Advertisement

       அத்தியாயம் இருபத்தி ஐந்து :

வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!

இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை…. வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில சமயம் திடீரென்று நம்மை நிலைகுலைய வைக்கும்.

“நான் இல்லாத போது என் பெண் என்ன செய்வாள்?” என்பது பூதாகரமாகத் தாக்கியது.

இப்போது நான் ஒன்றும் செய்யாமல் போய் விட்டால், பின்பு நான் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இவ்வளவு உயரம் வந்ததற்கு என்ன அர்த்தம். அதையும் விட வாழ்க்கையில் ஒவ்வொவொரு நொடியையும் என் இஷ்டம் போல அனுபவித்து வாழ்ந்து விட்டு அதற்கு காரணமாயிருந்த என் பெண்ணை அம்போ வென்று விட்டு செல்வதா?

மாற்றி மாற்றி என் பெண் பேசுகிறாள்.. சின்ன பிள்ளைகள் விளையாட்டா இது! என்னை யார் என்று நினைத்தாள்? என்னால் தெரிந்து கொள்ள முடியாதா..? வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். அவளே சொல்லப் பிரியப்படாத விஷயத்தை தெரிந்து என்ன செய்யப் போகிறேன்.

அவள் சொல்வது போல பார்த்தால் கூட.. இந்த ஈஸ்வர் கீழே பார்த்தானா? என் மகள் என்ற பயம் வேண்டாமா?

என்னவாகினும் வர்ஷினி ஈஸ்வரை காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று புரிந்தது.. அவளிடம் எப்படி நடந்தான் ஈஸ்வர் என்று தெரியாத போதும் எப்போதும் வர்ஷினிக்காக ஈஸ்வர் பார்க்கிறான் என்பது அவருக்கு நிச்சயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை அவருக்கு.

மளமளவென்று சில முடிவுகளை மனதிற்குள் எடுத்தார்… எடுத்து மட்டும் போதாதே, அவருக்கு உடனே செயல் படுத்த வேண்டும். ராஜாராமின் வெற்றியின் ரகசியமே எதையும் ஆரப் போடும் பழக்கமில்லை அவருக்கு.

எல்லாம் உடனுக்குடன் செய்ய வேண்டும்… ஐந்து மணிக்கு எழுந்து விட்டார். அப்பாவையும் எழுப்பியவர்…  போலிஸ் கிரௌண்டிற்கு இருவரும் வாக்கிங் செல்வது போல சென்றார்கள்..

எட்டு மணிக்கு அஸ்வின் கைது செய்யப்பட்டான் அவனின் வீட்டில்..  அவ்வளவு தான் வீட்டினருக்கு தெரியும்.. யார் கைது செய்தார்கள் எங்கு கொண்டு சென்றார்கள் ஒன்றும் தெரியவில்லை.. பிரகாசமும் இரண்டு மணி நேரமாக அலைந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல்..

ஆவேசமாக ஈஸ்வரின் வீட்டிற்கு சென்றார்…

“என் பையனை இப்படி செஞ்சிட்டீங்க இல்லை, எங்க இருக்கான் அவன்? எப்படியாவது அவனை வெளியே கொண்டு வாங்க! இல்லை உங்களை எல்லாம் என்ன செய்வேன்னு தெரியாது!” என்றார்.

எல்லோரும் ஈஸ்வரைப் பார்க்க, அவன் நான் இல்லை என்று தலையசைத்தான்.

அங்கிருந்த யாருக்கும் எதுவும் தெரியவில்லை… “அவனைக் கைது பண்ணிட்டாங்க. நீங்க தான் ஏதோ செஞ்சிருக்கீங்க!”

“என்ன? என்ன செஞ்சோம்? நாங்க எதுவும் யாரும் செய்யலை!” என்று ரூபாவும் பதிலுக்கு பேச,

நமசிவாயம் பொறுமையாகவே “இல்லை! நாங்க எதுவும் செய்யலை, வேற என்னன்னு பாருங்க… எங்களுக்கு இருக்குற பிரச்சனைக்கு ஏதாவது செய்யணும்னா எப்போவே செஞ்சிருப்போம்.. நாங்க செய்யலை!” என்றார் அவரும் ஸ்திரமாக…

“எங்க உங்க பையன், என்னைக் கடத்தினான் தானே அவனை கேளுங்க” என்று சொல்ல,

அதுவரை எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்திருந்த ஈஸ்வர்.. “இல்லை, நாங்க எதுவும் செய்யலை.. உங்களைக் கடத்தினது நான் மறைச்சு ஒளிச்சு செய்யலை நேரா தான் செஞ்சேன்.. கண்டிப்பா இதை நாங்க செய்யலை…”

“இங்க நேரத்தை விரையம் செய்யாதீங்க, நாங்க செய்யலை! எல்லோரும் எங்களை மாதிரி சும்மா இருக்க மாட்டாங்க! யாருக்கு என்ன செஞ்சானோ?” என்றான் தெளிவாக..

அப்போதைய அவன் மனநிலை தெளிவாக இருந்தது. எல்லா பிரச்சனைகளையும் முடிக்க வேண்டும். எதையும் அவன் வளர்க்க விரும்பவில்லை..  இது ராஜாராமின் வேலை என்று உள்மனது சொல்லியது. ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.

பிரகாஷம் குழம்பிப் போனார் யார் செய்திருப்பார் என்று..

ஈஸ்வர் இது ராஜாராமின் வேலை என்று சரியாக கணித்திருந்தான். அதிலும் நேற்று இரவு வர்ஷினி அழைத்து “அப்பாக்கு என்ன விஷயம்னு தெரியாது.. உங்களுக்கு எனக்கும் பிரச்சனைன்னு தெரியும்.. என்னன்னு எப்படிக் கேட்டாலும் சொல்லிடக் கூடாது.. ஏற்கனவே நான் நிறைய உளறி வைச்சிருக்கேன்” என்றாள்.

“என்ன? என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்னு எனக்கே இப்போ சரியா ஞாபகமில்லை. மாத்தி மாத்தி சொன்னேன்.  நடந்ததை சொல்லலை… அப்பா என்னன்னு கேட்டா சொல்லக் கூடாது.. ஏதோ ஏதோ பேச போய் அப்பா கண்டு பிடிச்சிடக் கூடாதுன்னு நீங்க என்னைக் கீழ பார்த்தீங்க, உங்களை நான் ஆர்வமா பார்த்தேன்னு உளறிட்டேன்.”

“என்ன? எதுக்கு இப்படிச் சொன்ன..”

“பின்ன, முன்ன நான் உங்களை அப்படித் தான் பார்த்தேன்! அதுதான் டக்குன்னு என்ன பொய் சொல்லன்னு தெரியாம அதையே சொல்லி வெச்சேன்!” என்றாள் எரிச்சல் மறையாத குரலில்.

“அப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது? நீங்க இப்படி நடந்தது தெரிஞ்சா உங்களைக் கொல்லக் கூட தயங்கமாட்டார்.. அப்புறம் எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சுன்னா?”

“அதுதான் மாத்தி சொன்னேன்..!”

ஆனால் இப்போது வர்ஷினி ஈஸ்வரிடம் பேசப் பேச தான் அப்பாவிடம் பேசியது முட்டாள் தனத்தின் உச்ச கட்டடமாக அவளுக்கு தோன்றியது.

“நான் எதுவும் சொல்ல மாட்டேன்!” என்றவனிடம், “அதில்லை இப்போ!” என்று எரிந்து விழுந்தாள்..

“அதனால… அதனால..” என்று எப்படி சொல்வது என்று தெரியாமல் இழு இழு என்று இழுக்க..

“என்னன்னு சொல்லு, சொன்னா தானே தெரியும்” என்றான் பொறுமையாக.. அவனுக்கு அவனே பொறுமையாக விஷயங்களை கையால் என சொல்லிக் கொண்டே.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்றார்” என்றாள்.

“அச்சோ! சிறு பெண் என்னால் இப்படி வேறா?” என்று அவன் யோசிக்கும் போதே…

“உங்களை!” என்று சொல்லிவிட..

“என்ன?” என்று அதிர்ந்து விட்டான்..

“நான் சொன்னேன் நீங்க பண்ணிக்க மாட்டீங்கன்னு.. நீங்க ஓகேன்னா எனக்கு ஓகே வான்னு கேட்கறார்..”

“நீங்க ஓகே இல்லை சொல்லிடுங்க..” என்று படபடவென்று சொல்லி அவள் வைத்து விட…

“ஐயோ! இப்போது இது என்ன?” என்று அமர்ந்து விட்டான்.. ஒன்றை செய்து விட்டு என்னையும் என்னால் பார்க்க முடியாமல், மற்றவர்களையும் என்னால் பார்க்க முடியாமல் என்ன நடக்கிறது… இதில் வர்ஷினியையும் இழுத்து விட்டு…

இதற்கு உண்மை சொல்லி, அவளின் அப்பா அடித்தால் அடி வாங்கி செத்து விடலாம் என்று கூடத் தோன்றியது.

ஐஷ்! அவளை எப்படி எதிர்கொள்வது.. அவள் தினமும் என்னை  நினைத்து தானே இருப்பாள். அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

என்னால் யாரையுமே திருமணம் செய்ய முடியாது.. இதில் தினம் தினம் வர்ஷினியைப் பார்த்து நான் என் செயலைக் குறித்து வெட்கிக் கொண்டே இருப்பதா?

இப்படி யோசனைகளோடே உறங்கியும் உறங்காமலும் காலை விழித்து எழ.. அஸ்வினின் கைது படலம்..

இது ராஜாராமினது என்று தெளிவாக உள் மனது சொல்லியது.. அதுவும் மாலை வரை இப்போது தன்னிடம் பேச முயற்சிக்காதது.. எதுவும் யாரிடமும் கேட்காமல் எல்லாம் தான் நினைப்பது போல நடத்த ஆரம்பித்து விட்டார் என்று புரிந்தது.

இனி அவன் கையினில் எதுவுமே இல்லை என்பது போல ஒரு தோற்றம்.. தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்று தான் நினைத்தான். நிச்சயம் வர்ஷினி சொல்லியதை நம்பியிருக்க மாட்டார் என்றே தோன்றியது.  இந்த வர்ஷினி ஏன் இப்படி உளறி வைத்து விட்டாள்.. அவளின் அப்பாவைப் பற்றி தெரியவில்லை அவளுக்கு என்றே தோன்றியது.

முன்தினம் இரவில் இருந்து உறங்காத மற்றொரு ஜீவன் ரஞ்சனி..  தான் என்ன நினைத்தோம் என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லை… நான் முட்டாளா.. பெரிய முட்டாளா.. சூழ்நிலையைக் கையாளத் தெரியாமல் கையாண்டு விட்டேனா.. விஷ்வாவைத் தப்பாய் பேசினான் என்று பத்மநாபனின் மீது மிகுந்த கோபமாய் இருந்தது.

ஏற்கனவே அங்கே ஒட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு எதுவுமே பிடிக்காமல் போனது. காலையில் குழப்பான முக பாவனையில் இருந்த ரஞ்சனியை பத்மனாபன் கவனித்தான் தான்.

ஆனால் என்ன ஏது என்று கேட்க முடியாமல் காலையில் இருந்து அலுவலக வேலைகள் அவனுக்கும் முரளிக்கும் வரிசை கட்டி நின்றன. ராஜாராம் கொடுத்திருந்தார்.

வேலைகள் முன்னிட்டு அண்ணனும் தம்பியும் வெளியே சென்று விட.. மதியமாக ஐஸ்வர்யா சொல்லி தான் அஸ்வின் கைது செய்யப் பட்டது தெரிந்தது. ஆனாலும் அவன் எங்கே இருக்கிறான் யார் கைது செய்தார்கள் என்று அதுவரையிலும் தெரியவில்லை என்று சொல்ல .. தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் ஈஸ்வரைப் பார்க்க கிளம்பினாள்.. அவன் அங்கே இல்லை, மாலை தான் வந்தான்…. வந்தவன் அவனின் ரூமிற்கு பிரெஷ் ஆக செல்ல.. அவனின் பின்னேயே சென்றவள்..

“விஷ்வா, என்ன நடக்குது?” என்றாள்..

அவளிடம் இதுவரை ஈஸ்வர் முகம் கொடுத்துப் பேசவில்லை.. ஆனால் இன்று அவளின் முகத்தை பார்த்தவனால்  அப்படி ஒதுக்க முடியவில்லை.

“நிறைய நடக்குது! எதைக் கேட்கற..” என்றான் சலிப்பாக.

“இந்த பத்து, வர்ஷி கிட்ட நான் அப்போவே உன்னை ஈஸ்வர் கிட்ட இருந்து தள்ளி நிக்க சொன்னேனே? இப்போ என்ன நடந்தது? நீயா இழுத்து விட்டுகிட்டன்னு சொல்றார்!” என்ற ரஞ்சனி சொல்ல…

எதைச் சொல்கிறாள் என்று புரியாமல் ஈஸ்வருக்கு அவனின் இதயம் துடிக்கும் ஓசை அவனிற்கே கேட்டது.

“எதுக்கு அப்படிச் சொன்னான்?” என்று மெதுவாகக் கேட்க,

“அந்த ஃபோட்டோ வந்ததுக்கு” என்று சொல்லவும் தான், அதுவரை நின்றிருந்த அவனின் மூச்சு வெளியே வந்தது.

“கேட்டா! நீ முரளிண்ணா கல்யாணத்துல இருந்து வர்ஷியை அப்படித் தான் பார்த்தியாம்… நான் ஒன்னும் எங்க அண்ணா அப்படியில்லைன்னு சண்டை போட்டேன். ஆனா வர்ஷி என்ன உன்கிட்ட பேசினா?” என்று கேட்க…

என்ன வென்று சொல்லுவான், அப்படியே அமர்ந்திருந்தான்.

“எனக்கு எதுவுமே பிடிக்கலை! இந்தக் கல்யாணமே பிடிக்கலை! நான் என்ன பண்ணட்டும்?” என்று திடீரென்று அப்படியேத் தேம்பி தேம்பி அழ,

“என்ன இது?” என்று பதறிப் போனான்.

அப்படி ஒரு அழுகை ரஞ்சனியிடம்..

“நீயே தானே பண்ணிக்கிட்ட?, இப்போ மனசுல இப்படி ஒரு எண்ணம் வர்றதே தப்பு”

“எல்லாம், எல்லாம், இந்த அஸ்வினால! அவன் தான் நான் அவனைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு என்கிட்டே சொன்னான்.. எப்படியாவது கல்யாணம் பண்ண வெச்சிடுவேன்னு என்னை மிரட்டினான்!” என்று அவள் சொல்லச் சொல்ல…

“என்ன இது? இது எப்போது?” என்று ஈஸ்வரின் நெஞ்சம் பதறியது.

“முழுசா சொல்லு ரஞ்சி! இப்படி பிச்சிப் பிச்சி சொல்லாத!”

நடந்ததை அவள் சொல்லச் சொல்ல தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்…  “முதல்லயே எப்பவும் என் பின்னாடி சுத்துவான்.. நான் பெருசாக் கண்டுக்கிட்டது இல்லை.. ரூபா அண்ணி எனக்கு அண்ணி.. ஐஷ் வேற எனக்கு அண்ணி ஆகப் போறா, அதனால நான் யார்க் கிட்டயும் சொன்னது இல்லை..”

“ரொம்ப உரிமை எடுத்து நடந்துக்குவான். இர்றிடேட் பண்ணுவான், டு தி எக்ஸ்ட்ரீம். உன்கிட்ட சொன்னா நீ அவனை ஒரு வழி பண்ணிடுவன்னு சொன்னதில்லை .. ஒரு நாள் என்னை மீட் பண்ணினவன்.. கண்டிப்பா நான் அவனை உடனேக் கல்யாணம் பண்ணிக்கணும், இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு தெரியாதுன்னு மிரட்டினான்..”

“யாராவது மிரட்டினா பயந்துடுவியா? அவ்வளவு தானா உன் தைரியம்! பொண்ணுங்க தைரியமா இருக்க வேண்டாமா?” என்று ஈஸ்வர் சொல்லச் சொல்ல,

அவனுள் வர்ஷினியின் ஞாபகங்கள் தான். “எப்படி என் மண்டையை உடைத்தாள். இப்போது என்னை எந்த பயமும் இல்லாமல் எப்படி மிரட்டிப் பேசுகிறாள். நான் ஏதாவது அவளை மீண்டும் செய்து விடுவேனோ என்ற பயமே இல்லை. நான் தான் அவளைப் பார்த்து பயந்து, அவளைத் தவிர்த்து, ஒளிந்து கொண்டிருக்கிறேன்”.

“அந்த கண்களைப் பார்க்க ஏங்கிக் கொண்டு இருக்கிறேன்” என்று மனதில் பிராவகமாக ஒரு அலை பொங்கியதை தடுக்கவும் முடியவில்லை, தவிர்க்கவும் முடியவில்லை.

“ஐயோ! பட்டும் நான் திருந்தவில்லையா.. திரும்பவும் அவளை நினைக்கிறேனா. என் தங்கை என்னிடம் ஒருவன் மிரட்டியதை சொல்லிக் கொண்டிருக்க.. நான் என்ன நினைத்துக் கொண்டிருகிறேன்.. என் எண்ணங்கள், என் பாவங்கள் தான் என் குடும்பத்தைத் துரத்துகிறதோ?” என்று நினைக்கும் போதே வர்ஷினியின் முகம், “நீயா இப்படி?” என்று அவனைப் பார்த்திருந்த கண்கள் கண்முன் தெரிய…

“சே!” என்று சொல்லி வேகமாக தலையைப் பிடித்து எழ….

“தலயில அடிப்பட்டது இன்னம் வலிக்குதா?” என்று ரஞ்சனி கவலையாகக் கேட்க…

மீள நினைத்தாலும் மீள முடியாத வலை! மனதின் வலை!! பின்னிப் பிணைந்து விட்டதோ!!! வலையை அறுக்கத் தான் முடியும்!!!! பிரிக்க முடியாது!!!!!    

 

 

 

 

Advertisement