நேசம் 4
உள் வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு மாதவன் இறங்க, ப்ருத்வியும் திடமாக இறங்கி நின்றிருந்தான். வாசலில் படுத்திருந்த சீசர் எழுந்து வாலை ஆட்டியவாறு குரைத்தது. அதன் தலையை பாசமாகத் தடவி விட்டு அதனுடன் பேசியவாறு தரையில் அமர்ந்து விட்டான் ப்ருத்வி.
வீட்டிற்குள்ளோ டிவியில் நியூஸ் சேனல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. அதிலே மாதவன் புரிந்து கொண்டான் பரபேஸ்வரர் உணவுண்டு விட்டு இன்னும் உறங்கவில்லை என்று. இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் படுத்துகிறானே என நினைத்தவாறு அவனை எழுப்ப முயன்றான்.
ஐயோ இன்னைக்கு என்னனென்ன கலவரமெல்லாம் நடக்கப் போகுதா ராமா என மனதில் எண்ணிக் கொண்டிருக்க, “மாதவா நீ இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டியே, வாடா போய் சாப்பிடலாம்” என்றான் ப்ருத்வி.
இவன் வேற நேரம் கெட்ட நேரத்துல பாசத்தை லிட்டர் கணக்குல ஊத்துறானே! அம்மா எப்படியும் இருப்பாங்க என நினைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
மாடியில் இருக்கும் ப்ருத்வியின் அறை நோக்கி அவனை நடத்திச் செல்ல அவனோ மறுத்துவிட்டு தந்தைக்கு எதிரே சென்று அமர்ந்தான். மாதவன் ப்ருத்வியை முறைத்துப் பார்க்க, “நீ போய் முதல்ல சாப்பிடுடா” அதட்டலுடன் கூறினான்.
யசோதம்மா…”மாதவன் குரல் கொடுக்க பாட்டியின் அறையிலிருந்து வெளியே வந்தார் யசோதா.
மாதவனின் பார்வையை தொடர்ந்து அவரும் பார்வையை திருப்ப, கணவரும் மகனும் எதிரே அமர்ந்திருப்பதை பார்த்து கலக்கம் கொண்டார். ஏனெனில் ஒரு வயதிற்கு பின் ப்ருத்வியின் தேவைகள் எதுவாகினும் அன்னையிடம் தான் வந்து நிற்பான். தந்தையால் ஆகும் காரியம் என்றாலும் அன்னையிடம் தான் கூறி அனுப்புவான், ஆனால் மோதிக் கொண்டால் மட்டும் இருவரும் எதிரெதிரே மோதிக் கொள்வர்.
அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரமூர்த்தி ப்ருத்வி குடித்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ப்ருத்வி ஊரில் இருக்கும் போது ராஜா என்ற எண்ணத்தில் தான் சுற்றிவருவான். அவன் குடும்பத்துக்கு இருக்கும் மதிப்பும், செல்லும் இடமெங்கும் கிடைக்கும் மரியாதையும் அவன் தலையில் சூட்டிக்கொண்ட கிரீடம் போன்ற கனத்தைத் தரும். எப்போதும் அவனை கொண்டாடும் நண்பர்கள் கூட்டம் வேறு அவனை மேலும் ஆட வைய்க்கும். ஆனால் பரமேஸ்வரருக்கு என்றும் இதெல்லாம் பிடிக்காது.
அதுவே ப்ருத்வி ஊருக்குச் சென்று விட்டால் அங்கு அவனுக்கு வேறு முகம் தான். எந்த வேலை செய்தாலும் மனதுக்கு பிடித்து முழு விருப்பத்துடன் நேர்த்தியாக செய்து முடிப்பான். தன் கீழ் சிறு தவறும் நடக்க விடமாட்டான். அது மட்டுமின்றி பாரம்பரியம் மிக்க தன் குடும்ப பெயருக்கு சிறு கலங்கம் கூட வரவிடாது நடந்து கொள்வான்.
எதிரே அமர்ந்திருந்த மகனை நேராக பார்த்தவர், “எப்ப ஊருக்கு கிளம்புற?” என்றார்.
ப்ருத்வியின் முகம் சூடேற, சற்று தூரத்தில் நின்றிருந்த அன்னையை பார்த்து, “அம்மா கேட்டுக்கோம்மா! ஒரு வருஷம் கழிச்சி இன்னைக்குத் தான் வந்திருக்கேன், எப்போ வந்தேன்னு கேட்காம எப்போ கிளம்புவேன்னு கேட்கிறார்? அப்போ ஏன்டா வந்தேன்ங்குற அர்த்தத்துல தானே கேட்கிறார்? நான் வேணா போயிடட்டுமா? அது தான் என்னை பெத்தவருக்கு ஆசைன்னா நான் இப்போவே இந்த வீட்டை விட்டுக் கிளம்புறேன்” என தந்தையை நேர் பார்வை பார்த்தவாறு முடித்தான்.
ஏன் ஆசை எதைடா நீ நிறைவேற்றி இருக்க? அதை விட என்னைக்காவது என் சொல்லைக் கேட்டு நடந்து இருக்கியா? இன்னைக்கு காலையிலே வந்தவனுக்கு அவன் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் வீடு தேடிப் போய் பார்க்க நேரம் இருக்கு, எல்லாரையும் கூப்பிட்டு கொண்டாட நேரம் இருக்கு ஆனால் என்னை பார்க்க நேரமில்லை. நான் இவனுக்காக காத்துக்கிட்டு இருக்கணுமா?” அவரும் கோபமுடன் தான் கேட்டார்.
அப்படி பாசம் இருக்குன்னா ஏர்போர்ட்டுக்கு காலையில நாலு மணிக்கே வந்து இருக்கணும் அதுவும் இல்லைன்னா நான் எட்டு மணிக்கு வீட்டுக்கு வரும் போதாவது இருந்திருக்கணும், அவர் பாட்டுக்கு அவர் யூனியன் ஆபீஸ் தான் முக்கியம்ன்னு போயிட்டாரு. நான் மட்டும் காத்துக்கிட்டு இருக்கணுமா?” படபடவென கத்தினான்.
இவனே இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கும் போது ஊருல எவன் என்னை மதிப்பான்? அதனால தான் புதுசா பணக்காரனானவனெல்லாம் என்னை ஏளனமா பேசிட்டு போறான்”
சும்மா கத்தாதீங்க, உங்களுக்கு மரியாதை குறையுற மாதிரி அப்படி என்ன நடந்துச்சி?”
நேத்து மில்லு ஆரம்பிச்சி இன்னைக்கு பணக்காரன் ஆனவன் அவனெல்லாம் என் பையன் அப்படி இப்படின்னு என்கிட்ட வந்து பெருமை பேசிட்டு போறான். புதுசா கையில நாலு காசு சேர்ந்திருக்குற மிதப்புல பேசுறான்”
ஏன் நீங்களும் என் பையன் போலீஸ்ன்னு பெருமையா சொல்லிக்க வேண்டியாதானே?”
அடேய் அவன் பையன் அவன் சொல் பேச்சைக் கேட்டு மில்லை கவனிச்சிக்கிடுறான்டா, ஆனால் நீ நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காமா போலீஸாகிட்டு வந்து நிக்குற, இதை வேற என்னை பெருமை பேசச்சொல்லுறியா? எல்லாம் அந்த பையக் கூட உனக்கு இருக்குற சாவகாசத்தால தானே! நம்ம தரத்துக்கு யார் யார் கூட பழக்கணும்ன்னு பார்த்துப் பழகுன்னு நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?”
உங்க கொள்கை கோட்பாடு எல்லாம் உங்களோட வைச்சிக்கோங்கன்னு நானும் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்”
எக்கேடோ கெட்டுப் போ, ஆனால் ஊரவிட்டு சீக்கிரம் கிளம்பிடு” என கோபமாக கத்தி அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டார் பரமேஸ்வரமூர்த்தி.
எதுக்குமே கோபப்படாதவரை இப்படி கோபப்படுத்துறானே என யசோதை நினைக்க, அவங்க ரெண்டு பெரும் சண்டை தான் போட்டுக்கிட்டாங்களா? சாதாரணமா பேச வேண்டிய விஷயங்கள் தானே எதற்காக இப்படி இருவரும் கத்திக்கொள்கிறார்கள் என மாதவன் நினைத்துக் கொண்டிருந்தான்.
சண்டை அத்துடன் முடிந்ததை நினைத்து நிம்மதிமூச்சு விட்ட யசோதா, “சரி மாதவா நீ வந்து சாப்பிடுப்பா” என அழைத்தார்.
சரியென தலையாட்டியவன் ப்ருத்வியை அவன் அறையில் படுக்க வைத்துவிட்டு, உணவுண்டு பண்ணை வீட்டிற்குக் கிளம்பினான்.
ப்ருத்வி தன்னை பார்க்கவில்லை என்ற கோபம் இருந்தாலும் வந்ததும் தன்னை பற்றி விசாரித்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டதில் சற்றே கோபம் குறைந்தது பரமேஸ்வரர்க்கு.
ப்ருத்வியின் தாத்தா ராஜேந்திரன் அவரின் அண்ணன் ராஜகணபதி இவர்களை பின்பற்றியே வளர்த்தவன் ப்ருத்வி. ராஜேந்திரருக்கு நாட்டுப்பற்று அதிகம் அதனாலே நாட்டுக்குச் சேவை செய்கிறேன் என்று மிலிட்டரியில் சேர்ந்திருந்தார். ராஜகணபதி பெரும் பணத்தோடும், மரியாதை, புகழோடும் அனைத்துவித போதைகளையும் தன்னுள் அடிமை படுத்திக் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தார். அதே நேரம் தொழிலிலும் விவேகமுடன் இருப்பார்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் தந்தையை விட பெரியப்பா ராஜகணபதியையே பார்த்து வளர்த்தார் பரமேஸ்வரர். சரி எது? தவறு எது? என பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் வயதில் பரமேஸ்வரருக்கு அதெல்லாம் பிடிக்காமல் போக, குடிப்பழக்கத்தை முற்றியிலும் வெறுத்தார். ராஜகணபதிக்கு இரு பெண்பிள்ளைகள் அவர்களுக்கு சிறுவயதிலே திருமணமும் முடித்து தன் கடமைகளை முடித்துவிட்டார்.
ராஜேந்திரனின் பணிக்காலம் முடிந்து ஓய்வோடு வீட்டில் அமர்ந்து விட, ராஜகணபதியும் தன் ஆட்டங்களை நிறுத்திவிட்டுருந்தார். அப்போது தான் ப்ருத்விக்கு ஐந்து வயது. இரு தாத்தாக்களும் ப்ருத்வியை மாறி மாறி தோளில் போட்டு வளர்த்தனர். அவன் வயதிற்கேற்ப ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தனர். ராஜகணபதி ஆற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்தால், ராஜேந்திரன் களத்தில் சிலம்பம் கற்றுக் கொடுப்பார்.
ராஜேந்திரனின் வீரமும் ராஜகணபதியின் விவேகமும் ப்ருத்வியின் ஜீன்களுக்கு பரிமாற்றப்பட்டிருந்தது. அதனாலே ஆரம்ப காலத்திலிருந்தே அவனுக்கு பரமேஸ்வரோடு பெரிதாக ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. அவர் ஒன்றை சொன்னால் இரு தாத்தாக்களின் கலப்பாகிய ப்ருத்வி வேறொன்றை செய்து வைய்ப்பான்.
இதில் மாதவனை வேறு வளர்ப்புப் பிள்ளையை போல் தன்னுடனே வைத்துக் கொண்டார் பரமேஸ்வரர். தன் பிள்ளை என்னவோ அவர் நினைத்தபடி வளரவில்லை ஆனால் மாதவன் அவரின் பிம்பமாகவே வளர்த்திருந்தான். நடை, உடை, பேச்சு என அனைத்திலும் அவரையே பின்பற்ற ஆரம்பித்தான். அவர் மேல் பெரும் மதிப்பும் நன்றியுணர்வும் கொண்டிருந்தான். அவர் நிழலில் வளர்ந்து அவர் நிழலாகவே மாறியிருந்தான்.
தன்னைவிட தன் தந்தை மாதவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் தோன்றினாலும் அவனால் மாதவனை வெறுக்கவோ விலக்கவோ முடியவில்லை. என்னவோ மாதவனிடம் ஒரு வசீகரம், மாதவனை பிடித்திருந்தது ப்ருத்விக்கு. பள்ளியில் ப்ருத்விக்கென்று ஒரு பெரிய நட்பு வட்டமே உண்டு, அதில் இளங்கோ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். இந்த நட்புக்குள் மாதவன் கலப்பதில்லை ஆனால் ப்ருத்வியை கண்காணிப்பதுண்டு.
ப்ருத்வி எது கேட்டாலும் மறுக்காமல் செய்பவன் அதை பரமேஸ்வரரிடமும் சென்று சொல்லிவிடுவான். அப்படி தான் ப்ருத்வி கல்லூரி விடுமுறையில் வந்திருந்த போது தோப்பில் வேலையாட்களிடம் கூறி கள்ளிறக்கி தருமாறுக் கேட்டான். அதை செய்து கொடுத்துவிட்டு அப்படியே பரமேஸ்வரரிடமும் சென்று உரைத்து விட்டான் மாதவன்.
மகனின் செயல் சுத்தமாக அவருக்கு பிடிக்கவில்லை. ப்ருத்வி விடுமுறைக்கு வரும் பொழுதுகள் எல்லாம் தனது கட்சி அலுவலகம் அழைத்துச் சென்று கட்சியின் முக்கியஸ்தர்களை அறிமுகப்படுத்த முயற்சித்தார் ஆனால் அவனோ நழுவி ஓடியிருந்தான். படிப்பு முடியவும் இறுதியில் வந்து போலீஸாவது தான் கனவு எனக் கூறி நிற்க, தந்தைக்கும் மகனுக்கும் பெரும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
எதர்க்குமில்லாமல் சிலமாதங்கள் படிப்பு முடித்ததும் ஊரில் முறைப்பெண்களிடம் வம்பு பேசிக்கொண்டும் நண்பர்களோடும் சுற்றிக் கொண்டுமிருக்க, மீண்டும் அவன் செயல்களில் கோபம் கொண்ட பரமேஸ்வரர் அவன் முடிவை ஏற்று பயிற்சி வகுப்பு சொல்லுமாறு டெல்லி அனுப்பி வைத்துவிட்டார். அவருக்கு தன் பெரியாப்பாவை போல் மகனும் ஆகிவிடுவானோ என்று சிறு பயம்.
இதில் இலக்கியாவிற்கும் ப்ருத்விக்கும் இடையில் எப்போது காதல் அரும்பி மலர்ந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத கதை. ஏனெனில் ப்ருத்வி ஊரில் இருப்பது வெகு குறைவான நாட்களே!
மறுநாள் காலையில் வெகு தாமதமாகவே விழித்தெழுந்தான் ப்ருத்வி. இரவு நடந்த விவாதங்கள் எதுவும் நினைவில்லை. கீழே வந்தவன் பேப்பர் பார்த்தவாறு வெளி வாசலில் அமர்ந்தான். அன்னை தரும் காபிக்கா காத்திருந்தும் வந்து சேரவில்லை. சோம்பல் முறித்தவாறு உள்ளே சென்று கண்களாலே யசோதாவை தேடினான்.
மாதவன் உள்ளே வர, “டேய் மாதவா,நேத்து ரொம்ப கலாட்டா பண்ணிட்டேனா?” என்றான்.
இல்லையில்லை வழக்கத்தைவிட கொஞ்சம் கம்மி தான்டா ராசா!” என்றான்.
மாதவனின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து வெளி வந்த யசோதா அவனை சாப்பிட அழைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டார். மாதவன் உணவுண்ண அமர, அவன் அருகே அமர்ந்த ப்ருத்வி, “அம்மா எனக்கொரு காபி” என்றான். அவரோ மாதவனுக்கு மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்தார்.
கணவரை சொல்லவும் மனைவிக்கு கோபம் போல எண்ணிக் கொண்டவன், “அம்மா..” என அழுத்தி அழைத்தான். “காபியில்ல ஒன்னுமில்ல போடா” என்றார்.
ஊருல இருந்து வந்த பிள்ளைக்கு விதவிதமா சமைச்சிப் போடாம போடன்னு சொல்லுறியா இருக்கட்டும் கவனிச்சிக்கிடுறேன்”
என்னடா பண்ணுவே?”
கந்துவட்டி கேசுல உன் ஆத்துக்காரரை அலேக்காத் தூக்கி உள்ள போடுறேன்”
சமையலறையிலிருந்து ஒரு வெள்ளி டம்ளர் பறந்து வந்து விழுந்தது. அதற்கு மேலும் அவனை பேசவிடாது உணவுண்டு முடித்திருந்த மாதவன் வெளியே இழுத்துச் சென்றான். வாசலில் பரமேஸ்வரரின் அன்னை நாகரத்தினம் அமர்ந்து வெற்றிலையை மென்று கொண்டிருந்தார்.
கடகடவென படிகளில் இறங்கி பைக்கில் ஸ்டைல்லாக அமர்ந்த ப்ருத்வியை இமைக்காது ரசித்தவர், “மாதவா என் பேரனை பார்த்தியா எப்படி அவன் தாத்தா எம்.ஜி.ஆர்ராட்டம் இருந்தாரோ அதே மாதிரியே இவனும் இருக்கான்ல?” எனக் கேட்டார்.
ஆனால் பண்ணுறது எல்லாம் நம்பியார் வேலை நினைத்துக் கொண்ட மாதவன், “என்ன பாட்டி உங்களுக்கு புது கண்ணாடி மாத்தணுமா? என்றான். அவன் கேள்வி அவருக்கு புரியவில்லை.
நம்பியார் ஸ்டைலில் பைக் கண்ணாடியை பார்த்து கைகளை பிசைந்து கொண்ட ப்ருத்வி, “தாத்தா மாதிரின்னு சொன்னது சரி ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரியா…ச்சேசே, நீ ஏதோ தப்பு பண்ணிருக்க ரத்தினம்” என்றான்.
என்னடா சொன்னா கிறுக்குப்பயலே?” என்றவர் வெற்றிலை இடிக்கும் சிறிய இரும்பு உரலைத் தூக்க அவனோ மென்சிரிப்போடு கேட்டை தாண்டிச் சென்றிருந்தான்.
பேருந்து நிறுத்தத்திற்கு அருகே இருக்கும் சிறு டீக்கடை முன் வண்டியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தான் ப்ருத்வி. மாதவன் டீக்கடை முருகனிடம் வட்டி பணம் வசூலித்து வாங்கி வந்து கொண்டிருந்தான்.
டேய் மாதவா, அவ வேலு மாமா மவ தானே! என்னடா இம்பூட்டு வளர்ந்துட்டா? போனதடவை வந்த போது ஸ்கூல் யூனிபார்ம்ல பார்த்தேன். இப்போ பாரு கலர்கலரா போட்டுக்கிட்டு காலேஜ் போறபோல இருக்கே?” என பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் பெண்ணை குறிப்பிட்டு கூறிக்கொண்டு இருக்க மாதவன் பார்வை கூட அந்த புறம் திரும்பவில்லை.
எங்க அப்பன் கூட சேர்த்து நீயும் புத்தராகிடாதலே? வாழ்க்கையில கொஞ்சம் ரசனை இருக்கணும் அதுவும் பொண்ணுகளை கொஞ்சமாவது ரசிக்கத் தெரிஞ்சிருக்கணும். வாழ்க்கையை திருப்தியா வாழ்ந்து முடிச்சோம்க்குற நினைப்பு நமக்கு கடைசில வரணும்லே மாதவா”
அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், “சரி சரி, அம்பாசமுத்திரத்துக்கு வசூலுக்கு போறேன் நீ வரியா? வீட்டுக்குப் போறியா?” என்றான்.
எங்க அம்மா டீ கூடக் கொடுக்க மாட்டிக்காங்க அப்பறம் எப்படி சாப்பாடு போடுவாங்க? டவுனுக்கே போகலே சேகரு பேக்கிரிக்குப் போகலாம்” என்றவாறு திரும்பினான்.
காலை எட்டு முப்பது மணி பேருந்து வந்து திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிதே நகர்ந்திருக்க இலக்கியா மூச்சு வாங்க ஓடிவந்தாள். பேருந்து ஒரு நொடி நின்று அவளை ஏற்றிக் கொண்டு கிளம்ப, மறு நொடி ப்ருத்வியும் ஓடிச் சென்று ஏறினான்.
படியில் தொங்கியவாறு மாதவனை பார்த்து, “மாதவா வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுலே” என கத்திவிட்டுச் சென்றான்.
பஸ் நிற்கும் போது பார்த்துக் கிட்டே தானே இருந்தான் அப்பறம் எதுக்கு புல்லட்டை விட்டுட்டு ஓடி போய் ஏறுனான்? அதுவும் அந்தப் புள்ளை போனதும் இவனும் பின்னாலையே போறானே! ஏதோ சரியில்லை என எண்ணிக் கொண்டான் மாதவன்.