Advertisement

அத்தியாயம் அறுபத்தி ஐந்து :

நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே!

அப்போதைக்கு தன்னுடைய மிகப் பெரிய கடமையாய் நினைத்த பணம் திருப்பிக் கொடுத்தல் மறுநாள் நிறைவேறப் போவதால் சற்று உற்சாகத்துடன் இருந்த ஈஸ்வர்… இரவு உணவை முடித்து வந்த பிறகும் வர்ஷினியின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான்.  

அவன் எப்பொழுதும் போல இருந்திருந்தாலாவது வர்ஷினிக்கு ஒன்றும் தெரிவித்து இருக்காது. இப்போது இழையவும் அது ஒரு கோபத்தை எரிச்சலை கொடுத்தது. “உங்க லேப் அங்க இருக்கு மறந்துட்டீங்களா” என வர்ஷினி கேட்க.. 

“இல்லையே, மறக்கலையே” என்று புன்னகை முகத்தோடே தான் ஈஸ்வர் பதில் கொடுத்தான்.

“அப்போ வேலை இருந்தா என்னை மறந்துடுவீங்க, அது முடிஞ்சா தான் என் ஞாபகம் வருமா?” என்று முறுக்கிக் கொண்டு செல்ல.. முதலில் அவளின் பேச்சை விளையாட்டாய் எடுத்தவன், பின் முகத்தில் இருந்த தீவிர தன்மையை பார்த்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.  

“ஹேய் வர்ஷ், நம்ம என்ன மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல இருந்தோம், பணத்தை திரும்பக் கொடுக்கணும் இல்லையா அந்த டென்ஷன்.. அதை விட்டுடு” என மிகவும் தன்மையாகக் கேட்க..

“அதெல்லாம் விட முடியாது” என்று சொல்லிச் செல்ல.. “அதெல்லாம் விட்டுத் தான் ஆகணும்” என்று ஈஸ்வர் சொல்ல,

“முடியாது” என்று நகர இருந்தவளை.. நகர விடாமல் கை பற்றியவன்.. பின்பு இடையையும் பற்றி நிறுத்த..

“விடுங்க” என, “விடமுடியாது” என.. இப்படியாக சில நேரம் பேசும் போதே ஈஸ்வரின் கைகள் அத்து மீற, ஈஸ்வர் இன்னும் வர்ஷினியின் தீவிர தன்மையை புரிந்து கொள்ளவில்லை. 

“உங்களுக்கு தேவைன்னா வருவீங்க, இல்லைன்னா திரும்பிக் கூட பார்க்க மாட்டீங்க” என வெறுப்பான குரலில் பேச, அதுவரை விளையாட்டு போல இருந்த சூழல் இறுக்கமாக மாறியது.

“என்ன திரும்பிப் பார்க்கலை? நம்ம ஒரே வீட்ல தான் இருக்கோம் வர்ஷ்” என,

“எனக்கு அப்படி தான் தோணுது, இப்போ என்னை விடறீங்களா” என்றவளின் குரலில் இறுக்கம்..

“வர்ஷ் பேபி, என்ன இது?” என சமாதானம் பேச ஈஸ்வர் முயற்சிக்க,

“எனக்கு உங்களை தள்ளிட்டு போற அளவுக்கு ஸ்ட்ரெந்த் கிடையாது, நீங்களே என்னை விடுங்க” என ஸ்திரமாகப் பேச,

“வர்ஷ், கணவன் மனைவினா கொஞ்சிக்கிட்டே இருக்க மாட்டாங்க, சண்டை வரும், அதுக்காக சமாதானம் ஆகாம இருப்பாங்களா?” என,

“நம்ம எப்போ சண்டை போட்டோம்? சண்டை போடலையே?” என்றாள்.

“அப்போ ஏன் என்னைப் பக்கத்துல விட மாட்டேங்கற” என்றான் நேரடியாக.

“பிடிக்கலை” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

“அதுதான் ஏன்? ஏன் பிடிக்காமப் போச்சு?” என்று ஈஸ்வரும் விடாது கேட்டான்.

“நான்.. எனக்கு.. ஐ ஃபீல் லைக்..” என்று தீவிரமாக ஏதோ பேச ஆரம்பித்தவள், “விடுங்க” என்று திடீரென்று கத்த..

அவள் கத்தியதிலேயே விட்டவன், “என்ன?” என்றான் பதட்டமாக.. 

கத்தியதற்கு நேர் மாறாக சுதாரித்து இருந்தவள், “எனக்கு தூக்கம் வருது, தூங்கணும்” என்றாள் அவன் முகம் பார்த்து, அவன் கண்கள் பார்த்து.. அவளின் பார்வையின் தீவிரம் அச்சுறுத்த, “என்ன பேபி, என்ன? சொன்னாதானேடா தெரியும்!” என்றான் கனிவாக.  

எதுவும் பேசாமல் ஒரு பார்வை பார்த்தவாரே சென்று படுத்துக் கொண்டாள்.. ஈஸ்வரை குற்றம் சாட்டும் பார்வை. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பயம் ஈஸ்வரின் மனதில், ஏன் என்று தெரியவில்லை..

அருகில் சென்று படுத்துக் கொண்டவன், அவளை அணைத்துப் படுத்தான். கைகளை விலக்க வர்ஷினி முயன்றாலும் முடியவில்லை “எடுங்க” என,

“அதெல்லாம் எடுக்க முடியாது, அப்படியே படு” என்றான் அதட்டலாக, அது சற்று வேலை செய்ய.. அப்படியே உறங்கி விட்டாள். ஆனால் ஈஸ்வரால் முடியவில்லை.. அவளை இறுக்க அணைத்துக்கொண்டே இருந்தான்.. உறங்கவேயில்லை..

வர்ஷினியின் பார்வை என்ன சொன்னது என்று புரியவில்லை, ஆனால் அதில் அப்பட்டமான ஒரு குற்றச் சாட்டு. என்னவோ அவனுக்கே தப்பு செய்து விட்டதாக எண்ணம் எப்போதையும் விட அதிகமாக தாக்கியது. ஆம்! மூன்று மாதங்கள் விலகி இருந்தது, பிறகு இந்த மூன்று மாதமாக முயன்றும் சேர முடியவில்லை, அருகில் விடவேயில்லை..

“உன்னைப் பிடிக்கவில்லை” என்ற அவளின் வார்த்தைக்கு பிறகு.. அவள் மட்டுமே முக்கிய கவனமாகிப் போன போதும் மனதாலும் நெருங்க முடியவில்லை, உடலாலும் நெருங்க முடியவில்லை. 

அது எல்லாம் கூட இப்போது பெரிய விஷயமில்லை… தன்னை தானே அவள் தனிமைப் படுத்திக் கொள்வதாக ஒரு எண்ணம் ஈஸ்வருக்குள் தோன்றியது.  

எப்படி சரி செய்வது என்று தெரியவேயில்லை.    

காலையில் வர்ஷினி எழுந்ததும் “இன்னைக்கு உங்க அப்பா வீட்டுக்குப் போறோம், நீயும் வா வர்ஷி” என,

“இல்லை, நான் வரலை” என்றாள் எடுத்த எடுப்பிலேயே..

“உறவுகள்னா சரி சரின்னு தான் போகணும் வர்ஷ்.. இப்படி கோபத்தை இழுத்துப் பிடிக்கக்கூடாது. கமலம்மாவை கன்சிடர் பண்ணு.. உங்கப்பா மாதிரி ஒருத்தர் கூட இருந்திருக்காங்க.. அவருக்காக தான்னாலும் உன்னை நல்லா பார்த்தாங்க, அதை நீ மறக்கக் கூடாது” என,

அப்போதும் அசையாமல் நிற்க..

“யோசிச்சுப் பார், நான் யார் பின்னாலையும் போனா நீ விட்டுடுவியா?” என உதாரணம் சொல்ல,

அவ்வளவு தான் அசையாமல் நின்றிருந்தவள் சட்டென்று முன்னேறி விரல் நீட்டி, “கொன்னுடுவேன்” என அவ்வளவு கோபமாகச் சொல்ல,

அவளின் கண்களை நேர் பார்வை பார்த்தவன் “கொல்ற அவசியம் உனக்கு எப்பவுமே வராது” என,

“வருது, வரலைன்றது வேற. இந்த பேச்சுக் கூட இருக்கக் கூடாது.. உயிரில்லாதது இந்த சொத்து. அதுவே என்னோட உரிமை, யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு சொல்றேன்.. நீங்க உயிரோட இருக்குற ஒரு பொருள், அதை கொடுத்துடுவேனா.. எனக்கு பிடிச்சிருக்கு பிடிக்கலை அது வேற.. ஆனா விட்டுக் கொடுக்க முடியாது.. அதனால லூசு மாதிரி இந்த வார்த்தை பேசக் கூடாது” என,

பேசப் பேசப் வாயடைத்து போனான்.. இப்படி ஒரு பரிமாணம் வர்ஷினியிடம் எதிர்பாராக்கவில்லை.

“அண்ட் என்ன பெருமை உனக்கு? என்னை கொல்ற அவசியம் வராதுன்னு. யார் பின்னாடியும் போக மாட்டேன்னு சொல்லி என்ன ப்ரூவ் பண்ண பார்க்கறீங்க? இது என்ன பெருமையா?” என்றாள் ஆவேசமாக.  

“நான் யார் பின்னாடியும் போறேனான்னு உங்க கிட்ட சொன்னா எப்படி இருக்கும்? ஒரு வேளை நான் போகமாட்டேன்னு சொல்லணும்னு நினைக்கறீங்களோ? என்னையும் எங்க அம்மா மாதிரி நினைக்கறீங்களோ?” என,   

மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.. “ஏன் இப்படி தப்பு தப்பாக யோசிக்கிறாள்” என்று மனது வலித்தது. அவளின் அம்மாவை அவள் இழுப்பது எந்த வகையிலும் பிடித்தமில்லை.. இந்த மாதிரியான பேச்சுக்கள் வருவது கூட அவனுக்கு விருப்பமில்லை..

“சாரி, இதை விட்டுடு, இதைப் பத்தி நம்ம பேச வேண்டாம். அண்ட் நான் இப்படி மீன் பண்ணலை” என்று ஏறக் குறைய சரண்டர் தான் ஆகினான்.

“போடி” என்றெல்லாம் சொல்ல மனதில்லை, கோபப்படவும் முடியவில்லை.. ஐயோ என்றானது மனது! ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் நிச்சயமானது இவள் நிறைய நிறைய யோசிக்கின்றாள் என   

அவன் மண்டியிட்டதும் அவளும் நொடியும் தாமதிக்காது அவன் போலவே எதிரில் அமர்ந்து அவன் முகம் பார்க்க.. அதிலிருந்த தீவிரம் பார்த்து, வாழ்க்கையைப் பற்றின பயம் முதல் முறையாக ஈஸ்வருக்கு எழுந்தது.    

ஆனாலும் ஒன்றும் நடவாதது போல, “வர்றியா? போகலாமா?” என ஈஸ்வர் தணிந்தே கேட்க,

வர்ஷினியின் முகம் சற்று சரியானாலும் “வரமாட்டேன், வரலை!” தன் பிடியிலேயே தான் நின்றாள்.

மிகவும் முக்கியமான நாள் என்பதால் அவளோடு இன்னும் வாதம் செய்யாமல், “யோசி வர்ஷ்” என்று அவன் கிளம்பினான். அப்போதும் “சரி, அங்க அம்மா வீட்ல இரு” என,

“என்ன அதிசயமா அங்க போறீங்க?”  

“அது நம்ம வீடு வர்ஷ்” என,

“அப்போ எதுக்கு வெளில வந்தீங்க?”

“ஒரு கோபம் வந்தேன்” என்றான் பொறுமையாகவே.

“பத்து பதினைஞ்சு நாள்ல கூட்டிட்டு வந்துட்டீங்க, இப்போ அங்க போய் இரு சொன்னா.. எனக்கு அன்ஈசியா இருக்காதா? நீங்க இருந்தா இருக்கேன், நீங்க இல்லாதப்ப என்னை விட்டுட்டு போகக் கூடாது” என்றாள் கறாராக.

“அம்மாடி, இனி இவளை யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது” என அந்தக் க்ஷணம் ஒரு புதிய பிரமாணமே எடுத்துக் கொண்டான் ஈஸ்வர் என்றால் அது மிகையில்லை. ஆனால் அது காலம் கடந்த பிரமாணம் என்றறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கூடவே முன்பு காதல் சொன்னதைப் பற்றி சொல்லவும் எடுத்த முடிவு பின் போனது.. “வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! அவள் சரியாகட்டும்” என தான் தோன்றியது.

ஆம்! என்னவோ அவள் இயல்பிலேயே இல்லை என்பது போலத் தோன்ற, அவளை சரி செய்ய நினைத்தான். அதுதான் அவளின் இயல்பு என்பது புரியவேயில்லை.        

“இன்னைக்கு லீவ் தானே, சரண் பிரணவி எல்லோரும் அங்கே இருப்பாங்க. உனக்கு டைம் போகும். இங்க தனியா உட்கார்ந்து என்ன பண்ணுவ?”

“ஓஹ், அது இத்தனை நாளா தெரியலையா?” என அலட்சியமாகக் கேட்க..  

என்ன பேசுவது என்றே தெரியவில்லை.. ஸ்தம்பித்தவன்..

வேகமாக வர்ஷினியின் கையை பிடித்துக் கொண்டு.. “உனக்கு கோபமா இருந்தா என்னை அடிச்சிக்கோ, இல்லை எதையாவது போட்டு கூட உடை.. ஆனா இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் மனசுல போட்டு குழப்பிக்காதே, என்னவோ எனக்கு ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கு.. இன்னும் என்ன குழப்பிக்கிட்டு இருக்கே!”

“நான் சரியா செஞ்சேன், அதை நீ தப்பா எடுத்துக்கிட்டேன்னு எல்லாம் நான் சொல்லலை. நான் தப்பாக் கூட இருக்கலாம். உடனே சொல்லு.. நீ தப்பு பண்றேன்னு சொல்லு.. என்ன வேணும்னாலும் கேளு.. தனியா ஃபீல் பண்ணினா அடுத்த நிமிஷம் வாடான்னு எனக்கு கால் பண்ணு” என உணர்வு பூர்வமாக சரியாக நடந்து கொள்ளாமல் விட்டு விட்டோமோ அவளை பாராமல் விட்டு விட்டோமோ என தவித்துப் பேசினான்.  

அதன் பிரதிபலிப்பு எதுவும் இல்லாமல் “சரி” என்று இயந்தரத்தனமாய் அடுத்த நிமிஷம் கையை விலக்கிக் கொண்டாள்.

“வர்ஷ்” என்று அவளையே பார்த்தபடி ஈஸ்வர் நிற்க.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

“வர்ஷ், என்ன பிஹேவியர் இது?”  

“இது தான் என் பிஹேவியர். இனி எல்லாம் என் இஷ்டம் தான். நீங்க சொல்றதைக் கேட்கணும்னு, எனக்கு எந்த அவசியமுமில்லை. நான் உங்களுக்கு ஒரு சேன்ஸ் கொடுத்தேன் என் லைஃப்ல. பட் ஐ அம் நாட் ஹேப்பி வித் இட்!”

“அப்படி எனக்கு சந்தோஷமில்லாம நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும், செய்யணும். இனிமே எல்லாம் என் இஷ்டம் தான். நீங்க ஏன் என்னை கஷ்டப்படுத்தணும். அந்த வேலையை நானே செஞ்சிக்கறேன்” என்று சொல்லிப் போக..

அந்த குரலில் இருந்த ஒரு அலட்சியம் ஈஸ்வருக்குள் ஒரு அமைதியின்மையைக் கொடுத்தது. இவளை சரி செய்ய முடியுமா என்ற சந்தேகத்தையே கொடுத்தது!

மனது முழுவதும் சஞ்சலம்! ஆனால் அப்போது வர்ஷினியிடம் விளக்கம் கூற முடியவில்லை. ஏனென்றால் அவனுக்கே என்ன செய்வது என்று விளங்கவேயில்லையே. 

அந்த சூழலில் தனியே விட மனதில்லாமல் அப்பாவையும் ஜகனையும் அங்கே வரச் சொன்னவன், கூட மலரையும் குழந்தைகளையும் வரச் சொல்லி, அவர்களை அங்கே விட்டு ஆண்கள் மூவரும் ரஞ்சனியின் வீட்டிற்கு கிளம்பினர்.   

அவ்வளவு சிரமப்பட்டு பணத்தை திரும்பக் கொடுக்கப் போகிறோம் என்ற உற்சாகம் சற்றுமில்லை.. அங்கே பத்துவின் வீடு சென்றான்.. முன்பே முரளியிடம் சொல்லியிருந்தான். அதனால் தாத்தா முதற் கொண்டு எல்லோரும் இருந்தனர்.

ரஞ்சனி ஹாஸ்பிடல் கிளம்பி கீழே இறங்கும் போது தான் முரளி, “ஈஸ்வர் வர்றேன்னு சொல்லியிருக்கான், நீ ஹாஸ்பிடல் போகணுமா?” என..

“எதுக்கு முரளிண்ணா விஸ்வா வர்றான்” என ஆர்வமாய் கேட்டாள்.

“பணம் திரும்பக் குடுப்பான்னு நினைக்கிறேன்”  

“எப்படி முரளிண்ணா அவ்வளவு பணம் முடியும்” என்றாள் கவலையாக.  

“தெரியலை ரஞ்சனி.. பணம் விஷயம் இப்போல்லாம் அவன் என்கிட்டே பேசறது இல்லை” என,

எல்லாம் மௌனப் பார்வையாளராக பத்து பார்த்து தான் இருந்தான்.. இப்போதெல்லாம் எதுவுமே யாரிடமும் பேசுவது இல்லை அவன்.

கமலம்மா “வர்ஷினியும் வர்றாளா?” என ஆவலாகக் கேட்க,

“தெரியலை ம்மா.. கூட்டிட்டு வாடான்னு தான் சொன்னேன்.. இது அஃபீஷியல் விசிட்ன்னு சொல்றான்”  

தன் ஆறு மாதக் குழந்தைக்கு இட்லியை நன்கு மசித்து ஊட்டிக் கொண்டிருந்த ஷாலினி, “அவ வரமாட்டேன்னு சொல்லியிருப்பா, அதனால அண்ணா அப்படி சொல்லியிருப்பாங்க” என சரியாகச் சொல்ல..

மொத்த வீடுமே அப்படியோ கவலையில் ஆழ்ந்தது.. தாத்தாவிற்கு கூட சிறிது கவலையாக இருந்தது.. அவருக்கு அவரின் பேரன்களுக்கு தான் எல்லா உரிமையும் இருக்க வேண்டும் அவ்வளவே, மற்றபடி வர்ஷினி நன்றாக இருக்கக் கூடாது என்று என்றுமே நினைத்தது இல்லையே..

அவர் சற்று கடுமையாகப் பேசியது கூட ஈஸ்வரின் மனைவியாகிவிட்டாள், இனி என்ன கவலை அவளுக்கு என தான். இப்படி கோபத்தை இழுத்துப் பிடித்து வீட்டிற்கு கூட வரமாட்டாள் என்று நினைக்கவில்லை..

நமஷிவாயமும் ஜகனும் வர, “வாங்க, வாங்க” என்றழைத்த தாத்தா “எங்கே எங்க வீட்டுப் பொண்ணு” என,

பின்னே வந்த ஈஸ்வர்.. அதை கவனித்தாலும் எதுவும் பதில் சொல்லவில்லை.. நமஷிவாயம் தான் “தொழில் விஷயமா போறோம்னு யாரையும் கூட்டிட்டு வரலை. மலர் கூட ரஞ்சனியைப் பார்க்கணும் கேட்டா, எங்கம்மா கூட.. நான் தான் யாரும் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றார்.

அவர் நிஜத்தை தான் சொன்னார்.. 

ஈஸ்வர் தாத்தாவிடம் மரியாதை நிமித்தம் ஒரு தலையசைப்பு, ஒரு சிரிப்பு, வேறு எதுவும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.. அவனின் மனைவிக்கு வருத்தம் கொடுக்கும் ஒருவர் என்றுமே அவனுக்கு தேவையில்லை.

எல்லோரும் ரஞ்சனியைத் தான் பார்த்தனர்… அவளின் முகத்தில் அமைதியான புன்னகையைப் பார்க்கவும் தான் மேலே பேசவே ஆரம்பித்தனர்.

பத்து தான் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்ப்பது.. அதனைக் கொண்டு பத்துவிடம் ஈஸ்வர் பேச ஆரம்பிக்க.. “நீங்க முரளி கிட்ட பேசிடுங்க” என்றான்.

“முரளி கிட்ட  பேசணும்னா நான் இங்க வரணும்னு இல்லை.. அவனை அங்கே வரச் சொல்லியிருப்பேன். உன்கிட்ட பேசணும், அதான் வந்தேன். எனக்குத் தெரியும், கணக்கு வழக்கு எல்லாம் நீதான் பார்க்கற” என,           

“ஏன்? நீங்க கூப்பிட்டா நான் வரமாட்டேனா?” என பத்து பேச,

“முரளின்னா என்னோட நண்பன், கூப்பிடலாம். ஆனா நீ எங்க வீட்டு மாப்பிள்ளை, அப்படி கூப்பிட எங்க வீட்ல இருக்குறவங்க விரும்ப மாட்டாங்க.. எனக்கு மரியாதை குறைஞ்சாலும் உனக்கு மரியாதை குறைய விட மாட்டாங்க” என்றான்.

“விஸ்வா” என நமஷிவாயம் ஒரு அதட்டல் போட,

“உண்மையை தானே சொன்னேன்” என்றான் அவரையும் பார்த்து. பத்துவின் முகம் சுருங்கி விட, அதை பார்த்திருந்த ரஞ்சனிக்கு மனம் சுருங்கியது.

பின்னே ஈஸ்வரின் வீடு சென்று மன்னிப்பு கேட்டது தெரியும், முரளி சொல்லியிருந்தான்.. இங்கேயும் அவன் சுமுகமாக பேச முற்பட ஈஸ்வர் இப்படிப் பேசியதும் ரஞ்சனிக்கு பிடிக்கவில்லை.  

பத்து செய்தது தவறு தான் அதற்காக அவனை விட்டுக் கொடுக்க முடியாதே!  

ஒரு கணமான சூழல், யாரும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க, “நீ முதல்ல எங்க வீட்டு குட்டியை பார்” என்று ஷாலினி கையினில் இருந்த குழந்தையை ரஞ்சனி வாங்கி வந்து ஈஸ்வரிடம் கொடுத்தாள்.

“ரஞ்சி, பேம்பர்ஸ் போடலை, அண்ணாவை ஈரமாகிடப் போறான்” என ஷாலினி சொல்ல..

“அப்போவாவது எங்கண்ணன் கூல் ஆகறானா பார்ப்போம்” என ரஞ்சனி பேச..

“அப்போ சரி பேம்பர்ஸ் வேண்டவே வேண்டாம்!” என ஷாலினி பேச சூழல் சிறிது லகுவாகியது..    

அதிலும் ரஞ்சனி ஈஸ்வரிடம் மெதுவாக “நான் மட்டும் தான் லைசன்ஸ் வெச்சிருக்கேன், உனக்கெல்லாம் கொடுக்க முடியாது” என,

ரஞ்சனி பேசுவது புரிந்தாலும், அவள் பேசுவதால் பதிலுக்கு பேச வேண்டி “எதுக்கு” என்றான் புரியாதவன் போல..    

“அதுதான் என் வீட்டுக்காரரை டார்ச்சர் பண்றதுக்கு. சும்மா மிரட்டிட்டே இருப்பியா? ஊருக்குள்ள நீ மட்டும் தான் ரௌடியா? நாங்க எல்லாம் ஆகக் கூடாதா?” எனப் பேச, கிண்டலாக பேசினாலும் கண்களில் ஒரு கண்டிப்பை காட்டினாள்.

“சரி, நீங்களே ரௌடியா இருந்துக்கோங்க! நான் என் போஸ்டை விட்டுக் கொடுத்துடறேன்!” என்றான் இலகுவாக.

“அது!” என ரஞ்சனி பேச, அண்ணன் தங்கை இருவர் முகத்திலுமே புன்னகை..

அவர்கள் புன்னகைத்தாலும் வர்ஷினி ஆத்மார்த்தமான புன்னகையைத் தொலைத்து பல நாட்கள் ஆகியிருந்தது.

அங்கே குழந்தைகளோடு சரிக்கு சமமாக வர்ஷினி விளையாடிக் கொண்டிருக்க… அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு மலர் சமைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் வர்ஷினி இயல்பில் இல்லை.. கூடாது என்று இல்லை, முடியவில்லை.. ஈஸ்வருக்கு சண்டை போடுவதும் பின்பு உறவுகளை கருத்தில் கொண்டு சமாதானமாகப் போவதுமாக இருக்க.. உறவுகளோடு வளர்ந்திராத  வர்ஷினியால் அது முடியவில்லை..

உறவினர்களை விட்டுவிட்டாலும், கணவனுடன் கூட முடியவில்லை.. மனதில் வேண்டுமென்றால் வருகிறான், வேண்டாவிட்டால் விட்டு விடுகின்றான். தேவையென்றால் பேசுகின்றான், தேவையில்லை என்றால் பேசுவது இல்லை. வேலை இருந்தால் என்னை கவனிக்க முடியாதா? அப்போது வேலை தான் முக்கியமா, நான் இல்லையா?” என்ற எண்ணம் தான் அப்போது ஸ்திரமாக இருந்தது.

அதையும் விட “என்னை, எனக்காக மட்டும் நேசிக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று தானே இவனிடம் தெளிவாக சொல்லியிருந்தேன்” என ஒரு கோபம் கனன்று கொண்டே தான் இருந்தது. ஈஸ்வரிடம் அவ்வளவு பேசினாலும் மனது ஆறவில்லை.  

உண்மையில் விஸ்வேஸ்வரன் என்ற மனிதன், பிறந்ததிலிருந்து அந்தஸ்து மட்டுமல்ல, பாரம்பரியம், மரியாதை, பழக்க வழக்கம் என்று அத்தனையும் பார்க்கும் கர்வமான மனிதன்.

இது எதுவும் இல்லாத வர்ஷினியை, அவளை, அவளுக்காக மட்டுமே நேசிக்கின்றான்.. காமமா? காதலா? என்று தெரியாத நிலையிலிருந்தவன்.. இப்போது காமத்திலிருந்து விலகி, காதலுக்குள் நுழைந்து.. நெஞ்சம் முழுவதும் நேசம் மட்டுமே கொண்டிருக்கின்றான்.

ஆனால் சமயத்தில் அதை புரிய வைக்க தவறி விட்டான்.. வர்ஷினிக்கும் ஈஸ்வரைப் போல ஒரு அதீத காதல் இருந்திருந்தால், அவனை புரிந்து கொள்ளவும் அவனின் செய்கையை மன்னிக்கவும் முடிந்திருக்கும். ஈஸ்வரை புரியாமல் இல்லை, ஆனால் அது காதல் கொண்ட மனதாக புரிந்து கொள்ளவில்லை.

திருமணம் செய்து கொண்டு அவளின் வாழ்க்கையை ஈஸ்வரிடம்.. தனக்கு என்ன தேவை என்று தெளிவாகச் சொல்லி ஒப்படைத்து இருக்கும் பெண். அதனால் ஈஸ்வரின் செய்கைகளை ஒப்புக் கொள்ள முடியவில்லை.. 

புரிந்தாலும் இது எனக்குத் தேவையில்லை என்ற மனநிலைக்கு தானாகவே வர்ஷினியை தள்ளியும் விட்டு விட்டான். அவளின் வீட்டு உறவுகளிடமும் விலகி தான் விட்டாள்.              

உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை வர்ஷினி காப்பாற்றி விட்டாள், ஆனால் வர்ஷினி ?

மலர் அவளிடம் “வா வர்ஷி, வந்து சாப்பிடு” என,

“இல்லை அத்தை, நீங்க வெச்சிடுங்க. நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன், சரண்க்கும் ப்ரணவிக்கும் பசிக்குது போல.. நீங்க அவங்களைப் பாருங்க, நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லியவள், அவரிடம் வேறு பேசவே இல்லை.

குழந்தைகளோடு அமர்ந்து கார்டூன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரிடம் தானாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவர் சமைக்கும் போதும் அருகில் வரவில்லை..   

அவராக ஏதாவது பேசினாலும் “ம்ம், சரி, இல்லை, தெரியாது” என்ற பதில் தான். மலர் நொந்து போய் விட்டார்.. எப்படி தன்னிடம் பேசியிருந்த பெண் இப்போது மாறி நடப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

அவருடைய மருமகள் ஆனால் யாரோ போல தான் நடக்கின்றாள்.. இங்கே வந்த புதிதில் கூட இப்படி இல்லை. கைபேசியில் எதுவென்றாலும் அழைத்து பேசும் பெண்.. இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லை. அழைத்தாலும் எப்போதாவது தான் எடுக்கின்றாள்.

“எப்படி இவர்கள் குடும்பம் நடத்தப் போகிறார்கள்” என்ற பயம் வந்தது. திருமண வாழ்க்கையின் அடிப்படை அங்கே அவருக்கு தெரியவில்லை. நாளை இவளுக்கு ஒரு குழந்தை வந்து அதை எப்படி வளர்ப்பாள்.. அவர் வர்ஷினியை கவனித்த வரை எதிலும் பற்று இருப்பது போலவே அவருக்கு தோன்றவில்லை.

ஒரு உயிர்ப்பு, ஒரு துடிப்பு இல்லை.. அவரின் பார்வைக்கு வர்ஷினி மந்தமாக தோன்றினாள்.. பெண்கள் என்றால் சுறுசுறுப்பாக அங்கே இங்கே திரிய வேண்டாமா.. அமர்ந்தது அமர்ந்த படி இருந்தாள், யோசனைக்குப் போய் விடுகின்றாள், சுற்றுப் புறம் கவனிப்பது இல்லை. அங்கே எதிலுமே ஒரு ஒழுங்கற்ற தன்மை தான் அவருக்கு தெரிந்தது.

தன் மகளாக இருந்தால் செய்ய மாட்டோமா என எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். இந்த விஸ்வா என்ன செய்கிறான் என்று அவன் மீதும் கோபமாக வந்தது. விஸ்வா அவரின் பெண்ணை நினைத்து இந்தப் பெண்ணை விட்டு விட்டான் என்பது தான் நிஜம். ரஞ்சனியின் வாழ்க்கைக்காக பணத்தின் பின் ஓடி இவளை தனிமைப் படுத்தி தானே இந்த முற்றிய நிலை. 

என்ன தான் யோசனைகள் ஓடினாலும், குழந்தைகளுக்கு மலர் உணவு கொடுத்து.. அவர்கள் உண்டவுடன் அவர்களை தூங்க வைக்க..

“நான் தூங்க வைக்கிறேன்” என்று அழைத்துப் போனவள், அவர்களை உறங்க வைக்க..

“உனக்கு பிடிச்சதா சமைச்சு இருக்கேன் வர்ஷினி, நீ சாப்பிட்டிடு, அவங்க எப்போ வர்றாங்களோ?” என,

“தினமும் எனக்கு பிடிச்சதா குடுக்கறீங்க, அப்புறம் இப்போ மட்டும் என்ன?” என்றவள் சாப்பிடாமல் அப்படியே உறங்க..

“என்ன பேச்சு இது” என்று அப்படியே அமர்ந்து விட்டார்.

அப்போதும் “நீ வேணும்னு கேட்டா நான் கொடுத்து இருப்பேனே” என,

“அது என்ன ஹோட்டலா, நான் வேணும்ங்கறதை கேட்டு சாப்பிட” என்றாள். வர்ஷினி வாழ்க்கையின் மேல் இருந்த கோபத்தை அவரிடம் காட்டினாள். அவளின் மனதில் உள்ள ஒரு ஆற்றாமை, ஒரு வெறுப்பு எல்லாம் முன்னுக்கு பின் அவளை பேச வைத்தது.

“வர்ஷினி, என்ன பேசற? அது உன் வீடு!” என,

“வீடா? அது வீடுன்னா அப்போ ஏன் இங்க கூட்டிட்டு வந்தாங்க? எல்லோரும் அவங்க அவங்க இஷ்டம் தான் செய்றீங்க. என்னை யார் கேட்கறீங்க? இதுவும் எனக்கு இன்னொரு ஹாஸ்டல் தான்! வேளாவேளைக்கு சாப்பாடு வருது, சாப்பிடறேன்! தூங்கறேன்!” என தன்னை மீறி ஆதங்கத்தில் கூறியவள்..  என்னவோ அவரிடம் ஒட்டவும் முடியாமல், தன்னுடைய செய்கை தனக்கே பிடிக்காமல்…

சட்டென்று பேச்சை நிறுத்தி “நானும் இவங்களோட தூங்கறேன்” என்று படுத்துக் கொண்டாள். 

வீட்டினர் வரும் வரை அப்படியே அமர்ந்திருந்தார்.. ஜகன் வீட்டிற்கு சென்று விட.. நமஷிவாயமும் ஈஸ்வரும் அங்கே வந்தனர்..

அங்கே மகளின் வீட்டில் என்ன நடந்தது எனக் கேட்காமல், எதுவும் பேசாமல், இருவருக்கும் உணவை எடுத்து வைத்தவர் அவரும் அமர்ந்து உண்டார்..

நமஷிவாயம் அப்படியே சோஃபாவிலேயே அமர்ந்த வாக்கிலேயே உறங்க.. அவர் உறங்கிய பிறகு “இன்னும் வர்ஷினி சாப்பிடலை” என்றார்.

“ஏன் மா?” என்றவனிடம், அவளின் பேச்சு நடத்தை எல்லாம் சொல்ல..

தன் மேல் இருக்கும் கோபத்தை, அம்மாவிடம் எல்லாம் வர்ஷினி காட்டுவாள் என்று ஈஸ்வர் எதிர்பார்க்கவில்லை.

“சாரி மா, உனக்கு எதுவும் கோபம் இல்லையே” என்று அவசரமாகக் கேட்க,

“எனக்கு அவ மேல எல்லாம் கோபமில்லை, உன் மேல தான். பிள்ளைகளை நான் சரியா வளர்க்கலையோன்னு ஒன்னொன்னுலையும் காமிச்சு கொடுக்கறீங்க..நீயும் உன் தங்கையும் நீங்களா தேர்ந்தெடுத்த வாழ்க்கை. ஆனா அதைக் கூட உங்களால சரியா வாழ முடியலை..” என்றார் கோபமாகவே.  

ஈஸ்வர் எதிர்த்து பேசாமல் அமைதியாகத் தான் கேட்டுக் கொண்டான். அவனுக்கே என்ன செய்வது என்று புரியவில்லையே.   

“அவளோட உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சா ஒழுங்கா வீடு வந்து சேர்.. தனியா இருக்காத” என,

அதற்கும் ஈஸ்வர் எதுவும் மறுத்துப் பேசவில்லை.. அவர்கள் சென்றதுமே வர்ஷினியிடம் அதைப் பற்றி பேச, “முடியவே முடியாது. நான் வரவே மாட்டேன்!” என்றாள்.

ஈஸ்வர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவும், பலதும் பேசி அங்கே செல்வது தான் சரி என்று நியாயப்படுத்தவும்..  

“உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க.. எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை.. நான் வேணும்னா ஹாஸ்டல் பார்த்து போயிடறேன்” என,

ஈஸ்வர் அப்படியே அதிர்ந்து தான் நின்று விட்டான்.. “யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது என காலையில் பேசியவள், இப்போது நீ அங்கே போ, நான் இங்கே போகிறேன் என்கிறாளா?”         

காலையிலிருந்து இழுத்துப் பிடித்த பொறுமை பறக்க “என்ன நீ ஒரு பக்கம்? நான் ஒரு பக்கமா? கொன்னுடுவேன். ஹாஸ்டல், ஹாஸ்டல்ன்னு அதையே ஏன் பிடிச்சு தொங்கற” என ஈஸ்வர் ஆத்திரத்தில் கத்த..

“எனக்கு அதை விட்டா வேற தெரியாது.. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அங்கே தான் இருக்கேன். அப்போ அங்கே தானே போவேன். எனக்கு வேற தெரியாது. எனக்கு இருந்த அப்பாவும் இப்போ கிடையாது” என்று பதிலுக்கு அவளும் கத்தினாள்.

மூன்று மாதமாக எவ்வளவு புரிய வைக்கிறேன், புரியாமல் திரும்பத் திரும்ப பேசுகிறாளே என்று ஈஸ்வரும் விடாது கோபத்தில் பேச.. அத்தனைக்கும் சளைக்காமல் பதிலுக்கு பதில் கத்தினாள்.

அங்கே அந்த கணவன் மனைவிக்குள் ஒரு சண்டை! ஆனால் செல்லச் சண்டை அல்ல, ஈஸ்வர் கோபத்தில் சண்டை போட! வர்ஷினி வெறுப்பில் சண்டை போட்டாள்!  

“உன்னை நான் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்” என்று ஈஸ்வர் கோபத்தின் உச்சமாய் கத்த,

“அதை தானே நான் சொல்லிகிட்டே இருக்கேன், நீ என்னை பார்க்காம இருந்திருந்தா நான் நல்லா இருந்திருப்பேன்” என,

“யார் உனக்கு மாப்பிள்ளை வரிசையா நின்னிருந்தா, நான் உனக்கு குறைஞ்சு போயிட்டேன், போடி! உன் கிட்ட எல்லாம் பேசவே முடியாது!”

“பேசாதே போ! நீ பேசலைன்னு நான் ஒன்னும் இங்க அழலை! நான் வாழ்க்கை முழுசும் தனியா இருந்திருந்தாலும், நீ எனக்கு மாப்பிள்ளையா வந்திருக்க வேண்டாம், போடா!” என்றாள் சளைக்காமல்.

ஈஸ்வருக்கும் கோபம் போய் வெறுப்பு வந்தது, “இது என்ன வாழ்க்கை?” என்பது போல.. 

அதைவிடவும் அதிகமான வெறுப்பு வாழ்க்கையின் மீதும் ஈஸ்வரின் மீதும் வர்ஷினிக்கு இருந்தது.    

இது போர்க்களம்! எதிரி எதிரில் இல்லை! உனக்கு நீயே எதிரி!               

 

Advertisement