Advertisement

அத்தியாயம் ஏழு :

மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் வந்தான் கண்ணன், இந்த முறை மனதை சற்று தயார்படுத்தி வந்திருந்தான். என்ன ஆனாலும் குழந்தையைப் பார்ப்பது என்று, கூடவே குழந்தையின் அம்மாவையும். அவளின் தைரியம் மிக மிகப் பிடித்திருந்தது. பலமுறை யோசித்து விட்டான் எப்படி இப்படி முடியும் என. 

சனி ஞாயிறு விடுப்பில் வந்திருந்தான். காலையில் வந்து குளித்து முடித்து உடனே கிளம்பிவிட்டான். “சாப்பிட்டு வெளியே போ” என்ற விமலாவின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. இந்த முறை தங்கைகளுக்கு ஆளுக்கு ஒரு மொபைல் வாங்கியிருக்க, மூவரும் அதனை நோண்ட உட்கார்ந்து கொண்டனர். அம்மாவிற்கும் சித்திக்கும் புடவைகள்.

இந்த முறை தோட்டத்தின் பின் புறம் போகவில்லை, முன் வாசல் வழியாகத் தான் போனான். வாசலில் வடிவுப் பாட்டி அமர்ந்திருந்தார். இவனை பார்த்ததும் இவனாக இருக்குமோ எனக் கண்களை உருட்டி உருட்டிப் பார்க்க, கண்ணனிற்குத் தானாக புன்னகை வந்தது.

கண்ணனின் தோற்றம் வெகுவாக மாறியிருந்தது, “என்ன பாட்டி பார்க்கறீங்க” என, அவருக்கு பேச்சே வரவில்லை. அவர் பேசட்டும் எனக் காத்திருக்க, அந்த முதிய பெண்மணி “எங்க ராசாவா நீ” என, மனம் நெகிழ்ந்து விட்டது.

 இவர் ஏதோ கேட்டார் என்று தானே பிரச்சனைகள் ஆரம்பித்தது. இப்போது இவர் சொல்லும் வார்த்தை மனதை வெகுவாக ஆசுவாசப்படுத்தியது உண்மை.

என்னவோ கோர்ட் கேஸ் என்று அலைந்து விட்டாலும் விவாகரத்து ஆகிவிட்டாலும், வடிவு பாட்டிக்கு மனதில் ஒரு நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது, இந்தப் பையன் திரும்ப வருவான் என்று.

எத்தனை பேரை பார்த்திருக்கிறார் அவரின் வயதிற்கு, சிறு தப்பாக அவனை அனுமானித்து இருந்தால் பேத்தியைத் திருமணம் செய்து கொடுக்க நினைத்திருப்பாரா? மாட்டாரே!

“வா, வா ராசா, சுந்தரி அங்க நாற்றுப் பண்ணையில இருக்கா!”   

அது என்ன நாற்றுப் பண்ணை என அவனுக்குப் புரியவில்லை, “எங்க பாட்டி?” என, பத்தடி தூரத்தில் இருந்த இடத்தைக் காட்ட, அங்கே நர்சரி இருந்தது. “ஓஹ், நர்சரி தான் நாற்றுப் பண்ணையா” என எண்ணிக் கொண்டே அங்கே பார்வையை ஓட்ட, “போ ராசா, அங்க போ, சுந்தரியும் பையனும் அங்க தான் இருக்காங்க” என்றார். வேறு எதுவும் கேட்கவில்லை.   

ஒரு சிறு புன்னகை கூட ஒரு தலையசைப்போடு கண்ணன் செல்ல, “ராசா மாதிரி தான் இருக்கான்” என நினைத்து, தன் பேத்தியின் வாழ்க்கையில் எல்லாம் சரியாகிட வேண்டும் என அவரின் குல தெய்வத்திற்கு அவசர வேண்டுதல் வைத்தார். 

பண்ணை மட்டும் தான் தெரிந்தது. அம்மாவும் பையனும் கண்ணுக்குத் தெரியவில்லை. வரிசையாக செடிகள், தொட்டிகளில், பைகளில் என அடுக்கி வைக்கப் பட்டு இருக்க, ஒரு வரிசைக்கு நடுவில் சுந்தரி, அபி, சிந்தா மற்றும் இன்னொரு பெண்மணி அமர்ந்து இருந்தனர். சுந்தரி குத்துக் காலிட்டு ஒரு தொட்டியில் பதியன் வைத்துக் கொண்டிருந்தாள். அபி அம்மாவிற்குப் பக்கத்தில் அமர்ந்து மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தான். 

கூடவே “இப்படி பதிஞ்சா தான் நல்லா பிடிக்கும். என்ன பண்றீங்க ரெண்டு பேரும். மூணு நாளைக்கு முன்ன வெச்ச செடில நாலு வாடிடுச்சு. இதுவும் ஒரு உயிரை கொல்ற மாதிரி தான். அப்படி என்ன அவசரம் உங்களுக்கு, தண்ணியை வேற அளவா ஊத்தாம நிறைய ஊத்தி வெச்சு” என ஆரம்பித்தவள், “ப்ச்” என சலித்து, இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததா என்ன? நான் தான் மடச்சி மாதிரி பேசிட்டு இருக்கேன். கவனமா கருத்தா செய்ங்க” என,

“ம்ம்” என இருவரும் மண்டையை மண்டையை ஆட்டினர். பின்னே நாலு செடி வாடி விட்டது என நேற்றிலிருந்து வதைத்து எடுக்கிறாள். பதியன் சில சமயம் பிடிக்கும் பிடிக்காமலும் போகும், சுந்தரிக்கும் தெரியும்! ஆனாலும் மனம் தாளவில்லை! அந்த வாடிய செடியை கண்ட போது..

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் மொழி அவளுக்கு அத்துணை பொருந்தும்.

வீட்டின் உள்புற வழியாக கண்ணன் வந்ததால் யாருமே அவனைக் கவனிக்கவில்லை. சென்ற முறை பார்க்காததை இப்போது பார்த்தான். அதையும் விட விவாகரத்து செய்து விட்ட மனைவியை புதிதாகப் பெண் பார்த்தான், அப்படிச் சொல்வதையும் விட, இப்போது தான் பெண்ணே பார்த்தான்.

மாநிறதிற்கும் குறைவு தான், ஆனால் மிகவும் கருப்பெல்லாம் இல்லை. நமது பல தமிழ் பெண்களுக்கு உரிய நிறம். முன்பு போல முகத்தில் பருக்கள் இல்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு, அதுவும் கூட இப்போது முகத்திற்கு அழகு சேர்ப்பதாகத் தான் தோன்றியது.

இதற்கு முகம் பக்கவாட்டில் தான் தெரிந்தது. சுந்தரிக்கு ஏதோ உந்துதல் கொடுக்க, இவன் நின்றிருந்த புறம் திரும்ப, இப்போது அந்த முகம் மிகவும் நன்றாக கண்ணனின் கண்களுக்கு தெரிந்தது.

அதனையே இமைக்காமல் பார்த்திருந்தான். இத்தனை நாட்கள் தெரியாதது இப்போது தெரிந்தது. ஆம், முகம் மிகவும் லட்சணமாய் இருந்தது. உடலும் முன்பு போல இல்லாமல் சற்று மெலிந்து அளவாய் இருந்தாள்.

இவனைப் பார்த்ததும் முகத்தினில் ஒரு அதிர்வு, பின்பு ஒரு முறைப்பு, இதோடு எழுந்து நின்றாள். அப்போது கண்ணனின் மனதில் ஓடியது இது மட்டுமே, “நல்லாத் தானே இருக்கா. சூப்பர் அழகி இல்லைனாலும் சுமார் அழகி தானே!  உனக்கு ஏன் பிடிக்கலைன்னு நினைச்ச. ரொம்ப மோசம் எல்லாம் இல்லையே. ஏன் உனக்கு தெரியாமப் போச்சு? என்ன ட்ரெஸ் கொஞ்சம் ரிமோட்டா இருக்கு, நீ மாத்திக்க மாட்டியா. புடவை கூட சரியா கட்டத் தெரியலை. மேல தூக்கி கட்டியிருக்கா” பார்த்த சில நிமிடங்களில் அக்கு வேறு ஆணிவேராக அவளை அலச ஆரம்பித்தான்.

“சும்மா என்னை பேசக் கூடாது. நான் நினைச்ச மாதிரி இல்லை தானே” என.. “ஆமாம், அதுக்கு என்ன பண்ண? நினைச்சது கிடைக்கலைன்னா, கிடைச்சதை நினைச்சிக்கோ” என புது தத்துவ மொழி படைத்தான். எல்லாம் மனதினில் தான்..

எழுந்து நின்றவள், “ஆயா” எனக் கத்த, அமர்ந்திருந்த எல்லோரும் அதிர்ந்து எழுந்தனர். அபி அம்மா கத்திய கத்தலில் அவனும் பயந்து போனான். இன்னும் நடை பழகவில்லை, ஒரு வயது பாலகன் தானே! அம்மாவின் புடவையை காலில் இழுக்க, மகனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டவள், வேகமாக கண்ணனைக் கடந்து தன் பாட்டியை நோக்கி செல்ல..

கண்ணிற்கு மீண்டும் புன்னகை முளைத்தது. அவள் இடுப்பில் இருந்த தன் மகனிற்கு பார்வையை மாற்றி இருந்தான். புதியவனை அபி யாரென்று பார்க்க, மகன் தன்னைப் பார்த்ததும் ஒரு விரிந்த புன்னகை தானாக மலர்ந்தது.

சிந்தாமணியும் கூட நின்றிருந்த பெண்மணியும் இவனின் அருகில் வந்து அவனைப் பார்த்து அடையாளம் கண்டு, “அன்னைக்கு கூட வந்தீங்க தானே, எனக்கு அடையாளம் தெரியலை” என்று சிந்தாமணி பேச..

அவளுக்கும் ஒரு தெரிந்த புன்னகை அவ்வளவே, பின்பு வீட்டின் புறம் அவனும் செல்ல. பாட்டியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.. “யாரு என்னன்னு பார்க்க மாட்டியா, யார் வந்தாலும் வீட்டுக்குள்ள விட்டுடுவியா” என,

“என்ன பேச்சு பேசற? போட்டேன்னா பாரு வாயி மேல” என அவர் அதற்கு மேல் சண்டை பிடிக்க, அவனுக்காக அவளைத் திட்டுவதா? கோபம் பெருக..   

“போ, போ, உனக்கு யாரு வேணுமோ வெச்சிக்கோ, எனக்கு என்ன? நான் யாரு உனக்கு?” என கேட்டை திறந்து மளமளவென்று வீட்டை விட்டு மகனை தூக்கி நடை போட..

“ஏங்கண்ணு இப்படிப் பண்ற?” என பாட்டி கத்த கத்த, வெளியில் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள். இவ்வளவு கோபத்தை யாரும் எதிர்பார்க்கவிலை. பாட்டி அவளின் பின்னோடு நடக்க..

“நீங்க இருங்க” என்று அவரிடம் சொல்லி, கண்ணன் வேகமாக அவளின் பின் நடந்தான்.

நாலே எட்டில் அவளை அடைந்து “என்ன பண்ற?” என்று சுந்தரியை மறித்து அவளின் முன் நிற்க, பஸ் ஒன்று வேகமாக அவர்களை கடந்து சற்று அருகில் போக, அதில் பயந்து அபி அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.

“பாரு, அபி பயப்படறான். உங்க பாட்டி அங்க தவிச்சு நிக்கறாங்க, என்ன பண்ணினேன் உன்னை நான். பையனை பார்க்க வந்தேன், அது தப்பா? உனக்கு மட்டும் பையன் இல்லையே, எனக்கும் பையன் தானே. எதுக்கு இவ்வளவு சத்தம், இப்படி வெளில ஓடி வர்ற, எல்லோரும் பார்க்கற மாதிரி” என கோபமாக அதட்டி பேசினான்.

“பிடிக்கலைன்னா அங்கேயே என்னை வெளில போன்னு சொல்லணும். அதை விட்டு நீயேன் வர்ற?” என்று பொரிந்தான். இப்படி பேசுவது அவன் இயல்பே அல்ல.

“சரி, அப்போ நீ போ! நான் வீட்டுக்குப் போறேன்!” என்று உடனே திரும்ப வீடு நோக்கி சுந்தரி நடக்க, “ஷப்பா, கண்ணைக் கட்டுதே” என தான் தோன்றியது.

ஆனாலும் அவள் வீடு செல்லும் வரை பார்த்தபடி நின்றவன், அவள் கேட்டின் உள்ளே சென்றதும், தானும் பின் சென்று, அவளின் முன் நின்றான். கை கட்டி தீர்க்கமாய் அவன் பார்த்து நின்ற தோரணை, பெரிய துரைன்னு இவனுக்கு நினைப்பு” என சுந்தரியின் மனது நொடித்தது. அவனுடைய பெயரே அதுதானே, அதை மறந்தவளாக!

“என்ன பெரிய லுக்கு விடற? எதுக்கு வந்த? பெரிய துரைன்னு நினைப்போ?” என அப்படியே அதனை வெளியில் சொல்ல. வார்த்தையிலும் மரியாதை இல்லை உடல் மொழியிலும் மரியாதை இல்லவே இல்லை! பன்மை மாறி ஒருமை வந்திருந்தது எல்லோரும் பார்த்து வேறு நின்றனர். அதனை எங்கும் யாரிடமும் சகித்துக் கொள்ள மாட்டான் துரைக் கண்ணன்.

“ஒரு அப்பு அப்பினா தூர போய் விழுவா, என்ன பேச்சு பேசறா?” எனத் தோன்றின போதும் இது கோபப்படும் சமையம் அல்ல எனப் புரிந்து, “என் பேரே அதுதான்” என்றான் அமர்த்தலாக.

“பேரு அதுன்னா, நீயும் அப்படி ஆகிடுவியா?” என சிலுப்ப,

“ஓஹ், அப்படி நான் இல்லையா? சரி விடு!” என அவனும் அசராமல் பேச,

எரிச்சல் ஆனவள் “எதுக்கு வந்த இப்போ? எதுக்கு இப்படி திடீர்ன்னு எல்லாம் வந்து குதிக்கறீங்க. போன தடவையே உங்கம்மாக்கிட்ட சொல்லித்தானே அனுப்பினேன்” என,

“என்ன அம்மா வந்தாங்களா? எதுக்கு வந்தாங்க?” என அவன் ஆர்வமாக ஆச்சர்யமாகக் கேட்க,

“அதை அங்க கேட்காம இங்க வந்து என்ன கேட்கற?” எனப் பொரிந்தவளிடம், “அவங்கம்மா வந்தாங்களா கண்ணு? நீயேன் என்கிட்டே சொல்லலை” என அவளின் ஆயாவும் வந்து நிற்க,

அதற்குள் அபி சிணுங்க, “எனக்கு அவனை இப்போ தூக்கணும், குடு என்கிட்டே” என அருகில் வந்தான். தானாக பின் நகர்ந்தவள் “என்ன கலாட்டா பண்ற இங்க வந்து?” என எகிற,

எல்லோரும் பார்க்க, அவனுள் ஒரு ஆத்திரம் கிளம்பியது. “என்ன? என்ன கலாட்டா பண்றாங்க உன்கிட்ட? முதல்ல பொறுமையா பேசு!” என்றவன், அவளை விட்டு பாட்டியின் புறம் திரும்பி, “எனக்கு பையனை பார்க்கணும் பாட்டி, நான் அப்புறமா வர்றேன். உங்க பேத்திக்கு சொல்லி புரிய வைங்க” என சொல்லிப் போக,

“பெரிய இவன், இவன்! இவன் சொன்னா நான் காட்டிடுவேனா போடா!” என்ற இறுமாப்பு எழுந்தது. “எங்கேயிருந்து வந்து திடீர்ன்னு குதிச்சானாம். ஆளும் அவனும். இவன் நல்லா இருந்தா, இவன் கிட்ட மயங்கி நாங்க ஈ ன்னு இளிச்சுட்டு நிப்போமா, புள்ளையை காட்டிடுவோமா, பார்த்துடுவோம்டா!” என்ற ஒரு வைராக்கியம் மனதினில் வேகமாக வளர்ந்தது.

பன்னிரண்டு மணி போல திரும்பவும் வந்தான். “அதெல்லாம் பார்க்க விடமாட்டேன். எப்படியும் தூரமா பார்த்துட்டு தான் இருக்க, கைல தூக்க விடமாட்டேன்!” என ஆத்திரமாகச் சொல்ல,

சற்று நேரம் விட்டு வந்தால் அத்திரம் குறைந்து இருக்கும் என தான் சென்றான். அது அப்படியே இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவன், தன்னுடைய தந்தையை அழைத்து சுந்தரியின் உறவுகளில் மூத்தவராய் இருக்கும் சிலரிடம் பேச, எல்லோரும் உடனே கிளம்பி வந்து விட்டனர். அவர்கள் “கண்ணனுக்கு பிள்ளையைக் காட்டேன்மா” என பஞ்சாயத்து செய்ய, யார் சொல்லியும் அவள் முடியவே முடியாது என்று நின்றாள்.

“அப்புறம் நான் திரும்ப கோர்ட் போவேன், பையன் எனக்கு வேணும்னு! தீர்ப்பு எனக்கு சாதகமா வருமா இல்லையா வேற, ஆனா நிச்சயம் ஒரு ரெண்டு நாளாவது என்னோட இருக்க விடுவாங்க வாரத்துக்கு, சும்மா பார்க்கிறதுக்கு தான் கேட்கறேன். உனக்கு அதுதான் இஷ்டம்னா செஞ்சிக்கலாம்!” என வேறு வழியின்றி சற்று ஆணவத்தோடே மிரட்டிப் பேச..

மனம் கலங்கி நின்றாள்.. 

“என்ன மிரட்டுற மாதிரி பேசறீங்க? இங்க யாரும் பயந்துக்க மாட்டோம்! உன்னால ஆனதைப் பார்த்துக்க!” என சின்னராசு துள்ள..

ஏனோ அவனை முதல் பார்வையிலேயே கண்ணனுக்குப் பிடிக்கவில்லை.. “எவன்டா நீ? என்னை ஆனதைப் பார்த்துக்கச் சொல்ல” என அமர்ந்து இருந்து கண்ணன் சட்டென்று எழுந்து நிற்க,

“நீ எழுந்து நின்னா, பயந்துக்குவோமா” என அப்போதும் சின்னராசு துள்ள,

“வேற என்ன பண்ணா பயந்துக்குவ?” என்று தன்னுடைய முழுக்கைச் சட்டையை கண்ணன் மடித்து விட்டுக் கொண்டே தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான். ஆறடி ஆண்மகன் அவன், சின்னராசு சராசரி உயரம், அவன் முன் சிறிதாய் தெரிந்தவன், “என்ன அடிச்சிடுவேன்னு பயமுருத்தரையா?” என,

“நான் எங்க சொன்னேன்? நீ தான் சொல்ற?” என அசராமல் நிற்க..

தன்னுடைய மகனின் புதிய பரிமாணத்தில் சந்திரன் அசந்து தான் நின்றார். அவர் தான் திரும்ப “நாங்க பெரியவங்க பேசிட்டு இருக்கோம். உட்காரு கண்ணா!” என்று மகனை அதட்ட..

“சொல்லி வைங்க இவன்கிட்ட, அவன் என் புள்ள, அதுக்கு நடுவுல அவன் அம்மா மட்டும் தான் வரலாம். எவனாது வந்தான்..” எனச் சொல்லி நிறுத்தியவன், சின்ன ராசுவை பார்த்து “தொலைச்சிடுவேன்” என விரல் நீட்டி மிரட்ட..   

எப்போதும் யாரும் கண்ணன் பேசியேப் பார்த்திருக்க மாட்டார்கள், இதில் அவன் இப்படி ஒரு பரிமாணம் காட்டவும், எல்லோரும் அசந்து பார்த்து இருந்தார்கள்..

சுந்தரி வாய் பிளந்து தான் பார்த்து நின்றாள். “முடியாது” என ஸ்திரமாக மறுத்தால் போய் விடுவான் எனத் தான் நினைத்தாள். என்னவோ அவளிற்கு கண்ணன் பாசமுள்ளவனாக, மகனை விரும்புவனாக எல்லாம் இருக்கக்கூடும் எனத் தோன்றவேயில்லை.

அவனின் பரிவோ, அன்போ, பாசமோ இதுவரை பார்த்ததில்லை தானே!         

“இல்லையில்லை, மறுபடியும் கோர்ட்டு எல்லாம் வேண்டாம். கொஞ்சம் அவகாசம் குடுங்க, நான் புள்ளைக்கு பக்குவமா சொல்றேன்” என வடிவுப் பாட்டி வாக்கு கொடுக்க..  

அதன் பிறகே கண்ணனும் அவனின் அப்பாவும் சித்தப்பாவும் கிளம்பினர்.

“ஆளாளுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு பிடிவாதம். இவ்வளவு பிடிவாதம் பொட்டப்புள்ளைக்கு ஆகாது” என பேசிச் செல்ல..

சுந்தரிக்கு கண்களில் நீர் நிறைந்தது. எல்லோரும் எங்கே இருந்து வந்தார்கள் என ஆத்திரம் பொங்கியது. வெளியில் எதனையும் காட்டியது இல்லை என்றாலும் ஒற்றை பெண்ணாய் பாட்டியின் துணையுடன் இந்தக் குழந்தையை எப்படி பெற்றெடுத்து இருப்பாள், எப்படி வளர்த்திருப்பாள் இந்த ஒரு வருடமாக.. வலிகளும் வேதனைகளும் பகிரமுடியாதவை!

“நான் இப்படித் தான் பார்த்துக்கொள்ளலாம். கோர்ட் தானே போகட்டும், போய் வரட்டும்!” என்ற இறுமாப்பு இன்னும் ஸ்திரமானது.

கண்ணன் நினைத்ததை செய்து முடிப்பவன் என விவாகரத்து வாங்கியதிலேயே சுந்தரிக்கு தெரிந்திருக்கவேண்டும்! இனிமேல் தெரிந்து கொள்வாளோ!

     

            

 

Advertisement