Advertisement

உன் நினைவு – 18

உன் கைகள் கோர்த்து கொண்டு

உலகம் சுற்ற ஆசை இல்லை…

இந்த ஊரை சுற்றினாலே போதும்

உன்னவள் என்ற உரிமையோடு…

“ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கீங்க ?? ” என்று கேட்ட படி வந்தது வேறு யாரும் இல்லை மல்லிகா தான்..

ஏற்கனவே அவன் சரி கடுப்பில் இருந்தான்.. இதில் மல்லிகாவை கண்டதும் இன்னும் அவன் எரிச்சல் கூடியது.. ஆனால் மல்லிகாவோ அதை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை… அவரிடமும் ஒன்று தெரியாதது போல..  “ வீட்டில் யாரும் இல்லையா அத்தை ? ”  என்று கேட்டான் வீட்டை ஒரு முறை பார்வையால் அலசியபடி..

மல்லிகாவும் இதை தான் எதிர்பார்த்தவர் போல் “ இல்லை தம்பி உங்க பாட்டி, அப்பா அம்மா எல்லா வெளிய போயிருக்காங்க. ராமும் சிவாவும் தேனி வரைக்கும் போயிருக்காங்க  “ என்றார் வேண்டுமென்றே வசுமதியை பற்றி கூறாமல்..

 “ ம்ம்ம் சரி அத்தை…” என்று யோசித்தவன் “ எங்கே அத்தை பொன்மலரை கூட காணவில்லை “ என்றான் சிறிது தயக்கமாக..

இந்த கேள்வியை தான் இவன் கேட்க வேண்டும் என்று இத்தனை நேரம் காத்திருந்ததே “ அதுவா தம்பி.. நம்ம வசுமதியும் மலரும் வெளிய போயிருக்காங்க “ என்றார் சாதரணமாக..

 “ என்ன வெளிய போயிருக்காங்களா ?? ” என்றான் சற்று குழப்பமாக ..

 “ அப்படி வா வழிக்கு “ என்று மனதில் நகைத்தவாறே

“ அதை ஏன் தம்பி கேட்கறிங்க மலர் கூட சொன்னா,   வீட்டில் யாருமில்லை, விளக்கு வைக்கிற நேரம் வேற,  இந்நேரம் வெளிய போனா வீட்டில் யாருக்கும் பிடிக்காது அவ்வளோ ஏன் அத்தானுக்கு சுத்தமா பிடிக்காது வேண்டாம் அப்படி என்று.  ஆனால்  வசுமதி கேட்காமல்  வெளிய கூட்டி போயிட்டா  “ என்று அத்தானில் சிறிது அழுத்தம் தந்து கூறினார்..

கதிரவனுக்கோ அங்கே மனதில் கோவமும் எரிச்சலும் கூடி கொண்டே இருந்தது.. மல்லிகாவிற்கு எதுவும் பதில் கூறாமல் அமர்ந்து விட்டான். தன் கைகளை திருப்பி மணியை பார்த்தான்..

 “ இன்னும் இவளுக்கு அப்படி என்ன வேலை.. வெளிய வேண்டும் என்றால்  என்னிடம்  சொல்ல வேண்டியது தானே.. இல்லை சிவாவோடு சேர்ந்து செல்ல வேண்டியது தானே.. ஏன் இப்படி செய்கிறாள்.. இவர்களோடு பேசாதே இவர்கள் சொல்வதை கேட்காதே என்று எத்தனை தடவை சொல்லிவிட்டேன் “ என்று மனதிற்குள்ளே புலம்பினான்..

மீண்டும் வசுமதியின் எண்ணுக்கு அழைத்தான், பதில் இல்லை.. மல்லிகாவிடம் திரும்பி பொன்மலரின் எண்ணுக்கு அழைக்குமாறு கூறினான்.  

 “ அட நீங்க வேறு தம்பி போன் கையில் இருந்தா யாராவது போன் செயத்துட்டே இருப்பாங்க. அது இதுன்னு கேள்வி கேட்பாங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது அப்பிடின்னு வசுமதியும் போனை வச்சிட்டு, மலரு போனையும் வாங்கி அது ரூமில வச்சு பூட்டிட்டு இழுத்துட்டு போயிடுச்சு.. ” என்றார் சோகமாக கூருவது போல..

அமைதியாய் அமர்ந்து இருந்தான் கதிரவன்.. ஆனால் மனதிற்குள் கோவம் எரிமலையாய் வெடித்து சிதறி கொண்டு இருந்தது.. “ இப்படி இந்த அத்தை எல்லாம் குறை கூறும் படி நடந்து விட்டாளே.  அப்படி என்ன இவளுக்கு வெளியே வேலை… வரட்டும் “ என்று கருவிய படி அமர்ந்து இருந்தான்.. அவனது அமைதியே மல்லிகாவிற்கு திருப்பதியை தந்தது.. நடந்து எல்லாம் இது தான்..

வசுமதி அழகு மற்றும் மீனாட்சியை பற்றி யோசித்தபடி தன் அறையில் அமர்ந்து இருந்தாள்.. “ எப்படியாவது அழகு அண்ணன் கிட்ட சம்மதம் வாங்கவேண்டுமே..  ஹ்ம்ம் என்ன பண்ணலாம் “ என்று சிந்தித்து கொண்டு இருந்தாள்..

“ வசுமதி வசுமதி “ என்று அழைத்தவரே பொன்மலர் அங்கு வந்தாள்.. “ இவள் எதற்கு இங்கு வருகிறாள் “ என்பது போல அவளை பார்த்தால் வசுமதி..

“என்ன வசுமதி இங்கு வந்து தனியா உட்கார்ந்து இருக்க?? “ என்றபடி அவளிடம் வந்து அமர்ந்தாள் பொன்மலர்..

“ வேலை எதுவும் இல்லை மலர் அதான் இப்படி சும்மா உட்கார்ந்து இருக்கேன்..“

“ வீட்டிலேயே  இருந்தா அப்படி தான் இருக்கும்.. எங்கையாவது வெளிய போயிட்டு வந்தா நல்ல இருக்கும் “ என்று ஆரம்பித்தாள் பொன்மலர்..

 “ வெளிய எங்கே போவது ?? வீட்டில் யாரும் இல்லை.. அதுவும் இல்லாமல் இங்க எனக்கு என்ன தெரியும்.. பரவாயில்லை விடு மலரு “

“ அடடா என்ன வசுமதி இப்படி சொல்லிட்ட.. நான் இருக்கிறேன்.. என்னிடம்  சொன்னால் நான் உன்னை  வெளிய கூட்டி போக மாட்டேனா ?? சரி கிளம்பு வா போகலாம்… “

“ அட அதெல்லாம் வேண்டாம் மலரு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் வந்திடுவாங்க பரவயில்லை “

“ அது சரி நான் சொன்னா கேட்பியா ?? போ எப்பவுமே என்னை அன்னியமா தான நினைக்கிற.  நான் தான் உன்கிட்ட பாசமாய் இருக்கேன்.. ஆனால்  உனக்கு கொஞ்சம் கூட பாசமே இல்லை  “ என்று அழாத குறையாக பேசினாள்.. வசுமதிக்கு ஏற்கனவே மனம் சோர்வாக இருந்தது.. இதில் இவள் வேறு வந்து முராரி பாடவும் இன்னும் எப்படியோ இருந்தது..

“ இப்ப என்ன உன்கூட நான் வெளிய வரணும் அவ்வளோதான.. சரி கீழ போயி இரு நான் ரெடி ஆகிட்டு வரேன் “ என்றாள் வசுமதி தன் போனை கையில் எடுத்தவாறே….

“ இனி என்ன வசுமதி நீ ரெடி ஆக போற ?? இப்பயே நீ அழகா தான் இருக்க. அதனால்  போதும் வா இப்படி கிளம்பலாம் “ என்று அவளை பிடித்து இழுத்தாள் பொன்மலர்..

“ அடடா மலரு.. சரி சரி இப்படியே வர்றேன்.. ஆனால் பொறு ஒரு வார்த்தை அத்தைகிட்ட சொல்லிவிட்டு வருகிறேன் பொறு… “

“ வசுமதி அவர்கள் ஏற்கனவே வேலையாய் போயிருக்காங்க, இதில் நீ வேறு எதற்கு போன் செய்து பேசிட்டு இருக்க.. அப்படி அவர்கள் வந்துட்டா அம்மா சொல்லிடுவாங்க  நீ கிளம்பு “ என்று அவளை அவசர படுத்தினாள் பொன்மலர்..

“ ஏன் இப்படி இவள் என்னை போட்டு படுத்துகிறாள் “ என்று எண்ணியவள் “ சரி அத்தானுக்கு ஒரு மெசேஜ் செய்து விட்டு கிளம்புவோம் “ என்று மீண்டும் போனை எடுத்தாள்..

ஆனால் இதை எதிர்பார்த்து காத்து இருந்த மலரோ “ இன்னும் என்ன வசுமதி போன வச்சு வேடிக்கை பார்த்துகிட்டு  இருக்க?? வா வா நேரம் ஆச்சு .. கிளம்பு கிளம்பு … “ என்று கூறி அவளது போனை பிடுங்கி வைத்து விட்டு அவளையும் இழுத்துக்கொண்டு சென்று விட்டாள்..

வசுமதிக்கு மனம் ஏனோ குழம்பி தவித்தது “ அத்தையிடம் தான் சொல்லவில்லை.. கதிரவனிடமாவது சொல்ல வேண்டும் இல்லையென்றால் மிகவும் கோவப்படுவான்..  அவன் வீட்டிற்கு வருவதற்குள் நாம் சென்று விட வேண்டும் ” என்று எண்ணினாள்..

ஆனால் பொன்மலரோ அவளது எண்ணத்தை சிறிதும் செயல் படுத்த விட வில்லை.. வசுமதியோடு சிரிக்க சிரிக்க பேசினாள்.. நேரம் ஆக ஆக வசுமதிக்கும் மனம் சற்று லேசானது போல இருந்தது.. முதலில் அங்கு இருந்த அம்மன் கோவிலுக்கு சென்றனர்.. அங்கு பூஜை நடந்து கொண்டு இருந்தது..

பொன்மலர் இருந்து பூஜை முடிந்த பின் செல்லலாம் என்று கூறினாள்.. ஆனாலும் வசுமதி “ இல்லை மலரு நேரம் ஆகுது.. அங்கே எல்லாரும் வந்து இருப்பாங்க.. நாம வேறு சொல்லாம வந்துட்டோம்.. கிளம்பலாம் “ என்று கூறினாள்..

ஆனால் இதை எல்லாம் கேட்டால் அவள் பொன்மலர் அல்லவே.. “ என்ன வசுமதி நீ இப்படி இருக்க?? கோவிலுக்கு வந்து இருக்கோம்.. பூஜை வேறு நடந்திட்டு இருக்கு.. இப்படி பாதியில கிளம்பலாம் என்று சொன்னால் என்ன அர்த்தம்.. நீ சும்மா இரு.. சாமி கும்பிடு “ என்று கூறி கண்ணை மூடி அமர்ந்து விட்டாள்..

வசுமதிக்கோ நேரம் ஆக ஆக இருப்பு கொள்ளவில்லை “ போனாவது எடுத்து வந்து இருக்கலாம்.. ஹ்ம்ம் அத்தை இல்லை அத்தானுக்கு ஒரு போன் செய்து சொல்லி இருக்கலாம்” என்று எண்ணியவள்

 “ ஆமா இனி இதை பற்றி நினைத்து என்ன செய்ய ?? சாமியாவது கும்பிடலாம் “ என்று அவளும் கண்ணை மூடி அமர்ந்து விட்டாள்..

ஒரு வழியாக பூஜை எல்லாம் முடிந்து ஆரத்தி பார்த்து வீட்டிற்கு பொன்மலரை கிளப்பி வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.. வசுமதியும் பொன்மலரும் எதுவோ பேசி சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தனர்.. அங்கே கதிரவன் ஹாலில் அமைதியாக அமர்ந்து இருப்பது தெரிந்தது..

வசுமதி “ ஆக வந்துவிட்டான் போலவே.. நான் வேறு சொல்லாமல் பொய் சுற்றிவிட்டு  வருகிறேன்.  கோவமாக இருக்கான் போலவே.. போச்சு இனி சாமி ஆடுவானே “ என்று எண்ணியபடி வீட்டிற்குள் வந்தாள்..

அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன் இவர்களை பார்த்ததும் எதுவும் பேசாமல் எழுந்து மேலே தன் அறைக்கு சென்று விட்டான்..

“ நான் எப்படி தவித்து போய், துடித்து போய் பதறி அடித்து வந்தால்  இவ…  இவள் இஷ்டத்திற்கு வெளியே போய்  சுற்றிவிட்டு ஆடி அசைந்து சிரிச்சுகிட்டே வரா.. திமிரு திமிரு.. இருக்கட்டும் வரட்டும் என்னிடம்  இருக்கு அவளுக்கு “ என்று குமுறி கொண்டு இருந்தான்..

 வசுமதியோ “ என்ன இவன் நான் வருவதை பார்த்தும் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்று விட்டான்.. அய்யோ போச்சு.. இனி அத்தானை வேறு சமாதானம் பண்ணனுமே..  “ என்று புலம்பினாள்..

 “ சரி மேல் போய் கொஞ்ச நேரம் கதிர் கிட்ட பேசிட்டு அப்படியே அவனை சமாதானம் செஞ்சிட்டு வரலாம் “ என்று எண்ணியவள் மேலே ஏற போனாள்…

“ வசும்மா “ என்று காமாட்சி அழைக்கும் சத்தம் கேட்டு அப்படியே திரும்பி விட்டாள்..

ஹ்ம்ம் என்று ஒரு பெரு மூச்சு விட்டு “ இனி எங்க போயி அத்தானை பார்ப்பது  நைட் தான் பேச முடியும் “ என்று எண்ணியவாறே “ இதோ வரேன் அத்தை “ என்று காமாட்சியிடம் சென்று விட்டாள்….

“ என்ன வசும்மா இந்த அழகு பையன் வீட்டிற்கு வந்துவிட்டனா ? ”  என்று கேட்டார் சிவபாண்டியன்..

“ இன்னும் இல்லை மாமா.. அத்தான் மட்டும் தான் வந்து இருகாங்க.. ” என்றாள் வசுமதி..

 “ ஓ!! சரி மா .. ஜோசியர் கிட்ட கேட்டு நாள் எல்லாம் குறிச்சாச்சு.. அவர்கள் வீட்டிலும் சரி சொல்லிட்டாங்க.. அந்த பொண்ணு மீனாட்சியை பார்த்தா  நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது.. “ என்றார் சிவபாண்டியன்..

 “ சரிங்க மாமா.. அழகு அண்ணன் வரவும் தான் இனி  பேசணும்.. “

“ சரி மா.. மேல போய் கதிரவனை  நான் வர சொன்னேன் என்று  சொல் டா “ என்று கூறி தன் அறைக்கு சென்று விட்டார்..

“ ஐயோ !! நானே தான் போகவேண்டுமா.. மாமா இங்க இருந்து கதிரவா என்று  கூப்பிட்டால் அத்தானுக்கு கேட்க்காத என்ன ?? ” என்று புலம்பியபடி மெல்ல படி ஏறினாள்..

“ என்ன வசும்மா இன்னும் என்ன மெதுவா ஏறிகிட்டு இருக்க?? போ சீக்கிரம் அத்தானை கூப்பிட்டு வா “ என்று அவசர படுத்தினார் காமாட்சி..

“ இதோ போகிறேன் அத்தை “ என்று கூறியபடி வேகமா ஏறினாள்.. “ ஆண்டவா இவன் வேற உர்ன்னு இருப்பானே “ என்று எண்ணியவாறு மெல்ல கதிரவன் அறையின் உள்ளே எட்டி பார்த்தாள்..

கதிரவன் தன் மடி கணினியில் எதுவோ செய்து கொண்டு இருந்தான்.. இதுவே வேறு சமயம் என்றாள் வேகமாக உள்ளே சென்று “ அத்தான் “ என்று அவன் காது அருகே கத்துவாள்.. ஆனால் இன்றோ வாயில் வார்த்தையே வரவில்லை பின்னே எங்கே கத்துவது…

மெல்ல கதவை தட்டி நின்றாள்… யார் வந்து இருப்பது என்பது போல பார்த்து விட்டு.. வசுமதி என்று தெரியவும் எதுவும் பேசாமல் தன் கணினியின் பக்கம் மீண்டும் பார்வையை திருப்பி விட்டான்.. மீண்டும் கதவை தட்டினாள்.. அவன் மீண்டும் அது பார்த்துவிட்டு திரும்பி விட்டான்… 

அவன் செய்கையில் சற்று கடுப்பாகினாள் வசுமதி “ வேண்டாம் அத்தான் ஏதோ நான் சொல்லாம போனது தப்புன்னு நான் சும்மா அமைதியா இருக்கேன்.. நீங்க மிகவும் பண்ணீங்க பின்ன எனக்குள்ளே தூங்கிட்டு இருக்க மிருகத்தை பார்க்க வேண்டியது வரும் ” என்று அவளாக கூறிக்கொண்டாள்..

அவன் என்னவென்று கேட்பான் என்று இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தாள்.. அவனோ அவள் பக்கம் பார்க்க கூட இல்லை.. “ இது வேலைக்கு ஆகாது “ என்று நினைத்து அவன் அருகே சென்று “ அத்தான் “ என்று மெல்ல அழைத்தாள்.. அவள் அழைத்தது அவளுக்கே கூட கேட்க வில்லை இதில் எங்கள் அவனுக்கு கேட்க..

கதிரவன் வசுமதியை சட்டை செய்யவில்லை.. இவளின் பொறுமையும் நீரில் கரைத்த பெருங்காயம் போல கரைந்து கொண்டு இருந்தது.. இறுதியில் பொறுக்க முடியாமல் “ அத்தான் “ என்று அவன் காதருகே கத்திவிட்டாள்..

அவ்வளோதான்.. அது மட்டும் தான் அவளுக்கு தெரியும்.. அதான் பின் எப்பொழுது அவன் கைபிடியில் வந்தாள்.. அவன் எப்பொழுது அவளை பிடித்து சுவரில் சாய்த்து நிறுத்தினான் என்று அவள் சிறிதும் அறியவில்லை.. எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது.. திகைத்து போய் அவனை பார்த்து நின்று விட்டாள்.. ஆனால் அவனோ அவளது இரு புறமும் கைகள் ஊண்டி அவள் அசையாதவாறு முறைத்தபடி நின்று இருந்தான்…

 “ என்…. என்ன … அத்தான்.. இப் .. இப்படி …. ” என்று திக்கி திணறி கேட்டாள்..

அதற்கும் அவனிடம் பதில் இல்லை..

“ அத்தான் உங்களை மாமா கீழ வர சொன்னாங்க இப்பவே “ என்றாள் சற்று தைரியம் வரவழைத்து.. ஆனால் அவனோ அதற்கு பதில் கூறாமல்

“ எங்க போயிட்டு வந்த ? ” என்றான் கடினமாக..

“ கோ .. கோவிலுக்கு.. மலரு கூப்பிட்டா “ என்றாள் நிஜமாகவே பயந்த குரலில்..

“ நான் உன்னிடம் என்ன சொல்லி இருக்கிறேன் ?? ” அவள் இந்த கேள்விக்கு எதுவும் பதில் கூறாமல் அவனையே பார்த்தாள்.. அவனுக்கோ பொறுமை ஏற்கனவே  இல்லை…

“ ஏய் பதில் சொல்லு டி “ கர்ஜித்தான்..

“ இல்லை அத்தான்…. நான் வரவில்லை என்று தான் சொன்னேன்.. ஆனா  “ என்று அவள் கூறி முடிக்கும் முன்னே..

“ என்ன டி.. ஆனா ஆவன்னா என்று.. என்ன பாடம் நடத்துகிறாயா?? நான் சொல்வதை  கேட்கவே கூடாது என்று முடிவில் இருக்கியா ??“ என்று அவளை பிடித்து உலுக்கினான்..

 “ அத்தான் ப்ளீஸ்.. வலிக்கிறது “ என்றாள் கண்ணில் நீருடன்.. அவள் வலி நிறைந்த முகம் அவனது மனதை சற்று இலக்கியத்தோ என்னவோ தன் கைகளை எடுத்துவிட்டான்..

“ அத்தான் ப்ளீஸ் அத்தான்.. கோவம் வேண்டாம். நான் சொல்ல சொல்ல அவள் கேட்கவில்லை. இழுத்துகொண்டு போயிவிட்டாள் அத்தான்.. ப்ளீஸ் .. நான் செய்தது தப்பு தான் அத்தான் சாரி “ என்றாள் கம்மி போன குரலில்.. கதிரவன் முறைத்தபடி பார்த்து நின்று இருந்தான்.. “ ப்ளீஸ் அத்தான் சாரி “ என்றாள் அவன் கைகளை பிடித்து..

“ இங்க பார் நல்ல கேட்டுக்கொள் இனி ஒருதடவை இப்படி செய்தாய் நான் என்ன செய்வே என்று எனக்கே தெரியாது.. என்ன புரிகிறதா ?? ”

அவளும் பூம் பூம் மாடு தலை ஆட்டுவது போல தலையை ஆட்டினாள்.. “ என்ன மண்டையை ஆட்டுகிறாய் ?? வாயை திறந்து  பதில் சொல்ல மாட்டியா ?? ” என்று அதட்டினான்..

“ சரியான ரௌடி “ என்று எண்ணியவாறே “ இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் அத்தான்.. சாரி ” என்றாள் கம்மி போன குரலில்..

ஆனால் அவனோ வேகமாக அவளை அணைத்தபடி “ துடித்து போய்விட்டேன் மதி.. நீ போன் எடுக்காமல் போகவும் உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு மிகவும் பயந்து போய்விட்டேன் டி… நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் டி தெரியும்.. எப்படி வந்தேன் தெரியுமா வீட்டிற்கு. ஆனால்  நீ நன்றாய் சுற்றிவிட்டு வர ..” என்று அன்பாக பேச ஆரம்பித்தவன் மீண்டும் கோவமாக முடித்தான்.. அவன் ஒவ்வொரு வார்த்தை கூற கூற அவனது அணைப்பு இறுகியது..

அவன் அன்பாக பேசவும் “ யப்பா சமாதானம் ஆகிவிட்டான் “ என்று எண்ணியவள் மீண்டும் அவனது குரலில் கோவத்தை உணரவும் “ அட ராமா இன்னுமிவன் சரி ஆகவில்லையா ?? சாமி மலை இறங்கிடு “ என்று மனதில் கூறி கொண்டாள்..

“ இனி இப்படி செய்யாதே “ என்று கூறி அவளை விடுவித்தான்..

“ யப்பாடி விட்டுவிட்டான்…  ” என்று மூச்சு விட்டவள்…

 “ ஏன் சொல்லிவிட்டு போகவில்லை ?? “ என்ற கேள்வியில் மீண்டும் திகைத்தாள்..      

“ இன்னும் இவன் முடிக்கவில்லையா ?? அட கடவுளே.. தெரியாமல் ஒரு நாள் இப்படி பண்ணிட்டேன் அதற்கு இப்படியா நிற்க வைத்து கேள்வி கேட்பது??   கடவுளே என் அத்தான் கோவத்தில் இருந்து என்னை காப்பாற்று ” என்று மனதில் வேண்டிக்கொண்டு நின்று இருந்தாள்..

“ உன்னை தான் டி கேட்கிறேன் பதில் சொல்லு. ஏன் சொல்லிவிட்டு போகவில்லை ??” என்றான் அழுத்தமாக.. அவனது குரலே அவளுக்கு உணர்த்தியது பதில் கூறாமல் விடமாட்டான் என்று..

 “ அது அத்தான்.. அது வந்து .. நான் சொல்ல தான் நினைத்தேன்” என்று மென்று விழுங்கினாள்..

“ சரி நினைத்தாய் பின்ன ஏன் சொல்லவில்லை  ?? ” என்றான் அவளது கண்களை பார்த்தபடி..

“ திமிர் திமிர் .. என்ன இப்படி நிற்க வைத்து கேள்வி கேக்குறீங்களா அத்தான்.. ஒரு நாள் என்னிடம் மாட்டாமையா இருக்க போறீங்க ?? ” என்று எண்ணிக்கொண்டே “ இல்லை அத்தான் உங்களிடம் சொல்லாமல் போக கூடாது என்று எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் பொன்மலர் எதற்கும் இடம் குடுக்காமல் என்னை இழுத்துட்டு போய்விட்டாள்.. நான் என்ன செய்ய?? ” என்றாள் பாவமாக முகத்தை வைத்துகொண்டு..

“ அட அட அட… அப்படியே ஒன்றும் தெரியாது.. ஒண்ணுமே தெரியாது.. இப்படி எதுவும் தெரியாத முகத்தை வைத்து என்னிடம் மட்டும் பதிலுக்கு பதில் பேச தெரிகிறதே ?? அதில் கொஞ்சம் மற்றவர்களிடமும் யூஸ் செய்தால் என்னவாம் ?? நல்லா வந்து சேர்ந்த பாரு எனக்கு என்று .. மனுஷன் படுகிற தவிப்பு புரியாமல்.. போ… போய் உன் போன் எடுத்து பார் எத்தனை தடவை நான் கூப்பிட்டு இருக்கே என்று  “ என்று கத்தினான்….

 “ ரொம்பவும் டென்சன் ஆகி வந்து இருப்பான் போல.. நான் பண்ணதும் தப்பு தானே.. ஆனால்  அதற்கு  இப்படியா போட்டு கத்துவது.. சரியான காட்டு மனுஷன் “ என்று முனங்கினாள்..

“ என்ன டி அங்கு  முனுமுனுப்பு.. எதுனாலும் சத்தமா பேசு … ”

 “ ம் சரி அத்தான்.. இனிமேல் இப்படி சொல்லாமல் எங்கயும் போகமாட்டேன் “ என்றாள் நல்ல பிள்ளை போல… அதற்கு எந்த பதிலும் கூறாமல் “ ம்ம் “ என்று மட்டும் கூறியவன் .. மேலே எதுவும் பேசவில்லை..   

“ இவனுக்கு கோவம் போய்விட்டதா இல்லையென்றே தெரியவில்லையே.. ம்ம் எப்படி கண்டு பிடிக்கிறது… “ என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் உறைத்தது தான் ஏன் இங்கு வந்தோம் என்றே.. வேகமாக “ அத்தான் உங்களை மாமா வர சொன்னாங்க அவர்கள் ரூமுக்கு “ என்றாள் படபடவென்று…

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டான்.. “ ஊப்… யப்பா என்ன கோவம் புயலில் மாட்டி தவித்த மாதிரி இருக்க டா சாமி… இதற்கே இப்படி என்றால் இன்னும் லைப் லாங் எப்படி தான் சமாளிக்க போகிறேனோ ?? ஆண்டவா நீ தான் எனக்கு தைரியம் குடுக்கணும் “ என்று வேண்டிய படி தன் அறைக்கு சென்று அவளது போனை எடுத்து பார்த்தாள்..

கிட்ட தட்ட ஒரு இருபது முறைக்கும் மேலாக மிஸ்ட் கால் கதிரவன் எண்ணில்  இருந்து வந்து இருந்தது.. “ ஆஹா !!!! இத்தனை முறை அழைத்து  இருக்கானா ?? அப்ப இவ்வளோ கோவம் வருவது சரி தான்.. ஆனாலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் மாதிரி இருக்கான்.. இருக்கட்டும் கல்யாணம் ஆகட்டும்.. அத்தான் உங்களுக்கு இருக்கு கச்சேரி… ” என்று அவள் எண்ணி கொண்டு இருக்கும் பொழுதே சிவா வந்து விட்டான்

“ என்ன பாசுமதி, அத்தான் கிட்ட நல்ல மண்டகப்படி வாங்கின போல ?? சொல்லு சொல்லு கிலோ கணக்கில் வாங்கினாயா  ?? இல்லை மூடை கணக்கில வாங்கினாயா ?? ” என்றான் சிரித்தபடி..

“ அய்யயோ.. இந்த லூசு காதில் எப்படி விழுந்தது.. யாருக்கும் தெரியாமல்  அசிங்கபட்டோம் என்று நினைத்தால் இவனிடமா மாட்டனும் “ என்று எண்ணியவள்.. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் 

“ ஹி ஹி …. சிவா .. நீ எப்ப டா வந்த ? சரி சாப்பிட்டியா ?? ”

 “ ஹா ஹா ஹா  நான் கேட்டதற்கு முதலில் பதில் சொல்” என்றான் கைகளை கட்டி அவளது முகத்தை பார்த்து.. சிரித்தபடி பேசுகிறான் சுலபமாக அவனை சமாளித்து விடலாம் என்று எண்ணி இருந்தவள் அவன் கைகளை கட்டி அவளது முகத்தை பார்க்கவும் “ அட ராமா இப்பதான் ஒருத்தன் கேள்வி மேல் கேள்வி கேட்டு போயிருக்கான். இப்ப இவனா ??.. வசுமதி எத்தனை பேரை தான் நீ சமாளிப்பது ??? ” என தனக்குள் முனங்கி கொண்டாள்…

ஆனால் சிவாவோ “ ஏன் கா இதெல்லாம் உனக்கு தேவையா ?? இப்படி எல்லாம் பேச்சு வாங்க  உனக்கு எதா அவசியம் இருக்கா ?? ” என்று வருத்தமாக கேட்டான்..

தேனியில் இருந்து வீட்டுக்கு வந்த ராமும் சிவாவும் கீழே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர் அன்னபூரனியுடன் , அப்பொழுது காமாட்சி “ சிவா உன் அத்தானை கூப்பிட வசுமதி போனாள் இன்னும் காணோம்,  போ சாமி போயி கூட்டிட்டு வா ..” என்றார்

“ நல்ல ஆள்  பார்த்து தான் அனுப்பி இருக்கீங்க அத்தை அத்தானை கூப்பிட … எல்லாம் தெரிந்து பண்றீங்களா இல்லையா என்றே தெரியவில்லை 

“ என்று நக்கலடித்தபடி எழுந்தான்.. அதற்கு அன்னபூரணி “ எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ சொன்னதை மட்டும் செய் டா செல்லப்பா “ என்றார் சிரித்தபடி..

இதை கேட்ட ராமும் சிவாவும் “ என்ன தெரியுமா??? என்ன தெரியும் உங்களுக்கு “ என்று அதிர்ந்து கேட்டனர்.. காமாட்சியும் சிரித்தபடி

 “ எங்களுக்கு எது தெரியாது என்று நீங்க எல்லாம் நினைத்துகொண்டு  இருக்கீங்களோ அது எங்களுக்கு முன்னமே தெரியும்.. “

சிவா “ அத்தை நிஜமாவே தான் சொல்றீங்களா ?? “ என்றான் இன்னும் அதிர்ச்சி தீராத குரலில்.. “ அட ஆமா சிவா.. இதில் பொய்  சொல்ல என்ன இருக்கு ?? உங்கள் அப்பா அம்மா கிட்ட கூட பேசிட்டோம்.. ஆனால்  இன்னும் கதிரவன் வசுமதிக்கு மட்டும் தெரியாது.. நாங்களும் சொல்லவில்லை  நீயும் தெரிந்த மாதிரி கட்டாத என்ன “ என்றார் காமாட்சி..

“ ஏன் ஏன் அத்தை.. இதை ஏன் அத்தான் கிட்டயும் அக்கா கிட்டயும் சொல்லவில்லை? ” காமாட்சி

 “ ஹா!! அவர்கள் மட்டும் இன்னும் எங்ககிட்ட எதுவும் சொல்லலைல.. அதான் நாங்களும் எதுவும் சொல்லலை.. ” இப்படி ஒரு பதிலை சிவா சற்றும் எதிர்பார்கவில்லை..

சிவா எதுவும் கூறாமல் “ வீட்டில் தெரியாது என்று லவ் செய்கிற அக்கா அத்தான்.. எல்லாம் தெரிந்தே தெரியாத மாதிரி இருக்கிற குடும்பம்.. நல்லா வருவீங்க எல்லாரும்“ என்று புலம்பியபடி மாடி ஏறினான்..

அப்பொழுதான் கதிரவன் வசுமதியை திட்டி தீர்த்து கொண்டு இருப்பது காதில் கேட்டது.  “ நம் வீட்டில் எத்தனை செல்லமாக வளர்ந்தவள் இங்கே அத்தானிடம் இப்படி பேச்சு வாங்குகிறாள்” என்று ஒரு பாசமான தம்பியாக வருந்தினான்.. அதன் விளைவே அவனை இப்படி ஒரு கேள்வி கேட்க வைத்தது..

தன் தம்பியின் வருத்தம் புரிந்த வசுமதி சிரித்தபடி “ டேய் தம்பி பையா நீ இன்னும் கொஞ்சம் வளரனும்.. அதான் இப்படி எல்லாத்துக்கும் என்னை கேள்வி கேட்கிற.. அத்தான் தான என்னை திட்டுறாங்க.. அத்தான் என்னை திட்டமா வேறு யாருகிட்ட இப்படி உரிமைய பேச முடியும் சொல்லு, எனக்கு வருத்தமே இல்லை சிவா.. நான் செஞ்சதும் தப்பு தான.. அதுனால நீயும் எதுவும் நினைக்காத.. அத்தானை பற்றி உனக்கு தெரியாதா என்ன ? ”

 “ ஹ்ம்ம் இங்கயும் நான் அவுட் தானா ?? ” என்று எண்ணியவன் “ ம்ம் சரி சுமதி வா கீழ போகலாம்“ என்று இருவரும் கீழே இறங்கி வந்தனர்… அங்கே அழகேசனது குரலும் கேட்டது.. ஹாலில் அனைவரும அமர்ந்து இருந்தனர்… வசுமதி கதிரவனை பார்த்தாள் ஆனால் அவனோ அவளை கண்டு கொள்ளவே இல்லை.. இதை கண்ட மல்லிகாவும் மலரும் தங்கள் திட்டம் பழித்து விட்டதை எண்ணி மகிழ்ந்தனர்..

கதிரவன் தான் ஆரம்பித்தான் “ அம்மா நாளைக்கு காலையில் டிபன் சாப்பிட்டதும் எல்லாருமா சேர்ந்து புது தோப்பு வாங்கி இருக்கமே அங்க போகலாம்.. எல்லாம் ரெடி பண்ணிடுங்க சரியா??? ” இதற்கு காமாட்சி பதில் கூறும் முன்னே வசுமதி

“ ஐ !!! தோப்புக்கு போகிறோமா ?? ஜாலி ஜாலி !! “ என்று கூறியபடி அங்கே வந்து அமர்ந்தாள்.. ஒரு முறைப்பை மட்டுமே பதிலாக தந்தான் கதிரவன்..

“ ஹ்ம்ம் அப்படியா கதிரவா ?? நாளைக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுக்க போகலாம் என்று நினைத்தேன், சரி இப்ப என்ன நாளை கழித்து கூட போகலாம்..  நான் எல்லாத்தையும் ரெடி பன்னிட்டு உன்னிடம் சொல்கிறேன்.. நீயோ இல்லை அழகேசனோ வந்து கூட்டிட்டு போங்க “ இது காமாட்சி..

“ ட்ரெஸ்ஸா?? இப்ப என்ன அத்தை விசேஷம்?? வீட்டில் எதுவும் பூஜை கூட இல்லையே ?? ” என்று ஒன்றும் தெரியாதது போல கேட்டாள் வசுமதி.. அதற்கு காமாட்சியோ

“ விசேஷம் தான் வசும்மா.. நம்ம அழகு நிச்சயத்திற்கு நாம எல்லாம் புது துணி கட்ட வேண்டாமா ?? ” என்று சிரித்தபடி அழகேசன் தலையில் இடியை இறக்கினர்..

அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்த அழகேசன் இதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான் பேச்சே வரவில்லை  பின் சுதாரித்து கொண்டு “ அம்மா  என்ன மா சொல்றீங்க ??? என் … எனக்கு நிச்சயமா ?? ”

எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊத்துவது போல கதிரவன் “ மாப்பிள்ள டேய் அழகு  கை குடு டா, ஆல் தி பெஸ்ட் டா அழகு இனி என்ன குடும்பஸ்தன் ஆகிடுவ.. எங்களை எல்லாம் கண்டுக்க மாட்ட “ என்று வாழ்த்து கூறி கிண்டல் செய்தான்..

மேலும் இதை கேட்ட அழகு முறைத்து கொண்டு இருக்கும் பொழுதே வசுமதி தன் பங்கிற்கு “ ஐ!! எனக்கு அண்ணி வர போறாங்க.. சூப்பர் அண்ணா கங்க்ராட்ஸ்.. எனக்கு கண்டிப்பா ட்ரீட் வேண்டும்“ என்று அவளும் கை குலுக்கினால்.. மேலும் ராம் சிவா என அனைவரும் வாழ்த்தவும் குழம்பியே போயி விட்டான்..

அன்னபூரணி தான் அவனது முதுகில் ஒரு தட்டு தட்டி “ என்ன டா பேந்த பேந்த முழித்துக்கொண்டு  நிற்கிற ??? புது மாப்பிளையா லட்சணமா சிரித்த முகமாய் இரு.. பாரு நம்ம கதிரவன் எல்லாம் எப்படி இருக்கான் என்று “ என்று தன் பேரனையும் சேர்த்து வம்பிழுதார்.. இதை கேட்ட வசுமதி மனதிற்குள்

“ ஆமா உன் பேரன் அப்படியே சிரிச்சாலும் வாயில இருக்க முத்து உதிர்ந்திடும் “ என்று எண்ணினாள்…

காமாட்சி “ அடடா எல்லாம் கலாட்டா பண்ணாமல் சும்மா இருங்க… டேய் தம்பி அழகு.. காலையில தான அவர் உன்னிடம்  கேட்டார் நாங்க எது செய்தாலும் உன் நல்லதுக்குதான் சரியா சாமி…. அதனால நீ மனசை போட்டு குழப்பிக்காம இரு என்ன ?? கண்டிப்பா நாங்க பார்த்து இருக்க பொண்ணு உனக்கு பிடிக்கும்.. பொண்ணு எப்படி லட்சணமாய் இருப்பாள் தெரியுமா ?? பாத்ததும் நீயே அசந்துடுவ “

“ ஆக!!! கதிரவன் அப்பா காலையில நம்ம கிட்ட பேசுனதுக்கு இது தான் காரணமா ?? “ என்று மனதிற்குள் எண்ணியபடி “ அது மா … இல்லை ஏன் எனக்கு இப்ப திடீர்னு.. எனக்கு என்ன மா அவசரம்… முதலில் கதிரவனுக்கு பன்னிட்டு கூட “ என்று முடிக்க வில்லை

காமாட்சி “ ஹ்ம்ம் யார் யார் மனசில் என்ன இருக்கும் என்று எனக்கு என்ன தெரியும்.. நீயாவது நாங்க பார்க்கிற பொண்ணை கல்யாணம் செய்வாய் என்று  தான் இப்படி உன்னிடம்  சொல்லாமல் பேசி முடிச்சிட்டோம்…. “ என்றார் அசராமல்…

வசுமதி “ களுக்” என்று சிரித்து விட்டாள் கதிரவனை பார்த்து…. 

 “ அம்மா எதற்கு இப்ப தேவை இல்லாமல் என்னை இழுக்குறாங்க?? இந்த குட்டச்சி வேறு நேரம் காலம் தெரியாமல் சிரிக்கிறாள். இந்த அம்மா எல்லாம் தெரிந்து  பேசுறாங்களா இல்லையா என்றே தெரியலையே … ” என்று யோசனையில் இருந்தான்…

அழகேசனோ வித விதமாக பேசி பார்த்து விட்டான் காமாட்சியிடம்.. எந்த பலனும் இல்லை.. அன்னபூரணியும் காமாட்சியும் அவனை எல்லா வழியிலும் மடக்கினர்.. சிவாபாண்டியன் வந்து அமைதியாக ஒரு கேள்வி கேட்டார் “ இதே உன் அப்பா அம்மா சொல்லி இருந்தா நீ இப்படி தயங்குவியா அழகேசா ?? ”. அவ்வளோ தான் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல அமைதியாகி விட்டான்..

 

                          உன் நினைவு – 19

நீ இல்லாமல் எனது

வானத்து நிலவில் ஒளியில்லை..

நீ இல்லாமல் எனது

தோட்டத்து பூக்களில் வாசமில்லை…

நீ இல்லாமல் எனது

ஆடைகளில் வண்ணமில்லை…

நீயில்லாமல் நான் இல்லை….

 

 “ டேய் அழகு சொன்னா புரிஞ்சுக்கோ டா.. அப்பா அம்மா இரண்டு பேரும் பேசி முடிவு பண்ணிடாங்க டா.. நீயும் எத்தனை நாளுக்கு தான் இப்படி இருப்ப சொல்லு.. உன் லைப்லயும் ஒரு மாற்றம் வேண்டாமா?? உன் நல்லதுக்குத்தான் டா அழகு “ என்று கூறிய படி அவனது தோள்களில் கை வைத்தான்..

வெடுக்கென்று அவனது கைகளை தட்டி விட்டபடி “ எதுடா எனக்கு நல்லது.. என்னிடம்  சொல்ல கூட இல்லை.. யார் என்ன என்று தெரியாமல் எப்படிடா போய் நிச்சயம் செய்வது. அது இல்லாமல், உனக்கு தெரியாதாடா கதிரவா என் மனதில் என்ன இருக்கிறது என்று “ என்று பொரிந்தான்..       

“ எல்லாம் எனக்கு தெரியும் அழகு.. நீ இப்ப கூட சொல் நான் அப்பா அம்மாவிடம்  பேசுகிறேன் எல்லாம் சேர்ந்து மீனாட்சி வீட்டுக்கு போய் பேசலாம். என்னடா சரியா ?? “ என்றன் கதிரவன்…

“ அதெல்லாம் எதுவும் வேண்டாம்  “ என்றான் அழகேசன் பட்டென்று..

 “ இப்படி சொன்னால் எப்படி டா.. நாங்க போய் பேசுகிறோம் என்று சொன்னாலும் வேண்டும் சொன்னால் என்ன அர்த்தம்?? சரி நீயாவது அந்த பொண்ணுகிட்ட போய் பேசுவாய் என்று  பார்த்தால் அதும் இல்லை.. வீட்டில் பார்த்து இருக்க பொண்ணுக்கு சரி சொல்லவும் முடியாது என்று சொன்னால்எப்படி ?? இனி என்ன தான் பண்ணலாம் என்று  இருக்க?? நீயே சொல்லு “

இதற்கு எதுவும் பேசாமல் அமைதியாக நின்று விட்டான் அழகேசன்… அவனுக்கு தெரியவில்லை தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று.. அவனது அமைதியை கலைக்கவே “ அண்ணா “ என்று அழைத்தபடி வந்தாள் வசுமதி. அவளை கண்டதும் மீண்டும் கோவத்தை பூசி கொண்டான் தன் முகத்தில் கதிரவன்..

அழகேசன் “ என்னமா.. இவ்வளோ நேரம் உன் அத்தான் பேசி முடித்தான் இப்ப நீ என்ன சொல்ல வந்து இருக்க “

வசுமதியோ சிரித்தபடி “ நான் எதுவும் சொல்ல வரவில்லை… சாப்பிடாமல் எழுந்து  வந்துடீங்க அதான் ஒரு டம்ளர் பால் குடிங்க “ என்றபடி அவனிடம் பால் டம்ப்ளரை நீட்டினாள். அவனும் அமைதியாக வாங்கி கொண்டான்..

 “ சரி டா அழகு ஒரு தடவை நான் சொன்னதை யோசனை பண்ணு.. குட் நைட் “ என்று அவளை திரும்பி கூட பாராது சென்று விட்டான்.. வசுமதியும் அமைதியாக தன் அறைக்கு சென்று விட்டாள்..

“ இன்னும் அத்தான் கோவமா இருக்கானே.. ஒரு வேலை நம்மை ஊருக்கு அனுப்பிடுவனோ.. நாம பாட்டுக்கு எதுவும் எடுத்து வைக்காமல் இருக்கோம்.. இவன் வேறு கோவத்தில் எதுவும் செய்யாமல்  அமைதியாய் இருந்துவிட்டால் .. அய்யோ.. கடவுளே பின்ன நான் தான் அசிங்க பட்டு கிளம்பனும்.. நாளைக்கு என்ன நடந்தாலும் சரி கதிர் கூப்பிடாமல்  தோப்புக்கு கிளம்ப கூடாது “ என்று முடிவு எடுத்து விட்டு படுத்தாள்..

அந்த இரவு அனைவருக்கும் பல சிந்தனையோடு நகர்ந்தது.. காலை உணவு முடிந்து அனைவரும் தோப்பிற்கு கிளம்பி கொண்டு இருந்தனர். மல்லிகாவிற்கும் பொன்மலருக்கும் ஆனந்தம் எப்படியும் வசுமதி மாலை கிளம்பி விடுவாள் என்று..

அனைவரயும் அழைத்து செல்லவென்று வந்த கதிரவன் வசுமதி மட்டும் இன்னும் தயார் ஆகாமல் இருப்பதை பார்த்து “ என்ன இன்னும் இப்படியே இருக்கா?? டேய் சிவா உன் அக்கா வரலையா ?? ” என்று கேட்டான்..

“ அத்தான் வசுமதிக்கு காது கேட்கும்.. இனி ஒரு முறை உங்கள் இரண்டு பேருக்கும் பஞ்சாயத்து செய்ய முடியாது.. ஒரு முறை நோஸ் கட் வாங்கினதே போதும் “ என்று ஒதுங்கி கொண்டான்..

“ இவள் சரி பட்டு வரமாட்டாள் “ என்று எண்ணிய கதிரவன் அவளிடம் சென்று மொட்டையாக “ கிளம்பு “ என்றான்..

அவளோ அப்படியே அமர்ந்தபடி “ எங்கே ?? “ என்று கேட்டாள்..

“ நேற்று  அவளோ திட்டியும் இன்னும் திமிர் குறையவில்லை “ என்று எண்ணியபடி அவளை முறைத்தான்.. அவள் அதை எல்லாம் சட்டை செய்யவில்லை. பொறுமையை இழந்த கதிரவன் பல்லை கடித்தபடி “ தோப்புக்கு போகணும் என்று சொன்னேன் தானே .. கிளம்பு “

“ அப்படியா என்னிடமா சொன்னீங்க.. ஓ !! அத்தை கிட்ட சொன்னீங்களா ?? சரி சரி “ என்று மீண்டும் அமர்ந்து விட்டாள்.. அவளது காது அருகில் சென்று

“ அடியே மதி இப்ப நீ கிளம்பவில்லை எல்லார் முன்னும் என் ஸ்டெயிலில் உன்னை கிளப்ப வேண்டியது இருக்கும் “ என்று தன் புருவத்தை உயர்த்தினான்..

இதற்கு மேல் அடம் பிடிக்க அவள் என்ன முட்டாளா ?? முதல் ஆளாக சென்று வண்டியில் அமர்ந்து விட்டாள்..

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு அழகான சிறு மலை கிராமம் முந்தல்.. சுற்றி மலைகளும், மரங்களும், அருவிகளும், தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதி.. அங்கு அனைவருமே விவசாயத்தை பற்றுகோலாக கொண்டு வாழ்பவர்கள்.. இங்கு தான் கதிரவன் புதிதாக ஒரு பழத்தோட்டம் வாங்கி இருந்தான்..

காரை விட்டு இறங்கிய வசுமதி சுற்றிலும் பார்த்து தன் கண்களை விரித்து “ வாவ் அத்தை சூப்பர்.. அய்யோ அத்தை எவ்வளோ அழகான இடமா இருக்கு.. “ என்று மெய் மறந்து நின்று விட்டாள்..

சிலு சிலுவென்ற காத்து தேகம் வருடி சென்றது.. அவளை அறியாமல் அவளது பார்வை கதிரவனிடம் தஞ்சம் புகுந்தது.. கதிரவனும் அழகேசணும் எதுவோ பேசி கொண்டே முன்னே சென்றனர்.. ராம் மற்றும் சிவா அனைவரையும் போட்டோ பிடித்தபடி சென்று கொண்டு இருந்தனர்.. பொன்மலர் காமாட்சி மல்லிகா மூவரும் பேசியபடி நடந்து வந்தனர்.. ஏனோ வசுமதி மட்டும் தனியாக உணர்ந்தாள்.. கதிரவன் அவளிடம் பேசாதது ஏனோ இந்த உலகமே அவளை ஒதுக்கியது போல உணர்ந்தாள்..

அவள் மனம் எல்லாம் கதிரவனையே நாடியது “ ச்சே என்ன அழகான சூழ்நிலை.. இங்கு வந்தும் இப்படி தனியா விட்டு போறதுக்கு ஏன் எல்லாரையும் கூட்டி வரணும்.. சரியான லூசு அத்தான்.. இப்படி இருப்பதற்கு சாமியார போகலாம்.. “ என்று அவனை திட்டியபடி அனைத்தையும் சுற்றி சுற்றி பார்த்துகொண்டு வந்தாள்..

மா , பலா, வாழை, எலும்பிச்சை, சப்போட்டா, நெல்லி என்று நிறைய பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன..  அனைவரும் ஒரு இடத்தில் நின்று இருந்தனர், அந்த இடம் மட்டும் செடிகள் இல்லாமல் வேற்று இடமாக இருந்தது.. பக்கத்திலே ஒரு சிறு அறை வேறு இருந்தது..

“ ஏன் இப்படி எல்லாம் நின்று  இருக்காங்க?? “ என்று யோசித்தபடி வந்து சேர்ந்தால் வசுமதி அங்கே…         

அழகேசன் தான் அழைத்தான் “ வசும்மா இங்கே வா டா.. “

“ என்ன அண்ணா ?? ” என்று அவனருகே சென்றவளிடம் கதிரவன் ஒரு பேப்பரை நீட்டி கையெழுத்து போடுமாறு கேட்டான்.. “ என்ன இது “ என்பது போல வாங்கி பார்த்தவளின் முகத்தில் முதலில் ஒரு குழப்பம்.. பின்னே ஒரு அதிர்ச்சி , அதன் பின் முழு மகிழ்ச்சி .. உற்சாகம் …..

“ அத்தான், அய்யோ!! அத்தான் இதை என்னால் நம்பவே முடியவில்லை தேங்க்ஸ் அத்தான்.. தேங்க்ஸ் லாட் அத்தான்.. ஓ !! காட் என்னால் இன்னும் நம்பவே முடியலை. இது கனவா நிஜமா ….” என்று தன் தம்பியை கில்லி பார்த்தவள் கதிரவன் கைகளை பிடித்து குதித்து கொண்டு இருந்தாள்…

அவளது சந்தோசத்தை பார்த்து கதிரவன் அவளையே ரசித்தபடி நின்று இருந்தான்… பின்னே இது வசுமதியை இங்கே தங்க வைப்பதற்கு என்று அவன் உருவாக்கிய திட்டம் அல்லவா ??

வசுமதியிடம் கிள்ளு வாங்கிய சிவாவோ “ ஏய் லூசு என்னத்தை பார்த்து இப்படி குதிச்சுக்கிட்டு இருக்க ??? “ என்று அவளது கைகளில் இருந்த பேப்பரை பிடுங்கி பார்த்தான்.. அவ்வளோதான்.. தன் அத்தானிடம் சென்று “ அத்தான் நிஜமாவே இது உண்மை தானா ?? நல்ல யோசனை பண்ணிகோங்க அத்தான்.. ” என்றான்.. கதிரவன் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான்..

காமாட்சி அழகேசனுக்கு இது பற்றி முன்பே தெரியும் என்பதால் வசுமதியின் சந்தோசத்தை பார்த்து மகிழ்ச்சியாக நின்று இருந்தனர்.. ஆனால் பொன்மலர் மற்றும் மல்லிகாவிற்கு நடப்பது என்ன என்றே புரியவில்லை..

வசுமதி மீண்டும் கதிரவனிடம் வந்து அவனது கைகளை பற்றியபடி  “ மிகவும் தேங்க்ஸ் கதிர்.. என்னோட திறமையை  புரிந்து இதை நீங்க பண்ணி இருக்கீங்க.. எங்க அப்பா கூட என்னை  இன்னும் அவரு கம்பெனில பெர்மனென்ட் செய்யலை. ஆனால்  அத்தான் நீங்க என்னை நம்பி இவ்வளோ பெரிய பொறுப்பை குடுத்து இருக்கீங்க.. மிகவும் மிகவும் தாங்கஸ் கதிர் “ என்றாள் கண்களில் காதலுடன்..

“ சரி சரி மதி நல்ல நேரம் முடிய போகிறது முதலில் கையெழுத்து போடு “ என்றார் காமாட்சி..

 “ அத்தை நீங்க கூட என்னிடம்  இதை பற்றி சொல்லவில்லை. ஆனால் இது நிஜமாவே எனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் தான் அத்தான்” என்று அத்தையில் ஆரம்பித்து அத்தானில் முடித்தாள்.. வசுமதிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் என்றாள் அது மல்லிகா மற்றும் பொன் மலருக்கு ஷாக் சர்ப்ரைஸ்  என்று தானே அர்த்தம்..

அந்த பேப்பரில் இருந்தது எல்லாம் ஒன்று தான்.. இந்த பழ பண்ணையில் கதிராவன் புதிதாக ஒரு பண்ணை வீடு கட்ட போகிறான்.. அதற்க்கான முழு பொறுப்பையும் வசுமதியிடம் குடுத்து விட்டான்… இன்னும் இரண்டு மாதத்தில் கட்டிடத்தை முடித்து தர வேண்டும் என்பதற்க்கான அக்ரீமென்ட் தான் அது.. இதை பார்த்து தான் வசுமதி அத்தனை சந்தோசமாக குதித்தாள்.. மகிழ்ச்சியாக கையெழுத்தும் போட்டாள்..

இதற்கு என்ன அர்த்தம் வசுமதி மேலும் இரண்டு மாதத்திற்கு இங்கே தான் இருக்க போகிறாள்.. கதிரவன் தான் சவாலில் ஜெயித்து விட்டான்… வசுமதிக்கு இந்த தோல்வி கூட சந்தோசமாகா இருந்தது.. ஆனால் இதை கேட்டதும் மல்லிகாவிற்கும் பொன்மலருக்கும் திகைபூண்டை மிதித்து போல இருந்தது..

அனைத்தும் வீண்.. எல்லாமே பாழாகிவிட்டது… இன்னும் இரண்டு மாதம் இவளை இங்கு இருந்து நகட்ட முடியாது.. காலையில் இருந்த சந்தோஷம் இப்பொழுது சிறிதும் இல்லை இருவருக்கும்.. ஆனால் மனதில் இருப்பதை வெளியே சொல்ல முடியாதே அவ்வளோ ஏன் முகத்தில் காட்ட முடியாதே.. உள்ளே கோவத்தை வைத்துகொண்டு வெளியே சிரித்தனர்…

ராம் வந்து வசுமதியை வாழ்த்தினான் “ ஆல் தி பெஸ்ட் வசு.. முதல் ப்ராஜெக்ட்.. அதுவும் தனியாய் செய்ய போகிறாய்.  என்ன ஹெல்ப் என்றலும் என்னிடம்  கேளு.. சரியா ??

“ தேங்க்ஸ் ராம் “ என்றாள் வசுமதி… ஆனால் அவளது பார்வையோ மலரை சுற்றும் வண்டாக கதிரவனையே சுற்றியது.. ஆனால் அவனோ அவளை கண்டுகொள்ளவே இல்லை.. “ எருமை எருமை பார்க்கிறானா பார் இத்தனை செய்துவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி எப்படித்தான் இருக்கானோ “ என்று புலம்பி தவித்தாள்…

பின் அனைவரும் அங்கு இருந்த அருவியில் சிறிது நேரம் தண்ணீரில் விளையாடினர்.. வசுமதி தான் அதிகமாக ஆட்டம் போட்டாள்… இதை எல்லாம் காண காண அங்கே இருவருக்கு வயிறு எரிந்தது..

காமாட்சி வசுமதியிடம் “ வசும்மா போதும் தண்ணியில் ஆடுனது.. சளி பிடிக்க போகுது டா.. மேல் வா.. இனி தினமும் இங்கு தான வரப்போற.. உன் டிரஸ் எல்லாம் எப்படி ஈரமா இருக்கு??. போ.. போய் அங்க அந்த ரூமில் துண்டு இருக்கும் துடைத்துக்கொண்டு  அப்படியே ட்ரெஸ் இருக்கும் மாற்றிக்கிட்டு வா.. ” என்று அவளை விரட்டினார்…

வசுமதியும் உள்ளே சென்று ஆடையை மாற்றி விட்டு தன் தலையை துவட்டி கொண்டு இருக்கும் பொழுதே பின்னே இருந்து இரு வலிய காரம் அவளை அணைத்து இறுக்கியது…. ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் அது கதிரவன் தான் என்று உணர்ந்து பின்னே அமைதியாக விலகி நின்றாள்…

மீண்டும் அவளை தன் கை சிறைக்குள் நிறுத்தி “ என்ன டி சந்தோசமா ?? ” என்றான் உற்சாகமாக…. அவள் அமைதியாக நின்றாள்… “ ஹே என்ன செல்லம் பேசமால்  இருக்க ? ” என்று கேட்டான் கதிரவன்…

அவன் கைகளை தட்டி விட்டு அவனை முறைத்தாள்..” ஏய் முட்டகண்ணி என்ன டி முறைக்கிற??? பார்த்தியா அத்தான் உனக்காக எப்படி யோசித்து பிளான் பண்ணியிருக்கேன் “ என்றவாறே அவள் கழுத்தில் முகம் புதைத்தான்…

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து “ ஏய் செல்லம் என்ன டி பிடிக்கவில்லையா ??? ” என்றான் ஒரு வருத்தமான குரலில்….

ஆனால் அவளோ கண்ணீர் நிறைந்த கண்களோடு காதல் நிறைந்த குரலில் அவனது பறந்த மார்பில் சாய்ந்து “ மிகவும் தேங்க்ஸ் அத்தான்.. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை…என் அப்பா கூட இன்னும் என்னை அங்கு  நம்பி ஒரு ப்ராஜெக்ட் கூட தரவில்லை அத்தான்… ஆனால்  நீங்க எப்படி ? ” என்று கேள்வியாக அவனை நோக்கினாள்..

அவளது மனதை உற்சாகப்படுத்த எண்ணிய கதிரவன் தன் சட்டை காலரை தூக்கி விட்டு “ பின்ன உன்னை சவாலில் ஜெயித்து நான் சொல்லுவதை கேட்க வைக்க வேண்டாமா அதான் “ என்று கூறி நகைதான்.. மீண்டும் அவனை முறைத்தபடி நின்று விட்டாள் வசுமதி “ அப்போ சவாலுக்காக தான்  இப்படி எல்லாம் செய்திங்களா?? ” என்றாள் ஒரு மாதிரி குரலில்…

“ ஹேய் !!! லூசு … மதி குட்டி .. சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே நம்பிடுவியா ??? இங்க பாரு டி “ என்று அவளது முகத்தை தன் பக்கம் திருப்பியவாறே

“ இதை நான் தோட்டம் வாங்கின அன்றே ரெடி பண்ணிவிட்டேன்… மேடம் வேறு வீரமா சவால் விட்டீங்களா அதான் பைனல் டச்சா இருக்கட்டுமே எட்ன்று இப்ப சொன்னேன்… உன்னை ஜெயித்த மாதிரியும் ஆச்சு… நீ ஊருக்கு போகாத மாதிரியும் ஆச்சு.. இனிமே டெய்லி வீட்டில் மட்டும் இல்லை தோட்டத்திலும் நீ என்கூட இருக்கலாம்.. எப்படி அய்யாவோட  ஐடியா “ என்று கூறிய படி அவளை அணைத்தான்..

 “ எல்லாம் சூப்பர் தான்.. சரி சரி நகருங்க.. எல்லம் வெளிய தான் இருகாங்க அத்தான்.. நான் போகனும் “ என்று அவனிடம் இருந்து விலக முயற்சி செய்தால்… ஆனால் முடியவில்லை.. அவனது அணைப்பு மேலும் இறுகியது..

“ அத்தான் விடுங்க.. ப்ளீஸ்.. விடுங்க அத்தான்.. யாராவது பார்த்தால்  அசிங்கமாய்  ஆயிடும்.. விடுங்க அத்தான் “ என்று திமிறினாள்..

ஆனால் அவனோ “ சரி சரி ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு போ “ என்றான் குறும்பான குரலில்.. 

“ தேங்க்ஸ் தான் அப்ப இருந்து சொன்னேனே அத்தான்.. பின்ன என்ன ?? ம்ம் சரி உங்களுக்காக இன்னொரு தடவை சொல்லுறேன்.. தேங்க்ஸ் கதிர்.. நான் போகிறேன் “ என்று கிளம்பியவளை கை பிடித்து இழுத்து நிறுத்தினான்..

இன்னும் என்ன என்பது போல பார்த்தாள் “ தேங்க்ஸ் இப்படியா டி சொல்வது ?? ” என்று கேட்டான் மயக்கம் நிறைந்த குரலில்..

“ வேண்டாம் உங்கள் பார்வையே சரியில்லை. நான் கிளம்புகிறேன் “ என்று மீண்டும் ராகம் பாடினாள்..

“ ஓய் !! நில்லு டி மதி.. வெளிய போய் என்ன செய்ய போற?? எல்லார் கூடையும் அரட்டை தான் அடிக்க போற.. கொஞ்சம் உன் அத்தானையும் கவனித்துவிட்டு போ டி.. ஒரு தேங்க்ஸ் கூட உருப்படியா சொல்ல தெரியவில்லை  ” என்றான் சலிப்பாக..

 “ அட ஆண்டவா !! இப்ப என்ன தான் வேண்டும் உங்களுக்கு ?? ஏன் அத்தான் இப்படி அடம் பிடிக்குறீங்க ??? எத்தனை தடவ தேங்க்ஸ் சொல்வது… ”

“ தேங்க்ஸ் இப்படி சொல்லணும் டி மதி “ என்று கூறி அவளது இதழ்களை சிறை செய்தான் கதிரவன்… அவனிடம் இருந்து விலக முயன்று தோற்று… பின் மயங்கி அவனது மார்பிலேயே சாய்ந்து விட்டாள் வசுமதி… 

“ மதி உனக்கு நிஜமாவே ஊருக்கு போகனும், அப்பா அம்மாவை பார்க்கனும் என்று  ஆசை இல்லையா ? அவர்கள் கூட இருக்கனும்னு தோணலையா ?? ”

வசுமதி“ எனக்கு சொல்ல தெரியவில்லை அத்தான்.. போகணும் என்று நினைப்பேன்  ஆனால்  போக பிடிக்கவில்லை .. நான் என்ன செய்யட்டும் ??? “

“ ம்ம் வேலை எல்லாம் முடியட்டும் மதி.. நானே உன்னை சென்னைக்கு கூட்டி போகிறேன்.. உன் அப்பா அம்மாவிடம்  நானே கேட்கிறேன் எனக்கு உங்கள் மகளை கட்டி குடுங்க மாமா அத்தை என்று  சரியா ? ” இதை அவன் கூறவும் அவளது முகத்தில் அத்தனை ஆனந்தம், பெருமிதமா எல்லாமே.. அவனோ அவளை நக்கலடித்தான்..        

“ என்ன மதி தேவியாரே தாங்கள் விட்ட சவாலில் நான் ஜெயித்து விட்டேன்.. நீங்கள் கூறியது போல இந்த நொடியிலிருந்து நான் கூறுவதை நீங்கள் கேட்டு தான் ஆகவேண்டும்… “ என்றான் நகைத்து கொண்டே…

“ நீங்க பெரிய ஆளுதான் அத்தான்.. ஒரே கல்லில் நிறைய மாங்காய்  அடிக்கிறீங்க.. பயங்கரமான ஆளு தான் நீங்க “ என்று கூறி கல கல வென்று சிரித்தாள்… அவளது சிரிப்பை பார்த்த கதிரவனுக்கு மீண்டும் பார்வை மாறியது அதேநேரம்..

“ டேய் கதிரவா “ என்று அழகேசனது குரலும் “ சுமதி அக்கா “ என்று சிவாவினது குரலும் கேட்டது..

கதிரவனோ “ ச்சே வந்துட்டானுங்க.. கரடி வேலைக்கு என்றே உனக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி.. சீக்கிரம் ரெடி ஆகி வெளிய வா.. அவனுங்க இங்க வரதுக்குள்ள நான் வெளிய போய் நிற்கிறேன்“ என்று கூறி அவளை மீண்டும் ஒரு முறை இறுக அனைத்து கன்னத்தில் தன் பரிசையும் தந்து விட்டு வேகமா வெளியே சென்று நின்று கொண்டான்…

கதிரவன் வெளியே நின்று கொண்டு இருப்பதை பார்த்த அழகேசன் மற்றும் சிவா அவன் அருகில் வந்து “ ஆமா நீ இங்க என்ன பண்ற ? ” என்று கேட்டான் அழகு..

 “ நா… நான் .. வசுமதி வந்து மிகவும் நேரம் ஆனதா அதான் தேடி வந்தேன்.. “ என்று சமாளித்தான்.. அவனை ஒரு நம்பாத பார்வை பார்த்த அழகு

“ உன்னையும் சேர்த்து தேடிகிட்டு வந்தது நாங்க. நீ வசுமதியை தேடிட்டு வந்தியா.. இதை நாங்கள் நம்பனுமா ? ”

சிவா முன்பு தன் மானத்தை வாங்குகிறான் என்று எண்ணியபடி.. ” அழகு வா டா நாம அப்படியே நடந்துகிட்டே பேசலாம்.. சிவா இருந்து மதிஇ கூட்டி வரட்டும்.. என்ன டா சிவா ??? ” என்று கூறி தன் நண்பனை இழுத்து சென்று விட்டான்..

அந்த அறையை விட்டு வெளியே வந்த வசுமதி தன் தம்பி நிற்பதை பார்த்து ஒரு நிமிடம் திகைத்தாள்… சுற்றும் முற்றும் பார்த்து “ அத்தான் எங்கே ?? ” என்று சிவாவிடம் கேட்டாள்..

“ உனக்கு காவல் நிற்க வைத்துவிட்டு முன்னாடி அழகு அண்ணா கூட போயிட்டாங்க.. ஆமா அத்தானை எதற்கு தேடுற ? ” என்று கேட்டான்..

“ அது… அது.. அதான் புது பில்டிங் பிளான் பற்றி பேசவேண்டும் அதான்… “ என்று திக்கி திணறினாள். அவளது தம்பியோ “ அப்படியா நான் நம்பிட்டேன் “ என்று கூறி அவளிடம் இரண்டு அடிகளையும் பெற்று கொண்டான்..

விரித்து விட்ட கூந்தலுடன் முகத்தில் செம்மை குடிகொள்ள அடர்ந்த பச்சை நிற சேலையில் வசுமதி கதிரவன் பார்வைக்கு வன தேவதை போலவே காட்சி அளித்தாள்…

அழகு சிவா ராம் அனைவரும் சிறிது நேரம் அமர்ந்து விட்டு சுற்றி பார்க்க சென்று விட்டனர்.. தன் மகன் மற்றும் வசுமதியை கண்ட காமாட்சி “ இந்த பண்ணை வீடு கட்டி முடிக்கவும் இவர்களுக்கும் கல்யாணத்தை பண்ணிடனும் “ என்று முடிவு செய்து கொண்டார்..

மல்லிகா மற்றும் மலருக்கு தான் அந்த இடத்தில இருக்கவே பிடிக்கவில்லை.. எதோ முள் மீது நிற்பது போல உணர்ந்தனர்.. ஆனால் வேறு வழியில்லையே.. அனைத்தையும் சகித்து கொண்டு தங்கள் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அல்லவா இருக்க வேண்டும்.. இப்படியே பொழுது அனைவருக்கும் அங்கே கழிந்தது..

வசுமதிக்கு தான் மனது மிகவும் சந்தோசமாக இருந்தது.. அழகேசனது நிச்சயம் முடிந்த பின் ஊருக்கு செல்வதாக கூறி விட்டனர் சிவாவும் ராமும்..  மறுநாள் அனைவரும் சென்று புது துணிகள் எல்லாம் எடுத்து கொண்டு வந்தனர்.. கதிரவனுக்கு பிடித்த நீள நிறத்தில் வசுமதி ஒரு பட்டு சேலை எடுத்துக்கொண்டாள்.. அழகேசனோ எதிலுமே நாட்டம் இல்லாமல் சுற்றி திரிந்தான்.. அவனை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் கதிரவன் படாத பாடு பட்டான்..

“ டேய் இந்த ட்ரெஸ் பிடித்து இருக்கா ??? இந்த கலர் பாரு இந்த சட்டை நல்ல இருக்கா ?? ” என்று பல கேள்விகள் கேட்டு அசந்து போய் அழுத்து போய் இறுதியில் தானே அவனுக்கும் சேர்த்து தேர்வு செய்தான்…

யாருக்கு வந்த விருந்தோ என்று அழகேசன் சுற்றி கொண்டு இருந்தான்.. விடிந்தால் அவனுக்கு தான் நிச்சயம்.. ஆனால் அது யாரோடு என்பது கூட அவனுக்கு தெரியவில்லை.. தெரிந்து கொள்ளும் ஆசையும் அவனுக்கு தோன்றவில்லை..

மனதில் மீனாட்சி மட்டுமே குடி கொண்டு இருந்தாள்.. அவளது நினைவுகள், அவள் பேசிய வார்த்தைகளும்  அவனை வேதனை கடலில் மூழ்கடித்தது.. “ என்ன நடந்தாலும் சரி நாளை கிளம்பும் முன் கதிரவனிடம் அனைத்தையும் கூறி விட வேண்டும் “ என்று முடிவு செய்தான்..

 “ டேய் கதிரவா நில்லு டா.. ஒரு நிமிஷம் நான் பேசுறதை கேளு டா. எல்லாரும் தான் இப்படி பண்ணுராங்கன்னா நீயும் ஏன் டா என்னை பபுரியாமல்  படுத்துற….  “ என்று கதிரவன் பின்னாடியே ஓடிக்கொண்டு இருந்தான் அழகேசன்.

 “ ஏன் டா நீ இப்படி என்னை போட்டு படுத்தி எடுக்குற.. இன்னும் கொஞ்ச நேரத்தில்  உனக்கு நிட்சயதார்த்தம்.. ஆனால்  நீ இன்னும் குளிக்க கூட இல்லை.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் இத்தனை பேரும்  கிளம்பி அங்கு  போகணும்.. போடா நீ முதலில் ரெடி ஆகு.. எனக்கு நிறைய வேலை இருக்கு “ என்று அவனிடம் இருந்து தப்பிக்க பார்த்தான் கதிரவன்..

அழகேசனோ பிடிவாதமாக அவனை நிறுத்தி வைத்து “ பெரிய வேலை புடலங்காய் வேலை.. உனக்கு என்னை விட வேலை மிகவும் பெரிதா கதிரவா???  டேய் கொஞ்சாமாவது என்னை  புரிந்துகொள் டா.. எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை . நீ தான் அப்பா அம்மா கிட்ட பேசி இதை நிறுத்தனும்… “ 

“ ஹேய் !!! என்ன டா ?? எல்லா ஏற்பாடும் செய்து இன்னும் இரண்டு மணி நேரத்தில்  உனக்கும் அந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம்… இப்போ வேண்டாம் சொன்னால் எப்படி ??? அறிவு இருக்கா அழகு “

 “ டேய் உனக்கு ஏன்டா என் கஷ்டம் புரியவில்லை பொண்ணு யாரு என்று  கூட தெரியாது.. அதுகூட முக்கியம் இல்லை கதிரவா.. ஆனால்  இதில் எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை டா”  என்றான் அழ மாட்டாத குரலில் அழகேசன்..    

கதிரவனுக்கு பார்க்க பாவமாக தான் இருந்தது.. ஆனால் என்ன செய்வது இன்னும் இரண்டு மணி நேரம் எப்படியாவது இவனை சமாளிக்க வேண்டுமே.. அதான் பின் அழகேசன் வாழ்வில் சந்தோஷம் தான்.. மகிழ்ச்சி தான்.. அதுவரை இவனது வாயை அடைக்க வேண்டுமே என்று யோசித்தவன் சற்று கடுமையாக ” இப்ப என்ன உனக்கு இது பிடிக்கவில்லை அப்படிதானா.. சரி வா இப்பயே அப்பாகிட்ட போகலாம் அவர்கிட்ட சொல்லு இந்த நிச்சயம் பிடிக்வில்கலை பா.. நிறுத்திவிடுங்கபா  என்று அவரும் முன்ன நின்று  எல்லாம் செய்ததற்கு அசிங்க படட்டும் “ என்றான் கடுமையாக.

“ டேய் !!! கதிரவா ஏண்டா இப்படி எல்லாம் சொல்ற ??? அப்பா கிட்ட எப்படி டா இப்படி எல்லாம் பேச முடியும்…” என்றான் கம்மி போன குரலில். “ முடியாது தானே  அப்ப பேசாமல் வீட்டில் பார்க்கிற பொண்ணுக்கு கழுத்த நீட்டு.. ச்சி ச்சி .. தாலி காட்டு… “ என்ன என்றான் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு..

அழகேசன் மனதில் ஒரு எண்ணம்.. எப்படியும் நிச்சயம் முடியும் முன் அந்த பெண்ணிடம் பேசி விட வேண்டும்… அதற்கு அந்த பெண்ணின் போன் நம்பர் தெரிய வேண்டும்…  “ ம்ம்ம் டேய் கதிரவா நீ சொல்வது எல்லாம் சரி தான்.. ஆனால்  பொண்ணு போட்டோ கூட பார்க்காமல் எப்படி டா??? ” என்றான் கேள்வியாக…

 “ போட்டோ தான உன் பாசமலர் அதான் வசுமதி காலையில் அம்மாகிட்ட இருந்து போட்டோ வாங்கினாள்  அவளிடம் கேள்“ என்று அழகேசனை வசுமதியிடம் மாட்டி விட்டு தான் கழண்டு கொண்டான்….  

வசுமதி தன் அறையில் தயார் ஆகி கொண்டு இருந்தாள்.. கதிரவனுக்கு பிடித்த வண்ணத்தில் சேலை கட்டலாம் என்று முடிவு என்னவோ எடுத்து விட்டாள்.. செயல் முறையும் படுத்தி விட்டாள்.. ஆனால் இன்னும் கண்ணாடி விட்டு நகர மனம் வரவில்லை..

“ ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் திக்கா கண்ணுக்கு மை வைக்கலாமா ??? இல்லை இல்லை போதும்… ம்ம் பொட்டு இந்த கலர் நல்லா இருக்கா சேலைக்கு மேட்ச்சா வைக்கலாமா ???”  என்று யோசனை செய்தபடி கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தாள்.. கதவு தட்டும் ஓசை கேட்டு கதவு திறந்தாள்..

அழகேசன் தான் இன்னும் குளிக்காமல் கொள்ளாமல் நேற்று அவள் பார்த்த அதே கோலத்தில் நின்று கொண்டு இருந்தான். அவனை பார்த்து வை பிளந்து “ என்ன அண்ணா??? இப்படி வந்து நிக்கிறீங்க ??? இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம எல்லாம் கிளம்பவேண்டும் போங்க போயி முதலில் ரெடி ஆகிட்டு வாங்க “ என்று அவனை விரட்டினாள்..

அதற்கெல்லாம் அசராத அழகேசன்.. “ உன்கிட்ட பேசணும் வசும்மா “

என்ன என்பது போல பார்த்தாள் வசுமதி.. “ அது வந்து வசும்மா… போட்டோ “ என்று முடிக்கவில்லை வசுமதி ஆரம்பித்து விட்டாள் “ போட்டோ தானேனா.. அதெல்லாம் சிவா சூப்பரா எடுப்பான்… ராம் வேறு அவன் ஹேண்டி கேம்ல வீடியோ எடுக்க போகிறான்.. ஜாலி .. ஜாலி.. இந்த கலர் சேலை நல்ல இருக்கா?? ” என்று இடை விடாது பேசினாள்…

“ டேய் கதிரவா நல்ல ஆள் பார்த்து தான் என்னை அனுப்பியிருக்க “ என்று கருவியபடி “ அது இல்லை வசும்மா அந்த பொண்ணு போன் நம்பர் … ”

“ போன் நம்பர் தானே நிச்சயம் முடியட்டும் நானே வாங்கி தரேன்.. போதுமா.. போங்க வேகமாய் ரெடி ஆகிட்டு வாங்க.. ” என்று  அவனை பேசவே விடவில்லை அவள்..

அந்த நேரம் அங்கே வந்த காமாட்சி “ டேய் அழகு இன்னும் என்ன இப்படி நிற்கிற??  வா வா கீழ வாபுது துணி உன் ரூமில மெத்தை மேல் வித்து இருக்கேன்.. போ வேகமா குளித்துவிட்டு வந்து சாப்பிடு.. வசும்மா நீயும் சீக்கிரம் கீழ வா டா.. சாப்பிடலாம் “ என்று கூறி அழகேசனை கீழேயே இழுத்து சென்று விட்டார்.. வசுமதிக்கு அப்பாடி என்று இருந்தது… கதிரவனாவது அழகேசனிடம் நின்று ஒன்று இரண்டு வார்த்தை பேசினான்.. ஆனால் வசுமதியோ அவனை பேசவே விடவில்லை…

“ அம்மா அம்மா ஒரு நிமிஷம் நான் சொல்வதை கேளுங்க மா “ என்றான் கெஞ்சாத குறையாக.. ஆனால் அதற்கெல்லாம் மசியவில்லை காமாட்சி..    

” இங்க பாரு அழகு எனக்கு நிறைய வேலை இருக்கு.. இத்தனை பேரையும் கிளப்பனும்.. ஒரு நிமிஷம் என்ன ஒரு மணி நேரம் கூட உன் கூட பேசுகிறேன்.. ஆனால் இப்ப இல்லை நிச்சயம் எல்லாம் முடியட்டும்..போ போய் வேகமா குளி  “ என்று கூறி சென்று விட்டார்….

அழகேசனுக்கோ தலையே வெடித்து விடும் போல இருந்தது.. நல்ல குடும்பத்து கிட்ட வந்து மாட்டிகிட்டோம் என்று எண்ணினான்.. ஆனாலும் ஒரு பக்கம் தன் மீது கொண்ட அக்கறையிலும் பாசத்திலும் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணி அமைதி காத்தான்..

“என்ன அழகப்பா??இன்னும் குளிக்க கூட இல்லாமல் இருக்க??? என்ன சாமி முகமெல்லாம் சோர்வா இருக்கு ?? ” என்று பாசமாக கேட்டபடி வந்து அமர்ந்தார் அன்னபூரணி..

“ யப்பா இந்த அப்பத்தா கொஞ்சம் நல்லா பேசுதே “ என்று மகிழ்ந்து அவர் அருகில் சென்று கைகளை பிடித்தபடி “ பாட்டி.. நல்ல பாட்டி நீயாவது நான் சொல்வதை கேட்க கூடாதா ?? ” என்றான் சோகமாக..

அவரோ சிரித்தபடி “ என்ன ராசா புது துணி பிடிக்கவில்லையா ?? சரி சரி கல்யாணத்திற்கு  வேறு எடுத்துக்கலாம் “ என்று நக்கல் அடித்தார்..

“ ஆஹா !! கிழவி லேசு பட்ட ஆள் இல்லையே.. அழகேசா ஒரு நிமிஷம் நம்பி ஏமாந்து போயிட்டயே ??? இனிமே யாரையும் நம்ப கூடாது.. தன் கையே தனக்குதவி.. அந்த பொண்ணு கிட்ட எப்படியாவது பேசவேண்டும் இதை எல்லாம் நிறுத்தனும்… “ என்று முடிவு செய்தவன் என்று தன் அறைக்கு சென்றான்.. தலையை பிடித்தபடி அமர்ந்து இருந்தான்.. கதவு தட்டும் ஓசை கேட்டு

“ இதோ வரேன் ” என்றவாறே கதவை திறந்தான்.. வெளியே சிவாவும் ராமும் நின்று இருந்தனர்…

“ என்ன டா இங்கு வந்து இருக்கீங்க?? போங்க போயி ரெடி ஆகுங்க …” என்றான் அழகேசன்.. ராம் சிரித்தபடி

“ ஹலோ ஹலோ பாஸ் என்ன எங்களை பார்த்தா எப்படி இருக்கு ?? நாங்கள் எப்பயோ ரெடி ஆகிட்டோம்.. இப்ப நாங்கள் வந்தது.. மாப்பிள்ளையை ரெடி பண்ண..” என்று கூறியவரே அழகேசனை உள்ளே இழுத்து வந்து கதவு அடைத்தனர்…    

“ உங்களை தயார் செய்து கூட்டிவந்தா தான் எங்களுக்கு சாப்பாடு.. எங்களுக்கு சாப்பாடு தான் முக்கியம் இப்ப நீங்களா குளிக்க போறீங்களா ?? இல்லை நாங்கள் இரண்டு பேரும் உங்களை குளிப்பாட்டி டிரஸ் போட்டு விடவா ?? எது உங்களுக்கு வசதி “ என்று இருவரும் அவனை மிரட்டினர்….

“ டேய் அப்பா ஆளை விடுங்க சாமிகளா “ என்றவாறு பாத்ரூம் நோக்கி ஓடினான் அழகேசன்.. மற்ற இருவரதும் சிரிப்பு சத்தம் அவனை துரத்தியது..

 

Advertisement