்று தெரியும் தானே!!!

ஈஸ்வர் வந்ததில் இருந்து மிகவும் கவனமாக கண்களை ஓட்டாமல் அங்கிருந்தவர்களை மட்டும் பார்த்து இருந்தான். ஆனாலும் உள்ளுணர்வு வர்ஷினி மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது. எப்படி இருக்கிறாள் என்று மனம் பார்க்கத் துடித்தது… தேறிக் கொண்டாளா இல்லையா என்று தெரிய வேண்டி இருந்தது.

எது எப்படி என்றாலும் நடந்த அநியாயம் வர்ஷினிக்கு மட்டுமே என்று தெரியும் அளவிற்கு ஈஸ்வரின் மனம் பக்குவப்பட்டு இருந்தது.

இன்னம் தாஸ் ராஜாராம் தவிர வேறு யாருக்கும் இரவு வர்ஷினி ஈஸ்வரோடு இருந்தது தெரியவே தெரியாது.

பேசிக் கொண்டு இருந்த போதே… தாஸ் அரக்க பரக்க வந்தவன் “அய்யா” என்றான்.

“என்னடா?” என்றவரிடம்..

“ஒரு நிமிஷம்” என்று தனியாகக் கூப்பிட்டான்.

முக்கியமான விஷயம் இல்லையென்றால் கூப்பிட மாட்டான் என்றுணர்ந்தவர்…

எழுந்து வர.. அவன் சொல்லி…. கையில் இருந்த பத்திரிக்கையில்   காட்டின விஷயத்தைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்து நின்றவர்.. மறு கணம் கோபத்தோடு தாஸை ஓங்கி ஒரு அறை விட்டார்.

அப்போதும் அசையாமல் கை கட்டி அவர் முன்னிலையில் நின்றான். அவனுக்குமே மனதில் மிகுந்த குற்ற உணர்ச்சி தான் இருக்க இப்படி ஆகிவிட்டதே என்பது போல..

“என்னடா பண்ற நீ! உனக்குப் பாப்பாவை பார்த்துக்கறது விட்டா என்ன வேலை? ஜாக்கிரதையா பாருடான்னு உன்னை உடனே அனுப்பினேனே! இப்படிக் கோட்டை விட்டு வந்து நிக்கறியே”

தாஸ் யார் ஈஸ்வரை அடித்திருப்பர் என்ற கோணத்தில் தான் பார்த்தான். இப்படி வர்ஷினிக்கு பிரச்சனை வரும் என்று அவன் யோசிக்க வில்லை.

தலை குனிந்து நின்றான்.

“என்னப்பா?” என்று மகன்கள் பதறி வந்தனர். அவர் தாசிற்கு கொடுக்கும் இடம் அவர்களுக்கு தெரியாததா என்ன?, அவனை அடித்திருக்கிறார் என்றால் விஷயம் மிகவும் பெரியது என்று உணர முடிந்தது.

“போங்கடா!” என்று அவர்களையும் திட்டியவர்… “சின்னப் பசங்கன்றது சரியாத் தான் இருக்கு” என்றார். யாரிடம் கோபத்தைக் காட்டுவது என்றே தெரியவில்லை.

அவரின் கையில் இருந்த நாளிதழை முரளி வாங்க, அண்ணனும் தம்பியும் பார்த்தனர்.

அந்த நாளிதழில் தறி கெட்டு வரும் இன்றைய தலைமுறையினர் என்ற டேட்டிங் கலாச்சாரத்தை பற்றி எழுதி…. இளைய தலைமுறையினரின் அச்சமற்ற ரகசிய சந்திப்புகள் என்று விவரித்து… அதில் இருந்தது ஈஸ்வர் மற்றும் வர்ஷினியின் புகைப் படங்கள்.

அவர்கள் லிஃப்டிற்காக நிற்பது, அதில் ஈஸ்வர் வர்ஷினியை பார்த்திருப்பது.. திரும்ப லிஃப்டில் இருந்து வெளியே வருவது, மற்றும் வர்ஷினி ரூம் கதவை திறப்பது, அருகில் ஈஸ்வர் நிற்பது….

ஈஸ்வரை பற்றிய செய்தி என்றால் அவனுக்கு உடனே தகவல் சென்ற விடும் என்று தெரிந்து அஸ்வின் மிகவும் புத்திசாலித்தனமாக இப்படி ஒரு செய்தி வெளியிட வைத்தான். அவர்களின் பெயர் எங்குமில்லை. ஆனால் அவர்கள் இருந்தனர்.

அதுவும் தமிழ் பேப்பர் அல்ல, அது ஒரு ஆங்கில நாளிதழின் இணைப்பு, கலர் ஃபோட்டோவாக வந்திருந்தது. அவர்களின் பெயர் எங்குமே இல்லை. ஆனால் இருவரும் தெளிவாக தெரிந்தார்கள்.

“என்ன?” என்று புரியாமல் ஈஸ்வர் வந்து முரளியின் கையினில் இருந்த நாளிதழை வாங்க… அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அது படங்கள் என்பதால், இன்னம் என்ன என்ன படங்களோ யார் கையிலோ இருதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

உணர்வு வந்து வர்ஷினியைக் கண்கள் தேடி தலை நிமிர்ந்து பார்க்க…

என்ன என்று புரியாமல், ஏதோ சரியில்லை என்று புரிந்து, மனம் பதைத்து பார்த்து நின்றிருந்தாள்.

எல்லோரும் அவளைத் தான் பார்த்தனர்.

நாம் செய்யாத செயலுக்கு பல சமயம் பதில் சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடுவோம்! இது தான் விதியின் பெரிய சதி!!!

 

 

Advertisement