Advertisement

அத்தியாயம் பதினாறு :

கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம் எல்லோரும் ஆர் டி ஓ முன் கையெழுத்து இடவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்தார், அவர் மட்டுமல்ல கைதான அனைவருமே!

“அங்கேயே இருக்கியா கண்ணா, இங்கே அவங்களை கூட்டிட்டு வந்துடலாம் தானே!” என சுந்தரியையும் பேரனையும் பற்றி சொல்ல,

“அவளுக்கு அத்தனை சொத்து இருக்குன்னு தான் கட்டி வெச்சீங்க! இப்ப அதை விட்டுட்டா வர முடியும், இப்போதைக்கு முடியாது பா! பின்னால நடக்கறதை அப்போ யோசிக்கலாம்” என்று விட்டான்.

இந்த வீட்டினில் சில கசப்பான நிகழ்வுகள் அவளுக்கு எனத் தெரியும்! அதனை மறக்கும் படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும்! பின்னே தான் எந்த யோசனையும் என்ற முடிவுடன் இருந்தான் கண்ணன்.   

விமலா எதிலுமே தலையிடுவதாய் இல்லை. அவருக்கு விஷயங்கள் சரியாகி, மகன் நன்றாக இருந்தால் போதும்! ஆனால் நன்றாக மட்டும் இருந்தால் போதாது, சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்! என்ன இப்போது மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என நினைத்துக் கொள்ளலாம் என்ற பக்குவத்தில் இருந்தார்.

சந்திரன் கண்ணனிடம் “இங்க இருக்குற சாமான் எல்லாம் எடுத்துப் போறியா” என அவனுக்கு கொடுத்த கட்டில் மெத்தை எல்லாம் சொல்ல,

“ஏது.. போறேன்னு சொன்னா, வீட்டை விட்டுத் துரத்திடுவீங்களா, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்!”  என சண்டைக்கு நிற்க, சந்திரன் மகனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் நொந்து விட்டார்.

விமலா வாய்க்குள் புன்னகையை அடக்கியவர் மகனிடம் ரகசியம் வேறு பேசினார்!

“இனிமே இங்கே தான்” என்று கண்ணன் வந்து நின்று விட, இதுவரை இல்லாத பதட்டம் அவளிடம் “இங்கே வசதி பத்தாது!” என,

“செஞ்சிக்குடு!” என நின்றவன், “என்கிட்டே பணமெல்லாம் கிடையாது, என் முதலாளி அம்மா இதுவரை எனக்கு ஒரு பைசா சம்பளம் குடுக்கலை!” என்றான்.

“கையில இருந்த காசெல்லாம் குறைஞ்சிடுச்சு, கார் வாங்க பாதிப்பணம் என்னோடது, மீதி லோன், இன்னும் இருக்குற கொஞ்சம் பணமும் தீர்த்துட்டேன்னா அவ்வளவுதான், அப்புறம் கைல காசில்லைன்னு எனக்கு தூக்கமே வராது!”என்றான்.

சுந்தரி பார்த்து நிற்க “நிஜம்மா சொல்றேன்! இதுவரைக்கும் பொண்டாட்டியை விட்டுட்டு வந்துட்டேன்னு தூங்கலை! இனிமே காசில்லைன்னு தூங்கலை! நான் எப்போ நிம்மதியா தூங்க” என்றான் பாவமாக.

ஆம்! பணம் எதுவும் இதுவரை கொடுத்ததில்லை. அவனும் கேட்டதில்லை! எல்லாம் அவளிடம் அப்படியே கொடுத்து விடுவான். அவனிடம் பணம் இருக்காது, கொடுக்க வேண்டும் என்ற யோசனைகள் வந்ததில்லை!

“ஓஹ், இதுக்கு தான் அத்தனை முதலாளியம்மா போட்டீங்களா?” எனப் புன்னகைக்க, “ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட” என நொடித்தான்.

“நான் என்னவோ நீங்க பெரிய வேலைல இருந்தீங்க, நிறையப் பணம் வெச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்” என,

“அம்மா! தாயே! நீ எல்லாம் நிலக்கிழார் கேட்டகிரில வருவ, நானெல்லாம் வேலைக்காரன் கேட்டகிரில வருவேன்! எவ்வளவு சம்பளம் வந்தாலும், எங்களுக்கு அதுக்கு செலவு வந்துடும், பாதி பணம் எங்க கெத்தை மெயின்டெயின் பண்ண! எல்லாம் காஸ்ட்லி, டிரஸ், ஷூ, மொபைல், கார், வீக்கென்ட்ல அடிக்கற சரக்கு, பிரண்ட்ஸ்க்கு குடுக்கற கடன், இன்னும் நிறைய இருக்கு.    இப்படிப் போயிடும்!”

“இதுல என் பையன் பெரிய வேலைல இருக்கிறான்னு சொல்லி ஊர்ல வீடு கட்ட ஆரம்பிக்கற அப்பா அம்மாக்கு பணம் வேற அனுப்பணும்! அவங்களுக்கும் எல்லாம் கெத்தா வாங்கணும்! இதுல பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க தெரியலை!”

“நாலு அஞ்சு வருஷத்துல வெயிட் போட்டுடுவோம், ஏழு எட்டு வருஷத்துல தொப்பை, பத்து வருஷத்துல தலை முடி கொட்ட ஆரம்பிச்சிடும்! இலவச இணைப்பா பிரஷர், சுகர், தலைவலி, கண்ல சோடாபுட்டி கண்ணாடி! இது நான் சொல்றது வெளில, இன்னும் உள்ளுக்குள்ள வேலைல அவ்வளவு இருக்கு!” என சொல்லி அவன் விட்ட பெருமூச்சில் சுந்தரியின் முந்தானை பறக்காதது அதிசயம்!

“ரெண்டு வருஷத்துல உங்களுக்கு அவ்வளவு தெரிஞ்சிடுச்சா” என்றவளிடம்,  “கொஞ்சம் தெரிஞ்சிடுச்சு” என்றான்.

“அப்புறம் எல்லோரும் ஏன் போறீங்க?” என, “பணம்  பொண்டாட்டி பணம், வேற எந்த வேலைலயும் இப்படிக் கிடையாது! கூடவே அப்போ அப்போ பறந்தும் போகலாம்!” எனச் சொல்லி, “காசு! பணம்! துட்டு! மணி! மணி!” எனப் பாட,

“பா, வாங்க!” என மகன் கத்த, “என்ன?” என்று வெளியில் விரைந்தான்.

“என் கார் அங்க போயிடுச்சு!” என மாட்டுக் கொட்டகையைக் காட்ட, “அடேய் மகனே, நானும் அங்கே போகமாட்டேன். எனக்குக் கொஞ்சம் பயம். உங்கம்மாவைக் கூப்பிடலாம்” என அவளை அழைக்க,

“என் பையனாடா நீ” என, அவனை கையினில் தூக்கிக் கொண்டவள், மாட்டின் காலுக்கு நடுவில் இருந்ததை அபியை கீழே இறக்கி விட்டு, அவனையே எடுக்க விட, முதலில் தயங்கியவன் பின்பு அம்மா ஊக்கவும் எடுத்து விட்டான்.

அப்படியே படியில் அமர்ந்து கொண்டாள்! “ஓகே, உங்க மீதி கதையைச் சொல்லுங்க!” என,

“உனக்கு நான் சொல்றது கதையா?” என்றவனிடம், “பின்ன எனக்கு அப்படித்தான்” என சிரித்தாள்.

“சிரிக்கிற நீ, என்கிட்டே மாட்டாமையா போவ” என, “என்ன மாட்டுவேன்?” என புருவம் உயர்த்த, “ம்ம், இன்னொரு குழந்தை பெத்துக்கத்தான்” என,

அதுவரை இருந்த லகுத்தன்மை மாறி, சிறு சுணக்கம் சுந்தரியின் மனதினில் தோன்ற, அவளை உணர்ந்தவனாக “அப்போ செஞ்சதும் தெரியாம இல்லை! இப்போ சொல்றதும் தெரியாம இல்லை! நீ அப்போ என்ன என்ன மிஸ் பண்ணினயோ அதையெல்லாம் இப்போ குடுக்கணும்னு ஆசையா இருக்கு!” என்றான்.

“நிஜம்மா உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, அப்போவே விவாகரத்து பத்தி பேசாம இருந்திருந்தா, கூட ஒரே வீட்ல இருந்திருந்தா பிடிச்சிருக்கும்! ரொம்ப அவசர குடுக்கை நான் எல்லாத்துலையும், என்னை அதுக்கு மன்னிச்சிடு! இது படிக்கட்டா போச்சு, பெட் ரூமா இருந்தா கால்ல கூட விழுந்திருப்பேன்” என்றான். “ஏன்னா வாய் வார்த்தை வேற, அனுபவிக்கறது வேற, எனக்குத் தெரியும்” என,

அதை மறக்க முயற்சித்து கொண்டிருந்தவளுக்கு, அந்தப் பேச்சு பிடிக்கவில்லை! அதனை மாற்ற விரும்பி உடனே எழ, சிந்தாமணி அப்போது வர, அவளிடம் மகனை கொடுத்தவள், “கொஞ்சம் நேரம் வெச்சிரு” என்று சொல்லி வீட்டினுள் போக, அவளுக்குக் கோபமோ என்று கண்ணனும் பின்னோடு போனவன்,

அவள் படுக்கை அறையினுள் நுழையவும் “என்ன கோபமா சுந்தரி?” எனக் கலக்கமாகக் கேட்க, அவளும் சீரியசாக “எந்த திசையில நிக்கட்டும்” என்றாள்.

“எதுக்கு” எனப் புரியாமல் கேட்டவனிடம், “நீங்க கால்ல விழ!” என,

“அம்மாடி!” என்று அவன் வாய் மேல் கை வைத்து, “அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொல்றது!” என,

“எங்களுக்கு எல்லாம் பேச்சு ஒன்னு, செயல் ஒன்னு கிடையாது! சொன்னா செய்வோம்!” என கெத்துக் காட்ட,

“அவ்வளவு தானே!” என கண்ணன் யோசியாமல் விழப் போக, “அய்யயோ! அது சும்மா!” என இப்போது அவள் கீழேயே அமர்ந்து கொண்டாள்.

அமர்ந்தவளை அப்படியே படுக்கத் தள்ளி மேலே சரிய, முடியாமல் திணறியவளை, அவன் சரிந்து அவளை மேலே போட்டுக் கொண்டு, “ரொம்ப ரோஷம்! ரொம்ப வாய்!” என அவளின் இதழ்களை வருடி, “எங்கம்மா உன்கிட்ட ஒன்னு கேட்கச் சொன்னாங்க!” என,

“என்ன?” என்றவளிடம், “அது, அவங்களுக்கு ஒரு வேலை வேணுமாம்! ஒரு வருமானம் வேணுமாம்!” என,

இன்னும் வாகாக அவன் மேல் ஏறிப் படுத்து கொண்டே “கதை விடக் கூடாது” என சுந்தரி சொல்ல,   

“கதையல்ல நிஜம்!” என்றவன், “நிஜம்மா கேட்கறாங்க! எங்கம்மாக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்! சின்ன வயசுல ரொம்ப தெளிவா இருக்கியாம்! என்னை உன் பின்ன சுத்த விட்டுட்டியாம்! அதுக்கு உன் உழைப்பும், உன் வருமானமும் காரணமாம்!”

“அதனால அவங்களுக்கும் சம்பாரிக்கணுமாம்! ஏன்னா எங்கப்பா ஒன்னும் கொண்டுவரலைன்னு எப்பவும் திட்டிட்டே இருக்காங்களாம்! அதனால அவங்க சாக போனாங்களாம்! அதனால ஒரு சம்பாத்தியம் இருந்தா எங்கப்பா அப்படி திட்ட மாட்டாராம்! திட்டினாலும் போடா சொல்வாங்களாம்!”

“வீட்ல இருந்தே செய்யற மாதிரி ஒரு வேலை உடனே வேணும்! எனக்கு நீ சம்பளம் குடுக்கறதையும் விட அர்ஜெண்ட்டா வேணும்!” என மூச்சு விடாமல் பேச, நம்பாமல் “ஆங்” எனப் பார்த்து இருந்தாள்.

“நிஜம்! சுந்தரிப் பொண்ணே நிஜம்!” என்றான்.

திரும்ப, “எங்களை எல்லாம் மன்னிச்சுடு!” என, “நான் மறந்த விஷயத்தை மன்னிச்சுடு சொன்னா எப்படி முடியும்?” என்றாள் சிரிப்புடன்.  

இருவர் முகத்திலும் அப்படி ஒரு நிம்மதி புன்னகை!

“நிஜம்மாவே உங்களால இங்க இருக்க முடியுமா?” என,

“ஏன் முடியாது? இங்க இருந்து தான் வந்தேன்! இங்க என்னால இருக்க முடியாதுன்னா வேற எங்க இருக்க முடியும்! உனக்கு அந்த சந்தேகமே வேண்டாம்! என்ன வசதி வேணுமோ இங்கயே பண்ணிக்கலாம்! என்னோட இந்த மண்ணை விட்டு நான் எங்கேயும் போறதா இல்லை! இங்கேயே என்னால எல்லாம் நல்லா செஞ்சிக்க முடியும்! நல்ல சம்பாதணை பண்ண முடியும்! நம்பிக்கை இருக்கு!” என்றவன், “ஏன் உனக்கு சந்தேகம்?” என,

“இல்லை, உங்களால இங்க இருக்க முடியாதுன்னு நீங்க வேற இடத்துக்கு வேலைக்கோ, வெளிநாட்டுக்கோ போகணும் நினைச்சா, என்னால வர முடியாது! நான் வரவும் மாட்டேன்!”  

“என்னால நீங்க இல்லாமையும் இனி இருக்க முடியும்னு தோணலை! அதே சமயம் இதை விட்டும் வரமாட்டேன்! என் தோப்பு, என் செடி, என் மண்ணு, என் மாடுன்னு எதை விட்டும் வரமாட்டேன்! வந்தா சிதைஞ்சு போயிடுவேன்” என,

“நம்பு! உன்னை என்னைக்கும் சிதைய விடமாட்டேன்!  உன்னை மட்டுமில்ல உனக்கு பிடிச்ச இந்த மண்ணைக் கூட! அந்த மாதிரி சூழ்நிலை நமக்கு எப்பவும் வராது!” என்றவன், அவளின் கண்களோடு கண்கள் கலக்க விட்டான்.

“நீ யார்?” என அவள் கண்கள் கேட்ட கேள்விக்கு..

“நிஜம்! பெண்ணே நிஜம்! நான் யார் என யோசியாதே! இது தான் நான்! நீ என்பது யாதெனில்… நீயாகிய நான்!” என புது மொழி படைக்க, நம்பியும் நம்பாமலும் பார்த்திருந்தாள் சுந்தரி!

அதற்குள் “டுர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்ற சத்தத்துடன் காரை ஓட்டி மகன் வந்தவன், அப்பா மேல் அம்மா படுத்திருப்பதை பார்த்து, அம்மாவின் முதுகில் ஏறி “நானு” எனப் படுக்க, எட்டாத கைகளை எட்டி சுந்தரியையும் அபராஜிதனையும் அணைத்தான் துரைகண்ணன்! 

                               

       

Advertisement