பொதிப்பருவம்_9_2
“அவ அப்பா வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருக்கான்..அவ பர்த்டே அன்னைக்கு சாயந்திரமா தான் திரும்பி வரான்..அதான் மூட் சரியில்லே.” என்றார் நிவேதிதாவின் பாட்டி.
“நாளானிக்கு இவ பர்த் டே..கரெக்டா?” என்று கேட்டாள் பவி.
“ஆமாம்..அதுக்கு அடுத்த நாள் நாங்க எல்லாரும்  துர்கா பூஜாக்கு ஊருக்குப் போகப் போறோம்..அதனாலே  பர்த்டே பார்ட்டி எதுவும் அரென்ஜ் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டான்..அதான் இவளுக்கு வருத்தம்.” என்றார்.
“வீட்லையே சின்னதா பார்ட்டி செய்யலாமே.” என்றாள் பவி.
“வெளியேப் பார்ட்டி வைச்சாதான் ஸ்கூல் பிரண்ட்ஸைக் கூப்பிட முடியும்..வீட்லே பார்ட்டி வைச்சா பிளாக்லே இருக்கறவங்களை மட்டும் தான் இன்வைட் செய்ய முடியும்..இவ அம்மா ஆபிஸ்லேர்ந்து வர்றத்துக்கு ஏழு மணியாயிடுது…அவளாலே ஸ்னாக்ஸ், கேக் எல்லாம் தயார் செய்ய முடியாது.. கடைலேதான் ஆர்டர் கொடுக்கணும்..அதுக்கு முப்பது கெஸ்டாவது கூப்பிடணும்…அவ்வளவு பேர் எங்க பிளாக்கிலேப் பழக்கமில்லை….டிரை ஸ்னாக்ஸ்கூட நான் செய்திடுவேன்..ஆனா எனக்கு கேக் செய்ய வராது.” என்றார் மிஸஸ் ஸென்.
“ஸ்கூல்லே ஒவ்வொரு மாசமும் அந்த மாசத்திலேப் பிறந்த எல்லா குழந்தைங்களுக்கும் சேர்த்து  ஒரு நாள் பர்த் டே பார்ட்டி செய்யறோம்…இந்த மாசம் எங்க கிளாஸ்லே இவளுக்கு மட்டும்தான் பர்த் டே.” என்றாள் பவி.
பவி சொன்னதைக் கேட்ட கொண்டிருந்த நிவேதிதா அவள் பாட்டியின் காதில் கிசுகிசுத்தாள்.
“என்ன சொல்றா?”
“அவளுக்குத் தனியா பர்த் டே கேக் வேணும்ங்கறா.” என்றார் மிஸஸ் ஸென். 
ஒரே ஒரு நிமிடம் யோசித்த பவி,”நான் கேக் செய்து தரேன்..லெட்ஸ் செலிப்ரெட் யுவர் பர்த் டே.” என்று நிவேதிதாவைப் பார்த்து சொன்னாள்.
அதைக் கேட்டவுடன் சோர்ந்துப் போயிருந்த நிவேதிதாவின் முகம் மலர்ந்து போனது. உடனே அவள் பாட்டியிடமிருந்து பவியிடம் தாவினாள்.  
நிவேதிதாவைத் தூக்கிக் கொண்ட பவி, “எனக்கு முட்டைப் போடாத வெஜிடெரியன் கேக்தான் பண்ணத் தெரியும்.” என்றாள்.
“நவராத்திரிலே நாங்களும் முட்டை சாப்பிட மாட்டோம்.”
“இவளுக்கு எந்த ஃபிளேவர் பிடிக்கும்?” 
“சாக்லெட், வண்ணிலா, மிக்ஸ்ட் ஃப்ரூட்.” என்றார் நிவியின் பாட்டி.
“எனக்குக் கடை மாதிரி பேக் செய்ய வராது..சுமாரா செய்வேன்.” என்றாள் பவி.
“எப்படி இருந்தாலும் பரவாயில்லை.. நிவிக்காகன்னு நீங்க செய்யறீங்க..ரொம்ப தாங்க்ஸ்.” என்று பவிக்கு நன்றி கூறினார் மிஸஸ் ஸென்.
“யெஸ்..இவளோட ஸாட் ஃபேஸ் எனக்குப் பிடிக்கலே..ஸ்மைல் பேபி.” என்றாள் நிவியைப் பார்த்து பவி.
அதற்குபின் பவியுடன் சிரித்து பேசியபடி சந்தோஷமாக பஸ்ஸில் ஏறி அவள் பாட்டிக்கு டாடா காட்டியபடி ஸ்கூலுக்கு சென்றாள் நிவேதிதா.
வீட்டிற்குத் திரும்பி வந்த தீபக்கின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்து,”என்ன டா சிரிச்சிண்டு வர?” என்று சுகந்தி கேட்டார்.
“நோக்கு வேலை வந்திடுத்து.”
“என்ன டா?’
“ஒரு குழந்தைக்குப் பவி அக்கா பர்த்டே கேக் பிராமிஸ் செய்திருக்கா.”
“யாருக்கு டா?’
“நம்ம காலனி தான்..அவ கிளாஸ்லேப் படிக்கறா.”
“நிவேதிதாவா?”
“ஆமாம்.”
“என்னைக்கு பர்த் டே?”
“நாளானிக்கு”
“நவராத்திரிலே பிறந்திருக்கா குழந்தை….ஃபிரிஜ் நிறைய சாக்லெட் ஏற்கனவே பவி பண்ணி வைச்சிருக்கா.. நான் கேக் பண்ணி கொடுத்தா போச்சு..சும்மாதானே இருக்கேன்.” என்றார் சுகந்தி.
டைனிங் டேபிளில் அமர்ந்துக் கொண்ட தீபக்,”அம்மா..உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.” என்றான்.
“என்ன டா?” என்று கேட்டுக் கொண்டே அவனெதிரே அமர்ந்தார் சுகந்தி.
“மாமா நேக்கு ஃபோன் பண்ணியிருந்தார்.”
அது என்ன புதுசு என்ற பார்வையுடன் அமர்ந்திருந்த சுகந்தியைப் பார்த்து,”பவி அக்கா கல்யாண விஷயமா.” என்றான் தீபக்.
“எப்ப டா?”
“நான் இங்கே கிளம்பி வர்றத்துக்கு முன்னாடி..நல்ல இடம் ..நீ பிடிகொடுத்து பேச மாட்டேங்கறேன்னு வருத்தப்பட்டார்.” என்றான் தீபக்.
“நான் இல்லை டா..பவி பிடி கொடுக்க மாட்டேங்கறா டா..நீதான் அவ பேசினதைக் கேட்டியே.”
“கேட்டேன் மா..சித்தப்பாவை விடு..மாமாவை முன்னாடி வைச்சு நாம பேசலாமே.”
“இப்ப வேணாடம்னு சொல்லிட்டா..அடுத்த வருஷம் பார்க்கலாம்னு சொல்றா.”
“நேக்கு ஒரு வேலை கிடைக்கறவரைக்கும் வெயிட் பண்ண போறாளா?”
“அப்படி தான்னு நினைக்கறேன்..உங்கப்பாவோட ஸெட்டில்மெண்ட பணத்தை அவ கல்யாணத்துக்குதான் வைச்சிருக்கேன்..இவ்வளவு நாள் அஷ்வினி, நர்மதா இரண்டு பேருக்கும் கல்யாணமாகனும்னு காத்திண்டிருந்தேன்..அவாளுக்கு நல்லபடியா ஆயிடுத்து அதுக்கு என்னாலே முடிஞ்சதையும் பண்ணியாச்சு டா..
இனி பவியைப் பற்றி தான் யோசிக்கணும்..அதனாலதான் பவிக்கு இங்க வேலைக் கிடைச்சவுடன சரின்னு சொல்லிட்டேன்..அவளுக்கும் இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கு..நோக்கும் இங்கையே ஒரு நல்ல வேலை கிடைச்சிடுத்துன்னா என் கவலை தீர்ந்திடும்..அதுக்கு அப்பறம் பவி கல்யாணம் தான்.” என்றார் சுகந்தி.
“கெம்பஸ்லே நல்ல கம்பனி எதுவும் இதுவரைக்கும் வரலை மா..நானும் சென்னை ரெக்ரூடர்ஸ்தான் பார்த்திண்டு இருக்கேன்..சரியா அமையலே..ஒருவேளை இங்க கிடைக்கலைன்னா நான் பெங்களூர்லேயே முதல்லே வேலைப் பார்க்கறேன்..கொஞ்ச நாள் கழிச்சு இங்கே வேற வேலை தேடிண்டு வந்திடறேன்.” என்றான் தீபக்.
“இங்கையே கிடைக்கற மாதிரி பாரு டா..எவ்வளவு நாள் நானும், அவளுமேத் தனியா இருக்கறது? ஏதாவது அவசரம்னா நீ பெங்களூர்லேர்ந்து வரணும்..இல்லைன்னா அண்ணாதான் திருச்சிலேர்ந்து வரணும்..அதுக்குதான் அவன் திருச்சிக்கேத் திரும்ப வந்துடுன்னு சொல்லிண்டிருக்கான்..இப்ப பார்த்திருக்கற மாப்பிள்ளையும் அங்க தான்..பக்கத்திலேயே மாப்பிள்ளை இருந்தா நல்லதுன்னு சொல்றான்.” என்றார் சுகந்தி.
“ஏன் மா..இவ்வளவு நாள் அங்கேதானே இருந்த..அப்ப அடுத்த தெருவிலே இருந்த இந்த மாப்பிள்ளை அவர் கண்ணுலேப் படலேயா..இங்க வந்த அப்பறம் தான் கண்ணுலேப் பட்டதா?” என்று தீபக் கேட்க,
“ஏன் டா இவளை விட பெரியவ அஷ்வினி..அவளுக்கே இப்பதான் கல்யாணம் ஆச்சு..அவளுக்குப் பண்ணாம பவிக்கு கல்யாணம் பண்ணியிருந்தா நன்னாயிருந்திருக்காது டா..
சென்னைக்கு வராம அங்கேயே இருந்திருந்தாக் கூட கல்யாணம்ங்கற கண்கட்டு வித்தைலே அடுத்த ஆத்துலே, தெருவிலே, பிளாக்லே இருக்கற பையன் எப்ப நம்மாத்து மாப்பிள்ளையாகணுமோ  அப்பதான் நம்ம கண்ணுக்கு அவர் மாப்பிளையாத் தெரிவர்.” என்றார் சுகந்தி.
“அப்ப நம்மாத்து மாப்பிள்ளையை இப்ப இங்கே நம்ம கண்ணு எதிர்லேப் பார்த்தாக்கூட நமக்கு அவர்தான் மாப்பிள்ளைன்னு தெரியப் போகறதில்லை.” என்றான் தீபக்.
“இங்க நமக்கு யாரையுமேத் தெரியாதே டா..நான் சொன்னது அந்த திருச்சி வரனுக்கு.” என்றார் சுகந்தி.
“நீ சொல்றதைதான் நானும் சொல்றேன்..அந்தத் திருச்சி பையன் தான் நம்மாத்து மாப்பிள்ளையோ என்னவோ..அடுத்த தடவை என்னோட லீவுக்கு நாம எல்லாரும் திருச்சிக்குப் போயிட்டு வரலாமா?” என்று தீபக் கேட்க,
“வேண்டாம் டா..பவி டயம் கேட்டிருக்கா..நாம சும்மா போனாக்கூட அண்ணாவா எதையாவது இழுத்து விட்டிடுவான்..உன்னோடு அடுத்த லீவு தீபாவளிதானே..நானும், பவியும் பெங்களூர் வரலாம்னு இருக்கோம்..இரண்டு நாள் உன்னோடு இருந்திட்டு..அந்த ஊரையும் சுற்றிப் பார்த்திட்டு வரலாம்னு பவி சொன்னா..நேக்கும் சரின்னு தோணித்து..அவளும் எங்கையும் போகறதில்லை..அதனாலே இந்த தடவை ஆத்துலே தீபாவளி கொண்டாடாம உன்னோட கொண்டாடலாம்னு பிளான் பண்ணிண்டிருக்கா..நோக்கு ஒகே வா?” என்று கேட்டார் சுகந்தி.
“குட் ஐடியா மா..உங்க இரண்டு பேருக்கும் கெம்பஸ்லே கெஸ்ட் ரூம் புக் செய்யறேன்..தீபாவளியைப் பெங்களூர்ல செலிப்ரெட் செய்யலாம்.” என்று சந்தோஷமாகப் பதில் அளித்தான் தீபக்.