புன்னகை– 23

புதுக்கோட்டையில்தங்கள்கல்லூரியில்புதிதாய்நர்ஸிங்படிப்பு ஆரம்பிப்பதற்காக அப்ரூவலை பெறுவது சம்பந்தமாக முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திக்க நேத்ராவும், அவள் மாமனார் சிவராமனும் வந்திருந்தனர்.

முதல்நாள் வேலை முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழலில் அனய்யும் அவர்களை பார்க்க இரண்டுநாள் விடுப்பில் வந்திருந்தான்.

ஆறுமணிக்குஎழுந்ததும் ரிஷியிடம் பேசியவள் அப்படியே தன்னுடைய மொபைலில் முகநூல் பக்கத்திற்கு சென்றாள்.

“காலாங்காத்தாலஃபேஸ்புக். ஹ்ம்ம்…” என்று ஒரு நக்கலுடன் அவளுக்கான காபியை கையில் கொடுத்துவிட்டு அவளருகேஅமர,

“உலகநடப்பு நாலும் தெரிஞ்சுக்கனும் ப்ரோ. அதெல்லாம் மூளை இருக்கிறவங்க செய்யறது. நீ செய்யமாட்டன்னு எனக்குதான் தெரியுமே…”

“எனக்கா மூளை இல்லை, உன்னை…”  என்று அவளின் தலையில் கொட்டியவன் டீப்பாயில் இருந்த பேப்பரை எடுத்துக்கொள்ள,

“இன்னைக்கு என்ன எலி எக்ஸாமுக்குரெடி ஆகறது போல காலையிலையே உன் லேப்டாப்பை நோண்டிட்டு இருந்த?. என்னடா அண்ணா பன்ற?…” நேத்ரா கேட்டதும்புரையேறியே விட்டது அனய்க்கு.

“என்னை பார்த்தா எலி மாதிரியா இருக்கு?…”

“சத்தியமா நீ புலி இல்லை. அப்ப எலின்னு சொன்னா என்ன தப்பு?…”

“நீ திருந்தவே மாட்ட. நான் என்ன பன்றேன்னு நோட்டம் விட்டுட்டா இருந்த?…” என,

“ஹ்ம்ம் உன்னை மாதிரி ஒரு ஜீவனை அண்ணனா அடைஞ்சிருக்கேனே. உன்னை பொத்தி பாதுகாத்து ஒரு நல்ல பொண்ணா பார்த்து பத்தரமாத்து தங்கமா ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்குப்பா…”

“அதுக்கு…”

“அதான் உன்னை பாலோ பன்றேன். அதை விடு, நீ என்ன பண்ணின தம்பி? அதை சொல்லு. இல்லேன்னாஉன்லேப்டாப்பை தூக்கி ஆண்டாள் கிட்ட குடுத்துடுவேன்…”கெத்தாய் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாய்ந்தமர்ந்து கேட்கஅரண்டு தான் போனான்.

ஏனென்றால்மலரின் போட்டோ லேப்டாட்ப்பில் பதிந்து வைத்திருக்கிறான் அனய். ஆன் செய்த உடனே அவளின் முகமே அங்கு மின்னும். மலரின் சம்மதம் கிடைக்காமல் தன்காதலை பற்றி வீட்டில் யாருக்கும் தெரிவதை விரும்பவில்லை அவன்.

வைத்தியநாதனிடம் சொன்னது கூட ஏதோ ஒரு வேகத்தில் தான். ஆனாலும் அவரும் இதுவரை ஆண்டாளிடம் இதை பற்றி பேசியதை போல தெரியவில்லை.பார்த்தால்தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று பயந்தே,

“கொஞ்சம் வாயை மூடேன்.அம்மா காதுல விழுந்திட போகுது. இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். அதுக்கான வேலையை தான் பார்த்திட்டு இருந்தேன்…”

பல்லை கடித்துக்கொண்டு அவளிடம் சொல்ல நம்பமுடியாத பார்வை பார்த்தவள்,

“மெய்யாலுமா சொல்ற? ஆனாலும் எனக்கு டவுட்டா தான் இருக்கு…” என்று அவனை பதறவிட்டு,

“சரி, என்ன இருந்தாலும் அண்ணனா வேற போய்ட்ட. போனா போகுதுன்னு விடறேன். நேத்ரான்னாசும்மாவா?அந்தபயம் இருக்கனும் உனக்கு…”என,

“எல்லாம் என் நேரம்…” அனய்அலுத்துக்கொண்டவாறேநிம்மதியாகஇருவரின் முகத்திலும் புன்னகை.

“அப்ப ஆபீஸ் கிளம்ப போறயா நீ?…”

“ஹ்ம், இன்னும்ஒன் ஹவர்ல கிளம்பிடுவேன். ஏன்?…” பேப்பரில் பார்வையை ஓட்டியவாறே கேட்க,

“அதான பார்த்தேன். இன்னைக்கு ஆண்டாள் அலாரம் இவ்வளோ சீக்கிரமே கூவிடுச்சுன்னு.அதைவிடு,மாமா மட்டும் தான் இன்னைக்கு அந்த ஆளை பார்க்க போறாங்க. நான் ப்ரீ தான். அதான் வெளில போகலாம்னு நினைச்சேன்…”

“அம்மாவை சீண்டலைனா பொழுது விடியாதே உனக்கு?ஒருமூணு மணி போல வேணும்னா வந்திடறேன். கிளம்பி இரு…” என்று சொல்ல அவனின் கன்னம் கிள்ளியவள்,

“நீ தான்டா உடன்பிறப்பு…” என்றுசொல்ல,

“இன்னும் சின்னபிள்ளையாவே இரு…”எனஅனய்யும்நேத்ராவின்தலையில்செல்லமாய்ஒரு தட்டு தட்டினான்.

அவனை வம்பு செய்துகொண்டே காபியை குடித்தபடி விரல்களை அலைபேசியின் திரையில் ஓடவிட்டவள்அதிர்ந்துநிமிர்ந்தமர்ந்தாள். அவள் நிமிர்ந்த வேகத்தில் கையில் இருந்த காபி முழுவதும் அனய்யின் மீது அபிஷேகமாக அதன் சூட்டில்,

“ஆஆஆஆஆ…” என்று அலறி எழுந்து நின்று குதித்தவன்,

“ஏய் லூஸு, காபி எல்லாம் என்மேல கொட்டிடுச்சு…”என்று கத்த நேத்ராவின் முகமோ கோபத்தில் ஜிவுஜிவுத்து போனது. அதை கண்டவன்,

“நேத்ரா எனிதிங் சீரியஸ்…” பதட்டமாய் அவளருகில் அமர,

“அண்ணா இந்த அமேஸான் என்ன பண்ணிவச்சிருக்கா பாரு…” என்று தன்னுடைய மொபைலை அவனுக்கு தர அனய்பரபரத்து போனான்.

“இவ ஊருக்கு போனா போன் கோட்ட பண்ணமாட்டாதான். இது எங்களுக்கு புதுசு இல்லை. ஆனா கல்யாணம்னு வரப்போ ப்ரெண்ட்ஸ் எங்கக்கிட்ட சொல்லனும்னு கூட தோணலை பாரேன்…” பொடுபொடுத்தாள்நேத்ரா.

என்னவோ என்று அதை வாங்கி பார்க்க அவனின் தலையில் இடி விழுந்ததை போல ஆனது.

ஃபேஸ்புக்டைம்லைனில்சரவணன் வைத்தியநாதன் என்னும் ஐடி வனமலரைடேக் செய்து தங்களுக்கான நிச்சயதார்த்தத்தை பற்றி பகிர்ந்திருக்கஅவன் கண்களை நம்பமுடியாமல் பார்த்திருந்தான்.

கண்கள் ரத்தமென சிவக்க ஆத்திரம் தலைக்கேற மொபைலைதூக்கி வீசி எறிந்தான். சுவற்றில் பட்டு சுக்குநூறாகிசிதறி தூள் தூளாகியது.ஆண்டாளும், பாலகிருஷ்ணனும், சிவராமனும் பதறி எழுந்து வந்தனர்.அதிர்ந்து பார்த்த நேத்ரா,

“உனக்கென்ன பைத்தியமாடா பிடிச்சிருக்கு? எதுக்கு என் மொபைலை உடைச்ச?…” என்று கேட்டவளுக்கு அவனின்இறுகிய தோற்றத்தில் துணுக்குற்றவள்,

“அனய் வாட் ஹேப்பன்ட்? நீ சரியில்லையே…” என்றவள்அவனின்செய்கையைஆராய நொடியில் எதுவோபுரிய,

“அண்ணா, உண்மையை சொல்லு. அவளுக்கு கல்யாணம்னா உனக்கு ஏன் கோவம் வருது?…” அனய்யிடம் கேட்கஅவனோ இடிந்து போய் நின்றான்.

“அண்ணா உன்கிட்ட தான் கேட்கறேன். சொல்லு. நீ லவ் பன்றயா?…” பளிச்சென கேட்டுவிட அப்பொழுதும் ஆண்டாள் வாயை திறக்கவே இல்லை. தனக்கு முன்னமே தெரிந்ததை போல காட்டிக்கொள்ளவே இல்லை.

அனய்என்ன சொல்ல போகிறான் என்று மட்டுமே பார்த்துநின்றார். அவருக்கு திடீரென இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை.

முகத்தை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் எடுத்து வந்த நேத்ராவிற்கு புரிந்துவிட்டது அனய்யின் காதல் வனமலரின்மீது என.

சிறிது நேரம் சென்றுமெல்லிய குரலில் அவனின்காதலை பற்றி விவரிக்க அசந்து போய்தான் பார்த்தார்கள் அனைவரும்.

“முதல்ல இந்த தண்ணியை குடி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடு.அப்பறம் பேசுவோம்…”என அவள் குடுத்த தண்ணீரை வாங்கி அதையும் வீசி எறிந்தான். அதில் அனைவரும் பயந்து பார்க்க நேத்ராவிற்கு கோபமே வந்துவிட்டது.

“கன்பார்ம். உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.என்னவிஷயம்னுவாயை திறந்து சொல்லமாட்ட. ஆனாஎல்லாத்தையும் தூக்கி போட்டு உடைப்ப.நல்லா இருக்குடா…” என்றவள்,

“உனக்குஇதை ஹேண்டில் பண்ண தெரியலை.உன்னோடஇஷ்டத்துக்குஆடாதே. லவ்வை சொல்லி அக்ஸப்ட் செய்யவைக்க உனக்கு முடியலை. அவ கல்யாணம் செய்துக்க போறான்னு தெரிஞ்சதும் உனக்கு கோபம் வேற வருதா?நீயெல்லாம் எதுக்கு லவ் பன்ற?…”

“நேத்ரா…” அவன் அலற அசராமல் பார்த்தவள்,

“உன்னோட இந்த கோபத்தையெல்லாம் ஏன் எங்ககிட்ட காட்டுற?இந்த வீட்ல உன் லவ் பத்தி யார்க்கிட்டையாச்சும் சொல்லியிருக்கியா? இல்லை என்கிட்டயாவது ஷேர் பண்ணியிருக்கியா?இல்லையே…”

“இந்த வீட்ல உயிருள்ள மனுஷங்க யாருக்கும் உன்னோட லவ் தெரியகூடாதுன்னு மறைச்சு வைப்ப. ஆனா உன் கோபத்தை மட்டும் காமிச்சுஎல்லோரையும் வேதனைபடுத்துவ,இதுக்கு மட்டும் நாங்க வேணுமா?…”

நேத்ராசொல்ல சொல்ல தலை குனிந்து அமர்ந்திருந்தவன்,

“என்னால மலரை விட்டுட முடியாது. என்னோட வொய்ப் அவதான்னு நான் பிக்ஸ் ஆகிட்டேன். எதுக்காகவும் என் மனசை மாத்திக்க மாட்டேன் நான்…” பிடிவாதமாய் அவன் சொல்ல,

“அவளுக்கு தான் விருப்பம் இல்லையே…” நேத்ராவும் பேச,

“அவளுக்கு விருப்பம் இல்லைனாலும் மேரேஜ் பண்ணி என்னை விரும்ப வைப்பேன்…” அனய்யும் சொல்ல,

“உனக்கு உன் காதல் பெருசு. அது போல அவளுக்கு அவ குடும்பம் தான் பெருசு.நீ மட்டும் அவ தான் வேணும்னு பிடிவாதமாய் இருக்கலாம். ஆனா அவ நீ வான்னு சொன்னதும் வந்து உன்னை லவ் பண்ணிடனுமா? உனக்கொருநியாயம், அவளுக்கொன்னா?…”

“அவளை நான் மட்டும் தான் நல்லா பார்த்துக்க முடியும்…”

“ஓவர் கான்பிடன்டா?அதை நீ சொல்லகூடாது அண்ணா.உன்னை விட பெட்டரா அவர் மலரை பார்த்துக்கிட்டா? பாஸிட்டிவா யோசி…”

“நான் எதை பத்தியும் யோசிக்கமாட்டேன். எனக்கு மலர் தான் வொய்ப்.இதுல என்னைக்கும் எந்த சூழ்நிலையிலையும் மாற்றம் இல்லை. இன்னொருத்தனுக்கு மனைவியா என்னால நினைக்க கூட முடியலை…” தலையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான்.

காதலின் வலியில் தன் அண்ணன் தவிப்பதும் துடிப்பதும் நேத்ராவின் மனதை கொள்ளாமல் கொன்றது.அவனை நிச்சயம் ஆதரிக்க முடியாது. இந்த வேகமும் கோபமும் சரியே இல்லை.இவனை இப்படியே விடகூடாது என நினைத்தவள்,

“அண்ணா…” என அவனருகே அமர்ந்துகொள்ள,

“முடியலை நேத்ரா. அவளுக்கு நான் என் காதலை புரியவைக்க தவறிட்டேன்.என்னோட மனசை அவக்கிட்ட வெளிப்படுத்தினப்போ அவ என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா. எல்லாம் என்னோட தவறு தான்…”

தங்கையின் தோள்களில் ஆறுதல் தேடும் சேயாய் சாய்ந்துகொள்ளஅவனை அரவனைத்துக்கொண்டவள்,

“அண்ணா நான் சொன்னா கேட்பியா?…”

“மலரை மறக்க சொல்றதை தவிர அவளைஎன்னவளாமாற்ற என்னவேணும்னாலும் சொல்லு நான் கேட்டுக்கறேன்…” அவன் சொல்லவும் அவனின் தலையை தள்ளிவிட்டவள்,

“என்னை என்ன உனக்கு தூது போக சொல்றியா? தொலைச்சுடுவேன். இத்தனை வருஷம் லவ் பண்ணியிருக்க அப்போவெல்லாம் விட்டுட்டு இப்ப வந்து சின்னபுள்ளையாட்டம் அழுதுட்டு நிக்கிற. அறிவில்லை உனக்கு. இதுல நான் ஐடியா வேற குடுக்கணுமாம்…”அவனை திட்டியவள்,

“என்னை டென்ஷன் ஆக்காத அண்ணா. இப்போ நாம ஒன்னும் செய்ய முடியாது. அவளுக்கு வேற ஒருத்தனை பேசி முடிச்சுட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் வேற. இப்போ போய் நாம அங்க பேச முடியாது…”

“நீயும் விட்டுட்டல என்னை…” அவளையும் அவன் குற்றம் சாட்ட,

“அப்படியே உன்னை அறைஞ்சிடனும் போல இருக்குடா. ஆனா அண்ணனா போய்ட்ட.அவதான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டாள. திரும்பவும்நீ பிடிவாதம் பிடிக்கிறது நல்லதுக்கில்லை…”

“லவ் ரெண்டுபேருமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு மத்தவங்களோட நிறைகுறையோட முழுமனசா ஏத்துக்கிட்டு பன்றது.ஆனா நீ செய்யறதுக்கு பேர் உனக்கு லவ்வா தெரியலாம். ஆனா அவளுக்கு?…”

“வேண்டாம்டா,அவளை கட்டாயப்படுத்தி அவளுக்கு இஷ்டமில்லாம உன்னோட இணைய வேண்டாம். விட்டுடு. உன் உண்மையான நேசம் அவ நல்லா இருக்கிறதை தான் விரும்பும். உன்மனசார அவ நல்லா இருக்கட்டும்னு நினை. ப்ளீஸ்டா…”

ஆனால் பின்னாளில் அதுதான் நடந்தது. அனய்மலரின் விருப்பமில்லாமல் தான் தன்னோடு திருமண பந்தத்தில் அவளை இணைத்துக்கொண்டான்.

தங்கையின்கெஞ்சல்அவனின் மனதை கொஞ்சம் அசைத்து பார்த்தாலும் அவனின் காதலோ வேறெதையும் சிந்திக்க விடவில்லை.

ஒரு அரைமணிநேரம் கூட அமரமுடியாமல் நிலைகொள்ளாமல் தவித்தான்.அவனின் இந்த போராட்டத்தை பார்த்தும் செய்வதறியாமல் ஆண்டாள் கண்கள் கலங்கியது.

ஆனால் எதுவும் பேச முற்படவே இல்லை.நேத்ராதான் அனைத்தும் பேசிவிட்டாளே.என அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

சிவராமனுக்குபேசவும் சங்கடமாய் இருந்தது. அங்கிருந்து நகர்ந்துவிட்டாலும் தவறாகிவிடுமே என அமைதியாக பார்த்தபடி இருந்தார்.பாலகிருஷ்ணனுக்கு தன் மகனா இப்படி என்னும் அதிர்ச்சி நீங்கவே இல்லை.

திடுமென எழுந்தவன் தன்னறைக்குள் சென்று பத்தே நிமிடத்தில் உடைமாற்றி தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப பதறியேவிட்டனர்.

“அனய்எங்க கிளம்புற?…” அவனை மறித்து நின்று கேட்க,

“திருவாரூர் போறேன். மலரை அழைச்சிட்டு வர…” என்றதும் தூக்கிவாரிபோட்டது அனைவருக்கும்.

“நீ தப்பு பன்ற.இவ்வளோ சொல்லியும் இதென்ன பிடிவாதம் அண்ணா?…” நேத்ராவும் சொல்ல கண்டுகொள்ளாமல் ஆண்டாளை தாண்டி செல்ல முயன்றவனை தடுத்தவர்,

“நீ போக கூடாது. அவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்…”

“எனக்கு அவ தான் வேணும்.உங்களுக்கு தெரியாது அம்மா, என்னால அவ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியலை…” என,

“நீ என்ன சொன்னாலும் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். அதுவும் இல்லாம நான் வாக்கு குடுத்துட்டேன்.உன்னால இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும்வராதுன்னு…”

முதலில் சாதாரணமாக கேட்டிருந்தவர்கள் ஆண்டாளின் கடைசி வாக்கியத்தில் சிலையாகி போயினர்.

“அம்மா உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?…” நேத்ரா கேட்க,

“ஹ்ம்ம், ஆமா. மலரோட மாமா எனக்கு பத்துநாளைக்கு முன்னாடி போன் பண்ணியிருந்தாரு…”என்றதும் புரிந்துகொண்டவன் ஒரு விரக்தி பார்வை பார்த்து,

“தேங்க்ஸ் அம்…” அம்மாவென சொல்லவந்து பாதியில் நிறுத்த அதில் கலங்கி போனார் ஆண்டாள்.

“அனய், எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்ப்பா…”கண்ணீர் வழிய அவர் சொல்ல,

“என்னோடஉயிரே அவதான்.அதை என்கிட்டே இருந்து பிரிக்க நீங்களும் உடந்தையாகிட்டீங்களே?. இதை இந்த ஜென்மம் முழுக்க மறக்கவே மாட்டேன்…”

உடைந்து போய் பேசிய அவனை உறைந்து போய் பார்க்க நொடியும் தாமதியாமல் வெளியேறியவன் காரை எடுத்துக்கொண்டு திருவாரூர் பறந்தான்.

அவனின் மின்னல் வேகத்தில் திகைத்தவர்கள்வேகமாய் தாங்களும் கிளம்ப சிவராமனின் உடல்நிலையை மனதில் வைத்து நேத்ரா அவரை வீட்டில் இருக்கும்படி சொல்லி கிளம்பிவிட்டாள் பெற்றோரோடு.

——————————————————————-

வீடே நிச்சயதார்த்தஏற்பாட்டில்மிக மிக பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.ஆளுக்கொரு வேலையாய் சுற்றசரவணனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.

இதை ஏற்றுக்கொள்ளவும் பயமாய் இருந்தது. வேண்டாமென்று மறுத்தால் அதற்கான காரணம் கேட்பார்கள், அதுவும் அச்சத்தை கொடுத்தது.அதுவும் மலரின் முகம் காண காண குற்றவுணர்வு அதிகமாகிக்கொண்டே தான் போனது.

“எத்தனை பெரிய சுயநலம் எனக்கு? அவள் நன்றாய் வாழவேண்டும் என நினைக்கும் நானே அவளின் வாழ்க்கை அஸ்தமிக்க காரணமாக போகிறேனே?…” தன்னை நினைத்தே அருவறுத்தான் சரவணன்.

“இத்தனை கோழையாய், பயம் கொண்டவனாய் தான் பிறந்திருக்கவே கூடாது. நான் எல்லாம் என்ன மனிதன்?…” நினைத்து நினைத்து வெட்கிக்கொண்டான்.

ஏதாவது ஒரு நேரத்தில் மனசாட்சி அதிகமாய் குத்திகிழிக்கும் பொழுதுகளில் மலரிடம் உண்மையை சொல்லிவிட நினைப்பான். ஆனால வைத்தியநாதனின் முகம் தோன்றி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

அவனுக்கு தெரியாத ஒன்று,அவரிடமே அவனது பிரச்சனையை நேரடியாய் சொல்லியிருந்தால் அவரே இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பார் தான். ஆனால் அதை பற்றிய யோசனைகள் கூட அவனுக்கு தோன்றவில்லை.

“நடப்பது நடக்கட்டும். இதுதான்எங்கள் விதிப்பயனோ, என்னவோ?…” என நினைத்து அமைதியாகிவிட்டான்.

அன்றுகாலையே உறவினர்கள் கூட்டத்தில் வைத்தியநாதனின் வீடே அமர்க்களப்பட்டது. வெளியூர் உறவினர்கள் அனைவரும் கூட வந்துவிட கொண்டாட்டத்திற்கு குறைவின்றி மகிழ்ச்சியோடுஅணைத்து வேலைகளும் கச்சிதமாக நடந்தேறியது.

மாலைவைத்தியநாதன் வீட்டில் வைத்தே நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க மலரும் அங்கேயே தான்தயாராகிக்கொண்டிருந்தாள்.

சரவணனும் கூட தன் அத்தனை நாள் கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு மாப்பிள்ளை களையோடு அனைவரிடமும் இன்முகமாய் பேசிக்கொண்டிருந்தான்.

“என்னங்க…” என காமாட்சி அழைக்க ஐயரிடம் பேசிக்கொண்டிருந்த வைத்தியநாதன் திரும்ப,

“நானும் சரவணனும்கோவில்ல விளக்கு ஏத்திட்டு வந்திடறோம்ங்க…” என,

“என்ன விளையாடிட்டு இருக்கியா நீ? இன்னும் ஒரு மணி நேரத்துல நிச்சயதார்த்தம். இப்ப போய் கோவிலுக்கு போகனும், அது இதுன்னு…” என்று கடிந்து,

“ஏற்கனவே ராமைய்யா வேற இலை கட்டு பத்தலைன்னு அவனே போய் வாங்கிட்டுவரலாம்னு போய்ருக்கானாம். இதுக்கு கூட அவனே போவனுமா? எல்லாரும் ஏன்தான் இப்படி புத்தியில்லாம இருக்கீங்களோ?…”

“இல்லை நம்ம ஜோசியர்தான் சொன்னார். விளக்கு போட்டா நல்லதுன்னு.அதான் போய்ட்டுபட்டுன்னு வந்துடுவோம். இதோ நாலு வீதி தாண்டித்தானே.மோட்டார்ல போய்ட்டு உடனே வந்துடுவோம்…”

காமாட்சி சொல்ல வைத்தியநாதனுக்கு கூட்டத்தில் வைத்து மேலும் மறுக்க யோசனையாய் இருந்தது. பல்லை கடித்துக்கொண்டு சரவணனை அழைத்தவர்,

“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. ரோட்ல குண்டும் குழியுமா இருக்கும். கவனமா பைக் ஓட்டனும். புரியுதா?…”பல்லிடுக்கில் இருந்து வார்த்தைகளை கடித்து துப்ப சரவணனுக்குஅவரை பார்க்கவே பயமாய் போனது.

அவரிடம் தலையாட்டிக்கொண்டு காமாட்சியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவன்,

“எப்படிம்மா உங்களால இவ்வளோ பயமில்லாம அவர்க்கிட்ட பேச முடியுது?…” என,

“யாருக்கு பயமில்லை? எனக்கும் பயம் தான். ஆனாலும் வெளில காமிச்சுக்க கூடாது.அவருக்கு தெரிஞ்சிட்டா அவ்வளோ தான். மனுஷன் என்னை கண்ணாலையே உருட்டி மிரட்டி மூலையில உட்கார வச்சிடமாட்டாரு…”

இருவரும் பேசி சிரித்துக்கொண்டே கோவிலை நோக்கி சென்றனர் நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.

இன்னும்சிறிதுநேரத்தில்நிச்சயதார்த்தம் என்னும் நிலையில் வீட்டிற்குள்புயலாய் நுழைந்தான் அனய்.

அவனை சற்றும் எதிர்பார்க்காத வைத்தியநாதன் அவனை தடுப்பதற்குள்,

“மலர். மலர்…”என உக்கிர குரலெடுத்து கத்தினான்.

நடு வீட்டில் நின்று கத்த மாடியில் இருந்த உறவு பெண்களின் சலசலப்பின் மத்தியில் அமர்ந்திருந்தவளுக்கு ஒன்றும் கேட்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் அனய் ஆவேசமாய் கத்தஅப்பொழுதுதான கீழிருந்து ஒரு பெண்,

“மலரக்கா கீழ யாரோ ஒரு ஆளு உங்க பேரை சொல்லி கத்திட்டு இருக்காங்க. ஒரே கூச்சலா இருக்கு…” என சொன்னதுமே உண்டான நிசப்தத்தில் அனய்யின் குரல் தெளிவாய் கேட்க தூக்கிவாரி போட்டது.

“போச்சு, இங்கயும்வந்துட்டாங்க.மாமாதான்அனய் பிரச்சனையை பார்த்துக்கறதா சொன்னாங்களே? பின்ன எப்படி வந்தாங்க.இப்படி எதுவும் நடந்திட கூடாதுன்னு தான் நான் என்கேஜ்மென்ட் பத்தி என் ப்ரெண்ட்ஸ்ட்ட கூட சொல்லலை…”

சிந்தனைமுழுவதும் அவன் எப்படி வந்தான் என்பதிலேயே இருக்க மீண்டும் அவனின் அலறல் அவளைதரையிறக்கிறது.

வேகமாய் எழுந்துகீழே சென்று பார்க்க தன் சொந்தபந்தங்கள் அனைவரும் அவனை வெளியேற்ற முயன்றுகொண்டிருந்தனர். அத்தனை பேரின்தடைகளையும்தகர்த்து அவள் முன் வந்து நின்றவன் மலரை பாதம் முதல் தலைவரை மேலும் கீழுமாய் பார்த்தான்.

மணமகளுக்கே உரிய அலங்காரத்தில் தேவதையெனஅவள் ஜொலிக்க யாருக்காக இந்த அலங்காரம் என நினைக்கும் பொழுதே அவனின் உடலில் தீப்பற்றுவதை போல எரிய ஆரம்பித்தது.

கோவத்தில் கண்கள் சிவக்க அவளை உறுத்து விழித்தவன் இதுஆத்திரப்படுவதற்கு உகந்த நேரமில்லை என நினைத்து தன் ஆவேசத்தை கொஞ்சம் தணித்துக்கொண்டு,

“வா போகலாம் மலர்…” என சொல்லி அவளின் கையை பற்றஅதுவரை பார்த்திருந்த மலரின் வீட்டு ஆண்கள் அனய்யின் மீது பாய்ந்தேவிட்டனர்.

“யாரடா நீ? எங்க முன்னாடியே எங்க வீட்டு பொண்ணை கையை பிடிச்சு இழுக்க?உன்னை இன்னைக்கு காணாபொணம் ஆக்கிடறோம்டா….”

“உங்களால முடிஞ்சதை பார்த்துக்கொள்…” என்பதை போல இறுக்கமாய்நின்றவனின் கரங்களுக்குள் மலரின் தளிர்விரல் வலிகொண்டது.

அவனின் கையிலிருந்து மலரின் கையை பிரிக்க ஆனமட்டும் முயற்சித்து அனய்யைதாக்கஅவனோ எதற்கும் சளைக்காமல் தன்னை காத்துக்கொண்டே அவர்களைநிதானமாய் கையாண்டான்.

அவனுக்கு மலர் வேண்டும். இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தியாக வேண்டும். அதற்கு உணர்ச்சிவசப்பட்டால் நல்லதல்ல என அவனின் மூளை அறிவுறுத்த அதனால் வந்த நிதானம் அது.

வைத்தியநாதனுக்கோஅவ்வளவு கோபம். கண்மண் தெரியாத ஆத்திரம் ஆண்டாள் மீதும் அனய் மீதும்.

“எத்தனை படித்து படித்து சொன்னேன். எங்கள் பெண்ணை விட்டுவிட சொல்லி. எத்தனை ஜம்பமாய் தாங்கள் பார்த்துக்கொள்வதாய் பேசினார்கள். இன்று எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது நடந்தே விட்டது. கடவுளேஇதை எப்படி சரிசெய்ய?…”

அதிர்வு நீங்காமல் அப்படியே சிலையாய் நின்றவருக்குநெஞ்சில் சுருக்கென்று முள் தைத்தது போன்ற வலி எடுக்க தன் மார்பை பிடித்துக்கொண்டு சரிந்தவரை அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.

அவருக்குதண்ணீர்கொடுத்து ஆசுவாசப்படுத்த, அதற்குள் மலரை இழுத்துக்கொண்டு வாசலை தாண்டி வெளியே வந்துவிட்டான்அனய்.

மலரின் திமிறலையும் பொருட்படுத்தாமல் அவளை தன்னோடு அழைத்துசெல்வதிலேயே குறியாய் இருக்க வாசலை தாண்டி நடுரோட்டிற்கே வந்துவிட்ட இந்த பிரச்சனையை வேடிக்கை பார்த்த ஊர்மக்களும் உறவுகளும் கண் காத்து வைத்து பேச ஆரம்பித்துவிட்டது.

“இவன் இம்புட்டு தகிரியமா வந்து கூட்டிட்டுபோறானே?அவ இஷ்டமில்லாமையா இது நடக்கும்?…”

“அட நீங்க வேற மதினி,அவன் கையை உதறிட்டு இந்த புள்ளையால வரமுடியாதாக்கும். நம்ம ஊரு மனுஷங்க மத்தியில இந்த பொண்ண விருப்பமில்லாம இப்படி கூட்டிட்டு போவ முடியுமா? அவளுக்கும் விருப்பமாத்தேன் இருக்கும். அதான் பூனையாட்டம் போகுது…”

ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி கதைகட்ட ஆனந்தி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார்.

“அய்யோ குடிமுழுகி போச்சே. சாதிசனங்க மத்தியில என் மானம் மரியாதை எல்லாம் போச்சே. இப்படி சந்திசிரிக்க வச்சிட்டாளே?…” அழ ஆரம்பித்தார் அவர்.

அதை கண்டுகொள்ளாதவன் அங்கிருந்து மலரை அழைத்துசெல்வதிலேயே குறியாய் இருக்க அவனின் பின்னாலே வந்து அனய்யைதாக்கமுயன்ற ஒருவனை தன் பலம்கொண்டமட்டும் தூக்கிவீசி,

“எவனாச்சும்கிட்ட வந்தீங்க, உயிரோட விடமாட்டேன். இவ என்னோட வொய்ப். என்னால்நீங்க பன்றதை எல்லாம் பார்த்திட்டு இருக்க முடியாது…” கை நீட்டி அனைவரையும் எச்சரித்தவன்,

“மலர் கார்ல ஏறு…” என அவளை பலவந்தம் செய்த அனய்என்னும் மனிதனை அவன் கொண்ட காதல் பெரும் தீவிரவாதியாய் மாற்றிக்கொண்டிருந்தது.

“என்னை விடுங்க முதல்ல. ஏன் இப்படி மிருகத்தனமா நடந்துக்கறீங்க?…” அவனிடமிருந்து விடுபட முயல அதற்குள் இன்னொரு கார் வேகமாய் வந்து நிற்க அதை திரும்பி பார்த்தவன்,

“மலர் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.நீ என்னோட வா.என்னால உன்னை விட முடியாது. முடியவே முடியாது…”என சொல்லிக்கொண்டே காருக்குள் அவளை திணித்து தானும் ஏற முயல,

“அனய்என்ன காரியம் செய்துட்டிருக்க?…” என்றபடி வேகமாய் ஓடி வந்தாள் நேத்ரா. அவளோடு ஆண்டாளும், பாலகிருஷ்ணனும் கூட.

அதற்குள்மலர் மறுபக்கம் வேகமாய் இறங்கியவள் அழுதுகொண்டேதாயிடம் சென்று,

“அம்மா…” என்று அழைக்க,

“என்னை தொடாதடி. இதுதான் நீ பட்டணத்துக்கு படிக்க போன லட்சணமா? இப்படிகமுக்கமா இருந்து குழில தள்ளிட்டியேடி…” என்று மலரை கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளினார்.

கோவிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சரவணனுக்கு தங்கள் வீட்டின் முன்னால்பெரும் கூட்டம் கூடியிருப்பதை கண்டு உதறல் எடுக்க,

“அம்மா,நம்ம வீட்டு வாசல் முன்னால ரொம்ப கூட்டமா இருக்கும்மா…” என்று சொல்லி தன் பைக்கை அங்கேயே நிறுத்த,

“என்ன இம்புட்டு கூட்டம்?…” என பதறிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக கூட்டத்தை விலக்கி பார்க்க,ஆனந்தி நடு வீதியில் வைத்து மலரை அடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.

வேகமாய்மலரருகே ஓடியவர் ஆனந்தியிடமிருந்து அவளை பிரித்து தன்னோடு அணைத்துக்கொண்டவர்,

“அடியாத்தி,நீயெல்லாம் ஒரு மனுஷியாடி. ராட்சசி. பெத்த பொண்ணுக்கு பாசத்தை தான் காண்பிக்கலை. அவளை நிம்மதியா வாழவும் விடமாட்டியா?…”என கத்த,

“அடிச்சதுக்கேஇப்படி கோவப்படறீங்களே?அவ செஞ்சதுக்கு வெட்டி கூறுபோடனும்…”ஆவேசம் தணியாமல் மலரின் தலைமுடியை பற்ற வர,

“போதும் இதுக்குமேல அவ மேல ஒரு அடி விழுந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன். என்ன அம்மா நீங்களாம்?…” என சீறிக்கொண்டு அனய் வர,

“அனய்போதும். நீ பண்ணினதெல்லாம். நீ வா நாம நம்ம ஊருக்கு கிளம்புவோம்…”

ஆண்டாள் வேகமாய் அவனின் முன்னால்வந்து நிற்க அவரை தள்ளிக்கொண்டு மீண்டும் மலரை நெருங்கியவன் அவளின் கை பிடித்து,

“வா நாம போய்டலாம். இவங்க எல்லோரும் உன்னை அடிப்பாங்க. என்னால அதை பார்க்க முடியாது மலர்…” கிட்டத்தட்ட இறைஞ்சுதலையும் மிஞ்சியது அவனின் பேச்சு.

நேத்ராவிற்கோ தாளமுடியவில்லை தன் அண்ணனின் நிலைகண்டு. அதையும் விட தன் தோழியை நினைத்து இன்னமும் வருந்தினாள். அதோடு கோபமும் கூட.

“முதலிலேயே தன்னிடம் சொல்லியிருந்தால் இந்தளவிற்கு விபரீதத்தில் இதை முடியவிட்டிருக்க மாட்டேனே?…” என வேதனையோடு நினைத்துக்கொண்ட நேத்ராவிற்கு அனய்யை பார்க்க பார்க்க அழுகைவரும் போல் ஆனது.

மாலை நேரம் ஆனாலும் வெயில் மண்டையை பிளக்க நடு வீதியில் ஊரார் குழுமியிருக்க புழுதியின் மத்தியில் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனை போல் தன் காதலுக்காக போராடும் அவனை பார்க்க தாங்கமுடியாமல் மனம் விம்மியது.

“நீ ஏன்டா இப்படி ஆகிட்ட?. வேண்டாம்னு சொல்ற பொண்ணை விருப்பத்துக்கு மாறா நீ மேரேஜ் பண்ணிக்க நினைச்சா நானே உன் மேல் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் பார்த்துக்க…”

தன் அண்ணனையே மிரட்ட அவனோ பரிதாபமாய் அவளை பார்த்தவன்,

“நீ கூட என்னை புரிஞ்சுக்கலை நேத்ரா. மலர்…” என்றவன் விழிகள் கசிந்து உடைப்பெடுக்க,

“அவளை பாரு அண்ணா. விட்டுட்டு. அவளுக்கு இந்த லைப் தான் பிடிச்சிருக்கு.உன்னோட சந்தோஷத்துக்காக அவளைகஷ்டப்படுத்தாத. வா போவோம்…”

நேத்ரா சொல்லவும் மலரின் முகத்தை பார்த்தவன் தலை கலைந்து அழுது சிவந்துபோய் பயத்தில் வெடவெடத்து நின்றிருந்தவளின் பிம்பத்தில் ஒரு நிமிடம் விலகி சென்றுவிட்டால் என்னவென்று தான் நினைத்தான்.

ஒரு நொடியே, ஒரு நொடி மட்டுமே. வேறொருவனுக்கு சொந்தமான பின்அவளில்லாதவாழ்க்கையை நினைத்தவன் தலையை உலுக்கி உடல் விரைத்தான்.

“நோ என்னால இவளை விடமுடியாது, வேணும்னா என்மேல கம்ப்ளைன்ட் குடுத்துக்க….” எனசொல்லி திரும்ப சரவணன் அவனை மறித்து நின்றான்.

“ராஸ்கல், எவ்வளோ தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணையே நீ கூட்டிட்டு போக நினைப்ப?…” அனய்யை அடிக்க பாய சரவணனின் உடையில் அவனை உணர்ந்துகொண்டவன்,

“நீயெல்லாம்மலருக்கு மாப்பிள்ளையா?. அதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு?…”

அனய்என்னவோ இதை கோபத்தில் கேட்டான். தன் காதலிக்கு தான் மட்டுமே சரியானவன், பொருத்தமானவன் என்னும் எண்ணத்தில்.

ஆனால் அது சரவணனின் அடிமனதை சென்று ஆட்டிப்பார்த்தது. அவனின் ரகசியத்தை அறிந்து தன்னை ஏளனம் செய்வதற்காகவே இவன் இப்படி பேசுகிறான் என குருட்டுத்தனமாய்எண்ணியவனுக்கு அனய்யின் மீது சொல்லொண்ணா கோபமும் குரோதமும் பெருகியது.

அந்த நிமிடம் தன் நிலையை மறந்தான். அவனின் குற்ற உணர்வு மறைந்தது. வாழ்நாள் முழுவதும் மலரின் வாழ்க்கையை பலிகொள்ளும் தன் சூழ்நிலையை மறந்தான்.

அந்த நிமிடம் முடிவு செய்தான் அத சொல்லவும் செய்தான் சவாலாக. இருவருக்கிடையில்ஒரு பெண்ணின் உணர்வுகள்சிதறிக்கொண்டிருந்தது.

ஒருவன்பலவருடங்களாய்காதல் கொண்டு அவளை மணம்செய்துவாழ்நாள் முழுவதும் அவளை கொண்டாடிட நினைத்தான்.

இன்னொருவனோநொடிநேரதவறானபுரிதலினால் ஆத்திரம் கொண்டுஅறிவிழந்து தன்னுடைய வாழ்க்கையோடுஅவளை பிணைத்து உரிமையைநிலைநாட்டி வெற்றிபெற நினைத்தான்.

இருவரின்பாதையும் பார்வையும் வேறெனில் எண்ணம் ஒன்றே.பெண்ணவளைமணம் செய்வது மட்டுமே.

ஆனால்இருவருமே அவளின் மேல் அன்பு கொண்டவர்கள் தான். ஆனால் அவளது உணர்வுகள், விருப்பங்கள், ஆசைகள்புரியாமல் போனதுதான் விந்தை.

அனய்க்கோ தன் காதலை புரியவைத்து மலரை தன்னோடு அழைத்துசென்றுவிடும் வேகம்.

அனய்யின் பேச்சில் சீண்டப்பட்ட சரவணனுக்கோ எப்படியாவது மலரை திருமணம் செய்து அனய்யின் முகத்தில் கறியை பூசிவிடவேண்டும் என்கிறஆவேசம்.

மலரின் மனதை புரிந்துகொள்ளாமல்காதலால் அவளை வற்புறுத்துவதை அறியாமல் அனய். தான் செய்யவிருக்கும் துரோகத்தின் முகம் மறைத்து தன்னுடைய ஈகோவால் அவளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சரவணன்.

இருவரின் மத்தியில் மலரவள் சிறிது சிறிதாய் சிதறிக்கொண்டிருந்தாள்.

“என் கையால தான் மலரோட கழுத்தில் தாழி ஏறும். நான் தான் மலரை கல்யாணம் செய்துப்பேன். அவ எனக்குத்தான் மனைவி ஆவா. உன்னால் முடிஞ்சதை நீ பார்த்துக்கோ…”

சரவணனின் சவாலில் நிதானம் இழந்தான் அனய். தன்னை மறந்தான்.தன் காதலை நிலைநாட்டிவிடும் வேகம் பிறக்க கைக்குள் பிடித்திருந்த அவளின் கரத்தை சண்டி இழுத்தவன் நொடியும் தாமதிக்காமல் அவளிதழ்களை சிறைசெய்துவிட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரின் மத்தியில் நிகழ்ந்துவிட்ட இந்த செயலில் சரவணன்சினம் ஏற அவனை பிடித்து இழுத்தான்.

மூச்சுக்கு போராடிய மலர் தன்னுடைய கரங்களால்சரமாரியாக அடித்தும் அனய்யை சமாளிக்க முடியவில்லை.

போராடி தோற்ற அவள் அரை மயக்க நிலைக்குசெல்ல அவளின் உடல் தளர்ந்து தொய்ய ஆரம்பிக்கவும் தான் அனய்யின் வேகம் குறைந்து தான்அவளின் நிலையை உணர்ந்துவிலகினான்.

தன் கைவளைவில் அவளை நிறுத்தி கன்னத்தை தட்ட நொடியில்சுதாரித்தவள் அவனை தள்ளிவிட்ட பின்புதான்சுற்றத்தாரின் முகச்சுளிப்பை உணர்ந்தாள்.

அவர்கள் பார்வைக்கான அர்த்தத்தை கிரகித்துக்கொண்டவளுக்கு உடல் கூச முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தவளை தன் தோளில் சாய்த்துக்கொண்ட சரவணன்,

“இதுதான் நீங்க பிள்ளை வளர்த்திருக்கிற லட்சணமா?. என்ன குடும்பம் உங்களோடது?…” என வாய்க்கு வந்தபடி ஏச ஆண்டாளுக்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது.

அனய்யின் இந்த திடீர் செயலில் ஆண்டாள் மட்டுமல்லாது நேத்ரா,ஆனந்தி, காமாட்சி, வீட்டினுள் இருந்து தள்ளாடியபடி வந்த வைத்தியநாதன் என அனைவரும் ஸ்தம்பித்து தான் நின்றனர்.

தன் ஒட்டுமொத்த கோபத்தையும் திரட்டி அனய்யின் கன்னத்தில் தன் கரத்தை இடியென இறக்கிய ஆண்டாள்,

“இந்தளவுக்கு நீ தரம் இறங்கி போவன்னு நான் நினைக்கவே இல்லை அனய். போயும் போயும் நீ காதலிக்க இப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்த பொண்ணுதானா கிடைச்சது?…” என்றவர்வைத்தியநாதனை கண்டதும் இன்னமும் முகம் சிவந்தார்.

“என்னமோஎன் பையன் மேல தான் தப்புன்றது மாதிரி பேசினீங்க?இன்னைக்கு என் பையன் இப்படிவந்து நிற்க காரணமே உங்க வீட்டு பொண்ணுதான்.உங்க பையன் என்குடும்பத்தை பத்தி பேசறானா? அந்த தகுதி இங்க யாருக்காவது இருக்கா?…”

அனய்யின் வளர்ப்பையும், தங்களின் குடும்பத்தையும் பற்றி பேசியதும் ஆண்டாளும் தன் நிதானம் இழக்க தொடங்கினார். ஆண்டாளின் பேச்சு வைத்தியநாதனை கோபம் கொள்ள செய்ய அதுவும் ஊருக்கு மத்தியில் என்னும் பொழுது அந்த இடத்தில் பேசியாகவேண்டிய நிலைக்கு சென்றார்.

“தகுதியை பத்தி நீங்க பேச வேண்டாம் ஆண்டாள் அம்மா.உங்ககிட்ட நான் பத்து நாளைக்கு முன்னாடியே இந்த கல்யாணத்தை பத்தி சொல்லி உங்க பையன் நினைப்பை பத்தியும் சொல்லிட்டேன். அவரை நீங்கதான் கட்டுப்படுத்தனும். அதை ஏன் நீங்க செய்யலை…”

ஆம்,வைத்தியநாதன் சொல்லியது போல அனய்யிடம் ஆண்டாள் அவனின் காதல் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை.அவனே சொல்லும் பொழுது பேசிக்கொள்வோம் என விட்டுவிட்டார்.

அதுவும் இல்லாமல் வைத்தியநாதனின் பேச்சில் இருந்து வனமலரின்நிச்சயதார்த்தம்பற்றியும் அனய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணம் சீக்கிரம் முடிந்துவிட்டால் அவனேஅவளை மறந்து வேறு ஒரு வாழ்க்கைக்கு தயாராகிவிடுவான் என்று தானே முடிவு செய்துகொண்டார்.

ஆனால் விதி வலியது. நேத்ராவின் மூலம் அனய்க்குதெரியவேண்டும் என்பதுதான் கடவுளின் திருவிளையாடலோ?

“அவனுக்கு இன்னைக்கு தான் தெரியும் உங்க வீட்டு மேரேஜ் பத்தி. அதுக்காகவாய்க்கு வந்தபடி அவனை பேசுவீங்களா?எங்களை சொல்ற உங்க வீட்டு பொண்ணோட லட்சணத்தை பத்தியும் தெரிஞ்சிட்டு பேசுங்க…” என்றவர்,

“மலர், என் பையன் உன்கிட்ட வந்து விரும்பறதா சொன்னப்போ நீ மறுத்திட்ட. ஆனா அதிரும்ப அவன் வந்து வற்புறுத்தி பேசினதையும் உன் மாமாகிட்டபேசினதையும்ஏன் என்கிட்டே அப்பவே சொல்லலை?…”

அவர் கேட்டதும் திடுக்கிட்டு பார்த்தவள் விழிகளில் கண்ணீர் மீண்டும் நிரம்ப ஆரம்பித்தது.

“என்கிட்டே தான் சொல்லலை.என் பொண்ணு உன்னோட க்ளோஸ் ப்ரென்ட் தானே? அவக்கிட்டையாச்சும் உன் அண்ணன் இப்படி பேசறான்னு ஏன் சொல்லலை? அப்ப உனக்கும் என் பையனை உன் பின்னால சுத்தவைக்கனும்ன்ற எண்ணமா?…”

“இதுக்கு தானா உன்னை என் வீட்டுக்குள்ள அனுமதிச்சேன்?…”அவர் சொல்லியதும் கூனிக்குறுகி போனாள் வனமலர்.

“அம்மா போதும். இன்னும் ஒருவார்த்தை அவளை தப்பா பேசினீங்க பார்த்துக்கோங்க…” என்ற சத்தம் நேத்ராவிடம் இருந்தே வந்தது.

இப்படியாக பிரச்சனைகள் பேச்சுக்கள் வளர வளர அனய்யின் காதுகளில் எதுவும் விழவில்லை. சரவணனின் கை பிடித்து அவனருகே நின்றிந்த மலர் மட்டுமே அவனின் பார்வை முழுவதும் நிறைந்திருந்தாள்.

 

புன்னகை ஜீவிக்கும்…