Advertisement

அத்தியாயம் அறுபது :

இருள் போலே இருந்தேனே… விளக்காக உணர்ந்தேனே.. உன்னை நானே!

ஈஸ்வரின் உணர்ச்சிக் கொந்தளிப்பை பார்த்து அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாலும், அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதினில் ஓங்கி தான் இருந்தது.

அவனின் அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு அழைத்து சென்றவன் “இனிமே இதுதான் நம்ம வீடு ..” என,

“நான் இருந்துக்குவேன், இது என்னோட ஹாஸ்டல் ரூம் விட ரொம்ப பெருசு.. நீங்க இருந்துக்குவீங்களா?” என வர்ஷினி கேட்க, அதில் நிச்சயம் ஒரு ஆராயும் தன்மை, “உன்னால் முடியுமா” என, கூடவே ஒரு இலகுத்தன்மையும்.  

“ஏன் என்னால முடியாதா?” என,

“எனக்குத் தெரியலை, உங்க வீட்டோட கம்பேர் பண்ணும் போது இது கால் வாசி கூட இல்லை” என்றாள் உண்மையாக.

“நீ கேட்கறது நியாயமான கேள்வி.. கூடவே அநியாயமான கேள்வியும்”

புரியாமல் விழிதவளிடம், “எஸ், ஈஸ்வர் கொஞ்சம் இல்லை ரொம்ப சொஃபிஸ்டிகேடட், ஆனா நீ கூட இருக்கும் போது எனக்கு எதுவுமே தேவை இல்லை” என்று சொன்னவனின் கண்களில் எப்போதும் தென்படும் மயக்கத்தையும் மீறிய ஒரு காதல்.

“ஷ், பா” என்றவள், “ஆனாலும் ஈஸ்வர் சோ சேட், இன் எ வே என்னை நம்பி தனியா வந்துருக்கீங்க. எனக்கு சமைக்கத் தெரியாதுங்கறதவிட என்ன சமைக்க, சாமான்னு பேர் கூட தெரியாது. அண்ட் யு நோ எனக்கு ரொம்ப பசிக்குது இப்போ” என,

“இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்” என்பது போல பாவனை செய்தவன், “இப்போதைக்கு எதாவது ஆர்டர் பண்ணிக்குவோம்” என சொல்லும் போதே.. ஃபோன் வர எடுத்துப் பார்த்தால் ரஞ்சனி.

அதையே வெறித்திருந்தான், ஆனால் எடுக்க வில்லை, தங்கை என்பதனையும் விட முரளி எப்படியோ அப்படி தானே அவனுக்கு, தங்கை என்ற ஒன்றையும் மீறி ஒரு நட்புணர்வு.

“யாரு” என்று எட்டிப் பார்த்தவள் “அண்ணியா?” என,

“ஆம்” என்பது போல தலையாட்டினாலும் தொலைபேசி எடுக்கவில்லை. விடாமல் அடிக்க, ஃபோனை தூக்கி தூரப் போட்டான்.

கவலையாக அவனை பார்த்தாள்.. “பேச மாட்டீங்களா?” என,

“இல்லை, இப்போ வேண்டாம், ரொம்ப கோபமா இருக்கேன். நிச்சயம் அவளை காயப் படுத்திடுவேன். ஏற்கனவே அவ நொந்து போயிருக்கா, இன்னும் நான் வேற ஏன்?” என்றவன்,

மீண்டும் அதைப் பற்றி பேச விருப்பமில்லாதவனாக “நீ சமைக்கணும், அந்த வேலை செய்யணும், அப்படி இப்படின்னு எந்த ரூல்ஸ்ம் நமக்குள்ள கிடையாது.. பட், நீ உள்ள வந்தவுடனே சொன்ன இல்லையா என்னோட ஹாஸ்டல் ரூம் விட பெருசுன்னு, அந்த ஃபீல் இருக்கவே கூடாது. இது நம்ம வீடு, உன்னோட வீடு, புரிஞ்சதா? இதை நீ தான் பார்த்துக்கணும்” என,

“என்ன பார்க்கணும்?” என்றாள் சீரியசாக.  

“கொல்லாதடி! இது என்ன வேலையா? போ! போ! முதல்ல பிரெஷ் ஆகு! நான் சாப்பிட ஏதாவது சொல்றேன்!” என,

ஈஸ்வரின் மூட் சரியில்லாததை புரிந்து அவளும் அமைதியாக நகர்ந்து விட்டாள்.

அங்கே ரஞ்சனி இன்னும் ஓய்ந்து தோய்ந்து அமர்ந்து விட்டாள், “யார் சொன்னாலும் நீ விஸ்வாவிடம் சொல்லித் தானே வந்திருக்க வேண்டும்” என்று மனசாட்சி கேட்க,

சொல்லும் போது “நீ போகாதே” என்று சொல்லி விட்டால் மீற முடியாது, மீறினால் திரும்ப சண்டை வரும்.. அதைக் கொண்டே அம்மா சொன்ன போது வந்துவிட்டாள். அதையும் விட வர்ஷினி அவளுக்காகவும் தான் வந்தாள்.. “நான் அங்கே அமர்ந்து கொண்டால் பின்னே என் அம்மா வீட்டினர் சரியாக பேசாது போனால்” என்ற நினைப்பு தான்.  

இப்போது ஃபோனிலாவது பேசிவிடுவோம் என அடித்துக் கொள்ள.. அழைத்தாள்.

காலையில் உண்டது வேறு, திரும்ப உண்ணவும் இல்லை.. ரூமில் அமர்ந்து இருந்தவளை கமலம்மா “வந்து சாப்பிடு ரஞ்சனி வா” என,

அழைத்தவுடன் மறுப்பபு சொல்லாமல் எழுந்து சென்று உணவு உண்ண.. “தப்பு தான் ரஞ்சனி அவன் பேசினது!” என கமலம்மா வேண்ட..

“தப்பு தான், பெரிய தப்பு தான்! ஆனா இனி என்ன செய்ய முடியும். எனக்கு அண்ணான்னு ஒருத்தன் இல்லாம பண்ணிடாங்க” என,

“சே, சே, அப்படி எல்லாம் நடக்காது சரியாகிடும்” என கமலம்மா அவளைத் தேற்ற..  

“இல்லை அத்தை, உங்களுக்கு தெரியாது, கண்டிப்பா இனி விஷ்வா என்கிட்டே பேச மாட்டான்.. என் அண்ணன் அதை விடுங்க, வர்ஷினி வீட்டுக்காரர்ன்னு கூட நினைக்கலை பார்த்தீங்களா” என்றவளின் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.

“எனக்கு தெரிஞ்சவரை என்கிட்டயும் பேச மாட்டான், இனி வர்ஷினியை இந்த வீட்டுக்கு அனுப்பவும் மாட்டான்” என,

“என்ன?” என்று அதிர்ந்தார் கமலம்மா.

“உங்களுக்கு அவனை தெரியாது?” என்றவளுக்கு கூட இன்னும் விஷ்வாவை சரியாக தெரியவில்லை.. பின்னே வீட்டை விட்டு தனியாக சென்றிருப்பான் என்று அவளும் கூட அனுமானிக்கவில்லை.

“விடுங்க, இனி ஒன்னும் செய்ய முடியாது” என்றவள் தேறிக் கொண்டு, “முரளிண்ணா கூப்பிட்டாங்களா, ஷாலினிக்கு இப்போ எப்படி இருக்கு?”

“இல்லை, கூப்பிடலை” என,

ரஞ்சனி உடனே அழைத்து “எப்படி அண்ணா இருக்கா?” என,

“வலி விட்டு விட்டு தான் வருது, ராத்திரி வரை பார்க்கலாம் சொன்னாங்க, இல்லை ஆபரேஷன் பண்ணலாம் சொன்னாங்க.. நீங்க எங்க இருக்கீங்க வந்துட்டு இருக்கீங்களா?” என,

“அப்போது தான் உணர்வு வரப் பெற்றவள்.. இல்லை அண்ணா, இப்போ தான் கிளம்பறோம், நானும் அத்தையும்” என,

“வாங்க, நாம போவோம்!” என்று கமலம்மாவை மேலும் பேச விடாது அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.. பத்துவிடம் சொல்லவில்லை.. 

கமலம்மாவிற்கு உடனே எல்லாம் முரளியிடம் சொல்ல வேண்டும் போல ஒரு உந்துதல்.. வர்ஷினியை அனுப்ப மாட்டான் என்றதில் அப்படி பயந்து போயிருந்தார். “ஐயோ, கணவர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா?” என,

அங்கே வீட்டில் ரூபாவுக்கு தாள முடியவில்லை.. ஈஸ்வர் வீட்டை விட்டுப் போய்விட்டான்.. திரும்ப எல்லாம் மாறி விட்டது.. அப்படி ஒரு கோபம், ஆத்திரம் எனக் கிளம்ப, அஸ்வினிற்கு அழைத்து..

“நீ எங்களை நல்லாவே இருக்க விடமாட்டியா?” என,

அஸ்வின் சற்று பக்குவப் பட்டு இருந்ததால் “இப்போ என்ன?” என்றான் அமைதியாகவே.

“இப்போ என்னவா? நீ விட்டுட்டுப் போனது எல்லாம் அப்படியே இருக்கு. எதுவுமே சரியாகலை” எனத் தேம்பியவள் தொலைபேசியையும் வைத்து விட..

“நான் என்னத்தை விட்டுட்டு வந்தேன், இவ மாக்கான் புருஷன் எதாவது பண்ணினா மொத்த குடும்பமும் என்னை சொல்லுது. என்ன பண்ணினேன் அதுல கமிஷன் அடிச்சேன்.. அந்த ஏஜன்ட் பணத்தை தூக்கிட்டு ஓடிடுவான்னு கனவா கண்டேன்.. திரும்ப வேண்டாம்னு சொல்ல சொல்ல இவ புருஷன் பணத்தை கட்டி ஹோகயா ஆச்சுன்னா நானா பொறுப்பு?” என நினைத்தான்.

ஓடின ஏஜன்ட் இவன் மூலம் தான் ஜகனிக்கு அறிமுகம் என்பதை மறந்து போனான்.. கூடவே அடுத்த முறையும் ஜகன் பணம் கட்டுகிறான், போனால் அவர்கள் தொலைந்து விடுவார்கள் என தெரியும்.. ஜகனிடம் கட்டாதே என்று சொல்லியதை வீட்டினர் யாரிடமாவது சொல்லியிருந்தால் எந்த அனர்த்தங்களும் நடந்திருக்காவது..

ரூபாவிடம் சொல்லியிருந்தால்  தடுத்து நிறுத்தியிருப்பாள்.. ரூபாவிற்கு தெரியாமல் தான் ஜகன் செய்வான், ரூபா வேண்டாம் என்று சொல்லும் விஷயத்தை செய்ய மாட்டான். அப்போது அஸ்வினும் பொறுப்பற்றவன் தானே!

எனக்கென்ன என்ற எண்ணம் தான் அதிகம்! அவர்கள் வீட்டிற்கு ரூபா திருமணம் ஆனா நாளாகப் போகிறோம், ஜகன் மாமா என்னை இவ்வளவு நம்புகிறார். வீட்டில் நம்மையும் ஒருவனாக நினைக்கிறார்கள் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.

இருந்திருந்தால் ரஞ்சனி பார்த்திருப்பாளோ என்னவோ?   

அக்காவைப் பற்றி அப்போது நினைக்காததை மனம் இப்போது நினைத்தது, “விஷயத்தையாவது சொல்லி தொலைச்சாளா, உயிரை எடுக்கறாங்க! இவங்க விட்டுட்டுப் போனது என்கிட்டே அப்படியே இருக்கு. நான் யார் கிட்டப் போய் சொல்வேன். பணக்கார வீட்ல பொண்ணு குடுத்துட்டாங்க, பொண்ணு எடுத்துட்டாங்க.. இவங்க பணப் பிரச்சனை தீர்ந்தது.. நான்..?” என்றவனின் மனதில் ஆறாத ரணங்கள்,

பின்னே ஜெயிலில் ஒரு வருடம்.. “ப்ச்” என சலித்தான். பப்பில் வேலை பார்க்கிறான்? வெளியே சொல்லக் கூட முடியாது. அங்கே தான் நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்.. வீட்டின் பணத் தேவை.. என்ன சொல்ல?    

ஆனாலும் ரூபாவின் தேம்பல் சற்று மனதை அசைக்க.. “அங்க தான் ஒருத்தன் நான் தான் பாஸ்ன்னு சுத்திட்டு இருப்பானே! கல்யாணத்துக்கு பிறகு என் அக்கான்றதை விட அவன் தோழின்றது தானே அதிகம்! என்ன பண்றான்?” என யோசித்தான்.

தன்னுடைய தங்கைக்கு அழைத்தவன் “ஐஸ்வர்யா” என,

“சொல்லு அஸ்வின்”.. முன்பெல்லாம் பேசவே பேசாதவர்கள் இப்போதெல்லாம் சில முறை பேச ஆரம்பித்து இருந்தனர்.

“நீ ரூபாக்காவோட பேசிட்டு இருக்கியா?” என,

“இல்லையே! ஏன் கேட்கற?”

“பேசறதே இல்லையா?”

“இல்லை, வருஷத்துக்கும் மேல ஆச்சு. இப்போ அவ கொழுந்தனார் கல்யாணத்தப்போ ஒரு தடவை பேசினேன். அவ்வளவு தான்!” என்றாள்.

“விஷ்வா” என்றது மறைந்து “கொழுந்தனார்” என்ற அடைமொழி தோன்றியிருந்தது சற்று நிம்மதி கொடுத்தது  அஸ்வினிற்கு..

“இப்போ பேசேன், ஃபோன் பண்ணி என்னை திட்டுறா! எதுக்குன்னு தெரியலை. நான் செஞ்சு வெச்சதா, இப்போ ஏதாவது பிரச்சனையை முளைச்சிருக்கா தெரியலை.. ஜெயில்ல இருந்த வந்த பிறகு நான் ஒன்னுமே பண்ணலை, பலமுறை செய்யணும்னு நினைச்சேன், ஆனாலும் செய்யலை!” என்றான்.

“எதுவும் செஞ்சிடாத அஸ்வின், நமக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம். இந்த அப்பாவையும் எதுவும் செய்யாம பார்த்துக்கோ” என்று மீண்டும் வலியுறுத்தியவள், “சரி, பேசிப் பார்க்கிறேன்!” என வைத்து விட்டாள்.

இப்போது என்ன என்று யோசித்தவள் ரூபாவிற்கு அழைக்க அவள் எடுக்கவேயில்லை. எப்படியும் அழைப்பாள் எனத் தோன்ற, அதன் போலவே இரவு ரூபா அழைத்தவள், “சொல்லு ஐஷ்!” என்றவளின் குரலே சரியில்லை.

“என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசற?”  

மீண்டும் அப்படி ஒரு அழுகை, ரூபாவின் அழுகை ஐஸ்வர்யாவையும் அசைத்தது.. “என்ன ஆச்சு அக்கா?” என்றாள் பரிவான குரலில்.

தேம்பிக் கொண்டே நடந்தது அத்தனையும் சொல்ல.. “சரி, அவ வந்தா, அவ அண்ணன் வீட்டை விட்டு போயிட்டான், நீ எதுக்கு இப்படி அழற, நீ இதுல என்ன பண்ணின”

“திரும்ப பணம் தானே பிரச்சனை.. பணத்தை இவர் தானே தொலைச்சார்.. எல்லாம் இவர்னால தானே, இவர் வேற ஒரு மாதிரி இருக்கார்.. என்னால தானேன்னு.. திரும்ப ஏதாவது செஞ்சிக்கிட்டா? எனக்கு பயமா இருக்கு!” என்று தேம்பிக் கொண்டே பேச..

என்ன சொல்வது என்றே தெரியவல்லை.. “அப்படி எல்லாம் மாமா எதுவும் பண்ண மாட்டாங்க, அழாதே! சரணும் பிரணவியும் பயந்துக்கப் போறாங்க! எவ்வளவு தைரியமானவ நீ!”  என்று சமாதானம் சொல்லியவள்.. “ஐயோ, இவ்வளவு சிக்கல்களா?” என்று தோன்றியது.

ஆனாலும் மனது ஒரு புறம்.. “விஸ்வா மாதிரி ஒருவன் துணை இருந்தால் எந்த சிக்கல்களையும் சந்திக்கலாம்” எனத் தோன்ற, மனதில் வர்ஷினியை நினைத்து பொறாமையும் கூட.  பின்னே தங்கையையும் விட்டுக் கொடுக்கவில்லை, மனைவியையும் விட்டுக் கொடுக்கவில்லை. “ரஞ்சனி புருஷன் பேசினாலும் அவளைக் கூட்டிட்டு வர்றான், ரஞ்சனி வீட்டுக்காரன் பேசிட்டான்னு அவனோட தங்கை வர்ஷினியையும் தள்ளி வைக்கலை” ஆம்! மனது அவளறிய அப்பட்டமாகப் பொறாமையாக உணரந்தது.   

“இந்த விஸ்வா வேற வர்ஷினியைக் கூட்டிகிட்டு தனியா போயிட்டான். மலர் அத்தை வேற அழுது அழுது மயக்கமே போட்டுட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு ஒன்னும் தெரியாது, அவளை கூட்டிட்டு போய் இவன் என்ன பண்ணுவான், அவ என்ன பண்ணுவான்னு ஒரே அழுகை!”

“இனி ரஞ்சனியோடையும் பேச மாட்டான். அவ வீட்டுக்காரருக்கும் இவனுக்கும் ஏற்கனவே முட்டிக்கும்” எனப் புலம்பித் தள்ள, ஒரு புறம் சற்று சந்தோஷமாக இருந்த போதும், விஸ்வாவை நினைத்து ஒரு புறம் வருத்தமாகவும் இருந்தது. 

“அழாத, நடக்கறது தான் நடக்கும். என்ன ஆனாலும் பார்த்துக்கலாம்னு உன் வீட்டுக்காரர்க்கு நீ தைரியம் சொல்லணும், நீ அழாதே!” என்றவள், கூடவே..

“அஸ்வினை இழுக்காதே அக்கா, இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்கான். ஜெயில் கூடப் போய்ட்டு வந்துட்டான். அவனை தயவு செஞ்சு எதுலையும் திரும்ப இழுத்து விடாதே! அம்மா இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க! இவன் இப்போ தான் ஒரு வேலைக்கு போறான்! இவனால தான் அப்பா அடங்கி இருக்கார். அவனை இழுத்து மறுபடியும் நம்ம குடும்பத்துல பிரச்சனையை பண்ணிடாதே!” என சொல்லி தொலைபேசி வைத்த போது, ஈஸ்வர் மற்றும் ரஞ்சனியின் நினைவுகளே..

திரும்ப அஸ்வினை அழைத்து விவரம் சொல்ல.. “என்ன, ரஞ்சனியைக் கூட்டிக்கொண்டு வந்தானா? பெரிய இவன் போல நடந்து எப்போதும் சிக்கல்களை அதிகப் படுத்திக் கொள்வது தானே இவன் வேலை!”

“இதில் வர்ஷினியைத் தனியாக அழைத்துச் சென்று விட்டானா? ப்ச், சிக்கலை அதிகப் படுத்திகிறானோ” என்று தான் தோன்றியது.. நிஜமாகவே அஸ்வின் சந்தோஷம் பட வேண்டிய விஷயம் தான் ஆனால் முடியவில்லை.. வர்ஷினியை அவனால் அப்படி நினைக்க முடியவில்லை..

அவனை நம்பி நட்புக் கரம் நீட்டியிருக்கும் பெண் அவள். எப்படியோ போகட்டும் என்று நினைக்க முடியவில்லை. யோசனையில் ஆழ்ந்தான். சொல்லப் போனால் அவளின் அப்பாவினால் தான் ஜெயில் போனான். ஆனாலும் அவளை மனம் நிந்திக்கவில்லை.

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க” என்று பலமுறை சொல்லி நம்பர் கொடுத்திருந்தாள்.. அவளின் திருமணம் ஈஸ்வரோடு மட்டும் இல்லாதிருந்தால் உளமார வாழ்த்தியிருப்பான். அவனோடு என்பதால் மட்டுமே வாழ்த்து கூடச் சொல்லவில்லை.

இப்போது “ஹாய், ஹவ் ஆர் யு” என ஒரு மெசேஜை கைகள் தானாக் தட்ட..

ஈஸ்வர் ஒரு மாதிரி மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை புரிந்த வர்ஷினி அவனை தொந்தரவு செய்யாமல் ரூமின் உள் வெறுமனே படுத்து இருந்தவள்.. மெசேஜின் ஒலி கேட்க எடுத்துப் பார்த்தால் புதிய நம்பர்.

“யார் நீங்க?” என்று அனுப்ப.. “ஓஹ், என் நம்பர் இல்லையோ?” என நினைத்தவன், “நான் அஸ்வின்” என சொல்ல..

ஒரு நொடி யோசித்தவள் “எஸ், எஸ், ஞாபகம் வந்துடுச்சு.. ஐ அம் ஓகே, நீங்க எப்படி இருக்கீங்க?” என,

“நல்லாவே இல்லை, உங்க வீட்ல என்ன பிரச்சனை? எங்க அக்கா ஃபோன் செஞ்சு என்னை திட்டுறா?” என சகஜமாகப் பேச ஆரம்பிக்க..

“எனக்கு பெருசா டைப் பண்றது கஷ்டம்.. ஃபோன் பண்ணட்டுமா?” என வர்ஷினி டைப் செய்ய..

“பண்ணுங்களேன்!” என்று அஸ்வின் மெசேஜ் செய்ய..

அங்கே ஆரம்பித்தது, அவர்களின் சகஜமான உரையாடல்.    

  அடுத்த நாள் காலையில் வர்ஷினி எழுந்த போது, ஈஸ்வர் ஆழ்ந்த உறக்கத்தில், எப்போது அருகில் வந்து படுத்தான் என கூட அவளுக்குத் தெரியாது.

ஈஸ்வரின் மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தால் முரளி, அதை அட்டன்ட் செய்தவள் “சொல்லுங்கண்ணா” என,

“ஷாலினிக்கு குழந்தை பிறந்திருக்குடா, பையன்!” என,

“கங்க்ராட்ஸ் அண்ணா” என்ற வர்ஷினியின் உற்சாகக் குரல் ஈஸ்வரின் உறக்கத்தை கலைத்தது.

“அண்ணாக்கு குழந்தை பிறந்திருக்காம்!”  

அவளிடம் இருந்து போனை வாங்கியவன் “எப்படியிருக்காங்க ரெண்டு பேரும்” என,

“நல்லா இருக்காங்க, நார்மல் டெலிவரி தான்” என்றவனிடம் அதன் பிறகே “வாழ்த்துக்கள்” என்றான்.

“எப்போ பிறந்தது” என,

“இப்போ தாண்டா ஒரு கால் மணிநேரம் இருக்கும், குழந்தையை கொண்டு வந்து இப்போ தான் காட்டினாங்க, உனக்கு கூப்பிட்டுட்டேன். இன்னும் நான் ஷாலினியைக் கூட பார்க்கலை!” என,

“நீ அங்க பாருடா, நான் நேர்ல வர்றேன்” என வைத்தவன், நேரத்தை பார்க்க ஆறு மணி என்றது.

“சீக்கிரம் குளிச்சு ரெடியாகு வர்ஷி.. குழந்தையை பார்க்கப் போகலாம்” என,

அந்த உற்சாகம் தோன்ற விரைந்து கிளம்பினாள்.  அவளுக்கு அம்மா வீட்டோடு சண்டை, புகுந்த வீட்டினரிடம் இருந்து விலகல் என்பது போல எந்த மனவருத்தமும் இல்லை.

அஸ்வினுடன் வெகு நேரம் பேசியிருந்ததன் தாக்கம் இருந்தது. உறங்கும் போது சமயம் கிடைத்தால், அதனைப் பற்றி ஈஸ்வரோடு பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால் காலையில் எழுந்தவுடன் இந்த விஷயம் வர அது போய்விட்டது.

கிளம்பி காரில் போகும் போது தான் கவனித்தாள், ஈஸ்வரின் முகத்தில் இருந்த தீவிரத்தை.. அவள் பார்த்த நாளாக அவன் அப்படி இருந்தது இல்லை. பிறந்த வீட்டோடு சண்டை புகுந்த வீட்டின் விலகல் அவளை பாதிக்காமல் இருக்கலாம் ஏனென்றால் அவள் குடும்ப அமைப்பில் வரவில்லை.

ஆனால் ஈஸ்வருக்கு அப்படி அல்லவே! கூட்டுக் குடும்பத்தில் இருந்தவன்.. இப்படி எல்லோரோடும் பிரச்சனை என்பது அவனை ஒரு தீவிரத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

ஆம்! சங்கீதவர்ஷினி மட்டுமே இதுவரை இலக்காய் இருக்க.. இப்போது அதை அடைந்து விட்டான்.. நேற்றிலிருந்து அவன் மாறிவிட்டான்.. பணம் அதன் பின் அவனின் ஓட்டம் திரும்பவும் ஆரம்பிகின்றது..

ஆம்! முரளியின் திருமணதிற்கு முதல் நாள் இரவு போன போது தான் சங்கீத வர்ஷினியைப் பார்த்தான்.. ஆனால் அவளை பார்க்கும் முன் இருந்த பிரச்சனையின் தீவிரம் திரும்பவும் அவனுள்.

ஆம்! ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்று விட்டான். 

சங்கீத வர்ஷினி தன் கணவனையே பார்த்திருக்க.. விஷ்வேஸ்வரன் தான் எடுக்க வேண்டிய விஸ்வ ரூபம் என்ன என்று அறியாமல் இலக்கின்றி வெறித்து சாலையை பார்த்திருந்தான்.

ஈஸ்வரின் கவனத்தில் இப்போது எங்கும் வர்ஷினி இல்லை.. அவனுள் பாதி என்ற நிலைக்கு அவன் வந்திருந்தான்..  ஆனால் வர்ஷினிக்கு புரிந்தும் புரியாத நிலை தானே!

பார்த்த நாளாக அவனை சிதறடித்த உயிர், இப்போது அவன் மட்டுமே என்ற நிலையில் இருக்க..  அவனுக்கு புரியவில்லை அவளை மீண்டும் தனிமைப் படுத்துகின்றான் என!   

காரை ஓட்டிக் கொண்டிருந்த ஈஸ்வர் என்கின்ற விஷ்வேஸ்வரனின்  மனதில் தோன்றிக் கொண்டிருந்த வரிகள் இவை தாம்.  

யாருக்காகவும் எவருக்காகவும் நிற்பதில்லை                                       காலமும்…. நேரமும்……                                                                         தனி மனித வாழ்க்கைப் பயணமும்!

      

 

Advertisement