Advertisement

அத்தியாயம் –5

 

 

சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது தூக்கி வந்து இருக்கிறீர்கள்’ என்பது போல் இருந்தது அவன் பார்வை. அவன் பார்வையை புரிந்தவராக அவர் அவனுக்கு வாய்விட்டு பதிலளித்தார்.

 

“ஆதிரா தான் குழந்தைகளை தன்னோடு படுக்க வைச்சுக்கணும் சொன்னாப்பா அது தான் தூக்கி வந்தேன்” என்றார். அவரிடமிருந்து குழந்தையை வாங்கியவன் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான். அவன் பின்னோடு உள்ளே நுழைந்தவள் கவினியை கவினுக்கு அருகில் படுக்க வைத்தாள். அவளின் அந்த செயல் அவனுக்கு மெலிதான ஒரு ஆச்சரியத்தை மட்டுமல்லாமல் அவளை பற்றி அவன் மனதில் ஒரு நல்வித்து விழுந்தது.

அப்படியும் இப்படியும் திரும்பி பார்த்தவளை என்ன என்பது போல் அவன் பார்க்க “இல்லை என்னோட பெட்டியை இங்க தான் வைச்சேன்னு சொன்னாங்க அதான் எங்க இருக்குன்னு பார்த்தேன்” என்றாள்.

 

“அந்த சின்ன அறையில ரெண்டு பெட்டி இருக்கு அதுல ஒண்ணு என்னோடது அந்த இன்னொன்னு உன்னோடதா தான் இருக்கும் போய் பாரு” என்றான் அவன் எழுந்துச் சென்று கதவை அடைத்தவாறே. அந்த அறைக்குள் சென்று கதவை அடைத்து ஆடையை மாற்றி வேறு அணிந்தவள் அங்கிருந்த குளியலறைக்குச் சென்று முகத்தில் நீரை அறைந்து கழுவினாள். வெளியே வந்து அவள் அவிழ்த்து போட்டிருந்த ஆடையை எடுத்து மடித்து அங்கிருந்த கொடியில் உலர்வாக போட்டவள் வெளியே வந்தாள்.

 

கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கு அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று பெரிய போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது. எதுவுமே நிகழாதது போல அவள் சாதாரணமாக நடந்துக் கொண்டது வேறு அவனுக்குள் குழப்பத்தை விதைத்தது. ‘என்னை பற்றி அறிந்து தான் இவள் மணந்தாளாஎன்று ஏதேதோ எண்ணம் அவனுக்குள் விதைந்தது.

 

வெளியில் வந்தவள் கட்டிலின் மறுமுனையில் அமர்ந்தாள், அங்கிருந்த விரிப்பை எடுத்து குழந்தைகளுக்கு போர்த்தினாள். அவன் பேசாமல் அமர்ந்திருந்தவன் அப்போது தான் வாயை திறந்தான். “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். “இம் சொல்லுங்க” என்றாள் அவள்.

 

பேசவேண்டும் என்று சொல்லிவிட்டானேயொழிய எப்படி அதை ஆரம்பிப்பது என்று குழம்பி சற்று மௌனம் காத்தான். “நான் எந்த மாதிரி சுழ்நிலையில உன்னை கல்யாணம் செய்துக் கொண்டேன்னு உனக்கு தெரியுமா, வேற ஒரு கல்யாணம் என் வாழ்க்கையில் வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனா எல்லாரும் சேர்ந்து தான் ஏதேதோ சொல்லி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.

 

“என்னால இன்னும் ஹரிணியோட நினைவுகள்ல இருந்து முழுதா வெளிய வரமுடியலை. இந்த குழந்தைகளை நினைத்து தான் நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். உன்னை பற்றிய எந்த விபரமும் நான் கேட்கவில்லை. சரி என்று அவர்களுக்கு தலையாட்டிவிட்டேன்.

 

“உன்னிடம் நான் கேட்பது எல்லாம் நீ இந்த குழந்தைகளுக்கு ஒரு அன்னையாக இருந்து அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்று உன்னை கேட்டுக் கொள்கிறேன். வேறு எதையும் நீ என்னிடம் எதிர்பார்த்திருந்து வந்திருந்தால்….” என்று திணறியவன் அதை அப்படியே நிறுத்திவிட்டு “என்னிடம் நீ வேறு எதையும் எதிர்பார்க்காதே” என்றான். அவன் வார்த்தைகளே அவனுக்கு பின்னால் கஷ்டத்தை கொடுக்கப் போவதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

அவன் பேசியதில் அவளுக்கு சிறு வருத்தம் வந்தது. எதையும் எதிர்பார்க்காதே என்கிறாரே நான் இவரிடம் எதை எதிர்பார்த்தேன் என்று மனம் குமுறினாள் அவனிடம் “நான் உங்களை பற்றி எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். எனக்கு தெரியும் நீங்க விரும்பி இந்த கல்யாணம் நடக்கலைன்னு, இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளும் யாரும் விரும்பி திருமணம் செய்ய மாட்டார்கள் ஒருசிலரை தவிர, என் மனதில் இந்த குழந்தைகளை தவிர வேறு எண்ணமில்லை.

 

“எனக்கு உங்கள் மனைவி என்ற அந்தஸ்து மட்டுமே போதும், இந்த குழந்தைகளின் தாய் என்ற உயர்வு போதும் எனக்கு, நான் இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டேன்” என்று கூறி கட்டிலில் மறுமுனையில் குழந்தைகளின் மீது அணைவாக கையை போட்டு படுத்துக் கொண்டாள்.

 

அவளின் அந்த பேச்சில் அந்த செயலில் அவன் மனதில் அவள் பல படிகள் உயர்ந்து நின்றாள். கவினி படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட எழுந்து உட்கார்ந்து அவளுக்கு உடுப்பை மாற்றி படுக்கையில் ஒரு விரிப்பை எடுத்து போட்டு அதன் பின் அவளை படுக்க வைத்தாள் அவள். “ஏன் குழந்தைகளுக்கு ஹக்கீஸ் போடவேண்டியது தானே, ஹரிணி அப்படி தான் செய்வா. அப்போ தானே குழந்தைகளும் தொந்திரவு இல்லாமல் தூங்குவாங்க” என்றான்.

 

“ஹக்கீஸ் போடலாம் தான் ஆனா வெளிய போகும் போது போட்டா பரவாயில்லை. வீட்டில இருக்கும் போது நாமே எழுந்து மாத்தலாமே. நாங்க இருந்த வீட்டுக்கு பக்கத்துல நெறய குழந்தைங்க இருப்பாங்க, அப்போ ஒரு குழந்தைக்கு இப்படி இரவு நேரத்துலயும் அவங்க அம்மா ஹக்கீஸ் போட்டு விட்டாங்க, குழந்தைக்கு எப்போ பாத்ரூம் போறா என்றே தெரியவில்லை.

 

“இப்போது பள்ளிக்கூடத்திலும் அவள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துவிடுகிறாள். டாக்டரிடம் கூட்டிப் போனபோது அவர் அந்த குழந்தையின் தாயை தான் சத்தம் போட்டார். குழந்தைகளுக்கு அவசியம் ஏற்பட்டால் தவிர மற்ற சந்தர்பங்களில் அதை உபயோகிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.அதனால் தான் நான் போடவில்லை. அத்தை கூட சொன்னாங்க, நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன். இதுல எதுவும் தப்பில்லையே” என்றாள் அவள்.

 

அவனையறியாமலேயே அவள் கொஞ்ச கொஞ்சமாக அவன் மனதில் உயர்ந்து கொண்டிருந்ததை அவள் அறியாள். அவனுக்கு மனதிற்குள் ஒரு நிம்மதி வந்திருந்தது, இரண்டாம் திருமணம், வருபவள் தன் மக்களை எப்படி பார்த்துக் கொள்வாளோ என்ற பயமிருந்தது அவனுக்கு. ஆனால் இப்போது அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு துளியும் இல்லை. அவள் நடந்து கொண்ட விதத்தினால் அவனுக்கு அந்த எண்ணம் போயிருந்தது.

 

“ஏங்க சொல்ல மறந்துட்டேன், காலையில சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணுமாம் அத்தை நேரமா எழுந்து கிளம்பச் சொன்னாங்க, ஆச்சியும் வராங்களாம் சொல்லச் சொன்னாங்க” என்றாள். “சரி” என்று கூறிவிட்டு அவனும் படுத்துவிட்டான். காலையில் அவனுக்கு முன்னமே எழுந்து குளித்து முடித்து குழந்தைகளையும் எழுப்ப கவினி அவளிடம் வர மறுத்துவிட்டாள்.

 

அவள் கவினை குளியலறைக்கு அழைத்துச் சென்று பல்துலக்கி குளிக்க வைத்து தயாராக்கி கூட்டி வந்தாள். அறைக்குள் ஆள் நடமாட்டம் தெரிந்ததில் ஆதித்தியனும் எழுந்து அமர அவனை ஒட்டி படுத்திருந்த கவினியை “என்னம்மா” என்றான்.

 

கவின் தயாராகி “அப்பா நாம கோவிக்கு போறோம், நான் தான் முதல்ல ரெடி ஆனேன். கவினி கெட்ட பொண்ணு, பாயு குயிக்கல” என்று அவன் தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தான். கவினி “நான் வல்ல நீ போ, என்னை அப்பா குளிப்பாட்டுவாங்க. என்னப்பா” என்றாள் அவள் சலுகையுடன்.

 

“ஏன் கவினி நீ அம்மாகிட்ட போக மாட்டியா, அம்மா உன்னைக் குளிப்பாட்டுவாங்க அவங்க உன்னை நல்லா பார்த்துப்பாங்க. போ நல்ல பொண்ணுல அப்பா சொன்னா கேட்கணும் என் தங்கம்ல” என்றான் அவன்.

 

அவள் பிடிவாதமாக ஆதிராவிடம் செல்ல மறுத்துவிட்டாள். “பரவாயில்லை விடுங்க, நாம அவளை அவ இஷ்டப்படி விட்டுடுவோம், அவளே என்னை புரிஞ்சு ஒரு நாள் வருவா. நாம அவளை கட்டயாப்படுத்தினா அவளுக்கு அதுவே என் மேல வெறுப்பை உண்டாக்கும்” என்றாள் ஆதிரா.

 

ஆதித்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது எப்படி இவள் இவ்வளவு தெளிவாக யோசிக்கிறாள் என்று யோசித்தவாறே கவினியை குளியலறைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி கூட்டி வந்தான். மீண்டும் குளியலறைக்கு சென்று அவனும் குளித்துவிட்டு வந்தான்.

 

அதற்குள் பேச்சி மேலே வந்திருக்க கவினி அவளிடம் தவ்வினாள், “என்னமா ரொம்ப படுத்திட்டாளா” என்றாள். “எங்க அத்தை அவ தான் என்கிட்டவே வரலையே, அவங்க அப்பா தான் குளிப்பாட்டி விடணும் சொல்லிட்டா அவங்க தான் குளிப்பாட்டி கூட்டி வந்தாங்க. நீங்க போய் அவளுக்கு உடுப்பு போடுங்க அத்தை. நானும் கீழே வரேன். கவினை நானே தயார் படுத்திட்டேன்” என்றாள்.

 

“உங்களுக்கு எதாச்சும் எடுத்து வைக்கணுமா” என்றாள் அவள் அவனிடம்.
இல்லை” என்றான் அவன் “ஆனால் ஒரு நிமிஷம்”  என்றான். “இம் சொல்லுங்க” என்றாள்.

 

“இனிமே எனக்காக எதையும் செய்யணும்னு நினைக்காதே. நான் இப்போது தான் என் வேலைகளை நானே பார்த்துக் கொண்டு ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறேன். என் வேலைகளை நானே இனி பார்த்துக் கொள்வேன், நீ குழந்தைகள் பார்த்துக் கொள்ளும் வேலையை மட்டும் பார்” என்று அவன் கூற அவளுக்கு சற்றே கோபம் வந்தது. ‘என்ன பெரிதாக கேட்டுவிட்டேன், இயல்பாக தானே கேட்டேன் அதற்கு போய் இப்படி பேசுகிறாறே’ என்று நினைத்துக் கொண்டாள். அவனின் அந்த பதிலில் மனம் சஞ்சலப்பட எதுவும் பேசாமல் கவினை தூக்கிக் கொண்டு கீழே சென்றுவிட்டாள்.

 

‘ரொம்பவும் திமிர் இவளுக்கு நல்ல பொண்ணுன்னு நினைச்சா எதுவும் பேசாம முறுக்கிட்டு போறா, சரின்னு சொல்லிட்டு போனா இவ கவுரவம் குறைஞ்சு போகுமா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தயாராகி கீழே வந்தான். அனைவரும் தயாராக இருக்க அவர்கள் கோவிலுக்கு கிளம்பினர்.

 

கோவிலுக்கு செல்லவென ஒரு வேனை பிடித்திருந்தனர் அனைவரும் ஏறி அமர்ந்திருக்க லட்சுமி அருகில் அமர்ந்திருந்த பார்வதியிடம் “பார்வதி சந்திரா வந்திடுவா தானே கோவிலுக்கு” என்றார் அவள். “வந்திருவாங்க அக்கா நான் போன் பண்ணி சொல்லிட்டேன், அந்த அண்ணன் அவங்களை கார்ல கூட்டி வந்துடுறேன் சொல்லி இருக்காங்க” என்றார் அவர். “ஆமா அந்த பொண்ணு நேத்ரா எப்போ வர்றாளாம் வெளிநாட்டில இருந்து” என்றார். “இந்த வாரம் வந்திடுவா அக்கா” என்று பதில் அளித்தார் அவர்.

 

என்றுமே வீட்டில் இருந்து வெளியில் வராத அந்த வயதான பெண்மணி கோவிலுக்கு செல்ல வேண்டி வந்திருந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆதிரா கவினுடன் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்த ஆதித்தியன் ஆச்சியின் அருகில் சென்று அமர முயல “ஏன்டா எத்தனை நாளைக்கு என் முந்தானையை பிடிச்சுக்கிட்டு இருப்ப, போய் ஆதிரா பக்கத்துல உட்காரு” என்றார் அவர். காந்திமதியின் அருகில் பேச்சி அமர்ந்து கொண்டார்.

 

ஆச்சி சொல்லி கேட்காமல் இருக்க முடியாது என்று அவன் எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து சென்று ஆதிராவின் அருகில் அமர்ந்தான் ஒரு சலிப்புடன். சங்கரன், கோமதியும் சூர்யாவுடன் வேனில் அமர்ந்திருக்க, கோமதிக்கு சங்கடமாக இருந்தது, ஒரு இயல்பான விஷயம் அதை கூட அடுத்தவர் சொல்லி தான் செய்கிறார் மாப்பிள்ளை தன்னுடைய மகள் என்ன செய்யப் போகிறாள் என்று அவருக்கு வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயல்பாக அமர்ந்திருந்தார்.

 

சூர்யாவோ வழக்கம் போல் தனித்து அமர்ந்திருக்க வேனில் ஏறிய ஆதவன் அவனருகில் சென்று அமர்ந்தான். “என்ன சூர்யா தனியா வந்து உட்கார்ந்து இருக்க, நீ ஜாலியா பேசமாட்டியா. ரொம்ப கூச்ச சுபாவமா உனக்கு. என்னிடம் உனக்கு என்ன தயக்கம் எந்த பயமும் வேண்டாம் இயல்பாக இரு” என்றான்.

 

கீர்த்திகா, சின்ன காந்திமதியும் ஆதர்ஷாவுடன் அமர்ந்து கொள்ள வீட்டின் பெரிய தலைகள் மூவரும் (அது தாங்க ஆதியோட அப்பா அருணாசலம், பார்வதியின் கணவர் உலகநாதன் நம்ம ஆதிராவின் தந்தை சங்கரன்) ஒன்றாக அமர்ந்து தங்கள் கதைகளை பேசிக் கொண்டிருக்க வேன் கோவிலை நோக்கி கிளம்பியது. பின்னிருக்கையில் சூர்யா, ஆதவன் அமர்ந்திருக்க கீர்த்தி வேண்டுமென்றே அங்கு எழுந்து சென்று இயல்பாக அமர்வது போல் சூர்யாவின் அருகில் அமர்ந்துக் கொண்டு ஆதவனிடம் பேச்சு கொடுத்தாள்.

இதைக் கண்ட ஆதர்ஷா பல்லைக் கடித்தாள், இந்த கீர்த்திக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை எப்படி போய் அவன் அருகில் அமர்ந்திருக்கிறாள். அவன் ஒரு பக்கமாக நெளிந்து கொண்டிருப்பதை பார்த்தவள் சற்று நிம்மதி கொண்டாள். அப்பாடா நல்ல வேலை இவனுக்கு அவளை பிடிக்கவில்லை, அது தான் நெளிகிறான் என்று நினைத்தாள்.

 

ஒரு வழியாக கோவிலுக்கு அவர்கள் வந்து சேர்ந்திருக்க பின்னோடே சந்திராவும் அவர் கணவர் கருப்பசாமியும் வந்து இறங்கினர். “வா சந்திரா இப்போ தான் நினைச்சேன் என்னடா இவங்களை காணோமே என்று, வந்துட்டீங்க. என்ன அண்ணா இது நீங்க எங்க கூடவே வந்து இருக்கலாம் இல்லை” என்று அக்கறையாகக் கேட்டுக் கொண்டார் லட்சுமி.

 

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கல் வைக்க ஏற்பாடு செய்ய ஆதித்தியன் தனியே நடந்து சென்றான். “ஆதர்சு இங்க ஆச்சிட்ட வாடா, என் கைபிடிச்சு இப்படி உட்கார வைடா செல்லம்” என்றாள். “ஆச்சி நீ என்னை இப்படி கூப்பிடாதே சொன்னால் கேட்க மாட்டியா. சரி வாங்க” என்று அவரை கைத்தாங்கலாக தூக்கி உட்கார வைத்தாள்.

 

“ஆச்சி நீங்க எதுக்கு அவளை கூப்பிடுறீங்க, என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல ஆச்சி, இவ தான் வேலை செய்யணும்னா மூக்கால அழுவா” என்று முன்னால் வந்தான் ஆதவன். “உன்னை யாராச்சும் இங்க கூப்பிட்டாங்களா, பெரிய ஆம்பிளை சிங்கம் வந்துட்டார் நாட்டமை தீர்ப்பு சொல்ல” என்று ஆதவனுடன் மல்லுக்கு நின்றாள் அவள்.

 

“ஆதர்சு சின்னவனை அப்படி எல்லாம் பேசக்கூடாது, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவன் ஆம்பிளை சிங்கம் தாண்டி, போபிள்ளை போய் அம்மைக்கு எதாச்சும் வேணுமான்னு கேட்டு உதவி செய்” என்று அவளை அடக்கி அனுப்பி வைத்தார்.

 

“சே ஆம்பிளை சிங்கமாம், இம்” என்று பொருமியவாறே நடந்தவள் எதிரில் சூர்யா வந்து கொண்டிருக்க வாயை மூடிக்கொண்டாள். அதற்குள் கீர்த்தியும் சின்ன காந்திமதியும் அவன் பின்னோடு வந்தனர். ‘இவ எங்க இவன் பின்னாடியே வர்றா’ என்று மேலும் காந்தினாள் அவள்.

 

கோவிலுடன் இணைந்து அழகாக அங்கு நீரோடிக் கொண்டிருக்க கவின் சூர்யாவிடம் சென்று சேர்ந்து கொள்ள “மாமா நாம்ம போய் தண்ணில குயிக்கலாம்” என்று அவனோடு சென்று அந்த நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். கவினிக்கும் அவனோடு சென்று விளையாடும் ஆசைமிக ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தவளை சூர்யா பார்த்துவிட வா என்று சைகையில் அழைத்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த ஆதர்ஷா கவினியை அவனிடம் தூக்கிச் சென்றாள். அவளையும் அவன் நீரில் விளையாடவிட அவளுக்கு சூர்யாவை பிடித்துவிட்டது. அவனிடம் ஆவலுடன் ஒட்டிக் கொண்டாள்.

ஆதர்ஷாவை வெறுப்பேற்றுவது போல் கீர்த்தி அங்கு வந்து சேர்ந்தாள், “அத்தான் நீங்க இங்க தான் இருக்கீங்களா, உங்களை தான் அத்தான் தேடிக் கொண்டிருந்தேன்” என்றாள் அவள். ‘அய்யோ என்று அலறாத குறையாக அவன் பார்க்க’ “என்னடி அத்தான் பொத்தான்னு கூப்பிட்டுகிட்டு” என்று சிடுசிடுத்தாள் ஆதர்ஷா.

 

“என்னடி நீ, நான் சரியா முறையா தான் கூப்பிட்டேன், இவர் எனக்கு கட்டிக்கற முறை தானே அதாவது மாமன் மகன் போல தான்னு சொன்னேன். அப்படினா நான் இவரை அத்தான்ன்னு தானே கூப்பிடணும்” என்று ஒரு வெடியை கொளுத்தினாள் அவள்.

 

ஆதர்ஷாவுக்கு இவளை சமாளிப்பதே பெரும் வேலையாக இருந்தது, ‘அவனிடம் பேசலாம் என்று வந்தால் இவள் வந்து என் உயிரை குடிக்கிறாளே’ என்று அவளை மனதிற்குள் வைதாள் அவள். இவர்கள் பேச்சில் சூர்யா குழந்தைகள் இருவரையும் கூட்டிக் கொண்டு அந்த இடத்தை காலி செய்திருந்ததை அப்போது தான் அவள் உணர்ந்தாள். எல்லாம் இவளால வந்தது என்று அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்.

 

கீர்த்தி எப்போதும் கலகலப்பானவள் யாரிடமும் எந்த விகல்பமும் இல்லாமல் பழகுபவள் அவளுக்கு ஆதர்ஷாவை ஓரளவு புரிந்திருந்தது. வேண்டுமென்று அவளை சீண்டினாள் அவள். “பாரு நீ என்னை கேள்வி கேட்டுட்டு இருந்ததுல நான் அத்தான் போனதையே பார்க்கல, அத்தான் அத்தான் எங்கே போய்விட்டீர்கள் அத்தான்” என்று அவள் அங்கிருந்து நகர்ந்த போது ஆதர்ஷா மேலும் மேலும் ஆத்திரமடைந்தாள்.

 

ஆதிராவையே காந்திமதி பொங்கல் வைக்க சொல்ல மற்றவர்கள் அவளுக்கு உதவி செய்தனர். ஒருவழியாக எல்லோரும் பொங்கல் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று வழிப்பட்டு விட்டு வந்து அங்கேயே விரிப்பை விரித்து சாப்பாட்டை எடுத்து வைக்க பெண்கள் பரிமாற ஆண்கள் முதலில் சாப்பிட்டனர். ஆதர்ஷா சூர்யாவிற்கு பொங்கல் வைக்க கீர்த்தி இட்லியை தூக்கிக் கொண்டு வந்தாள். “அத்தான் என்ன வேணுமோ கூச்சப்படாம கேளுங்க, நானே வந்து வைக்கறேன்” என்றாள் அவள். “இல்லைங்க எனக்கு போதும்” என்று அவன் எழுந்துவிட்டான்.

 

“ஏண்டி அவரை நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டியா” என்று ஆதர்ஷா அவளிடம் மீண்டும் கடிந்தாள், “அடி போடி இவளே” என்று கூறி அவள் அவன் பின்னே சென்றாள். ஆதித்தியனுக்கு என்ன வேண்டுமோ கேட்டு பரிமாறுமாறு லட்சுமி கூற “சரி அத்தை” என்றவள் அவனிடம் சென்று “அத்தை தான் உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு வைக்கச் சொன்னாங்க, காலையில சொன்னது போல முகத்தில அடிச்ச மாதிரி எதுவும் சொல்லிடாதீங்க” என்றாள் அவள்.

 

“ரொம்பவும் கொழுப்புடி” என்றான் அவன். “என்ன சொன்னீங்க கேட்கலை” என்றாள் அவள். ‘இவளுக்கு ரொம்பவும் திமிர் இருக்கும் போலிருக்கிறதே, காலையில் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டு இப்போது வந்து நான் முகத்தில் அறைந்தது போல் பேசுகிறேன் என்று என்னிடமே வந்து சொல்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டவன் “என்னங்க என்ன வைக்கட்டும் உங்களுக்கு” என்றாள். “இம் அந்த சட்டியை என் தலையில போடு” என்று மனதிற்குள் நினைத்ததை அவனையறியாமல் வெளியில் சொல்லிவிட்டான்.

 

“அப்படியே செய்துவிடுவேன், ஆனால் எல்லாரும் இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு “இந்தாங்க இட்லி சாப்பிடுங்க, பொங்கல் வைக்கிறேன், இந்த வடை சாப்பிடுங்க” என்று அவன் தட்டில் அடுக்கினாள் அவள். “என்னமா ஆதிரா விழுந்து விழுந்து உன் புருஷனையே கவனிக்கற, கொஞ்சம் எங்களையும் கவனிம்மா” என்றார் சந்திரா.

 

“இதோ வரேன் சித்தி” என்று மற்றவர்களையும் கவனித்தாள். “சித்தி நேத்ரா எப்போ வருவா, எனக்கு அவளை பார்க்கணும் அவகிட்ட நெறைய பேசணும்” என்றாள் அவள்.

 

“இந்த வாரம் வர்றேன்ன்னு சொல்லியிருக்கா ஆதிரா, உன் கல்யாணத்துக்குகூட உன் நெருங்கிய சினேகிதி இல்லாம போயிட்டான்னு வருத்தப்படாதேம்மா. எல்லாம் அந்த ட்ரைனிங்கால வந்தது. சரியா உன் கல்யாண சமயத்துல அவ அங்க போய் மாட்டிகிட்டா” என்றார் சந்திரா. “அண்ணாவாச்சும் வந்திருக்கலாம் தானே சித்தி, அவங்களும் வரலையே” என்று அவள் வருந்த.

 

அவர் “என்னம்மா செய்ய அவன், அவன் நண்பனோட கல்யாணம் டெல்லியில் நடக்குதுன்னு போய்ட்டான்ம்மா. நீங்க சென்னை வந்ததும் கண்டிப்பா வந்து பார்ப்பான். நீ எதுவும் நினைக்காத ஆதிரா” என்றார்.எல்லோரும் சாப்பிட்டு மேலே அகத்தியர் அருவியையும் காரையார் டேம்மும் பார்க்கக் கிளம்பினார்கள். ஆச்சியால் அதற்கு மேல் இருக்க முடியாது என்று உணர்த்து அவருக்கு தனியாக ஒரு காரை அமர்த்தி பேச்சியுடன் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலே ஏறியபின் அவர்கள் அகத்தியர் அருவிக்கு செல்ல டிக்கெட் வாங்கி படகில் ஏறி அமர்ந்தனர். ஒரே படகில் அனைவரும் ஏற முடியாததால் பெரியவர்கள் ஒரு படகில் செல்ல, சின்னவர்கள் அனைவரும் அடுத்த போட்டில் ஏறினர்.

 

ஆதியின் அருகில் ஆதிரா அமர, ஆதவனும் சூர்யாவும் அருகருகே அமர்ந்து கொள்ள, கவினை ஆதிரா மடி மீது அமர்த்தினாள். கவினி சூர்யாவுடன் சேர்ந்து கொண்டு அவனை விட்டு கிழிறங்கவில்லை. சின்ன காந்திமதி பெரியவர்களுடன் படகில் சென்றுவிட கீர்த்தி ஆதர்ஷாவின் உயிரை குறைக்கவென்று இந்த படகில் ஏறினாள்.

பெரியவர்கள் படகு முன்னே சென்று கொண்டிருக்க, இவர்கள் படகு அடுத்து புறப்பட்டது. ஆதிராவிற்கு தண்ணீரை கண்டால் பயம், படகு லேசாக ஆட்டம் கொடுக்க, அருகிலிருந்தவனின் கைகளை தன்னையறியாமல் பற்றிக் கொண்டாள்.

 

‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க “பயமாயிருக்கு” என்றாள் அவள். கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட வாயடிச்ச பொண்ணா இது என்று நினைத்தவனுக்குள் அவளின் பயமாயிருக்கு என்ற வார்த்தை வேறு ஏதோ நினைவுகளை கிளற அவன் அமைதியடைந்துவிட்டான்.

 

“ஆதவன் அண்ணா” என்றாள் கீர்த்தி. “யார் அது இப்போ என்னை அண்ணான்னு கூப்பிட்டது” என்று அவன் அங்குமிங்கும் சுற்றி பார்க்க, “அண்ணா நான் தான் கூப்பிட்டேன்” என்றாள் கீர்த்தி. அவளை கிள்ளியவன் “நெஜமாவா கூப்பிட்ட” என்றான் அவன் சற்றும் ஆச்சரியம் குறையாமல்.

 

 “சூர்யா என்ன இப்படி பார்க்குறீங்க, இந்த மகராசி என்னை மரியாதையா இப்போ தான் கூப்பிட்டு இருக்கா, இல்லைனா டேய் ஆதவா என்று தான் அழைப்பாள், கேட்டால் அது தான் மிகப்பெரிய மரியாதையான வார்த்தை என்று கூறுவாள். சொல்லும்மா கீர்த்தி எதுக்கு என்னை கூப்பிட்ட” என்றான் அவன்.

 

“ஏதோ மரியாதை கொடுத்தேனே என்று நீ பார்க்காமல் அத்தானிடம் வேறு என்னை பற்றி ஏதேதோ கூறுகிறாயே. அவர் என்னை பற்றி என்ன நினைப்பார்” என்று அவனிடம் கேட்டாள். “என்னது அத்தானா, அது யாரம்மா உனக்கு அத்தான், சூர்யாவையா அப்படி சொல்கிறாய். உனக்கு மரியாதையாக பேச வரும் என்பதே எனக்கு இன்று தான் தெரிகிறது” என்றான் ஆதவன் மீண்டும். ஆதர்ஷாவிற்கு கொதித்தது, சூர்யாவோ பேசாமடந்தையாக இருந்தான்.

 

அப்போது தான் யதேச்சையாக ஆதர்ஷாவை அவன் பார்க்க அவளும் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள், இவள் ஏன் இப்படி பார்க்கிறாள் அக்கா தங்கை எல்லாம் லூசு போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான் அவன்.அவன் பார்வை தன் தமக்கையின் மீது பாய அவள் ஆதித்தியனின் கையை பயத்துடன் இறுக பற்றி இருந்தது அவனுக்கு எதையோ புரிய வைத்தது.

 

அவர் யாரோ ஒருவர் என்றால் அக்கா அவர் கையை பற்றி இருப்பாளா, பயமாக இருந்தால்கூட அவள் சொல்லியது போல் அவள் அத்தானை பிடித்து தான் மணந்திருகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. இனி அவளை பற்றி எந்த கவலையும் படவேண்டாம் என்று நினைத்தவனுக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்தது, அக்காவிற்கு பிடித்திருக்கிறது சரி அத்தானுக்கு அக்காவை பிடித்திருக்கிறதா என்பது தெரியவில்லையே என்று அவன் மனம் மீண்டும் முரண்டியது. அக்கா நம்மையே சமாளித்து ஒருவழியாக அவரை திருமணம் செய்து கொண்டாள், அவள் வாழ்க்கையை நிச்சயாமாக அவள் நல்லபடியாக வாழ்வாள் என்ற எண்ணம் வந்ததும் அவனும் சற்று உற்சாகமானான். ஆதவனுடன் சந்தோசமாக சிரித்து பேசி என்று சகஜமாக இருந்தான்.

 

படகு அவர்களை அருவிக்கரையில் இறக்கிவிட்டு செல்ல ஒருவழியாக எல்லோரும் அருவியில் குளித்துவிட்டு மீண்டும் படகில் ஏறினர். இந்த முறை சற்று பெரிய படகாக இருந்ததால் அனைவரும் ஒரே படகில் சென்றனர். ஆதித்தியன் சங்கரனை நோக்கி “மாமா நாளைக்கு நீங்க கொஞ்சம் ஓய்வா இருந்தா அந்த வயலை பார்க்க எல்லோருமா போய்ட்டு வரலாமே, என்னப்பா சொல்றீங்க என்னம்மா போகலாம் தானே” என்றான்.

 

“என்ன ஆதி சொல்ற நாளைக்கு இரவு நாம ஊருக்கு ரயில் ஏறணும்ப்பா எல்லாருக்கும் இன்னைக்கு போய்ட்டு வந்த களைப்பு இருக்கும் இல்லையா” என்றார் லட்சுமி. “பரவாயில்லை லட்சுமி நாம காலையில நேரமா எழுந்து போய்ட்டு வந்துடலாம், அவனே எல்லாரையும் கூட்டி போய் காட்டுறேன் சொல்றான். நீ ஏன் வேணாங்கற” என்றார் அருணாசலம்.

 

“சரி மாப்பிள்ளை நாம போகலாம்” என்று ஆமோதித்தார் சங்கரன். “சந்திரா அத்தை, மாமா நீங்களும் தான். சித்தப்பா, சித்தி நீங்களும் தான் வரவேண்டும்” என்றான். கருப்பசாமி அவசரமாக “இல்லை மருமகனே நாளைக்கு நாங்க காலம்பறேயே கிளம்பறோம், நீங்க போய்ட்டு வாங்க எங்க போய்ட போகுது நாங்க அடுத்த வட்டம் வந்து பார்க்குறோம்” என்றார் அவர்.

 

எல்லோரும் படகை விட்டு இறங்கி வேனில் ஏறிக்கொள்ள, ஆதிராவுக்கு அவன் தன் அன்னையையும் சூர்யாவையும் அழைக்கவில்லை என்று வருத்தமாக இருந்தது. சந்திராவும் கருப்பசாமியும் அங்கிருந்தே அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறிச் சென்றுவிட்டனர்.

 

பின்னர் வேனில் ஏறி அவர்கள் கிளம்பினார். ஆதி சூர்யாவிடம் சென்று அமர்ந்தான், “சூர்யா நாளைக்கு நீயும் தான் வர்ற உனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருக்குன்னு மாமா சொன்னாங்க, நீ வருவதானே” என்றான்.

 

ஆதித்தியன் அவனிடத்தில் வந்து பேசியதே அவனுக்கு பெரிய விஷயமாக இருந்தது “கண்டிப்பா வருவேன் அத்தான், எனக்கு தெரிஞ்சதை நானும் உங்களுக்கு சொல்லலாமா” என்றான். “கண்டிப்பா சொல்லலாம்” என்றான் ஆதியும் இசைவுடன். கோமதியிடமும் தனியாக சென்று அவரை அழைத்தான், ஆதிராவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

 

“நாங்க யாரும் வரமாட்டோம்” என்ற குரல் கேட்க யார் அது என்று திரும்பி பார்த்தான் அவன்…..

 

 

மொழிபெயர்ப்பே

தேவையில்லாத

ஒரு மொழி கண்கள்

பேசும் காதல் மொழி…

 

பயத்தில் உன் கைத்தலம்

பற்றிய என் கையை

பற்றி உனக்காக

நானிருக்கிறேன்

என்பதாய்…

உன் கண்கள் பேசிய

மொழியில் என்

உள்ளம் உருகி போனேன்…

 

இயல்பாய் உன்னிடம்

பேசமுடியுமாவென்று

ஏங்கிய பல பொழுதுகள்

போய் இயல்பாய்

என்னருகில் நீ அமர்ந்த

அந்த தருணம் என்

மெய் சிலிர்த்துப் போனேன்…

 

 

அத்தியாயம் –6

 

 

“நாங்க யாரும் வரமாட்டோம்” என்ற குரல் கேட்க யார் அது என்று திரும்பி பார்த்தான் அவன்.‘நினைச்சேன், நீயாதான் இருக்கும்ன்னு நினைச்சேன், உனக்கு என்னம்மா பிரச்சனை, சொல்லும்மா கீர்த்தி” என்றான் ஆதி. “நீ எல்லாரையும் கூப்பிட்ட, எங்களை நீ கூப்பிடவே இல்லையே” என்று பொய்யாக சலித்தாள் அவள்.

 

“மகாராணி அவர்களே தயை கூர்ந்து நாளை நீங்களும் எங்களுடன் வருவீர்களாக” என்றான் அவன் கிண்டலாக. “போதுமேன்னே ரொம்ப கேலி செய்யாத, ஏதோ நீ வா வான்னு கூப்புடுறதுனால நான் வர்றேன்” என்று மேலும் அலும்பல் செய்தாள் அவள்.

 

“சித்தி எப்படி இவளை சமாளிக்கறீங்க, இவ ராகு காலத்துல பிறந்து இருப்பாளோ அதான் நம்மளை இந்த வாட்டு வாட்டறா” என்று அவளை மேலும் வாரினான் அவன்.

 

“என் பேராண்டி சரியாதான் சொல்றாப்புல” என்று காந்திமதியும் சொல்ல “போங்க யாரும் என்கூட பேச வேணாம்” என்றவள் அதற்குள் வேன் வீட்டிற்கு வந்துவிட முதல் ஆளாக லட்சுமியுடன் இறங்கியவள் “பெரியம்மா அருவியில குளிச்சதுல எனக்கு ரொம்ப பசிக்குது. வீட்டில என்ன இருக்கோ அதை போடுங்க நான் சாப்பிட்டு எங்க வீட்டுக்கு போகணும்” என்று லட்சுமியின் பின்னே சென்றாள் அவள்.

“ஹேய் தோத்தான்குளி தோத்தான்குளி” என்று ஆதர்ஷா அது தான் சமயமென்று அவளை வாரினாள். ‘என்னையா கலாட்டா பண்ற, நாளைக்கு வச்சுக்கறேண்டி கச்சேரியை’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவள் அதி முக்கிய வேலையான உணவருந்தும் வேலையை பார்க்கச் சென்றாள்.

 

சங்கரன், கோமதி, சூர்யா எல்லோரிடம் விடைபெற்று கிளம்ப “என்ன மதினி நேத்தும் நீங்க இங்க தங்கலை இன்னைக்கும் கிளம்பிட்டீங்க, நாளைக்கு எல்லாருமே ஊருக்கு தானே புறப்பட போறோம். இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிக்கலாமே” என்றார் லட்சுமி.

 

“பரவாயில்லை இருக்கட்டும் மதினி, இவங்க அத்தைக்கு வர்றோம் சொல்லிட்டு வரலைன்னா கோபம் வந்துடும். நாங்க காலையில கிளம்பும் போது வீட்டுக்கு வந்துடுவோம்ன்னு சொல்லிட்டு தான் வந்தோம். நாங்களே வருஷத்துக்கு ஒரு தரம் தான் இப்போ எல்லாம் வர முடியுது, ரொம்பவும் சங்கடப்பட்டு போயிடுவாங்க. தப்பா எடுத்துக்காதீங்க நாங்க கிளம்பறோம்” என்று விடைபெற்று சென்றனர் ஆதிராவின் குடும்பத்தினர்.

 

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு அலுப்பில் விரைவாகவே படுக்கச் சென்றனர். குழந்தைகளை ஆளுக்கு ஒருவராக தூக்கிக் கொண்டு ஆதியும் ஆதிராவும் அவர்கள் அறைக்கு சென்றனர். ஆதிரா அலுப்பில் படுத்ததும் உறங்கிவிட, ஆதித்தியனுக்கு உறக்கம் தொலைந்தது.

 

வரும் வழியில்கூட யோசனையாக இருந்தவன் ஒருக்களித்து படுத்துக் கொண்டு அவளை பார்த்தான். ‘எப்படி என்னால் இவளுடன் சகஜமாக இருக்க முடிந்தது’ என்பதே அவனுடைய யோசனையாக இருந்தது. படகில் பயத்தில் அவள் அவன் கையை பிடித்த போது எப்படி என்னால் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள முடிந்தது.

 

உடன் பிறந்த தங்கையை டி என்று சொல்வது கூட பிடிக்காத நான் ஏன் அவளை டி போட்டு பேசினேன். காலையில் கோவிலில் அவளுடன் வார்த்தையால் மல்லு கட்டும் போது வெகு இயல்பாக அவனால் அவளுடன் பேசமுடிந்ததை எண்ணி குழம்பிக் கொண்டிருந்தான் அவன்.

 

 

ஹரிணியை எப்படி மறந்தோம், அவளுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையை எப்படி மறந்து இவளுடன் சகஜமாக என்னால் உரையாட முடிந்தது என்று பலவிதமாக அவனுக்குள் குழப்பம் நிலவியது.

 

ஏதேதோ யோசித்து குழம்பியவன் இனி அவளிடம் சற்று கடுமையுடனே நடந்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்த பின்னே உறக்கம் ஒருவாறு அவனை தழுவியது. தன் எண்ணம் காற்றோடு போகப்போவது அறியாமல் அவன் நித்திரையில் ஆழ்ந்தான்.இரவில் வெகுநேரம் விழித்திருந்ததால் அவனால் காலையில் நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை.

 

“அப்பா, அப்பா என்ற குரல் கேட்க கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தவன் எதிரில் ஆதிராவும் கவினும் இருக்க ஆதிரா அவனிடம் “இல்லை நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம், நீங்க மட்டும் தான் இனி கிளம்பணும், நைட் நீங்க ரொம்ப நேரம் தூக்கம் வராம புரண்டு படுத்துட்டு இருந்தீங்க அதுனால தான் உங்களை நான் சீக்கிரம் எழுப்பல, எல்லாரும் இப்ப தான் சாப்பிட்டு இருக்காங்க அதுக்குள்ள நீங்க எழுந்து குளிச்சுட்டு வந்துடுவீங்கள்ள என்றாள்.

 

பதறி எழுந்தவன் “தேங்க்ஸ் நான் ஒரு பத்து நிமிஷத்துல கீழே வரேன் என்று அவசரமாக துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறைக்கு விரைந்தான். ஆதிரா கவினை தூக்கிக் கொண்டு கீழே செல்ல அவன் சொன்னது போல் பத்து நிமிஷத்தில் கீழிறங்கி வந்தான். அதற்குள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க அவள் சமையலறையில் இருந்தாள்.

 

“ஆதிரா ஆதிக்கு போய் டிபன் எடுத்து வைம்மா, அப்படியே நீயும் சாப்பிடும்மா என்று அவளை அனுப்பி வைத்தார் லட்சுமி. “உங்களுக்கு டிபன் வைக்கட்டும்மா, அத்தை தான் கேக்க சொன்னாங்க என்று சேர்த்து சொன்னாள்.

 

“இம் என்றவன் உணவு மேஜையில் அமர அவள் அவன் தட்டில் இட்லியும், வடையும் வைத்து சட்டினியும் சாம்பாரும் ஊற்றினாள். அவளுக்கு நேற்றைய ஞாபகத்தில் சிரிப்பு வர “என்ன என்றான் அவன். “இல்லை, நீங்க நேத்து சொன்ன மாதிரி இன்னைக்கு சொல்லி இருந்தீங்கன்னா நான் இந்த சாம்பாரை உங்க மேல ஊத்தி இருப்பேன் என்றாள். அவன் முகம் மாறுவதை கவனித்திருந்தால் அவள் அவனிடம் அது போல் பேசி இருக்க மாட்டாள்.

 

அவன் சாப்பிட்டு முடித்ததும் அவள் அவனுக்கு சுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள். “என்ன இது என்றான் அவன். “காபி என்றாள் அவள். “சாப்பிட்டு காபி சாப்பிடுற பழக்கம் எனக்கில்லை என்றான். “ஆச்சி தான் கொடுக்க சொன்னாங்க என்றாள் அவள்.

 

“என்ன சும்மா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு யாராச்சும் ஒருத்தர சொல்லிட்டே இருக்க, சாப்பாடு வைக்க சொன்னது அம்மான்னு சொன்ன, இப்போ ஆச்சி தான் காபி கொடுக்க சொன்னாங்கன்னு சொல்ற, என்ன விளையாடுறியா என்றான் அவன்.

 

 

“ஆச்சி சுக்கு காபி நீங்க தானே அவங்களுக்கு கொடுக்க சொன்னீங்க என்றாள் அவள். “ஆமாம்ப்பா ஆதி நீ நைட் சரியா தூங்காம நேரம் கழிச்சு தான் தூங்கினியாம் பேத்தி சொல்லிச்சுப்பா, நீ காபியை வாங்கி குடி கொஞ்சம் சுருசுருப்பாக இருக்கும்ப்பா, சாப்பிட்ட சாப்பாடும் செரிச்சு போகும் என்று அவர் விளக்கம் கொடுக்க, வேறு வழியில்லாமல் அதை வாங்கி குடித்தான் அவன்.

“நீ கொஞ்சம் மேல வா, உன்கிட்ட பேசணும் என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான். அவளுக்கு சற்று உதறலாக இருந்தது, எல்லோரும் இருக்கும் போது அவனிடம் சகஜமாக பேச முடிந்த அவளால் அவனிடம் தனியாக பேசவேண்டும் என்று நினைத்தால் கைகள் சில்லிட்டு போயின.

 

காலையில் கூட அவனை எழுப்ப அவள் கவினையே தூக்கி சென்றதும் ஞாபகம் வர வேறு வழியில்லாமல் அவள் படியேறி சென்றாள். அவள் உள்ளே வந்ததும் கதவை அடைத்தவனது செய்கை அவளுக்கு பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது. அவள் இதயத்துடிப்பு பலமடங்காக எகிறியது.

 

“என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல, என் மேல அக்கறை காட்டற வேலை எல்லாம் வேணாம்ன்னு நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன், அப்புறமும் ஏன் இப்படி நடந்துக்கற. நீ விளையாடவும் கிண்டல் பண்ணவும் நான் தான் கிடைச்சேனா உனக்கு, நேத்து என்னடான்னா சட்டிய தலையில போடுவேன் சொல்லற, நீ சீண்டி விளையாட நான் ஒண்ணும் புது மாப்பிள்ளை இல்லை, எனக்கு நேத்து தான் கல்யாணம் ஆச்சுன்னு நினைச்சுட்டு இருக்கியா, நான் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பன். இனிமே என்கிட்ட இப்படி நடந்துக்காதே என்று கோபமாக பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டான்.

 

அவன் சென்ற பின் மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தவள் எவ்வளோ நேரமாக அழுதிருப்பாளோ, ஒருவாறு தன்னை சமன்படுத்திக் கொண்டு எழுந்து சென்று குளியலறையில் சென்று நீரை எடுத்து முகத்தில் அடித்து கழுவினாள். அதற்குள் கீழே சென்றவன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க லட்சுமி அவனைத் தேடி வந்தார்.

 

“ஆதி, மருமக எங்கப்பா ரொம்ப நேரமா ஆளை காணோம். அவங்க அம்மா அப்பா வந்துட்டா நாம கிளம்ப வேண்டியது தானே என்றார் அவர். “என்னம்மா என்னை கேட்குறீங்க, அவ உங்ககூட தானே இருப்பா என்றான் அவன்.“இல்லைப்பா, உனக்கு டிபன் வைச்சுட்டு அவளையும் சாப்பிட சொன்னேன் அதுக்கு அப்புறம் நான் அவளை பார்க்கலியேப்பா என்று அவர் கூற அவன் முகம் இருண்டது.

 

“மேல இருக்கான்னு நினைக்கிறேன்ம்மா என்றான். “சரிப்பா நீ போய் அவளை கூட்டிட்டு வா, சம்மந்தி வந்துட்டாங்கன்னா நாம கிளம்பணும்ல என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிராவின் பெற்றோர் உள்ளே நுழைந்தனர். லட்சுமியும் அருணாசலமும் அவர்களை வரவேற்க ஆதி யோசைனையுடனே மாடிக்குச் சென்றான்.

 

‘நாம் அவளை அதிகமாக திட்டிவிட்டோமோ, என்ன செய்து கொண்டிருப்பாள். வெகுநேரமாக ஆகிவிட்டதே. அவள் சாப்பிடகூட இல்லை போல் இருக்கிறதே. நாம் எதுவும் சொல்லவில்லை என்றால் அவளும் நம்மிடம் அக்கறை எடுத்துக் கொண்டு தேவையில்லாமல் நம் விஷயத்தில் மூக்கை நுழைப்பாள் நாம் பேசியது சரி தான் என்று இருவேறாக அவன் மனம் குழம்பிக் கொண்டே மாடியேறி வந்தான். அவர்கள் படுக்கையறையில் அவள் இல்லை, அதை அடுத்து இருந்த அறைக்குச் சென்றான் அவன், அங்கிருந்த குளியலறையில் நீர் கொட்டும் சத்தம் கேட்க அவளை எப்படி அழைப்பது என்று யோசித்தான்.

 

இந்த இரண்டு நாளில் அவன் அவளை பெயரை சொல்லி அழைத்ததில்லை. என்ன செய்வது என்று யோசித்தவாறே வெறுமென கதவை தட்டினான். “யாரு என்றாள் அவள் உள்ளிருந்தவாறே “நான் தான் சீக்கிரம் கிளம்பணும், அத்தை, மாமா, சூர்யாகூட வந்தாச்சு. எல்லாரும் உனக்காக தான் காத்திட்டு இருக்கோம் என்றான். “நீங்க கீழே போங்க நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில வந்திடுறேன் என்றாள் அவள்.

 

கீழே செல்ல நினைத்தவன் அவள் அழுதிருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற யோசைனையுடன் கட்டிலின் ஒரு புறம் சென்று அமர்ந்தான். அவன் சென்றிருப்பான் என்று குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் முகத்தை துவாலையில் துடைத்தவாறே வெளியே வர முகத்தை துடைத்து நிமிர்ந்தவள் அவன் வெளியில் செல்லாமல் கட்டில் அமர்ந்திருந்ததில் சிறிது அதிர்ந்தாள்.

 

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “நான் வந்திடுறேங்க நீங்க கீழே போங்க என்றாள். “பரவாயில்லை நீ கிளம்பு நான் காத்திருக்கிறேன் என்றான் அவன். அவள் முகம் அழுது வீங்கி இருந்தது அவன் கண்ணில் பட்டது. அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்தது, தான் ரொம்பவும் அவளை காயப்படுத்திவிட்டோமோ, அவள் யதார்த்தமாகத் தான் பேசியிருப்பாள். நாம் தான் தேவையில்லாமல் பேசிவிட்டோம் என்று அவன் மனம் எண்ணியது.

 

அவள் முகத்தில் பவுடரை ஒற்றினாள் அப்போதும் முகம் வீங்கியது போல் தோன்ற எப்போதாவது அஞ்சனை தீட்டுபவள் அவள் முகவாட்டம் தெரியாமலிருக்க அஞ்சனை தீட்டினாள். பின் முகத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு ஒரளவு திருப்தி வந்திருந்தது. போகலாம் என்பது போல் அவனிடம் அவள் தலையை ஆட்ட அவளை நேருக்கு நேர் பார்த்தவனுக்குள் ஒரு மின்னல் வந்து போனது.

 

இவள் கண்கள் இவ்வளவு அழகா, கண்கள் பேசும் என்று சொல்லி கேள்விபட்டிருகிறான். ஆனால் அது பேசியதை அவன் இன்று தான் பார்க்கிறான். அவள் விழிகளை ஊடுருவியவனைப் பார்த்து மீண்டும் போகலாம் என்பது போல் அவள் தலையசைக்க தன்னையறியாமல் அவன் தலை ஆடியது. மந்திரம் போட்டது போல் அவள் பின்னே சென்றான்.

 

இருவரும் ஒன்றாக கீழிறங்கி வந்ததை பார்த்த கோமதிக்கு மனம் குளிர்ந்தது. எல்லோரும் கிளம்ப வேன் வந்திருந்தது. “அம்மா நீங்க எல்லாரும் வேன்ல வந்திடுங்க, நான் கார்ல வந்திடுறேன். வேன் டிரைவர்க்கு வழி சொல்லிட்டேன், சரவணன் அங்க எனக்காக சீக்கிரம் வரேன்னு சொன்னான். நீங்க மாமா, அத்தை, சூர்யா சாப்பிட வைங்க. நான் முதல்ல போறேன் என்றான். “ஏன்பா, ஆதிராவையும் குழந்தைகளையும் நீ கார்ல கூட்டிட்டு போயிடுப்பா, நாங்க எல்லாரும் வேன்ல வர்றோம் என்று அருணாசலம் சொல்ல “சரிப்பா என்று அவன் அவளைப் பார்க்க வழக்கம் போல் கவினி அவளிடம் வர மறுக்க அவளை வேனில் கூட்டி வருவதாக லட்சுமி சொல்லிவிட்டார்.

 

ஆதிரா கவினை தூக்கிக் கொண்டு காரின் முன்பக்கம் ஏறி அமர்ந்துக் கொள்ள அவன் காரை கிளப்பினான். வழியெங்கும் அது என்ன இது என்ன என்று கவின் கேள்விகளாக கேட்க அவள் சளைக்காமல் அவனுக்கு விளக்கி கொண்டிருந்தாள். அதை கண்டவனுக்கு உள்ளுர அவளின் மீது ஒரு மதிப்பு உருவானது.

 

தன் பிள்ளைகளாக அவள் அவர்களை பாவிப்பதை அவன் புரிந்திருந்தான். மீண்டும் அவள் அழுதது அவனுக்கு நினைவுக்கு வர பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்தான். அவன் அவளை பார்ப்பதை திரும்பி பார்க்காமலே அவள் உணர்ந்தாள். அவள் முகம் வேர்ப்பது கண்டு இந்த ஏசியிலும் இவளுக்கு ஏன் இப்படி வியர்கிறது என்று நினைத்தான்.

 

 

வண்டி பக்கவாட்டில் சென்ற ஒரு சாலையில் திரும்பி சிமென்ட் ஓடு வேயப்பட்டிருந்த அந்த வீட்டின் முன் நின்றது. அந்த வீட்டின் முன் ஒரு இருசக்கர வாகனம் நின்றிருக்க அதன் மீது சாய்ந்துக் கொண்டு நின்றவன் கார் வருவதைக் கண்டதும் அருகில் விரைந்து வந்தான்.

 

காரில் இருந்து இறங்கியவர்களை நோக்கி வந்தவன் “என்ன மச்சான் எவ்வளவு நேரமா காத்திட்டு இருக்கறது, இது தான் நீங்க சீக்கிரம் வர நேரமா. என்ன தங்கச்சி நீயாச்சும் கிளப்பி கூட்டி வந்து இருக்கலாம்ல என்றான் உரிமையுடன் அவன்.

 

“அவ சீக்கிரம் எழுப்ப போய் தான் மாப்பிள்ளை நான் கிளம்பி வந்திருக்கேன், இல்லன்னா இன்னும் நேரம் கழிச்சு தான் வந்திருப்பேன் என்றான் அவன். “ஹேய் குட்டிப்பையா மாமாகிட்ட வாங்க, எங்க கவினி குட்டி நீங்க மட்டும் வந்திருக்கீங்க என்று குழந்தையை தூக்கினான் அவன். “கயினி அரமாட்டேன் சொல்லிச்சு, நான் அம்மாகூட வந்தேன் என்றான் குழந்தை மழலையில்.

 

“ஆமா அத்தையும் மாமாவும் எங்க என்றான் “உள்ளே இருக்காங்க இரு கூட்டி வாரேன் என்று உள்ளே சென்றான். “சித்தி, சித்தப்பா, மச்சான்னும் தங்கச்சியும் வந்துருக்காக, வாங்க என்று அவன் கூற உள்ளிருந்து இருவர் வெளியில் வந்தனர்.

 

 

“என்ன மாமா, என்ன அத்தை எப்படி இருக்கீங்க, எப்படியோ உங்க புண்ணியத்துல என் கனவு நிறைவேறி போச்சு, நீங்க சொல்லலைன்னா இப்படி ஒரு அருமையான நிலம் பத்தி எங்களுக்கு தெரிஞ்சு இருக்காது, நாங்க எதாச்சும் ஒன்னை வாங்கிட்டு அவஸ்தை பட்டுட்டு இருந்திருப்போம். இங்க உங்களுக்கு ஒண்ணும் வசதி குறைவா இல்லையே, சரவணன்கிட்ட சொல்லி இருக்கேன், வீட்டுக்கு தளம் போடச்சொல்லி அப்படியே மேலே ஒரு பெரிய அறையும் கட்டச் சொல்லி இருக்கேன். நாங்க எப்பவாச்சும் வந்தா தங்கிக்க என்றான் அவன்.

 

“என்னடே இப்படி சொல்லிட்ட, மவராசன் நீ இல்லைனா நாங்க இப்போ இல்லையே, வேற யாருக்கோவில இந்த நிலத்தை வித்துட்டு போயிருப்பாங்க இந்த நிலத்துக்காரங்க. நாங்க எங்க பொழப்பு, தேடி போகப் போறோம்ன்னு இருக்கையில, நீ தானேய்யா சாமி மாதிரி வந்த, நாங்க நல்லாருக்கோம்டே, இது தான் அந்த மவராசியா நீ நல்லா இருப்ப என்று இருவரும் மனதார பேசினர். “அத்தை நீங்க உன் மககிட்ட பேசிட்டு இருக்காங்க, நான் சரவணன் கூட பேசிவிட்டு தோப்பை பார்த்திட்டு வர்றேன் என்று சென்றான் அவன்.

 

“தம்பியோட வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சேன்னு நாங்க வருந்தாத நாளில்லை. மவராசியா நீ வந்துருக்கல்லா, நீ  அந்த மவராசனை நல்லா பார்த்துக்கோ, வேலைன்னு வந்துட்டா ஆதி ராத்தூக்கம் கூட பார்க்காதுன்னு உங்க மாமா சொன்னாகலே. நீ அவுகளை நல்லா பார்த்திகிடுவலா தங்கம். என் பேரன் மட்டும் வந்திருக்காக, பேத்தி இருக்குன்னு சொன்னாகல்லா அவுக வரலையா என்றார் அந்த வெள்ளந்தி பெண்மணி.

 

“இல்லைம்மா பாப்பா, மாமா, அத்தை கூட வர்றேன்னு சொல்லிட்டா, அதான் கூட்டி வரலை என்றாள் அவள். அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஆதித்தியன் அவளை அழைத்தான். “அத்தை உங்க மகளை இங்க வரச்சொல்லுங்க என்று அவன் அவளுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தான். ‘ஏன் என் பெயரை சொல்லி கூப்பிட்டா இவருக்கு முத்து உதிர்ந்தா போகும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த கவினையும் தூக்கி கொண்டு அவனிடம் விரைந்தாள்.

 

சரவணாஇளநீர்வெட்டிகொடுக்கசொல்லுடாஎன்றான். “இந்தாஇளநீர்சாப்பிடு, நம்மதோட்டத்துகாய்நல்லாஇருக்கும்என்றுகூறஅவள்அதைவாங்கிஅருந்தினாள். அவள்இளநீர்குடித்ததும்தான்அவள்நல்லபசியில்இருப்பதுஅவளுக்குஉரைத்தது. அவன்விடாமல்நன்றாகஇருக்கும்என்றுகூறிநான்குஇளநீர்குடிக்கவைத்துவிட்டான்அவளை.

 

அத்தோடுவிடாமல்வழுக்கையும்எடுத்துக்கொடுத்துஅவளைசாப்பிடவைத்தான். அவள்போதும்என்றுகூறும்வரைஅவளைஅவன்விடவில்லை. அவள்சாப்பிடவில்லைஎன்பதைஅறிந்தேஅவன்அவ்வாறுசெய்தான். கவினும்ஒருஇளநீர்குடித்துவிட்டுமீண்டும்விளையாடச்சென்றுவிட்டான்.

 

அதற்குள் வேனில் அனைவரும் வந்திறங்க ஆதிரா அவர்களை நாடிச் சென்றாள். “ஆச்சி இருங்க நான் வர்றேன் என்று அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த கயிற்று கட்டிலில் அவரை அமர வைத்தாள். வந்ததும் வராததுமாக நம்ம மகராசி கீர்த்தி “ஹைய் ஜாலி இன்னைக்கு ரெண்டு ஆடு மாட்டிறிருச்சு என்றாள் சந்தோசமாக.

 

“ஹேய் வாலு இப்போ உனக்கு சிக்கினது யாரு, யார் அந்த ரெண்டு ஆடு என்று பின்னால் இறங்கிய ஆதவன் கேட்க, உளறிட்டோமோ என்று நினைத்துக் கொண்டே “அதுவந்துண்ணே அங்க பாருங்க யாரு வந்திருக்கான்னு நம்ம சரவணன் அத்தான் வந்திருக்காக, நம்ம அம்முவை இப்போ ஒருவழி ஆக்கிட மாட்டேன், அதை தான் சொன்னேண்ணே என்றாள் அவள்.

 

“ரொம்ப கஷ்டம் கீர்த்தி என்றான் ஆதவன். “யாருக்குண்ணே கஷ்டம் என்றாள் அவள். “உன்னை கட்டிக்க போறவன் தான். மச்சான் நீ எப்படி தான் கஷ்டப்படப் போறியோ. நீ எங்க இருந்தாலும் சீக்கிரம் வந்திடாதே. லேட்டாவே வா, வாழ்க்கையில நீ இப்போவே சந்தோசத்தை அனுபவிச்சா தான் உண்டு என்று வருங்கால மைத்துனனுக்காக ஆதவன் வருந்தினான்.

 

ஆதி எல்லோருக்கும் வயலையும், தோப்பையும் சுற்றிக் காட்டினான். “என்ன சூர்யா வயலை பார்த்தியே, உன்னோட கருத்து என்ன, உனக்கு இதை பற்றி நல்லா தெரியும்ன்னு மாமா சொன்னாங்க என்றான் ஆதித்தியன். “அத்தான் எனக்கு ஒரு யோசனை, நாம ஒரு பக்கம் நெல்வயலா வைச்சுட்டு ஒரு பக்கம் காய்கறி தோட்டம் போட்டா என்ன, மண்ணும் பார்த்தா வளமா தெரியுதுஎன்றான் அவன். ஆதிக்கும் அந்த யோசனை பிடித்தது “இதோ அக்கா வந்தாச்சு அக்கா கிட்ட கேட்டா சரியா சொல்லிடுவா என்னக்கா என்றான் சூர்யா.

 

ஆதித்தியன் புரியாமல் அவளைப் பார்க்க சூர்யா அவனிடம் “என்னத்தான் அப்படி பார்க்குறீங்க, நானும் அக்காவும் தான் எங்க வயல்லேயே கிடப்போமே. ஸ்கூல் விட்டா போதும் நாங்க நேரா வயலுக்கு தான் போவோம். அக்காவுக்கு என்னைவிட எல்லாம் அத்துப்படி, நாம அவளையே கேட்போம் என்று அவன் சற்று முன்னர் நினைத்ததை அவள் முன் வைக்க அவள் “இல்லை சூர்யா நாம அப்படி எல்லாம் தோட்டம் வைக்க முடியாது. அதை சரியா யோசிச்சு தான் செய்யணும். காய்கறி தோட்டம்னா அதுக்கு தோதா நெறய செய்யணும். இது நல்ல நெல் வரப்பா இருக்கு, நாம இப்போதைக்கு இதை இப்படியே உழுகறதுக்கு தான் சரி, நீ சொல்ற மாதிரி செஞ்சா இங்க வயலுக்கு பாயற மாதிரி தண்ணி காய்கறி தோட்டத்துக்கு பாய்ச்ச முடியாது. வரப்புல இருந்து தண்ணி காய்கறி தோட்டத்துல இறங்கினா செடி பாழாகிப் போகும். அந்த பக்கமும் நெல் வயலா இருக்கறது தான் சரியா வரும். எதுக்கும் நீங்க அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க என்று அவனிடம் ஒரு தலையசைப்புடன் சென்றவளை அவன் வியப்புடன் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவன் பார்ப்பதை பார்த்த சூர்யாவுக்கு தன் அக்காவின் வாழ்வு நல்லபடியாக இருக்கும் என்று முழு நம்பிக்கை வந்தது. “மாமா இங்க கொஞ்சம் வாங்க என்று அவன் அழைக்க “சொல்லுங்க மருமகனே என்று அவர் வந்து நின்றார். அவன் சூர்யா சொன்னதை பற்றி அவரிடம் கேட்க அனுபவம் வாய்ந்தவர் தன் மகள் கூறியதையே அச்சுபிசகாமல் படிக்க அவன் எண்ணத்தில் அவள் பலபடிகள் உயர்ந்து போனாள் என்று கூறினால் மிகையாகாது.

 

பின் அவன் அனைவருக்கும் தோப்பை சுற்றிக் காட்ட “என்ன சித்தப்பா, என்னப்பா உங்களுக்கும் பிடிச்சு இருக்கா” என்று அபிப்பிராயம் கேட்டான். சித்தி, அம்மா, ஆச்சி, பேச்சி சித்தி என்று வரிசையாக அவன் அவர்களின் கருத்தை கேட்டான். “அப்புறம் சித்தப்பா, நீங்களும் சித்தியும் வந்து அடிக்கடி பார்த்துக்கோங்க நம்ம வயலையும் தோப்பையும், சரவணன் வந்து பார்த்துப்பான், ஆனாலும் நீங்களும் வந்து ஒரு எட்டு பார்த்துகிட்ட எனக்கு சந்தோசமா இருக்கும் சித்தப்பா” என்றான் ஆதித்தியன். “என்னப்பா ஆதி இதை நீ எங்களுக்கு சொல்லணுமா, நாங்க கண்டிப்பா வந்து பார்த்துக்கறோம்ப்பா” என்று உலகநாதனும், பார்வதியும் ஒருசேர கூறினர்.

 

—————————–

 

சரவணன் தோப்பில் நின்றிருக்க அவனருகில் சென்ற கீர்த்தி “அத்தான் என்ன அத்தான் உன்னை எண்ணித் தான் எப்படி சொல்வேனடி என்று பாட்டு படிக்க அரண்டவன் “என்னத்தான் இது, நான் தான் வந்துருக்கேன், நீங்க இப்படி பயப்படுறீங்க. உங்க முறைப் பொண்ணு தானே என்கிட்ட என்ன பயம் உங்களுக்கு. நீங்க சரின்னு சொன்னா நான் நாளைக்கே உங்களுக்கு கழுத்தை நீட்டுறேன் அத்தான் என்று அவனிடம் அவள் வம்பிழுத்தாள்.

 

அவனோ “என்னலே என்ட வம்பிழுத்துகிட்டு இருக்கவ, இதை உங்க அக்கா காதுல கேட்டா என்று திரும்பியவனின் எதிரில் சின்ன காந்திமதி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள். “அக்கா பாருக்கா, அத்தான் என்கிட்டே என்னேன்னமோ பேசுறார். நான் சரின்னு சொன்னா எனக்கு அவர் இப்பவே தாலி கட்டுறேன் சொல்லறார்க்கா, என்னன்னு கேளுக்கா என்றாள் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு.

 

“மதி இவளை நம்பாதே பொய் சொல்றாலே அவ பேசினதை நான் பேசினதா சொல்றாலே. என்னை நம்பு மதி இந்த மாமன் உன்னைத் தவிர வேற யாரையும் நினைக்க மாட்டான்ல, அது உனக்கே தெரியும்லட்டி. நான் ராமர்டி என்னை இவ கிட்ட இருந்து காப்பாத்துடி என்று அவளிடம் அவன் சரண்டர் ஆனான்.

 

அவனின் மதி என்ற அந்த அன்பான அழைப்பில் அவள் உருகி போயிருக்க, ‘அத்தான் பொய் சொல்லமாட்டார், ஆனா இவ சரியான புளுகுமூட்டை, இவ தான் ஏதோ விளையாடுறா என்று உணர்ந்தவள் கண்ணகி மதுரையை எரித்த பார்வையை பார்க்க “அம்மா தாயே நான் கிளம்பறேன், நீங்க உங்க ரொமான்ஸ் தொடருங்க. பத்து நிமிஷம் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள வரலை நான் அம்மாவோட இங்க வருவேன் என்று மிரட்டி விட்டு சென்றாள் அந்த வாலு கீர்த்தி.

அவள் அங்கிருந்து சென்று அடுத்த நாரத வேலையை பார்க்கச் சென்றது ஆதர்ஷாவிடம், தூரத்தில் நின்றுக் கொண்டு சூர்யா குழந்தைகளுடன் விளையாடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதர்ஷா. அதைக் கண்டு கொண்டவள் உடனே முடிவு செய்து சூர்யாவை நோக்கிச் சென்றாள், “அத்தான் நீங்க என்ன ஒண்ணு தனியா உட்கார்ந்து பிடில் வாசிக்கறீங்க, இல்லன்னா குழந்தைங்க கூட விளையாடுறீங்க, என்கூடலாம் நீங்க பேசமாட்டீங்களா அத்தான் என்று அவள் கூறிக் கொண்டிருக்க அவள் நினைத்தது போல் ஆதர்ஷா அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

 

“அத்தான் என்று அவள் மீண்டும் அழைக்க “அம்மா தாயே நான் வேணா உன் கால்ல விழறேன், என்னை இனிமே அப்படி கூப்பிடாதே என்றான் அவன் கெஞ்சாத குறையாக. “அப்படின்னா நீங்க ஒண்ணு செய்யனும் அப்போத் தான் நான் உங்களை அத்தான்னு கூப்பிட மாட்டேன்” என்றாள் அவள். “என்னன்னு சொல்லு நான் அதை முதல்ல செய்யறேன்” என்றான் அவன்.

 

“இனிமே என்னை எங்க பார்த்தாலும் நீங்களா வந்து என்கிட்ட ஒரு ரெண்டு வார்த்தையாச்ச்சும் பேசிட்டு போகணும், இல்லன்னா நான் இப்படி தான் உங்களை வம்பிழுப்பேன், சரியா” என்று அவள் கூற அவன் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும்போதே ஆதர்ஷா வந்து “இங்க என்னடி பண்ணிட்டு இருக்க, அங்க சித்தி உன்னை தேடுறாங்க என்றாள். “நீ இங்க என்னடி பண்ணிட்டு இருக்க, நீ போ உன்னை பெரியம்மா தேடுறாங்க என்றாள் அவளும் விடாமல். “சொன்னா கேட்க மாட்டே, நீ போடி முதல்ல என்று அவள் கூற இந்த இருவர் சண்டையில் சூர்யா நைசாக தப்பித்து சென்றுவிட்டான்.

 

 

“போடி எல்லாம் உன்னால தான் நான் அத்தான்கிட்ட ஆசையா பேசவந்தா, வந்து கெடுத்துட்டியே என்றாள் கீர்த்தி. ஆதர்ஷாவுக்கு அவளுக்கு மேல் கோபம் வந்தது “நான் என்னடி செஞ்சேன், எப்போ பார்த்தாலும் அத்தான் பொத்தான்னுட்டு கொஞ்சிட்டு கிடக்கறா. அவர் உன்னை திரும்பிகூட பார்க்கறது இல்லை, இவ பாட்டுக்கு அவர் பின்னாடியே அலையறா என்று அவள் வாயை விட, கீர்த்தி “பாருடி அத்தானை என் பின்னாடி சுத்தி சுத்தி வரவைக்கல நான் கீர்த்தி இல்லைடி என்று சவால் விட்டுவிட்டு அந்த இடத்தை காலி செய்தாள். மனதிற்குள் நேத்து என்னை தோத்தான்குளின்னா சொல்லற, நல்ல அழுடி என்று நினைத்துக் கொண்டு அவள் கூறியதை மறந்து அடுத்தது யாரை வம்பிழுக்கலாம் என்று அவள் சென்று விட்டாள்.

 

ஆதர்ஷாவுக்கு மனம் அடித்துக் கொண்டது, சூர்யா அவள் பக்கம் சாய்ந்து விடுவானோ அவள் பின்னால் சுற்றுவானோ என்று அவள் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது. அன்று மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ஆதிரா, ஆதர்ஷா, சின்ன காந்திமதி, கீர்த்தி ஆகிய நால்வரும் பரிமாற பெரியவர்களுக்கும் ஆண்களுக்கும் பரிமாறினர். ஆதிரா ஆதித்தியனின் பக்கமே செல்லவில்லை, எங்கே அவன் எதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் இயல்பாக செய்வது போல் அவனுக்கு மற்றவர்களையே பரிமாறச் செய்தாள்.

 

ஆதித்தியனின் மனமோ அவள் வந்து அவனுக்கு சாப்பாடு போடமாட்டாளா என்றிருந்தது. தான் ஏன் இப்படி நினைக்கிறோம் என்று அந்த நிமிடம் அவன் உணரவில்லை. ‘ரொம்பவும் கொழுப்பாடி உனக்கு உன்னை சென்னையில போய் வைச்சுக்கறேன் என்று பொருமினான் அவன். அவன் பேசிய பேச்சின் விளைவு தான் என்று புரியாமல் மனதிற்குள் அவளின் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான்.

 

அவன் அவளை விடுவதாக இல்லை, எப்படியாவது அவளை அவனுக்கு பரிமாறச் செய்ய வேண்டும் என்று எண்ணியவன் முதல் முறையாக அவளை பெயரிட்டு அழைத்தான். “ஆதிரா எனக்கு கொஞ்சம் பாயசம் வை என்று அவன் அழைக்க அவளுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. தன்னைத் தான் அழைத்தானா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க “மதினி அண்ணா ரொம்ப நேரமா பாயசம் கேட்குது போய் வைங்க எங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க என்று கீர்த்தி சொல்ல இயல்புக்கு வந்தவள் அவனை நோக்கிச் சென்றாள்.

 

“என்ன பாயசம் கேட்டுட்டு காத்திட்டு இருக்கேன், உனக்கு காது கேட்கலையா. இல்லை என் தலையில சட்டியை போடலாம்ன்னு நினைச்சுட்டு நின்னுட்டு இருந்தியா. என்னை தவிர எல்லாருக்கும் சாப்பாடு போடுற என்னை கண்டா உனக்கு எப்படி இருக்கு என்றான் அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில்.

 

அவள் அவனை ‘அதானே பார்த்தேன், இவன் நம்மளை வம்பிழுக்க தான் கூப்பிட்டு இருக்கான் என்ற தொனியில் வாயை அழுந்த மூடி கண்ணை சுருக்கி இடுப்பில் கைவைத்தபடி அவனைப் பார்க்க அவள் விழிகளை அவன் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் ஆச்சி பாயசம் கேட்க ஆதிரா எழுந்து சென்றாள்.

 

ஆதித்தியன் நிலைகுலைந்து போனான், அவளின் ஒரு பார்வை அவனை வீழ்த்தும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவனுக்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு தோன்றியது, எதுவோ அவனை பிசைந்தது, தறிகெட்டு ஓடும் மனதை கடிவாளமிட்டு அடக்க அவன் அரும்பாடுப்பட்டான்.

 

எல்லோருமாக கிளம்பி வீட்டிற்கு வந்தனர், வரும் போதும் ஆதித்தியன் ஏதோ யோசனையில் முழ்கி இருப்பதுபோல் தோன்ற ஆதிராவும் அவனிடம் ஏதும் பேச்சு கொடுக்கவில்லை. எல்லோரும் வீட்டிற்கு வந்ததும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாக ஆதிராவும் உடைகளை எடுத்து அடுக்கலானாள்.அவனுடைய துணிகளை அடுக்கலாம் என்று நினைத்தவள் எங்கே அவன் அதற்கும் திட்டப் போகிறான் என்று அப்படியே விட்டுவிட்டாள். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன் அவனுடைய துணிமணிகள் மட்டும் எடுத்து வைக்கப்படாமல் இருக்க ஆத்திரமுற்றான்.

 

“என்ன மேடத்துக்கு அவங்க துணி மட்டும் தான் எடுத்து வைக்க நேரமிருக்கோ, எங்க துணியை எடுத்து வைச்சா உங்க மகுடம் இறங்கிடுமோ என்று அவன் கேட்க அவள் நிதானமாக “நான் எடுத்து வைச்சுருப்பேன், ஆனா நீங்க வந்து என் வேலையை நான் தான் பார்த்துக் கொள்வேன் என் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று சொல்லி இருக்கிறீர்களே, அதனால் தான் நான் எதுவும் செய்யவில்லை. இப்போ அடுக்கி வைக்கட்டுமா என்றாள் அவள்.

 

அப்போது தான் அவன் மனம் அவனை நிதர்சனத்திற்கு கொண்டு வந்தது, அவன் பேசியதை அவன் சுத்தமாக மறந்திருந்தான், “இல்லை நானே வைச்சுக்கறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக எடுத்து அவன் துணிகளை அடுக்கினான். அவர்கள் அனைவரும் கிளம்பி தென்காசி ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர், வீட்டில் கிளம்பு போது ஆச்சியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஆதிரா அவரை அடுத்த முறை கட்டாயம் சென்னைக்கு வரச்சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப ரயில் நிலையத்திற்கு உலகநாதன், பார்வதி, சின்ன காந்திமதி, கீர்த்தி எல்லோரும் வந்து வழியனுப்பினர். இனி சென்னையில் சந்திப்போம்…

 

 

என் பாவம் செய்தேன்

உன்னை நினைத்ததை

தவிர வேறேதும்

செய்யாத என்னை

நீ விலக்கினாய்…

 

உனக்கு ஏன்

புரியவில்லை நீ

விலக்குவது

என்னையல்ல

என்னுள் இருக்கும்

உன்னை என்று…

 

நான் விரும்பியது

உன்னையே…

உன் நிழல்மட்டும்

போதுமென்றிருந்த

எனக்கு நிஜமாய்

வரமாய் நீகிடைத்தாய்…

 

மன்னவனே

உன் நினைப்பில்

உயிர் கொண்ட என்னை

உன் ஒரு அழைப்பில்

என் பெயருக்கும்

உயிர் கொள்ள செய்தாய்…

Advertisement