Advertisement

அத்தியாயம் பதினேழு :

கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!!

ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை.

நேராக மேலே சென்றவன், குளிக்கக் கூட இல்லை, உடையை மட்டும் மாற்றிக் கிளம்பிவிட்டான்.

நேராக ஆபிஸிற்கு தன்னை போலக் கார் சென்றது. காரை விட்டு இறங்கியவன், அந்த பில்டிங்கை தான் பார்த்திருந்தான். அவன் இங்கே பொறுப்பெடுத்துக் கொண்டு இரு வருடங்கள் தான் ஆகின்றது, ஆனால் நினைவு தெரிந்த நாளாக இது அவனுடையது என்ற எண்ணம் தானே மனதில்.

எல்லாம் அவனை மீறித் தான் நடக்கின்றது, இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு இது அவனுடையதா இல்லையா என்று தெரிந்து கொள்ள…?

அம்மாவினது அழைப்பு வர, ஃபோனை சுவிச் ஆஃப் செய்து ஜோபில் போட்டுக் கொண்டான்.

அவனது ரூமில் இருந்த குளியலறையில் குளித்து அதே உடைகளை அணிந்து கொண்டான்.

அவன் வெளியே வந்த போது அவனின் ரூமில் ஜெகனும் ரூபாவும் இருந்தனர். “ஏன் விஷ்வா போன் எடுக்கலை?” என்ற ரூபாவின் கேள்விக்கு,

“எடுக்கலை இப்ப அதுக்கு என்ன?”

“அவங்களை என்ன பண்ணலாம்ன்னு வீட்ல கேட்டுட்டு வர சொன்னாங்க”

“உங்க விருப்பம்! நீங்க என்ன வேணா பண்ணுங்க! தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க… என்னை இதுல யாரும் இழுக்காதீங்க… அவங்க பொண்ணு! அவங்க என்ன வேணா பண்ணட்டும்!”

“விஷ்வா அவ உன்னோட தங்கை, உன்னோட அவ எவ்வளவு க்ளோஸ்ன்னு எனக்கு தெரியும்! இப்படிப் பேசாத!” என்று ரூபா சொல்ல,

“க்ளோஸ்ஸா? அவளே அப்படி நினைக்கலை? நான் நினைச்சு என்ன பண்ண.. ப்ளீஸ் ரூப்ஸ்! தயவு செஞ்சு என்னை யாரும் கன்வின்ஸ் பண்ணாதீங்க” என்றவன்,

ஜகனைப் பார்த்து “என்ன பண்ணனும்னு சொல்றாங்களோ என் சார்பா நீயே செஞ்சிடு! என்னை விட்டுடு! எனக்காக இதை நீங்க ரெண்டு பெரும் செய்ங்க” என்று ஈஸ்வர் கேட்ட பாவனையில்,

“நான் பார்த்துக்கறேன்! நீ இவ்வளவு அப்செட் ஆகாத!” என்று ரூபா சொல்லி, “வாங்க!” என்று ஜகனை அழைத்துக் கிளம்பினாள்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களில் முரளி வந்து நின்றான், “நிஜமா எனக்குத் தெரியாதுடா, அவன் வீட்ல யார்க் கிட்டயும் சொல்லலை! அப்பாக்கிட்ட கூட சொல்லலை! இப்ப உங்க வீட்ல இருக்கிறோம் கல்யாணம் செஞ்சிக்கிகிட்டோம்னு போன் பண்ணின பிறகு தான் எனக்கு தெரியும் நம்பு ப்ளீஸ்! ரஞ்சனிக்கு பத்துவை பிடிச்சிருந்தது போல இல்லை எப்படி கல்யாண முடிவு இப்படி  சட்டுன்னு எடுத்திருப்பா?” என்று சொன்னான்.

நண்பனின் பதை பதைத்த முகத்தை பார்த்தவன், “உன்னை நான் தப்பா நினைக்கலை விடு, கல்யாணம் நடந்துடுச்சி! என்ன காரணம்னாலும் இனி அது இல்லைன்னு ஆகாது, என்ன பண்ணணுமோ பண்ணுங்க, தயவு செஞ்சு என்னை இதுல இழுக்காதீங்க… இப்போ ரூபா கிட்ட கூட அதுதான் சொன்னேன்! உன்கிட்டயும் சொல்றேன்.. என்னை இழுக்காதீங்க..” என்றான்.

முரளி அப்படியே நிற்க, “போ! போய் பாரு! எனக்காக முகத்தை தூக்கி வெச்சு உன் தம்பியோட எதுக்கு சொல்லாம இப்படி செஞ்சன்னு சண்டை போடாத, நீங்க எப்பவும் போல இருங்க, நான் இதுலயும் வரக் கூடாது!” என்று திரும்பவும் சொல்லி அவனை அனுப்பினான்.

அன்று நமஷிவாயமும் வரவில்லை ஜகனும் வரவில்லை, இவன் ஆஃபிசிலேயே இருந்தான், வீடு செல்லவில்லை, இவனின் போன் தானே சுவிச் ஆஃப். ஆனால் ஆபிஸ் நம்பர் இருந்ததே! வீட்டில் இருந்து வந்த எந்த அழைப்பையும் பேசவில்லை.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை! தெரிந்து கொள்ளும் விருப்பமும் இல்லை.

மாலையில் பீ ஏ அருகில் வந்தவன், “சர் வீட்ல இருந்து அப்பா நிறைய முறை போன் பண்ணிட்டார். உங்களைப் பேச சொன்னார்” என்றான்.

அவனிடம் எதுவும் காட்டவில்லை “சரி” என்று சொல்லி விட்டான், அவ்வளவு தான். ஆனால் அழைக்கவில்லை.

கண்கள் தானாக மன சோர்வினால் மூடியது. நான் என்னுடைய காதலை கூட முதலில் இவளிடம் தானே பகிர்ந்தேன், திருமணம் என்பது எவ்வளவு பெரிய முடிவு என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. மனது வலித்தது.

இரவு வரை அங்கேயே இருந்தான். வீடு செல்ல பிடிக்கவில்லை, ஆனால் இதுவரை அங்கே சென்னையில் வெளியில் எங்குமே தங்கியதில்லை.  அங்கே இங்கே காரிலேயே சுற்றி வீடு சென்ற போது நேரம் பதினொன்றை தாண்டி இருந்தது.

வீடு முழுவதுமே இவனுக்காக விழித்து இருந்தது. யாரும் உறங்கவில்லை. பாட்டி, பெரியம்மா, அம்மா, அப்பா, ஜகன், ரூபா என்று. சரண் மட்டுமே உறங்கியிருந்தான். பிரணவி கூட ஹாலில் தளிர் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

இவனைப் பார்த்ததும் இவனை நோக்கி வர, குழந்தையை கையினில் எடுத்தான்.

“எங்கடா போன? ஏண்டா இப்படி பண்ற? அவ பண்ணினது தப்பு தான்! அதுக்காக அவகிட்ட எதுவும் பேசாம போவியா, எவ்வளவு தடவை உனக்கு கூப்பிடறது! ரொம்ப அழுதாடா!”

“என்னை என்ன பண்ண சொல்றீங்க?”

அதற்கு என்ன சொல்லுவார் அம்மா அப்படியே பார்க்க..

“உங்க பொண்ணு! உங்களை நான் எதுவும் சொல்ல முடியாது, ஆனா என்னை எதுக்கும் யாரும் சொல்லக்கூடாது! சொன்னிங்க, வீட்டை விட்டு போயிடுவேன்! இதுல எந்த மாற்றமும் இல்லை! அம்மா உங்களுக்கு என்ன உங்க பொண்ணுக்கு செய்யணும்னு தோணுதோ செய்ங்க” என்று சொல்லி மேலே ஏறினான்.

பாட்டி, “கோபப்படாத விஷ்வா அவ நம்ம வீட்டு பொண்ணு, சின்ன பொண்ணு இல்லை.. நல்லது கெட்டது தெரிஞ்சவ, நம்ம அப்படியே விட முடியாது! நாம மனசளவுல இதை அங்கீகரிக்கறோம் இல்லை அது வேற! ஒரு ரிசெப்ஷன் வெச்சி அதுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்கணும்! இல்லை நமக்கு தான் அசிங்கம்! இப்போவே எத்தனை பேருக்கு தெரிஞ்சதோ தெரியலை?”

“அவங்க வீட்ல இருந்து அவங்க தாத்தாவும் அம்மாவும் வந்து மன்னிப்பு கேட்டு முறையா என்ன செய்யணுமோ செய்யலாம்னு பேசினாங்க… நீ சொல்லாம எங்களால அவளை இங்க இருன்னு கூட சொல்ல முடியலை அனுப்பிட்டோம்.. சொல்லுடா!”

“பாட்டி! உங்களுக்கு என்ன செய்யணுமோ செய்ங்க! நான் எல்லாத்துக்கும் சம்மதிக்கணும் அவங்க கிட்ட நல்ல மாதிரி நடந்துக்கணும்னு நினைக்காதீங்க என்னால கண்டிப்பா முடியாது .. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க! இல்லை விட முடியாதுன்னு நினைச்சீங்கன்னா….” என்று நிறுத்தியவன்,

“நான் இந்த உலகத்திலயே இல்லை.. என் அம்மா அப்பாக்கு ஒரு பொண்ணு மட்டும் தான்னு நினைச்சிக்கங்க” என்றான் காரமாக.

“விஷ்வா! என்ன இது இப்படி அபசகுனமா பேசற?” என்று அம்மா கண்கள் கலங்க,

“என்னால அழவும் முடியாது, நீங்க அழறதுக்காக என்னை மாத்திக்கவும் முடியாது” என்று சொல்லி கையில் இருந்த பிரணவியை ரூபாவின் கையில் கொடுத்து உறங்க சென்றான். காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை. அவ்வபோது குடித்த டீ காஃபி மட்டுமே, மிகவும் களைப்பாக இருந்தது.

“பிடிக்கலைன்னா விட்டுடுங்க அத்தை! ஏன் கம்பெல் பண்றீங்க, நம்ம எல்லோருக்கும் தெரியும் விஷ்வா ரஞ்சனி கூட ரொம்ப க்ளோஸ்ன்னு கண்டிப்பா வருத்தம் இருக்கும்”

“நமக்கெல்லாம் இல்லையா நம்ம சரின்னு போகலை! எனக்குக் கூட தான் அவ்வளவு வருத்தம்! இன்னும் என் பொண்ணு வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செஞ்சு வந்து நிக்கறாங்கரதை நம்பவே முடியலை! ஆனா இந்த நேரம் நம்ம முகத்தை திருப்பினா எல்லோரும் அவளை தப்பா பேசுவாங்க! நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ அவ இந்த சமூகத்துல தலை நிமிர்ந்து வாழணும்! அதுக்கு நம்ம இந்தக் கல்யாணத்தை அங்கீகரிக்கணும்!” என்று அம்மா சொல்ல,

அவர் சொல்வது வாஸ்தவமான பேச்சு என்பதால் ரூபா அதற்கு மறுத்து பதில் சொல்லவில்லை.

நமசிவாயம் தான் “விட்டுடு மலர், ரொம்ப ஃபோர்ஸ் பண்ண வேண்டாம், சொன்ன மாதிரி வீட்டை விட்டு போயிடப் போறான், என்ன செய்யணுமோ நம்ம செய்யலாம்”

அதன் பிறகு ஈஸ்வரை எதுவும் கேட்காமல் எல்லா வேலைகளும் நடந்தன. அடுத்த வாரத்தில் ஒரு நல்ல நாளில் ரிசெப்ஷனுக்கு நாள் குறிக்கப்பட்டது. அழைப்பிதல்கள் ஒரே நாளில் அச்சிடப்பட்டு ஜகனும் ரூபாவும் அழைக்கும் வேலையை ஆரம்பித்தனர்.

ஈஸ்வரும் கவனமாக இருந்தான். அஸ்வின் இன்னும் ஏதாவது இழுத்து வைப்பானோ என்பது போல… அவனுக்கு தெரியாதது தாஸ் அஸ்வினைப் பார்த்து பேசி வந்தது. பேசி என்பது சரியான வார்த்தை அல்ல மிரட்டி வந்தது.

இரண்டாவது நாள் ரஞ்சனி ஆஃபிசில் வந்து அப்பாவை பார்த்தவள், “அவங்க பணம் கொடுக்கறாங்க தானேப்பா வாங்கிக்கலாம்! அப்புறம் திரும்ப கொடுத்துடலாம் வாங்கிக்கங்க!” என்று.

“இல்லைம்மா! வேண்டாம்! விஷ்வா ஒத்துக்க மாட்டான்!”

“அப்பா, திரும்ப குடுக்க தான் போறீங்க! இப்ப நிலைமையை சமாளிப்போம், வீணா பிரச்னையைப் பெருசாக்க வேண்டாம்! இன்னம் கொஞ்ச நாள் தான் இருக்கு நம்ம பணம் குடுக்கறதுக்கு”

“நாள் இருக்கு தானேம்மா இன்னும், முடிஞ்சவரை பார்க்கலாம்! முடியலைன்னா வேணா யோசிக்கலாம்”

“அப்போ எல்லாம் பசங்க தான் செய்யணும்! நான் எதுவும் செய்யக் கூடாது! அப்படி தானே!” என்று தந்தையிடம் சண்டையிட்டாள். அவர் அசையாமல் அமர்ந்திருக்க,

“அப்பா! ப்ளீஸ்! இன்னும் பிரச்சனைகளை அதிகமாக்கிடாதீங்க!” என்றாள் கண்கள் கலங்க.

“யாரும் என்னோட பேச்சைக் கேட்கறதில்லை! எல்லோரும் என்னை இப்படி செய்ங்க அப்படி செய்ங்கன்னு சொல்றீங்க! நீ ஒன்னு சொல்ற அவன் ஒன்னு சொல்றான்! நான் என்ன செய்ய! எனக்கு ரெண்டு பசங்களும் ஒன்னு தான்”

“என் பொண்ணு இப்படி என்கிட்டே சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணுவான்னு நான் நினைச்சதே இல்லை” என்றார்.

“நான் மட்டும் நினைச்சனா! நான் மட்டும் நினைச்சனா அப்பா இப்படி நான் கல்யாணம் பண்ற சூழ்நிலை வரும்னு!” என்று கத்தினாள்.

அவள் கத்தவும் அவள் இருப்பது தெரியாமல் ஈஸ்வர் உள்ளே வரவும் அந்த வார்த்தைகள் ஸ்பஷ்டமாக அவனின் காதில் விழுந்தன.

கதவை திறந்தவன் அப்படியே நிற்க, அப்போதுதான் அவனை பார்த்தவள் “விஷ்வா” என்று அவனுடன் பேச வர, அவன் கதவை மூடி விட்டு வெளியே சென்று விட்டான்.

“போங்க! போங்க! எல்லோரும் எப்படியோ போங்க! எனக்கு என்ன வந்தது” என்று அப்பாவிடம் மீண்டும் கத்தி விட்டு அவள் வெளியே சென்றாள்.

திருமணம் செய்து கொண்டாள், புது இடம், புது பழக்க வழக்கம், புது மனிதன் அவளின் வாழ்க்கையில், எதனோடும் அவளால் ஒட்ட முடியவில்லை. எதற்கென்றாலும் அண்ணனிடம் தான் போய் நிற்பாள். இதை அவனுக்கு தெரியாமல் செய்து விட்டாள். யாரிடம் போவாள்.

ஈஸ்வர் அவளுடன் பேசாதது அப்படி ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்தது, இரண்டு நாட்களாக உறங்கவில்லை. ஒரு டாக்டராக அவளின் நிலை அவளுக்கே பயத்தைக் கொடுத்தது. யாரிடமும் எதையும் பகிரவும் முடியவில்லை.

திருமணம் செய்து கொண்டது அவள்! எனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று யாரிடம் சொல்வாள்.

கலகலப்பாக எல்லோரிடம் பேசுபவள், இப்போது இரண்டு நாட்களாக யாரிடம் என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை.

ரஞ்சனியின் நிலை உணர்ந்தவனாக அவளை எந்த வகையிலும் பத்மநாபன் தொந்தரவு செய்யவில்லை. பேச்சு கூட அவளாக பேசினால் மட்டும் தான் பேசினான்.

“அக்கா” என்ற அழைப்பை அண்ணியாக மாற்றிய வர்ஷினி ரஞ்சனியை வீட்டில் என்ன தேவை என்றாலும் நன்றாக பார்த்துக் கொண்டாள். ஆனாலும் ரஞ்சனியால் ஒட்ட முடியவில்லை.

ஈஸ்வரின் வீட்டினர் எல்லோருக்கும் அவள் மீது கோபம் வருத்தம் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்காக செய்திருக்கிறாள் என்று எடுத்துக் கொண்டு பேசவாவது செய்தனர், ஆனால் ஈஸ்வர் பேசவில்லை.

ஆஃபிஸ் போக வேண்டும் என்று சொன்னதும் பத்மநாபன் தான் அவளை அழைத்து வந்து விட்டிருந்தான். ஏதோ தொலைபேசி அழைப்பு வர அதனை பேசிக் கொண்டு இருந்தான், அவன் பேசி முடித்து காரை வெளியே எடுக்கும் சமயம் ரஞ்சனி திரும்ப வந்து விட்டாள்.

முகம் அழுகைக்கு தயாராக இருந்தது. ஆம் கண்ணீரை அடக்கி இருப்பது அந்த கண்களிலேயே தெரிந்தது.

டேக்ஸி ஏதாவது பிடிக்க வேண்டும் என்ற யோசனையுடன் தான் வந்தாள், பத்து அவளிடம் “ஒரு அரை மணிநேர வேலை இருக்கிறது, நீ இங்கே இரு நான் வந்து அழைத்து செல்கிறேன்” என்பது போல தான் கூறியிருந்தான்.

அதனால் சென்றிருப்பான் என்று நினைத்து வந்தாள். அவள் எப்படி வந்தாளோ திரும்ப எப்படி போவாள் என்று நினைத்து நமசிவாயமும் அவளின் பின்னே வந்திருந்தார். அவரை அவள் கவனிக்கவில்லை.

பத்மநாபன் நின்றிருப்பதை பார்த்து அவரும் நிற்க, ரஞ்சனி காரில் ஏறியதும் அவருடன் இறங்கி பேசவா இல்லை போகவா என்று பத்மநாபன் யோசித்து நிற்க,

நமஷிவாயதிற்கும் யோசனை பத்மநாபனை போய் வரவேற்க வேண்டுமா இல்லையா என்பது போல..

என்றிருந்தாலும் விட்டுப் போகும் உறவில்லை என்று நினைத்து நமஷிவாயம் கார் வரை சென்று “உள்ள வாங்க மாப்பிள்ளை” என்று சொல்ல,

அவனும் விரைந்து இறங்கி, “அப்புறம் வர்றேன் மாமா! கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்ல, அப்போதுதான் அவர் நீங்க என்ன படிச்சிருக்கீங்க” என்று கேட்டார்.

“லா படிச்சிருக்கேன்” என்று சொல்ல, ரஞ்சனியும் அப்போதுதான் அந்த பதிலை உள் வாங்கினாள்.

“என்ன இவன் லா படித்திருக்கிறானா, நான் முன் எப்பொழுதோ என்ன செய்யறீங்க என்று கேட்டதற்கு அப்பாவின்  தொழிலை பார்க்கிறேன் என்று சொன்னதாக தானே ஞாபகம்! ஓஹ் நாம் இவன் படிப்பைக் கேட்கவே இல்லை தானே” என்று யோசனையோடு அவனை பார்த்திருந்தாள்.

இந்த யோசனைகள் அவளுள் ஓடும் போதே பத்மநாபன் அவளின் அப்பாவிடம் பேசி முடித்து காரை கிளப்பி இருந்தான்.

“எதுக்கு இப்போ அழறீங்க நீங்க” என்று ரஞ்சனியிடம் கேட்க,

“நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு! நீங்க ஏன் என்னை வாங்க போங்க கூப்பிடறீங்க” என்று அவனை முறைத்துக் கொண்டே ரஞ்சனி கேட்டாள். அவளால் இன்னும் கட்டுக்குள் வர முடியவில்லை, கோபமாக வந்தது ஈஸ்வர் பேசாதது.

அவளின் கோபத்தைப் பார்த்து “நீங்க இன்னும் உங்க வயசை என்கிட்டே சொல்லவேயில்லையே” என்று ஒரு மென் நகையுடன் பத்து கேட்டான். அந்தக் கேள்வி தானே எல்லா நிகழ்வுகளுக்கும் அச்சாரம்.

அதற்கு பதில் சொல்லாமல் “இன்னும் விஷ்வா என்கிட்டே பேசலை” என்று பதில் சொன்னாள்.

“உங்களுக்கு உங்க அண்ணா உங்ககிட்ட பேசணுமா? இல்லை அவங்க ப்ராப்ளம் சால்வ் ஆகணுமா”

“ப்ராப்ளம் சால்வ் ஆகணும்” என்று சொல்லும் போதே தேம்பல் வெடித்தது.

“அப்போ கொஞ்ச நாளைக்கு உங்க அண்ணா போக்குல விடுங்க! டோன்ட் ஃபோர்ஸ் ஹிம்”

ஆனாலும் என்ன முயன்றும் அழுகை நிற்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இயலாமையோடு பார்த்திருந்தான்.

காரை நிறுத்தி வெட் வைபர்ஸ் கொடுத்து வீடு வந்துவிட்டது என்று சொல்ல, முகத்தை துடைத்தவள் “நான் அழுத மாதிரி தெரியுதா?” என்றாள்,

“ஆமாம்” என்பது போல தலையசைத்தான்.

“என்ன பண்ணட்டும்?”

“ஒன்னும் பண்ண வேண்டாம்.. ரெண்டு நாளா நீங்க தூங்கவேயில்லை. பார்த்துட்டு தானே இருக்கேன்! போய்த் தூங்குங்க. ஒரு விஷயம் செஞ்சோம்னா அதோட இம்பேக்ட் கொஞ்ச நாளைக்காவது இருக்கும்! எல்லாம் உடனே சரியாகும்னு நினைக்காதீங்க, அதுவும் உங்க அண்ணன் மாதிரி ஒரு ஆள் எல்லாம் ஈஸியா எதையும் ஏத்துக்கவும் மாட்டாங்க! மாறவும் மாட்டாங்க!”

“என்ன எங்க அண்ணன் மாதிரி ஆள்?” என்று அடுத்த நிமிடம் சண்டைக்கு கிளம்ப,

“ஹய்யோ! நான் எதுவும் தப்பா சொல்லலைங்க! அவர் ரொம்ப அடமென்ட் சொன்னேன்! முரளியோட ஃபிரண்ட் இல்லையா! ரொம்ப வருஷமா தெரியும்! அதுதான் சொன்னேன்!”

அவளிடம் உன் அண்ணன் திமிர் பிடித்தவன் என்றா சொல்ல முடியும்? ஆனால் அதுதான் உண்மை என்பது பத்துவின் ஆணித்தரமான எண்ணம். அதை சொல்லி ரஞ்சனியுடன் ஒரு மனக்கசப்பை வளர்த்துக் கொள்ள அவன் எப்போதும் தயாரில்லை.

ரஞ்சனியுடனான திருமணம் என்பது மனதின் ஓரத்தில் எழுந்த ஒரு ஆசை, அதை அவனே உணரும் முன் விஷயங்கள் வேகமாக நடந்து திருமணமும் முடிந்து விட்டது. ரஞ்சனி ஒன்றும் காதலினால் திருமணம் செய்ய வில்லை… ஏதோ ஒரு நிர்பந்தம் பாதி சொல்லியும் சொல்லாமலும் என்று உணர்ந்திருந்தான்.

எதுவாகினும் இந்த திருமணத்தை அவன் முழு மனதாக வரவேற்றான்.

அதற்குள் கார் நின்று நிறைய நேரம் ஆனதே, எங்கே யாரும் இறங்கவில்லை என்று வர்ஷினி வெளியே வந்து பார்த்தாள். அவள் பார்ப்பது தெரிந்ததும் ரஞ்சனி இறங்கி வர “அண்ணி அழுதீங்களா” என்று முகம் பார்த்ததுமே கேட்க,

“ப்ச்! ஒன்னுமில்லை! வீட்டு ஞாபகம்!” என்று சொல்லி ரஞ்சனி நிற்காமல் சென்று விட்டாள்… நின்றால் மீண்டும் அழுகை வரும் போல தோன்றியது.

போகும் ரஞ்சனையை பார்த்திருந்த வர்ஷினி “ஏன் அண்ணா அழறாங்க?” என்று பத்துவிடம் கேட்க,

“அதுவா அவங்கண்ணன் அவங்க கூட பேசலையாம்” என்று பத்து கிண்டலாக சொல்ல,

“நீங்க ஏன் அதுக்கு கிண்டல் பண்றீங்க?”

“என்ன கிண்டல் இதுல.. நான் உன் கூட பேசலைன்னா நீ அழுவியா என்ன?” என்றான், இதற்கு போய் யாரவது இப்படி அழுவார்களா என்பதை கருத்தில் கொண்டு,

“நான் வேற அண்ணா! நான் இந்த கேட்டகிரிலயே வரமாட்டேன்! நீங்க என்னோட அண்ணா தான்! ஆனா நாம சேர்ந்து ஒரே வீட்ல வளரலையே… நம்மளை அவங்களோட கம்பேர் பண்ணக் கூடாது” என்றாள் ஈசியாக வர்ஷினி.

“ஐயோ! என்ன இது? ஏதோ நாம் சொல்லப் போக இப்படியாகிவிட்டதே” என்று பதறி வர்ஷினியின் முகத்தை ஆராய்ந்தான். ஆனால் அது ஈசியாக இருந்தது.

“ப்ச்! நீ ஏன் இப்படி எடுத்துக்கற நான் அப்படி சொல்லலை?” என்றான்.

“நீங்க ஏன் இப்படி எடுத்துக்கறீங்க, நானும் இப்படி சொல்லலை!” என்றாள் வர்ஷினியும் பாவனையாக.

பத்து அப்போதும் முகம் தெளியாமல் நிற்க “ஈசி ப்ரோ, போங்க அண்ணியை பாருங்க!” என்று அவனை அனுப்பினாள்.

மாலையில் சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்ததால் தாஸ் துணையுடன் ஷாப்பிங் கிளம்பினாள் வர்ஷினி. ஷாப்பிங் மாலை சுற்றிக் கொண்டு இருந்தாள். கண்ணாடி வழியாக ஒரு காஃபி ஷாப்பின் உள் தெரிய, அங்கே ஒரு சேரில் அமர்ந்திருந்தது ஈஸ்வர் போல இருக்க, கதவை திறந்து உள்சென்று அவன் தானா என்பது போலப் பார்த்தாள்.

அவன் தான்! அவனே தான்!!!

கால்கள் தானாக ஈஸ்வரின் புறம் சென்றது. தாஸ் எங்கே போகிறாள் என்பது போல அவனும் உள்ளே வந்து நின்றான்.

“ஹாய்” என்றபடி ஈஸ்வரின் அருகில் நின்றவள், தாஸைப் பார்க்கவும்,

“தாசண்ணா! நான் பேசிட்டு வர்றேன்! இவங்க என்ன நமக்கு தெரியாதவங்களா? அண்ணியோட அண்ணா தானே! போங்க!” எனவும் வேறு வழியில்லாமல் தாஸ் வெளியே வந்து அவர்கள் தெரியும் இடத்தில் நின்று கொண்டான்.

தாஸ் வெளியில் போகும் வரை அவனையே பார்த்து இருந்தவன், பிறகு தான் வர்ஷினியிடம் பார்வையை நிலைக்க விட்டான். ஆனால் பேசவில்லை.. வர்ஷினி கண்களுக்கு கூலர்ஸ் அணிந்திருக்க, அதை அகற்றுவாளா மாட்டாளா என்றபடி பார்த்திருந்தான்.

அவனின் முகம் மிகவும் சீரியசாக இருந்தது.

“ஹாய் சொன்னா, ஹாய் சொல்ல மாட்டீங்களா” என்று இன்முகத்தோடே பேச, அந்தப் புன்னகை ஈஸ்வரை வசீகரித்தது.

“உன் அண்ணியோட அண்ணான்னா ஹாய் சொல்ல மாட்டேன், வேணா உங்க அண்ணோவோட ஃபிரண்ட்னா ஹாய் சொல்வேன்” என்றான் மிகவும் சீரியசாக. ஆனால் கோபம் போலவோ ஆத்திரம் போலவோ எதுவும் இல்லை.

“அண்ணியோட அண்ணாவும் வேண்டாம்! அண்ணனோட ஃபிரண்டும் வேண்டாம்! எனக்கு தெரிஞ்சவர் நீங்க அப்படி ஹாய் சொல்லுங்க” என்று லகுவாகச் சொல்ல,

அவளின் பேச்சு மனதிற்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்தது.  “ஹாய்” என்றான் தீர்க்கமான பார்வையோடு.

“நான் உட்காரட்டுமா? போகட்டுமா?” என்று மீண்டும் வர்ஷினி கேட்க,

“போகிறதுதான் நல்லதுன்னு இவளுக்கு எப்போத் தோணும்” என்று மனம் நினைத்த போதும் “உட்காரு” என்றான்.

“ஜஸ்ட் ஒரு ரெண்டு வார்த்தை உங்க பெர்சனல் தான், இருந்தாலும் சொல்லட்டுமா?”

கண்டிப்பாக ரஞ்சனியை பற்றித் தான் என்று தெரிந்ததால் பேசு என்று சொல்லவில்லை.

அவனின் சம்மதத்திற்காகக் காத்திருக்காமல் பேச ஆரம்பித்தாள்.

“அவங்க பண்ணினது சரியாத் தப்பா எனக்குத் தெரியாது, பட் அவங்க வாழ்க்கை. அதுவுமில்லாம பத்து அண்ணா ரொம்ப நல்லவங்க! நீங்க ஏன் இவ்வளவு கோபப்படறீங்க, ஆக்சுவலா நீங்க அப்பாக் கேட்ட போதே ஓகே சொல்லியிருந்தீங்கன்னா, அவங்க இந்த மாதிரி செஞ்சிருக்க மாட்டாங்க” என்று பெரிய மனுஷி போல, ஏதோ தப்பு செய்தவன் ஈஸ்வர் என்பது போல பேசினாள்.

ஈஸ்வருக்கு அவள் பேசப் பேச கோபம் எல்லாம் இல்லை, ஆனாலும் என்ன பேச்சு இது என்பது போல, “இன்னும் என்ன உளற வெச்சிருக்க” என்றான் தீர்க்கமாக.

“என்ன உளறல் இது? இது தானே நடந்திருக்கு! நீங்க இப்போ பேசாததுனால அண்ணி அழுதுகிட்டே இருக்காங்க! பாவமில்லையா, பேசுங்களேன்!” என்று வர்ஷினி சொல்ல,

“உனக்கு இது தேவையில்லாதது! நீ உன் வேலையை பாரு!” என்று பொறுமையாகவே ஈஸ்வர் பதில் சொன்னான். ஏதோ ஒரு வகையில் ரஞ்சனிக்காக அவள் பேசுகிறாள் என்று புரிந்து வர்ஷினி அவனை தப்பு செய்தவன் போலச் சொல்வதையும் கேட்டு இருந்தான்.

“எனக்கு தேவையில்லை தான்! ஆனா நீங்க பேசுங்க!” என்று மீண்டும் வற்புறுத்துவது போலச் சொல்ல,

ஈஸ்வரின் பொறுமைக் குறைய ஆரம்பித்தது. இப்படி யாரிடமும் உரிமை எடுத்து வற்புறுத்துபவள் அல்ல வர்ஷினி, ஆனால் ஈஸ்வரிடம் அது இயல்பாக வந்தது.

“சின்ன பொண்ணுன்றது சரியாத் தான் இருக்கு! என்ன தெரியும் உங்களுக்கு எங்களை பத்தி, இந்த பேட்ச் அப் வொர்க் பண்ண வந்திருக்க, லிமிட்ஸ் க்ராஸ் பண்ணாத!” என்றான். குரல் கோபத்தைக் காட்டியிருந்தால் டென்ஷனில் பேசுகிறான் என்று நினைக்கலாம். ஆனால் இதை நிறுத்தி நிதானமாகச் சொல்லவும்,

ஈஸ்வரின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து அப்படியே பார்த்து இருந்தாள், வர்ஷினியின் முகம் அவனைப் பார்த்து இருந்தது. ஆனால் அவளின் நீல நிறக் கண்கள் ஈஸ்வருக்குத் தெரியவில்லை, கறுப்புக் கண்ணாடி மறைத்து இருக்க,

“ஒரு ஃபாமிலி செட் அப்ல வளர்ந்திருந்தா உனக்குப் புரியும், இது உனக்குப் புரியாது” என்று வாய்ப் பேச,

அந்தக் கண்களைப் பார்த்தே ஆக வேண்டும் போல ஒரு உந்துதல், நொடியில் அவனின் செய்கையை தனதாக்க,

அவனையும் மீறி அவனின் கைகள் அவளின் புறம் உயர்ந்து கண்ணாடியைக் கழற்றியது.

தீ உடலினை எரிக்கும்! பார்வையின் தீப்பொறி மனதினை எரிக்கும்!!! 

 

Advertisement