அத்தியாயம்-1 (சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே)

Yaazhini madhumitha

Well-Known Member
அத்தியாயம்-1

சுட்டும் விழிச் சுடராய், சூரியன்
சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு மதியத்திற்கு மேற்பட்ட நேரம்!

மக்கள் போவதும் வருவதுமாக,
சிலர் தனக்கு வேண்டியவர்களுக்காக
ஆனந்தத்துடன் காத்திருக்க, சிலர் தன் அன்புக்குரியவர்களுக்குக் கனத்த மனதுடன் விடை கொடுக்க என்று பரபரப்புடன் இயங்கிக் கொண்டு இருந்தது கோயம்புத்தூர் விமான
நிலையம்.

விமான நிலையம் வந்ததில் இருந்து ஒரு இடத்தில் நிற்காமல், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சுந்தரமூர்த்தியைக் கண்டு அவருடைய மனைவி உமாமகேஸ்வரி மற்றும்
உடன் வந்த உமாமகேஸ்வரியுடைய
தங்கை மகன் வருண் ஒருவரை
ஒருவர் பார்த்து மௌனமாக
நகைத்தனர்.

"என்ன பெரியம்மா, பெரியப்பா காலை வாக்கிங் செல்ல மறந்துவிட்டாரா?" என்று உமாமகேஸ்வரியிடம் கேட்டுத்
தன் பெரியப்பாவை கேலி செய்ய ஆரம்பித்தான் வருண்.

"அதை ஏண்டா கேக்குற, இரண்டு நாட்களாக இரவும் சரியாகத்
தூங்கவில்லை. வீட்டில் எல்லா
வசதிகளும் உள்ளதா? ஏதாவது வாங்க வேண்டுமா? எல்லாம் சரியாக உள்ளதா? மது வந்த பிறகு அது இல்லை இது இல்லை என்று சொல்லிவிடாதே என்று பேசிப் பேசி நைநை-ன்னு நச்சரித்துவிட்டார் என்னை" என்று வருணிடம் புலம்பியபடிச் சிரித்தார் உமாமகேஸ்வரி.

அவர்கள் சிரிக்கும் போதே
சுந்தரமூர்த்தி அவர்கள் இருவரின் அருகில் வந்துவிட வருண் தன் பெரியம்மா சொன்னதைத் தன் பெரியப்பாவிடம் சொல்லி "அப்படியா பெரியப்பா?" என்று அங்கு இருந்த இருக்கையின் மேல் இருகைகளையும்
ஊன்றியபடி நின்றுக் கேட்டான்.

மனைவியை ஓரக்கண்ணால் பார்த்த சுந்தரமூர்த்தி "அப்போது என்னிடம் ஒரு வாரமாக அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டும் என்று யார் சொன்னது.. ஒரு வேளை உன்
பெரியம்மா மறந்துவிட்டாளோ" என்று யோசனை செய்வதுபோல் மனைவிக்கு ஒரு குட்டு வைத்து மகனைப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

ஏதோ சொல்ல உமாமகேஸ்வரி
வாயெடுக்க, அதற்குள் அவர்கள் மகள் மதுமிதா வரவிருக்கும் விமான அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. மூவரும் பேசிக்கொண்டிருந்ததை
மறந்து ஒருவித சந்தோஷமும்
ஆவலுமாக மதுமிதாவை
எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

மதுமிதா - 25 வயது நிரம்பிய பெண். சுந்தரமூர்த்தி உமாமகேஸ்வரி
தம்பதியருக்குப் பிறந்த ஒரே செல்ல மகள். முதல் வாரிசு அதுவும் பெண் பிள்ளை என்பதால் வீட்டில்
அனைவருக்கும் செல்லமாகிப்
போனாவள். பிடிவாதமானப் பெண்.. ஆர்ப்பாட்டம் செய்யும் பிடிவாதம் இல்லை.. அமைதியான அழுத்தமான
பிடிவாதம். அதே சமயம் தவறு
செய்தால் கண்டிப்பும் வீட்டில் உண்டு. படிப்பில் கெட்டிக்காரி. அதற்கு என்று படித்துக் கொண்டே இருக்காமல் அனைவரிடமும் கலகலப்பாக
பழகுபவள். கொஞ்சம் குறும்பானப் பெண்ணும் கூட. முழுதாக இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு தன்
முதுகலைப் பட்டப்படிப்பை
மருத்துவத்தில் முடித்து விட்டுத் தாய் நாடு திரும்பிகிறாள். அதற்குத் தான் அவளது தந்தை அத்தனை ஆர்ப்பாட்டம். மூவரையும் கண்டு ஓடி வந்து அப்பாவைக் கட்டிக்கொண்டாள்
மதுமிதா.

எப்போதுமே பெண் பிள்ளைகள்
அப்படித்தானே.. என்னதான் விழுந்து விழுந்து எல்லோரும் கவனித்தாலும் அப்பாவிற்கே முதல் உரிமை கொடுப்பார்கள். தந்தையர்களுக்கும் தன் பெண் குழந்தைகளை இரண்டாவது அன்னையாகவே கருதுவர்.

முழுதாக இரண்டு வருடம் கழித்து பார்த்த பூரிப்பில் மகளின் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டார்
சுந்தரமூர்த்தி. உமாமகேஸ்வரிக்குத் தான் கண்கள் கலங்கிவிட்டது.
"என்ன அம்மா நான் வந்தது அவ்வளவு துக்கமா இருக்கா?" என்று அவரின் தோளின் இருபுறமும் கை வைத்தபடி
கிண்டலாகக் கேட்டாள் மதுமிதா.

"ச்சு..போடி உனக்கு எப்போமே
கிண்டல்தான்" என்ற உமாமகேஸ்வரி சிரித்துவிட்டார்.

"ம்ம் இப்படி சிரிங்க" என்றபடி
தம்பியிடம் திரும்பியவள், "டேய்
வருண் என்னடா இப்படி வளந்துட்டே?" என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் போகும் போது பத்தாவது முடிவில் இருந்தான். அப்போது பார்த்ததுக்கு நெடுநெடு-ன்னு வளர்ந்திருந்தான் அவளின்
சகோதரன்.

"முழுசா இரண்டு வருஷம் கழிச்சு வந்துட்டு பேசரியா நீ" என்றபடி
தமக்கையின் முடியை பிடித்து
விளையாட்டாக இழுத்தான்.

இப்படியே விட்டால் இங்கேயே அக்காவும் தம்பியும் ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்த
சுந்தரமூர்த்தி "சரிசரி கிளம்பலாம் வாங்க" என்று கூற அனைவரும் ஆளுக்கு ஒரு பையை எடுத்துக் கொண்டு பேசியபடியே கார் பார்க்கிங்
ஐ நோக்கி நடந்தனர்.

கார் பார்க்கிங் சென்று லக்கேஜை கார் டிக்கியில் வைத்துவிட்டு வருணும்
உமாவும் பின்னால் ஏற மதுவும் சுந்தரமூர்த்தியும் முன்னால் ஏறி அமர்ந்தனர். காரை பொள்ளாச்சியை நோக்கி
ஓட்டினார் சுந்தரமூர்த்தி.

'பொருள் ஆட்சி', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று மாறியது. சோழர் காலத்தில் 'முடிகொண்ட சோழநல்லூர்' என்றும்
அழைக்கப்பட்ட ஊரே நமது
பொள்ளாச்சி.

தன்னையும் தன்னைச் சுற்றி
இருக்கும் சுற்றுலாத் தலங்களான ஆழியாறு.. ஆனைமலை.. வால்பாறை
என அழகில் குறைவில்லாமல்
அனைவரையும் கவரும் வளமை
உள்ள ஊர். இங்கு நடக்கும் மாட்டுச் சந்தை.. திரைப்பட படப்பிடிப்புகள்.. தென்னை பொருள் என அனைத்துக்கும் புகழ் பெற்ற ஊர் நம் பொள்ளாச்சி.

வழி முழுவதும் நால்வரும் ஒரே
கலகலப்பாக அரட்டை அடித்துக்
கொண்டே சென்றனர். வீடு செல்ல இரவு ஏழு ஆகிவிட்டது. கார் வரும் சத்தத்தைக் கேட்டு வீட்டு வாசலுக்கே வந்துவிட்டனர் உமாமகேஸ்வரியுடைய
தங்கை ராதா மற்றும் உமா
ராதாவுடைய பெற்றோரான சண்முகம்-ஈஸ்வரி தம்பதி.

காரில் இருந்து இறங்கிய மது, தாத்தா பாட்டியிடம் சென்று காலில் விழுந்து வணங்கி எழுந்துவிட்டு, சித்தியிடம்
சென்று அவரை கட்டிக்கொண்டாள். சித்தி என்றால் சின்ன வயதில்
இருந்தே தனிப் பிரியம் தான்
மதுமிதாவிற்கு.

"என்ன மது இப்படி மெலிஞ்சுட்ட?" என்று ராதா கேட்க, ஈஸ்வரி அம்மாவும்
ஆம் என்பது போல் தலை அசைத்தார். "அதான் இங்க வந்துட்டல பாட்டி இனி உங்க சாப்பாட்ல எல்லாம் சரி
ஆகிவிடும்" என்று கூறி கண்
சிமிட்டியவளை குளிர பார்த்தனர் அவளது தாத்தாவும் பாட்டியும்.

அனைவருக்கும் மதுவைக் கண்டதில் துள்ளி எழுந்தது போல இருந்தது. சண்முகம்-ஈஸ்வரி தம்பதியருக்கோ பத்து வயது குறைந்தது போல
இருந்தது. அவ்வளவு குஷியாகவும் சுறுசுறுப்பாகவும் திரிந்தனர்.

"சித்தப்பா எங்கே சித்தி?" என்று
வீட்டினுள் நுழைய ராதாவிடம்
கேட்டாள் மது.

"அவர் கோவையில் உள்ள நம்ம
கார்மெண்ட்ஸிற்கு சென்றிருக்கிறார் மது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்" என்றுரைத்தவர் "நீ உன் அறைக்குச் சென்று குளித்து விட்டு வா மது" என்று மேலே உள்ள அவள் அறைக்கு மதுவை அனுப்பி வைத்தார் ராதா.

அவள் துணி இருந்த பேக் ஐ மட்டும் எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் தனது ஜீன்ஸையும் சர்டையும்
அகற்றினாள். குளித்து விட்டுக் கீழே வர, அவள் சித்தப்பா திருமுருகன் வரவும் சரியாக இருந்தது.

"இரண்டு வருடம் கழித்து படிப்பை முடித்துக்கொண்டு வீடு வந்த என் மதுக்குட்டிக்கு சித்தாப்பாவின் ஒரு சின்ன பரிசு" என்று ஒரு பெட்டியை
மதுவிடம் தந்தார்.

"தேங்க்யூ சித்தப்பா" என்றபடி பரிசைப் பிரித்தாள். உள்ளே அழகாக ஒரு ப்ரேஸ்லெட் (bracelet) இருந்தது. எடுத்துக் கையில் மாட்டி "ரொம்ப
அழகா இருக்கு சித்தப்பா" என்றாள். எல்லாருக்கும் சென்று காட்டிக் கொண்டு வந்தவள் தம்பியைச் சீண்டுவதற்காகவே அவனிடம் சென்று கையை காண்பித்து புருவத்தை உயர்த்தினாள்.

வருணோ "எனக்கு?" என்று
அப்பாவிடம் பாய்ந்தான்.

"அதான் போன வாரம் லேப்டாப்
வாங்கித் தந்தேனே" என்று
திருமுருகன் சீண்ட, மதுவோ தம்பியை வெருப்பேற்றுவது போல கண்களை உருட்டிச் சிரித்தாள்.

அதற்குள் அங்கு வந்த ராதா
அனைவரையும் சாப்பிட அழைக்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு அனைவருக்கும் வாங்கி வந்து இருந்த பொருட்களை எடுத்துக் கொடுத்தாள் மது. பிறகு எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் சென்றபின் "அடுத்து என்ன ப்ளான் மதுமா" என வினவினார் திருமுருகன்.

"கோயம்புத்தூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல ஜாய்ன் பண்ணலாமனு இருக்கேன்
சித்தப்பா.. இன்டர்வியூக்கு
கேட்டுட்டேன் அல்ரெடி" என்று
கூறினாள் அறிவிப்பாக. அந்த வீட்டில் பொதுவாக எந்த ஒரு தேவையில்லாத அடக்குமுறை கட்டுப்பாடு எதுவும் இளசுகளுக்கு இல்லை.. எடுத்த
முடிவும் பாதையும் சரி என்றால்
அவர்களே துணை நிற்பர்.

ஆனால் ஏதோ சொல்ல வாயெடுத்த உமாமகேஸ்வரி கணவரின் பார்வையைக் கண்டு எதுவும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் பேசிச் சிரித்துவிட்டு அனைவரும்
அவரவர் அறைக்குச் புகுந்துவிட்டனர்.

அறைக்குள் நுழைந்து படுக்கையில் விழுந்த மதுவிற்கு பழைய நினைவுகள் வந்து அலக்கடித்தன. திரும்பித் திரும்பிப் படுத்தவளால்
உறங்க முடியவில்லை.. மனதை
வேதனைப்படுத்தவே பழைய
நினைவுகளுக்குக் கூட்டிச் சென்றது மூளை.

எழுந்து அமர்ந்து மனதை ஒரு
நிலைக்குக் கொண்டு வந்தவள் சிறிது நேரம் புத்தகம் ஒன்றைப் படித்துவிட்டு மீண்டும் உறங்க முயன்று அன்றைய அலுப்பில் உறங்கியும் போனாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சின்னஞ்சிறு
சின்னஞ்சிறு ரகசியம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யாழினி மதுமிதா டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top