இமை – 23

ழகான மாலையில் வானம் இருட்டிக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழைக் குழந்தையை மண்ணில் இறக்கி விட்டுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ தெளிவான நீரோட்டமாய் அமைதியுடன் இருந்தது.

பவித்ரா அறையில் இருக்க தோட்டத்தில் நடந்து கொண்டே அவள் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்த மித்ரன், மாடியில் காற்றில் படபடத்து கொடியில் ஆடிக் கொண்டிருந்த துணிகளைக் கண்டதும் பவித்ராவிடம் எடுக்க சொல்வதற்காய் அவள் அறைக்கு வந்தான். வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்தவனின் பார்வை, ஆளுயரக் கண்ணாடியின் முன்பு நின்று கண்ணுக்கு மையிட்டுக் கொண்டு, கண்ணைச் சிமிட்டி சரி செய்து கொண்டிருந்த பவித்ராவின் மீது படிந்தது.

அந்த செயல் அழகான கறுப்புநிறப் பட்டாம்பூச்சி இரண்டு கண்ணாடிக்குள் சிறகடிப்பது போல் கவிதையாய் அவன் மனதில் சிறகடித்தது.

கண்ணிலே மை

எழுதுகிறாய்…

கவிதையில் சிரிக்கிறது

கண்ணாடி…

 

இரண்டு நாட்களாய் அழுது கொண்டே இருந்தவள் இப்போது தெளிவாகியிருக்க குளித்து தலை சீவி கண்ணுக்கு மையிட்டு சிவப்பு நிற காட்டன் சேலையில் அழகாய் ஜொலித்தாள்.

கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பம் கண்டு திரும்பியவள், அவனது பார்வை தன் மீது ஆவலுடன் படிந்திருப்பதைக் கண்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள். கன்னத்தில் நாணத்தின் செம்மை படிந்திருக்க, “என்னங்க, ஏதாவது வேணுமா…” என்றாள் மெல்லிய குரலில்.

என்ன வேண்டும் என்கிறாய்…

என் எண்ணம் அறியாமல்… நான்

எனையறியாமல் கேட்டுவிடப்

போகிறேன்… என்னுடைய உன்னை…

 

“எனக்கு ஏதேதோ வேண்டுமென்றுதான் இருக்கிறது… கேட்டால் கொடுத்திடுவாயா பவி…” என்று மனதில் பெருமூச்சு விட்டாலும் உதடுகள், “மழை வர்ற மாதிரி இருக்கு… மாடியில் துணி காயப் போட்டிருந்தியா பவி…” என்றது கண்களுக்குள் கள்ளத்தனம் மறைத்து.

“ம்ம்… மறந்துட்டேன்…” என்றவள் வேகமாய் வெளியே வர வழியில் கதவருகில் நின்று கொண்டிருந்தவனை காற்றில் படபடத்த முந்தானை செல்லம் கொஞ்ச அவளை இழுத்து அணைத்துக் கொள்ளத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தி கண் மூடி நின்றான்.

காற்றிலும் இத்தனை

சுகந்தமில்லை என்பேன்…

உன் சேலை முந்தானை

தென்றலாய் மாறி – என்னை

செல்லம் கொஞ்சிடும்போது…

 

மாடியில் கிடந்த துணியை எடுத்து வந்து மடித்து வைத்தவள் இரண்டு நாட்களாய் சாமிக்கு விளக்கேற்றாமல் இருந்தது மனதை உறுத்த, பூஜையறைக்கு சென்று விளக்கேற்றினாள். கண்ணை மூடி, கைகூப்பி வெகுநேரம் கடவுளிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தவளின் கிருஷ்ணமணிகள் அங்குமிங்கும் அசைந்து கொண்டிருந்தன.

எப்போதும் வகிட்டில் செந்தூரத்தோடு இருப்பவள், இன்று துணி எடுக்கப் போகும் அவசரத்தில் வைக்காமல் சென்றிருக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரனின் கண்ணில் அது உறுத்தவும், அங்கிருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டான்.

அந்த ஸ்பரிசத்தில் சட்டென்று கண்ணைத் திறந்தவளின் விழிகள் திகைப்புடன் அவனை ஏறிட, அவன் விழிகளில் தெரிந்த வலியும், குற்றவுணர்வும் அவள் மனதை வருத்தின. அந்த விழிகளில் மொத்தமாய் கலந்துவிட அவள் மனதும் தேகமும் துடித்தது.

இருவரின் கண்களும் இணைந்து எண்ணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு பூஜ்ஜியத்திற்குள் சலனமின்றி மிதந்து கொண்டிருந்தன. சிறிது நேரம் அப்படியே நின்றவள், சட்டென்று கண்களை மாற்றிக் கொண்டு திருநீரை எடுத்து நெற்றிக்குத் தொட்டுக் கொண்டாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நெற்றியிலும் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள் அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாள். அவளது அருகாமைக்காய் மனம் ஏங்க அழகாய் சுடர்விடும் தீபத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் மித்ரன்.

சிறிது நேரம் கழித்து, சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தவள் முன்பு அவன் வந்து நிற்கவும், என்னவென்பது போல் ஏறிட்டாள்.

“பவி… காரக் குழம்பு இருந்தா நைட்டுக்கும் அதுவே போதுமே… எதுக்கு கஷ்டப்படறே…” கண்ணில் புன்னகை வழிய, புருவத்தைத் தூக்கி கிண்டலாய் கேட்டு, கண்ணடித்துவிட்டு சென்றவனை இமைக்க மறந்து பார்த்து நின்றாள் பவி.

அன்று இரவு வரை ஆளுக்கு ஒரு பக்கமாய் விலகி நின்று ஒருவரையொருவர் காணாமல் கண்டு கொண்டு ஒரு நிமிடமும் எண்ணத்தில் பிரியாமல் நெருங்கியே இருந்தனர். வெளியே இதமாய் பெய்து கொண்டிருந்த மழை மனதில் அவர்களை நனைத்துக் கொண்டிருந்தது.

தயக்கமும், மனதுக்குள் இன்னும் தங்கியிருந்த குழப்பமும் பவியை மித்ரனிடம் இருந்து விலக்கி நிறுத்த, மித்ரனிடம் அவள் சொன்ன வார்த்தைகள் அவளை நெருங்க விடாமல் அவனைத் தயங்க வைத்தது.

மதியஉணவு சரியில்லாமல் போனதால் இரவு உணவை வேகமாய் முடித்துக் கொண்டு பவித்ரா அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள். ஹாலில் டீவி ஓடிக் கொண்டிருக்க மழையின் குளிர்மை மனதின் உஷ்ணத்தைக் கிளறி விட்டிருக்க, வெறுமனே அதை வெறித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

மிகவும் மெதுவாய் அதிகரித்து மழை வலுக்கத் தொடங்க சட்டென்று மின்னலுடன் இடியும் இடித்து மறைந்தது.

“அச்சோ… பவி பயப்படுவாளே…” சட்டென்று எழுந்தவன், காலுக்குள் சுள்ளென்று ஒரு வலியை  உணர்ந்தான்.

அதைக் கண்டு கொள்ளாமல் அவளது அறைக்கு சென்றவன், தாளிட்டிருந்த கதவைத் தட்டினான்.

“பவி… கதவைத் திற…” உள்ளே எந்த சத்தமும் கேட்காததால் மீண்டும் தட்ட, திறந்த கதவின் பின்னால் கூலாய் நின்று கொண்டிருந்தாள் பவித்ரா.

“என்னங்க… நீங்க இன்னும் தூங்கப் போகலையா…”

“ம்ம்… இடியும் மின்னலுமாய் இருக்கே… நீ பயப்படுவியோன்னு வந்தேன்…” என்றான் பரபரப்புடன்.

அவன் சொன்னது கேக்காதது போல், “என்ன சொன்னிங்க…” என்று மீண்டும் கேட்டவள், “ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு காதிலிருந்த பஞ்சை வெளியே எடுக்க அதைக் கண்டவன் முகம்,

“ஆஹா… வட போச்சே…” என்ற பாவத்தைக் காட்டியது. அவனது ஏமாற்ற முகம் மனதுக்குள் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தாள்.

“பவி… வெளிய இடி, மின்னல் பயங்கரமா இருக்கு…”

“ஆமாம்… அதுக்குதான் காதில் பஞ்சை வஞ்சுட்டு கண்ணை மூடி படுத்திருந்தேன்…”

“ஓ, உனக்கு இப்ப பயம் போயிடுச்சா… ஆனா, எனக்குதான் தனியாப் படுக்க பயமா இருக்கு… அதனால…” இழுத்தவனை, செல்ல கோபத்துடன் முறைத்தாள் பவித்ரா.

“ஒரு அதனாலயும் இல்லை… போயி படுங்க மித்து…” சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள், சட்டென்று இடித்த இடியில் நிலைகுலைந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

“ஆஹா… இது… இது… இதைத்தானே எதிர்பார்த்தேன்…” என நினைத்த மித்ரனும் தேன் குடிக்கக் காத்திருந்த நரியாய் அவளை இறுக்கிக் கொண்டான். அவனது அணைப்பில் அருகாமைக்காய் அலைபாய்ந்த நெஞ்சத்தை அடக்கி வைத்திருந்தவளும் தொலையத் தொடங்கினாள்.

அன்புள்ளவரின் அருகாமையும் அன்பும் அவர்கள் மீதான கோபத்தையும் மறக்க வைக்கும் என்பதுதானே உண்மை. அவளும் அவன் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் எல்லாம் அவன் அணைப்பிலேயே கரைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது இடையை வளைத்திருந்த அவனது கைகள் மெல்ல அவளை நெருக்க, அவனது இதழ்கள் மூடியிருந்த இமைகளை நெருங்கி மெல்ல முத்தமிட்டன. அதில் சிலிர்த்தவள் அவனை இன்னும் இறுக்கமாய் பற்றிக் கொள்ள அவனுக்காய் மருத்துவ முத்தம் கொடுத்த இதழ்களைத் தேடி மீண்டும் மருந்தெடுக்கத் தொடங்கியது அவனது கள்வெறி கொண்ட இதழ்கள்.

மெல்ல அவனுள் தொலையத் தொடங்கியவளின் முகமெங்கும் ஊர்வலம் சென்ற இதழ்கள் மேலும் முன்னேறத் தொடங்குகையில் பூஜை வேளைக் கரடியாய் சிணுங்கிய அலைபேசி, அழைத்தது ராகவ் என்றது.

சட்டென்று நிதானத்திற்கு வந்தவள் அவனை விலக முயல, அவனோ அவளை விடாமல் இறுக்கிக் கொண்டு முன்னேறத் துடித்தான்.

“பவி… ப்ளீஸ்…” அவனது உதடுகளில் வழிந்த தாபம் மனதை உறுத்தினாலும், “மித்து… நான் சொன்னதை மறந்துட்டீங்களா…” அவளது குரலிலும் உணர்வின் தாக்கம் மிகுந்திருந்தது. அலைபேசியின் சிணுங்கலும் தடங்கலாய் மாற, விருப்பமில்லாமல் அவளை விட்டு விலகியவன் கண்ணில் ஏமாற்றம் நிறைந்திருந்தது.

அதற்குள் நின்றிருந்த அலைபேசியை யோசனையுடன் பார்க்க மீண்டும் சிணுங்கத் தொடங்கியது.

“எடுத்துப்பேசுங்க…” பவித்ரா சொல்லவும் எரிச்சலுடன் வேகமாய் நகரப் போக காலுக்குள் மீண்டும் அதே வலி நரம்புகளை சுண்டி இழுப்பதுபோல் தோன்றியது. அவனது முகம் வலியில் சுருங்க, “ஆ…” என்று காலைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

பதறிப் போன பவித்ரா, “அச்சோ, என்னாச்சுங்க… கால் வலிக்குதா… முதல்ல உக்காருங்க…” என்று அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தினாள். 

அந்த வலியிலும் அவனுக்காய் அவள் துடிப்பதை ரசித்துக் கொண்டே அவள் கையைப் பற்றிக் கொண்டவன்,

“பவி… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியும் இதே போல ஒரு வலி இடுப்புல இருந்து கால் நரம்பு எல்லாத்தையும் பிடிச்சு இழுக்குற போல வந்துச்சு… நாளைக்கு டாக்டர்கிட்டே சொல்லணும்…” என்றான்.

“என்னங்க நீங்க… வலிச்சா சொல்லுறதில்லையா…” கடிந்து கொண்டவள் அவன் காலைக் கட்டிலில் எடுத்து வைத்து மெல்ல தடவிக் கொடுத்தாள். அவனது வலியில் தன் கோபம், வலி மறந்து தனக்காய் துடித்தவளின் நேசத்தில் நெகிழ்ந்து போனான்.

“பவி…” மனதில் உள்ள காதல் முழுவதையும் வெளிப்படுத்தும் அழைப்பில் நிமிர்ந்தாள். அவளையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் ஈரத்தின் சாயலைக் காணவும் திடுக்கிட்டாள்.

“என்னங்க… என்ன பண்ணுது… டாக்டருக்கு கூப்பிடவா…”

பதறியவளின் கையைப் பற்றி அருகில் அமர்த்தியவன், “இப்படி… உக்காரு… உன்கிட்டே கொஞ்சம் பேசணும்…”

அமைதியாய் அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அதில் ஏதேதோ உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. பழைய கசப்பான நினைவுகள் எதையோ அசைபோடுவது போல் அவன் முகம் சுளிந்து தெளிந்தது.

அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், “பவி… உன்னால என்னை வெறுக்க முடியலைனாலும் நிச்சயம் என்மேல கோபம் இருக்கு தானே…” என்றான் அவளையே நோக்கி.

ஒரு நிமிடம் அமைதியாய் நிலம் நோக்கியவள், “கோபம் இல்லை மித்து… ஆனா வருத்தம் இருக்கு…” என்றாள்.

“ம்ம்… உன்னோட இந்த கோபமும், வருத்தமும் எனக்கும் ஒருநாள் உன்மேல இருந்துச்சு…”  

“என்மேலயா… எதுக்குங்க…” குழப்பமாய் கேட்டாள்.

“பவி… நடந்த விஷயம் எல்லாம் உனக்குத் தெரியும்… ஆனா நான் எந்த மாதிரி ஒரு சூழ்நிலைல நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு தெரியுமா…”

ஏறிட்டவள் அவனது வார்த்தைகளுக்காய் காத்திருந்தாள்.

என் அம்மா இறந்தபிறகு எனக்கு எல்லாமே சித்திதான்… சித்தின்னு நான் கூப்பிட்டதுகூட இல்லை… அப்படி என்னை சொந்த மகனுக்கும் மேலயா பார்த்துகிட்டாங்க… அவங்க ஆசைப்பட்டு கேட்டது ரோஹிணியை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தான்… அவ மேல எனக்கு விருப்பம் ஏதும் இல்லேன்னாலும் வெறுப்பும் இல்லை… அம்மா ஆசைக்கு சம்மதிச்சேன்… அப்பதான் இந்த ஜாதகப் பிரச்சனை வந்துச்சு… அதுக்கு ஒரு யோசனையை அவங்க சொன்னாலும் நான் ஒத்துக்கவே இல்லை…” நிறுத்திவிட்டு தொடர்ந்தான்.

“ரோஹிணி மனசொடிஞ்சு போயி எதாச்சும் பண்ணிப்பான்னு சொல்லி கம்பெல் பண்ணாங்க… லாஸ்ட்ல நான் ஒரு நிபந்தனையோட சம்மதிச்சேன்… இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்குற பொண்ணுக்கு எல்லா விஷயத்தையும் சொல்லி அவ சம்மதம் வாங்கணும்னு… அதுகூட இந்த மாதிரி விஷயத்துக்கு எந்தப் பொண்ணு சம்மதிக்கப் போறா… நிச்சயம் இது நடக்காது, இந்த விஷயத்தை இவங்க அதோட விட்டுடுவாங்கன்னு நினைச்சுதான்…” அவன் சொல்ல பவித்ரா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஆனா, நான் நினைச்சதுக்கு மாறா ஒரு பொண்ணு பணத்துக்காக இதுக்கு சம்மதிச்சிட்டா… அவகிட்டே எல்லாம் சொல்லிட்டோம்னு அம்மா சொன்னாங்க… இதுக்கு எப்படி ஒரு பொண்ணால சம்மதிக்க முடியும்னு எனக்கு கோபம் வந்துச்சு… அப்புறம் என்ன குடும்ப தேவைக்காக அந்தப் பொண்ணு சம்மதிச்சிருக்குமோன்னு நினைச்சு சமாதானப் பட்டேன்…”

“கல்யாண மேடைல உன்னைப் பார்த்ததும் மனசுக்குள்ளே ஒரு தவிப்பு வந்துச்சு… ஆனா, நீயே சம்மதிச்சிட்டேன்னு சொல்லும்போது எனக்கென்னன்னு அந்தக் கோபமே ஒரு அலட்சியத்தைக் கொடுத்துச்சு… நம்ம கல்யாணத்துக்கு என் மனநிலை அப்படிதான் இருந்துச்சு… ஆனா நீ புது மணப்பொண்ணு போலவே இயல்பா நடந்துக்கவும் தான் அம்மா அந்த ஒரு வருஷக் கணக்கு பத்தி உன்கிட்டே சொன்னாங்களான்னு கேட்டேன்… அதுக்கும் நீ சொன்னாங்கன்னு சொல்லிட்டே… பிறகு நான் வெளிநாடு போயி கால் ஒடிஞ்சு திரும்பி வந்தபோதும் நீ ஒரு மனைவியா உன் கடமையை செய்யத் தொடங்கினே… உன்னோட எதார்த்தமான அன்பும், அக்கறையும் எனக்காக எதையும் பார்த்துப் பார்த்து செய்த மனசும் என்னைக் கவர ஆரம்பிச்சுது… இந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு ரோஹிணிகிட்டே வந்ததே இல்லையேன்னு தோணுச்சு… ஆனாலும் அந்த நெருடல் மட்டும் எனக்குள் இருந்துட்டே இருந்துச்சு…”

நடுவில் குறுக்கிடாமல் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா.

“உன்னை எனக்குள்ளே உணர ஆரம்பிச்ச போதுதான் ஒருநாள் ராத்திரி நீ யாருடைய போட்டோவுக்கோ முத்தம் கொடுக்கறதைப் பார்த்தேன்…” சொன்னவன் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து சிரிக்கவும், முதலில் யோசித்தவள் பிறகு அது அவனுடைய போட்டோ தானே என்று நாணத்துடன் புன்னகைத்தாள்.

“அப்போ எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு… ஆனா எனக்குள் இருந்த காதல் உன்னை நெருங்க வச்சுது… அப்ப அம்மா சொன்ன ஒருவருஷக் கணக்கை நீ நினைவு படுத்தவும் உண்மையை சொல்லிடணும்னு தவிப்பா இருந்துச்சு… அந்த போட்டோல உள்ளது யாருன்னு தெரிஞ்சுக்க அலமாரிக்குள்ளே நீ ஒளிச்சு வைத்திருந்த டைரியை எடுத்தேன்… அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் என்னை நீ எத்தனை நேசிக்கறேன்னு சொல்லுச்சு… என்னைப் பார்த்து என் போட்டோ கேலியா சிரிச்சது… அப்போ என் மனசு அடைஞ்ச நிம்மதிக்கு அளவே இல்லை…” அவன் நிறுத்தவும், “அடக் கள்ளக் கண்ணா… என் மனசை டைரி கண்ணாடி போலக் காட்டிருக்குமே… இந்த திருட்டுத்தனம் வேற எனக்குத் தெரியாம பண்ணிருக்கியா…” என சிரித்துக் கொண்டாள் பவித்ரா.

“அந்த நிம்மதிக்கு காரணம் உனக்குப் புரியுதா பவி… அப்பதான் உன்மேல எனக்கு உள்ள காதல் புரிஞ்சது… எந்த சூழ்நிலைலயும் உன் அன்பை இழக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்… அதுக்குப் பிறகு நடந்தது எல்லாம்தான் உனக்குத் தெரியுமே… இப்ப சொல்லு பவித்ரா… என் மேல இன்னும் உனக்கு கோபம் இருக்கா…” கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.

அவனுக்கு பதில் சொல்லாமல் அவனது கண்களில் தன்  கண்களை கலக்க விட்டவளின் கையைப் பிடித்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான். “சொல்லு பவி… இப்பவும் என் மேல் கோபம் இருக்கா…” கேட்டவனின் நெஞ்சில் உரிமையோடு சாய்ந்து கொள்ள அவனது கைகள் அவளைத் தழுவிக் கொண்டன.

“பவி… நானும் இங்கேயே படுத்துகிட்டுமா…” சந்தர்ப்பம் பார்த்து கேட்டவனிடம் மறுக்க முடியாமல், முறைப்புடன் புன்னகைத்தவள் சம்மதமாய் தலையாட்டினாள்.

உன் மீது கோபப்பட

நீ என் உணர்வல்ல… உயிர்…

உன் பார்வைக்கு பொருளாய்

நானில்லை… ஆனாலும்

உன் கண்ணுக்கு இமையாய்

காத்து நிற்பேன் கண்ணாளா….

இமைப்பீலி வரும்…