Kaathal Mozhi Ennavo-part 1

Advertisement

Akilaraman

Writers Team
Tamil Novel Writer
ஆண்டு 1930

பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் மைதிலி.கொடி போன்ற உடலில் சாதாரண சீட்டி புடவை உடுத்தியிருந்தாள்.ஆனால் அந்த சாதாரண புடவையும் அவள் உடுத்தியிருந்ததால் அழகு பெற்று மிளிர்ந்தது.அவள் கைகளில் இரண்டொரு கண்ணாடி வளையல்கள் இருந்தன.கழுத்திலோ பாசிமணி ஒன்று அவள் ஏழ்மையை பறைசாற்றின.ஆனால் அவள் முகத்தில் இருந்த கம்பீரமோ அவள் அந்த ஏழைமையைக் கண்டு அஞ்சவில்லை எனக் கூறியது.

மைதிலி இருபது வயது இளம்பெண்.வயதான தாய் சுசிலை, பதிமூன்று வயதான தம்பி தியாகராஜன் மற்றும் பத்து வயதான தங்கை கமலாவோடு நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் இடத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாள்.அந்த வீட்டை விட்டால் அவர்களுக்கென்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை.

மைதிலியின் தந்தை மணிவாசகம் கமலாவிற்கு இரண்டு வயதான போது மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டார்.அதன்பின் சுசிலை நான்கைந்து வீடுகளில் வேலை செய்து தன் மூன்று மக்களையும் காப்பாற்றி வந்தார்.நான்கைந்து வருடங்களில் அவரும் தளர்ந்து விட்டார்.

அதனால் மைதிலி தான் கற்ற கலையான வீணையை பெரிய வீட்டு குழந்தைகளுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று கற்றுக் கொடுத்தாள்.அதில் வரும் சொற்ப வருமானத்தில் அவர்களின் வாழ்வு நடந்தது.

அன்றைய வீணை பயிற்சி முடிந்த பின் அவளுக்கு மிகவும் பிடித்தமான கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றாள்.பக்தி ததும்ப அனைத்து சன்னிதிகளையும் தரிசித்துக் கொண்டு வந்தவள் முருகன் சன்னதி அருகே ஒரு வயதான பெண்மணி மயங்கி கீழே சரிந்து கொண்டிருந்தார்.

வேகமாக அவரை நோக்கி ஓடிய மைதிலி அவர் கீழே விழு முன் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.மெதுவாக அவரை ஒரு இடத்தில் சாய்ந்தவாறு உட்கார்த்தி வைத்தாள்.தூரத்தில் இருந்த பானையில் இருந்த நீரை கொண்டு வந்து அவர் முகத்தில் தெளித்து சிறிது அவர் வாயில் புகட்டினாள்.

அவளின் உபசரிப்பில் மயக்கம் தெளிந்து அவர் மைதிலியை குழப்பமாக பார்த்தார்.அவரின் குழப்பத்தை புரிந்து கொண்ட அவள்,

"அம்மா நீங்கள் திடீரென மயங்கி விழுந்துவிட்டீர்கள்... அதனால் உங்களை இங்கே உட்கார்த்தி வைத்து நீர் தெளித்து குடிக்க செய்தேன்... இப்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?"

"மிக்க நன்றியம்மா.... இப்போது பரவாயில்லை.. எனக்கு அவ்வப்போது இப்படி ஆவதுதான்... சிறிது நேரத்தில் சரியாகிவிடும்..."

"அம்மா! உங்கள் வீடு எங்கே இருக்கிறது? நான் உங்களை வீடு வரை கொண்டு விடுகிறேன்...."

"அதெல்லாம் பரவாயில்லைம்மா.... நான் நிதானமாக போய்க் கொள்வேன்... உனக்கு எதற்கு வீண் சிரமம்...."

"எனக்கொன்றும் சிரமமில்லை.உங்களை இந்த நிலையில் விட்டு செல்ல என் மனம் கேட்கவில்லை.. நிதானமாக எழுந்து வாருங்கள்.."

அவரை கைத்தாங்கலாக கோவிலின் வெளியே அழைத்து வந்த மைதிலி கை வண்டி ஒன்றை அழைத்து அதில் அவரைப் பிடித்தபடி அமர்ந்து சென்றாள்.அரைமணி நேரத்தில் அவரின் வீடு அல்ல அல்ல பிரம்மாண்டமான பங்களாவின் வாயிலில் கை வண்டி நின்றது.

அவர்கள் இருவரும் பங்களாவின் உள்ளே நுழைந்த போது அதன் வளைவான மாடிப்படிகளில் அழகான இளம்பெண் ஒருத்தி இறங்கி வந்தாள்.அவளுக்கும் மைதிலியின் வயதுதான் இருக்கும்.ஆனால் அவள் உயர்ரக ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாள்.

கை வண்டியில் வரும்போதே சாவித்திரி அம்மாள்.. அதுதான் அவரின் பெயர்...தன் வீட்டாரைப் பற்றி கூறியிருந்தார்.கணவனை சிறுவயதிலேயே இழந்த அவர் தன் தம்பியான சாம்பசிவத்தின் வீட்டோடு வந்து விட்டார்.

சாம்பசிவம் பிரிட்டிஷ் அரசின் கீழ் ஜட்ஜாக இருந்தார்.அவரின் இல்லத்தரசி சகுந்தலா.அவர்களின் ஒரே மகள் கோமதி.

கீழே இறங்கி வந்த பெண்ணை பார்த்தவுடன் அவள்தான் சாவித்திரி அம்மாள் சொன்ன தம்பி மகள் கோமதி என்று யூகித்தறிந்தாள் மைதிலி.

மைதிலியின் கைப்பிடியில் தன் அத்தையைக் கண்டவுடன் பதறியபடி அவர்கள் அருகில் ஓடி வந்தாள் அந்த பெண்.

"அத்தை!என்ன ஆயிற்று உங்களுக்கு?ஏன் இப்படி இருக்கிறீர்கள்? இவர் யார்?"

"அப்பப்பா ஒரு வினாடியில் எத்தனை கேள்வி கேட்கிறாய்யடி பெண்ணே...பதில் சொல்வதற்கு எனக்கும் அவகாசம் கொடுத்தால் அல்லவா நான் சொல்ல முடியும்...ம்..."

"உங்கள் வேடிக்கை இருக்கட்டும்...உங்களைப் பற்றிய கவலையில் கேட்டால் என்னையே கேலி செய்கறீர்களா?... முதலில் சொல்லுங்கள் என்ன ஆயிற்று உங்களுக்கு?"

அதற்கு பதில் மைதிலியிடமிருந்து வந்தது.

"உங்கள் அத்தை கோயிலில் மயங்கி விழுந்துவிட்டார்...நான் அவருக்கு மயக்கம் தெளிவித்து அழைத்து வந்தேன்"

"அப்படியா.... அத்தை உங்களுக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் தனியாக எங்கேயும் போகாதீர்கள் அப்படி போவதானால் என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள் என்று... நீங்கள் என் பேச்சைக் கேட்பதே இல்லை.... உங்கள் உதவிக்கு மிக்க நன்றி..."

"பரவாயில்லை.. என் இடத்தில் யாரென்றாலும் இதைதான் செய்திருப்பார்கள்... நான் இன்னும் வருகிறேன்.. நேரமாகிவிட்டது"

"ஆ..... அதெப்படி எங்கள் வீட்டிற்கு வந்தவரை அப்படியே அனுப்பிவிடுவேனா? அதிலும் நீங்கள் என் அருமை அத்தையை காப்பாற்றி இருக்கிறீர்கள்... வாருங்கள் சிற்றுண்டி ஆனது மேல் நானே உங்களை எங்கள் மோட்டார் காரில் உங்கள் வீட்டில் விடுகிறேன்"என்றபடி மைதிலியை கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் கோமதி.சிறிது நேரத்திலேயே இருவரும் நட்பாகிவிட்டனர்.

அன்று ஆரம்பித்த அவர்கள் நட்பு ஒரே மாதத்தில் இறுகிவிட்டது.இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.அவர்களின் ஏற்றத்தாழ்வு அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

வீணை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோமதியின் ஆசையும் அவர்கள் நட்பு வளர நீர் வார்த்தது.வாரத்தில் மூன்று நாட்கள் மைதிலி வீணை கற்றுக் கொடுக்க கோமதியின் வீட்டிற்கு வந்தாள்.அவள் வராத நாட்களில் கோமதி மைதிலியின் வீட்டிற்கு வந்தாள்.இருவரும் சேர்ந்து பட்டணத்தின் எல்லா இடங்களையும் சுற்றி வந்தனர்.

அன்றைக்கு மைதிலி அவர்களின் சிறு வீட்டிலிருந்த சிறு அறையில் மரப்பெட்டியிலிருந்த நான்கைந்து புடவைகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.எவ்வளவு நேரம் பார்த்தாலும் அதில் ஒன்று கூட அன்றைய தினத்திற்கு பொறுத்தமானதாக இல்லை.

அன்று அவள் உயிர் தோழியாகி விட்ட கோமதியின் பிறந்த நாள் விழா.காலையிலேயே வீட்டிற்கு வந்துவிடுமாறு கோமதி முந்தைய நாளே நூறு முறை கூறி சென்றிருந்தாள்.ஆனால் விழாவிற்கு தகுந்தாற்போல் உடுப்பதற்கு மைதிலியிடம் உயர்ந்த ரக புடவைகள் இல்லை.அவள் புடவைகள் ஆராய்ந்தவாறு உட்கார்ந்திருந்த போது அவர்கள் வீட்டு வாயிலில் மோட்டார் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள்.அங்கே கோமதி வீட்டு காரிலிருந்து அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வனஜா இறங்கிக் கொண்டிருந்தாள்.இவளைப் பார்த்து அகலமாக புன்னகைத்த அவள்

"மைதிலியம்மா! சின்னம்மா இந்த பையையும் கடிதாசியும் உங்ககிட்ட கொடுத்துட்டு உங்கள கையோட அழைச்சிகிட்டு வர சொன்னாங்க"என்றபடி சிறு பை ஒன்றை மைதிலியின் கையில் திணித்தாள்.

அந்த கடிதத்தை பிரித்த பார்த்தாள் மைதிலி.

என் பிரியத்திற்குரிய மைதிலி

என் பிறந்தநாள் விழாவிற்காக உனக்கு ஒரு சிறு பரிசை அனுப்பியிருக்கிறேன்.தயவுசெய்து அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக புறப்பட்டு காரில் வந்து சேரவும்.

பி.கு.(இது என் பிரியமான அன்பளிப்பானதால் உன் சுயமரியாதைக்கு எந்த பங்கமும் வராது)

என்றிருந்தது அந்த கடிதம்.காரணமில்லாமல் மைதிலி யாரிடமும் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டாள் என்பதை அறிந்து தன் சிநேகிதி இப்படி ஒரு யுக்தியை செய்திருக்கிறாள் என புரிந்து கொண்ட மைதிலியின் கண்களில் தோழியின் அன்பை எண்ணி நீர் கோர்த்தது.

"மைதிலியம்மா சீக்கிரம் புறப்படுங்க...வண்டி இன்னும் நெறைய பேர அழைச்சிட்டு வர போகனும்"

"இதோ ஐந்து நிமிடத்தில் வருகிறேன்"என்றவள் வேகமாக உள்ளே சென்றாள்.

கோமதி மைதிலியின் தாய் தம்பி தங்கையையும் வீட்டிற்கே வந்து அழைத்திருந்தாள்.ஆனால் கணவர் போனபின் சுசீலை எங்கும் செல்வதில்லை.அவள் தம்பி தங்கை இருவரும் பள்ளிக்கு சென்றிருந்தனர்.அதனால் விழாவிற்கு மைதிலி ஒருவளே தயாராகி காத்திருந்த காரில் ஏறி சென்றாள்.

தோழியை வாயிலுக்கே வந்து வரவேற்ற கோமதி விழா அலங்காரங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை மைதிலியிடமே ஒப்படைத்தாள்.மதிய உணவிற்கு பின் இருவரும் சிறிது ஒய்வெடுத்தனர்.

மாலை ஐந்து மணி அளவில் கோமதியை உயர்தர அணிமணிகளால் தேவதை போல அலங்கரித்தாள் மைதிலி.தன்னையும் அதிகம் என தோன்றாத அளவில் அலங்கரித்துக் கொண்டாள்.கண்ணாடியில் பொட்டிடும் போது கோமதி

"மைத்தி! தோட்டத்தில் செம்பக மரத்தில் பூ பூத்திருக்கிறது.நீ சென்று தோட்டக்கார பொன்னனிடம் உனக்கும் எனக்கும் கொஞ்சம் பூ பறித்துக் கொடுக்க சொல்லி வாங்கி வருகிறாயா?"

"அதெற்கென்ன...இப்போதே சென்று வருகிறேன்..."என்றவாறு தோட்டத்தை நோக்கி சென்றாள்.

ஆனால் தோட்டக்கார பொன்னனை எங்கு தேடியும் காணவில்லை.வேறு வேலைக்காக சென்றிருக்கலாம் என யூகித்தாள் மைதிலி.செம்பக மரத்தின் அருகே சென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.வாழ்வின் போராட்டத்தால் அவளுள் அமுங்கி இருந்த குறும்பு பெண் வெளியே வந்தாள்.

அவ்வளவுதான் புடவை இழுத்து செறுகியவள் மடமடவென மரத்தில் ஏறி விட்டாள்.கைக்கு கிடைத்த ஏழெட்டு பூக்களைப் பறித்தவள் இறங்க எண்ணும் பொழுது அருகிலிருந்த கிளையில் தொங்கிய பூ அவள் கண்ணில் பட்டது.சிறிது எட்டி பறிக்கும்படி இருந்தது.பரவாயில்லை என அதை பறிக்க கையை நீட்டினாள் மைதிலி.அவ்வளவுதான் கால் வழுக்கி பூமியை நோக்கி விழுந்து கொண்டிருந்தாள் அவள்.

விழுந்தே விட்டோம் என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.ஆனால் அவள் பொன் உடல் பூமியைத் தொடும் முன்பு இரு வலிமையான கரங்கள் அவளை விழாமல் தாங்கிப் பிடித்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "காதல்
மொழி என்னவோ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அகிலாராமன் டியர்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
feel good start....
1950-70 ஞாபகப்படுத்தும் எழுத்து நடை...
நன்றி....
வாழ்த்துக்கள்....அகிலா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top