Advertisement

அத்தியாயம் பதினைந்து :

ஊரே ஒரே களேபாரமாகக் காட்சியளித்தது. இவள் வீடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில அடி தூரத்தில் இருக்க, நடந்த ரகளைகள் எல்லாம் நன்கு பார்த்திருந்தாள்.   

பெரிய கலவரம் நடந்து இருந்தது. கண்ணீர் புகை குண்டு வீசிக் கூட்டத்தை கலைத்து இருந்தனர். நூற்றி நாற்பத்தி நாலு தடை உத்தரவு போட்டு இருந்தனர். கிட்ட தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை கைது செய்து இருந்தனர்.

ஆம்! திருவிழாவில் எருதாட்டம் நடத்த தடை சொல்ல, மக்கள் எல்லாம் தேசிய நெஞ்சாலையில் மறியலில் அமர்ந்து விட்டனர். பின்பு பேச்சு வார்த்தை நடத்தி எருதுகளை வைத்து சாமி மட்டும் கும்பிடலாம் என, தெய்வ குத்தம் ஆகிவிடும் என பொங்கி விட்டனர்.

சாலை மறியல், பஸ் லாரி மீது கல்வீச்சு நடத்த! திரும்ப போலீசார் மக்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டு, கைதுப் படலம் என  பெரிய கலவரம்.

சாலை முழுவதும் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்!

இப்போது கலவரம் ஓய்ந்து விட்டது, ஆனால் இன்னும் தடை உத்தரவு இருந்தது! கைது செய்த ஆட்களோடு சந்திரனும் கைதாகி இருந்தார்! அவர்களைப் பார்க்கிறேன் என்று ஷன்முகத்துடன் கண்ணன் கிளம்பி போயிருந்தான், இன்னும் வரவில்லை! கவலையாக ரோட்டையே பார்த்திருந்தாள்.

இது என் மண்! என் வீடு! ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் என்று இன்னொருவன் தீர்மானிக்கிறான் என்பது மிகவும் கொடுமையான விஷயம். இங்கே அது போன்ற ஒன்று தான் நடக்கிறது! அது பாரம்பர்யமா, கலாச்சாரமா, மருத்துவமா! மகத்துவமா என எதுவும் தெரிந்து கொள்ளாமல், மிருக வதை என்ற ஒற்றை வார்த்தையில் எருதாட்டமும், ஜல்லிக்கட்டும், ரேக்லாக்களும் தடை விதிக்கப்படுகின்றன.

செய்கின்ற எல்லாம் பழமை பழக்கம், மூடப் பழக்கம் என்ற வார்த்தைகளுக்குள் அடங்கிவிடுங்கின்றன! சிலது இருக்கலாம், ஆனால் பலது இல்லை என்பது தான் உண்மை! காரண காரியங்கள் சரியாகத்தான் இருக்கும்! எதற்கு என்று நம்மவற்கே தெரிவதில்லை! ஆனாலும் என்ன என்று அறிந்து கொள்ளாமல் காலம் காலமாக அதை செய்து விடுவர்! இப்போது அதற்கும் பல தடைகள்!    

தடை விதிப்பவனுக்கு இது என்ன என்றே தெரியாது என்பது தான் மற்றுமொரு உண்மை! மனிதர்களுக்கு நடக்கும் கொடுமைகள் இங்கே கேட்கப்படுகின்றனவா என்ன?

இதற்கு போராட்டம் நடத்தினால் மிருக வதை என்று தடை செய்த நிகழ்வை விட, மனிதர்கள் இன்னும் வதைக்கப் படுகிறார்கள்! மண்டை உடைய, கை கால் உடைய அடிக்கப்படுகிறார்கள். இந்த போராட்டம் விடுங்கள், இன்னும் எத்தனை எத்தனை மனித வதைகள் அதைக் கேட்க இங்கே யார்?

அதனை விட எனது உரிமைகளை மறுக்க நீ யார் என்று யாரிடம் நாம் கேட்போம். புரட்சிகள் ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் புரட்சியாளர்கள் அதன் பாதி வழி கடக்கும் முன்னே காணப்படுவதில்லை!

போராளிகள்! நம்மில் பலர் போராளிகள் தான்! நாட்டுப் பிரச்சனைக்கு அல்ல, வீட்டு பிரச்சனைக்கு, அவர்களின் ஜீவனத்திற்கு! இதில் நாட்டுக்காக அவர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பது வருத்தமான உண்மை!   அதற்கென்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்களும் செய்வதில்லை, சம்பளம் வாங்குபவர்களும் செய்வதில்லை!

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என நாம் விளையாட்டுக்கு சொல்வது போல தான் இங்கே பல செயல்கள்!

கொள்ளைக் கூட்ட தலைவர்கள் பரவாயில்லை என சொல்லும் அளவிற்கு சில சமயங்களில் விஷயங்கள் கைமீறிவிடுகின்றன! அதிகாரங்கள் வைத்திருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லையா? இல்லை அதிகாரம் கிடைத்ததும் நாம் தான் எல்லாம் என நினைத்துக் கொள்கிறார்களா? ஏதோ ஒன்று சரியாக எதுவுமே நடப்பதில்லை. தனி மனிதனாகினும் சரி! கூட்டமாகினும் சரி!   

நாமும் தான் இதில் அடக்கம்! நம்மில் பலரும் இப்படித்தான்! மாற்றத்தை எதிர்பார்க்கும் நாம் மாற வேண்டும்! 

இரவு கவிழ, உள் தோப்பின் வழியாகத் தான் வீட்டுக்குள் வந்தான். “என்ன? என்ன ஆச்சு?” என சுந்தரி பதட்டமாக,  

“ஜெயில் வெச்சிருக்காங்க, நாளைக்கு ஆர் டீ வோ விசாரணை போல” என,

“என்ன ஆகும்?” என்றாள் கவலையாக, “தெரியலை! ஆனா ஒன்னும் ஆகாது, ரெண்டு மூணு நாள் ஜெயில்ல இருக்கணும்! பின்ன ஆர் டீ வோ விசாரிச்சு, இந்த மாதிரி இனிமே செய்ய மாட்டோம்னு எல்லார் கிட்டயும் எழுதி வாங்கிக்குவாங்க! அது ரொட்டீன் ப்ரொசிஜர்! வேற என்ன பண்ணுவாங்க தெரியலை!”   

“அப்புறம் விட்டுடுவாங்களா?” என, “விடுவாங்க, விடுவாங்க, டெய்லி வந்து கையெழுத்துப் போட சொல்வாங்க!” என்றான்.

“அப்புறம் என்ன ஆகும்?” என்று சுந்தரி திரும்பக் கேள்வியை அடுக்க, அலைந்து திரிந்து கடுப்பாக வந்திருந்தான், மனதினில் அப்பா அரஸ்ட் ஆனதில் ஒரு சஞ்சலமும், அதில் அவளிடம்  “என்ன ஆகும்? நான் என்ன கதையா சொல்றேன்! ஆகும் போது தான் தெரியும்! நிறைய பேர் உள்ள இருக்காங்க!” என்று எரிந்து விழுந்தான்.  

அதற்கெல்லாம் சண்டை இடவில்லை, முகமும் திருப்பவில்லை! அவனின் மனநிலை அறிந்து அமைதியானவள், சிறிது நேரம் கழித்து, “சின்னராசு அண்ணாக் கூட அரஸ்ட் ஆகியிருப்பாங்க போல, ஏதாவது ஹெல்ப் வேணும்னா நாம செய்யணும்” என,

“ம்ம்” என்று தலையாட்டினான், அப்போது உள்ளே வந்த வடிவுப் பாட்டி “தண்ணி கேட்கறாங்க” என,

“இருங்க” என்று அவன் தான் சென்று கொடுத்தான். “உங்க வீட்ல யாரும் அரஸ்ட் ஆகலையா?” என்று அந்தப் போலிஸ்காரர் பேச்சை வளர்க்க.. “ஆகியிருக்காங்க எங்கப்பா!” என,

“யாரும் ஒன்னும் பண்ண முடியாது, நாங்க மட்டும் என்ன பண்றது, சொல்றதை செய்யறோம்! நேரம் காலம் பார்க்காம உழைக்கிறோம்! எங்களைப் பார்த்து பயம் இருக்குற அளவுக்கு மரியாதை கொஞ்சம் கூட இல்லை! ஆடர் போடறது கவர்மென்ட், ஆனா முதல் கல்லு எங்க மேல தான் வீசுறாங்க!” என அவர் புலம்ப,  

கண்ணன் பேச்சை வளர்க்கவில்லை, உள் சென்று விட்டான்! வாசலில் சற்று தள்ளியே போலிஸ் வேன் நிற்க, யோசனையாகப் பார்த்து வந்தான்.

மகனுக்கு விளையாட்டுக் காட்டி அமர்ந்திருந்தான்! சுந்தரி வேலைகளை எல்லாம் முடித்து மாட்டிற்கு தண்ணீர் இருக்கிறதா என பார்த்து வந்தாள். “வெளில படுக்காத ஆயா, உள்ள படு!” என்றாள்.

“சரி கண்ணு” என்று அவள் உள்ளே படுத்துக் கொண்டாலும், அங்கே உறங்கியது அபி மட்டுமே! ஊருக்குள் இவ்வளவு பெரிய கலவரம் நடந்திருக்க, வீட்டில் ஒருவர் அரஸ்ட் ஆகியிருக்க, எங்கே இருந்து உறக்கம் வரும்!

“சாப்பிடறீங்களா” என வேண்டாம் என்று விட்டான், உணவு எப்படி இறங்கும். அவன் உண்ணாமல் அவளுக்கு உண்ண மனதில்லை! நேரம் செல்லச் செல்ல அசதியில் பாட்டி உறங்கிவிட, அமர்ந்திருந்தவன் எழுந்தான், “இருங்கள்” என்று சொல்வாளோ என்ற எதிர்ப்பார்ப்புடம்,

“என்ன எழுந்து விட்டான், இங்கே தனியாக விட்டு செல்லப் போகிறானா” என கோபம் மூண்டது. ஆனாலும் “இரு” என்று சொல்லவில்லை, “எல்லாம் செய்யத் தெரிகிறதே, இருக்க மட்டும் நான் சொல்ல வேண்டுமா?” என கோபம் மூள, எதுவும் பேசாமல் பார்த்திருந்தாள்.

“பூட்டிக்கோ” என்றவன் படி இறங்க, பதில் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். சரியான அமுக்கம் என மனதினில் சொல்லிக் கொண்டே இறங்கி நடக்க ஆரம்பித்தவன், “நான் இந்த கேட் பூட்டிக்கறேன், நீ உள்ள பூட்டிட்டு போ!” என,

வீட்டில் வெளிச்சம் பார்த்ததும் ஒரு போலிஸ் காரர் “தண்ணி கிடைக்குமா” என்று வர, சுந்தரியை பார்வையால் உள்ளே போ என பணித்தவன் ஒரு குடம் நிறைய தண்ணீர் மற்றும் சொம்பு கொண்டு வந்து கொடுத்து “வெச்சிக்கங்க” என்றான்.

பின்பு விளக்கை எல்லாம் அணைத்து, “பூட்டிக்கோ” என்று சொல்ல, இப்படி எனத் தெரிந்தும் போகிறானா என ஒரு கோபம் கிளம்ப, கதவை சாத்தி உள்ளே சென்று விட்டவளுக்கு அழுகை முட்டியது.

சிறிது நேரம் கதவில் சாய்ந்து நின்றவள், பின்பு உள்ளே போகப் போக, நடந்துபோகும் அவனைப் பார்க்க ஒரு உந்துதல், இவளின் வீட்டின் வாயிலில் இருந்தால் அவன் நடந்து போவது தெரியும், கதவை திறந்து வேகமாக வர, அவளின் கவனம் அவன் செல்லும் பாதையில், அங்கே யாரும் நடந்து போவது தெரியாமல் இருக்க, “எந்தப் பக்கம் போகிறான்” என்று படியிறங்கி பார்க்க,

அங்கே வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஒரு திட்டில் அமர்ந்து இருந்தான். அப்போதும் அவனை கவனிக்கவில்லை. இவள் வேகமாகத் தோப்பு பக்க கேட்டின் பக்கம் சென்று அவனைத் தேட,

“இருன்னு சொல்ல மாட்ட, ஆனா என்னை தேடுவ” என்ற குரல் கேட்க வேகமாக திரும்பினாள். “ஓஹ், என்னை தனியாக விட்டுப் போகவில்லையா” அப்படி ஒரு ஆசுவாசம் மனதினில், கூடவே கண்களில் நீர் நிறைந்தது. அவளின் முகத்தினில் ஒரு கலவையான உணர்வை பார்க்க, அதற்கு மேல தாள முடியாமல்  இழுத்து அணைத்துக் கொண்டான். அவனையும் விட இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அப்படி ஒரு தேம்பலோடு கூடிய அழுகை.

“ஏன் அழுகிறாய்?” என்று அவனும் கேட்கவில்லை. அழட்டும் என்று விட, சற்று தேறிக்கொண்டவள், அவனின் சட்டையில் முகத்தை அழுந்தத் துடைக்க, “இவ்ளோ பெரிய முந்தானை வெச்சிருக்க தானே, அப்புறம் என் சட்டையை ஏன் அழுக்காக்கற” என சொல்லியபடி அவளின் புடவையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டான். மனைவியை, மனைவியின் வாசத்தை அனுபவித்து நின்றான்.

“எனக்கு இது தான் வேணும்” என்று மீண்டும் முகத்தை அதனில் தேய்க்க, அப்படி ஒரு நிம்மதி கண்ணனின் மனதினில். “ஷர்ட்ல தேய்ச்சி என்ன பண்ண? ஷர்ட் இல்லாம இருந்தாக் கூடப் பரவாயில்லை!” என அவனுக்கு அவனே பேசி பெருமூச்சு விட்டு சலிக்க, சிறிது முறுவலோடு அவனை விட்டு விலகியவள்,      

“இங்கே என்ன பண்றீங்க?” என, “என்ன பண்ணுவேன், வாட்ச்மேன் வேலைப் பார்க்கறேன்” என்றான்.

“ஓஹ், வாட்ச்மேன் வேலை கூடப் பார்ப்பீங்க, ஆனா இருக்க மாட்டீங்க” என,

“நான் எப்போ இருக்க மாட்டேன்னு சொன்னேன்” என்று கோபத்தில் அவளை அடித்து விடுபவன் போல பக்கத்தில் இழுக்க..  

“எல்லாம் நடத்திக்க தெரியும், என்னை பிடிக்கலைன்னு சொல்லத் தெரியும், ரெண்டு நாள்ல குழந்தை உண்டாக்கத் தெரியும், என்னை விட்டுப் போகத் தெரியும், விவாகரத்து பண்ணத் தெரியும், பின்ன தேடிவரத் தெரியும், இங்கேயே வேலை பார்க்கிறேன்னு சுத்தத் தெரியும், திரும்பத் தாலி கட்டத் தெரியும், ஆனா வீட்டுக்குள்ள மட்டும் வரமாட்டாராம்.. அதுக்கு மட்டும் தெரியாதாம்” என மூச்சு விடாமல் பேசி,

“இவர் ஒழுங்கு! நான் வெக்கத்தை விட்டு என்கூட வந்து இருந்துக்கோன்னு கேட்கணும்! அப்படித் தானே!” என  கோபத்தில் சுந்தரியும் சிலுப்பி நிற்க,

“அடப்பாவி, ப்ளேட்டை என் மேல திருப்பி போட்டுட்டுயா” என முறைத்து நின்றான்.

“ப்ளேட்டை திருப்பிப் போடறேனா நான், உங்க தலையில தான் போடணும் அதை! பின்ன நான் கூப்பிடணுமா, கூப்பிடவே மாட்டேன்!” என இடுப்பில் கை வைத்து முறைக்க,

“கூப்பிடாத தாயே! கூப்பிட்டாத! நீ ரோஷமாவே இரு! ஆனா எனக்கு அப்படி எதுவும் கிடையாது! நான் வந்துட்டு போறேன்!” என அசால்டாகச் சொல்லி முடித்தவன், அவளுக்கு முன் வீட்டின் படியேற,

தானாக ஒரு நிம்மதி மனதில் மலர்ந்து பரவியது. வீட்டின் உள் வந்தவள், கூடவே “உங்களுக்கு இங்க வசதி பத்தாது!” என,

“வசதி பத்தாது என்ன? வசதி நீ செய்யவேயில்லை! ரெண்டு கட்டில் தான், பாட்டி ஒன்னு, நீயும் பையனும் ஒன்னு, எப்போவாவது நான் வருவேன்னு யோசிச்சு இருந்தா நீ இதை யோசிச்சு இருப்ப” என,

“ஏன் நீங்க கீழப் படுக்க மாட்டீங்களா?”

“அப்புறம் ஏண்டி வசதி பத்தாதுன்னு சொல்ற” என கடுப்படிக்க,

“பா செம வாய் நீங்க” என்றவளிடம், “இன்னும் உன் வாயை என்கிட்டே குடுக்கவேயில்லை, அப்புறம் என்ன செம வாய்! பேசாம படுடி! மனுஷனை கடுப்படிக்கிறா!” என,

இவர்களின் பேச்சு சத்தத்தில் அபி அசைய, வாயை மூடிக் கொண்டனர் இருவரும். பின் உள் ரூமில் ஆளுக்கு ஒரு பக்கம் உருண்டு புரண்டனர், பின்னே தூக்கம் வந்தால் தானே! நடந்த கலவரத்தை பார்த்தவர்களுக்கு உறக்கம் வரவில்லை!      

Advertisement