அந்த இரவு நேரம் நிலவின் ஒளியில் கடல் அழகாக ஜொலிக்க .. தூரத்தில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களில் வெளிச்சம் நீரில் பட்டு அதுவும் அழகாகத் தெரிய , சூர்யாவின் கைவளைவில் தன் கையை செலுத்தி கடற்கரை ஓரமாக மணலில் கால் புதைய நடந்துக் கொண்டிருந்தாள் பூமாலை .
“சார் வாரீங்களா தண்ணீல கால் வைக்கலாம் ….”
” நீ போ நான் இங்கயே உட்கார்ந்துக்கிறேன்…. “
கடல் அலையில் கால் நனைத்து விளையாடியவள் களைத்துப் போய் சூர்யா அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.
“நீ கடல் பார்த்தது இல்லையா ரோஸ் பட் “
“ம்ஹூம் …. இப்பதான் நேர்ல பார்க்கிறேன் …சரி போகலாமா … அந்தப் பக்கம் ரொம்ப இருட்டா இருக்கு பார்க்கவே பயமா இருக்கு ….”
அவளின் பயம் அறிந்தவன் என்பதால் புன்னகைத்துக் கொண்டே எழுந்தவன் , தோள் மீது கைப் போட்டு அவர்களது கெஸ்ட் ஹவுஸ் க்கு அழைத்துச் சென்றான். அப்பொழுதுதான் கவனித்தான் வழக்கமாக அங்கு பணிபுரியும் செக்யூரிட்டிகள் அங்கு இல்லை அவரிடம் பேச்சுக் கொடுத்ததில் , அவர் மங்களூர் எஸ்டேட் செக்யூரிட்டி என்பதும் இரு நாட்களுக்குப் பின் அவர் திரும்பவும் அங்கு சென்று விடுவார் என்பதும்.
சூர்யாவிற்கு குழப்பமாக இருந்தது … அப்படி என்ன பிரச்சினை … அம்மாவுக்கு அவர்கள் இங்கு வந்தது தெரிந்து விடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு என்பது.பூமாலையிடம் கேட்டுப் பார்க்கலாம் என்றுத் திரும்பியவன் கண்களில் ஈரத் துணி உடலோடு ஒட்டி அவளது இளமை அழகையெல்லாம் சூர்யாவின் பார்வையில் பட விட்டுக் கொண்டிருக்கவும் ….. உடைமாற்ற  துணிகள் எடுத்துக் கொண்டிருந்தவள் பின்னோடு சென்றுக் கட்டிக் கொண்டவனை ,
“சார் ரொம்ப ஈரம் , மண்ணா வேற ஒட்டியிருக்கு … விடுங்க நான் குளிச்சிட்டு வாறேன்..”
“ரோஸ் பட் … இந்த  ட்ரஸ் உனக்கு ரொம்ப அழகா மட்டுமில்ல ….. எனக்கு ரொம்ப வசதியாவும் இருக்கு … அன்னைக்கு இதை இழுத்துப் போட்டதுக்குத் தானே என் ட்ரஸ் எடுத்துட்டு ஓடுன ….இப்ப என்ன செய்றப் பார்ப்போம்…” என தாவணியில் கை வைக்க…..
 அதன் பிறகு சூர்யாவிற்கு வேறு ஒன்றும் நினைவில் இல்லை. அவளைப் பிரிந்து இருந்த நாட்களை எல்லாம் ஈடுகட்டுவே நேரம் சரியாக இருந்தது.
அதிகாலையிலயே குளித்து வெளியே செல்லும் உடை உடுத்தி தயாராக இருந்தவளிடம் , படுக்கையில் இருந்துக் கொண்டே , “ரோஸ் பட் என்ன இவ்வளவு சீக்கிரம் ரெடியாகிட்ட … வா வா வந்துப் படு… “
தயங்கிக் கொண்டே , ” சார் நாம அங்க போகலாமா “
“எங்க …. நம்ம வீட்டுக்கா” அவன் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியைத் தர , ” ம்…. ஆமாம் சார் … அந்த வீடு , அன்னம்மா….”
” உன் பிளே பார்க் , அம்மு குட்டி , செல்ல குட்டி , நாய் குட்டி , நரிக்குட்டி எல்லாத்தையும் மிஸ் பண்றியா, நாளைக்குப் போகலாம், ஒரு ரெண்டு நாள் ரிலாக்ஸ் பண்ணிட்டு கிளம்புறேனே….” என சிரிக்கவும் ,
“போங்க சார்….கிண்டல் பண்றீங்க…. எனக்கு எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு …. நீங்க ஊருக்குப் போன பிறகு அவங்களையும் பார்க்க முடியாது”.
“ஏன் முடியாது அப்பா அம்மாகிட்ட பேசின பிறகு அம்மாக்கூடத்தான் இருப்ப … அப்போ அம்மாகிட்ட சொல்லி அவங்களை எல்லாம் வாரம் வாரம் பார்க்க கூட்டிட்டுப் போகச் சொல்றேன்…. ஆமா கேக்கணும்னு நினைச்சேன்…. உனக்கு முதல்லயே தெரியுமா .. அப்பா தங்கச்சிப் பொண்ணுதான் நீன்னு “
“ம்ஹூம் தெரியாது.அப்பாவோட ஃபிரண்டா தான் தெரியும் …. நம்ம ஊருக்கு வந்தப்போ தான் மாமா சொன்னாங்க…. ” தயங்கிக் கொண்டே ,
“சார் மாமாஅத்தை கிட்ட இத்தனை வருஷம் சொல்லாம இருந்துருக்காங்கனா ஏதோ ஸ்ட்ராங்ரீஸன் இருக்கப் போய் தானே….இப்ப திடீர்னு சொன்னா அத்தையால ஏத்துக்க முடியுமா …. எப்படி ஃபீல் பண்ணுவாங்களோ…..”
“ம் …நீ சரியாதான் சொல்ற ரோஸ் பட் … ஆனா எங்கம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க … அவ்வளவு ஈஸியா யாரையும் வெறுக்க மாட்டாங்க…. பார்க்கலாம் … “
 இரு நாட்கள் அங்கு தங்கியவர்கள் திங்கள் காலையே  இருவரும் அவர்களது அபார்ட்மென்ட்க்குச்  சென்றுவிட்டனர். இருவருமே அந்நாட்களை மிகவும் மகிழ்ச்சியாகவே கடந்தனர் எனலாம். 
அன்று இரவு வழக்கம் போல் அவனைப் பிரியப்போகிறோம் என்ற கவலைப் பிடித்துக் கொள்ள , லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டிருந்தவன் தோளில் சாய்ந்துக் கொண்டே ,
“நீங்க யு எஸ் போய்ட்டு எப்ப வருவீங்க”
“ம்… ஒரு மூணு மூணரை வருஷம் ஆகலாம் … நீ என்ஜினியரிங் கம்ப்ளீட் பண்ணதும் நான் இங்க வந்துருவேன். எனக்கு அங்க இருக்கத்தான் ஆசை … ° அப்பாவுக்காக தான் இங்க வரவே சம்மதிச்சேன்… இங்க வந்து ஐடி பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணுனு சொல்லவும் தான் இப்ப இங்க வந்ததுமே … இல்ல அங்கயே இருந்துருப்பேன்.வந்த இடத்துல அப்பாவுக்கு இப்படியானது கொஞ்சம் ஷாக் தான் ….” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தவன் சுவாமிநாதன் எனவும் ,
“என்ன அங்கிள் இந்த நேரத்துல ….” எனவும் எதிர் முனையில் என்ன சொல்லப்பட்டதோ, வேகமாக லேப்-டாப் பை மூடியவன் ,
” ரோஸ் பட் அப்பாவுக்கு திரும்பவும் சீரியஸாகி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம்… மார்னிங் வந்து உன்னைக் காலேஜ்ல விடுறேன் … என்றவாறே வெளியேறப் போனவனது வலது கைப் பிடித்து தடுத்தவள்… 
“நானும் மாமா பார்க்க வாறேனே… ” என , யோசித்தவன், “காலையில காலேஜ் போறதுக்கு முன்னால கூட்டிட்டுப் போறேன்” என்றவன் கிளம்பி விட்டான்.
மருத்துவமனையிலோ ஆதவன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க , தில்லை வெளியே அமர்ந்து சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தார். மருத்துவர்களிடம் தந்தையின் உடல்நிலைப் பற்றிக் கேட்டவன் தாயின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டான்.தில்லை மகனையேப் பார்த்தவர் அவன் கைப்பற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். தாயின் மனநிலை அறிந்து அவனும் அவரைத் தோள் சாய்த்துக் கொண்டான்.
சென்ற முறை அவரது உடல் நிலைக் குறித்த செய்திகள் வெளியே கசியாதவாறு பார்த்துக் கொண்டவர்களால் இம்முறை முடியவில்லை. பிரபல தொழிலதிபர் உடல் நிலை குறித்த செய்திகள் மீடியாவில் வர ஆரம்பித்துவிட்டது.
தொலைக்காட்சியில் இந்தச் செய்திகளைப் பார்த்த பூமாலையின் மனதும் வேதனை அடைந்தது.அவளது வகுப்புத் தோழி வனிதாவின் வீடு அந்தக் குடியிருப்பு வளாகத்தின் அருகிலேயேஇருப்பதால் அவளுடனே தான் கல்லூரிக்கு சென்றுக் கொள்வதாகவும் , சூர்யா மாமாவை கவனித்துக் கொள்ளுமாறும் இரவே அவனுக்கு மெஸேஜ் அனுப்பி வைத்து விட்டாள்.
அவன் அந்த மெசேஜை அவள் கல்லூரிக்கு கிளம்பிச்  செல்லும் வரை பார்த்ததாகத் தெரியவில்லை. அவனிடமிருந்து ஃபோனும் வரவில்லை. கூட்டிப் போக வருவேன் என்றவனும் வந்தானா தெரியவில்லை. அந்த வார இறுதியில் கல்லூரிக்கு அவளை அழைத்துப் போக வந்த சூர்யா , மிகவும் களைத்துப் போய் தெரிந்தான். சோர்வாக இருந்தவனிடம் ஆதவனின் உடல்நிலைக் குறித்துக் கேட்க , அவரது உடல் தற்போது இயந்திரங்களின் உதவியோடு மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதை தெரிவித்தவன் …
“ரோஸ் பட் இப்ப நாம ஹாஸ்பிட்டல் தான் போறோம். இப்ப அம்மா ஃபோன் பண்ணி , வரும் போது பூமாலையை கூட்டிட்டு வான்னு சொன்னாங்க…. அப்பா எல்லாம் சொல்லிட்டாரா இல்லையா தெரியாது. ஒரு வாரமா அவங்க அதிகம் பேசவே இல்ல. அமைதியா அழுதுட்டே இருந்தவங்க இப்பதான்.. எங்கிட்டயே பேசினாங்க…. என்னால முடியல ரோஸ் பட்….. அப்பா உயிருக்கு போராடுறார் …. அம்மா எங்கயோ வெறிச்சுப் பார்த்துட்டே இருக்காங்க …. அப்பாவுக்கு இப்படி ஆனதுல நம்ம ஷேர்ஸ் குறைஞ்சிட்டே இருக்கு… என்னையப் பொறுப்பெடுத்துக்க ஃபோர்ஸ் பண்றாங்க ரோஸ் பட்…. எனக்கு விருப்பம் இல்லாத வேலைய செய்றது எனக்கு பெரிய மன அழுத்தத்தை தருது….என்னோட  சாப்ட்வேர் கம்பெனி கனவு கனவாவே போயிருமோ… முடியல ரோஸ் பட் , முடியல…..” என்றவன் ஸ்டியரிங்கில் இரு கைகளையும் ஊன்றி தலையில் கை வைத்துக் கொண்டான்.
“சாருக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறப்போ என்னைய பத்தி யோசிக்க அவங்களால எப்படி முடியும் …. பாவம்தான் சார்” என்று நினைத்துக் கொண்டவள் , அவன் தோள் மீது கை வைத்து , சீக்கிரம் எல்லாம் சரியாகும் சார்….” என்றாள்.
மருத்துவமனையில் ஆதவன் இருந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்த தில்லையின் அருகே சென்ற பூமாலை , “அத்தை ” என அழைக்க , அவள் கையைப் பிடித்துக் கொண்டே எழுந்தவர் , அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
உள்ளே வந்தவுடன் கதவைச் சாத்தியவர் , “பூமாலை… நீ பாக்யத்தோட தங்கச்சிப் பொண்ணு மட்டுமில்ல , அவரோட ஃபிரண்ட் ஆனந்த் அண்ணாவோட பொண்ணுனு சொன்னார். பூமாலையும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ,
“அன்னைக்கு சூழ்நிலைல, ஏதோ ஒரு பயத்துல சூர்யா கல்யாணத்த பார்க்கணும்கிற ஆசைல முத்தாரம்மனுக்கு போட வச்சிருந்த தாலிய எடுத்து உனக்கு போட வச்சிருக்கார். இப்ப அதை அம்மனுக்கு போடாததால தான் அவர் இப்படி உயிருக்கு போராடுறாரோனு எனக்கு பயமா இருக்குமா …..”
தன் முந்தானை எடுத்து அவள் முன் ஏந்தி , “எனக்கு அதை திருப்பிக் கொடுக்கிறியா ….” என்று அழ ஆரம்பித்துவிட்டார். அவர் அழுகையைப் பார்த்த பூமாலையால் சும்மா இருக்க முடியுமா , சட்டென்று கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த துப்பட்டாவை கீழே போட்டுவிட்டு தன் கழுத்தில் கிடந்த சங்கிலியை கழட்ட ஆரம்பித்தாள்.
ஆனால் அது உடனே வெளியே வரவில்லை , அவளது நீண்ட கூந்தலில் சிக்கிக் கொண்டது , அவள் அதையும் பொருட்படுத்தாது முடியோடு பிய்த்து எடுக்கப் பார்க்க , பார்த்துக் கொண்டிருந்த சூர்யா அவளருகே வந்து பிடரியில் சிக்கியிருந்த சங்கிலியை மென்மையாக விடுவிக்கலானான்.
அதுவரை அத்தைக் கேட்கிறார்கள், அழுகிறார்கள் தந்து விட வேண்டும் என்ற வேகத்தில் எடுத்துக் கொண்டிருந்தவள் , முகத்தருகே சூர்யாவைக் கண்டதும்  கண்ணீர் பொங்க ஆம்பித்துவிட்டது. அவனும் அவளையேப் பார்த்தவன் அதைக் கழற்றி அவள் கையில் தர , அதைத் தில்லை பிடித்திருந்த புடவை முந்தியில் போட்டு விட்டு, அவர் முகத்தையேப் பார்த்தாள்.
திரும்பவும் அவர் கைகுவிக்கப் போகவும் , அதை கீழே இறக்கிவிட்டவளிடம்,
“அவர் பண்ண தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். படிக்கிற புள்ளைய இப்படி பண்ணியிருக்கக் கூடாது. அன்னைக்கு உங்க மூணு பேருக்கும் தான் இப்படி ஒன்னு நடந்தது தெரியும் சொன்னாரு. இப்ப நான் இதை வாங்கினதும் நம்ம மூணு பேருக்கும் மட்டும் தெரிஞ்சதா இருக்கட்டும். பாக்யத்துக்கும் தெரியாதது தெரியாததாவே இருக்கட்டும் . மொத்ததில் இப்படி ஒரு சம்பவம் நடக்காததாவே நினைச்சுக்கோங்க …… “அவள் கைப் பிடித்துக் கொண்டு ,
 “நீ உன் படிப்ப பாருமா….. யாருக்காகவோ என் படிப்ப நிப்பாட்டி சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சாங்க …. ஆனா இன்னைக்கு யோசிக்கிறேன் ….. நீ படிச்சு முடிச்சு உன் கால்ல நிக்கப் பாரு…. அதுதான் உன் கூட கடைசி வரை வரும் ” சூர்யாவைப் பார்த்தவர் ,
“கண்டிப்பா சூர்யாவுக்கு இது ஒரு விஷயமே கிடையாது அப்பா செய்யுனு சொன்னா செய்வான்.அது போல தான் நான் செய்ய சொல்றதயும் செய்வான்…. “அவனருகில் வந்து மகனை நிமிர்ந்துப் பார்த்தவர் ,
“அம்மா சொல்றத செய்வதானேப்பா…..” எனவும் ,” என்னம்மா இப்படி ஒரு கேள்வி …. நான் உங்க பையன் மா , நீங்க சொல்லி நான் என்ன கேட்காம இருந்தேன். நீங்க சொல்றத கண்டிப்பா செய்வேன் மா ….” என்றவன் அவரை தோளோடு அணைத்துக் கொண்டான்.