Advertisement

அத்தியாயம் நான்கு :

அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர..

“என்ன கண்ணு குளிச்சியா?” என,

“ஆமா ஆயா, கசகசன்னு இருந்தது” எனச் சொல்லி நில்லாமல் செல்ல..

“கிறுக்குப் புள்ள, எந்த நேரம் என்ன பண்ணும்னு சொல்லவே முடியாது” என சலித்துக் கொள்ள..

“ஆயா, போய் முத்துவைப் பாரு கத்துறான்” என..

பாட்டியும்  தன் காலைப் பணி நோக்கிச் சென்றார்.. ஆம்! அவர்களுக்கு நான்கு கறவை பசுவும் ஒரு காளை மாடும் இருந்தன.. காலையில் பால் கறப்பது வடிவுவின் வேளை.. மாலை வேளைகளில் அதனை சுந்தரி தனதாக்கி கொண்டாள்..

இப்போது திடீரென்று கண்ணனைப் பார்த்த அதிர்ச்சி பலமாக இருந்தது.. சண்டை போட்டுப் பிரியவில்லை.. வேண்டாம் என்ற நிராகரிப்பு.. மிகவும் பலமான நிராகரிப்பு.. இன்னும் வலித்தது..

“அப்படி என்ன நான் நல்லா இல்லாமப் போயிட்டேன்.. பார்க்கவே சகிக்காமையா இருக்கேன். கல்யாணத்துக்கு முன்ன நான் நல்லா இல்லை தெரியலையா, இல்லை என் கூடப் படுக்கும் போது தெரியலையா” என நினைக்க வெகுநாட்களுக்குப் பிறகு அழுகை முட்டியது..

“முன்ன பார்க்கற மாதிரியே இருக்க மாட்டான்.. ஒல்லியா இருப்பான்.. அப்போவே உன்னைப் பிடிக்கலை, இப்போ நல்லா வேற இருக்கான்.. உன்னை எல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டான்” என நினைத்தவள்.. “டீ.. பைத்தியமாடி நீ.. உனக்கும் அவனுக்கும் விவாகரத்து ஆகிடிச்சு.. நீ யாரோ அவன் யாரோ..” என..

தூக்கத்தில் புரண்டு சிணுங்கும் மகனிடம் விரைந்தவள், “தினமும் இவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் ஞாபகம் வருதே, என்ன செய்ய?” என மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

“அப்போ அவன் கூப்பிட்டப்போவே போயிருக்கணும், உனக்கு எதுக்கு ரோஷம்”

“எங்க போவேன்? எங்க போவேன்.. இதையெல்லாம் விட்டுட்டு எங்க போவேன்?” என சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

ஆம்! பெரிய தென்னதோப்பு, மாந்தோப்பு, பூந்தோட்டம், மாடு, கண்ணு..” என அவளின் அப்பா கொடுத்தது.. இப்போது அவளாக ஆரம்பித்த செடிகளின் பண்ணை (நர்சரி) .. பத்து மண் புழு உரம் தயாரிக்கும் தொட்டிகள்.. காய்கறித் தோட்டம்.. 

இதையெல்லாம் விட்டுச் சென்று உயிரோடு வாழ முடியும், ஆனால் உணர்வோடு வாழ முடியுமா.. அவளால் எப்போதும் முடியாது.. அதுவும் காதல் கணவனாய் அழைத்தாலும் பரவாயில்லை, அப்போதே செல்ல மாட்டாள்.. இப்போது எப்படி செல்வாள்.. எங்கள் வீட்டை பார்த்து எப்படி முகம் சுளித்தான்..

அப்படிப் பளபளவென்று இருந்தால், இவனுக்கு கொட்டிக் கொள்ள வந்துடுவிடுமா என்ற ஆத்திரம் கிளற..

ஒரு பக்க மனது அவரவர் வாழ்க்கையை வாழ அவரவர்க்கு உரிமை இருக்கிறது.. அவனுக்குப் பிடித்த வாழ்க்கை.. போனால் போகிறது என்று உன் வயிற்றை பார்த்து வருகிறாயா எனத் தூது விட்டான்.. முடியாது என்று சொல்லி விட்டாய் அல்லவா, இனி நினையாதே!

பெரிய இவன் மாதிரி சொன்னானே.. ஆனால் இந்த மகனை பார்க்கக் கூட வரவில்லை.. நேசம், பாசம் எல்லாம் பொய் பெண்ணே.. உனக்கு தான் இவன் மகன் என மனதை நிலைபடுத்திக் கொள்” எனச் சொல்லி அப்படியே அமர்ந்திருந்தாள்..

வேலை செய்பவர்கள் எல்லாம் வந்து “என்ன கண்ணு உடம்பு சரியில்லையா இப்படி உட்கார்ந்து இருக்க..” எனக் கேட்டு சென்றனர். ஆனால் எந்த வேலையும் நிற்கவில்லை அது பாட்டிற்கு அது நடந்தது..

பொழுதும் நன்றாய் விடிந்து விட.. மகன் அழவும் தான் இன்னும் அவனுக்கு தான் எதுவும் கொடுக்கவில்லை எனப் புரிந்து பாலைக் காய்ச்சி அவனுக்கு கொடுத்தவள், தனக்கும் பாட்டிக்கும் டீ வைத்து எடுத்து வர..

“என்ன கண்ணு, மேலுக்கு சுகமில்லையா.. டீ குடிச்சிட்டு உட்காரு, நான் சாப்பாடு வைக்கறேன்” என பாட்டி சொல்ல..  

மகனை தூக்கிக் கொண்டு போய் நர்சரியில் அமர்ந்து கொண்டாள்.. துளிர்க்கும் அந்தச் செடிகளைப் பார்த்த பிறகு மனது சற்று அமைதியாகியது.

மனது அமைதியான பிறகு தான் யோசனை ஓட “அந்தம்மா ஏன் கிணற்றில் குதித்தது.. இவன் பெரிய கொடுமைக்காரனோ அம்மாவைத் திட்டி சண்டையிட அது வந்து கிணற்றில் குதித்து விட்டதோ, இவன் துரத்திக் கொண்டு ஓடி வந்தானோ?” என கற்பனை ஏகத்திற்கும் ஓடியது..

அதற்குள் சாமந்திப் பூக்களின் லோடு ஏற்றி சின்னராசு வண்டியைக் கிளப்பியது தெரிந்தது. “என்ன சுந்தரி, கணக்கு கூடப் பார்க்கலை, நான் உன்னை ஏமாத்தப் போறேன்” என சிந்தா அவளை வம்பிற்கு இழுக்க..  

“எதை மாத்தப் போற?” என கிண்டலாக சுந்தரி பேச..

“டீ சுந்தரி நான் உன்னை ஏமாத்தப் போறேன்” என..

“சரி, சரி, மாத்து, மாத்து” என்ற போது இன்னுமே இயல்புக்குத் திரும்பியிருந்தாள்..

அபராஜிதனை சிந்தாவிடம் விட்டு தன் மண் புழு உரம் தயாரிக்கும் இடத்திற்கு சென்றவள்.. அந்த மண்ணை எடுத்து சிறு சிறு பைகளில் அடைக்கத் துவங்கினாள்..

சிந்தாவும் உதவுவதற்கு வர.. அபராஜிதனை கீழே விட்டு அவர்கள் வேலை செய்ய.. மண்ணில் இருந்த ஒரு புழுவை கையில் எடுத்து கொண்டவன் தன்னுடைய இன்னொரு கையில் விட அது அவனின் கையினில் ஊர்ந்து செல்ல.. அதை சிந்தாமணி தட்டி விட முயல..

“விடு, விடு, ஒன்னும் பண்ணாது. அவன் இப்போ இருந்தே எல்லாத்துக்கும் பழகட்டும்.. அப்புறம் அவங்கப்பா மாதிரி இதெல்லாம் பார்த்தா முகம் சுளிக்கப் போறான்” என,

முதன் முறையாக கணவனைப் பற்றி பேசுகிறாள் சுந்தரி, ஆச்சர்யத்தோடு சிந்தாமணி பார்க்க.. அதை புரிந்தாலும் வேறு பேசாதவளாக திரும்ப வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள், “செம அழுத்தம் நீ சுந்தரி” என சிந்தா சொல்ல..

“எப்போ என்னை அழுத்திப் பார்த்த நீ” கண்ணடித்து சுந்தரி சிரிக்க..

“சீ போடி” என சிந்தா வெட்கப்பட.. சத்தமாக வாய் விட்டு கலகலவென்று சுந்தரி சிரிக்க.. மகன் அம்மாவின் புறம் நகர்ந்தான். அப்படியே மண் கையோடு மகனை தூக்கினாள்..

“அய்ய, அநியாயம் பண்ற புள்ள நீ” என்றவளிடம், “என் பையன் இப்படித் தான் வளரணும்” என்றவளின் குரலில் வெகுவாகப் பிடிவாதம்..

“வாழ்க்கையில தேவையில்லாத பிடிவாதத்தை வெச்சிக்காதே சுந்தரி” என,

“கவலைப் படாதே எனக்கு அதைக் காட்ட ஆள் கிடையாது” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்சரியின் முன் வாயிலில் அரவம்..

“யாருன்னு பாரு சிந்தா?” என..

சிந்தா பார்த்து வந்தவள் “யாரோ உன்னைத் தான் கேட்கறாங்க” என..  

“என்னையா, ரெகுலரா நம்ம கிட்ட செடி வாங்குவாங்களா இருக்கும்” எனச் சொல்லி சுந்தரி வர..

அங்கே நின்றது துரைக் கண்ணன்.. சிந்தாமணிக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. சுந்தரி அவனை எதிர்பார்க்கவில்லை. மண் கையோடு மகனைத் தூக்கி இருந்தாள்.. அவனை பார்த்தது பார்த்தபடி நிற்க.. 

“தேங்க்ஸ் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் தயங்கி..

“சரி, சொல்லியாச்சுல்ல கிளம்புங்க” என்று சுந்தரி பட்டென்று சொல்ல, அவன் நகர்வதாக காணோம். சுந்தரியின் கையினில் இருந்த மகனைப் பார்த்து நின்றான்.

தூக்க ஒரு உந்துதல்… அவன் அபராஜிதனை பார்த்து நிற்கவும் “அதான் சொல்லியாச்சுல்ல கிளம்புங்க” என்றாள் திரும்பவும் தயவு தாட்சண்யமின்றி..

அவள் பதில் சொல்லிய விதத்திற்கு “ஏன் நின்னா என்ன?” என்றான் அவனும் சுள்ளென்று.

பதிலுக்கு சுந்தரி முறைக்க.. “நான் ஒன்னும் உன் நர்சரிகுள்ள நிக்கலை, ரோட்ல தான் நிக்கறேன்” என்றான் திரும்ப.         

“உங்களுக்கு மத்தவங்களை தானே ரோட்ல நிக்க வெச்சிப் பழக்கம்” என..

வார்த்தையாடுவது கண்ணனின் இயல்பே கிடையாது. ஒரு பார்வை பார்த்தவன், ஒரே நாளில் எதுவும் சரியாகிவிடாது எனப் புரிந்து.. திரும்ப நடக்கத் துவங்கியவன், அப்போது சரி செய்து கொள்ளும் எண்ணம் உன்னில் இருக்கிறதா என அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான்.  

நீ வா என்றால் வருவதற்கும், போ என்றால் போவதற்கும் அவள் என்ன உன் அடிமையா.. என யோசித்தபடியே நடந்து சற்று தூரத்தில் நிறுத்தியிருந்த சித்தப்பாவின் பைக்கை அணுகி ஏறி அமர்ந்து ஸ்டாண்டை லாவகமாக எடுத்து விட..

அந்த ஸ்டைல் சுந்தரியைக் கவர, நாளை அபியும் இப்படித்தான் செய்வானோ ஸ்டைலாக என்று தான் தோன்றியது. மற்றபடி கணவனாய் இருந்து தொலைந்தவனை ரசிக்கவில்லை.

அபியை கொஞ்சியபடி “அழுக்கு பையன், அழுக்கு அம்மா, முதல்ல குளிப்போம் வா, வா” எனப் பேசியபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தவள், “சிந்தா, ராசு அண்ணன் வர்ற வரை இங்கே தானே இருப்பே” எனக் கேட்டு தெளிவுபடுத்தி நடந்தாள்..

உண்மையில் சுந்தரியினுடைய உலகத்தில் கணவன் என்ற ஒருவனுக்கு வேலை இல்லை. அதனால் அவனின் நினைவும் அதிகமில்லை. இதனை விட ஒரு ஆண்மகனுக்கு என்ன தோல்வி இருக்க வேண்டும். அவளுள் நிராகரிப்பின் வலி தான் பிரதானமாக இருந்தது.

அப்பா சொன்னார், திருமணம் செய்து கொண்டாள், அவ்வளவே. திரும்ப அவன் வேண்டாம் என்று சொன்ன போது, வேண்டாம் என்று சொல்லிவிட்டானே என்ற எண்ணம் தான், அற்று அவன் வேண்டும் என்ற எண்ணமில்லை. 

அப்படி ஒன்றும் காதலோ உரிமையோ வரவில்லை. எல்லோரும் அவளிடம் “உன் புருஷன் விவாகரத்து கேட்கறானாமே. குடுக்க மாட்டோம் சொல்லு, சமாதானம் பண்ணிக்கோ, அப்புறம் உன் வாழ்க்கை என்ன ஆகும்” இப்படி எல்லாம் கேட்ட போது.

“ஏன் இவன் இல்லைன்னா நான் என்ன ஆகிடுவேன்?” என்ற எண்ணம் தான். “இவனை நம்பியா நான் பிறந்தேன்” என்ற எண்ணமும், “இவன் இல்லைன்னா நான் செத்தா போயிடுவேன்” என்ற எண்ணமும் தான் தலையாய் இருந்தது.

இன்றைக்கு இவனை திடீரென்று பார்க்கவும் தான் அழுகை கூட ஏன் என்று தெரியாமல்..

எழுகிறாள், உழைக்கிறாள், உண்கிறாள், தேவைகள் அதிகமில்லை, தனிமை தெரியாமல் இருக்க மகன். எதிர்காலம் குறித்து எல்லாம் இன்னும் அதிகம் யோசிக்கவில்லை. இப்போதைக்கு வாழ்க்கை சீராகச் செல்கின்றது. அதுவே போதுமானதாக இருந்தது.  

இப்போது தீவிரமாக. யோசனை ஓடியது அவனின் அம்மா கிணற்றில் விழுந்தது தான். “எப்படி இப்படி முடியும். இவனை நான் பார்க்கவேயில்லையே. கிணற்றில் ஏன் விழவைத்தான். நான் தப்பித்து விட்டேனா” என்பது போலத் தான் யோசனைகள்.

குளித்து முடித்து சின்னராசு வரவும், மீண்டும் கணக்கைப் பார்த்தாள். ஆயிரம் ரூபாய் குறைவதாகத் தோன்ற. “அண்ணா ஆயிரம் ரூபாய் குறையுது” என்றாள்.

“ஆமாம் சொல்ல மறந்துட்டேன்.. ஒருத்தர்க்கு குடுக்க வேண்டி இருந்தது, குடுத்துட்டேன்” என்றான். சில சமயம் இப்படித் தான் செய்து விடுவான் பணத்தை. பல முறை சொல்லியாகிவிட்டது, ஆனாலும் மீண்டும் சொன்னாள்.

“அண்ணா, பணம் வேணும்னா கேட்டு வாங்கிக்கங்க, நான் குடுக்க மாட்டேன்னு சொல்லலை, அதை விட்டு எடுத்துட்டு நீங்களா வந்து சொல்லக் கூடாது. ஒரு ஃபோன் செஞ்சுக் கேட்டிருக்கலாம், இல்லை இப்ப பணம் குடுக்கும் முன்ன சொல்லியிருக்கலாம். எப்பவும் அம்பது நூறு எடுத்துட்டு தான் குடுக்கறீங்க. நான் அதை கண்டுக்கறது இல்லை. ஆனாலும் இப்படி பெரிய பணம் எடுத்தா எப்படி?”

“ஆயிரம் ரூபாய் பெரிய பணமா?” என,

“இல்லையா? ஒரு மாசத்துல நீங்க இப்படி அஞ்சாறு முறை செஞ்சீங்கன்னா அஞ்சாயிரம் ஆச்சு. அதுவுமில்லாம தினமும் ரெண்டு டைம் அம்பது நூறு போகுது அது ஒரு அஞ்சாயிரம். உங்க சம்பளம் இல்லாம மாசம் பத்தாயிரம் அழுவேனா, என்ன பண்றீங்க?” எனச் சற்று கோபமாகப் பேச..

ஒன்றும் பதில் பேசாமல் அவன் திரும்பச் செல்ல, சிந்தாமணி தான் “கோபப்படாதே சுந்தரி, நான் சொல்றேன்” என,

“என்ன சொல்ற நீ. இந்த மாசம் மட்டும் அஞ்சாயிரம் இப்படி எடுத்துக்கிட்டார். பேசிக்கிட்டே நிக்கறேன் பதில் பேசாமப் போறார், உனக்கேத் தெரியும் எவ்வளவு சம்பளம் குடுக்கறேன்னு. நீங்க வேற எங்க போனாலும் இதுல பாதி பணம் கூடக் கிடைக்காது. யோசிச்சு நடந்துக்க சொல்லு. இப்படி பண விஷயத்துல பண்ணக் கூடாது”  

“திரும்பக் குடுத்துடுவோம்”  

“ப்ச், சொல்றது புரியாமப் பேசாதே. உனக்கு பணம் வேணுமா என்னைக் கேளு நான் தர்றேன் அதை விட்டு நீங்களா எடுத்துக்க கூடாது” என மீண்டும் கறாராகச் சொல்ல..  

“சரி, சரி, கோபப்படாதே” என்று அவளிடம் சொல்லிச் சிந்தாமணி செல்ல.. “இந்த சின்னராசுவை என்ன செய்வது?” என்ற யோசனையோடே சுந்தரி உள்ளே சென்றாள்.

“என்ன ஓவராப் பேசுது இந்த சுந்தரி, அதுக்கு வர்ற வருமானத்துக்கு இது ஒரு காசா” என சின்னராசு சொல்ல,

“நம்ம தப்பு பண்ணிட்டு, அந்த புள்ளையச் சொல்லக் கூடாது. ஓயாம உழைக்குது, கூடவே புத்திசாலி, அவங்கப்பா இருந்தப்போ இவ்வளவு வருமானம் இல்லையே, அது தேடிக்குது” என

“என்ன தப்பு சொல்றாங்க, பண விஷயத்துல இவ்வளவு கெடுபிடி பண்ணினா எப்படி?”  

“ப்ச், நீ குடுப்பியா, உன் காசை தூக்கி” என்றவளிடம்,  “நான் தான் எல்லா வேலையும் செய்யறேன்”

“என்ன வேலை செய்யற.. லோடு கொண்டு போற வசூல் பண்ற.. அதுலயும் நீ சொல்றது தான் கணக்கு, எப்படியும் அதுலையும் அஞ்சு பத்து அடிப்ப .. இவ்வளவு தெரியற புள்ளைக்கு அது தெரியாமையா இருக்கும்” என,

“என்ன தெரியும்? தெரிஞ்சா என்ன பண்ணிடும்? தனியா இருக்கு அந்த பயம் அதுக்கு இருக்கணும்”  

“த பாரு மாமா, சும்மா உள்ளதைக் கெடுத்துக்காதே. இந்த புள்ளைக்கிட்ட வந்த பொறவு தான் பணத்துக்கு நாம தடுமாறாம இருக்கோம். கையில கொஞ்சம் காசு நிக்குது. புருஷனையே போடான்னு சொல்லிடிச்சு. நம்மளை என்ன செய்யும்னு நினைக்காதே, தைரியமான புள்ள. அங்காளி பங்காளின்னு அத்தனை பேர் இருக்காங்க.. வடிவு ஆயா ஒரு வார்த்தை அவங்க கிட்ட சொல்லிச்சு, நீ காலி. உன் சொந்தம் தானே. நம்மை அப்படியே ஒதுக்கிடுவாங்க. வீணா பிரச்சனை வேண்டாம், ஒழுங்கா இரு” என,

“என்ன சும்மா மிரட்டுற?”  

“பட்டா தான் புத்தி வரும்னா, நான் என்ன செய்ய?” என,

“போடி” என்று மனைவியிடம் சொல்லி நடந்தாலும், அவளின் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிய.. கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.          

 

 

Advertisement