உனக்காகவே நான் - 27

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
#1
அத்தியாயம் – 27
Heroin.jpg

அவளுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களும் வேகமெடுத்து அவள் பின் ஓடினர்.


ஓடியவள்,சரிவிலிருந்து எப்படி அந்தச் சாலையை அடைந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை.மின்னலென ஓட்டம் கண்டு ,அதனை அடைந்தாள்.அந்தச் சாலையில் வீழ்ந்திருந்த ரிஷியையும் கண்டாள்.அந்தச் சாலையில் சிதறிக் கிடந்த பிளாஸ்கும்,அவனும் என இருபுறம் இருவேறு ஓரமாய் இருந்தனர்.வீழ்ந்திருந்த ரிஷியின் உடலையேதான் பிரமை பிடித்தவள் போல மித்ரா நோக்கி நின்றாள்.சுற்றி ஓர் உலகம் இருப்பதே மித்ராவின் கண்களுக்குத் தெரியவில்லை.ரிஷியை மோதிய கார் எங்குச் சென்றது என்றும் தெரியவில்லை.


அதற்குள் அவனைச் சுற்றி கூட்டம் கூடிவிட்ட போதும் அவனை யாரும் கைதாங்கி எழுப்பிவிடவில்லை.மித்ரா அவனைக் கண்டதும்,அவளது வேக நடை நலிந்தது.அடியெடுத்து வைப்பதே சிரமம் போல உணர்ந்தாள்.அவன் வீழ்ந்திருந்த கோலம்,அவளது கண்ணை பறித்தது போல உலகை இருட்டாக்கியது.அவளது பார்வையின் நேர் கோட்டில் ரிஷி மட்டுமே இருந்தான்.அவனை நெருங்கிக் காண சக்தியற்றதுப் போல உணர்ந்தாள்.


லேசாக அவனது வீழ்ந்திருந்த உடலின் உருவமும் இருள ஆரம்பித்து,அவள் மயங்க ஆரம்பித்து இருக்க வேண்டும்.,அப்போது ரிஷி நிமிர்ந்தான்.மித்ராவின் இருண்ட விழிகளின் நரம்புகளில் மெதுவாக ஒளி பரவுவதாக உணர்ந்தாள்.எழுந்து நின்றான்.எந்த வித காயங்களுமின்றி எழுந்தான்.எழுந்து நின்று மித்ராவை பார்த்து, “மது...!!!”என விழித்து அவளது விழிகளையே பார்த்தான்.இருண்ட விழிகள் முழுமையும் ஒளி பெறுவதுப் போல உணர்ந்தாள்.உச்சி முதல் பாதம் வரை ரிஷியின் உடலை அவசரமாய் அளவெடுத்த மித்ராவின் விழிகள்,அவன் நலமாக இருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்தபின் தன்னிலை மறந்தாள்.


அவளையும் அறியாமல் ரிஷியை நோக்கி அவளது கால்கள் ஓட்டம் பிடித்தன.ஓடிச் சென்றவள்,வினாடியும் தாமதிக்காமல் , “ரிஷி...ரிஷி..”என கேவிய வண்ணம் அவனை அணைத்தாள்.அவளாக ரிஷியை அணைத்த முதல் அணைப்பு.


அனைவரும் அவர்களையே பார்த்திருப்பதை உணர்ந்து ,ரிஷியே அவளை விலக்கிட நினைத்து , “என்ன மது...எனக்குத்தான் ஒன்றுமில்லியே!...ஏன் பயப்படுகிறாய்!!”என அதிர்ந்து நடுங்கிய அவளது முதுகினை வருடினான்.இருந்த போதும் அவள் உடல் நடுக்கம் நின்ற பாடில்லை.யாரிடமிருந்தோ ரிஷியை காப்பாற்றுவது போல,அவனை யாரும் அவளிடமிருந்து இழுத்துச் சென்றுவிடக்கூடாது என்பது போலவும் அவனை இறுகப் பற்றி இருந்தாள் மித்ரா.ரிஷியின் வார்த்தைகள் எதுவும் மித்ராவின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.


ஏற்கனவே,தன் பெற்றோர்களின் விபத்தால் நிலைகுலைந்திருந்த மித்ராவின் மனம்,இன்று தன் உயிரினும் மேலான,ரிஷிக்கும் அதே போன்ற விபத்து என்றதும், அவள் உள்ளம் மிகவும் கலங்கிவிட்டாள்.இனி வாழ்வென்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுச் செயலிழக்க காத்திருந்தது அவளது கால்களும்,விழிகளும்.ஆனால் அந்த வினாடி ரிஷி நிமிர்ந்து நின்றதைக் காணவும் மீண்டும் உயிர்பெற்று அவையே அவனிடம் கொண்டு அவளைச் சேர்த்தது.


“ரிஷி....ரிஷி..என்னை விட்டு போய்விடாதீங்க...நான் இல்லாமல் போனாலும் நீங்கள் வேண்டும்.”என தன் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றிலும் நிறைந்திருந்த ரிஷியின் நினைவுகளைச் சொல்லி உடைந்து அழுதாள்.மேலும் “ உங்களுக்கு,உங்களுக்கு விபத்து,ஐயோ!!!எல்லாம் என்னால்தான்” என அவன் சொல்வதை எதையும் கேட்காமல் அவளாக புலம்பிய வண்ணம் அவன் மார்பில் முகப்புதைத்து அழுதாள்.ரிஷியின் மார்பு சட்டை அவளது கண்ணீரால் நனைந்தது.


அவளது அழுகை நில்லாமல் தொடரவும்,அதைத் தாங்காமல் ரிஷி,அவளை அவனது உடலில் இருந்து கடின பட்டு அவளைப் பிரித்து, “மது...மது” என அவளது கன்னத்தை தட்டினான்.அவளது செவிகள் அவன் வார்த்தைகளைக் கேட்டால்தானே. “என்ன மது...இங்குப் பார்...என்னைப் பார்.நான் நன்றாகத்தானே இருக்கிறேன்.ராஜாவைப் போல..”என அவனது வெண்ணிற பற்கள் மின்னிடை சிரித்து அவள் கவனத்தை கவர முயன்றான்.


கேவிய வண்ணம் அவனது முகத்தைப் பார்த்தாள் மித்ரா.ரிஷியின் இந்த முயற்சி கொஞ்சம் கைக் கொடுக்க அவளது பிதற்றல் நின்றது.அவனது புன்னகையே அவளுக்கு மருந்தாக அமைந்து முதலதவி செய்தது போல.இருந்த போதும் அவள் உடல் நடுக்கம் நின்றது என்றில்லை.ஏற்கனவே சில்லிட்டிருந்த அவளது உடையினாலும்,உள்ளத்தின் அதிர்வினாலும்,அவளது உடலும் நடுங்க ,பற்கள் தந்தியடித்தன.அவளை மீண்டும் தன் மார்பு சூட்டினுள் அடக்கிக் கொண்டான் ரிஷி.குழந்தை தன் தாயின் அரவணைப்பில் பாதுகாப்பாக உணர்வது போல் உணர்ந்து ரிஷியின் மார்பில் மித்ரா உணர்ந்தாள்.இதமான அந்த அரவணைப்பில் கண்கள் மூடிச் சாய்ந்திருந்தாள்.


அதற்குள் அங்கிருந்த டீக்கடை தாத்தா,அவர்கள் இருவருக்கும் அதிக சக்கரையிட்ட டீயினை கொண்டுவந்தார்.வந்தவர், “தம்பி,பாப்பாவுக்கு முதலில் இந்த டீயை கொடு...உன்னை விட மறு ஜென்மம் கொண்டவள் அவள் போல் அல்லவா இருக்கிறது!!”எனச் சிறுபிள்ளையாய் ரிஷியை ஒட்டி இருந்த மித்ராவை பார்த்து சொல்லிவிட்டு ஒரு டீ கப்பைத் தந்தார்.


அதனைப் புன்னகையுடனே வாங்கிய ரிஷி,மித்ராவை விழித்து மெதுவாகச் சிறிது அவளுக்குப் புகட்டினான்.கொஞ்சம் குடித்ததும், “போது..”என நடுங்கிய உதடுகளால் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு ,மேலும் லாகவமாக ரிஷியின் மார்பில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் மித்ரா.பாதுகாப்பாக இருப்பது போன்ற நிம்மதி அவள் உள்ளதில் குடி கொண்டிருந்தது.


அங்குச் சுற்றி இருந்த அனைவரும்,நேச புன்னகையுடன்,அவர்களை ரசனையுடன் சில வினாடிகள் பார்த்திருந்துவிட்டு,”அருமையான ஜோடி.நல்ல பெண்ணை தேர்ந்த்ருத்திருக்கீங்க சின்னய்யா..நீங்க நல்லா இருக்கணும்” என ஒருவர் மாறி ஒருவர் மனதார பாராட்டிவிட்டு சென்றனர்.


காரை தக்க சமயத்தில் நிறுத்திய,காரை ஓட்டிய பெரியவரும் அங்கேதான் இருந்தார்.அவரது பேத்தி,காரில் செய்த சுட்டித்தனத்தால் விளைந்த விபத்து இது.அமைதியாக அருகிலிருந்த இருக்கையில் சீட் பெல்ட்டுடன் இருந்த அவரது 5வயது பேத்தி,எதிர் பாராத விதமாக சீட் பெல்ட்டை கழட்டி அவரது கை மீது விழுந்து விளையாட எத்தனித்ததால்,கட்டுப்பாடு இழந்து , break க்கு பதிலாக accelartorஐ அழுத்தியதாதல் வந்த விளைவு இது.நல்ல வேளை இந்தப் பெண் சத்தமிட்டு அலரிவிட்டாள்.அதனால் அவரும் காலை மாற்றி மிதிக்க ஸ்டைரிங்கையும் த்ருப்பி ஒருவழியாக விபத்து தவிர்க்க பட்டது.காரும் அங்கிருந்த ஒரு யூக்கலிப்டஸ் மரத்தில் சிறிது மோதி நின்றது.இதையே சொல்லி ரிஷியிடம் மன்னிப்பும் கேட்டார் அந்தப் பெரியவர்.அவரும் பயந்திருப்பது உணர்ந்து அவருக்கு டீக்கடிகாரர் கொணர்ந்த டீயை அவரிடம் தர சொல்லிவிட்டு,மித்ராவுக்கு கொணர்ந்த டீயின் மீதியை ரிஷி அருந்தினான்.


தன்னைச் சுற்றி இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்த போதும்,எதுவும் காதில் விழாதவளாய்,எதைப் பற்றிய கவலையுமில்லாமல், ‘தனக்கானது தன்னிடம் பத்திரமாக இருக்கிறது’ என்ற நினைவில் ,மித்ரா ரிஷியின் கையணைப்பிலே இன்னும் கண்மூடி இருந்தாள்.


“பரவாயில்லை சார்.நீங்க உங்களையே அறியாமல் ஒரு நல்லது செய்து இருக்கிறீர்கள்” என்று மித்ராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு , “எங்களுக்கு இப்போது ஒரு உதவி செய்ய முடியுமா சார்” எனக் கேட்டுவிட்டு மித்ராவை தன் கைகளில் ஏந்திக் கொண்டான்.


இவ்வளவு நேரம் நின்றிருந்ததால்,சுகமாக உணர்ந்த மித்ரா,அவன் திடீரென்று கைகளில் ஏந்தவும் மிரட்சியாக அவனை ஏறிட்டாள்.அப்போதுதான் தன்னிலை உணர்ந்தாலோ,சுற்றி அத்தினை பேர் மத்தியில் ரிஷியை ஒட்டி நின்றிருந்தது,அவளுக்கு உறைத்தது போலும்,உடனே அவனது கைகளிலிருந்து இறங்கித் தள்ளி நிற்க எத்தனித்தாள்.அவள் முயற்சி உணர்ந்து ரிஷியும் உதவியாய்,அவளைவிட்டு விலக,மீண்டும் மித்ராவின் கால் நடுநடுங்கி ரிஷியிடமே வந்து ஓட்டிக் கொண்டாள்.


உடனே அவர்களது செய்கைகளை ரசனையாக பார்த்துக் கொண்டு அங்கிருந்த அனைவரும் ஓவென்று சிரிக்க மித்ராவிற்கு வெட்கத்தினால் கன்னங்கள் செம்மை பூசிற்று.அங்கு யாரையும் நிம்ரிந்து பார்க்காமல் ரிஷியின் மார்பிலே மீண்டும் முகம் பதித்தாள்.


உடன் சேர்ந்து சிரித்த அந்தப் பெரியவர், ‘என்னப்பா தம்பி..என்ன உதவி வேண்டும்” என தன் தோள் மீது தூக்கி வைத்திருந்த தன் பேத்தியை அணைத்த வண்ணம் கேட்டார் .


“ஒன்றுமில்லை சார்.எங்களை காரில் கொண்டு சென்று அதோ அங்கே தெரிகிறதே!!அந்த வீட்டில் விட்டுவிடுகீறீங்கலா?”எனக் கேட்டான்,


உடனே சிரித்தவர், “கண்டிப்பாக” எனச் சொல்லி சொல்லிய படி செய்தார்.


பிறகு அந்தப் பெரியவரே,அவர்களை வீட்டில் விட்டுச் சென்றார்.வீட்டிற்கு வந்ததும்,மித்ராவை அவனே தூக்கிச் சென்று சோஃபாவில் அமர வைத்திருந்தான்.அவனையே பார்த்திருந்த மித்ரா,அவனைவிட்டு விலக எண்ணினாள் இல்லை.அமர வைத்தபிறகும் கூட அவனது மார்பு சட்டையை விட்டாள் இல்லை.


அவனாக அவளது கையை பிடித்து விலக்கிவிட்டுப் பேச நினைத்தான் ரிஷி. “மது...சிறிது நேரம் இங்கே இரு...நான் இதோ வந்துவிடுக்கிறேன்” என எழ நினைத்தான்.


“இல்லை ரிஷி...நீங்க இங்கே இருங்க” என கலக்கமுற்று மேலும் அவனிடமே ஒட்டிக் கொண்டாள்.


“என்ன மது...சின்ன பிள்ளை போல்.நான் தான் நன்றாக இருக்கிறேனே!பிறகு என்ன பயம். ?” எனப் பரிவுடன் அவளை நோக்கிக் கேட்டான்.


“இல்லை ரிஷி.என்னைவிட்டு போகாதீங்க..”என கண்ணில் நீர்க் கொண்டாள்.


“ஷ்ஷ்.....என்ன இது மது..?அழுகக்கூடாது..நான் எங்கும் போகவில்லை போதுமா?”என அவள் அருகிலே அமர்ந்து அவளை மார்பில் சாய்த்துக் கொண்டான்.


தாய் மடியில் உறங்கும் குழந்தை போல சிறிது நேரத்தில் மித்ரா ரிஷியின் மார்பிலே உறங்கிவிட்டாள்.இருந்தும் அவனது மார்பு சட்டையை விட்டாள் இல்லை.சிறு பிள்ளையாய் அவள் படுத்திருந்த விதம் மித்ராவை பார்க்கையில் ரிஷியினுள் என்ன என்னமோ செய்தது.மெதுவாக அவள் தூக்கம் கலையாத வண்ணம் அவள் கையை பிரித்துவிட்டு,அந்த சோஃபாவிலே அவளைப் படுக்க வைத்துவிட்டு,அவள் தலையை பாசமாக வருடிவிட்டு,சில வினாடிகள் அவளையே பார்த்திருந்தான்.


பின் அவளுக்கென்று ஒரு போர்வையை எடுத்து வந்து,அவள் மீது போர்த்திவிட்டு,சமையல் அறை சென்றான்.மணி மூன்றைக் கடந்திருந்தது. Fridge ல் இருந்து தோசை மாவினை எடுத்து இரண்டு இரண்டு என நான்கு தோசை சுட்டுக தட்டிலிட்டுக் கொண்டு கார பொடியில் எண்ணையிட்டு வரண்டாவிற்கே மீண்டும் வந்தான்.மித்ராவை,மெதுவாகத் தட்டி எழுப்பிவிட்டு,அவள் அருகிலே அமர்ந்தான்.


கண்களைக் கசக்கிய வண்ணம் எழுந்த மித்ரா,ரிஷியைக் காணவும் புன்னகைத்தாள்.விபத்தினால் பலவீனம் அடைந்திருந்த மனமும் மூளையும் இந்த சில நிமிட தூக்கத்தால் மெதுவாக இயல்புக்கு வந்தது.


ரிஷி,அவளிடம் ஒரு தட்டைக் கொடுத்துவிட்டு,”சாப்பிடு மித்ரா.மரகதம்மா,வள்ளி அளவு இல்லை என்றாலும்,ஓரளவு சமைப்பேன்” எனக் கண்ணடித்தான்.


அவனது வார்த்தையில் மேலும் விரியப் புன்னகைத்த மித்ரா, “ம்ம்..வள்ளியும் சொன்னாள்” என மெதுவாகச் சொன்னாள்.


“அப்படியா...நல்லவிதமாக வா?இல்லை படு மோஷமென்றா?”என வெண் பற்கள் பளிச்சிடச் சிரித்தான்.


“நல்லவிதமாகத் தான்” எனச் சொன்னாள் மித்ரா.


“எந்தவிதமாக என்றாலும் இன்று வேறு வழியில்லை..இதைத்தான் நீ உண்டாக வேண்டும்..ம்ம்.. சாப்பிடு” எனப் பாவம் போலச் சொன்னான் ரிஷி.பின் சாப்பிட ஆரம்பித்தான்.


அவன் சாப்பிட அர்ம்பித்துவிட்டதை பார்த்த மித்ரா,பதிலுக்குப் புன்னகை மட்டும் புரிய அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.அமைதியாக உண்ட போதும் மித்ராவின் கண்கள் ரிஷியைப் பல முறை பார்த்து மீண்டது.பல வித கேள்விகள் அவளுள்.அவனுக்குள்ளும் போராட்டங்கள்.இருந்த போதும் அவன் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்தான்.


அதன் பிறகு,மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்த போதும்,மித்ராவும் ரிஷியும் சில சில பல நிமிடங்கள் பேசவில்லை.அவர்கள் இருவருள்ளும் அமைதியற்ற நிலை.எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கம்.


எப்போதும் போல் இப்போதும் ரிஷியே அந்த அமைதியை உடைத்தான். “மது... “ என விழித்தான்.


வார்த்தைகள் எதுவும் பேசவில்லையென்றாலும்,அவனது குரலுக்காகவே காத்திருந்தவள் போல், “ம்ம்...”என்றால் மித்ரா.


“இப்போது சொல்.என்னைப் பிரிந்து உன்னால் இருக்க முடியுமா?”என்றான் ரிஷி.


“ம்ம்கும்” என்ற வண்ணம் ‘முடியாது ‘ எனத் தலையாட்டினாள். ‘அவனைப் பிரிவது இனி ஒரு நாலும் அவளால் முடியாது’ என்றுணர்ந்து,அவனை நிமிர்ந்து பார்க்காமல் தரையிலே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது மித்ராவின் கண்கள்.


“ஆகத் திருமணத்திற்கு சம்மதம் அப்படிதானே” என்றான் ரிஷி.


நிமிர்ந்து சில வினாடிகள் அவனைப் பார்த்தவள்,முக சோர்வுற, “இல்லை.அது என்னால் முடியாது.இங்கே,இந்த வீட்டிலே,ஓர் ஓரமாய் நான் இருந்து கொள்கிறேன்.உங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஓர் ஓரமாய்” என்றவளின் கண்கள் கலங்கியது.கடினப் பட்டு அதனை அடக்கி, “ உங்களை பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தால் எனக்கு போதும்.நீங்க உங்கள் விருப்பபடி வேறு யாரையேனும் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என மென்று விழுங்கிய வார்த்தைகளாய் உதிர்த்தாள்.


“என்ன??”என அதிர்ந்த ரிஷி ,மீண்டும் “மித்ரா..இவ்வளவுக்குப் பின்னும்,உன்னை கண்ணாடி போல உலகிற்கே காட்டிய பின்னும் ஏன் இந்தத் தயக்கம் சொல்” எனக் கோபம் தெரிக்கக் கேட்டான் ரிஷி.


அவளுள்ளும் தான் பல வேதனைகள்,அவனது கோபம் அவளதும் ஆனது போல் , “என்னவென்று தெரியாது.?”அவனை முறைத்தாள்.மீண்டும் “ இங்க பாருங்க ரிஷி.நம் முதல் சந்திப்பே சண்டையில்தான் தொடங்கியது.இன்றுவரை எந்தவித சுமூகமான உறவும் நம்மிடையே தொடர்ந்து இருந்த பாடில்லை .அப்படி இருக்க நாம் காலம் முழுதும் திருமணம் என்ற பெயரில் ஒருவரை வருத்திக் கொண்டு ஒருவர் இருக்க வேண்டுமா?”என அவனது குரலிலே கேட்டாள் மித்ரா.


“அட..இதுதான் உன் பிரட்சனையா.?நம் முதல் சந்திப்பு என்று லிஃப்ட் அருகில் நடந்த நிகழ்வைச் சொல்கிறாய் என்றால்,அப்போது நடந்தது சண்டையே இல்லையே!!!.உனக்குத் தெரியுமோ என்னவோ?!எத்தனை நாட்கள் அந்தச் சம்பவத்தை எண்ணி தனியே சிரித்திருக்கிறேன் தெரியுமா?இந்தக் காலத்தில் ,அதுவும் சென்னையில்,தனியே லிஃப்டில் ஒரு ஆணுடன் வரத் தயங்கும் ஒரு பெண்ணை,உன்னைப் பார்க்க எனக்கு அப்போது ஆச்சரியமே இருந்தது.நம்பவும் முடியவில்லை.நடிக்கிறாயோ என்று கூட நினைத்தான்.ஆனால் உன் கண்கள் பொய் சொல்லவில்லையே” எனச் சொல்லியவனை இடை மறித்து, “அது அம்மாவின் அன்பான கண்டிப்பு.அதனால் அப்படி நடந்து கொண்டேன்.”என்றாள் மித்ரா.


“அப்படியா? “ எனப் புன்னகைத்தவன் “அதனோடு,அழகுடன் கூடிய உன் துருதுரு கண்கள் என்னை அப்போதே ஏதோ செய்துவிட்டது என்று நினைக்கிறேன்.”என்றுவிட்டு அவள் விழிகளையே பார்த்தான். “இப்போது இதற்கென்ன சொல்ல போகிறாய்?”எனச் சவால் விடுவது போல் அவளைப் பார்த்தான்.


அவனது பார்வையில் கன்னங்கள் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.


மீண்டும் ரிஷியே தொடர்ந்து “எத்தனை நாட்கள்,தூங்காமல் உன் விழிகளை நினைவலைகளில் ஓட விட்டிருக்கிறேன் தெரியுமா?அதைப் போய் சண்டை என்கிறாயே மது..”என ரசனையாகச் சொன்னான்.


அவன் சொல்வதை இமை கொட்டாமல் விழித்துக் கேட்ட மித்ரா, ‘ஆமாம்.அந்தச் சம்பவத்தை மறக்க முடியுமா என்ன?எத்தனை நாள் அவளும்தான் நினைவு கூர்ந்து சிரித்து இருக்கிறாள்.அதைப் போய் சண்டை என்று சொல்ல முடியுமா?அவளுள்ளும் அவனைப் போன்றே தாக்கம் தானே’ என யோசனையில் இருந்தாள்.


அவள் பேசாமல் யோசிப்பதைப் பார்க்கவும் “என்னைக் கேட்டால் அதுதான் நம் காதல் உருவாக விதை ஊன்றப் பட்ட நாள் என்பேன்” என்றான் ரிஷி.


அவன் சொல்வது உண்மையோ என்பதுப் போலவே மித்ராவிற்கும் தோன்றியது.ஆனால் ‘என்ன சொல்லி அவனிடம் திருமணத்தை மறுப்பது?எப்படி நீ என் காதலை சந்தேகிக்கலாம் என்றா?இல்லை என்னை எப்படி மற்றொருவருடன் இணைத்துப் பேசினாய் என்றா?’என அவள் நினைத்து அவள் கண்களினுள் இருந்த கருவண்டுகள் தரையைப் பார்த்து நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே ரிஷி பேச ஆரம்பித்தான்.


“ம்ம்...ஆக நான் உன் காதல் மீது சந்தேகம் கொண்டதை நினைக்கிறாய் இப்போது.அப்படிதானே?”என அவள் கண்களையே பார்த்திருந்த ரிஷி கேட்டான்.


ஆச்சரியமாக ‘நான் வாய் திறந்து சொல்லும் முன்பே எப்படிதான் கண்டுபிடிக்கிறானோ!’என நினைத்த போதும்,”ம்ம்” என அவனுக்குப் பதிலளித்தாள் மித்ரா.


“சரி மது...உன்னிடம் ஆதி முதல் இப்போது வரை என் நிலை என்னவென்று சொன்னால்தான் என் மீதான சந்தேகங்கள் கவலைகள் உனக்குப் போக கூடும்.”என அவனே சொல்லி ஒரு பெரிய மூச்செடுத்தான்.


‘ஆதி முதல் என்றால்’ எனக் கேள்வியாய் அவனை நோக்கினாள் மித்ரா.


“சொலிகிறேன்” எனத் தொடர்ந்தான் ரிஷி.


“பாரு மித்ரா ,எனக்கு ஆரம்பத்திலிருந்தே இளம் பெண்கள் மீது எந்த வித மதிப்பும் கிடையாது.அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் ஏதாவது ஒரு சுய நலம் இருக்கக் கூடுமென்று நினைத்தேன்.நம்பினேன்.அதற்கிணங்க என்னைச் சுற்றி இருந்த பெண்களும் இருந்தனர்.நிகழ்வுகளும் கூட அப்படியே!இந்த எண்ணத்திற்கு அடித்தளமாக இருந்தது,மாணிக்கம் அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வு.அவை என்னைப் பாதித்தவிதம்.அதைப் பற்றி சொல்லி உன்னை நான் இப்போது கலங்க வைக்க விரும்பவில்லை” எனத் தன்னிலை விளக்கம் தந்தான் ரிஷி.


“ம்ம் அது தெரியும்...வள்ளி சொன்னாள்.”என்றாள் மித்ரா.


“ஓ...அப்போது உன் வேலைதானா?வள்ளி மாணிக்கமை புரிந்து கொண்டு அவருடன் அவள் அப்பா என்று இயல்பாகப் பேசுவது” எனப் பெருமித புன்னகை புரிந்தான் ரிஷி.


“ம்ம்...”என புன்ங்கையூடே சொன்னாள்.இருந்த போதும் மேலும் என்பது போல ரிஷியை நோக்கினாள்.


“அதன் பிறகு அதை மறந்து இயல்பாகப் பெண்களிடம் பேச ஆரம்பித்த பொழுது சுமித்தாவினால் நான் மீண்டும் பழைய கருத்திற்கே சென்றேன்.என்னுடைய தவற்றால் குருவை இழந்திருப்பேன்.மருந்துகளின் உதவியால்,அவனை இந்த அளவேனும் மீட்டுவிட்டோம்.உன் செயலால் சுமித்தாவை பற்றி இருந்த தவறான கருத்தும் மறைந்து குருவும்,சுமித்தாவும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்” என உண்மையான மகிழ்வு முகத்தில் தெரிய சொன்னவன் திடீரென்று, “sorry மித்ரா.உன்னையும் தவறாகத்தான் முதலில் நினைத்தேன். “ என வேதனையுடன் சொன்னான்.


கேள்வியாய் ரிஷியை மித்ரா நோக்கினாள்.பின், “புரிந்தது.நீங்க நான் உங்க வீட்டுக்கு வந்த அன்று மாடிப்படிகளிலிருந்து சத்தமிட்டு அங்கிளிடம் பேசியது,உள் அறையிலிருந்த எனக்கும் கேட்டது. “என மேலும் பேசியவளை இடை மறித்தான் ரிஷி.


“அப்போதே நினைத்தேன்.உனக்கு எப்படியோ நான் நினைப்பது புரிந்திருக்க வேண்டுமென்று.”பின் நிறுத்தி “ஆனால் ,நீ என்னைக் கண்டதும் உன் முகத்தில் உண்டான் செம்மை,என்னை மயக்க நீ முயற்சிக்கும் ஒரு யுக்தி என்று எண்ணினேன்.ஆனால் அதனைக் கண்டு உண்மையில் மயங்கியும்தான் போனேன்.அது வேறு விஷயம்” எனக் கண்ணடித்தான் ரிஷி.அந்த வினாடி மித்ரவின் கன்னம் கருத்தை மெய்ப்பிப்பதுப் போலச் சிவந்தது.


அவள் கன்னத்தை ஒரு தட்டு தட்டிவிட்டு,”உனக்கு நினைவிருக்கிறதா,முதல் நாள் நீ மேட்டுப்பாளையம் வீட்டுக்கு வந்த போதும் இரவு உணவின் போதும் கூட..இதோ இதோ இதே கன்ன சிவப்பு வேறு” என நினைவு பெற உதவினான்.


அதற்குப்பதிலாக புன்னகைக்க மித்ராவை இப்போது மட்டுமே முடிந்தது.வார்த்தைகள் வரவில்லை.


“இருந்தும்,சூடு கண்ட பூனை போல,உன்னை வீட்டில் சேர்க்க தயங்கினேன்.ஆனால் அந்த எண்ணம் நீ என் முன் இல்லாமல் இருந்தால் மட்டுமே!.உன்னைப் பார்த்தால், ‘சே இவளையா சந்தேகிப்பது’ என மடத்தனமாகக் கூட தோன்றியது” என நிறுத்தினான் ரிஷி.


“உங்கள் எண்ணம் தெரிந்ததால்தான் அங்கு இருந்து போக முடிவு செய்து ,தேர்வான வேலைக்கே செல்ல முடிவுசெய்து அப்படி அங்கிளிடம் பேசினேன்.ஆனால்” மித்ரா.


“அப்பாதான் உன்னை வெளியில் அனுப்ப முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.ஆனால் நீ அப்பாவிடம் உறுதியாக அந்த காந்திபுரம் செல்வதாகச் சொன்னாயே,அப்போது எனக்குச் சந்தோஷத்திற்கு பதில், ‘அச்சோ போய்விடுவாளோ!!’என்ற அச்சமே ஏற்பட்டது.அப்போது இருக்கும் மன நிலையில் அது ஏன் என்று எனக்கு யோசிக்கத் தோன்றவில்லை.இருந்த போதும்,அது நீயும் அப்பாவும் நடத்தும் நாடகம் என நினைத்து உன்னை ஏளனமாக பார்த்தேன்.அப்போது உன்னுடைய கோபம் கனன்ற பார்வை அப்பப்பா கொஞ்சம் பயங்கரம்தான்.ஆனால் என்ன அந்தப் பார்வையால்,பயத்திற்குப் பதில் மேலும் புன்னகையே வந்தது.அடிக்கடி அந்த உன் கோபம் கனன்ற முகத்தை நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன் தெரியுமா” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் அருகில் சிறிது நெருங்கி அமர்ந்தான்.


அவன் நெருங்கியதும் ,அன்று போல் இன்றும் முறைத்தாள் மித்ரா.


“ஹான்..ஆமா இதே பார்வைதான் அன்றும் “ என அவள் முகத்தைப் பார்த்து பலமாகச் சிரித்தான்.


அவன் சிரிப்பது கண்டு மேலும் கோபம் கொண்டு , “என் கோபம் உங்களுக்குக் கேலியா?”என அவன் தோள் பட்டை மேலே ஓங்கி ஒரு அடி வைத்தாள்.


அவள் அடித்தது வலிக்காத போதும் “ஸ்....ஆ...”என அரற்றிய வண்ணம், “இப்போதே இப்படி அடிக்கிறாயே,நாளை நம் திருமணத்திற்குப்பின் என்னை என்ன பாடு படுத்தப் போகிறாயோ” எனப் பொய்யாக வலிப்பது போல் நடித்தான்.


அவன் திருமணம் என்ற வார்த்தையை உச்சரிக்க, “வேண்டாம் ரிஷி..”எனப் புன்னகைத்த முகம் வெளுக்கத் தரையை பார்த்துச் சொன்னாள் மித்ரா.


“அப்படியா!!சரி...வேண்டாம்.இந்த அடி உதை இல்லாத திருமணம் செய்து கொள்வோம்” எனக் கண்ணடித்து அவளது தோளை தன் கையால் அழுத்திச் சொன்னான்.


இந்த ஆதருவுடன் கூடிய அணைப்பை ஏற்காமல்,தான் செய்யும் தவறு மித்ராவிற்கு புரியாமல் இல்லை.ஆனால் நேரத்திற்கு நேரம் மாறும் ஒருவனை யார் தான் நம்பக் கூடும் என அவள் புத்தி அவளை முரண்டியது.இருந்தும் அவள் உள்ளம், ‘என் ரிஷி..அப்படி இல்லை.அவன் செய்ததற்கு காரணம் இருக்கும்.அதை கேளாமல் முடிவெடுக்காதே மித்ரா’ என அறிவுரை கூறியது.இருந்தும் ரிஷியின் அரவணைப்பு மிகுந்த அந்தத் தோள் அணைப்பை அவள் விலக்கினாள் இல்லை.

 
#5
ஹப்பா ரிஷிக்கு ஆபத்து இல்லை தப்பிச்சுட்டான்
அட மித்ராவுக்கு தைரியம் வந்து விட்டதே
ரிஷியை அடிக்கவெல்லாம் செய்கிறாளே
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, யோகா டியர்?
ஆனால் அந்த ரங்கனின் திருட்டுத்தனத்தைப் பற்றி அவனை
ரிஷி எப்படி கண்டுகொண்டான்னு
இன்னும் நீங்க ஒண்ணும் சொல்லலையே
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement