Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஆறு :

இந்தக் காரிகை என்னை கட்டிப் போடுகிறாள், கட்டவிழ்த்து ஓடத் துடிக்கின்றேன்!!! 

ஈஸ்வருக்கு மனம் சோர்ந்து போனது, ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து நின்று விட்டோம் என்று புரிந்தது. நல்லவனாய் இருப்பது சுலபம், நல்லவனாய் நடிப்பது மிகவும் கடினமாக உணர்ந்தான்.

ஆம்! அவன் நல்லவன் தான்! இருவரைத் தவிர! ஐஸ்வர்யா, பிறகு வர்ஷினி.. “என்னை நினைக்காதே விடு!” என்றால் எப்படி விட முடியும்.. தூக்கி கொண்டு ஓடத் துடித்தது மனம். திரும்ப அவளிடம் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும். முடியாது என்று கத்தத் தான் தோன்றியது.

காதலையும் இனி காதல் மற்றும் விருப்பம் சொல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினான்.

என்ன செய்வது என்ற யோசனையோடே வீடு சென்றான். அங்கே திரும்ப அம்மா, பெரியம்மா, பாட்டி என்று சூழ்ந்து கொள்ள, எல்லோரிடமும் நேரத்தை செலவழித்தவன், சிறிது நேரம் உறங்கலாம் என்று ரூம் போக, அவனின் பின்னோடு வந்தாள் ரூபா.

“என்ன ரூப்ஸ்?” என,

“நான் ஒன்னு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே!” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தாள், முகமும் ஒரு தவிப்போடு இருந்தது.

“என்ன ரூப்ஸ் சொல்லு?”

“அது, அது, உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்! இருந்தாலும்,” என்று ஆரம்பித்து நிறுத்தியவள், பிறகு முயன்று, “நீ ஐஸ்வர்யாவைக் கல்யாணம் பண்ணிக்கறியா? ஐஸ்வர்யாவை உனக்குப் பொண்ணு கேட்கலாமா? கேட்கலாமா இல்லை, நாம் இங்க அவளைக் கூப்பிட்டுக்குவோம். அவளும் என்னை மாதிரி அங்க வீட்டுக்குப் போகமாட்டா!” என்றாள்.

ஈஸ்வருக்கு பலமான அதிர்ச்சி.. “என்ன ரூப்ஸ் சொல்ற?”

“உனக்கு அப்பானால, அஸ்வின்னால எங்க வீட்டு சம்மந்தம் பிடிக்காதுன்னு தெரியும், பட் ஐஸ்வர்யா நல்ல பொண்ணு! அவளோட ஜாதகமும் அவ்வளவு அருமையா இருக்கும், அழகு இருக்கு, படிப்பு இருக்கு, என்ன பணம் இல்லை! அப்பா அண்ணன் சரியில்லை! ஆனா உனக்கு நல்ல மேட்ச் ஆவா!” என்றாள்.

மனம் பதைத்து விட்டான், ஒரு வேளை ஐஸ்வர்யா சொல்லி இருப்பாளோ என்பதுப் போல,

“என்ன திடீர்ன்னு இந்தப் பேச்சு?”

“இல்லை, எனக்கு ரொம்ப நாளா மனசுல எண்ணம் தான், அவ படிப்பு முடிக்கட்டும் பேசலாம்னு நினைச்சேன், அந்த சமயம் தான் நமக்கு நிறையப் பிரச்சனைகள், எதுவும் பேச முடியலை, அப்புறம் இந்த அஸ்வின் தேவையில்லாததை செஞ்சு ஜெயில் போனான், நீயும் சிங்கபூர் போயிட்ட”

“என் தங்கை அவ! அவளை எப்படி நான் அப்படியே விட முடியும்! என் வீட்டு ஆளுங்க செஞ்சு வெச்சிருக்குற வேலைக்கு, அவங்களா மாப்பிள்ளை பார்ப்பாங்க தோணலை, பார்த்தாலும் அமையும்னு தோணலை, ஆனா அதெல்லாம் காரணம் இல்லை!”

“ஐஸ்வர்யா கிட்ட குறைன்னு எதுவும் கிடையாது! அதுதான்!” என்று தவிப்போடு பேசினாள். எப்படியாவது ஈஸ்வர் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல். ஒத்துக் கொண்டு விட்டால் பின்பு, அவளின் அப்பா அஸ்வின் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை.

“ஐஸ்வர்யா எதாவது பேசினாளா?”

“சே! சே! அவளுக்கு இது பத்தியெல்லாம் தெரியாது. உன்கிட்ட பேசாம நான் அவ மனசுல ஆசை வளர்க்கக் கூடாது இல்லையா!” என்று ரூபா சொன்ன போது…

ஒரு பிரளயம் ஈஸ்வரின் மனதினில், “நான் அந்தத் தவற்றை செய்து விட்டேனே!”

“அவ என்கிட்டயே பேசறது இல்லை இப்போல்லாம். நானா கூப்பிட்டா ஒரு ரெண்டு வார்த்தை பேசறா! அவளா இந்த ஒரு வருஷமா கூப்பிடவே இல்லை.. டெல்லி போனவ இங்க வரவேயில்லை”

“தனியா இருக்கா! மனசுக்கு கஷ்டமா இருக்கு!” என்று சொல்லும் போது ரூபாவின் கண்கள் கலங்கியது.

“என் தங்கைன்றதால சொல்லலை! ப்ளீஸ், அப்படி நினைச்சிடாத, அவ நிஜமாவே பணம்ன்ற ஒன்னை விட்டுட்டா, உனக்கு மனைவியா வர தகுதியான பொண்ணு!” என்றாள்.

ஈஸ்வருக்கு மனது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. ஆனால் எனக்கு அந்தத் தகுதி இல்லை என்று கத்த வேண்டும் போலத் தோன்றியது. இந்த ஒரு வருடத்தில் எதுவுமே மாறவில்லை, எல்லாம் அப்படியே இருக்கின்றது என்று தோன்றியது.

ரூபா பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்க…

“எஸ், ரூப்ஸ் ஐஸ்வர்யா குறை சொல்ல முடியாத பொண்ணு. நம்ம வீட்டுப் பொண்ணும் கூடத் தான். ஆனா எனக்கு அவளைக் கல்யாணம் பண்ற தகுதி இல்லை!” என்றான் முடிவாக.

வாழ்க்கையின் சதுரங்கத்தில் காய்களை நகர்த்த ஆரம்பித்தான்.

“ஏன்? ஏன்?” என்றாள் பதட்டமாக.

“நான் எதுக்கு இப்போ வந்தேன்னு நினைக்கிற.. முரளி அப்பா தான் வரச் சொன்னாங்க!”

“ஏன்?” என்றான் புரியாமல்.

“வர்ஷினியைக் கல்யாணம் பண்ணக் கேட்கறாங்க!” என்று சொன்னது தான்,

“என்ன?” என்று ரூபா அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள்.

“ஐயோ! இவள் எதற்கடா, இவ்வளவு அதிர்ச்சியாகின்றாள்” என்று ஈஸ்வர் நொந்தே விட்டான்.

“எப்படி? எப்படி அவங்க கேட்கலாம்?” என்று கூடவே கோபமும் பட,

“ஏன்? ஏன் கேட்கக் கூடாது?”

“அந்தப் பொண்ணுக்கு அம்மா யாருன்னு தெரியாது, இவங்க வீட்லயே இல்லை, நாம எப்படி சம்மந்தம் பண்ண முடியும்!”

“ஏன்? அவளுக்கு என்ன குறை? நீ கூடத் தானே நல்லா பேசுவ!”

“ப்ச்! நல்லா பேசறது வேற, ஏன் எனக்குக் கூட அவளைப் பிடிக்கும். ஆனா அதுக்காக சம்மந்தம் செய்ய முடியுமா?”

“ஏன்? ரஞ்சனியை அங்கேத் தானே குடுத்திருக்கோம்!”

“பத்மனாபன், அவரோட நேரடியான பையன். ஆனா இவ அப்படிக் கிடையாதே!”

“நீ இப்படிப் பேசுவன்னு நான் எதிர்பார்க்கலை ரூபஸ்..!”

“ஏன்? நிஜத்தைத் தானே சொன்னேன், நீ எப்போ இருந்து இவ்வளவு நல்லவனா மாறிப் போன, அந்தப் பொண்ணை நீ எவ்வளவு அலட்சியமா பேசியிருக்க தெரியுமா, நான் அந்த மாதிரி எல்லாம் பேசலை! நான் ஜஸ்ட் ரியாலிடி சொன்னேன்!” என்றாள்.

“அது முன்னே,  இப்போ அப்படிப் பேசாதே!” என்றான் கட்ட்டளை போல..

அவனின் மாற்றம் அந்தக் குரலிலேயே புரிந்தது. “ஓஹ்!” என்று இடைவெளி விட்டவள், “அப்போ உனக்குப் பிடிச்சிருக்குன்னு தைரியமா சொல்ல வேண்டியது தானே! ஏன் அவங்கப்பா சொல்றார்ன்னு காரணம் சொல்ற!” என்று நேரடித் தாக்குதலில் இறங்க,

“புத்திசாலி ரூப்ஸ் நீ! ஆனா நான் அப்படிச் சொன்னா வீட்ல இருக்குறவங்க நடக்க விட மாட்டாங்க. அதுவுமில்லாம உன் தம்பி அவளை என்னையும் இணைச்சு பேப்பர்ல போட்டிருக்கான், அதுவும் ஒரு காரணம் மறுக்க முடியாது!” என்றான்.

“நான் ரொம்ப நம்பியிருந்தேன் உன்னை! இப்படியாகும்ன்னு நினைச்சது இல்லை, எனிவே என்னுடைய வாழ்த்துக்கள்!” என்றவளிடம்..

“நானே இந்த விஷயத்தை பேசிக்கறேன், உனக்குத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத ரூப்ஸ்!” என,

“ம்!” என்று தலையாட்டி ரூபா வெளியே செல்கையில் மனதிற்கு கஷ்டமாக இருந்தது ஐஸ்வர்யாவை நினைத்து.. “இறைவா! இதைச் சரி செய்து விடு!” என்று வேண்டிக் கொண்டு.. தன்னுடைய காய்களை நகர்த்த ஆரம்பித்தான்.

மாலையில் பத்து கூப்பிடும் வரை, இதை எப்படி நல்லபடியாக நடத்திக் கொள்வது என்ற சிந்தனையே. ஆனால் பத்து சொன்னச் செய்தி முற்றிலும் அவனை நிலை குலையச் செய்தது.

“ரஞ்சனி, மதியம் இருந்து காணலை! எங்க போனான்னு தெரியலை! காலையில இருந்து மூட் அப்செட்டா இருந்தா! எங்க போயிருப்பான்னு உங்களுக்கு ஏதாவது தோணுதா?” என்று அவன் கேட்க,

“என்ன?” என்று பதைத்து எழுந்தான்.

வீட்டினரிடம் பேசினாளா என்று கேட்க, யாரும் இல்லை என்றனர். உடனே ராஜாராமின் வீடு நோக்கிச் செல்ல, மனம் முழுவதும் யோசனை..

“ஒரு வருடமாகிவிட்டது! இந்த அஸ்வின் வந்திருப்பானோ?” என்று பத்து வின் வீட்டில் முன் கார் நிறுத்தும் போது பளிச்சிட, மனது முழுவதும் ஒரு பயம் பரவியது ஈஸ்வருக்கு.

ஒரு வருடம் அவனின் ஞாபகம் இல்லாமல் இருந்து விட்டோம், இப்போது மீண்டும் வேலையை ஆரம்பித்து விட்டானா? அவனாக மட்டும் இருந்தால்… கொன்று புதைத்து விடும் ஆத்திரம் கிளம்பியது.

இவனைப் பார்த்ததும் பத்து விரைந்து வந்தவன், “இன்னைக்கு காலேஜ் போகலை, வீட்ல தான் இருந்தா. பதினோரு மணிக்கு வெளில போறேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா! இன்னும் இதுவரைக் காணோம்.. நான் மதியம் வந்த போதும் இல்லை. சரி இப்போ வந்திருப்பான்னு வந்தேன், காணலை! போன் சுவிச் ஆஃப் மதியத்துல இருந்தே!”

“காலேஜ் போகலை! கிளினிக் போகலை! அவ போகற இடம் எல்லாம் போகலை.. என்னவோ காலையில இருந்தே ரொம்ப அப்செட்டா இருந்தா?” என்றான் படபடவென்று,

“எங்கேயாவது தெரிஞ்ச இடம் போயிருப்பா, ஃபோன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகியிருக்கும். அதுக்கு எதுக்கு இவ்வளவு பயம்?” என்று பத்துவை சமாதானம் செய்தான்.

“தெரியலை, ரொம்ப அப்செட்டா இருந்தா!” என

“தான் பேசாதது எனப் புரிந்தது. ஆனால் அவளும் தானே பேசவில்லை. அவள் பேசி என்ன நான் பேசாமலா விட்டேன்! என்ன ஒரு எமோஷனல் ப்ளாக் மெயில் இது?” என்று கோபம் கிளர்ந்தது.

“பார்க்கலாம் கொஞ்ச நேரம் இன்னும், வந்துடுவா” என்றான்.

ஆனாலும் பத்து சமாதானம் ஆகவில்லை. ராஜாராம் வீட்டில் இல்லை ஹாஸ்பிடலில் இருகின்றார் என்பதால் பதட்டமாக இருந்தான். எல்லாத் திறமைகள் இருந்தும் அப்பாவின் நிழலில் இருந்து, இருந்து அதற்குப் பழகி விட்டவர்கள் மக்கள். என்ன ஏது என்று தடுமாறினார்கள்.

அவனின் தாத்தாவும், “ஒன்னும் இருக்காதுன்னு சொன்னா கேட்க மாட்டேங்கறான்!” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது தான் வர்ஷினி தாஸுடன் வந்தாள்.

அவளும் விவரம் அறிந்தவள், “அண்ணா அண்ணிக்கு எதுவும் இருக்காது! எப்பவும் நீ அவங்களைத் தனியா விடறதே இல்லை! நீயே கொண்டு போய் விடற, கூட்டிட்டு வர்ற, அதனால அவங்கத் தனியா போகவும் என்னவோ ஏதோன்னு பயப்படற” என்றாள்.

எதுவும் பத்துவை சமாதானம் செய்யவில்லை, அவனுக்காக நிலைமையை சற்று சீரியசாக கையில் எடுத்தனர்.

ஈஸ்வர் தாத்தாவிடம், “ஒரு வருஷம் முன்ன குண்டாஸ்ல அஸ்வினை அர்ரஸ்ட் பண்ண வெச்சோமே. அவன் ரிலீஸ் ஆகிட்டானா?” என்று கேட்க.

“யாரு?” என்றார் அவர் சட்டென்று ஞாபகம் வராமல்,

“அதுதான் வர்ஷி ஃபோட்டோ பேப்பர்ல போட்டான்னு அர்ரஸ்ட் பண்ண வெச்சீங்களே..” என்று ஈஸ்வர் விளக்கம் சொன்னான், அவனுக்கு அங்கே வர்ஷினி இருந்தது ஞாபகத்தில் இல்லை.

தன்னுடைய பெயர் அடிபடவும், “என்ன?” என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள், அதற்குள் தாத்தா யாருக்கோ தொலைபேசியில் அழைக்க,

ஈஸ்வர் ரூபாவிற்கு அழைத்தான், “அஸ்வின் ரிலீஸ் ஆகிவிட்டனா?” என்று தெரிந்துக் கொள்ள, மூன்று நாட்களுக்கு முன் என்று ரூபா சொல்ல, அதையே பேசி முடித்து வந்த தாத்தாவும் சொல்ல,

அதற்குள் என்ன போட்டோ என்று தாஸிடம் விஷயத்தை வாங்கி இருந்தாள், வாங்கியதும் அவளுக்குத் தோன்றியது, என்ன தன்னால் ஒருவன் ஒரு வருடம் ஜெயில் அனுபவித்தானா என்பதுதான். அதெல்லாம் அவளின் கவனத்தில் வந்திருக்கவில்லை.

அரை மணி நேரம் அவர்கள் ரஞ்சனிக்குக் காத்திருக்க, அவள் வரவில்லை, ஆறு மணியை நெருங்க, அந்தக் காலநிலையில் இருளும் வேகமாகப் பரவ, பத்துவின் தவிப்பைப் பார்த்து, பத்துவின் கவலை எல்லோரையும் தொற்றியது.

ஈஸ்வர் அந்த அஸ்வினைப் பார்த்து விடலாம், அவனில்லை என்றால் வேறு ஆட்கள் யாரும் தீங்கிழைப்பவர் கிடையாது என்று நினைத்து, அஸ்வினைத் தேடிக் கிளம்ப…

“எங்கே?” என்ற பத்துவிடம் அஸ்வினைப் பார்க்கப் போவதாகச்  சொல்ல, பத்து உடன் செல்ல,

“நானும் வர்ரேன்!” என்று தாஸ் யாரும் கேட்காமல் காரில் ஏற, “நானும் வர்ரேன்!” என்று வர்ஷினியும் ஏறினாள்.

“நீ இறங்கு!” என்றான் ஈஸ்வர்,

“எல்லோரும் டென்ஷனா இருக்கீங்க, எனக்கும் இருக்கு, நானும் வர்ரேன் பத்து அண்ணாவுக்காக!” என்றாள்.

பத்துவின் முகத்தைப் பார்த்தவன், “சரி, வா!” என்றான்,

நேராக அஸ்வின் வீட்டிற்குத் தான் சென்றான், அங்கே இல்லை என்றால் தேடிக் கொள்ளலாம் என்று,

அங்கே சென்றால் இல்லை, அவனின் அம்மா மட்டுமே இருந்தார், ஈஸ்வரை பார்த்ததும் அவரின் முகத்தில் அவ்வளவு பயம், “ஏதாவது பண்ணிட்டானா? எதுவுமே பண்ண மாட்டேன் சொன்னானே!” என்றார்.

ஈஸ்வர் அவரின் கேள்வி எதற்கும் பதில் சொல்லவில்லை, “எங்க இருக்கான் அவன்?” என்று கேட்க,

“அவனை ஒன்னும் பண்ணிடாதீங்க. இப்போ தான் ஜெயில்ல இருந்து வந்திருக்கான். எதுவும் பண்ண மாட்டான் கண்டிப்பா!” என்றார் கண்களில் நீர்த் திரையோடு.

“அவன் எதுவும் பண்ணலைன்னா நாங்களும் எதுவும் பண்ண மாட்டோம். அவன் எங்க இருக்கான்னு மட்டும் சொல்லுங்க!” என்றான் அதிகாரமாக.

“ஃபிரன்ட்க்கு ஏதோ பர்த்டே பார்ட்டின்னு போனான், ஹோட்டல் பேர் கூட ஏதோ சொன்னான்!” என்றவர்,

“அவன் முன்ன மாதிரி இல்லை, இந்த மூணு நாளா என்கிட்ட நல்லா பேசறான். அவனும் ஓஞ்சு போயிட்டான்! அவனை விட்டுடுங்க!” என்றார்.

“அத்தை, நாங்க எதுவும் பண்ண மாட்டோம்!” எனவும்,

“எதற்கு இவன் அத்தை!” என்று கூப்பிடுகின்றான் என்று வர்ஷினி பார்த்திருந்தால், ஹோட்டலின் ஒரு பாதி பெயரைச் சொல்ல, அதை வைத்து அனுமானித்துக் கிளம்பினர்.

அங்கே ஒரு பார்ட்டி ஹாலில், பார்ட்டி கலை கட்டி இருக்க,  ஆங்காங்கே சில பேர் நடனமாடிக் கொண்டிருக்க, அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.

இப்படித்தானே அவனும் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தான், “எல்லாம் மாறி விட்டடது! ஏன்? இதில் என்னுடைய தவறு என்ன?” என்று யோசிக்கும் போதே அவன் முன் வந்து நின்றான் ஈஸ்வர்.

ஈஸ்வரை எதிர்பார்க்கவில்லை, பார்த்ததும் அப்படியே எழ,

“இங்கே வேற ஒருத்தரோட பார்ட்டி, இங்க எதுவும் வேண்டாம். வெளிய வா!” என்றான் ஈஸ்வர். முகத்தில் அடக்கப்பட ரௌத்திரம்.

“அதெல்லாம் வரமுடியாது!” என்றான் அஸ்வினும் அலட்சியமாக,

“வெளிய வாடா! இல்லை முகத்தை இங்கயே பேத்து எடுத்துடுவேன்!” என்று அடிக் குரலில் கர்ஜித்தான்.

“முடியாது! என்ன வேணா பண்ணிக்கோ!” என்று அஸ்வினும் அலட்சியமாய் நின்றான்.

“ஒரே அடில, நீ செத்தே போயிடுவ. ஆனா ரஞ்சனியைப் பத்தி தெரியணும்ட்ரதுக்காகத் தான் பேசிட்டு இருக்கேன்” என்று சொன்னதும் அஸ்வினின் முகம் அப்படியே மாறியது.

“ஏன் ரஞ்சனிக்கு என்ன?” என்றான் சிறிது பதட்டமாக,

“வெளிய வாடா!” என்று ஈஸ்வர் திரும்ப கர்ஜிக்க,

இந்த முறை பதில் பேசாமல் வந்தான், அந்த சத்தங்களில் இருந்து கதவைத் திறந்து வெளியே வந்து கதவை மூடியதும், ஒரு ஆழ்ந்த அமைதி.

“ரஞ்சனியை என்ன பண்ணின?”

“நான் ஒன்னும் பண்ணலை! என்ன விஷயம்?” என்று அஸ்வின் கேட்கும் போதே அருகில் தாஸ், பத்து மற்றும் வர்ஷினி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நிலைமையின் தீவிரம் புரிந்தது.

“அவளைக் காலையில இருந்து காணலை” என்று ஈஸ்வர் சொல்ல,

அந்த தாடிக்குள் புதைந்திருந்த முகத்தைப் பார்த்த வர்ஷினி, “என்ன? இவன் தன்னால் ஜெயில் போனானா, இவன் எதுவும் செய்திருப்பான் என்று தோன்றவில்லையே, நல்லவன் தானே இவன்!” என்ற யோசனைகளோடே பார்த்திருந்தாள்.

“நான் எதுவும் பண்ணலை முதல்ல ரஞ்சனியைத் தேடுங்க!” என்று அஸ்வின் சொல்ல,

“நான் உன்கிட்ட முதல்லயே பேசியிருக்கேன், அப்பவும் திரும்ப ஃபோட்டோ போட்டு ஜெயில் போயிருக்க, நீ திருந்தவே மாட்டியா?” என்று சொல்லிப், பேச்சு பேச்சாக இருக்கும் போதே, தாஸ் அவனை ஓங்கி ஒரு உதை விட்டான்.

தூரப் போய் விழுந்தான், அஸ்வின் இதை எதிர்பார்க்கவில்லை, அதுவும் வயிற்றினில் தாஸ் உதைத்து விட, சுருண்டு விழுந்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.

வலியில் அவன் முகம் அவ்வளவு வேதனையைக் காட்டியது, அப்போதும் “நான் எதுவும் பண்ணலை, முதல்ல ரஞ்சனி எங்கேன்னு தேடுங்க!” என்று சொன்னான்.

வர்ஷினி அஸ்வினை நன்கு கவனித்தாள், அவன் திரும்பத் தாக்கவும் முயலவில்லை. தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் முயலவில்லை. யாருடைய உதவியையும் நாடவில்லை.

“நீ சொன்னா கேட்க மாட்ட… ஒழுங்கா சொல்லு!” என்று தாஸ் திரும்ப அடிக்க வர,

“தாசண்ணா!!!” என்ற வர்ஷினியின் அதட்டல் தாஸைத் தேக்கியது.

“கை வெச்சீங்க தொலைச்சிருவேன்!” என்றாள் ஆவேசமாக.

“வர்ஷினி!!!” என்று ஏகக் குரலில் பத்துவும் ஈஸ்வரும் அதட்டினர்,

ஆனால் எதையும் வர்ஷினி கேட்கவில்லை, விரைந்து அஸ்வின் அருகில் சென்றவள், “எழுந்திருங்க!” என்று அவன் எழுவதற்காக கை நீட்ட.

பத்து “என்ன செய்கிறாள் இவள்?” என்று அதிர்ந்து பார்த்து நிற்க,

ஈஸ்வர் “கையை மடக்கு முதல்ல” என்று கர்ஜித்து அருகில் சென்றான். அவன் சென்ற ஆவேசத்தைப் பார்த்தால், அடித்து விடுவானோ என்று தான் பார்ப்பவருக்கு தோன்றும். ஆனால் சற்று அசராமல் ஈஸ்வரைப் பார்த்து நின்றால் வர்ஷினி.

“நான் அப்படித் தான் கொடுப்பேன்!” என்றெல்லாம் வர்ஷினி வாக்குவாதம் செய்யவில்லை. “ஓகே!” என்று கையை உடனே மடக்கியவள், “நீங்கத் தூக்கி விடுங்க, இல்லை நான் தூக்குவேன்!” என்று நின்றாள்.

ஈஸ்வரை பார்த்து அச்சமின்றி பேசும் அந்தப் பெண்ணை பார்த்து இருந்தான் அஸ்வின்.

“ஏய், உனக்கென்னப் பைத்தியமா?” என்று ஈஸ்வர் அவ்வளவு ஆவேசத்தோடுப் பேச,

“அவர் ஒன்னும் பண்ணியிருக்க மாட்டார்!” என்று நின்றாள்.

அதற்குள் அவன் தடுமாறி எழ, இவர்களின் சண்டையைப் பார்த்து தாஸ் வந்து தூக்கி விட, எழுந்து நின்றவன்,

ஈஸ்வரைப் பார்த்து பேசமால் வர்ஷினியைப் பார்த்து, “நான் எதுவும் செய்யலை, முதல்ல ரஞ்சனியைத் தேடுங்க!” என்றான்.

ஈஸ்வர் அவன் உண்மை சொல்கிறானா? பொய் சொல்கிறானா? என்றுப் பார்த்து நிற்க,

“எப்போ இருந்து காணலை?” என்றான் வர்ஷினியைப் பார்த்து அஸ்வின்.

“காலையில அவங்களே தான் வெளியே போறேன்னு சொல்லிப் போனாங்க. ஆனா இப்ப வரைக்கும் எங்க இருக்காங்கன்னு தெரியலை! கொஞ்சம் மூட் அப்செட்டா இருந்தாங்க!” என்று கடகடவென்று வர்ஷினி சொல்ல,

“மூட் அப்செட்டா!” என்று நிறுத்தியவன், “எப்பவும் அப்படி இருந்தா அவ அண்ணன் கிட்ட போவா, ஆனா அவ அண்ணனுக்கு தெரியலை, இல்லைனா சாந்தோம் சர்ச் போவா, அங்கப் பாருங்க!” என்றான்.

“நான் பார்த்துட்டு கூப்பிடறேன்!” என்று சொல்லி பத்து உடனே கிளம்பி, அங்கேப் போக, அங்கேப் போக எடுத்துக் கொண்ட நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் என்ன மாதிரி உணர்ந்தான் என்றேத் தெரியவில்லை.

அங்கே சென்று அங்கே இருந்த சேரில் அமர்ந்து மாதாவைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனியைப் பார்த்ததும் பத்து அவனுக்கு அவனே அன்னியமாகிப் போனான்.

“பத்து அண்ணா பார்த்துச் சொல்றவரை, எதுவும் பேசக் கூடாது. இவரை எதுவும் பண்ணக் கூடாது!”  என்று ஈஸ்வரிடம் வர்ஷினி அதட்டி சொல்லியப் பிறகு, கைகள் கட்டி, அத்தனை கோபத்தையும் முகத்தினில் தேக்கி, அஸ்வினை துவம்சம் செய்யும் ஆத்திரத்தோடு ஈஸ்வர் பார்த்திருந்தாலும், அவன் எதுவும் செய்யவில்லை என்பதை அஸ்வின் ஆச்சர்யமாக உணர்ந்தான்.

கைகளை அவன் கட்டியிருந்தாலும் கட்ட வைத்தது காரிகையின் வார்த்தைகளே!!! ஆனால் கண் பார்வையே போதும்!!!

Advertisement