Advertisement

அத்தியாயம் –3

 

 

ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.

 

அவனின் நண்பர்கள் கூட்டம் மொத்தமும் வந்திருந்தது வெற்றி வெளிநாட்டில் வேலையில் இருப்பதால் அவனால் மட்டும் ஆதியின் திருமணத்திற்கு வரமுடியவில்லை. நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டும் குதூகலித்தனர்.

 

தாலி கட்டி முடித்ததும் சடங்குகள் முடிந்து ஹரிணியையும் அழைத்துக் கொண்டு வந்து நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ஆதித்தியன். “என்னடா கல்யாண மாப்பிள்ளை பொண்டாட்டியை விட்டு பிரியாம கூட்டிகிட்டே அலையுற மாதிரி தெரியுது. இம் நல்ல முன்னேற்றம்டா இனிமே காதல்னா என்னன்னு நீ கேக்க மாட்ட தானே என்று அவன் காதில் கிசுகிசுத்தான் கதிர்.

 

அதற்குள் ஹரிணியை அவள் அன்னை வந்து அழைத்து செல்ல அவள் அவனிடத்தில் சொல்லிவிட்டு அவள் அன்னையுடன் நடந்தாள். “என்னடா அவ பக்கத்துல இருந்தாளேன்னு பார்த்தேன். உனக்கு ரொம்ப கொழுப்பா, இன்னைக்கு தான் தாலி கட்டி இருக்கேன். அவ என்னை நம்பி வந்தவ, அவளை தனியா எங்காச்சும் விட்டுட்டு வரச் சொல்றியா. அப்புறம் என்ன சொன்ன காதல்னா நான் என்னன்னு கேக்க மாட்டேன்னு தானே, இப்பவும் கேக்குறேன். நீங்க எப்படிடா காதல் பண்ணீங்க. அது எப்படி வருது என்று அன்று போல் இன்றும் கேட்டு வைத்தான் அவன்.

 

கதிருக்கு வேர்த்து விறுவிறுத்து அவன் வடிவேல் பாணியில் ‘எப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று அயர்ந்து போனான். “வேணாம்டா நான் தெரியாம சொல்லிட்டேன்டா, உன்னை இனிமே நான் கேள்வியே கேட்க மாட்டேன் என்றான் கதிர். “டேய் அவனை பத்தி தெரிஞ்சுதானே நாங்க எல்லாரும் பேசாம இருக்கோம். உன்னால அப்படி இருக்க முடியலைனா நீயும் ராகுல் மாதிரி பேசாம ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்க வேண்டியது தானே என்று மேலும் வாரினான் ராஜீவ்.

 

ஒருவழியாக எல்லாரும் மண்டபத்தை காலி செய்து கிளம்ப அவர்கள் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டில் முதலிரவு என்று ஏற்பாடானது. ஹரிணியை அலங்கரித்து ஆதியின் அறைக்கு அனுப்பினர். அறைக்குள் வந்தவளை சிரித்த முகத்துடன் வரவேற்று அவன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான். அதுவரை இயல்பாக இருந்தவளுக்கு லேசாக உதறல் எடுத்தது போல் இருந்தது.

 

“ஹரிணி எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நாம முதல்ல கொஞ்சம் பேசலாமா என்று அவள் இறுக்கத்தை போக்க அவன் சகஜமாக பேச முனைந்தான். “இம் என்று தலையை ஆட்டினாள் அவள்.

 

“எனக்கு உன்னை போட்டோல பார்த்த போதே தோணிச்சு, உன்னை எங்கோ பார்த்து இருக்க மாதிரி. இதுக்கு முன்ன நாம எங்கயாச்சும் சந்திச்சு இருக்கோமா என்றான் அவன். “இல்லைங்க, உங்க போட்டோ பார்த்த பிறகு தான் எனக்கு உங்களை பல ஜென்மமா பார்த்த மாதிரி ஒரு உணர்வு என்றாள் அவள். ‘ஒருவேளை இவள் சொல்வது போல் தான் எனக்கும் இருந்து இருக்குமோ என்று நினைத்துக்கொண்டான் அவன். “சரி உனக்கு என்கிட்டே எதாச்சும் தெரிஞ்சுக்கணுமா, என்னை பற்றி குடும்பத்தை பற்றி என்றான் அவன்.

 

“எனக்கு ஒரு ஆசை உங்ககிட்ட சொல்லலாமா என்றாள் அவள். “என்ன சொல்லு என்றான் அவன். “உங்களை நான் பேர் சொல்லி கூப்பிடலாமா, எனக்கு ரொம்பவும் ஆசையாக இருக்கிறது. மனதிற்குள் உங்களை அப்படி செல்லமாக கூப்பிட்டு பார்த்து பல தடவை மகிழ்ந்து இருக்கிறேன் என்றாள் அவள். “சரி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன், பதில் சொல்றியா என்றான்.

 

“கேளுங்க என்றாள். “உங்கம்மா உங்க அப்பாவை என்னன்னு சொல்லி கூப்பிடுவாங்க என்றான். ‘இவன் பெயரை கூப்பிட வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிட போகிறேன், எதற்கு இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுகிறான் என்று நினைத்தவளாய், “அம்மா அப்பாவை வாங்க போங்க என்று தான் சொல்லுவார்கள், இல்லையென்றால் மாமா என்று அழைப்பார்கள் என்றாள்.

 

“இதே தான் உனக்கும் என் பெயர் சொல்லி கூப்பிடுவது எனக்கு பிடிக்காது, நான் சில வருடங்கள் கிராமத்தில் வளர்ந்ததினாலோ என்னவோ, எனக்கு அது பிடிப்பதில்லை. அங்கு எல்லாரும் எவ்வளவு அழகா அவர்கள் கணவரை அத்தான் என்றோ மாமா என்றோ அழைப்பார்கள் தெரியுமா, அதில் எவ்வளவு ஒரு அன்னியோன்யம் இழையும் தெரியுமா என்று கண் மூடி பேசிக் கொண்டிருந்தான்.

 

‘அய்யா சாமி தெரியாம சொல்லிட்டேன், இனிமே இப்படி நான் சொல்வேனா. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இவன் வேறு நமக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிட்டானே என்று எண்ணி தலையில் கைவைத்துவிட்டாள் அவள். அதற்குள் கண் திறந்தவன் எதிரில் அவள் அமர்ந்திருந்த கோலம் பட சிரித்துக் கொண்டவன், “ரொம்பவும் போர் அடித்துவிட்டேனா என்றான். அவள் இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

 

“நாம பேசினது போதும் நினைக்கிறேன் என்று கூறி விளக்கை அணைத்தவன் அடுத்து அவளை அணைத்தான். திருமணம் முடிந்து அடுத்து வந்த ஞாயிறு அன்று அவளையும் கிளம்புமாறு கூறியவன், அவள் எங்கே என்று கேட்க அதை அங்கு போய் பார்த்துக்கொள்ளாலாம் என்று கூறி அவளை கிளப்பி அவனுடன் அழைத்துச் சென்றான்.

 

ஸ்பென்சர் பிளாசா… உணவு வளாகம்….

 

“என்னங்க நாம ஷாப்பிங் பண்ண போறோமா, அதுக்கு தான் கூட்டிட்டு வந்தீங்களா, வாங்க போகலாம்” என்று அவன் கையை பற்றி இழுத்துக் கொண்டு நகரும் படிக்கட்டில் ஏறினாள் அவள். மேலே ஏறிய பின்பும் பேசாமல் இருந்தவனை இழுத்துக் கொண்டு நடந்தாள். “என்னங்க என்னாச்சு உங்களுக்கு” என்றாள். ஏதோ யோசைனையாக இருந்தவன் அவள் முகத்தை பார்த்தான். “ஒன்றுமில்லை” என்றுவிட்டு “சரி வா போகலாம்” என்று அவளை உணவு வளாகத்திற்குள் அழைத்துச் சென்றான்.

 

“என்னங்க நாம சாப்பிட போறோமா, இல்ல டிரஸ் எடுக்க போறோமா, இங்க எதுக்கு கூட்டி வந்து இருக்கீங்க” என்று அவள் பேசி முடிக்கும் முன் அவனுடைய நண்பர்கள் அங்கு குழுமினர். “என்ன சிஸ்டர் இவன் எதுவும் சொல்லி உங்களை கூட்டி வரல போலவே, இப்படி முழிக்கறீங்க” என்றான் ராகுல்.

 

“ஹரிணி நாம இவங்களை பார்க்கத்தான் வந்து இருக்கோம், எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நாங்க எல்லாரும் ஒண்ணா இப்படி சந்திச்சு பேசறது வழக்கம். இதுவரைக்கும் நான் மட்டும் தனியா வந்துட்டு இருந்தேன். இப்போ நமக்கு கல்யாணம் ஆகிட்டதுனால நாம சேர்ந்து வந்து இருக்கோம். இவங்களை நீ நம்ம கல்யாணத்துல பார்த்து இருப்ப” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் அவன்.

 

‘அப்ப இவன் என்னை வெளிய போகறதுக்காக கூட்டி வரலையா, அவங்க நண்பர்களை சந்திக்க தான் என்னை இங்கு கூட்டி வந்தாரா’ என்று நினைத்தவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவர்கள் ஆளாளுக்கு ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் கலாட்டா செய்துக் கொண்டிருந்தனர். யாரோடும் ஒட்டமுடியாமல் தனித்து இருந்தாள் அவள். “என்னங்க எனக்கு தலை வலிக்குது” என்றாள். “அப்போ நீ கிளம்பு, நான் இவங்ககிட்ட பேசிட்டு வந்துடுறேன்” என்றான் அவன்.

 

“என்னடா பேசுற நீ, அவங்க எப்படி தனியா போவாங்க. வரும் போது நீ தானே கூட்டிட்டு வந்த, இப்ப அவங்களை தனியா போகச் சொன்னா, எப்படி போவாங்க” என்று அவளுக்கு பரிந்து வந்தாள் அர்ச்சனா.

 

“அதெல்லாம் போயிடுவா அர்ச்சனா, அவ சென்னையில வளர்ந்த பொண்ணு அவளுக்கு தனியா போகத் தெரியாதா. என்ன ஹரிணி நீ போய்ட மாட்ட” என்றான் அவன். “இல்லைங்க நான் மட்டும் எப்படி தனியா” என்று இழுத்தவளை ஒரு பார்வை பார்த்தான். “டேய் எல்லாருமே கிளம்பலாம் சரியா, இல்லைனா இவன் கிளம்ப மாட்டான். அவங்க பாவம் தலை வலிக்குதுன்னு சொல்றாங்க நீ அவங்களை கூட்டி போ. நாங்களும் கிளம்பறோம், நாம அடுத்த வாரம் நிதானமா உட்கார்ந்து பேசலாம் ஓகே தானே” என்று ராஜீவ் கூற மற்றவர்களுக்கும் எழுந்தனர்.

 

“சரி வா கிளம்பலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான். அவர்கள் அறைக்குச் சென்றதும் “நிஜமாவே உனக்கு தலை வலி தானா” என்றான்.ஆமாங்க” என்றாள் அவள். “பொய் சொல்லாதா எனக்கு பிடிக்காது. நாம ஸ்பென்சர் போனதும் நாம ஷாப்பிங் தான் போகப் போறோம்னு நினைச்ச, ஆனா நான் என் நண்பர்கள் பார்க்க கூட்டி போனதுல உனக்கு வருத்தம், அதுக்கு தானே இந்த நாடகம் எல்லாம்” என்றான் அவன்.

 

“ஒருவகையில அதுவும் சரி தாங்க, அவங்க எல்லாரும் உங்களுக்கு நண்பர்கள் நீங்க அவங்க கூட ஜாலியா பேசுவீங்க, எனக்கு அவங்களை அவ்வளவா தெரியாது. இப்போது தான் நான் அவர்களை நன்றாக பார்க்கவே செய்கிறேன். என்னால் எப்படி அவர்களுடன் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்ற முடியும். நீங்க பேசிக் கொண்டிருக்க நான் மட்டும் தனியாக ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருந்தேன். அதனால் தான் எனக்கு தலை வலி வந்துவிட்டது” என்றாள் அவள்.

 

அவனுக்கு அவள் பக்கமும் நியாயம் இருப்பது போல் தோன்ற, அதற்கு மேல் அந்த பேச்சை விடுத்து அவளுக்கு தலை வலிக்கு மாத்திரை வாங்கி கொடுத்தான். ‘இனி இவளை அங்கு அழைத்துச் செல்லக் கூடாது’ என்று அவன் நினைக்க, ‘இனி இவர் அவர்களுடன் சுற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எங்கேயாவது என் மனது புரிகிறதா இவருக்கு. புதிதாக கல்யாணம் செய்துக் கொண்டோமே அவளை நாலு இடத்துக்கு அழைத்துச் செல்வோம், அவளை சந்தோசப்படுத்துவோம் என்று இல்லாமல் எப்போது பார்த்தாலும், அம்மா, அப்பா, தம்பி, தங்கை, நண்பர்கள் என்று சுற்றிக் கொண்டே இருக்கிறார். எப்படியாவது இவரை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டால் இவரை நம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம். என்ன செய்யலாம்’ என்று அந்த யோசனையில் இறங்கினாள் அவள்.

 

ஒரு நாள் அவன் நல்ல மனநிலையில் இருக்கும் தருவாயில் அந்த பேச்சை ஆரம்பித்தாள். அவன் அவளை கொஞ்சிக் கொண்டிருக்க இவள் “என்னங்க” என்றாள். “சொல்லு ஹரிணி” என்றான். “ஏங்க நாம தனியா போய்டலாமா, நமக்கு ஒரு தனிமை கிடைக்கும் இல்லையா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சடாரென்று எழுந்து உட்கார்ந்தான்.

 

“என்ன பேச்சு பேசற நீ. இந்த வீட்டில இருந்து நாம மட்டும் தனியா போகணுமா. எப்படி உனக்கு இப்படி யோசிக்க முடிஞ்சது, நான் இந்த வீட்டுக்கு மூத்த மகன் எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு. நாம தனி குடித்தனம் போனா அடுத்து ஆதவன் மனைவி வந்தா அவளுக்கும் இது தான் தோணும் அவளும் தனியா போவா. அப்புறம் ஆதர்ஷா அவளும் அவள் புகுந்த வீட்டிற்கு போனால் இது போன்ற எண்ணம் தான் தோன்றும். நாம அவர்களுக்கு முன்னோடியா இருக்க வேண்டாமா” என்றான் அவன் சிறிது கோபத்துடன்.

 

அவன் கோபத்தை கண்டு பின்வாங்கியவள், “இல்லைங்க கொஞ்ச நாளைக்கு தனியா வேற வீடு பார்த்து போகலாமான்னு தான் கேட்க நினைச்சேன்” என்றாள் அவள். “கொஞ்ச நாள் என்ன கொஞ்ச நாள் எப்போதுமே இது போல் ஓர் எண்ணம் உனக்கு வரக் கூடாது சரியா, இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் நீ இப்படி பேசுவது” என்று கூறி வெளியே எழுந்து சென்றுவிட்டான்.

 

நினைத்ததை அடைந்தே பழக்கப்பட்ட அவளுக்கு இதை ஜீரணிக்க சற்று சிரமமாக இருந்தது. அவனை அவளுக்கு பிடித்திருந்த அந்த காரணத்திற்காகவே அவள் சில விஷயங்களை பொறுத்து போனாள். எங்கே அவர்கள் வீட்டில் பெண் பார்த்துவிட்டு வேண்டாம் என்று போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில் தான் அவள் அவனுக்கு போன் செய்து பேசினாள். அவனுக்கும் அவளை பிடித்திருந்ததை அவள் ஓரளவு கணித்திருந்ததால் நேரே அவனிடம் பேசினாள் அவள். தன் தந்தை முதல் நாள் வருத்தப்பட்டதை அவனிடம் முன்னிறுத்தி அவள் நினைத்தபடி அவன் கைபிடித்தாள்.

 

இவனை தன் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்றால் இவன் வழியிலே போய் தான் நாம் காரியம் சாதிக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். சில நாட்களுக்கு அவனை விட்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அவள் சகஜமாக இருக்க முனைந்தாள்.

வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்கள் இருந்ததாலும், சமையல் வேலையை மட்டும் மாமியார் மட்டுமே செய்துக் கொண்டிருக்க, அவள் சமையலின் மேல் கவனம் செலுத்தலானாள். புருஷனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுத்தால் அவன் தன் வசம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்புவான் என்று எண்ணினாள். அதற்கு ஓரளவு பலனும் இருந்தது. ஹரிணி ஆதவனுடனும், ஆதர்ஷாவிடமும் அவளுக்கு அவ்வளவாக பிடித்தம் இல்லை, அவர்களுடன் ஒன்றி அவள் பேசுவதுமில்லை.

 

முதலில் அவளிடம் பேச முயற்சி செய்த ஆதர்ஷா அவள் ஒதுங்கி போவது கண்டு அவளும் ஒதுங்கி கொண்டாள். ஹரிணியிடம் அவள் படிப்பு பற்றி சந்தேகம் கேட்க நினைத்து ஒருநாள் அவளிடம் பேச அவள் இவளை பார்த்து இதுகூட தெரியாது, நீயெல்லாம் என்னதான் படிக்கிறாயோ என்று திட்டிக்கொண்டே சொல்லி கொடுக்க அதுவே வழக்கமாக ஆதர்ஷா அவளிடம் படிப்பு பற்றி சந்தேகம் கேட்க போவதை நிறுத்திக் கொண்டாள்.

 

காலையில் எழுவாள், மாமியாருடன் சேர்ந்து உணவு சமைப்பாள், அதன் பின் அவர்களின் அறையிலே ஒண்டிக் கொள்வாள், மதிய சாப்பாடு கூட அவள் அறைக்கு தான் செல்லும், மாலையில் கணவன் வரும் நேரம் மட்டும் அலங்கரித்துக் கொண்டு வெளியில் வருவாள்.

 

சில நாட்கள் கழித்து வந்த ஒரு ஞாயிறு அன்று ஆதித்தியன் அவன் நண்பர்களை பார்க்க வெளியே சென்றிருக்க, அவள் ‘இதற்கும் சேர்த்து இன்று ஒரு முடிவு கட்டவேண்டும்’ என்று நினைத்தவளாய் அவள் மாமியாரை தேடிச் சென்றாள். “அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். “சொல்லும்மா ஹரிணி, என்ன விஷயம்” என்றார் அவர். “அது வந்து அத்தை நீங்க என்னை தப்பா எடுத்துக்க கூடாது. நாங்க கொஞ்ச நாளைக்கு தனிக்குடித்தனம் போறோமே” என்றாள்.

 

லட்சுமிக்கு திக்கென்றிருந்தது ‘என்ன இந்த பொண்ணு இப்படி பேசுது’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “அத்தை நீங்க வேற எதுவும் யோசிக்க வேண்டாம். கொஞ்ச நாள் தனியா இருந்தா தான் அவருக்கும் பொறுப்பு வரும் அத்தை. பாருங்க நாம எல்லாரும் வீட்டில இருக்கோம் இவர் பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அதுவுமா வெளிய கிளம்பி போய்ட்டார்.

 

“இன்னைக்கு ஒரு நாள் தான் இவர் வீட்டில இருப்பார், அவர் அந்த நேரத்தை நம்ம கூட இருந்து செலவழிக்காமல் அவர் நண்பர்களை பார்க்க போய்விடுகிறார். ஒருவேளை நம் ஆதர்ஷாவை பெண் பார்க்க இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்து அன்று இவர் இப்படி வெளியில் போனால் நன்றாகவா இருக்கும். இவருக்கு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லா வேலைகளும் இவரே சென்று பார்த்தால் தான் அந்த பொறுப்பு அவருக்கு வரும். நான் பேசியது எதுவும் தப்பா அத்தை” என்றாள்.

 

லட்சுமிக்கு அவள் கூறுவது நியாயம் போல் தோன்றியது. அவர் யோசிக்க ஆரம்பித்தார், இதை கண்டு கொண்டவள் மேலும் தொடர்ந்தாள், “அத்தை நான் சொன்னா அவர் கேட்க மாட்டார் அத்தை. நீங்களே சொல்லுங்கள் அப்போது தான் அவர் கேட்பார்” என்று முடித்தாள் அவள். “சரிம்மா நான் உங்க மாமாகிட்ட பேசிவிட்டு அப்புறம் அவன் கிட்ட பேசுறேன்” என்றார் அவர். “அத்தை நீங்க பொறுமையா யோசிச்சுட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு பேசுங்க” என்றாள் அவள்.

 

மறுநாள் இரவின் தனிமையில் அவள் அவனிடம் “என்னங்க” என்றாள். “என்ன ஹரிணி” என்றான் அவன். “உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் அவள் பீடிகையுடன். “சொல்லும்மா” என்றான். “நேத்து அத்தை என்கிட்ட பேசினாங்க, நாம தனிக்குடித்தனம் போக சொன்னாங்க” என்றாள்.

 

“என்னது அம்மா அப்படி சொன்னாங்களா, இருக்கவே இருக்காது. நீ எதுவும் அவங்ககிட்ட பேசினியா, என்கிட்டே உளறி வைச்ச மாதிரி” என்றான். “இல்லைங்க நான் அப்படி எதுவும் சொல்லலை. நீங்க அவ்வளவு தூரம் சொன்னா பிறகு நான் அப்படி செய்வேனா” என்றாள் அவள்.

 

“அம்மா ஏன் அப்படி சொன்னாங்க இருக்காதே” என்றான் யோசனையுடன் “சரி நான் போய் அம்மாகிட்டயே கேட்குறேன்” என்று எழுந்தவனை கைப்பிடித்து நிறுத்தினாள். “ஏங்க அவங்க பேசினா அப்போ நீங்க போய் என்னன்னு கேளுங்க, அதை விட்டுட்டு இப்போவே போய் கேட்குறேன் சொல்றீங்க. விடுங்க அவங்க உங்களுக்கு பொறுப்பு வரணும் அதான் அப்படி சொல்லறேன் அப்படின்னு சொன்னாங்க” என்றாள் அவள்.

 

அவள் அவனை பற்றி ஓரளவு கணித்து வைத்திருந்தாள், அவனுக்கு எதை சொன்னால் கோவம் வரும் அவன் வெகுண்டு எழுவான் என்று அவள் அறிந்து வைத்திருந்தாள். “என்ன பொறுப்பு வரணுமா, இப்ப நான் என்ன பொறுப்பு இல்லாம நடந்துகிட்டேன். அம்மா ஏன் அப்படி சொன்னாங்க, நான் காலேஜ் முடிக்கவும் அப்பாவோட நிறுவனத்துல பொறுப்பு எடுத்துகிட்டேன். இன்னைக்கு வரைக்கும் நான் அதை திறம்பட தான் செஞ்சுட்டு வரேன், என் தம்பிக்கும் தங்கைக்கும் நான் பொறுப்பான அண்ணனாக தானே நடந்துக்கறேன்” என்று பொருமினான் அவன்.

 

அவனை ஏதேதோ சொல்லி சமாதானப்படுத்தி படுக்க வைத்தாள் அவள். ‘அப்பா நல்ல வேளை இவர் நேரா அவங்க அம்மாகிட்ட போய் கேட்டு அவங்க பாட்டுக்கு நான் தான் சொன்னேன் சொன்னா, இவர் அவ்வளோ தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். நாளைக்கு அத்தை பேசும் போது நான் தான் சொன்னேன் சொல்லாம இருக்கணும் கடவுளே, இல்லைனா அவங்க அதை பத்தி பேசும் போது நாம வேற எதாச்சும் சொல்லி அந்த பேச்சை மாத்திடனும்’ என்று யோசித்துவிட்டு படுத்துவிட்டாள்.

 

 

லட்சுமி தன் கணவரிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறைத்ததில்லை, மருமகள் பேசியது பற்றி அவர் கூற, அருணாசலத்திற்கு ஓரளவு விஷயம் புரிந்தது, மருமகள் தனிக்குடித்தனம் போக ஆசை படுக்கிறாள் என்பது தான் அது. அவர் லட்சுமியிடம் இது பற்றி மகனிடம் பேச வேண்டாம் என்று கூற, லட்சுமி “பாவங்க சின்னஞ்சிறுசுகள் தனியாக சில நாட்கள் இருந்துவிட்டு போகட்டும் நாம ஏன் குறுக்க நிக்கணும். அவனுக்கும் கொஞ்சம் பொண்டாட்டின்னு பாசம் வரும், எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு இருக்கான், ஞாயிறுகளில் அவன் நண்பர்களை பார்க்க போயிடறான்” என்று ஏதேதோ கூற அருணாசலம் “உன்னிஷ்டம்” என்று கூறிவிட்டு போய்விட்டார்.

 

மறுநாள் ஆதித்தியாவும் அருணாசலமும் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் லட்சுமி அந்த பேச்சை ஆரம்பித்தார். “ஆதி உன்கிட்ட பேசணும்ப்பா” என்றார். அவனுக்கு குழம்பை ஊற்றிக்கொண்டிருந்த ஹரிணி அவனிடம் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையை பார்க்க அவன் சலனமில்லாமல் அவன் அன்னையை நோக்கினான். அருணாசலம் எதேச்சையாக திரும்பியவர் ஹரிணியின் பார்வையை கண்டுகொண்டார். ஏதோ யோசனையிலாழ்ந்தார். “சொல்லுங்கம்மா” என்றான் அவன்.

 

“ஏன்பா நீயும் ஹரிணியும் கொஞ்ச நாளைக்கு தனியா வேற வீட்டில இருக்கலாமே. சின்னஞ்சிறுசுகள் தனியா கொஞ்ச நாள் இருங்க, உங்களுக்கும் கொஞ்சம் குடும்பம் அது இதுன்னு பொறுப்பு வரும்ப்பா” என்றார் இதமாக.

 

“ஏன்மா என்ன பொறுப்பு எங்களுக்கு இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்க, இதுவரைக்கும் நீங்க சொன்ன மாதிரி தானேம்மா நான் நடந்து இருக்கேன். இன்னும் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா, நான் பொறுப்பா இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்களா, ஏன்பா உங்களுக்கும் என் மேல் அது போல் தான் எண்ணமா சொல்லுங்கப்பா” என்றான்.

 

“நான் உன்னை எந்த குறையும் சொல்லலையேப்பா எனக்கு அது போல் எந்த எண்ணமும் இல்லை. உன் அம்மா நீங்க தனியா ஒரு privacyoda இருக்கட்டும்னு தான் நினைக்கிறாப்பா” என்றார் அவர் மகனையும் மனைவியையும் விட்டுக் கொடுக்காமல்.

 

“இல்லைப்பா மருமக கூட ஆசைப்பட்டு…” என்று அவர் சொல்ல வர “அத்தை அவருக்கு இதெல்லாம் பிடிக்காது விட்டு விடுங்கள். இனி இது போல் எதுவும் பேசவேண்டாம்” என்றவளை வாயடைத்து போய் பார்த்தார் அவர். “அம்மா ஹரிணிகூட ஒரு தடவை என்கிட்ட கேட்டா நாம தனியா போய்டலாமான்னு நான் அவளை இது போல் பேசக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அதுல இருந்து அவ அந்த மாதிரி என்கிட்ட திரும்பவும் பேசினது இல்லை, நீங்க நான் தனியா போகணும்னு நினைக்கிறீங்க. எப்பவும் போல உங்க ஆசைப்படியே நான் நடந்துக்கறேன்ம்மா. நாங்க தனியா போயிடறோம். இதுக்கு மேல இதை பற்றி எதுவும் பேச வேண்டாம்” என்று பாதி சாப்பாட்டிலே எழுந்து சென்று விட்டான். ஹரிணி அவன் பின்னோடு சென்று விட்டாள்.

லட்சுமி கண்கள் கலங்க கணவர் முகத்தை பார்த்தார், ‘நான் சொன்னேன் நீ கேட்டியா’ என்பது போல் இருந்தது அவர் பார்வை. அவர்கள் அறைக்கு வந்ததும் லட்சுமி குலுங்கி குலுங்கி அழுதுவிட்டார்,

 

“என்னங்க நம்ம புள்ளைய நான் வெளிய போன்னு சொல்வேனா, ஹரிணி ஆசைபட்டுச்சேன்னு தான் நான் அவன் கிட்ட இதை பற்றி பேசப்போனேன். அவளை பார்த்தீங்களா ஏற்கனவே இதை பத்தி அவன்கிட்ட பேசி அவன் சத்தம் போட்டு இருக்கான். இவ என்கிட்ட வந்து ஏதேதோ பேசி என் வாயாலேயே என் மகனை தனிக்குடித்தனம் போன்னு சொல்ல வைச்சுட்டா. ஆதி ரொம்பா கோவமா இருக்காங்க. நான் அவனை அப்படி நினைப்பேனே. நான் ஹரிணிகிட்ட கேட்க போறேங்க, அவ ஏன் அப்படி பேசினான்னு” என்றார் அவர்.

 

“லட்சுமி இப்பவாச்சும் நான் சொல்றது கேளு, நீ போய் மருமககிட்ட எதுவும் கேட்க வேண்டாம். அவ அதுக்கும் வேற எதாச்சும் சொல்லிட்டான்னுவை அப்புறம் ரொம்ப கஷ்டமா போய்டும். விடு கொஞ்சநாளைக்கு அவங்க தனியாவே இருக்கட்டும். இது தான் நடக்கனும்னு இருக்கு, அது தான் அது நடந்து போச்சு. இதை யாரும் தடுக்க முடியாது. நீ ஹரிணிகிட்ட ஏதும் பேசாதே” என்றி சொல்லி அவர் அலுவலகம் கிளம்பிவிட்டார்.

 

மறுவாரமே அவர்கள் தனிக்குடித்தனம் போக ஹரிணி நிம்மதி பெருமூச்சுவிட்டாள். ‘அப்பா ஒரு வழியா நாம நினைச்சது நடந்தாச்சு’ என்று களித்தாள். அவள் அன்னை தந்தை ஆதியின் பெற்றோர் தம்பி தங்கை என அனைவரும் வந்திருக்க பால் காய்ச்சி தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர் ஆதியும் ஹரிணியும். அந்த வீட்டிற்கு வந்த சில நாட்களிலேயே ஹரிணி வாந்தி எடுத்தாள், அவளுக்கு நாட்கள் தள்ளி போயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதி வெளியில் செல்ல கிளம்பினான், ஹரிணி வாந்தி எடுக்க அவளை தாங்கி பிடித்துக் கொண்டான்.

 

“என்னங்க என்கூடவே இருக்கீங்களா, எனக்கு ரொம்ப தலை சுத்துது. மயக்கமா இருக்கு. டாக்டர் கிட்ட நாளைக்கு செக்கப் போகணும் நீங்களும் என்கூட வாங்க. என்னால முடியலைங்க” என்று அவன் மேலேயே சாய்ந்து கொண்டவளை என்ன செய்வது என்று யோசித்துவிட்டு ராஜீவிற்கு போன் செய்தான்.

 

“ராஜீவ் இன்னைக்கு என்னால வரமுடியாதுடா, நீங்க மட்டும் போங்கடா, இங்க ஹரிணிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, வாந்தி, மயக்கமா இருக்கு” என்றான். எதிர்முனையில் ஏதோ பேச “இம் ஆமாடா அப்படி தான் நினைக்கிறேன், நாளைக்கு தான் டாக்டர் கிட்ட போறோம். போயிட்டு வந்து சொல்லறேன்” என்றான் அவன்.

 

மறுநாள் மருத்துவமனைக்கு மீனாட்சியும், லட்சுமியும் உடன் வந்திருந்தனர், ஆதி தான் அவர்களை வரவழைத்திருந்தான். அவனுக்கு அவன் அன்னையின் மேல் வருத்தமிருந்தாலும் சில விஷயங்களில் அவன் கண்டிப்பானவன். அவனுடைய அன்னைக்கும் அவளுடைய அன்னைக்கும் அவன் தகவல் கொடுத்திருந்தான். மருத்துவர் பரிசோதனை செய்து அவள் கர்ப்பத்தை உறுதி செய்து பத்து நாட்கள் கழித்து ஸ்கேன் எடுப்பதற்கு எழுதிக் கொடுத்தார்.

 

டாக்டர் சொன்னது போல் பத்து நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் அவள் வயிற்றில் இரண்டு கரு இருப்பது தெரிந்தது. டாக்டர் இந்த விஷயத்தை தெரிவிக்க ஆதியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது.

 

லட்சுமி, மீனாட்சியும்கூட அளவில்லா சந்தோசம் அடைந்தனர். அவர்கள் தனிக்குடித்தனம் போனதில் இருந்து தினமும் ஒருமுறையாவது வந்து போகும் மாமியாரை ஒருவித வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தாள் ஹரிணி. அவளின் போக்கில் வித்தியாசம் கண்டு லட்சுமி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வர ஆரம்பித்திருந்தார். அவள் மசக்கையில் தவிப்பதைக் கண்டு லட்சுமி மனம் பொறுக்காமல் அங்கு தினமும் சென்று வர இருந்தார்.

 

அவள் ஒரு நாள் லட்சுமியின் முகத்திற்கு நேரேயே ஒரு மாதிரி பேசிவிட லட்சுமி அவளுக்கு ஒரு வேலையாளை ஏற்பாடு செய்தார். அவருடைய தூரத்து சொந்தத்தில்  ஊரில் யாருமற்று தனியாக இருந்த அவருடைய சித்தி மகள் பேச்சியம்மாவை அழைத்து வந்து அவளுக்கு காவலாக வைத்தார்.

 

ஆதி வீட்டில் இருக்கும் போது மாமியார் வந்தால் விழுந்து விழுந்து உபசாரம் செய்பவள் அவன் வீட்டில் இல்லாத போது வேறு மாதிரி பேசுவாள். அதனால் லட்சுமி ஆதி வீட்டில் இருக்கும் போது மட்டுமே வந்து மருமகளை கண்டு செல்வார். ஹரிணி மற்றவர்களிடம் எப்படி இருந்த போதும் ஆதியின் மீது அவள் உயிரையே வைத்திருந்தாள், அவனுக்கு காலையில் ப்ரஷில் பேஸ்ட் வைப்பதில் இருந்து அவன் அலுவலகம் கிளம்ப உடை எடுத்து வைப்பது வரை அவளே பார்த்து பார்த்து செய்வாள். கிட்டத்தட்ட அவள் அவனுக்கு இன்றியமையாதவளாகிப் போனாள்.

 

அவளுக்கு சீமந்தம் செய்து அவள் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வேளை அவள் அவளுடைய தந்தையிடம் பேசி “அப்பா என்னால் அவரை பிரிந்திருக்க முடியாது, உங்களுக்கு என்ன என் பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் அது தானே. வேண்டுமானால் அம்மாவை இங்கு அனுப்பி வையுங்கள் என் பிரசவம் வரை இருந்து அவர்கள் எல்லாம் பார்க்கட்டும்” என்று அழுதாள்.

 

மகளின் கண்ணில் கண்ணீரை கண்ட ஈஸ்வரன் மனம் தாங்காமல் அவள் விருப்படியே மனைவியை அவள் வீட்டில் விட்டுச் சென்றார். ஆதிக்கும் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது தன்னை நேசிக்கும் ஒரு மனைவி தன்னை விட்டு தலை பிரசவத்திற்கு கூட செல்லாமல் தன்னுடனே இருந்ததில் அவனுக்கு பெருமிதம். அவன் இப்போதெல்லாம் நண்பர்களை பார்க்க வெளியே செல்வதில்லை. அவள் உண்டானதில் இருந்து அவளை பூவாக தாங்கினான்.

ஒரு நாள் ஆதியின் அன்னை காலையிலேயே கிளம்பி வர ஆதி அவசர வேலையாக நேரமே கிளம்பியதால் அவன் வீட்டில் இல்லை. மாமியாரை உதாசீனப்படுத்த அவள் வேண்டுமென்றே அவள் அன்னையை விழுந்து விழுந்து கவனித்தாள். லட்சுமி இதை கண்டும் காணாதவர் போல் பார்த்துவிட்டு பேச்சியம்மாளிடம் போய் பேசிக் கொண்டிருந்தார்.

 

“பேச்சி உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே, அவ உன்னை எதுவும் பேசிடலேயே, நீ எதுக்கும் கவலைப்படாதே பேச்சி அவ பாவம் பிள்ளைதாச்சி பெண் எது பேசினாலும் நீ வருந்தாதே” என்றார்.

 

“லட்சுமி அக்கா நீ ஏன் வருத்தப்படுற, ஹரிணி பொண்ணு என்னை எதுவும் சொன்னதில்லை. அதுக்கு நம்ம ஆதி தம்பி மேல உயிரு. அதுல தான் அந்த பொண்ணு அப்படி செய்யுதுன்னு நினைக்கிறேன். ஆதி தம்பிய யாரும் உரிமை கொண்டாடறது அதுக்கு பிடிக்கல. அதான் இப்படி நடந்துக்குது அதை நான் இங்க வந்தப்பவே புரிஞ்சுக்கிட்டேன். நான் அதுக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்கறேன். நீ கவலைப்படாதே” என்றார் பேச்சி.

 

“சரியா சொன்னீங்க பேச்சி” என்ற குரலில் அதிர்ந்து விழித்தனர் இருவரும்……

 

ஆதியோடந்தமாக

எல்லாம் முடிந்தது என்று

நான் உன் நினைவிலேயே

என் வாழ்க்கையை

வாழ நினைக்க…

 

விதியின் பயனாக

உன் வாழ்கையில் இடர்

கொடுத்து என்வாழ்வில் சுடர்

ஏற்றிவிட்டான் இறைவன்…

 

உனக்காக அழுவதா

எனக்காக மகிழ்வதா…

 

உன் நினைப்பு போதும்

என்றிருந்தவளுக்கு…

உன் அருகாமையே பெரிய

வரமாய்…

 

என்னில் உன் நினைவுகளை

கரைத்து கொண்டு

வாழ்நாளை கழிக்க

எண்ணியவள்…

இன்று உனக்காய்

நம் குழந்தைகளுக்காய்

என்னை வாழ்நாளை

கரைத்துக் கொள்வேன்…

 

அத்தியாயம் –4

 

“சரியா சொன்னீங்க பேச்சி” என்ற குரலில் அதிர்ந்து விழித்தனர் இருவரும், திரும்பினால் அங்கு ஹரிணியின் அன்னை மீனாட்சி நின்றிருந்தார்.

 

“நீங்க சொன்னது ரொம்ப சரி பேச்சி, என் பொண்ணுக்கு சுயநலம் அதிகம் தான் அவளுக்கு பிடித்த விஷயத்தில் அவள் அதிகம் ஆளுமை செலுத்துவாள், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மதினி. நானே என் பொண்ணை பற்றி இப்படி சொல்லக் கூடாது என்று தான் இது நாள் வரை பேசாமல் இருந்தேன்.

 

“இன்று அவள் என்னை விழுந்து விழுந்து உபசரிக்கும் போது எனக்குள் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. அவள் உங்களை ஒதுக்குவதற்காக என்னை தாங்கினாள் என்று புரிந்து கொண்டேன். உங்களுக்கு ஒன்று தெரியுமா, அவளுக்கு என்னிடத்தில்கூட அவ்வளவு பிடித்தம் கிடையாது. அவளுக்கு அவள் தந்தை மட்டும் இருந்தால் போதும்”.

 

“ஹரிணியோட அப்பா எனக்கு சொந்த அத்தை மகன், வீட்டில பெரியவங்க சண்டை. நாங்க வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம். இன்னைக்கு வரைக்கும் எங்க சொந்தங்கள் எங்களை தேடி வந்ததில்லை. அவங்க அப்பா என் மேல உயிரா இருப்பாங்க, ஹரிணினா அவங்க அப்பாக்கு ரொம்ப இஷ்டம்.

 

“அவ பிறந்த பிறகு தான் எங்களுக்கு வசதி வந்துச்சி, அதுனால அவங்க அப்பா அவளை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவேன், அது அவளுக்கு பிடிக்காது, அதுவும் இல்லாம அவங்க அப்பா என் மேல பிரியமா இருந்ததுனால எங்களுக்குள்ள ஏதாச்சும் பிரச்சனை உண்டு பண்ணிட்டே இருந்தா, அதுல இருந்து அவங்க அப்பாக்கு நான் எது சொன்னாலும் அது சரியா இருக்காதுன்னு முடிவு பண்ணி என்கிட்டே எதையும் கலந்துக்க மாட்டாங்க”

 

“இந்த கல்யாணத்துக்குகூட நீங்க முதல்ல சம்மதம் சொல்லாம போய் கலந்து சொல்றோம் சொல்லி இருந்தீங்கள்ள, ஹரிணிக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா உங்ககிட்ட இருந்து எந்த பதிலும் வரல, முத நாள் அவங்க அப்பா உங்ககிட்ட இருந்து எந்த பதிலும் வரலன்னு சொல்லிட்டு இருந்தாங்க

 

“அதை வைச்சு அவளே மாப்பிள்ளைக்கு போன் போட்டு உங்ககிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை, எங்க அப்பா வருத்தப்படுறாங்க அப்படி இப்படின்னு பேசி நீங்களும் சம்மதிச்சு இந்த கல்யாணம் நடந்துச்சு. அவ பேசினதை நான் கேட்டுட்டு அவளை கண்டிச்சேன், அன்னைக்கு எனக்கும் அவளுக்கும் பெரிய வாக்குவாதமே நடந்துச்சு.

“அவங்க தனிக்குடித்தனம் வந்தப்பவே எனக்கு ஒரு சந்தேகம் இது இவ வேலையா இருக்குமோன்னு. நான் அப்பவே உங்ககிட்ட பேசி இருக்கணும், எல்லாமே இவளோட வேலை தான்னு இங்க வந்த பிறகு தான் புரியுது மதினி. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளை மன்னிச்சுடுங்கன்னு சொல்றதுக்கு அவ ஒண்ணும் சின்ன தப்பு செய்யல. அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன்.

 

“ஆனா ஒண்ணும் மட்டும் நிச்சயம், பேச்சி சொன்ன மாதிரி என் பொண்ணு மாப்பிள்ளை மேல உயிரா இருக்கா, அதுனால தான் மாப்பிளையும் அவளோட தவறுகளை கண்டும் காணாம இருப்பாரோன்னு எனக்கு சந்தேகம்” என்று நீளமாக பேசி அவர் மனதில் உள்ளதை கொட்டினார் அவர்.

 

அருகில் வந்து அவர் கைகளை பிடித்துக் கொண்ட லட்சுமி, “என்ன மதினி நீங்க இவ்வளவு வருத்தத்தை மனசுல போட்டு வைச்சு புழுங்கிட்டு இருக்கீங்க. ஹரிணி இப்படி செய்யறது வருத்தமா இருந்தாலும், அவளுக்கு என்னைவிட என் மகன் மேல பாசம். என்னைவிட அவனை ரொம்ப நல்லா அவ பார்த்துக்கற, அதை நானே கண்கூடா பார்த்து இருக்கேன் மதினி.

 

“விடுங்க நம்ம பொண்ணு தப்பு பண்ணா மன்னிக்க மாட்டோமோ, ஹரிணியும் எனக்கு ஒரு மக மாதிரி தான். பேச்சி வேற யாரும் இல்லை என்னோட தங்கை தான், அவளும் மருமகளை புரிஞ்சு வைச்சு இருக்கா. நீங்க கவலைபடாதீங்க, பேச்சி ஹரிணியை நல்லா பார்த்துக்குவா மதினி. ஹரிணிக்கு என்ன என்ன பிடிக்கும் சொல்லுங்க நாம செஞ்சு குடுப்போம் இல்லைனா, பேச்சிகூட செஞ்சு குடுப்பா” என்று பேச்சை திசை மாற்றினார் லட்சுமி.

 

ஆதி அவன் நண்பர்களை சந்திக்க போகும் தருணம் வெகுவாக குறைந்திருந்தது, அவன் கிளம்பும் நேரம் பார்த்து அவள் முடங்கி உட்கார ஆதியும் அவளை விட்டு பிரியாமல் அவளை பத்திரமாக பார்த்துக் கொண்டான்.

 

நாட்கள் கடந்து செல்ல ஹரிணிக்கு வளைகாப்பு நாளும் வந்தது. சந்தோசமாக எல்லோரும் வளைகாப்பை நடத்தி முடிக்க ஹரிணி அவள் வீட்டிற்கு கிளம்பாமலே அமைதியாக அவர்கள் அறையில் அமர்ந்திருந்தாள். “ஹரிணி என்ன உன்னை கிளம்பச் சொன்னா, இங்க வந்து உட்கார்ந்து இருக்க, எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டியா கிளம்பும்மா” என்றான் ஆதித்தியன்.

 

“என்னங்க உங்களுக்கு இதுல வருத்தமா இல்லையா, என்னை நீங்க தேடமாட்டீங்களா. நான் எங்க வீட்டுக்கு போனாதான் உங்களுக்கு சந்தோசமா” என்றாள் கண்களில் ஈரத்துடன். “ஹேய் என்ன ஹரிணி நீ இதுக்கு போய் வருத்தப்படுற நீ போனா எனக்கும் கஷ்டம் தான் நீயே எனக்காக எல்லா வேலையும் செய்தே, நீ இல்லன்னா நிச்சயாம நான் உன்னை தேடுவேன் தான் ஆனாலும் இது உனக்கு தலை பிரசவமாச்சே நீ அம்மா வீட்டுக்கு போய் தானே ஆகணும்” என்றான் சற்று சலிப்பும் வருத்தமுமாக.

 

“ஏங்க நான் இங்கயே இருக்கட்டும்மா அம்மா வேணா நம்ம கூடவே வைச்சுக்கலாம் பிரசவம் வரைக்கும். இங்க பேச்சியும் இருக்காங்க, அப்புறம் என்னங்க நான் வேணும்னா அப்பாகிட்ட பேசட்டுமா” என்றாள் அவள். வயிற்றுபிள்ளைக்காரி ஒன்றுக்கு இரண்டாக அவனுடைய சிசுவை சுமப்பவள் அவனுக்கு மனது கேட்கவில்லை.

 

அவளின் கோரிக்கையை அவனால் நிராகரிக்க முடியவில்லை, சரியென்று அவளிடம் தலையசைத்து அவளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். ஹரிணி அவள் தந்தையிடம் பேசி அவள் அன்னையை அவளுடன் இருந்து அவள் பிரசவம் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்தாள். தான் ஒரு பிள்ளையை வயிற்றில் சுமக்கும் போது தான் அவளுக்கு அன்னையின் அருமை புரிந்தது.

 

அவள் அன்னையை பலவாறாக அவள் அவமானப்படுத்தியதை எண்ணி மனம் வருந்தினாள். “அம்மா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் அவள். “சொல்லும்மா ஹரிணி” என்றார் அவர் கனிவாக, ‘எப்படி இவரால் இது முடிகிறது தான் அவரை எத்தனை முறை சிறுமை படுத்தி இருப்போம், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை இவ்வளவு கனிவாக அழைக்கிறாரே’ என்று நினைத்தாள்.

 

“அம்மா என்னை மன்னிப்பீங்களா, நான் உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நெறய தடவை பேசி இருக்கேன், உங்களை ரொம்பவும் அவமானப்படுத்தி இருக்கேன். நானும் ஒரு தாயாக மாறும் போது தான் எனக்கு உங்களை புரிகிறது. என்னை மன்னிப்பியாம்மா” என்று கூறி மீனாட்சியின் மடியில் தலை வைத்து ஓவென்று அழுதாள்.

 

மீனாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது, பேசியது தன் மகள் தானா அவளிடம் இந்த பக்குவம் எப்படி வந்தது, அவள் கூறியது போல் அவளும் ஒரு அன்னையாகப் போகிறாளே என்பதினால் தானோ. எது எப்படியோ அவள் மகளின் இந்த குணம் அவருக்கு ஒரு நிறைவை கொடுத்தது.

 

“விடும்மா ஹரிணி, எனக்கு உன்கிட்ட எந்த வருத்தமும் இல்லை. நீ மாறணும் மட்டும் தான் நான் நினைச்சேன், உன்னோட இந்த மாற்றம் எனக்கு ரொம்பவும் சந்தோசம்மா” என்று சிலாகித்தார் அவர்.

 

“அம்மா நான் அத்தையை கூட ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டேன், அவங்களும் என்னை மாதிரி தானே அவங்க பிள்ளையை சுமந்து இருப்பாங்க, அவங்க பிள்ளையை நான் அவங்ககிட்ட இருந்து பிரிச்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். நான் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்மா. கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரே போராட்டம் தான்மா உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேக்கணும் தோணுச்சு.

“ஆனா ஒண்ணும்மா இப்பவும் என்னால அவரை விட்டு கொடுக்க முடியல, அவர் மேல நான் உயிரையே வைச்சு இருக்கேன். நான் செய்யறது தப்புன்னு இப்போ என்னால உணரமுடியுது ஆனாலும் என்னால என்னை அடியோட மாத்திக்க முடியலைமா”.

 

“எனக்காக இல்லைனாலும் அவருக்காக நாம திரும்ப அந்த வீட்டுக்கு போயிடலாம்னு அவர்கிட்ட கூட பேசினேன், அவர் அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டார். வளைகாப்பு அன்னைக்கு அத்தைகிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்மா, அவங்ககிட்ட கூட சொன்னேன், நாங்க திரும்ப அங்க வந்துடுறோம்ன்னு, ஆனா அத்தை தான் இந்த மாதிரி நேரத்துல வீடு மாத்தக் கூடாதுன்னும் அப்புறம் இதை பத்தி பார்த்துக்கலாம்ன்னு சொல்லிட்டங்கம்மா. ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்மா” என்று வருந்தியவளை ஒருவாறு சமாதானப்படுத்தி தூங்க வைத்தார் அவர்.

 

நடுநிசியில் அவள் இடுப்பில் ஒரு வலி எழ மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். இது எந்த மாதிரியான வலி சூட்டு வலியா அல்லது பிரசவவலியா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் ஒரு முறை அவளுக்கு வலி கண்டது, இனியும் தாமதிக்கக் கூடாது என்று ஆதித்தியனை எழுப்ப, பதறி எழுந்தவன், “என்னம்மா ஹரிணி என்னடா என்னாச்சு” என்றான். அதற்குள் அவள் முகம் வலியில் சுருங்கியது, அதைக் கண்டவன் தாமதிக்காமல் அடுத்த அறையில் இருந்த அவனுடைய மாமியாரையும், பேச்சியையும் எழுப்பினான்.

 

“அத்தை, சித்தி, கொஞ்சம் கதவை திறங்க. சித்தி சித்தி” என்ற அவள் அழைப்பில் பேச்சி வந்து கதவை திறக்க என்னப்பா ஆதி, ஹரிணிக்கு வலி எதுவும் எடுத்துடுச்சா” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீனாட்சி வேகமா எழுந்து வந்து அடுத்த அறைக்கு ஓடினார்.

 

அங்கு ஹரிணிக்கு அடுத்தடுத்த வலிகளில் அவள் ஓய்ந்து போய் இருக்க மருத்துவமனைக்கு தேவையானவற்றுடன் பேச்சியும் வர அவளை கைத்தாங்கலாக அவர்கள் எழுப்ப அவள் வலியில் துவண்டாள், அவளை அங்கேயே இருக்கச் செய்துவிட்டு ஒரு நிமிடம் அத்தை என்றவன் காரை எடுத்து வெளியில் நிறுத்திவிட்டு கதவை தயாராக திறந்து வைத்தான்.

 

மீண்டும் உள்ளே வந்து அவளை இருகைகளாலும் தூக்கிக்கொண்டு மாமியாரையும், பேச்சியும் பின்னால் வர அவளைக் கொண்டு காரின் பின் இருக்கையில் கிடத்தினான். அதற்குள் பேச்சி வேலையாளைக் கூப்பிட்டு சொல்லிவிட்டு வர அவன் கார் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

 

பேச்சி லட்சுமியை போனில் அழைத்து விவரம் சொல்ல அவர் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகக் கூறி போனை வைத்தார். அந்த புகழ் பெற்ற மருத்துவமனையின் வாசலில் கார் நிற்க, ஆதி ஏற்கனவே அவளுக்கு பார்க்கும் அந்த பெண் மருத்துவரை அழைத்து விபரம் சொல்லி இருக்க, அவரும் பின்னோடு உள்ளே வந்தார்.

அவளை உடனடியாக பிரசவ அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த டாக்டர் ஆபரேஷன் செய்து தான் குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டும் என்று கூறிவிட உடனடியாக ஆபரேஷன்னுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக கழிய அவர்களின் செல்வங்கள் இந்த மண்ணில் ஜனித்தனர்.

 

டாக்டர் வெளியில் வந்து அவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரட்டையர்கள் பிறந்த தகவலை அளிக்க எல்லோரும் மகிழ்ந்தனர். அதற்குள் அருணாசலமும் லட்சுமி வந்துவிட அவர்களும் அளவில்லா மகிழ்ச்சியை அடைந்தனர். மூன்று நாட்கள் கழித்து குழந்தைகளுடன் அவர்கள் வீட்டிற்கு வர ஆதவனும், ஆதர்ஷாவும் வீட்டிலேயே வந்து குழந்தைகளை பார்த்தனர்.

 

“அண்ணா குட்டி பொண்ணு என்னை மாதிரியே இருக்கா இல்ல” என்றாள் ஆதர்ஷா பெருமிதத்துடன். “கடவுளே இது உனக்கே அடுக்குமா, இவ பேசறத நீ உண்மைன்னு நம்பிடாத அண்ணா, குழந்தை அழகா இருக்கு, நீ என்னடானா உன்னை மாதிரி இருக்குன்னு சொல்ற, லூசாடி நீ” என்றான் ஆதவன்.

 

“ஆதவா என்ன இது அவளை டீன்னு சொல்லிட்டு, அவ பார்க்க குட்டி ஆதர்ஷா மாதிரி தான் இருக்கா, எனக்கு இவளோட சின்ன வயசு கொஞ்சம் ஞாபகம் இருக்கு இப்படி தான் அழகா அமைதியா இருப்பா. இவ இப்போ வளரந்ததுக்கு அப்புறம் தானே ரொம்பவும் வாயடிக்கற” என்று அவளை புகழ்வது போல பேசி பின் அவள் காலை வாரினான் ஆதித்தியன்.

 

குழந்தைகளை தொட்டிலில் இட்டு கவின் கவினி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஹரிணி முன்பு போலவே மீண்டும் கணவனுக்கு சேவகம் செய்ய தொடங்கிவிட்டாள், பேச்சிகூட “உனக்கு ஆபரேஷன் செய்த உடம்பும்மா, இப்படி ஓடி ஓடி உழைத்து உன் உடம்பை கெடுத்துக் கொள்ளாதே, நீ குழந்தைகளை கவனி. என்ன செய்ய வேண்டுமோ சொல் நான் செய்கிறேன்” என்று கூற, அவளுக்குள் மீண்டும் அவள் குணம் தலை தூக்கியது.

 

“எனக்கு தெரியும் நீங்க பேசாம போய் குழந்தைகளை பார்க்கற வேலையை மட்டும் செய்ங்க” என்று முகத்தில் அறைந்தது போல் கூறிவிட்டு அவனை கவனிக்கச் சென்று விட்டாள். அவன் அலுவலகம் சென்ற பின்னே அவளுக்கு பேச்சியை திட்டியது ஞாபகத்திற்கு வர அவர் அறையை நாடிச் சென்றாள்.

 

“என்னை மன்னிச்சுடுங்க, நான் பேசினது தப்பு தான். எனக்கு அவரை விட்டு தர முடியாது, அவர்க்கு நானே எல்லாம் பார்த்து பார்த்து செய்யணும் ஆசைப்படறேன், அதான் நானே அவர் துணியை துவைப்பதில் இருந்து அவர் துணியை அயர்ன் செய்து அவருக்கு உணவு சமைத்து அதை என் கையால் பரிமாறி என்று பார்த்து செய்கிறேன். ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று அவள் பணிந்து பேசியதில் பேச்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“விடும்மா நான் எதுவும் நினைக்கல, நீ அவரை கவனி தப்பில்லை, ஆனா குழந்தைகளையும் உன்னை கொஞ்சம் கவனிச்சுக்கோ எனக்கு அது தான் கவலை” என்று கூற அவளோ “இல்லை பேச்சி அத்தை எனக்கு என்னைவிட என் குழந்தைகளை விட அவர் மட்டுமே முக்கியம். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் எனக்கு எல்லாமும் அவர் தான். அவருக்கு பின் தான் எனக்கு குழந்தைகள்” என்று அவள் பேச பேச்சி அத்தோடு அந்த பேச்சை விட்டுவிட்டார்.

 

குழந்தைகளுக்கு ஒன்பது மாதம் நிறைந்திருந்த வேளை ஹரிணி அடிக்கடி சோர்ந்து படுத்துவிட அதை கண்ட பேச்சி அவளிடம் பேச்சு குடுக்க அவளோ “ஒன்றுமில்லை அத்தை எனக்கு பசி எடுக்க மாட்டேன்கிறது. ஒரே சோர்வாக இருக்கிறது, கொஞ்சம் படுத்து ஓய்வு எடுத்தால் சரி ஆகி போகும்” என்று கூறிவிட்டு அவள் சோபாவிலேயே படுத்துக் கொண்டாள்.

 

பேச்சிக்கு ஏதோ தவறாக பட உடனே லட்சுமிக்கு போன் செய்து விபரம் கூறியதோடு நில்லாமல் மீனாட்சிக்கும் போன் செய்து வரவைத்தார். அடுத்தடுத்து வீட்டிற்குள் நுழைந்தவர்கள் ஹரிணியின் நிலையை கண்டு கவலை கொள்ள லட்சுமி தாமதிக்காமல் ஆதிக்கு போன் செய்தார்.

 

“ஆதி என்னப்பா இது ஹரிணி உடம்பு சரியில்லாம இருக்கா, நீயாவது ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா. அவ நிலைமை ரொம்ப மோசமா தெரியுதே நான் உடனே டாக்டர்கிட்ட அழைச்சுட்டு போறேன்ப்பா” என்றார் அவர்.  “என்னம்மா சொல்றீங்க, காலையில கூட அவ நல்லா தானே இருந்தா, எனக்கு காலை சாப்பாடு குடுத்து நான் ஆபீஸ் கிளம்பும் போதுகூட என்னை நல்லா தான்மா வழியனுப்பி வைச்சா” என்றான் ஆதித்தியன்.

 

“இல்லப்பா ஆதி அவளுக்கு கொஞ்ச நாளாவே உடம்பு சரியில்லை, அவ அவளை கவனிச்சுக்கறதே இல்லை. பேச்சி சொன்னாலும் அவ கேட்கலை, இழுத்து போட்டுட்டு உனக்கு எல்லாம் அவ தானே செய்வேன்னு அடம்பிடிச்சு இருக்கா, இப்போ இப்படி சோர்ந்து போய் படுத்து இருக்கா, என்னன்னு தெரியல, நான் நாம வழக்கமா பார்க்கற மருத்துவமனைக்கே அவளை கூட்டிப்போறேன். ஹரிணியோட அம்மாகூட வந்து இருக்காங்க அங்க போயிட்டு போன் பண்றேன்பா” என்று கூறி போனை வைத்தார்.

 

அவர்கள் காரிலேயே அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றனர். பேச்சி குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தார். அவளைக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்க்க அவளுக்கு சுத்தமாக சுயநினைவு போய்விட்டது. டாக்டர் அவளை பரிசோதித்து பார்த்துவிட்டு வெளியில் வந்து அவர்களை அழைத்தார்.

 

“என்ன லட்சுமி அம்மா இது அவளுக்கு மஞ்சள் காமாலை முற்றி போயிருக்கு, இப்போ தான் நீங்க கூட்டிட்டு வரீங்க. நீங்களாம் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க, ஏன் முதல்லயே கூட்டிட்டு வரல, நீங்க முதல்ல உங்க மகனை வரவழைங்க, உன் மருமகளுக்கு ரொம்பவும் மோசமான நிலைமை அவங்களை பற்றி நான் உங்க மகன் கிட்ட பேசியே ஆகணும் நீங்க அவரை சிக்கிரம் வரவைங்க” என்று அவர் கூற, லட்சுமிக்கு பதட்டத்தில் என்ன செய்வதென்று புரியாமல் கைகள் நடுங்க ஆரமபித்தது. அவர் பதட்டத்தை பார்த்து மீனாட்சி போனை எடுத்து ஆதித்தியனுக்கு போன் செய்தார்.

 

“மாப்பிள்ளை நான் தான் ஹரிணியோட அம்மா பேசறேன்” என்றார். “சொல்லுங்க அத்தை, என்னாச்சு ஹரிணிக்கு இப்போ எப்படி இருக்கு” என்றான் அவன். “மாப்பிள்ளை டாக்டர் உங்களை உடனே வரச் சொல்றாங்க, நிலைமை மோசமா இருக்காம். உங்ககிட்ட பேசியே ஆகணும் சொல்றாங்க. அம்மாவை கூட சத்தம் போட்டாங்க” என்றார் அவர். “என்னாச்சு அத்தை கொஞ்சம் விவரமா சொல்லுங்க” என்றான் அவன் பதறியவாறே.

 

“ஹரிணிக்கு மஞ்சள் காமாலை முற்றிய நிலையாம், அவளுக்கு நினைவும் தப்பிவிட்டது என்று டாக்டர் கூறுகிறார்” என்றார் அவர். “சரி அத்தை நான் உடனே வரேன்” என்றவனை அவர் குரல் இடைமறிக்க “சொல்லுங்க அத்தை” என்றான்.

 

“நீங்க அப்பாவையும் கூட்டிட்டு வாங்க மாப்பிள்ளை நான் ஹரிணியோட அப்பாவையும் வரச் சொல்லி இருக்கேன். எனக்கு அவளோட நிலைமை ரொம்பவும் பயத்தை குடுக்குது மாப்பிள்ளை, அம்மாவுக்கு இப்போவே கை நடுக்கமா இருக்கு. அதான் அவங்ககிட எதுவும் சொல்லலை” என்றவரின் குரல் தழுதழுத்தது.

 

அங்கு அலுவலகத்தில் ஆதித்தியனின் நிலைமையோ கஷ்டமாக இருந்தது, ஹரிணியின் அன்னை எதையும் அனாவசியமாக பேச மாட்டார் என்பது அவனுக்கு தெரியும். அவன் இதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது. பதட்டத்துடன் தந்தை நாடிச் செல்ல அவரிடம் விஷயத்தை சொல்வதற்குள் அவன் நா வறண்டுவிட்டது. அவனின் அந்த பயம் அவருக்கும் தொற்றிக் கொள்ள மேனேஜரை அழைத்து விபரம் சொல்லிவிட்டு அவர் காரை எடுத்தார்.

 

கார் மருத்துவமனையை அடைய அதற்குள் டாக்டர் இரண்டு முறை வந்து ஆதியை பற்றி கேட்டுவிட்டு போக அவன் வந்ததும் விரைவாக டாக்டரை பார்க்கச் சென்றான். “டாக்டர் நான் ஹரிணியோட கணவர்” என்று அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள அவன் சோர்ந்த முகம் கண்டு டாக்டர் அவனிடம் “என்னங்க நீங்க அவங்களுக்கு சிவியர் மஞ்சள் காமாலை அட்டாக் பண்ணி இருக்கு, மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம், நீங்க அவளோட கணவர் உங்களுக்குமா தெரியாம போச்சு” என்றார் அவர்.

 

“இல்லை டாக்டர் அவ நான் ஆபீஸ் கிளம்பற வரைக்கும் எனக்கு பார்த்து பார்த்து செய்வா, என்கிட்ட எதுவுமே சொல்லலை, என்னோட தப்பு தான் இது நானும் அவளை கொஞ்சம் கவனிச்சு இருக்கணும். ஆபீஸ் கொஞ்சம் பிரிச்சனை இருந்ததுனால நான் அவளை சரியா கவனிக்காம விட்டுட்டேன். இப்ப என்னாச்சு டாக்டர் அவ எப்படி இருக்கா, நான் போய் பார்க்கலாமா” என்றான் பதறியவாறே.

 

“இல்லை ஆதித்தியா அவங்களுக்கு இப்போ நினைவு தப்பிருச்சு, நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அவங்க உடம்பில நோய் எதிர்ப்பு சக்தியும் குறைஞ்சுட்டே வருது. எங்களோட எந்த மருந்துக்கும் அவங்க உடம்பு இப்போ சப்போர்ட் பண்ண மாட்டேங்குது. இன்னும் 48 மணி நேரம் போகணும் அப்போ தான் எதுவும் சொல்ல முடியும்” என்றார் அவர்.

 

“நான் பார்க்கலாமா” என்றவனை அவரே அழைத்துச் சென்றார், அந்த மருத்துவமனைக்கு அவர்கள் ரொம்பவும் பரிச்சயமானவர்கள். அந்த மருத்துவமனைக்கு அவர்கள் நிறைய உதவிகள் செய்துள்ளனர்.

 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமத்திக்க பட்டிருந்தவளை உள்ளே சென்று பார்க்க அவளுக்கு லேசாக சுய உணர்வு வந்தது. ஒருமுறை கண்ணை திறந்து அவனை பார்த்துவிட்டு பின் கண்களை மூடிக் கொண்டாள். அவனை வெளியில் இருக்குமாறு கூறிவிட்டு அவளை மீண்டும் பரிசோதித்தார் டாக்டர்.

 

வெளியில் வந்து அவனை தனியே அழைத்து அவள் கோமாவில் விழுந்து விட்டதாக கூறினார். நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பிழைப்பது அரிது என்று அவனிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். தளர்ந்து போய் அமர்ந்தவனை என்னவென்று அவன் தந்தையும் அவளுடைய தந்தையும் மாறி மாறி விசாரிக்க அவன் ஒருவாறு டாக்டர் கூறிய விஷயத்தை கூறினான்.

 

டாக்டர் கொடுத்த கெடு முடிந்து மேலும் ஒரு நாட்கள் கழிய அவள் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அது மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே வந்தது. ஓவ்வொரு உறுப்பாக வேலை நிருத்தம் செய்ய ஒவ்வொரு நொடியும் பல யுகமாக கழிய அன்று இரவே அவளுக்கு சுயஉணர்வு வந்தது,

 

அவனை மட்டும் பார்க்க அனுமதித்த டாக்டர் அவனை உள்ளே போகச் சொன்னார். அவள் கண்கள் அவனை நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது, அவள் கண்களில் கண்ணீர் வழிய அவள் உடல் லேசாக குலுங்கி பின் அந்த உயிர் அவளை விட்டு பிரிந்தது.

 

ஆதித்தியனுக்கு இப்படி ஓர் நிலை தனக்கு வரும் என்று அவன் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைக்க எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவனை அவர்களால் தேற்றவே முடியவில்லை. எல்லா சடங்குகளும் முடிந்து காரியமும் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக ஆனது. ஆதி அந்த அவர்களுடைய அறையிலேயே முடங்கி கிடக்க, அவன் தந்தை பலவிதமாக பேசி அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

அவனுக்கு யோசிக்க கூட இடம் இல்லாதவாறு அடுத்தடுத்த வேலைகளை அவனுக்காக தயாராக வைத்திருந்தார். அவனும் ஒருவாறு இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தான். இருந்தும் வீட்டில் எல்லோரும் ஒருவித சோகத்துடன் இருந்தனர். ஆதவனும் ஆதர்ஷாவும் தினமும் சென்று குழந்தைகளை தூக்கி வந்து தங்களுடன் வைத்துக் விளையாடிவிட்டு மீதும் மாலையில் கொண்டு விட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர்.

 

மாலையில் அலுவலகம் விட்டு வரும் ஆதி குழந்தைகளிடம் சிறுது நேரம் விளையாடிவிட்டு அவன் அறைக்குள் சென்று அடைந்துவிடுவான். நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க ஒரு நாள் ஹரிணியுடைய அன்னையும் தந்தையும் அருணாசலத்தையும் லட்சுமியை பார்க்க வந்திருந்தனர்.

 

“வாங்க வாங்க” என்று அவர்களை லட்சுமி உள்ளே அழைத்துச் செல்ல அவர்களுக்கு குடிக்க காபி கொண்டு வந்து கொடுத்தார் அவர். “நீங்களும் உட்காருங்க சம்மந்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் மீனாட்சி பிடிகையுடன். என்ன என்பது போல் அருணாசலமும் லட்சுமியும் பார்க்க அவரே தொண்டர்ந்தார்.

 

“நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க, மாப்பிள்ளையை நீங்க உங்களோடவே வரச்சொல்லி இருக்கலாமே” என்று அவர் கூற, இடைமறித்த லட்சுமி “நாங்கள் அவனிடம் பலமுறை கூப்பிட்டுவிட்டோம். ஆனால் அவன் தான் ஹரிணி வாழ்ந்த அந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். என்ன செய்வது என்றே புரியவில்லை” என்று அவர் புலம்பினார்.

 

“நீங்க ஏன் மாப்பிளைக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாது” என்றனர் ஈஸ்வரனும் மீனாட்சியும் ஒரு சேர, எதிர்ப்பார்கள் என்று நினைத்தவர்கள் நேரடியாக வந்து இந்த விஷயத்தை பேசியதில் லட்சுமிக்கும் சற்று மனம் லேசானது. அவருக்கு இது போல் ஒரு எண்ணம் உதித்தது உண்மையே, ஆனால் அவர் அதை யாரிடம் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருந்தார். அருணாசலமும் திகைத்து விழிக்க “நீங்க அவன் ஒத்துப்பான்னு நினைக்கிறீங்களா, அவனுக்கு கொஞ்சம் பிடிவாதம் அதிகம் வேண்டாம் என்றே கூறுவான்” என்றார் அருணாசலம்.

 

“நீங்க அவருக்கு புரியற மாதிரி எடுத்து சொல்லுங்க” என்றார் ஈஸ்வரன். “எங்க பொண்ணுகிட்ட நெறய குறை இருந்தது, அதெல்லாம் பொருட்படுத்தாம நீங்க எல்லாரும் அவளை நல்ல படியா பார்த்துகிட்டீங்க. அதுபோல மாப்பிள்ளை நல்லா இருக்கணும் குழந்தைங்களுக்கு ஒரு அம்மா வேணும் இல்லையா நாங்க அதுக்காக தான் சொல்றோம்” என்றார் மீனாட்சி. மேலும் ஏதேதோ பேசி அவர்கள் மனதில் அவனுக்கு இரண்டாம் திருமணம் என்ற விதையை அவர்கள் விதைத்துவிட்டு போயினர் அவர்கள் இருவரும்.

 

லட்சுமி அது முதல் ஆதியை போட்டு துளைக்க ஆதி கண்டிப்பாக தனக்கு மறுமணம் கிடையாது என்று சொல்லிவிட அது தொடர்கதையாக இரண்டரை வருடமாக நடந்தது.  லட்சுமி அவன் வாழ்வை நினைத்து அழுது கரைய மனம் கேட்காமல் அருணாசலம் அவனிடத்தில் பேச முடிவெடுத்தார். முதலில் அவர் இந்த விஷயத்தை பற்றி எப்படி பேசுவது என்று ஒதுங்கி இருந்தார், லட்சுமி பேசி ஒருமுடிவுக்கு வரட்டும் என்றிருந்தவர், அவன் விடகண்டனாக இருக்க அவரே பேச முனைந்தார்.

 

இடையில் ஒருமுறை அவன் பாபநாசத்திற்கு செல்ல அவனுடைய ஆச்சி அவனிடம் பேசி வேறு திருமணம் பற்றி பேச குழந்தைகளை யோசித்து முடிவெடுக்குமாறு கூற அவன் யோசனையிலாழ்ந்தான். ஊரில் இருந்து திரும்பி வந்தவனை அருணாசலம் பேச வேண்டும் என்று அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

“சொல்லுங்கப்பா ஏதோ பேசணும் சொன்னீங்க” என்றான். “ஆதி நான் புதுசா எதுவும் சொல்ல வரலை, உங்கம்மா சொல்லுக்கு நீ கொஞ்சம் செவி சாய்க்கக் கூடாது ஆதி” என்றார் அவர். “என்னப்பா நீங்களும் புரியாம என்னால வேற கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா, இன்னமும் என்னால அவளோட நினைவுகளை அடியோட அழிக்க முடியல, என்னை விட்டுடுங்கப்பா” என்றான் கெஞ்சுதலாக.

 

“ஆதி நான் சொல்றதையும் கேட்டுட்டு நீ முடிவு பண்ணு, உனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க அவங்களுக்கு விபரம் தெரிஞ்சு அம்மா எங்கன்னு கேட்பாங்க. நாம சொல்லலாம் ஆனாலும் அவங்களுக்கு மனசுல ஒரு ஏக்கம் வந்துடும். உனக்கு ஆண் ஒண்ணு பெண் ஒண்ணுன்னு ரெண்டு பேரு இருக்காங்க. நாளைக்கு நம்ம கவினிக்கு ஒரு கல்யாணம் காட்சி நடந்து அவ வாழ்க்கையில் சில முக்கிய தருணங்கள் வரும். குழந்தைகள் ஏங்கி போவாங்க ஆதி, நீ யோசி நல்ல முடிவா எடு, உன்னை பற்றி யோசிச்சு முடிவெடுக்காம உன் குழந்தைகளுக்காக யோசித்து முடிவு செய்” என்று கூறி அவர் சென்று விட்டார்.

 

பலவித யோசைனைகளுக்கு பின் ஆதி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போது லட்சுமியின் நாத்தனார் சந்திராவின் மூலம் ஆதிராவை பற்றி விபரம் அறிந்தனர். ஆதிராவிற்கு இது முதல் திருமணம் என்பதால் லட்சுமி முதலில் அவளிடம் நன்றாக கேட்டு பின் முடிவெடுக்கச் சொன்னார். எல்லாருடைய சம்மதத்தில் அவர்கள் திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது.

 

ஒருவாறு லட்சுமி பழைய நினைவுகளில் இருந்து விடுபட, தன் அன்னையிடம் வந்து இது பற்றி பேசி கொண்டிருக்க ஆதிரா அவரை அழைத்தாள். “அத்தை அத்தை” என்றாள். “சொல்லும்மா, நீ இன்னும் மேல போகலையா” என்றார் அவர்.

 

“இல்லை அத்தை குழந்தைங்க எங்க நான் அவங்களையும் கூட்டிப் போறேன்” என்றாள். “இல்லைம்மா குழந்தைங்க பேச்சி கூட இருந்துப்பாங்க” என்றார். “ஏன் அத்தை குழந்தைங்களை நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா” என்றாள் அவள் வறண்ட குரலில். உடனே பேச்சியின் அறைக்குச் சென்று குழந்தைகளை அவளிடம் தூக்கிக் கொடுத்தார் அவர். “அத்தை நான் எதுவும் தப்பா பேசி இருந்தா மன்னிச்சுடுங்க” என்றாள் அவள்.

 

“இல்லைம்மா உன்னை பார்த்தா எனக்கு பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு. நீ நல்லா இருப்பம்மா, இரு கவினை கொடு நான் தூக்கிக்கறேன்” என்று அவரும் தூக்கிக்கொண்டு மாடிக்கு வந்தார். அறைக்கதவை இருவருமாக மாறி மாறி தட்ட ஆதியும் பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு சூழ்நிலை உணர்ந்து ஒரு சலிப்புடன் வந்து கதவை திறந்தான்.

 

 

உன்னை பற்றி எண்ணங்களே

என் ஒவ்வொரு செல்களிலும்

இருக்கிறது…

 

என் ஞாபக அடுக்குகள்

முழுவதும் நீயே நிறைந்து

இருக்கிறாய்…

 

உன்னை பற்றிய நினைவுகள்

மட்டுமே எனக்கு

உயிர்ப்பை கொடுக்கிறது…

 

என்னில் உன்னை

முழுவதுமாய் கரைத்து

உன்னில் என்னை

தேடுகிறேன்…

 

Advertisement