அத்தியாயம் 4 - சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

Advertisement

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-4

உமாமகேஸ்வரி எவ்வளவு
சொல்லியும் புடவை அணியாமல்
சல்வார் கமீஸ் அணிந்து வந்து
நின்றாள் மதுமிதா. மரகதப் பச்சை
நிறத்தில் கோல்டன் பார்டர் வைத்து
அவளது உடம்பிற்கு கச்சிதமாக
இருந்த சல்வார் கமீஸ் அவளை
எடுத்துக் காண்பித்தது. இடுப்பிற்கு
சற்று மேலாக இருந்த முடியை
ப்ரென்ச் ப்ரெய்ட் (French braid)
போட்டு சில ஒப்பனைகள் செய்து
அழகாக வந்த பேத்தியை கண்டு
நெட்டிமுறித்தார் ஈஸ்வரி.

"அய்யோ பாட்டி எல்லாம் மேக்கப்..
இதுக்கு போய்ய்ய்.. " என்று முகத்தைச்
சுழித்து வருண் நகைத்தான்.

"போடா குரங்கு" என்று எம்பி
தம்பியின் தலையில் குட்டினாள்
மதுமிதா.

"குரங்கின் அக்கா குரங்குதான்டி
அக்கா" என்று மதுவை மேலும்
சீண்டினான் வருண். அவனுக்கு
அக்காவை வம்பிற்கு இழுப்பதில்
அவ்வளவு சந்தோஷம்.

ஏதோ சொல்ல வாயெடுத்த மதுமிதா
சுந்தரமூர்த்தி வருவதைக் கண்டு
தம்பியிடம் பழிப்புக் காட்டிவிட்டு,
வெளியே வந்து காரில் அமர்ந்தாள்.

தந்தை அன்று தன்னைத் திட்டியதில்
இருந்து அவளிடம் சரிவரப் பேசியதை
நிறுத்தியது அவளுக்கு மிகவும்
கஷ்டமாகத் தான் இருந்தது..
அதற்காக அவள் திருமணத்திற்குச்
சம்மதித்தால் அதை விடக் கஷ்டப்பட
வேண்டுமே என்று எதுவும் பேசாமல்
மனசுக்குள் அனைத்தையும் போட்டு
மருகிக்கொண்டு இருந்தாள்.

இரண்டு கார்களில் கோயிலை
அடைந்தனர். மதுவிற்கு
படபடப்பாகவே இருந்தது. காமாட்சி
அம்மன் அவர்கள் குலதெய்வம் ஆகும்.
பொள்ளாச்சியிலேயே
மகாலிங்கபுரத்தில் அமைந்திருக்கும்
கோயிலிற்கு சுந்தரமூர்த்தி வாரம் ஒரு
முறை வெள்ளிகளில் வந்துவிடுவார்.
அம்மாவாசை பௌர்ணமிகளில்
குடும்பத்துடன் சென்று வருவது
குடும்பத்தின் வழக்கம். பரிகாரத்தை
முடித்துவிட்டு பொங்கல் வைக்கத்
தயாராகினர்.
அன்று பௌர்ணமி என்பதால்
கூட்டமும் கொஞ்சம் இருந்தது.
மதுவும் வருணும் முடிந்த உதவியைச்
செய்துவிட்டு அரட்டை அடித்துக்
கொண்டு இருந்தனர்.

"எப்படி இருக்க மது?" என்று கேட்டபடி
வேலுமணி-ஜானகி தம்பதியர் வந்து
நின்றனர். ஜானகி அம்மாளின்
குரலைக் கேட்ட மதுவிற்கு மூச்சே
நின்றுவிடும் போல் இருந்தது.

"நா..நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி.
நீங்க எப்படி இருக்கீங்க?" என்று
சிரமப்பட்டு சாதாரண முகத்தோடுக்
கேட்டு முடித்தாள் மது.

ஆண்கள் எல்லாரும் ஒருவரை ஒருவர்
விசாரித்துக் கொள்ள, மதுவிடம்
திரும்பிய ஜானகி "வேலை
கிடைத்துவிட்டது என்று அப்பா
சொன்னார் மது. ரொம்ப சந்தோஷம்.
இனி அடுத்து கல்யாணம் தான்
என்ன?" என்று மதுவிடம்
கேட்டார் ஜானகி.

"எங்கே பிடி கொடுக்க மாட்டேன்
என்கிறாள்" என்று சுந்தரமூர்த்தி
கூறத், தன் அப்பாவை மனதிற்குள்
திட்டினாள் மது.

"ஏன் மது கல்யாணம் பண்ணிக்
கொள்ள வேண்டியது தானே? நம்
நிலா உன்னை விட இரண்டு வயது
சிறியவள் தானே. கல்யாணம் ஆகி
ஒரு வருடம் ஆகிறது. நீயும்
கல்யாணம் செய்து நன்றாக
வாழ்ந்தால் அனைவருக்கும்
மகிழ்ச்சியாக இருக்கும் டா" என்று தன்
மகளைப் பற்றி கூறியவாறே மதுவின்
கையைப் பிடித்தபடி பேசினார் ஜானகி.

என்ன பதில் கூறுவது என்று
தெரியாமல் மது விழிக்க
திருமுருகனோ "பொங்கல்
ஆகிவிட்டது. மது போய்க் காரில்
உள்ள வாழை இலையை எடுத்து
வா"என்று மகளுக்கு உதவினார் .
தப்பித்தோம் என்று மதுவும்
சென்றுவிட்டாள்.

எல்லாம் முடிந்து ஜானகி வேலுமணி
தம்பதியர் கிளம்ப, சுந்தர மூர்த்தியும்
சண்முகமும் ஏதோ கும்பாபிஷேகம்
வேலையாக பங்காளிகளிடம் பேச
வேண்டும் என்று "நீங்கள் எல்லோரும்
வீட்டிற்கு சென்று விடுங்கள், நாங்கள்
இரவு உணவிற்கு வந்து விடுகிறோம்"
என்று மற்றவர்களை திருமுருகனோடு
அனுப்பி வைத்தனர்.

வீடு வந்ததும் உமா சமையல்
அறைக்குச் செல்வதைக் கண்ட
திருமுருகன் ராதாவிடம் திரும்பி "ராதா
என்னுடைய பச்சை ஃபைல் ஒன்றைக்
காணவில்லை. நமது அறையில் தான்
வைத்தேன். தேடி எடுத்து வா" என்று
ஏவினார் மனைவியை.

ராதா உள்ளே செல்ல திருமுருகன்
சமையல் அறைக்குச் சென்று
"அண்ணி உங்களிடம் சற்றுப் பேச
வேண்டும்" என்றார்.

பொதுவாக வீட்டில் ஆண்கள் எந்த
தொழில் தொடர்பான ஃபைலையும்
எடுத்து வருவதில்லை என்பது உமா
நன்கு அறிந்த விஷயம். இந்நிலையில்
திருமுருகன் ராதாவிடம் ஹாலில்
பேசியது உமாவின் காதில் நன்றாக
விழுந்தது. திருமுருகன் உள்ளே
வரவும் ஏதோ விஷயம் என்பதைப்
புரிந்துகொண்டார் உமா.

"சொல்லுங்க என்னவாயிற்று? " எனக்
கேட்டார் உமா. ஏனெனில்
எப்பொழுதும் குடும்பத்தோடு பேசும்
வழக்கத்தை மாற்றி அவர் தனியாக
ஏதோ சொல்ல வருகிறார் என்ற போது
உமாவிற்கு பதட்டம் ஆகத்தான்
இருந்தது.

காலையில் மதுவிற்கும் தனக்கும்
நடந்த உரையாடலை திருமுருகன்
கூறிவிட்டு "தப்பு செய்து விட்டோம்
என்று இப்போது தோன்றுகிரது
அண்ணி" என்று குற்ற உணர்ச்சியில்
சொன்னவர் "மது கல்லூரி சேர்ந்ததில்
இருந்து முதல் இரண்டு வருடம்
சென்னையிலிருந்து இங்கு இரண்டு
வாரத்திற்கு ஒரு முறை வருவாள்.
மூன்றாம் வருடப் பாதியில் இருந்து
அந்தப் பழக்கம் நின்றது. பெரிய
விடுமுறைகளில் கல்லூரி விடுதியில்
ஆள் இல்லாத நாட்களிலிலிலேயே
இங்கு வந்து சென்றாள். நாமும் படிக்க
நிறைய இருக்கிறதோ என்று
விட்டுவிட்டோம். எம்.பி.பி.எஸ் முடித்து
விட்டும் இங்கு வராமல் அங்கேயே
வெளி விடுதியில் தங்கி ஏதோ
நுழைவுத்தேர்வு எழுதி லண்டன்
சென்று விட்டாள். இதையெல்லாம்
பார்க்கும் பொழுது.." என்று அவர்
சொல்லும்போதே ராதா சமையல்
அறைக்குள் நுழைந்தார்.

"அப்படி எந்த ஃபைலும் இல்லைங்க"
என்றபடி உள்ளே நுழைந்தார் ராதா.

தண்ணீர் குடிக்க வந்தது போல
பாவனை செய்து விட்டு "சரி நான்
பார்த்துக் கொள்கிறேன்" என்று
விட்டு ஹாலில் சென்று அமர்ந்தார்
திருமுருகன்.

அதற்குப்பின் ஒரு மணி நேரத்தில்
சுந்தரமூர்த்தியும் சண்முகமும் வர
எல்லாரும் சாப்பிட்டு விட்டு அவரவர்
அறைக்குள் புகுந்தனர். தன்
அறைக்குத் தண்ணீர் பிடித்துச் செல்ல
வாட்டர் பாட்டிலுடன் வந்த திருமுருகன்
உமாமகேஸ்வரி மாடிப்படி ஏறுவதைக்
கவனித்தார். ஒரு பெருமூச்சுடன்
தண்ணீரைப் பிடித்துக் கொண்டு
அறைக்கு சென்று விட்டார்.

யார் இந்நேரத்தில் கதவைத் தட்டுவது
என்று யோசித்தபடியே வந்து கதவைத்
திறந்த மது தன் தாயைக் கண்டுத்
திடுக்கிட்டடாள்.

"உன்னிடம் பேச வேண்டும் மது"
என்றுவிட்டு உள்ளே சென்று
படுக்கையில் அமர்ந்தார் உமா.

அம்மா வந்து உட்கார்ந்த
விதத்திலேயே சித்தப்பா அம்மாவிடம்
சொல்லிவிட்டார் என்று புரிந்து
கொண்டாள் மது. தன் அன்னையின்
அருகில் சென்று எதுவும் பேசாமல்
அமைதியாக அமர்ந்தாள் மது.

"கார்த்திக் தானே மது?" என்று எடுத்த
எடுப்பிலேயே கேட்டு விட்டார்.

தன் அம்மா கேட்ட கேள்வியில்
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று
விட்டாள் மது. சித்தப்பாவிடம் பெயர்
சொல்லவில்லையே அம்மாவிற்கு
எப்படித் தெரியும் என்று
யோசனையுடன் அவரை பார்த்தாள்
மது.

"உன்னுடைய முதலாம் ஆண்டு
கல்லூரி நோட்டில் அந்தப் பெயரை
ஒரு முறைப் பார்த்தேன் மது" என்றார்
உமா. அதில் மட்டுமா என்று மதுவின்
மனம் அழுதது.

"அப்போது ஏதாவது ஈர்பாக இருக்கும்.
நீ தவறு செய்ய மாட்டாய் என்று
நம்பிக்கையில் இருந்தேன்.
அதுவும் இல்லாமல் உன்
நடவடிக்கையில் எந்த மாற்றமும்
இல்லை.. ஆனால்..." என்று பேச
முடியாமல் அழுது விட்டார் உமா.

தன் அன்னை அழுவதைப் பார்த்து
அதுவும் தன்னால் அழுவதைப் பார்த்து
தாங்க முடியாதவளாய் "அழாத அம்மா
ப்ளீஸ்" என்று தன் அன்னையைச்
சமாதானம் செய்ய முயன்றாள் மது.

"பின்னே என்ன மது. எங்க
இருவருக்கும் ஒரே பொண்ணு நீ.
எங்களுக்கு மட்டும் இல்லை இந்த
வீட்டுல எல்லாருக்கும் செல்லம் நீ.
உன் அப்பா கூட நாம செய்த
திருமணத்திற்கு மதுவின் கல்யாணம்
தான் நாம் எப்படி வாழ்ந்தோம்
என்பதைக் காட்டும் என்று கூறுவார்
என்னிடம்" என்றார் உமா.

"அம்மா...." என்று ஏதோ சொல்ல வந்த
மகளைத் தடுத்து, "யார் மது கார்த்திக்?
உன் அப்பா சித்தப்பாவிடம் சொல்லி
பேசச் சொல்வோம்" என்று கேட்க மது
பதறிவிட்டாள்.

என்ன விட்டால் போய்ப்
பேசிவிடுவார்கள் போலேயே என்று
நினைத்தவள்.. இது என்ன பிடித்தப்
பொருளா வாங்கிக் கொடுப்பதற்கு
என்றும் எண்ணினாள். இப்பொழுது
அன்னையைச் சமாளித்தால் போதும்
என்று எண்ணியவள் உமாவிடம்
பேசினாள்.

"அம்மா...அப்பா சொன்னது போல ஒரு
மாதம் கழித்துச் சொல்கிறேன்" என்று
அப்போதைக்கு அவரை சமாதானம்
செய்து அனுப்பப் பார்த்தாள்.

எழுந்த உமா "பார் மது என் வாயை நீ
இப்போது மூடிவிடலாம். எல்லாரும்
அமைதியாக இருக்கிறார்கள் என்று
மட்டும் நினைக்காதே.
தாத்தாவிலிருந்து வருண் வரைக்கும்
உன் வாழ்க்கைப் பற்றிய கவலைதான்.
உன் முடிவு யாரையும்
கஷ்டப்படுத்தாது என நம்புகிறேன்"
என்றுவிட்டுத் தன் அறைக்குத்
திரும்பினார்.

அன்னை சென்றதும் கதவைச்
சாத்திவிட்டு அதன் மேலே
சாய்ந்துவிட்டாள் மது. ஏதோ புயல்
அடித்து ஓய்ந்ததைப் போல இருந்தது
அவளுக்கு.

"உனக்காகவே ஏங்கித் தவித்து
நிம்மதியற்று திரிவேன் என்று
தெரிந்திருந்தால்
உன்னைத் திரும்பி கூடப்
பார்த்திருக்க மாட்டேனடா!"

எனக் கதறியது மதுவின் மனம்.
எத்தனை வருடம் இந்தக் கஷ்டமோ
என்று நினைத்தவளுக்கு உதடுகள்
துடித்தன.

இரண்டு நாட்கள் சென்றன. தினமும்
காலை சித்தப்பாவுடன் சென்று விட்டு
மாலை பேருந்தில் வருவது மதுவின்
வழக்கம் ஆயிற்று. அன்று மாலை மது
வீடு வரும் போது வீட்டின் முன்னால்
ஏதோ புதுக் கார் நிற்பதைக் கண்டு
யோசித்தபடியே உள்ளே சென்றாள்.
உள்ளே நுழைந்தவுடன் ஜானகி
அம்மாவைக் கண்டதும் பக் என்று
இருந்தது மதுவிற்கு. மனதில்
தோன்றியதை முகத்தில் காட்டாமல்
ஜானகி அம்மாவை வரவேற்றுவிட்டு
தன் அறைக்குச் சென்றாள்.

குளித்து முடித்து கீழே இறங்கும்
போதே தன் அப்பாவும் தாத்தாவும்
வந்துவிட்டதைக் கண்டாள். ராதா
குடுத்த டீயைத் தன் அக்காவிடம்
கொடுத்துவிட்டு மது அருகிலேயே
வருணும் அமர்ந்தான்.

"இங்க ஒரு வேலையாக வந்தேன்.
கும்பாபிஷேகம் வேலை தொடங்க
உள்ளதுன்னு நேத்து நம்ம ஐயர்
சொன்னார். அதான் பணத்தை
உங்களிடமே தந்து விடலாம் என்று
வந்தேன்" என்று ஜானகி பத்தாயிரம்
ரூபாயைச் சண்முகம் ஐயா கையில்
கொடுத்தார். சுந்தரமூர்த்தி அதற்கான
ரசீதையும் எழுதிக் கொடுத்தார்.

"வந்து நம் நிலா ப்ரெக்னன்ட்டா"
என்றார் ஜானகி சந்தோஷமாக.

"ரொம்ப சந்தோஷம்" என்றனர்
அனைவரும்.

"எங்கள் வீட்டில் இந்த மாதிரி பேச்சு
எப்போது வரும் என்று இருக்கிறது"
என்று பெருமூச்சு விட்டார்
சுந்தரமூர்த்தி.

"இந்த அப்பாவுக்கு இப்போது
என்னவாம்" என்று மனதினில்
திட்டினாள் மது.

"ஏன் மது நீ இன்னும் சம்மதம்
சொல்லவில்லையா?" என்று மதுவிடம்
கேட்டார் ஜானகி.

சித்தப்பா இப்போது இங்கு
இல்லையே என்று நொந்தபடி "அ...
அது ஆன்ட்...டி" என்று திக்கினாள்
மதுமிதா.

"ஏன் மது? யாரையும் விரும்பறியா?"
என்று அனைவரின் முன்பு ஜானகி
கேட்க மதுவிற்கு வியர்த்துவிட்டது.
இவரிடம் என்ன என்று சொல்வது
என்று நினைத்தாள்.

ஏதோ சொல்ல மது வாயெடுக்க
"ஆமாம் யாரையோ ஒருதலையாக
விரும்புகிறாள்,ஆனால் யார் என்று
சொல்ல மாட்டேன் என்கிறாள்" என்று
உடைத்து விட்டார் உமா. அம்மாவை
முறைத்த படியே எழுந்து அறைக்குச்
செல்லத் திரும்பினாள் மதுமிதா.

சுந்தரமூர்த்தியின் பொறுமை
இப்போது சுத்தமாகப் பறந்துவிட்டது.
"நில் மது" என்று சுந்தரமூர்த்தி முழங்க
மது நின்றுவிட்டாள்.

"யார் அந்தப் பையன்?" எனக் கேட்டார்
அவர்.

"......" - பதில் சொல்லாமல் தரையை
வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள்
மதுமிதா. காதல் விஷயத்தில்
தனக்கும் மனைவிக்கும் இருக்கும் பிடிவாதம் பெண்ணுக்கும் இருக்கும்
என்பதையே மறந்து விட்டார்
சுந்தரமூர்த்தி.

"நான் கேட்பது காதில்
விழவில்லையா?" என்று கத்தினார்.
மகள் இப்படி நிற்பதைப்
பார்த்தவருக்குக் கோபம் தலைக்கு ஏற
கையை ஓங்கினார். மதுவின் மேல்
அடி விழுவதற்குள் அனைவரும்
தடுத்து விட்டனர்.

"விடுங்க என்னை.. இவ்வளவு
கேட்கிறேன்.. வாயைத் திறக்காமல்
நின்றால் என்ன அர்த்தம்.. எந்த
தகப்பன் இந்த அளவு இறங்கி
வருவான்" என்று சத்தம் போட சில
சலசலப்புக்குப் பின் அமைதி ஆனார்.

"......." - மது இப்பவும் அப்படித் தான்
நின்றிருந்தாள். அவளுக்கு பழைய
நினைவுகள் கண் முன்னால் வந்து
போனது.

"சொல்லு தங்கம்.. யாரும் உன்னை
எதும் சொல்ல மாட்டார்கள். உன்
கல்யாணத்தைப் பார்த்து விட்டால்
நிம்மதியாகக் கண்ணை மூடி
விடுவேன்.. நீ அடி வாங்குவதைப்
பார்க்கவா எல்லோரும் வளர்த்தோம்..
உன் அப்பாவே உன்னை அதற்காகவா
அவ்வளவு செல்லமாக வளர்த்தார்"
என்றபடி மதுவின் அருகில் வந்து
கைகளைப் பிடித்தார் ஈஸ்வரி அம்மா.
அவரின் கண்களில் நீர்
திரையிட்டிருந்தது.

"அதான் கேட்கிறார்கள் இல்லை
சொல்லு மது. அந்தப் பையன் வீட்டில்
பேசி உனக்கே கல்யாணம் செய்து
வைத்து விடுவார்கள்" என்று ஜானகி
தைரியம் சொல்ல .. அங்கு நின்று
இருந்த ஒவ்வொருவரின் பார்வையும்
மதுவை நெருக்குவது போல இருந்தது.
எதோ எல்லோரும் நிற்கு வைத்து
சொல்லாமல் விடமாட்டோம் என்று
நிற்பதை உணர்ந்தாள் மது.

"நான் சொல்லுகிறேன்.. ஆனால்
கல்யாணப் பேச்சு மட்டும் வேண்டாம்.
அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ..
இது நீங்க எல்லாரும் கேட்பதற்காக
மட்டும் தான் சொல்றேன்" என்று
எல்லோரையும் பார்த்தபடி பேசினாள்.
கண்களில் நீர் திரண்டது மதுவிற்கு.

எல்லோரும் யோசனையுடன் பார்க்க
மதுமிதா ஜானகியிடம் திரும்பி
"உங்கள் மகன் கார்த்திக்கைத் தான்
எட்டு வருடங்களாக நான்
காதலிக்கிறேன் ஆன்ட்டி..இப்பவும் "
என்றவள்.. அதற்குள் அழுகை வர தன்
அறையை நோக்கி ஓடினாள்.

எத்தனை நேரம் எல்லோரும் அப்படியே
நின்றார்கள் என்று தெரியவில்லை,
ஜானகி தான் அமைதியைக் கலைத்து
"அப்போ நான் வருகிறேன்" என்றார்.

சண்முகம் ஏதோ சொல்ல வாய் எடுக்க
"எல்லாம் கடவுள் பார்த்துப்பார்"
என்றுவிட்டு ஜானகி கிளம்பிவிட்டார்.
 

Geetha sen

Well-Known Member
எட்டு வருட ஒருதலை காதல் பாவம் மது.அப்பா அப்போ அவ்ளோ பண்ணிட்டு இப்போ இவ்ளோ குதிக்குறாரே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top