Advertisement

                                   கணபதியே அருள்வாய்

காதலும் கற்று மற!

அத்தியாயம் ஒன்று :

எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச் செழுமையை எதிர்காலத்தில் குலைக்கும் விதமாக, ஊருக்குள் இருக்கும் நிலங்கள் எல்லாம் ஃபிளாட்டாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் புதுமையும் பழமையும் கலந்து குழப்பி அடித்துக் கொண்டிருந்தது.

ஒரு புறம் வளர்ந்தும், மற்றொரு புறம் வளர்ந்து கொண்டும் இருக்கும் ஊரினில் இருந்து சென்னை வரை செல்லும் வழி முழுக்க, பெரியப் பெரிய பள்ளிகளும் கல்லூரிகளும் என்று இருந்தது. இந்தப் பெருமைகளையும் இன்னும் சிலவற்றையும் உள்ளடக்கிய பொன்னேரியில் இருந்த ஒரு வீட்டினில் சத்தம். அந்தச் சத்தமும் அமைதியாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அது எப்படி என்றால் எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும், கோபம் வந்தாலும் அதைக் கூட சத்தமில்லாமல் தான் காட்ட முடியும். அங்கே அப்படித்தான். அந்த வீட்டின் தலைவரை எதிர்த்துப் பேசுபவர் யாரும் கிடையாது. அந்தத் தலைவர் அர்த்தனாரி.     

எவ்வளவு சொன்னாலும், கேட்பவர் யாருமில்லை, “மா! நிஜம்மாத் தான் சொல்றேன். அந்தப் பையனுக்கு என்னைப் பிடிக்கலையாம் கல்யாணத்தை நிறுத்திடுங்க!” என்றாள் தமிழரசி அவளின் அம்மாவிடம்.

“அரசி! லூசு மாதிரி பேசக் கூடாது. அதென்ன பையன், மாப்பிள்ளைத் தம்பியை மரியாதையாப் பேசு, அப்பாரு காதுல விழுந்தது காயப் போட்டிருக்குற துணிக்கு பதிலா நீ தான் தொங்கிட்டு இருப்ப!” என்றார் அம்மா பூமா.

“சும்மா அப்பான்னு அப்பான்னு பூச்சாண்டி காட்டுறதை நீங்க எப்போ விடப் போறீங்க! அப்பாக்கு எல்லாம் தெரியும்னு தான் என்னை இங்க கொண்டு வந்து விட்டிருக்கீங்க. அம்மா நான் எவ்வளவு பதட்டமாப் பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்க!” என்றாள் ஆதங்கமாக.

“என்ன? நான் காமெடி பண்றனா! அப்பாரு காதுல விழுந்தா தெரியும் அப்புறம் சேதி!”

“அம்மா!” என்று கண்கலங்கி மகள் நிற்க,

“எல்லாம் நல்ல படியா நடக்கும் கண்ணு. உன்னை யாரோ குழப்பி விட்டிருக்காங்க. நம்புடா! அப்பா அப்படி விசாரிக்காம எதுவும் செய்ய மாட்டார். உன்னோட மாமா கொண்டு வந்த சம்மந்தம், நம்ம ஒன்னும் வசதி வாய்ப்பை பார்த்துக் கொடுக்கலை. பையனைப் பிடிச்சு தான் கொடுக்கறோம். அதுவுமில்லாம என் பொண்ணை பிடிக்கலைன்னு குருடன் கூடக் சொல்ல மாட்டான்!” என்று திருஷ்டி கழித்தார்.

ஆம்! தமிழரசி அழகி, நல்ல நிறமும், சராசரி உயரத்தை விட கொஞ்சம் அதிகமான உயரம், கச்சிதமான சதைப் பற்றற்ற உடலுடன், பெண்களுக்குரிய வளைவுகளும் நெளிவுகளும் கச்சிதமாக அமையப் பெற்று இருப்பாள், இதையெல்லாம் விட முக வசீகரம் அது பார்ப்பவர்களைத் திரும்பப் பார்க்கச் செய்யும். ஆனால் அழகி என்ற உணர்வு எல்லாம் இருக்காது. எல்லோரிடமும் நன்றாகப் பேசக் கூடியவள் பழகக் கூடியவள். பேசாமல் அவளால் இருக்கவே முடியாது. சட்சட்டென்று கோபம் வந்தாலும் அதை அதிக நேரம் இழுத்து வைக்க மாட்டாள். அதுதான் அவளின் தனிச் சிறப்பு.    

“மா!!!!!!!!” என்று எப்படியாவது பூமாவிற்குப் புரிய வைத்து விடும் நோக்கில், “நீங்களே சொல்லுங்க இன்னும் மூணு நாள்ல கல்யாணம் இன்னும் அவங்க ஒரு தடவைக் கூட என்கிட்டேப் பேசலை!”

“அரசி! நம்ம பக்கம் அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை. அவங்க கேட்டாங்க பொண்ணு பார்த்துட்டுப் போனப்ப, மாப்பிள்ளைத் தம்பி அமெரிக்கால இருக்காரு நீங்க பேசணுமா, இல்லை பொண்ணு பேசணுமான்னு, உங்க மாமா அவரை நல்லாத் தெரியும்னு சொன்னதால அப்பா வேண்டாம் சொல்லிட்டார் கண்ணு!” என்றார் சமாதானமாக.

“அம்மா! பயம்மா இருக்கும்மா? இது வாழ்க்கை இல்லையா?”

“அதைத்தான் கண்ணு நானும் சொல்றேன், உன்னோட வாழ்க்கை நாங்க அசால்டா இருப்போமா?” என்றார் கனிவாக.

இரண்டு மாதத்திற்கு முன் வந்த சம்மந்தம் இது, பையன் வீட்டில் அவ்வளவு பெரிய வசதி கிடையாது. ஆனால் பையன் பெரிய வேலையில் இருந்தான், கம்ப்யுடர் கம்பனியில். ஆறு மாதம் இந்தியா, ஆறு மாதம் வெளிநாடு என்று பறந்து கொண்டிருக்க, அரசி அப்பா அர்த்தனாரிக்கு மிகவும் பிடித்து விட்டது.

அரசி வீட்டினர் பரம்பரையாக வசதியானவர்கள், விவசாயம் தான் பிரதானத் தொழில். என்ன வசதி வாய்ப்பென்றாலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வாழ்க்கை என்ற நினைப்பு அர்த்தனாரிக்கு, வெளிநாட்டிற்கு இப்படி பறந்து பறந்து செல்லும் மாப்பிள்ளை வந்தவுடன் மிகவும் பிடித்து விட்டது.

“மாப்பிள்ளைப் பையனை எனக்குத் தெரியும், சின்ன வயசுல இருந்தே, ரொம்ப நல்லவன்!” என்று பெரிய மாப்பிள்ளை ராஜசேகரன் வேறு சர்டிஃபிகேட் கொடுத்தான். மாப்பிள்ளை நல்லவன் தான்! ஆனால் அந்த நல்லவன் வேறு பெண்ணைக் காதலிக்க செய்வான் என்று இந்த நல்லவனுக்கு யார் சொல்வது?

          அர்த்தனாரி பூமா தம்பதியினருக்கு இரு பெண் பிள்ளைகள், பெரியவள் கலையரசி, சிறியவள் தமிழரசி, பெரியவள் கலை ஆகிப் போக, சிறியவள் அரசி ஆகிப் போனாள். அப்படித்தான் அழைப்பர்.    

மாப்பிள்ளை அப்போது வெளிநாட்டில் இருக்க, நேரில் பெரிய மாப்பிள்ளை பார்த்திருக்கவும், நல்லவன் என்றும் சொல்லவும், சரி என்று விட்டார் அர்த்தனாரி. போட்டோவிலும் மாப்பிள்ளை வாட்ட சாட்டமாய் கம்பீரமாய் இருக்க, அர்த்தனாரிக்கு மிகவும் பிடித்து விட்டது. மகளின் அழகிற்கு மிகவும் பொருத்தமாய் இருப்பான் என்று தோன்றியது. குடும்பமும் பெரிய ஆட்களாக இல்லாவிட்டாலும் வம்பு தும்பிற்கு போகாத மரியாதையான குடும்பம்.

அர்த்தனாரி சராசரி உயரம், அதனால் உயரமான மாப்பிள்ளை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.   

நேற்று தான் மாப்பிள்ளை குருபிரசாத் அமெரிக்காவில் இருந்து வந்தான், உடனே அவரை நேரிலும் போய் பார்த்து வந்தார். பரம திருப்தி அவருக்கு, போட்டோவில் பார்த்ததை விட நேரில் இன்னும் அம்சமாய் இருந்தான். பார்வைக்கு அசட்டுத்தனங்கள் சிறிதும் இல்லாத ஆண்மகனாய் இருந்தான்.

இவரைப் பார்த்ததும் கை குவித்து “வாங்க” என்று சொல்லி, வணக்கம் சொன்ன விதமே அவருக்கு அவ்வளவு பிடித்து விட்டது. அமெரிக்க வாசம் குருப்ரசாத்தை கம்பீரத்தோடு ஸ்டைலாகவும் மாற்றி இருந்தது.

மாப்பிள்ளைக்கு ராஜ கலை என்று மனதினில் தோன்ற, எல்லா வேலைகளையும் சிறப்பாய் செய்தாலும் ஏதாவது குறை கண்டுபிடிப்பார் பெரிய மாபிள்ளையிடம், குறை இல்லாமல் பெரிய மாப்பிள்ளை செய்த ஒரே வேலை என்பது போல அர்த்தனாரிக்கு மனதினில் தோன்றிய விஷயம் இது ஒன்று தான்.

இரண்டு பெண் மக்கள் என்பதால், நேரடியான ஆண் வாரிசு இல்லாததினால் பெரிய பெண்ணிற்கு திருமணம் செய்து ராஜசேகரனை வீட்டோடு மாப்பிள்ளையாய் வைத்துக் கொண்டார். ஒன்று விட்ட அக்காவின் மகன் ராஜசேகரன். சராசரி வசதி உள்ளவர்கள் அவர்கள், மூன்று ஆண்மக்கள் அவர்களின் வீட்டினில். அதனால் வீட்டோடு மாப்பிள்ளை என்ற நிபந்தனைக்கு சரி என்று திருமணம் முடிந்து அக்கா வீட்டினர் தன் மகனை இவர்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

ராஜசேகரன் நல்லவன் உண்மையானவன் எல்லோரிடமும் மரியாதையாய் நடக்கும் மனிதன், அர்த்தனாரியின் வீட்டோடு தன்னை நன்கு பொருத்திக் கொண்டான். அர்த்தனாரியோடு விவசாயத்தில் துணை நின்றான். மற்றும் சில கட்டிடங்கள் இருக்க அதன் வாடகை வாங்குவது தனியாக சொந்தமாக ஒரு ஏஜன்சி எடுத்து அதன் மூலம் பொருட்கள் கடைகளுக்குப் போடுவது என்று அர்த்தனாரியின் தொழிலையும் பார்த்து அவனும் தொழில் செய்த்தான்.

அதனால் மாமனார் வீட்டில் இருப்பதனால் வேலை அதிகம் என்ற குறை தான், மற்றபடி அவரை பொருளாதார வகையில் அண்டி இல்லை, ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் கணிசமான தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் வருமானம் இருந்தது. அவனின் மாமியார் பூமாவும், மனைவி கலையரசியும் குறை சொல்லும்படி அவனிடம் நடந்து கொள்ள மாட்டார். ஆனால் அர்த்தனாரி அவன் செய்யும் வேளைகளில் எதாவது குறை காண்பார்.

மனைவிக்காகப் பொறுத்துப் போய் விடுவான். தமிழரசி அவனிடம் மரியாதையாக நடந்து கொள்வாள். ஆனால் அக்காவின் கணவன் என்ற ஒதுக்கம் இருக்கும். அட்வைஸ் என்ற பெயரில் ஒரு வார்த்தை சொன்னால் கூட எனக்குத் தெரியும் என்று தள்ளி நிறுத்தி விடுவாள்.  மரியாதை இருக்கும், சொந்தம் இருக்கும், ஆனால் உரிமை எடுத்துப் பழக மாட்டாள்.

ஆண்களிடம் பழகும் போது யாரும் ஒரு சிறு குறை சொல்லும் அளவு கூட அரசியின் நடத்தை இருக்காது.  அப்பாவிடம் பலத்திற்கு திட்டு வாங்கினாலும் இந்த ஒரு விஷயத்திற்கு வாங்கியதே இல்லை. அநியாயம் பொறுக்காமல் எங்கு சென்றாலும் ஒரு பிரச்சனை இழுத்து வைத்து விடுவாள்.  அதற்காக அப்பாவிடம் எப்போதும் திட்டு விழும்.

ராஜசேகரனின் அம்மா வீட்டிற்குப் பக்கத்து வீடு தான் மாப்பிள்ளை குருப்ரசாத்தின் வீடு. சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்தவர்கள், ஒரே ஆட்கள், ராஜசேகரனை விட மூன்று வயது சிறியவன் குருப்ரசாத். பார்த்து வளர்ந்தவர்கள் அவ்வளவே. ஆனால் இருவருக்குள்ளும் பெரிய சிநேகிதம் எல்லாம் இல்லை. பார்க்கும் போது ஒன்றிரண்டு வார்த்தைகள் அல்லது புன்னகை அவ்வளவே..

அப்பா, குருபிரசாத், இரு தங்கைகள், என இருக்கும் குடும்பம் அவர்களுடையது. அம்மா அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த சமயம் நோய் வாய்ப் பட்டு தவறிவிட, இப்போது இவர்கள் மட்டுமே. முன்பு மிகவும் சாதாரண ஆட்கள்..

சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் குருப்ரசாத்தின் அப்பா நாதன் அவருக்கு வேலை, மிகவும் சிரமத்திற்கு இடையில் மகனுக்கு சிறப்பான கல்வியைக்  கொடுத்தனர். பெண் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் தமிழ் மீடியம் படிக்க, மகனை தனியாரில் சிறந்த பள்ளியில் ஆங்கில மீடியம் படிக்க வைத்தனர் அங்கே இங்கே பணத்தைப் பிரட்டி.

கல்லூரியும் கிடைத்த கல்லூரியை விட்டு, அந்தப் படிப்பில் சிறந்த கல்லூரியில் சேர்த்தனர். மொத்தத்தில் மகனுக்கு எல்லாம் செலவு செய்தனர் பெற்றோர். மகனின் வாழ்வு சிறந்தால் தங்களின் வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையில்.   

அதற்கு தகுந்தார் போல குருவும் படித்து வேளையில் அமர்ந்தான். அவனின் சம்பாத்தியத்தைக் கொண்டு, ஓட்டு வீட்டை மாடி வீடாக மாற்றி இருந்தனர். மகனின் திருமணம் முடிந்த பிறகு தான் பெண் பிள்ளைகளுக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தனர். வயதும் பெண்களுக்கு குறைவு தான் இவனை விட ஏழு வயது சிறியவர்கள். இருவரும் படித்துக் கொண்டு தான் இருந்தனர்.

பெண்ணைப் பெரிய இடத்தில் இருந்து எடுத்தால் அதன் மூலமாக தங்களின் பெண்களுக்கு பெரிய இடத்தில் சம்மந்தம் பேசலாம் என்ற நம்பிக்கையில் நாதன் இருந்தார். அதனைக் கொண்டே இந்த சம்மந்தம் வரவும் கப்பென்று நாதன் பிடித்துக் கொண்டார்.

அர்த்தனாரி வசதியைப் பார்க்கவில்லை, பையனை மட்டுமே பார்த்தார். தோற்றம், அவனின் அடிக்கடி பறக்கும் வெளிநாட்டு வேலை, அங்கே அதே ஊர் என்பதால் அறிந்தவர் தெரிந்தவர் என்று அத்தனை பேரிடமும் விசாரிக்க, எல்லோரும் மாப்பிள்ளை சொக்கத் தங்கம் என, இதோ இன்னும் மூன்று நாட்களில் திருமணம், நேற்று மாப்பிள்ளையையும் பார்த்து வந்திருந்தார்.

மனைவியிடமும் வந்து மாப்பிள்ளையைப் பற்றி அவ்வளவு சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார். 

இப்படியிருக்கையில் அரசி வந்து இன்று காலையில் இருந்து, இப்படி அம்மாவிடம் அக்காவிடம் சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.

“யாரு சொன்னா உனக்கு?” என்றால், அதைச் சொல்லாமல், “எனக்குத் தெரியும்” என்று மட்டும் சொல்ல, பூமாவிற்கு கோபம் வர ஆரம்பித்தது.

“கண்ணு! சும்மா அசட்டுத்தனமாப் பேசக் கூடாது. அப்பா நேத்து போய் மாப்பிள்ளையைப் பார்த்துட்டு வந்து அவ்வளவு நல்ல விதமா சொல்றார். உங்க அப்பாவே எப்பவும் எல்லோர்கிட்டயும் குறை கண்டு பிடிக்கிற மனுஷன். அவரே நல்ல விதமா சொல்றார். அப்புறம் என்ன கண்ணு” என்று அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது, வேகமாக வந்த கலையரசி,

“அம்மா! மாப்பிள்ளை தம்பி அப்பாக்கு ஹார்ட் அட்டாக்காம் சென்னைல இருக்குற ஆசுபத்திரிக்கு இப்போ ஒரு மணிநேரம் முன்ன கொண்டு போய் இருக்காங்க, ஐ சீ யு ல இருக்காறாம்” என்று மகள் சொன்னதும்,

“தெய்வமே! இது என்ன சோதனை!” என்று அப்படியே பூமா அமர்ந்து விட, “அம்மா! நீ எதுவும் இழுத்து விட்டுக்காத, அவருக்கு ஒன்னும் ஆகாது!” என்று கலை சொல்லிக் கொண்டு இருக்க, அரசி அப்படியே நின்று இருந்தாள்.

“அம்மாவை எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு சமாதானப் படுத்து!” என்று கலை அரசியிடம் சொல்லும் போதே, பரபரப்பாக வீட்டிற்கு வந்த அர்த்தனாரி, “பூமா, கிளம்பு போய்ப் பார்த்துட்டு வரலாம்!” என,

அவசரமாகக் கிளம்பினார், அவரோடு கலையும் ராஜசேகரனும் போய் விட, வீட்டில் சில உறவுகள் இருக்க, அவர்களோடு தனித்து விடப் பட்டால் அரசி. மனது முழுவதும் கவலை.

அவளுக்கு விஷயம் அவளின் ஒரு தோழி மூலமாக தெரிந்தது, அவளின் தோழியின் தங்கையும், குருப்ரசாதின் தங்கையும், சிநேகிதிகள், நேற்று அவன் ஊரில் இருந்து வந்த பிறகு மிகவும் சண்டை அவனின் வீட்டில் திருமணம் குறித்து என்று தெரிய வந்தது அப்படித்தான். தெரிந்தது முதல் அம்மாவிடம் அக்காவிடம் சொன்னாள். ஆனால் அவர்கள் நம்பவில்லை.

இப்போது இது! சோர்ந்து அமர்ந்து விட்டாள். அவர்கள் ஹாஸ்பிடல் சென்று சேர்ந்ததும் பேசினர். “கொஞ்சம் சீரியஸ் தான் போல, எதோ ஊசி மருந்து கொடுத்திருக்காங்களாம், இன்னும் இருபத்தி நாலு மணிநேரம் கழிச்சு தான் சொல்ல முடியுமாம்” என்று

“நாங்க சாயந்தரம் வரை இருந்துட்டு வர்றோம்!” என்றனர்.

மூன்று நாட்களில் திருமணம், வீடு முழுக்க திருமண சாமான்கள் இறைந்து கிடந்தன. உறவுகள் ஆளுக்கு ஒரு வேலையாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தனர்.

அப்பா திருமணதிற்கு சொன்னதும், “சரி அப்பா, உங்களுக்கு பிடிச்சா சரி!” என்றிருந்தாள், மாப்பிள்ளையிடம் குறையும் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. நேற்று வரை திருமண கனவுகள், மாப்பிள்ளை பற்றிய கனவுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு இனிமையான நிகழ்வை எதிர்பார்த்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு தன்னைக் கொண்டு செல்ல இருந்தாள் என்பது உண்மை. குருப்ரசாத்திடம் பேச ஒரு ஆர்வமும், ஏன் தன்னிடம் அவன் இன்னும் பேசவில்லை என்ற கேள்வியும் அவளுள் இருந்தது.

இரண்டு மாதமும் திருமணதிற்கு உடைகள், நகைகள், பண்டம் பாத்திரம் என்று வாங்குவதில் போய் விட்டன. அர்த்தனாரி தான் மகளுக்குக் கொடுக்கும் சீர் வரிசையில் ஊரே அசந்து நிற்க வேண்டும் என்று வெகுவாக ஆசைப்பட்டார்.

யோசனைகளில் இருந்த அரசியின் கைப் பேசி மீண்டும் அழைக்க, எதோ ஒரு புதிய நம்பர். அவள் எடுக்கவும், “நான் குரு பேசறேன்!” என்ற ஆழ்ந்த குரல் ஒலிக்க,

மாப்பிள்ளை என்று உடனே புரிய, சில நொடி அமைதி, “தமிழரசி தானே பேசறது” என, “ம்ம்ம்” என்றவள், “அப்பாக்கு எப்படி இருக்கு!” என்றாள்.

மீண்டும் சில நொடி மௌனம், அதை உடைத்தவன், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை, அதை நான் சொன்னதுனால தான் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்” என அவன் சொல்லச் சொல்ல,

மனதின் ஒரு ஓரத்தில் தனக்குக கிடைத்த தகவல் சரியானது இல்லையோ என்ற ஒரு நப்பாசை இருக்க, அது முடிந்தது.

“எப்படியும் காப்பாத்திடுவேன்!” என்று தீர்க்கமாகச் சொன்னவன், “ஆனா என்னால இனி கல்யாணத்தை நிறுத்த முடியும்னு தோணலை. அப்புறம் அப்பாவைக் காப்பாத்த முடியாது. நீ நிறுத்திடு! நான் வேற ஒரு பொண்ணை விரும்பறேன், இவங்க கல்யாண ஏற்பாடு எனக்குத் தெரியவே தெரியாது. ஐ அம் சாரி அபௌட் தட். இதை நிறுத்திடு! எனக்கு வேற ஒரு பொண்ணு இருக்கான்னே சொல்லிக்கோ. நிறுத்திடு!” என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

“அம்மாடி!!! இவன் என்ன லூசா? நான் எப்படிக் கல்யாணத்தை நிறுத்துவேன்!” என்று யோசித்தபடி வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட்டினாள்.

“ஐயோ! எத்தனை ஏற்பாடுகள்! எத்தனை செலவு! அதையும் விட திருமணம் நின்றால் எத்தனை தலை குனிவு! எப்படி இது முடியும்?” என்று யோசித்தாள். 

“அது எப்படி ஒரு திருமணத்தை ஆண்மகனிடம் சொல்லாமல் முடிவு செய்வர். இவன் என்ன என்னை லூசு என்று நினைத்துப் பேசுகின்றானா? ஆனால் இதுவரை உன் வீட்டினர் யாரும் திருமண நிச்சயத்திற்கு பிறகு அவனிடம் பேசியதில்லையே அரசி. என்ன ஒரு சறுக்கல்?” என்று மனது வருந்தியது. கூடவே “பார்த்தாயா உன் அப்பாவின் புத்திசாலித்தனம்!” என்று கெக்கலித்தது. “நேற்று அவன் ஊரில் இருந்து வரவும் தானே அப்பாவும் மாமாவும் சென்று பார்த்து வந்தனர்”

“இன்றையக் காலக்கட்டத்தில் எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! அவன் வெளிநாட்டில் இருந்தால் பேச முடியாதா? முன்பிருந்தே சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். என் பேச்சை யார் கேட்கின்றனர். இந்த அப்பாவிற்கு எல்லாம் அவருக்குத் தான் தெரியும் என்பது போல இறுமாப்பு”

“நானும் மாப்பிள்ளைக்கு இணையாகப் படித்திருக்கின்றேன். வேலைக்குச் செல்லவில்லை என்றாலும் நாலு பேரைப் பார்க்கின்றேன். எனக்கு வெளி உலக அனுபவம் இருக்கின்றது. கொஞ்சமும் என் பேச்சினை வைத்துக் கொள்ளவில்லை. சிறு பெண் எனக்குத் தெரியாது என்று நினைத்து விட்டார். இவரை என்ன செய்ய?” என்று யோசித்த போதே பதட்டத்தில் அழுகை முட்டியது.      

ஆனாலும் எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தான், “என்னோட கல்யாணம் வேண்டாம் சொல்றான்! அவனை நான் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும்?” என்ற எண்ணம் தான்.

ஆனால் தமிழரசியால் எதுவும் செய்ய முடியவில்லை, மூன்று நாட்களில், குறித்த நேரத்தில், மாப்பிள்ளையின் அப்பா மருத்துவமனையில் இருந்த போதும், திருமணம் வெகு சிறப்பாக நடந்தது, மணமக்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமலேயே!!!

 

Advertisement