அம்மா மகன் பாசப்பிணைப்பை ஒரு விரக்திப் புன்னகையோடுப் பார்த்துக் கொண்டிருந்தப் பூமாலை ,
“அத்தை நான் மாமாவைப் பார்த்துட்டு கிளம்புறேன் . மாமாவுக்கு நல்லாகிடும் கவலைப்படாதீங்க..” என சொல்லும் போதே கண்களில் கண்ணீர் வர , அந்த அறையை விட்டு வெளியேறினாள். துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க ஆதவன் இருந்த அறைக்குள் சென்றாள் . இயந்திரங்கள் சூழ ,மூக்கு வாய் என எல்லா இடமும் குழாய்கள் மாட்டப்பட்டிருந்த மாமனின் ஊசியில்லாத கையைத் தொட்டு ,
“நீங்க அத்தைக் கிட்ட என்ன சொன்னீங்க தெரியாது. அத்தை என்னை யாரா நினைக்கிறாங்களோ நான் அப்படியே இருந்துட்டுப் போறேன் மாமா …..நான் நல்லா படிச்சு … நல்ல வேலைக்குப் போவேன் மாமா.நீங்களும் அத்தையும் எனக்கு வேற வேற கிடையாது. அதான் அத்தை கேட்டத கொடுத்துட்டு வந்துட்டேன். நான் வாறேன் மாமா” என்றவள் அறையை விட்டு வெளியே வந்த போது தில்லையும் சூர்யாவும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
“நான் வாறேன் அத்தை….,வாறேன் சார்” என்று விட்டு மருத்துவமனையை விட்டு விடுவிடுவென்று நடந்து வெளியேறப் போனாள். அவளது கைப் பிடித்து நிறுத்தப்படவும் , நின்றவளிடம் ,
“ரோஸ் பட் தனியா எங்கப் போற , வா காருக்கு ….”
கைப்பிடித்து அழைத்துப் போனவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு , ” சார்… சாரயும் அத்தைக் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேனா ….. இல்லயே …. இங்க வலிக்குதே ஏன் …. “இடக்கையால் நெஞ்சைத் தொட்டுக் கொண்டவளை காரில் அமர வைத்தவன் ஏதோ பேசுகிறான் என்பதை உணர்கிறாள் ..ஆனால்.. “எனக்கு காது கேட்கலயோ…. “
இருட்டில் செல்லும் சாலையில் இடக்கையால் அவளை உலுக்கவும் , என்னவென்றுப் பார்க்க ….
“ரோஸ் பட் இவ்வளவு நேரம் நான் பேசுனத கேட்டியா இல்லையா…..”
“இல்லை” என்பதாக தலையசைத்தவளை, இடக்கையால் தோளில் சாய்த்துக் கொண்டு ,
“அம்மா அந்த செயின வாங்கிட்டாங்கனு இவ்வளவு ஃபீல் பண்றியா …. நான் தான் சொன்னேன்ல அதை பெரிசா எடுத்துக்காதனு … நீ தான் கேட்கல…. அது இருந்தாதான் எனக்கு உன்னையப் பிடிக்குமா என்ன …… அப்பா அம்மாகிட்ட என்ன சொன்னாங்களோ இப்ப உன்னையப் பத்திரமா கொண்டு போய் விட்டுட்டு வானு சொல்றாங்க.
அம்மா சொல்றதும் சரிதானே ரோஸ் பட் … படிக்கிற டைம்ல கல்யாணம் அப்படி இப்படினு கமிட் ஆகிறது கொஞ்சம் கஷ்டம் தான். நீ நல்லா படி … அப்பா தேறினதும் அடுத்து என்ன செய்யலாம் பேசிக்கலாம்.”
அதற்கும் தலையசைத்தவள் அந்தப்புறமாக ஜன்னலோரம் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். ” அத்தைக் கேட்டாங்கனு அதைக் கொடுத்துட்டேன் , நீங்க கேட்டீங்கனு எந்தப் பொண்ணும் தரக்கூடாதத தந்துட்டேன் …. மிச்சம் என் உயிர் மட்டும் தான் …. ஆனாலும் ஏதோ ஒன்னு என்கிட்ட இருக்கு… அது அது …..நீங்க….. நீங்க இங்க இருக்கீங்க சார் …” என திரும்பவும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு காரில் கவிழ்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
கார் நிறுத்தப்பட்டிருந்தது , திரும்பவும் அவளை உலுக்கி “உனக்கு என்ன வேணும்…. “
‘தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே….
“ரோஸ் பட் சாப்பிட என்ன வேணும்…..”
” உங்களுக்குப் பிடிச்சது வாங்கித் தாங்க ….”
“உன் மூட் சரியில்லனு தெரியுது …. சரி நானே வாங்கிட்டு வாறேன்..”
வாங்கிக் கொண்டு வந்தவன் அபார்ட்மென்டில் காரைச் செலுத்தவும் ,
“இங்க ஏன் வாறோம்…. என்னைய திரும்ப ஹாஸ்டல்ல விட்டுருங்க சார்… ” சொல்லும் போதே தொண்டை அடைத்தது பூமாலைக்கு.
காரிலிருந்து இறங்கி அவளைத் தோள் மீது கைப் போட்டுக் கொண்டே லிப்டில் அழைத்துச் சென்றவன்.
“அப்பா உன் படிப்பு முடிஞ்சு நீ வேலைக்கு போற வரை என் பொறுப்பு தான்னு சொல்லிருக்கார். அம்மாவுக்கு உன்னையப் பத்தி தெரியாது….எனக்குத் தெரியுமே… அப்படியே உன்னைய விட்டுருவேனா….”
அவளுக்கு சாப்பாடை பிரித்து தந்து “சாப்பிட்டு … படுத்து தூங்கு … நான் வந்து பேசுறேன்” என எழுந்தவனை கைப் பிடித்து , இட்லியை பிய்த்து அவனுக்கு ஊட்டினாள். அவனும் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு , கன்னத்தில் தட்டி விட்டுச் சென்றான். எழுந்து பால்கனி சென்றவள் அவன் கார் மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால் தானே நிம்மதி…..’
அழுது கொண்டே உள்ளே வந்து சாப்பிடாமலே சோஃபாவில் சுருண்டு கொண்டாள்.
எப்போது உறங்கினாளோ …. பால்கனியிலிருந்து சூரிய வெளிச்சம் கண்ணில் படவும் தான் எழுந்தாள். மொபைலை எடுத்துப் பார்க்க …. “அப்பா ரொம்ப சீரியஸ் கண்டிஷன் ரோஸ் பட் …… நாளை வாறேன்” என்பதாக மெஸேஜ் அனுப்பி இருந்தான். 
பல வித யோசனைகளோடு அன்றைய நாளைக் கடத்தியவளுக்கு சமைத்து உண்ணவும் பிடிக்கவில்லை. முன்பு வந்தபோது வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டும் ,பாலில்லாத காஃபியும் குடித்தவள் மாலையில் பூங்காவிற்கு சென்று விட்டாள்.
இரவிலிருந்து சரியாக சாப்பிடாமல் சோர்வாக இருந்ததால் அவளால் குழந்தைகளோடு விளையாட முடியவில்லை. அன்னம்மா அருகில் அவர் வைத்திருந்த கைக்குழந்தையை மட்டும் மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“எங்க மாலாம்மா உன் தாலிக்கொடி “
திடுக்கிட்டுப் பார்த்தவள் , “அது அது ரொம்ப வெயிட்டா இருக்கு அன்னம்மா … அதான் சின்னதா வாங்கித் தாறேன் சொல்லிருக்காங்க “
” என்னமோ மாலாம்மா இந்தக் காலத்துப் பிள்ளைங்க தாலிய கழட்டி கழட்டி வைக்கிறீங்க … “அதற்குள் ஒரு சிறுமி வந்து குழந்தைகள் சுற்றி விளையாடும் காரில் ஏற்றி விடச் சொல்ல, எழுந்து சென்று சுற்றி விட்டவளுக்கு தலையைச் சுற்றுவது போல இருக்க அன்னம்மா அருகில் வரப் போக குமட்டல் வந்து அருகில் இருந்த புதரில் சென்று வாந்தி எடுத்தவள் , புல்வெளிக்கு தண்ணீர் விடும் குழாயில் வாய்க் கொப்பளித்து முகம் கழுவி வந்தாள்.
குழந்தையோடு அவளருகில் வந்த அன்னம்மா என்னவென்று கேட்க … சாப்பிட்டது ஒத்துக்கொள்ளவில்லை என்று விட்டாள். சிறிது நேரத்தில் மறுபடியும் சென்று வாந்தி எடுத்து வரவும் ,
“மாலாம்மா கடைசியா எப்ப குளிச்ச ….”
” காலையில குளிச்சிட்டுத்தான் வாறேன் அன்னம்மா…..”
புன்னகைத்துக் கொண்ட அன்னம்மா அவளிடம் விளக்கமாக கேட்கவும் , அவள் சொன்ன பதிலில் மகிழ்ந்த அந்தப் பெரியவர் , “அப்ப நல்ல விஷயமா தான் இருக்கும் மாலாம்மா… நான் வீட்டுக்குப் போறப்ப டாக்டரம்மா வந்துருவாங்க அவங்க கிட்ட காட்டி உறுதிப்படுத்திக்கலாம்” எனவும் ,
” என்ன அன்னம்மா சொல்றீங்க …. எனக்கு ஒன்னுமே புரியல….” என்றவளிடம்,
“மாலாம்மா நீ அம்மா ஆகப் போற … இந்த நல்ல விஷயத்தை உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லு…. ஆனா டாக்டர்கிட்ட ஒரு தடவை கேட்டுட்டு சொல்லு… ” என்றார். அவர் வயதுக்கு திருமணமான பெண்ணுக்கு இது ஒரு வரம் … அது பூமாலைக்கு கிடைத்திருக்கிறது. அவள் வயதோ ….அவள் படிப்போ அந்தக் காலப் பெண்மணிக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
சோகம் மட்டுமே சுமந்துக் கொண்டிருந்தவளுக்கும் அன்னம்மாவின் வார்த்தைகள் காதில் விழுந்து மூளையை அடையவும் , தன் வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டு நின்றவளுக்கு இந்த உலகின் அத்தனை சந்தோஷங்களும் தனக்கு மட்டுமே கிடைத்தது போல் உணர்வு.
தொண்டைக்கமற… “அன்னம்மா….” என்றவளை ,
“வா மாலாம்மா …  டாக்டரம்மா கார் உள்ள வருது” என்றவர் அவளை அழைத்துக் கொண்டுச் சென்றார். அவளைத் தன் பேரப்பிள்ளைகளோடு பார்த்திருத்த அந்தப் பெண்மணியும் அவளைப் பரிசோதித்து  கர்ப்பத்தை உறுதி செய்து விட்டு ,
“நீ ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கியேமா…. ” என்றவர் அவரது விசிட்டிங் கார்டைத் தந்து , “உன் ஹஸ்பன்டக் கூட்டிட்டு இங்க வா ..அங்கயே எல்லா டெஸ்டும் பண்ணிட்டு அடுத்து என்ன செய்யலாம் பார்க்கலாம்.”
மகிழ்ச்சியோடு வீட்டை அடைந்தவள் பின்னாடியே சூர்யாவும் வந்தான். உள்ளே வந்தவன் சோஃபாவில் தலையை பின்னால் சாய்த்தவாறு  கண்களை மூடி அமர்ந்து  கொண்டான். அவனது தோற்றம் என்னவோ செய்ய அவன் முன்பு போய் நின்று “சார் ” என…
அப்படியே அவளது இடுப்போடு கட்டி வயிற்றில் தலை வைத்துக் கொண்டவன் , “ரோஸ்… பட்…. அப்பா அப்பா ரொம்ப கஷ்டப்படுறார் ….. டாக்டர்ஸ் அப்பா இனி எழுந்து வர்றது கஷ்டம்னு சொல்றாங்க… முடியல … அம்மாவ எப்படி சமாதனப்படுத்தறதுனும் தெரியல…..”
” வயிற்றில் ஈரம் படுகிறதோ… உங்க பிள்ளைக்கிட்ட ஆறுதல் தேடுறீங்களா…. ” அவன் தலையை இன்னும் இறுக்கி ஒட்டிக் கொண்டவள் … ஆறுதலாக அவன் தலைகோத … அதற்குள் அவன் ஃபோன் அடிக்க ஆரம்பிக்க, எடுத்துப் பார்த்தவன் , “ஹாஸ்பிட்டல்ல இருந்துதான் ” எடுத்து காதில் கொடுத்துக் கொண்டே வெளியேறியவன் பின்னாலயே தன் கைப்பையைும்  ஃபோனையும் எடுத்துக் கொண்டு பின்னாடியே கதவை பூட்டிக் கொண்டு ஒடினாள்.
காரில் கூடவே ஏறிய வளைப் பார்த்த சூர்யாவிடம் “நானும் மாமா பார்க்கணும்” என்று விட விரைவாக காரைச் செலுத்த , மருத்துவமனை முன்புற வாசலில் மீடியாக்காரர்கள் கூட்டம் தெரியவும் , பின் வாசலில் காரை நிறுத்தி பூமாலைக் கைப் பிடித்துக் கொண்டே அங்கிருந்த லிப்டில் ஏறி ஆதவன் இருந்த அறைக்குள் செல்ல , அங்கிருந்தவர்கள் கவனமெல்லாம் ஆதவன் மேலிருக்க ,
பூமாலைக் கையை பிடித்திருந்த மகனைப் பார்த்தவர் ஏதோ ஓர் நிம்மதியில்  தன்  மூச்சை  நிறுத்திக் கொண்டார்.