அத்தியாயம் 6 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-6

வீடு வந்த ஜானகி உடையைக் கூட
மாற்ற மனமில்லாமல் தனது கணவர்
வேலுமணியிடம் அனைத்தையும்
கூறினார். அனைத்தையுமே கேட்ட
அவருக்குமே அதிர்ச்சி தான். மதுமிதா
நல்ல பெண் தான் என்று அவர்
மனதில் எழுந்ததை அவரால் அடக்க
முடியவில்லை. இருந்தாலும் அதை
முகத்தில் காட்டாமல் தன்
மனைவியின் எண்ணம் என்ன
என்பதை அறிய அவரிடம் பேசினார்
வேலுமணி.

"நீ என்ன சொன்னாய் அவர்களிடம்"
என்று மனைவியைக் கேட்டார்
வேலுமணி.

"நான் என்னத்தைச் சொல்ல
முடியும்.. இவன் எதுவும் வாயே திறக்க
மாட்டேன் என்கிறான் கல்யாண
விஷயத்தில்.." என்றார் குறையாக.
அவர்களின் செல்வபுத்திரன்
கல்யாண விஷயம் பற்றி பேசினாலே
ஏதாவது சொல்லி பேச்சை மாற்றிக்
கொண்டு இருந்தான்.

"நீ என்ன நினைக்கிறாய் ஜானகி?"
என்ற கேள்வியை மனைவியிடம்
வைத்தார்.

"கார்த்திக்கிற்கு சம்மதம் என்றால்
மதுவையே பேசிவிடலாம்.. ஆனால்
அவன் ஒத்துக்கொள்ள
வேண்டுமேங்க.. அந்தப் பெண் வேறு
இவனை எட்டு வருடமாக
காதலிக்கிறாள் என்று சொல்லுகிறாள்.
சொல்லும் போதே சரம் சரமாகக்
கண்ணீர் வேறு. மதுவை நான் இது
வரை மருமகள் ஸ்தானத்தில்
வைத்தது இல்லைதான்.. ஆனால்
இன்றைய நிகழ்விற்குப் பிறகு அவளே
நம் வீட்டிறகு வந்தால் நன்றாக
இருக்கும் என்று தோன்றுகிறது"
என்று முடிக்க வேலுமணிக்கு
மனைவியின் மனம் தெரிந்தது.
அவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
ஆனால் மனைவியிடத்தில் மகனின்
முடிவு தெரியாமல் தன் விருப்பத்தைத்
தெரிவிக்க அவர் விரும்பவில்லை..
தான் ஏதாவது சொல்லி மனைவி
அதைப் பிடித்துக் கொண்டு மகனிடம்
பேசினால் அவனின் கோபம் தன்
பக்கம் திரும்பும் என்பதை உணர்ந்தார்.

"சரி கார்த்திக் வந்த பிறகு அவனிடம்
பேசுவோம்" என்ற வேலுமணி டி.வி
யில் மூழ்கினார். இவரால் மட்டும்
எப்படி இப்படி ஜாலியாக இருக்க
முடிகிறதோ என்று சமையல்
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்
ஜானகி.

ஜானகி சமையலைச் சீக்கிரமே
முடித்துவிட்டுக் காத்திருக்க தன்
அன்னையை ஏமாற்றாமல் சீக்கிரமே
வந்து சேர்ந்தான் நம் மதுமிதாவின்
மனம் கவர்ந்த கள்வன். காரை
நிறுத்திவிட்டு கார் சாவியை தனது
பாண்ட் பாக்கெட்டில் வைத்தபடி தனது
துறைக்கே உண்டான தேஜஸோடு
வந்த மகனைக் கண்ட ஜானகிக்கு
மதுவின் மனம் தன் மகனிடம் இந்த
கம்பீரத்தில் தான் விழுந்ததோ என்று
கர்வமாக இருந்தது.

"அம்மா... அப்பா எங்கே?" என்றபடி
உள்ளே நுழைந்தவன் தன் அன்னை
தன்னை கூர்ந்து கவனிப்பதைக்
கவனித்துவிட்டு

"என்னமா.. உங்க மகனை இப்போ
தான் பாக்கற மாதிரி பாக்கறீங்க?"
என்று கார்த்திக் கேட்கும் போதே
வேலுமணி வந்துவிட்டார் அங்கே.
"அப்பா... அந்த ப்ராஜெக்ட் பத்தி
டீடெயில்ஸ் கிடச்சிருச்சு.. கொடேஷன்
மட்டும் நம்ம கரெக்டா போட்டு
அனுப்பீட்டா ப்ராஜெக்ட் ஓகே ஆயிரும்"
என்றவன் "கொடேஷன் பத்தி
பேசலாமா ப்பா?" என்று கார்த்திக்
கேட்க

"இல்லப்பா வேண்டாம்.. நீயே பாத்தா
போதும்" என்றார் வேலுமணி.
அவரைப் பொருத்த வரை மகன்
தொழிலில் கெட்டிக்காரன். அதனால்
அவர் தலையிடத் தேவை இல்லை.

கார்த்திக் சென்று குளித்துவிட்டு வர
வர அவனுக்குச் சாப்பாட்டை
பரிமாறினார் ஜானகி.. பின் சாப்பிட்டு
முடித்த கார்த்திக் தந்தையிடம் ஏதோ
தொழில் ரீதியாகப் பேசிக் கொண்டு
இருந்தான். பின் அந்தப் பேச்சு முடிய
ஜானகி கார்த்திக்கிடம் மது வீட்டில்
நடந்ததைக் கூறினார். ஜானகி
சொல்லச் சொல்ல மகனின்
முகத்தைக் கவனித்த வேலுமணியால்
எதையும் கணிக்க முடியவில்லை.
அவன் அவ்வளவு எளிதில் எதையும்
வெளிக்காட்டுபவன் அல்ல.

எதுவும் பேசாமல்
அமர்ந்திருந்தவனிடம் "பார் கார்த்திக்
மது ரொம்ப நல்லப் பெண்" என்றார்
ஜானகி மகனிடம்.

"எனக்கு இப்போது கல்யாணம்
வேண்டாம் அம்மா. கொஞ்ச நாள்
போகட்டும் என்று அன்றே
சொன்னேனே" என்று சோபாவில்
நன்றாக சாய்ந்தபடி சொன்னான்
கார்த்திக்.

"யாரையாவது விரும்பறியா?" எனக்
கேட்டார் ஜானகி.

"இல்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.

"மதுவைப் பிடிக்கவில்லையா" என
மேலும் கேட்டார் ஜானகி.

"அப்படி எதுவும் இல்லை" என்றவன்
"என்னமா நீங்கள் இப்படிக்
கேட்குறீர்கள்" என்று சலித்தான்.

"பாரு கார்த்திக் யாரையும்
காதலிக்கவில்லை என்கிறாய்.
மதுவை மறுக்கவும் காரணம்
இருப்பதாகத் தெரியவில்லை. வேறு
என்னதான் உன் பிரச்சனை" எனக்
கேட்டார் ஜானகி.

"நிலா இருக்கும் வரையில் அவள்
கல்யாணம் முடியட்டும் என்றாய்.
இப்போது என்ன?" என்ற
வேலுமணியை கண்களைக்
கூர்மையாக்கி சிறிய சிரிப்புடன்
பார்த்தான் கார்த்திக்.

"இரண்டு பேரும் முடிவு செய்து விட்டு
தான் என்னிடம் கேக்கறீங்க போல"
என்று கார்த்திக் நக்கலாகக் கேட்டான்.

"அப்படி தான் என்றும் வைத்துக்
கொள்ளேன். உனக்கும் 28
முடியப்போது" என்ற ஜானகியை
இடைமறித்தான் கார்த்திக்.

"அம்மா போதும். நீங்க சொல்றதுலயே
எனக்கு வயசு ஆன மாதிரி இருக்கு.
எதுவா இருந்தாலும் ஒரு வாரம்
கழித்துச் சொல்கிறேன்" என்றபடி
எழுந்து தன் அறைக்குச் செல்ல
மாடிப்படி ஏறினான்.

"உன்னை மது விரும்பியது முன்பே
உனக்குத் தெரியுமா கார்த்திக்?" என
மனதில் தோன்றிய உறுத்தலைக்
கேட்டார் வேலுமணி.

ஒரு நிமிடம் திரும்பித் தந்தையைப்
பார்த்தவன் "நீங்கள் முதலில்
அவர்களைப் பற்றி வீட்டில்
பேசும்போது கேள்விபட்டது அப்பா"
என்றுவிட்டு அவன் செல்ல,
மகனையே பார்த்தபடி நின்றிருந்தார்
வேலுமணி.

கார்த்திக் 28 வயது நிரம்பிய
இளையன். ஆறடி உயரம்.
கூர்மையான கண்கள். பார்த்தவுடன்
ஒருவரை கனித்துவிடுவான். புத்திக்
கூர்மையும் அதிகம். படிப்பில்
ஆவரேஜ் ஸ்டூடண்ட் என்றாலும்
தொழிலில் கெட்டிக்காரன்.ஆர்கிடெக்ட்
(architect) முடித்து விட்டு தன் அப்பா
கோவையில் தொடங்கிய "கோவை
ஆர்கிடெக்ட் அன் இன்டீரியர் டிசைன்"
ஐ ஏற்று நடத்தினான். மகன்
தொழிலைச் சிறப்பாக நடத்தவே
அப்பப்போ மேற்பார்வை மட்டும்
பார்த்து விட்டு இருந்தார் வேலுமணி.
தந்தையை விடத் தொழிலை
நன்றாகப் பெருக்கி மேலும் தொழிலை
விரிவடையச் செய்திருந்தான். மாதம்
ஒரு முறை வார இறுதியில்,
வால்பாறை சென்று எஸ்டேட்டையும்
பார்த்து வருவான் கார்த்திக். எதையும்
வெளிக்காட்டிக் கொள்ளும் விதமும்
இல்லை. தனக்குள்ளேயே வைத்து
காயை நகர்த்தும் சாமார்த்தியமும்
திறமையும் அதிகம்.

ஆனால் கல்யாண விஷயத்தில் மகன்
இப்படி இருப்பது அவர்களுக்குத்
திருப்தி இல்லாமல் இருந்தது. தங்கை
கல்யாணம் முடியட்டும் என்று
சொல்லிக் கொண்டு இருந்தவன்
நிலாவின் திருமணம் முடிந்தும்
சாக்குபோக்கு சொல்லி வந்தான்.

ஆனால் இன்று அதற்கும் வழி
கிடைத்தது போல உணர்ந்தார் ஜானகி.
மது சொன்னபோது அதிர்ச்சியாகத்
தான் இருந்தது ஜானகிக்கு. சிறிது
கோபம் கூட எட்டிப் பார்த்தது. ஆனால்
மது அழுதுவிட்டு ஓடியது அவருக்குமே
ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அதுவும்
இல்லாமல் தன் மகனை நினைத்து
இன்னொருவனை மணக்க அவள்
விரும்பவில்லை என்பதும் அவருக்கு
ஒரு கர்வமாகவே இருந்தது. மதுவின்
குடும்பம் வசதி என்றாலும்,
அவர்களை விடவே சற்று வசதிதான்
இவர்கள். ஆனால் அதை ஒரு
பொருட்டாக எண்ணவில்லை ஜானகி..
அதனால் தான் மகனிடம் இன்றே
பேசிவிட வேண்டும் என்று எண்ணி
எதுவும் பேசாமல் மதுவின் வீட்டில்
இருந்து கிளம்பிவிட்டார். அவர்கள்
மாதிரி நல்ல குடும்பம் அமைவது
கஷ்டம் என்பதால் கார்த்திக்கிடம்
இன்று பேசியும் விட்டார். மகன் நல்ல
பதிலைச் சொல்ல வேண்டும் என்று
வேண்டிக் கொண்டது அந்த தாயின்
உள்ளம்.

அறைக்கு வந்த கார்த்திக்
பால்கனியில் நின்று சிகரெட் ஒன்றை
புகைத்துக் கொண்டு இருந்தான்.
மதுவிடம் நான்கு வருடங்களுக்கு
முன்னால் பேசியது நினைவு வந்தது.
அவளது குரல் இன்றும் காதில்
எதிரொலித்தது. இல்லை அழுகை.
ஒரு முடிவு எடுத்தவனாக சிகரெட்டை
அணைத்து வீசிவிட்டு வந்து
படுக்கையில் சாய்ந்தான்.

அதேநேரம் சாப்பிட்டு விட்டு வந்து
பால்கனியில் நின்ற மதுவிற்கு
மறுபடியும் கடந்த காலம் நினைவு
வந்தது.

ஒரு நாள் வீட்டிற்கு வந்த ஜானகி
அம்மா "இந்தா மது. இன்று லட்டுப்
பிடித்தேன். உனக்குப் பிடிக்கும் என்று
நிலா சொன்னாள்" என்று மதுவின்
கையில் ஒரு சம்படத்தைத் தந்தார்.

"எப்ப எம்.பி.பி.எஸ் கௌன்ஸிலிங்
மது?" எனக் கேட்டார் ஜானகி.

"இன்னும் ஒரு வாரம் இருக்கு ஆன்ட்டி"
என்றாள் மது. மேலும் ஒரு மணி நேரம்
இருந்து வீட்டுப் பெண்களிடம்
பேசிவிட்டுப் போனார்.

மதுவிற்கு மனம் உறுத்தியது.
இவ்வளவு பாசமாக உள்ளவர், நான்
கார்த்திக்கை நேசிப்பது தெரிந்தால்
என்னை எவ்வாறு நினைப்பார். நிலா
தன்னை எவ்வாறு எண்ணுவாள். ஒரு
நிமிடம் உடல் கூசியது மதுவிற்கு.
மதுவின் மனம் மேலும் பலவற்றை
யோசித்து அவளைப் போட்டுக்
குழப்பியது.

"இரு குடும்பமும் நல்ல உறவில்
உள்ளது. தன்னால் விரிசல் ஏற்பட
வேண்டுமா? மேலும் வசதி வேறு
இடித்தது.. என்னதான் வசதி
இருந்தாலும் அவர்கள் அளவு இல்லை
என்று எண்ணினாள். மேலும் வசதி
உள்ள பையன் அதனால்
பிடித்துவிட்டாயா? என்று ஜானகி
அம்மாள் கேட்டுவிட்டால். அப்படிப்
பட்டவர்கள் இல்லை என்றாலும் தன்
மகன் என்று வரும் போது எப்படி
பேசுவாரோ என்று இருந்தது. கடவுளே
எவ்வளவு பெரிய அவமானம் என்று
எண்ணிக் கலங்கினாள் மது. மேலும்
தன்னால் பிரச்சினை நேர வேண்டுமா?
என்று எண்ணி கார்த்திக்கை மறக்க
முயற்சி செய்தாள். முயற்சி செய்து
முயற்சி செய்து அவளால் சரியாகத்
தூங்க சாப்பிட முடியவில்லை.
அப்போது தான் 'அவனை இவ்வளவு
நேசித்து விட்டோமா' என்றிருந்தது
மதுவிற்கு.

"முகம் பார்க்கும் கண்ணாடி முன்
நின்று என்னைப் பார்த்து என்
அழகையே ரசிக்க வைத்தாய்.
கற்பனைத் தேரில் பறந்தேன், என்
உடன் உன் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தபோது.
கண்மூடித் திறக்க எல்லாம் மறையவும்
கண்ணாடி முன் நான் மட்டும்
நிற்க, ரசிக்க மனமில்லை
நீயில்லாது என் பக்கத்தில்!

என்று நினைத்து கட்டுப் படுத்த
முடியாமல் அவளையும் மீறி அழுதாள்.
முக்கியமாக வீட்டில் முகத்தை
மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

சரியாக ஒரு வாரம் சென்றது.
எப்போதும் போல ஸ்போக்கன்
இங்லிஷ் க்ளாஸ் முடிந்து எல்லாரும்
செல்ல மது தனது சித்தாப்பாவிற்காக
காத்திருந்தாள். அந்த க்ளாஸ் ஒரு
மெயின் ரோட்டில் உள்ள
காம்ப்ளக்ஸில் இரண்டாவது மாடியில்
இருந்ததால் வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள். அன்று அவர் வரத்
தாமதம் ஆனதால் க்ளாசின்
முன்னேயே நின்றிருந்தாள் மது.
அவள் நின்றிருந்ததைப் பார்த்த
ஆசிரியர் உள்ளே வந்து அமரச்
சொல்ல அவளும் உள்ளே
சென்றமர்ந்தாள். அவள் அமர்ந்ததும்
வெளியே சென்றவர் ஷட்டரை கீழே
இழுத்து விட்டு உள்ளே வந்தார்.

மதுவிற்கு ஏதோ நெருடலாக உணர
எழுந்து "சித்தப்பா வந்து விடுவார்.
நான் வருகிறேன் ஸார்" என்று நகர
முயன்றவளை அவர் கரம் பற்றியதை
உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள்.

"எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான்
விட முடியாது மதுமிதா" என்று
அசிங்கமாய்ச் சிரித்தான் அவன். ஒரு
நிமிடம் நடுங்கினாலும் பின்
சுதாரித்தாள்.

"கையை எடுடா" என்று மது கத்த
அதைப் பொருட்படுத்தாமல் அவன்
மதுவை நெருங்கினான். கையில்
இருந்த நோட்டை அவன் மேல் வீசிய
மது, அந்த அறைக்குள் அவனிடம்
சிக்காமல் ஓடினாள். இருந்தும் வந்து
அவன் மதுவைப் பிடித்து விட மதுமிதா
வெலவெலத்துப் போனாள். ஒரு
நிமிடம் கண் முன் கார்த்திக் முகம்
வந்து சென்றது இன்றும் அவளால்
மறுக்க முடியாத உண்மை.

அவன் பிடித்தவுடன் மது கத்த,
மதுவைச் சுவற்றில் வேகமாகத் தள்ளி
மதுவின் வாயில் அவன் கை வைத்து
சத்தம் வெளியே கேட்காதவாறு
பொத்தினான். அவன் மதுவைச்
சுவற்றில் தள்ளிய வேகத்தில் மதுவின்
தலை சுவற்றில் நன்கு மோதியது.
மதுவிற்கு ஒரு நிமிடம் வலி மற்றும்
தலை 'கிர்ர்ர்' என்று சுற்றி விட்டது.
அவன் மது மயக்க நிலையை
அடைந்ததை உணர்ந்து அவளிடம்
எல்லை மீறினான். ஆனால் கடவுள்
புண்ணியத்தில் எதுவும் நடக்கும்
முன்னால் சுயநினைவிற்கு வந்த மது
பயமும் கோபமும் ஒன்று சேர அவனை
ஓங்கி அடிவயிற்றிற்கு கீழ் உதைத்து
கீழே தள்ளி விட்டாள்..

அவன் அலறியபடி கீழே விழ மது
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
ஷட்டரை மேலே இழுத்து வெளியே
வந்து கால் போன போக்கில் ஓட
ஆரம்பித்தாள். அந்த கனமான
ஷட்டரை எப்படித் தனியாக திறந்தாள்
என்று அவளுக்கே வியப்பு. ஷட்டரை
திறந்ததும் வெளியே வந்தவள்
கண்மண் தெரியாமல் பயத்தில் கீழே
ஓடினாள். கீழே சென்றவள் அதே
வேகத்தில் ரோட்டை கடக்க அந்தச்
சமயம் வந்த கார் ஒன்று அவள் மேல்
மோதியது. கார் மோதியதில் மது
நாலடி தள்ளிப் போய் விழுந்தாள். விழுந்ததில் அங்கு இருந்த மைல்
கல்லில் தலை அடித்துவிட்டது ரத்தம்
கசிய கூட்டம் கூட நின்று அவளை
வேடிக்கைப் பார்த்தது.

ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட
திருமுருகன் அங்கு வரும் போது
கூட்டமாக இருக்க கூட்டத்தை
விலக்கிப் பார்த்தார். மதுவை பார்த்த
அவர் திகைத்து அலறிவிட்டார். ரத்தம்
வழிய ரோட்டில் விழுந்து கிடந்த
மகளைப் பார்க்க அவரின் உடல்
நடுங்கியது.

காரை அங்கேயே பூட்டிவிட்டு ஓடியவர்
தன் மகள் தான் என்று கூறி தானும்
ஆம்புலன்ஸில் ஏறிவிட்டார். தலையில்
அடிபட்டு ரத்தம் வழிந்தது. கை காலில்
நன்றாக சிராய்ப்பும் இருந்தது.
ப்ரைவேட் ஹாஸ்பிடலேயே மதுவை
அட்மிட் செய்துவிட்டு வீட்டிற்கு தகவல்
தெரிவித்துவிட்டார் திருமுருகன்.
விஷயம் அறிந்து எல்லோரும்
அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர்.

"என்னாச்சு? என் மகள் எங்கே?" என்று
கேட்டபடி அழுக ஆரம்பித்து விட்டார்
உமா.

"அண்ணி அழாதீங்க.. தலையில்
கொஞ்சம் அடி... டாக்டர் பார்த்துட்டு
இருக்கார்" என்று தவித்தபடியே
திருமுருகன் கூற, டாக்டர் வெளியே
வந்தார்.

"தலையில் அடி. தையல்
போட்டிருக்கிறோம். இருந்தாலும்
ஒரு வாரம் அப்சர்வேசன் ல வச்சு தான்
அனுப்ப முடியும். மற்றபடி பயப்படத்
தேவையில்லை" என்று கூறிவிட்டு
கடமையுள்ள டாக்டராகச் சென்றார்.

டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை
என்று சொன்ன பின்தான்
அவர்களால் மூச்சு விட முடிந்தது.
ஆனால் அவள் இப்படி அடிபட்டுக்
கிடப்பது அவர்களால் பார்த்து சகிக்க
முடியவில்லை.

அடுத்த நாள் மதுவிற்கு மருத்தவப்
படிப்பிற்கான கௌன்சலிங் இருந்தது.
அன்று மாலை கிளம்ப இருந்த
சுந்தரமூர்த்தி, மது துணிகளைத் தான்
உமா விபத்து செய்தி அறியும் முன்
பாக் செய்து கொண்டு இருந்தார்.

"என் மகள் ஆசையாக இதில்
இருந்தாலே. இப்படி ஆகிவிட்டதே"
என்று தலையில் கை வைத்தபடி
உட்கார்ந்தார் சுந்தரமூர்த்தி.

"இந்த வருடம் இல்லை என்றால்
அடுத்த வருடம். ஆனால் நாம் தான்
அவளைத் தேற்ற வேண்டும்" என்றார்
சண்முகம்.

இரவு ஒருவர் தான் கூட இருக்க
வேண்டும் என்று டாக்டர் சொல்ல
அன்று இரவு சுந்தரமூர்த்தி
இருந்துவிட்டார். மதுவின் தலையில்
ஐந்து தையல் போட்டிருந்தனர்.
மகளைப் பார்த்த படியே
உட்கார்ந்திருந்த சுந்தரமூர்த்தி
விடியற்காலையிலேயே உறங்கினார்.
எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டு
அடுத்த நாள் காலை வந்தனர். மது
மயக்கத்தில் இருந்து விழிக்க
அன்றைய மதியம் தாண்டிவிட்டது.

அவள் விழித்தவுடன் அருகில் சென்ற
உமா "மதுமா" என்றபடி அருகில்
சென்று கையைப் பிடித்தார்.

"அம்மா" என்ற மதுவின் கண்களில்
கண்ணீர் வழிந்தது. அன்று முழுவதும்
அரைமயக்கத்திலேயே இருந்தாள்.

மருந்தின் காரணத்தினால் மது
அயர்ந்தே மூன்று நாட்கள் இருந்தாள்.

"எப்படி மது ஆக்ஸிடென்ட் ஆச்சு?"
என்று மூன்று நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் பேச ஆரம்பித்த மதுவிடம்
கேட்டார் திருமுருகன்.

"என் ப்ரண்ட் ரோட்டிற்கு அந்தப் பக்கம்
செல்வது போல் இருந்தது சித்தப்பா.
ரோட்டைப் பாக்காமல் க்ராஸ்
செஞ்சிட்டேன்" என்று கூறினாள் தன்
கைகளை வெறித்தபடி.

"பார்த்துக் க்ராஸ் பண்ண மாட்டாயா"
என்று உமா குமுற "விடுங்கள்
அண்ணி தெரியாமல் சென்று
விட்டாள். நானும் முன்பே
சென்றிருந்தாள் இந்தத் தவறு
நடந்திருத்காது" என்று திருமுருகன்
உமாவைச் சமாதானம் செய்தார்.

ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்து
விட்டு வீடு திரும்பினாள் மது.
ஜானகியும் நிலாவும் வந்து பார்த்து
விட்டுச் சென்றனர். வீடு வந்ததில்
இருந்து சோர்ந்தே காணப்பட்டாள் மது.

"இந்த வருடம் விட்டுவிடு மதுமா. உன்
மார்க்கிற்கு அடுத்த வருடம் கூட
கிடைக்கும்" என்று எல்லோரும்
அவளைத் தேற்றினர். ஆனால் அவள்
மனதில் இருந்ததை யாரும் அறியவும்
இல்லை.. இவளும் யாரிடமும் வாய்
விட்டுச் சொல்லவில்லை.
 

Yaazhini madhumitha

Well-Known Member
"இந்த வருடம் விட்டுவிடு மதுமா. உன்
மார்க்கிற்கு அடுத்த வருடம் கூட
கிடைக்கும்" என்று எல்லோரும்
அவளைத் தேற்றினர். ஆனால் அவள்
மனதில் இருந்ததை யாரும் அறியவும்
இல்லை.. இவளும் யாரிடமும் வாய்
விட்டுச் சொல்லவில்லை.

அவளது மார்க்கிற்கு கிடைக்கும்
என்று அவளுக்கும் தெரியும். தன்
சந்தோஷம் எல்லாம் பறந்து சென்று
விட்டதை மது உணர்ந்தாள். தினமும்
சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறேன்
என்று அறைக்குள் புகுந்து விடுவாள்.

ஆனால் அறைக்குள் புகுந்து விட்டு
அழுதே கிடப்பாள். தன்னிடம் ஒருவன்
அதுவும் அவள் அப்பா வயது இருக்கும்
ஒருவன்.. என்று நினைத்து நினைத்து
துடிப்பாள். மதுவின் கலகலப்பு
அப்படியே குறைந்தது. ஏன் இப்படி
என்று யோசித்து மருகினாள்..
அறைக்குள்ளேயே நடந்து நடந்து
சோர்ந்தாள்.. கெட்டக் கெட்ட
கனவுகளும் வேறு வந்து
நிம்மதியாகக் கூட உறங்க முடியாமல்
போனது. மிகவும் அருவெருப்பாக
உணர்ந்தாள்.. சில சமயம் அந்த
சம்பவத்தை நினைத்து வாந்தியும்
எடுத்தாள். இதுவே தொடர்ந்தது. தன்
பலத்தை எல்லாம் இழந்து கொண்டே வந்தாள். மிகவும் இழைத்து
கருத்தவள் சுற்றி என்ன நடக்கிறது
என்று கூட அறியாமல் கிட்டத்தட்ட
பித்துப் பிடித்தவள் போல ஆனாள்.

தன் அப்பா வாங்கிக் கொடுத்த
மொபைலிலும் நாட்டம்
செல்லவில்லை. எல்லோரும்
எவ்வளவு சொல்லியும் அவள்
சமாதானம் ஆகவில்லை.

அவள் மனம் இப்போது
கார்த்திக்கிற்கு அதிகமாக ஏங்கியது.
அவன் அருகில் இருந்து ஆறுதல்
சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்
என்று தோன்றியது. ஆனால் நடக்கிற
காரியம் இல்லை என்று தோன்ற
மிகவும் சோர்ந்துபோனாள். இனி
அவன் முகத்தைப் பார்க்க முடியுமா
என்று நினைத்து தனக்குள்ளேயே
சுருண்டாள். இரவிலும் தூங்க
முடியாமல் விசித்தாள்.

சொல்ல முடியாத
துயரத்திலும்
தூக்கம் இல்லாத
இரவுகள்
என்னில் எத்தனையோ..
அதை நீ அறிய வாய்ப்பில்லை
உன்னிடம் சொல்லி அழுது
உன் மடியில் தலை சாய்க்க
துடிக்கும் எனக்குள் எத்தனையோ
வலிகள்
உன் முகம் காணாமல் இருந்தாலும்
உன் குரல் கேட்காமல் இருந்தாலும்
என் காயத்திற்கு உரித்தான மருந்து
நீ மட்டும் தான்!

என்றது மதுவின் மனம்

ஒருநாள் மதியம் ஆகியும் மது கீழே
வராமல் இருக்க ராதா கீழ் இருந்தே
குரல் கொடுத்துப் பார்த்தார். பதில்
வராது போகவே மேலே சென்றார்.
கதவைத் தட்டிப் பார்த்து விட்டு உள்ளே
சென்றார். ராதா உள்ளே செல்ல மது
பாத்ரூமிற்கு வெளியில் மயங்கி
கிடப்பதைக் கண்டு "மது" என்று
அலறிவிட்டார்.

"அக்கா, அம்மா" என்று கத்திக் குரல்
கொடுத்தார் ராதா, மதுவை
தூக்கியபடி.

"ராதாவின் குரல் கேட்டு வந்த
ஈஸ்வரியும் உமாவும் பதறிவிட்டனர்.
ராதா ஆம்புலன்ஸிற்கு கூப்பிட்டு
விட்டு சுந்தரமூர்த்திக்கும் தகவல்
கொடுக்க , மதுவை மூவரும் கீழே
தூக்கி வந்தனர்.

ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச்
செல்லவும் சுந்தரமூர்த்தி அங்கு
வரவும் சரியாக இருந்தது. எல்லாரும்
நிம்மதி இழந்தது போல இருந்தனர்.
சுந்தரமூர்த்தி முதல் முறையாக
இடிந்து போய் உட்கார்ந்து இருந்தார்.
ஆசையாக கொஞ்சி வளர்த்த மகள்
அல்லவா? தான் எந்த ஜென்மத்தில்
பாவமோ என்று தலையைக்
கைகளால் தாங்கியபடி
அமர்ந்துவிட்டார் சுந்தரமூர்த்தி.

மதுவைப் பரிசோதனை செய்துவிட்டு
வெளியே வந்த டாக்டர், "உங்கள்
பெண்ணின் வயது என்ன?" என்று
கேட்டார்.

"பதினேழு முடியப்போது டாக்டர். ஏன்?
என்ன ஆயிற்று மதுவிற்கு?" என்று
கலங்கிய குரலில் கேட்டார்
சுந்தரமூர்த்தி.

"ஒன்றுமில்லை. உங்கள் பெண் ரொம்பவும் மன அழுத்ததில்
இருக்கிறாள். உடம்பும் ரொம்ப வீக்கா
இருக்கு. அதான் வயதைக் கேட்டேன்"
என்றுவர் "என்னவாயிற்று? அதுவும்
இந்த வயதில் என்ன பிரச்சனை? "
என்றுக் கேட்டார் டாக்டர்.

நடந்ததை சுந்தரமூர்த்தி சொல்ல
"நீங்கள் தான் தைரியம் சொல்ல
வேண்டும். எப்போதும் யாராவது கூட
இருங்கள். ப்ரண்ட்ஸ் யாராவது
இருந்தால் அவர்களுடன் போனில்
பேசச் செல்லுங்கள். மருந்து
மாத்திரைகளை விட மதுமிதா
தேறுவது உங்கள் எல்லோர் கையில்
தான் உள்ளது" என்றுவிட்டு "நீங்கள்
இன்றே மதுமிதாவை வீட்டிற்கு
அழைத்துச் செல்லலாம்" என்றுவிட்டுப்
போனார்.

"நான் பில் கட்டிவிட்டு வரேன். நீங்கள்
எல்லாம் இங்க இருங்க" என்று விட்டு
சுந்தரமூர்த்தி பில் கட்ட சென்றார்.

திருமுருகன் மதுவை டிஸ்சார்ஜ்
செய்யும் சமயத்தில் வந்து சேர்ந்தார்.
அனைவரும் வீட்டிற்கு வந்துவிட்டு
மதுவைத் தூங்க வைத்துவிட்டு கீழே
வந்தனர்.

"மது இதற்கு இவ்வளவு வேதனைப்
படுவாள் என்று எண்ணவில்லை"
என்றார் நிம்மதியற்ற குரலில்
சுந்தரமூர்த்தி.

"போனது போகட்டும். மதுவை
அவளுக்குப் பிடித்த இடத்திற்கு
எங்காவது வெளியில் கூட்டிச்
செல்வோம். மதுவிற்கு பிடித்த
உணவையே தினமும் செய்யுங்கள்.
எதாவது படத்திற்குக் கூடப் போகலாம்
அனைவரும். முக்கியமான அவளைப்
பாவமாகப் பார்க்காதீர்கள்.பழைய
மாதிரியே நடத்துங்கள்" என்றார்
திருமுருகன்.

பின்பு வருணை அழைத்து "வருண்
அக்காவுடன் எப்போதும் போல
விளையாடு.. மாட்டேன் என்றாலும்
அக்காவை அழைத்து ஏதாவது
சப்ஜெக்ட்டில் டவுட் கேளு" என்று
திருமுருகன் சொல்ல கண்ணின் மணி
போல தலையை ஆட்டினான் வருண்.
அவனுக்கு அந்த வயதில்
புரியவில்லை என்றாலும் அக்காவின்
சோர்வு அவனையும் பாதித்தது
உண்மைதான்.

மது தூங்கிவிட்டதாக எண்ணி
அனைவரும் கீழே பேசினர். ஆனால்
கதவைத் தாங்கலாகப் பிடித்தபடி
நின்று அனைத்தையும்
கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"ச்ச நம்மால் எல்லாருக்கும் எவ்வளவு
கஷ்டம் என்று கண் கலங்கினாள்.
இனி கொஞ்சமேனும் பழையபடி
இருக்க வேண்டும்.. இவர்களுக்காவது
நிம்மதி இருக்கட்டும்" என்று
எண்ணினாள்

எல்லாம் திருமுருகன் சொன்னபடியே
நடந்தது. அவளை பழையபடி
கொண்டுவர எல்லோரும் முயன்றனர்.
அவர்களுடன் இருக்கும் போது சற்று
மகிழ்ச்சியாகவே இருந்தது மதுவிற்கு.
ஆனால் தனி அறையில் இருக்கும்
போதுதான் எல்லா நினைவும் மறுபடியும் தலை தூக்கியது. மீண்டும்
கார்த்திக் இன் நினைவு வேறு வந்து
இம்சித்தது. தூக்கத்தில் கூட
மறுபடியும் கனவு வந்து நடுங்கினாள்.

ஒருநாள் திருமுருகன் "மதுமா கீழே
வா..யார் வந்திருக்காங்க பாரு" என்று
கீழே இருந்து குரல் கொடுத்தார்.

மது கீழே வர மிதுனாவும் ஸ்வேதாவும்
"ஹே..." என்றபடி மதுவை
கட்டிக்கொண்டனர். மதுவிற்கு
அவர்களைக் கண்டதில் ரொம்ப
சந்தோஷம்.

"எப்படி இருக்கீங்க டீ? எப்ப
வந்திங்க? காலேஜ் லீவா? என
இருவரையும் பார்த்துக் கேட்டாள் மது.

"ப்பா... எத்தனை கேள்வி" என்றாள்
மிதுனா.

"மது இவர்களை மேலே உன் ரூமிற்கு
கூட்டிச் சென்று இவர்கள் லக்கேஜை
வைத்துவிட்டு மூவரும் கீழே
வாருங்கள். சாப்பிடலாம்"என்றார்
சுந்தர மூர்த்தி.

அப்போது தான் தோழிகள் இருவரும்
தன்னுடன் இரண்டு நாட்கள் தங்க
வந்திருந்ததை மது
தெரிந்துகொண்டாள். பெட்டியை
வைத்துவிட்டு கீழே வந்த மூவரும்
அரட்டை அடித்தபடியே சாப்பிட்டு
முடித்தனர். பிறகு மேலே வந்து இரவு
உடைக்கு மூவரும் மாறினர்.

"நீங்கள் எப்படி இங்கே?" என்று மது
கேட்டாள்.

"அப்பா சொன்னார் மது" என்றாள்
மிதுனா.

"ஏன் மது இப்படி இருக்க? என்ன
ஆச்சு?" என்று நேரடியாக கேட்டாள்
ஸ்வேதா.

ஸ்வேதாவும் மதுவும் சிறு வயதில்
இருந்தே ஒன்றாக படித்தவர்கள்.
மிதுனா ஆறாவதில் தான் வந்து
இந்தப் பள்ளியில் சேர்ந்தாள். பின்னர்
மூவரும் நெருங்கிய தோழிகள்
ஆயினர். ஒருவரை ஒருவர் நன்கு
அறிந்தவரும் கூட. சிறுவயதில்
இருந்து கூடவே இருந்ததால் ஸ்வேதா
மதுவை எளிதில் கண்டு கொண்டாள்.

"எப்படி இருக்கேன்" என்று திருப்பிக்
கேட்டாள் மது.

"உன்ன சின்ன வயதில் இருந்து
எனக்குத் தெரியும் மது. காலேஜ் போக
முடிலைன்னே இப்படி இருக்க நீ?
ப்ரண்ட்டைப் பார்த்து ரோட் க்ராஸ்
பண்ணியாமே? யாரைப் பார்த்தாய்?
சிங்காநல்லூர் ரோட்டில் நம் கூடப்
படித்தவர்கள் யார் இருக்காங்க?
அப்படியே பார்த்திருந்தாலும் அப்படி
க்ராஸ் பண்ணமாட்ட நீ. என்னனு எங்க
கிட்டயாவது சொல் மது. இப்படி
உள்ளே வெச்சு வெச்சு எப்படி ஆகிட்ட
பார்" என்றாள் ஸ்வேதா அவளின்
தோற்றத்தைப் பார்த்தபடி.

அதுவரை அமைதியாக இருந்த மது,
ஸ்வேதா அப்படி கேட்டவுடன் அப்படியே
அவள் மடியில் புதைந்து அழுக
ஆரம்பித்து விட்டாள். அவள் அழுது
முடிக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.

அழுது முடித்துவிட்டு எழுந்த மது
அனைத்தையும் ஒரு மூச்சு கூறினாள்.
கார்த்திக்கை மறக்க எண்ணியதையும்
அந்தச் சமயத்தில் அந்த ஆசிரியர்
அவளிடம் தப்பாக நடந்து
கொண்டதையும், அவனிடம் இருந்து
தப்பி வந்த போதுதான் ஆக்ஸிடென்ட்
ஆனது என்பதையும் சொல்லி
அழுதாள்.

"சரி எல்லாத்தையும் மறந்திருடி.
அதான் தப்பித்துவிட்டாயே. ஹாப்பியா
இருக்க ட்ரை பண்ணு" என இருவரும்
மதுவைத் தேற்றினர்.

"......." - உதட்டை கடித்தபடி கண்களில்
நீரைச் சுமந்திருந்தாள் மது.

"என்ன மது?" என்றாள் ஸ்வேதா.

"எனக்கு இப்போது தான் கார்த்திக்
உடன் இருக்க வேண்டும் என்று
இருக்கிறது. கார்த்திக் கூட இருந்தால்
எல்லாம் சரியாகி விடும் என்று
இருக்கிறது..ஆனால் அவன் முகத்தை
நிமிர்ந்து பார்க்க முடியும் என்று
தோன்றவில்லை. ஏதோ பயமாக
தவிப்பாக இருக்கிறது. " என்று மது
கண்ணீர் சிந்தினாள்.

இதற்கு என்ன சொல்லி சமதானம்
செய்வது என்று தெரியாமல் இரு
தோழிகளும் விழித்தனர்.
மூவருக்குமே அது என்ன என்று
புரிந்து கொள்ள வயது பத்தவில்லை.

"கார்த்திக் அண்ணாட்ட பேசனுமா மது?
என்று மிதுனா கேட்டாள்.

"இல்ல... வேண்டாம்" என்று
பதறினாள் மது. என்னவென்று
பேசுவாள்.. இவள் யாரென்று கூடத்
தெரியாதவனிடம்.

"ஏன் மது?" என்று ஸ்வேதாவும்
மிதுனாவும் ஒருசேர வினவினர்.

உடனே பதறியவள் "ஏற்கனவே நான்
நினைத்த காரணம் ஒன்று . அதுவும்
இல்லாமல் இப்போது இ..இந்தச்
சம்பவத்திற்குப் பிறகு கார்த்திக்கைப்
பார்க்க ஒரு.. ஒரு மாதிரி உடல்
கூசுகிறது" என்று மது சொல்லும்
போதே அவள் உடல் நடுங்கியது.

"அப்போ கார்த்திக் அண்ணா கூட
இருக்க வேண்டும் என்று
நினைக்கிறாயே மது" என்று மதுவின்
முதுகைத் தேய்த்துவிட்ட படிக்
கேட்டாள் ஸ்வேதா.

"அது ஏன் என்று எனக்குத்
தெரியவில்லை.. ஆனால்
தோன்றுகிறதே " என்று இரு
கைகளையும் கோர்த்து நெஞ்சின்
மேல் வைத்துப் புரியாமல்
சிறுபிள்ளை அழுத மது.. சிறிது நேரம்
கழித்து "இந்நப் பேச்சு போதும்..மேலே
எதுவும் கேக்காதீங்க, தூங்குவோம்
வாங்க" என்றாள்.

அவர்களும் அவள் இவ்வளவு
சொன்னதே அதிகம் மேலும் கேட்டு
அவளை வருத்தப்பட வைக்காமல்
உறங்கத் தயாரானர்.

இரண்டு நாட்களாக கலகலப்பாக
சென்றது. பின் ஸ்வேதாவும்
மிதுனாவும் அவரவர் வீட்டிற்கு
திரும்பினர்.

மதுவும் வீட்டிலேயே இருக்கப்
பிடிக்காமல் சுந்தரமூர்த்தி அல்லது
திருமுருகனோடு கார்மெண்ட்ஸ்
சென்று வந்தாள். இன்னொன்று,
ஜானகி அம்மா நிலாவைத்
தவிர்க்கவே அப்படிச் செய்தாள்.
எங்கே அவர்கள் கார்த்திகைப் பற்றி
பேசுவார்களோ என்றிருந்தது
அவளுக்கு.மறுபடியும் அதைக் கேட்டு
அவன் நினைவை வளர்க்க அவள்
விரும்பவில்லை.

இப்படியே நாட்கள் செல்ல ஒரு வருடம்
முடிந்தது. மருத்துவப் படிப்பிலேயே
சேர்ந்தாள். கோவையிலேயே சீட்
எடுக்க எல்லாரும் சொல்லியும்
கேட்காமல் சென்னையிலேயே
எடுத்தாள். இருந்தாலும் வீட்டினரைப்
பிரிந்து இருக்க முடியாமல் இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை வந்து
சென்றாள். அவ்வப்போது
தோழிகளையும் சந்திப்பாள். ஆனால்
அதையும் தான் நிறுத்திக்கொள்ளப்
போவதை அப்போது அவள்
அறியவில்லை.

ஸ்வேதாவின் அழைப்பு மதுவை
நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
நடந்ததை எல்லாம் பால்கனியில்
நின்று நினைத்துக் கொண்டிருந்த மது
மொபைல் சத்தத்தை கேட்டு உள்ளே
சென்றாள். ஸ்வேதா தான். தான்
மாலை குளிக்கப் போகும் முன்
அழைத்தது நினைவு வந்தது.

போனை அட்டென்ட் செய்து "ஈவனிங்
கூப்ட காலிற்கு இப்ப வருது" என்றாள்
மது குத்தலாக.

"இப்பத்தான் மது பாப்பாவை
தூங்க வைத்தேன்" என்று சிரித்தாள்
ஸ்வேதா.

"ஹே விளையாட்டுக்கு சொன்னேன்
டி" என்றுவிட்டு "உன் ஹஸ்பன்ட்,
பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?
என கேட்டாள் மது.

"எல்லாம் நலம். என்ன குரல் ஒரு
மாதிரி இருக்கு? எனக் கேட்டாள்
ஸ்வேதா.

அன்று நடந்த அனைத்தையும் ஒரு
மூச்சு கூறி முடித்தாள் மது.

"அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" என்றாள்
ஸ்வேதா.

"எதற்கு?" என்று புரியாமல் கேட்டாள்
மது.

"கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு
தரப்போரல அதான்" என்றாள்
ஸ்வேதா.

"ஸ்வேதா ப்ளீஸ்.. உனக்கு தான் என்
நிலைமை தெரியும் ல" என்றாள்
ஸ்வேதா.

"எனக்கு என்னமோ எல்லாம்
நல்லபடியாக நடக்கும் என்றுதான்
தோனுது" என்றாள் ஸ்வேதா.

மேலும் சிலநேரம் பொதுவான
விஷயம் பேசிவிட்டு வைத்தனர்
இருவரும்.

போனை வைத்த மது உறக்கம்
வராமல் விடிகாலையிலேயே
கண்களை மூடினாள். அடுத்த நாள்
சரியான உறங்காத காரணத்தாலும்
அழுத்தாலும் கண்கள் நன்கு சிவந்து
இருந்தது. வழக்கம் போல வேலைக்கு
போய் வந்தாள் மது, கூடிய விரைவில்
அவள் அவனைப் பார்க்க நேரிடும்
என்பதை அறியாமல்.
 

Geetha sen

Well-Known Member
மருத்துவ படிப்பிலும் சேர்ந்துட்டா first meet கார்த்திக்குடன் நடந்ததா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top