Advertisement

 

உன் நினைவு –12

உனக்கு பிடிக்கும் அனைத்தும்

எனக்கும் பிடிக்கும்..

உன்னை பிடித்ததால்..  

 

தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்..

“ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு “

“ எனக்கும் தான் காமாட்சி.. ரொம்ப சந்தோசம். ஆனால் இதெல்லாம் நமக்கு தெரிந்த மாதிரி காட்டிட கூடாது.. அவர்கள் இரண்டு பேரும் பேசி முதலில் ஒரு முடிவிற்கு வரட்டும்.. “ என்று கூறினார் அன்னபூரணி.

அவர் கூறுவதும் சரியென்று பட நிம்மதியாய் உறங்க சென்றார் காமாட்சி. கீழே இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டு இருக்க. இவை அனைத்திற்கும் காரணமான இரண்டு நல்ல உள்ளங்கள் மேலே தூக்கம் வராமல் தவித்தனர்..கதிரவனுக்கோ வசுமதியிடம் தான் நாளை எஸ்டேட் செல்ல போவதை இன்னும் கூறவில்லை என்பது நினைவு வந்தது..

“ அவளிடம் சொல்லவேண்டுமே வேண்டுமே.. எப்படியும் எஸ்டேட்டில் இருந்து வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடும். அதுவரை இவளை பார்க்காமல் பேசாமல் எப்படி இருப்பது “ என்று கவலைப்பட்டான்..

அவன் அறையில் இருந்து வெளியே வந்து வசுமதியின் அறையை எட்டி பார்த்தான்.. உள் பக்கமாக பூட்டி இருந்தது. “குட்டச்சி எப்படித்தான் நிம்மதியாக தூங்குகிறாளோ?? நான் ஒருவன் இங்கு அவளை நினைத்து தவிப்பது தெரியாமல்.. இந்நேரம் அவள் அறை கதவை தட்டிக்கொண்டு நின்றால் சரியாக இருக்காது.. ஆனால் அவளிடம் எப்படி சொல்வது “ என்று யோசனையில் ஆழ்ந்தான்..

“ அங்கு எஸ்டேட்டில் சரியாக போன் சிக்னல் வேறு கிடைக்காது.. வேலை வேறு சரியாக இருக்கும்.. சரி ஒரு மெசேஜ் செய்து நான் நாளை செல்வதையும் வருவதற்கு இரண்டு நாள் ஆகும் என்பதையும் சொல்லலாம்” என்று எண்ணியவன் தன் போனை எடுத்து பார்த்தான்..

போன் சதி செய்து விட்டது.. சுத்தமாக சார்ஜ் இல்லாமல் போன் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது.. ” ச்சை இது வேறு நேரம் காலம் தெரியமால் ஆப் அகி கிடக்கும் ” என்று தன் கோவத்தை எல்லாம் போனின் மீது காட்டியபடி வேகமாக சார்ஜ் போட்டான்..

 “  ஒரே வீட்டில் அதுவும் எதிர் எதிர் அறையில் இருந்துகொண்டு இப்படி போனில் தகவல் கூறினால் நன்றாக இருக்காது “ என்று எண்ணியவன்,, “ சரி காலையில் கிளம்பும்போது சொல்லிகொள்ளலாம் “ என்று முடிவு செய்து விட்டு படுத்தான்..

அவனின் எதிர் அறையில் இருந்த வசுமதியோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.. கண்கள் மூடினால் கதிரவன் முகம் தான்.. அவன் சிரிப்பது போலவும், பேசுவது போலவும்,  அவளுடன் வம்பு செய்வது போலவும் பலவராக தோன்றினான் அவளது கற்பனையில்.. அவள் கனவுகளின் நாயகன் அல்லவா ??

“ ச்சி நமக்கு தூக்கமே வரவில்லை கதிர் தூங்கிட்டாரோ ?? பாவம் எவ்வளோ வேலை.. அலுப்பாக வேறு  இருக்கும் அவருக்கு “ என்று எண்ணிக்கொண்டாள்.. 

 “ வசுமதி தூங்கு,  வசுமதி கண்ண மூடி தூங்கு ” என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள்.. ஆனால் அவள் சொல்வதை அவளே கேட்க முடியவில்லை..

“ கதிர் நான் எப்படி உங்களை லவ் பண்ணேன்?? ” என்று அவளாக பேசி கொண்டாள்..

“ அய்யோ வசுமதி இப்படி தனியாக புலம்பும் நிலைமைக்கு வந்துவிட்டாயே?? இதை மட்டும் என் ப்ரிண்ட்ஸ் பார்க்கணும் அவ்வளோ தான் என் மானம் கப்பல் ஏறிவிடும் ” தன்னை தானே நொந்து கொண்டாள். உறக்கம் அவளோடு சண்டை போட்டு விலகி போய்விட்டது.. எழுந்து அமர்ந்தாள்.. மீண்டும் படுத்தாள்.. மீண்டும் எழுந்தாள்..

சிறிது நேரம் அறைக்குள்ளேயே நடந்து பார்த்தாள்.. தண்ணீர் குடித்தாள்.. ம்ஹும் இத்தனை செய்தும் அவள் மனம் அமைதிப்பெற மறுத்தது.. எழுந்து சென்று ஜென்னல் அருகில் நின்றாள்.. காற்று இதமாக வீசியது. அவள் உடல் கூசி சிலிர்த்தது.. கண்கள் மூடி அதை அனுபவித்தாள்..

” கதிர் என்னை தொட்ட பொழுது இப்படி தானே கூசியது ” பின் அவளாகவே “ ச்சி என்ன மதி இப்படியெல்லாம் உன் மனதை ஓட விடுகிறாய்,, அடங்கு அடங்கு ?? ” என்று அவளாக கூறிக்கொண்டாள்.. மனதிற்குள் கதிரவனை செல்லமாக “ ரௌடி…  இப்படி அமைதியாக இருந்தே என்னை எப்படி ஆட்டுவிக்கிறான்  ” என்று கடிந்தாள்..

 “ உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம் செல்ல பெயர் வைத்தால் அது காதல் “ என்ற பாடல் வரி நினைவு வந்தது..

“ எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதுகிறார்களோ. ஆனால் மிக சரியாக எழுதுகிறார்கள்.. இப்படி தூக்கம் வராமல் ஒருவர் நினைவில் தவிப்பது கூட சித்திரவதை தானே “ என்று எண்ணியபடி வந்து மெத்தையில் விழுந்தாள்..  

“ இவனுக்கு யார் கதிரவன் என்று பெயர் வைத்தது?? கள்ளன் என்று வைத்து இருக்கலாம்.. சரியான ரௌடி “ என்று மனதில் பலவாறாக அவனை திட்டியபடியும் கொஞ்சியபடியும் படுத்தவள் ஒருவழியா உறங்கி விட்டாள்..

மறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது.. ஆதவன் தன் லட்சம் கோடி கரங்களால் இந்த பூவுலகை தழுவிக்கொள்ள ஆரம்பித்தான்.. நில மங்கை ஆதவனின் அணைப்பை நாணத்தோடு ஏற்றுக்கொண்டாள்.. நிலமங்கையின் நானத்தை அந்த வானம் பிரதிபளித்தது செவ்வானமாக தோன்றியது… வசுமதி மெல்ல சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தாள்.. மணியை பார்த்தாள் அது  காலை எட்டு மணி என்பதை கூறியது..

“ மணி எட்டா ?? அவ்வளோ நேரமாகவா நான் தூங்கி விட்டேன்.. அட ஆண்டவா.. ச்சே வசுமதி விடிய விடிய கனவு கண்டுவிட்டு இப்படியா தூங்குவது.. எல்லாம் இந்த அத்தானால் வந்தது..” என்று தன்னையே தொந்தபடியும் , கதிரவனை கொஞ்சம் திட்டியபடியும் வேக வேகமாக குளித்து முடித்து கீழே வந்தாள்..   

கிழே இறங்கி வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.. ஏனெனில் அங்கே ஹாலில் அமர்ந்து சிவாவும் ராமும் காமாட்சி மற்றும் அன்னபூரணியிடம் பேசிக்கொண்டு இருந்தனர்..

“ இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள்?? ஆமாம் அத்தையும் அம்மாச்சியும் மட்டும் இருக்கிறார்கள், எங்கே அத்தான் அழகு அண்ணா யாரையும் காணவில்லை” என்று எண்ணியவள் பின்னே “ அதுசரி நீ இத்தனை லேட்டாக வந்துவிட்டு கதிரவனை தேடுகிறாயா ?? அவனுக்கு வேலை எதுவும் இல்லை பார் ” என்று எண்ணிக்கொண்டாள்..

இவள் இப்படி யோசித்தபடியே நிர்ப்பதை  கண்ட காமாட்சி “ என்ன வசும்மா அங்கேயே நின்று விட்டாய் வா வந்து யார் வந்திருகிறார்கள் பார் ”  என்று அவளை அழைத்தார்..

காமாட்சி வசுமதியின் பெயரை கூறவுமே சிவாவும் ராமும் திரும்பி அவளை பார்த்தனர்..  சிவா தான் ஆரம்பித்தான் “ ஹே !! பாசுமதி,  தூங்கு மூஞ்சி.. அத்தை என்னவோ நீ தான் இங்கே அனைத்தையும் பார்த்துகொள்வது போல பேசினார்கள்.. நீ என்ன இப்போ தான் அடி அசைந்து வருகிறாய் ”

அவளுக்கு உற்சாகம் தாங்க வில்லை.. பின்னே இத்தனை நாட்கள் கழித்து தான் உடன் பிறந்தவனையும், உடன் பிறவா சகோதரனையும் காண்கிறாள் அல்லவா.. சிவாவை சிரித்தபடி ஒரு பார்வை பார்த்துவிட்டு “ராம் வீட்டில் ஆன்ட்டி அங்கிள் எல்லாம் எப்படி இருகிறார்கள்?? ” என்று அவனிடம் நலம் விசாரித்தாள்..

“ எல்லாரும் நலம் வசு, நீ அங்க இல்லை என்பதை தவிற வேறு எந்த குறையும் இல்லை “ என்றான் ராம்.. அவனுக்கு ஒரு சிரிப்பை பதிலாக தந்துவிட்டு

“ ஹேய் !! என்னடா தம்பி பையா, அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருகிறார்கள் ?? நீ எப்படி இருக்கிறாய்?? காலேஜ் எப்படி போகிறது?? “ என்று வரிசையாக கேள்வி கேட்டாள்..,

அவளின் நடவடிக்கை சிவாவிற்கும் ராமிற்கும் முற்றிலும் புதிதாக இருந்தது.. இவர்களை கண்டதும் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருவாள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவள் நிதானமாக நடந்து வந்தாள்.. அவர்கள் எதிர் பார்த்த உற்சாகம் அவள் கண்களிலும், முகத்திலும் தெரிந்தது. ஆனால் அவளது உடல் மொழியில் ஒரு நிதானம், ஒரு அடக்கம் இருப்பதை இருவருமே உணர்ந்து கொண்டனர்..

சிவாவும் ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.. “ ராம் அண்ணா என்ன இதற்கே என் முகத்தை பார்த்தால் எப்படி ? இன்னும் போக போக நிறைய அதிர்ச்சிகள் உங்களுக்கு இவள் தருவாள் “  என்று கூறினான் சிவா.. அவன் தலையில் லேசாக அடித்து “ நான் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறேன் நீ என்ன ராமிடம் கதை பேசுகிறாய்” என்று தன் தம்பியை வம்பிழுத்தாள்..

ஆனால் அவள் கண்கள் யாரையோ தேடுவதை போல் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. இதை அன்னபூரணி கவனித்து விட்டார்.. “ என்ன கண்ணம்மா யாரை தேடுகிறாய்??” என்று மெல்ல சிரித்தபடி கேட்டார்..

“ ம் யாரையும் இல்லை அம்மாச்சி ” பின் சிறிது நேரம் ராமிடமும் சிவாவிடமும் பொதுவன் பேச்சுக்கள் பேசியபடி இருந்தாள்..

 “ வசும்மா காலை டிபன் என்ன செய்ய சொல்லட்டும் ” என்று கேட்டார் காமாட்சி..

காமாட்சி வசுமதியை இப்படி கேட்டதும் சிவாவிற்கு ஆச்சரியம். “ இதை ஏன் அக்காவிடம் கேட்கிறார்கள் அத்தை “ என்று யோசித்தான்..  ராமிற்கு இது எல்லாம் புதிது என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்தான். 

“ என்ன அத்தை நீங்களாக ஏதாவது செய்ய சொல்லலாமே ” என்று சிரித்தபடியே கூறினாள்..

“ நீயே சொல்லு வசும்மா இத்தனை நாட்களாக நீதானே சொல்வாய், நானும் அதனால் எதுவும் யோசிக்கவில்லை “

“ம்ம் இட்லி, பொடி நகட்டி போட்ட சாம்பார், மல்லி சட்னி செய்ய சொல்லுங்கள் அத்தை ” என்று கூறியபடி

 “ பொன்னம்மாக்கா “ என்று அழைத்தாள்..

ஒரு நிமிட இடைவெளியில் “ என்ன சின்னம்மா “ என்று கேட்ட படி வந்தாள் பொன்னம்மா.. “ அக்கா மேலே சிவாவின் அறையை சுத்தம் செய்ய சொன்னேனே செய்துவிட்டீர்களா “

“ நேத்து சாயங்காலமே செஞ்சுட்டேன் சின்னம்மா”

“ அங்கு யே இன்னொரு காட்டில் மெத்தை எல்லாம் முத்து அண்ணாவை போட சொல்லி இருந்தேன் போட்டு விட்டாரா ?”

“ நேத்து நானு சுத்தம் செஞ்சு முடிக்கவுமே அவரு வந்து போட்டுட்டாரு சின்னம்மா “

வசுமதியின் பேச்சில் ஒரு வித ஆளுமையும், பண்பும் ஒரு சேர இருந்தது.. அவள் பேச்சை யாராலும் தட்டவோ மறுத்தோ பேச முடியாத குரலில் பேசினாள்.. பொன்னமா அந்த பக்கம் போகவும், இந்த பக்கம் தனபால் தாத்தா வந்தார்.. “ வாருங்கள் வாருங்கள் தம்பிகளா ”  என்று கூறியபடியே வந்தார்.. ராமை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் வசுமதி..

அவரும் சிரித்தபடி சிவாவிடமும் ராமிடமும் குசலம் விசாரித்தார்.. அந்நேரம் அழகேசணும் வந்து சேர்ந்தான்.. அவனுக்கு தன் தம்பியையும் ராமையும் அறிமுகம் செய்து வைத்தாள்.. அழகேசன் இருவருக்கும் கை குலுக்கினான்.. “ போகும் இடங்களில் எல்லாம் ஒரு அண்ணனை பிடித்து விடுகிறாள்.. அங்கு சென்னையில் நான், இங்கு நீங்கள் “ என்று கூறியபடி கைகுலுக்கினான் ராம்..

“ இவள் இம்சையை தாங்குவதற்கு நீங்களும் எங்களுடன் சேர்ந்து விட்டீர்கள் “ என்று சிரித்தபடி கை குலுக்கினான் சிவா.. இவர்கள் இருவரயும் மிக பிடித்துவிட்டது அழகேசனுக்கு.. அவனும் சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தான்..

“ என்ன அழகேசன் அண்ணா கூட வந்து விட்டார் அத்தானை இன்னும் காணவில்லை “ என்று வாசலை பார்த்தாள்… “ எங்கு சென்று இருப்பான் “ என்று யோசித்தபடி மற்றவர்கள பேசுவதை பார்த்த படி நின்றாள்.. ஆனால் அங்கு நடந்த எதுவும் அவள் மனதில் பதியவில்லை..

சிவா இதை அனைத்தையும் கவனித்து கொண்டுதான் இருந்தான்.. அவன் போன முறை வந்து போனதற்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கும் நிறைய நிறையவே மாற்றங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்தான்..

“ அக்காவை சின்னம்மா என்று சொல்கிறார்கள், அங்கு வீட்டில் அம்மா சமைக்கும் உணவை இது சொத்தை, அது சொல்லை என்று குறை பாடுபவள் இங்கு வேலாவேலைக்கு மெனு சொல்கிறாள்.. அங்கு சென்னையில் ஒரு துரும்பையும் அசைக்காதவள் இங்கே அனைத்தையும் முன் நின்று கவனித்து கொள்கிறாள்.. என்ன நடக்கிறது இங்கே.. ஒன்று மட்டும் புரிகிறது வசுமதி முற்றிலும் மாறிவிட்டாள்”

“ அங்கு சென்னையில் எங்கள் வீட்டில் இளவரசியாக வளம் வந்தவள் இங்கு இந்த வீட்டில் சர்வ சுதந்திரமாக, உரிமையாக மகராணியை போல் அல்லாவ வளைய வருகிறாள் “ என்று எண்ணினான்..   

 “ சரி சரி பேசியது  எல்லாம் போதும். போங்கள் அழகேசன் அண்ணா குளித்து விட்டு வாருங்கள்.. சிவா, ராமை உன் அறைக்கு அழைத்து செல்.. இருவரும் குளித்துவிட்டு வாறுங்கள் ” என்று கூறி சென்று விட்டாள்..

 “ டேய் சிவா என்னடா நடக்கிறது இங்கே? நம்ம வசுவா டா இது, என்னால் சத்தியமாக நம்பவே முடியவில்லை டா  “ என்று சிவாவிடம் ராம் தன் ஆச்சரியத்தை கூறினான்..

“ எனக்கும் அதுதான் புரியவில்லை ராம் அண்ணா.. நான் முதல் முறை இங்கு வந்து சென்றபொழுது இப்படி எல்லாம் இல்லை.. இடையில் இந்த இருபது நாட்களில் தான் இத்தனை மாற்றங்களும் நடந்து இருக்க வேண்டும் “ என்று கூறிவிட்டு குளிக்க சென்றான்..

வசுமதி கதிரவனை வீடு முழுவதும் தேடிவிட்டாள் அவனை காணவில்லை.. அவனுக்கு போன் செய்து பார்த்தாள் லைன் கிடைக்கவில்லை, நாட் ரீச்சபிள் என்று வந்தது.. வசுமதிக்கு கடுப்பும் கோவமுமாக வந்தது..   

“எங்கு சென்று விட்டான் ஒரு வார்த்தை கூட சொல்லாமல். ஒரு வேலை அன்றுபோல எனக்கு தெரியாமல் பின் பக்கமாக வந்து அறைக்குள் நுழைந்து கொண்டானோ ?? இருந்தாலும் இருக்கும் “ என்று எண்ணியபடி கதிரவன் அறைக்கு செல்ல எத்தனித்தால்

“ வசும்மா “ என்று காமாட்சி அழைக்கும் குரல் கேட்டது..

“ இதோ வருகிறேன் அத்தை ” என்று கூறியபடி வேகமாக சமையல் அறைக்குச் சென்றாள்.. அங்கே பொன்மலரும் மல்லிகாவும் இருந்தனர்..

 “ வசும்மா டிபன் எல்லாம் ரெடியாக இருக்கிறது அனைவரயும் உண்ண வரச்சொல்”  என்றார் காமாட்சி..

“ சரி அத்தை “ என்று கூறியபடி அனைவரையும் அழைத்துவர சென்றாள்.. பார்வை வாசலை பார்த்து பார்த்து மீண்டது..  “ எங்கே சென்று விட்டீர்கள் அத்தான் “ என்று மனதிற்குள் குமைந்தாள்.

“ என்ன வசும்மா யாரை தேடுகிறாய்?? ” என்று இப்பொழுது காமாட்சி கேட்டார்.. என்ன கூறுவது என்று ஒரு நிமிடம் யோசித்தவள்

“ இல்லை அத்தை மாமா .. மாமாவை இன்னும் காணவில்லையே ? ”

காமாட்சி “ அவர் இப்பொழுதான் போன் செய்தார் வசுமதி.. மதியம் வந்துவிடுவார்” என்று கூறி சிரித்தார்.. அவருக்கு புரிந்து விட்டது கதிரவனை தான் தேடுகிறாள் என்று.  பொன்மலரும் வசுமதியை காலையில் இருந்து கவனித்து கொண்டுதான் இருந்தாள்.. மேலும் அவளை கடுப்பேத்தும் விதமாக காமாட்சியிடம்

“ ஏன் அத்தை அத்தான் இந்நேரம் அங்கு சென்று சேர்ந்து இருப்பாரா?? காலை என்னிடம் சொல்லி செல்லும் பொழுதே மணி ஏழு இருக்கும் “ என்றாள் நயமாக..

இதை கேட்ட வசுமதி “ஏழு மணிக்கு எல்லாம் கிளம்பி எங்கு சென்றான்..  இவளிடம் எல்லாம் சொல்லி இருக்கிறான். ஆனால் நேற்று மதியம் இருந்து இரவு உறங்க போகும் வரை என்னுடன் தான் இருந்தார் ஒரு வார்த்தை சொல்லவில்லை ” என்று எண்ணினாள்.. வசுமதிக்கு கதிரவன் மேல் கோவம் வரவேண்டும் என்பதற்காகவே தான் பொன்மலர் அவ்வாறு பேசினாள் காமாட்சியிடம்..

இதை புரிந்து கொண்ட காமாட்சி “ அவன் நம் எல்லாரிடமும் சொல்லி செல்லும் போது மணி ஏழு தான் மலரு.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அங்கு சென்று சேர்ந்துவிடுவான் ”  என்று நம்மில் ஒரு அழுத்தத்தை குடுத்து கூறினார்..

வசுமதிக்கு இவை எதுவுமே புத்தியில் பதியவில்லை.. அழகேசன் அனைத்தையும் கவனித்தான்.. முக்கியமாக வசுமதி மற்றும் பொன்மலரின் முக பாவனைகளை கவனித்தான்.. வசுமதி முகத்தில் ஒரு குழப்பம் தோன்றவும் பொன்மலர் முகத்தில் ஒரு முறுவல் தோன்றியது..

“ ஆகா கதிரவன் கூறியது போல் வசுமதி மனதை குழப்ப ஆரம்பித்து விட்டார்கள் “ என்று எண்ணியவன் “ வசு உன்னிடம் கதிரவன் எஸ்டேட்டிற்கு செல்வதாகவும் வருவதற்கு இரண்டு நாள் ஆகும் என்றும் கூற சொன்னான்மா” என்றான்..

அவ்வளோதான்.. வசுமதி மலை ஏறிவிட்டாள் ” இரண்டு நாள் பயணமாக அவள் எஸ்டேட்டிற்கு சென்று இருக்கிறான்.. ஆனால்.. ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூற கூட தோன்றவில்லை.. அவ்வளோ வேண்டாதவளாக போய்விட்டேனா நான் ?? “ என்று எண்ணியவளுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது..

“ ஹே.. அக்கா உனக்கு தெரியாதா அத்தான் சென்றது.. இந்த வீட்டில் தானே இருக்கிறாய்.. பின் என்னத்தை தான் கவனித்து தொலைக்கிறாய்.. போகும்போது  என்னிடம் கூட போன் போட்டு, என்னிடமும் ராம் அண்ணாவிடமும் சொல்லிவிட்டு  தான் சென்றார் தெரியுமா “ என்றான் சிவா பெருமையாக..

“ ஊரிலிருந்து வராத இவனிடம் எல்லாம் சொல்லிவிட்டு போக தெரிந்தது. ஆனால் நான் இங்கே இருக்கிறேன் அதுவும் அவனுடனே இருக்கிறேன்.. அவனின் அறைக்கு நேர் அறையில் தானே இருந்தேன்.. ஒரு வார்த்தை கூறவில்லை.. வரட்டும் “

“ ம்ம் “ என்று மட்டும் கூறி வைத்தாள்.. வசுமதியை பொன்மலரும்  மல்லிகாவும் கவனித்து கொண்டே இருந்தனர்.. அன்னபூரணி காமாட்சியை பார்த்து ஜாடை காட்டினார்.

“ வசும்மா நீ எதுவும் நினைக்காதே… அவன் உன்னிடம் சொல்லிவிட்டு செல்ல தான் வந்தான் ஆனால் நீ நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாய்.. நான் கூட உன்னை எழுப்புவதாய் கூறினேன்.. ஆனால் கதிரவனோ வேண்டாம் அம்மா அவள் நன்றாக தூங்குகிறாள்.. எழுப்ப வேண்டாம்.. எழுந்ததும் கூறிவிடுங்கள்  என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றான் கண்ணம்மா ஆனால் நான் தான் உன்னிடம் கூற மறந்துவிட்டேன் “ என்றார் ஆறுதல் கூறும் விதமாக..

“ ம்ம் சரி அத்தை நான் எதுவும் நினைக்கவில்லை.. அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும் என்னிடம் சொல்வது எல்லாமா முக்கியம்“ என்று அமைதியாகவும் அழுத்தமாகவும் கூறினாள்.. 

காமாட்சி “ ஆஹா மகனே கதிரவா உனக்கு நல்ல ஜோடிதான் வசுமதி.. நீ வந்த பிறகு உனக்கு நிறைய இருக்கிறது ”  என்று எண்ணிக்கொண்டார்..

ராமிற்கு வசுமதியின் மாற்றங்கள், நடை, உடை, பாவனை எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.. “ அங்கே சென்னையில் வீட்டில் இருந்தால் ஏதாவது மாடர்ன் உடைகளில் இருப்பாள்.. வெளியே கிளம்பினால் கூட ஒரு ஜீன்ஸ், லாங் டாப்ஸ் அணிந்துக்கொண்டு தான் வருவாள்.. ஆனால் இங்கே காலையில் இருந்து சுடிதாரில் தான் இருக்கிறாள்.. எப்படி இப்படி மாறினாள்?? ஏன் இவ்வாறு தன்னை மாற்றி கொண்டாள் ??”  என்று யோசித்தபடியே உண்டான்..

அவன் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக் சிவா வசுமதியிடம் “ சுமதி உனக்கு தான் வீட்டில் சுடிதார் போடுவதே பிடிக்காதே பின் அதை போட்டு கொண்டு இருக்கிறாய்  ? ”

“ச்சு அத்தானுக்கு அப்படி எல்லாம் அணிந்தால் பிடிக்காது  “ என்றாள்  சுரத்தே இல்லாமல்.. இந்த பதிலை கேட்ட ராம் மற்றும் சிவாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவள் உடை விஷயத்தில் யார் தலையிட்டாலும் அவளுக்கு சுத்தமாக பிடிக்காது.. யாராவது ஏதாவது கூறினாள் “ ஐ னோ வாட் ஐ டூ.. ” என்று முகத்தில் அடித்த மாதிரி கூறிவிட்டு வந்துவிடுவாள்..

அப்படிப்பட்டவள் இன்று கதிரவனுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தன் உடை விஷயத்தை கூட மாற்றிக்கொண்டாள் என்றால் என்ன அர்த்தம்.. ராமும் சிவாவும் இங்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்..

சிவாவும் ராமும் உண்டுவிட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.. வசுமதியும் பொன்மலரும் அமர்ந்து உண்ண தொடங்கினர்.. இருவருக்கும் மல்லிகா தான் பரிமாறினார்.. வசுமதி குனிந்த தலை நிமிரவே இல்லை.. வேண்டும் என்றே பொன்மலர் வசுமதி முன் சாப்பிடவே பிடிக்காதது போல நடித்தாள்..

உடனே மல்லிகா “ ஏன் டி மலரு சாப்பிடாமல் ஏன் இப்படி சும்மாஉட்கார்ந்து  இருக்க? ” என்று கேட்டார்.. வசுமதி நிமிர்ந்து பொன்மலரை பார்த்தாள்.. தன் முகத்தை மிக கவலையாக வைத்துக்கொண்டு

“ அத்தான் உண்டாரா என்று தெரியவில்லை அம்மா.. அதை நினைத்தால் எனக்கு சாப்பாடே இறங்க வில்லை “ என்று முராரி பாடினாள்..

மல்லிகா வசுமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ அடி மலரு உனக்கு தான் உன் அத்தான் மீது எத்தனை அன்பு.. ஆனால் உன் அத்தானும் சளைத்தவர் இல்லையே அவருக்கும் உன் மீது அளவில்லா அன்பு இருக்கிறது.. உன்னை காணமல் கதிரவன் தம்பிக்கு ஒரு நாள் கூட இருக்க முடியாது.. ஆனால் என்ன செய்வது அனைத்தையும் அவர் தானே கவனிக்க வேண்டும்.”  என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்தார்..

ஆனால் அவளிடம் தான் ஏற்கனவே கதிரவன் இவர்களை பற்றி கூறி இருக்கிறானே.. அதனால் வசுமதி மல்லிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் உண்ண ஆரம்பித்தாள்.. மீண்டும் பொன்மலர் ஆரம்பித்தாள் “ நீ என்ன சொல்லு அம்மா, எனக்கு மனசே கேட்கவில்லை ” என்று வராத கண்ணீரை துடைத்தாள்..

“ ஹ்ம்ம் எனக்கும் தான் மனது கேட்கவில்லை… என்ன செய்வது.. நடக்க வேண்டியது இந்நேரம் நடந்து இருந்தால் நம் நிலைமையே வேறு ” என்று பொடிவைத்து பேசினார்.. இதை அனைத்தையும் கேட்டபடி அழகேசன் வந்து வசுமதியிடம் அமர்ந்தான்..

இப்பொழுதான் வசுமதிக்கு நிம்மதியாக இருந்தது “ நல்ல வேலை வந்து விட்டீர்கள் அண்ணா “ என்பது போல் அவனை பார்வை பார்த்து சிரித்தாள். அவ்வளோதான் மல்லிகாவும் மலரும் அந்த இடத்தை காலிசெய்தனர்..

வசுமதிக்கு தலை வலிப்பது போல இருந்தது.. வேலை அனைத்தும் முடிந்த பிறகு தன் அறைக்கு சென்றாள்.. “ எதற்கும் கதிரவனுக்கு போன் செய்து பார்க்கலாம் ” என்று எண்ணினாள்.. “ அவனே உன்னிடம் சொல்ல செல்லவில்லை நீ அவனிடம் பேசாதே “ என்றது அவள் மனம்..

என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு மேலும் தலை வலி அதிகமாகியது. கண்களை மூடி படுத்துக்கொண்டாள்.. கதிரவன் நினைவே அவளை இம்சித்தது.

 “ ச்சே இவன் இருந்தாலும் என்னை நிம்மதியாய் இருக்க முடிவதில்லை இல்லை என்றாலும் படுத்துகிறான் “ என்று அவனுக்கு மலர் மாலை சூடவேண்டியவள் வசை மாலை சூடினாள்.. திடீரென்று எழுந்து அவன் அறையை திறந்து கொண்டு உள்ளே போனாள். அவன் அறைக்கு உள்ளே சென்ற பிறகுதான் ஏன் அங்கு வந்தோம் என்று..

சுற்றும் முற்றும் பார்த்தாள், ஒன்று அல்லது இரண்டு முறைதான் இங்கே அவனது அறைக்கு வந்து இருக்கிறாள்.. முதல் நாள் அவள் வந்து அவனிடம் பேசியது எல்லாம் நியாபகம் வந்தது..

அவன் உறங்கும் மெத்தை, தலையணை, அவன் உபயோகிக்கும் பொருட்கள்  அனைத்தையும் மெதுவாக தடவிப்பார்த்தாள்.. அனைத்திலும் அவனது வசனை கலந்து இருந்தது.. அவன் அந்த அறையில் இருப்பது போலவே உணர்ந்தாள்.. காற்றில் எதோ காகிதம் பறக்கும் சத்தம் கேட்டது…

“ பேப்பர் கிழிந்து விட்டால் கூட வந்து என்னைத்தான் கத்துவான் “ என்று எண்ணியபடி அந்த காகிதத்தை கையில் எடுத்தாள்.. எடுத்தவள் அப்படியே தன்னை மறந்து நின்றுவிட்டாள்..

“ மதி முகம் கண்டேனடி – நான்

 மதி மயங்கி நின்றேனடி “

என்று கவிதை எழுதி இருந்தது.. வசுமதிக்கு அதை படிக்க படிக்க ஆனந்தம் தாங்கவில்லை.. மீண்டும் மீண்டும் அதை படித்தாள்..

“ என் கதிர்.. என் அத்தான்.. என் கதிர் என்னை  காதலிக்கிறார்.. என்னை போலவே என் அத்தானின் மனதிலும் காதல் இருக்கிறது..” என்று நினைத்து மகிழ்ந்தாள்… ஓடி சென்று கண்ணாடி பார்த்தாள்..

“ மதி முகமாமே “ என்று அவளே கூறிக்கொண்டாள்.. ஏனோ சந்தோசத்தில் அவளுக்கு கண்களில் நீர் வந்தது.. பறப்பது போல உணர்ந்தாள்.. காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிகுந்த சுகமாமே.. கதிரவன் தன்னை நேசிக்கிறான் என்ற எண்ணமே அவளுக்கு தனி ஒரு தைரியத்தையும் , கர்வத்தையும் தந்தது..  

“ அத்தான் இப்போ நீங்கள் மட்டும் நேரில் இருந்தால் எப்படி இருக்கும் ”  என்று யோசித்தவளுக்கு அவன் இங்கே இல்லை என்பது நினைவு வந்தது.. அவன் கூறாமல் சென்றதும் நினைவு வந்தது.. அவள் கோவம் மீண்டும் தலை தூக்கியது. அவள் அறைக்கு சென்றுவிட்டாள்..

சிவாவிற்கும் ராமிற்கும் எதுவோ புரிவது போலவும் இருந்தது.. புரியாதது போலவும் இருந்தது.. எது ஆனாலும் கதிரவன் வந்த பின் பார்த்துகொள்ளலாம் என்று அமைதியாக இருந்தனர்.. அவ்வப்போது மல்லிகா, பொன்மலர் இருவரும் வசுமதி காதுபடவே கதிரவன் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.. அழகேசனுக்கு வசுமதியை இவர்களிடம் இருந்து பார்த்துக்கொள்வதே வேலையாக இருந்தது..

ஆனால் இது எதுவுமே வசுமதியின் மனதில் பதியவில்லை…. அவள் மனம் கதிரவனை ஒவ்வொரு நிமிடமும் தேடியது.. “ என்னை இப்படி மாற்றி விட்டானே..  இப்படி தவிக்க செய்கிறானே” என்று அவன் மீதே கோவமும் வந்தது.. ”

இந்த இரண்டு நாட்களில் வசுமதி யாரிடமும் சரியாக பேசவும் இல்லை.. வீட்டு வேலைகள் அனைத்தையும் முன் நின்று கவனித்தாள்.. ஆனால் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் புன்னகை காணமல் போயிவிட்டது.. அவள் நடையில் இருக்கும் துள்ளல் ஓடி போயிற்று…  கதிரவன் மீது இருக்கும் கோவமும், காதலும் மாற்றி மாற்றி அவளை தவிப்பில் ஆழ்த்தியது..

திடீரென்று வீட்டினுள் பேச்சு சத்தமும், சிரிப்பு சத்தமும் அதிகமாக கேட்டது. “ என்ன திடீரென்று இத்தனை சத்தம்.. யார் வந்து இருப்பார்கள்?? ” என்று கூர்மையாக கவனித்தாள்.. சிவா, ராம் , அழகேசன் என்று அனைவரின் பேச்சு குரலும் கேட்டது.. பின் இன்னொரு குரல்..

 ” அது அவன்.. அவன்.. கதிரவன் வந்து விட்டான்.. வந்தே விட்டானா ?? “ அவளுக்கு மனதில் பழைய உற்சாகம் மீண்டது.. கண்கள் கலங்கின.. ” கதிரவன்… என் கதிர்..என் அத்தான்” என்று நினைத்துகொண்டு வேகமாக உள்ளே ஓடினாள்.. அங்கே ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசி, சிரித்து கொண்டு இருந்தனர்.. கதிரவன் எஸ்டேட்டில் இருந்து வந்து குளித்துவிட்டு டீ குடித்தபடியே அனைவருடனும் பேசிக்கொண்டு இருந்தான்..

“இவன் எப்பொழுது வந்தான்?? வண்டி சத்தம் கூட எனக்கு கேட்கவில்லையே.. எப்படி இவனால் சிரிக்க முடிகிறது?? என்னை இப்படி தவிப்பில் ஆழ்த்திவிட்டு எப்படி இத்தனை சாதரணமாக நடந்து கொள்கிறான் ” என்று அவன் மீது கோவம் அதிகமானது.. அப்படியே நின்றுவிட்டாள் அவனை பார்த்தபடி..

கதிரவன் அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தாலும் அவனின் பார்வை வீட்டையே அலசியது.. “ எங்கே போய்விட்டாள் ?? இருக்கும் அறவே காணவில்லையே.. இரண்டு நாள் பார்க்காமல் இருந்த தவிப்பு எனக்குத்தானே தெரியும் “ என்று அவளை எண்ணியபடி தேடினான்.. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் கவ்வியபடி நின்றது..  அவளை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது..

கதிரவன் “ மதி “ என்று அவளருகில் சென்றான்.. அவன் அருகே வரும் வரை அந்த  நின்று இருந்தவள், அவன் வந்தவுடன் வேகமாக தன் அம்மாச்சியுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டாள்..

குட்டச்சி இரண்டு நாள் கழித்து வந்து இருக்கிறேனே முகத்தை திருப்பி போவதை பார் “ என்று மனதில் செல்லமாக கடிந்தபடி அவளிடம் சென்று அமர்ந்தான்.. வசுமதி இப்படி அனைவரின் முன்பும் தன் அருகில் வந்து அமருவான் என்று துளி கூட எதிர்பார்க்கவில்லை.. படக்கென்று எழுந்து விட்டாள்..

“ மதி ” என்று அழைத்து அவள் கைபிடித்து நிறுத்தினான்….

“ என்ன தைரியம் செய்வதை எல்லாம் செய்துவிட்டு, அனைவரின் முன்னும் இப்படி நடந்து கொள்கிறானே“ என்று அவளுக்கு கொஞ்சம் அவஸ்தையும் கோவமும் கூடியது.. இவர்கள் இருவரையும் அனைவரும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்.. சிவா தன் அத்தையாவது எதாவது செய்வர் என்று அவர் முகம் பார்த்தான்.. ஆனால் அவரோ எதுவோ புது படம் பார்பதுபோல் சுவாரசியமாக பார்த்துகொண்டு இருந்தார்..

கதிரவன் பிடித்த கையை வெடுக்கென்று உதறிவிட்டு மாடி ஏற சென்றாள்.. எங்கே தன் அக்காவை மற்றவர்கள் தவறாக என்னிவிடுவரோ என்று எண்ணிய சிவா “ சுமதி அக்கா நீ செய்வது கொஞ்சம் கூட சரியில்லை.. அத்தான் தான் வந்து பேசுகிறாரே.. உனக்கு அப்படி என்ன கோவமும் பிடிவாதமும்?? “ என்று கேட்டான்..

அவ்வளோதான் இந்த இரண்டு நாட்களாய் கட்டுபடுத்தி வைத்த கோவமெல்லாம் காற்றில் பறந்துவிட்டது வசுமதிக்கு.. “கேட்டேனா ?? நான் உன்னிடம் வந்து கேட்டேனா  ?? எனக்கும் அத்தானுக்கு பஞ்சாயத்து செய் என்று.. இல்லை அல்லவா.. உன் வேலையை மட்டும் பார் புறிகிறதா ?? எனக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யகூடாது என்று.. இது எனக்கும் என் அத்தானுக்கும் இடையில் நடக்கும் விஷயம்.. “ என தன் தம்பியை எண்ணெய் விடாமல் தாளித்தாள்…

சிவா அதிர்ந்துவிட்டான்.. வசுமதி இப்படி பேசுவாள் என்று அவன் எதிர் பார்கவே இல்லை.. “மதி என் மேல் இருக்கும் கோவத்தை ஏன் சிவாவிடம் காட்டுகிறாய் ?? ”  என்றான் கதிரவன்..

கதிரவனுக்கு பதில் கூறாமல் தன் தம்பியிடம் “ சிவா உனக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.. நான் கூறுவதை தவறாக எண்ண மாட்டாய் என்று எனக்கு தெரியும்”  என்று கூறி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “ சமாதானம் செய்வதோ இல்லை சண்டை மூட்டி விடுவதோ எனக்கும் அத்தானுக்கும் நடுவில் வேறு யார் வந்தாலும் எனக்கு பிடிக்காது” என்று கூறி மேலே படி ஏறி சென்று விட்டாள்..

இவள் இப்படி பேசுவாள் என்று அங்கு இருந்த யாருமே கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இத்தனை உரிமையும், நேசமும், அன்புமா கதிரவனிடம் வசுமதிக்கு..  கதிரவன் தான் சுதாரித்து “ சிவா அவள் பேசுவதை தவறாக நினைக்காதே சரியா.. என் மீது இருக்கும் கோவத்தில் இப்படி பேசிவிட்டாள்”

“என் அக்கா என்னை கோவமாக பேசியதற்கு, அத்தான் அவளை நான் தவறாக எண்ணிவிட கூடாது என்று என்னை சமாதானம் செய்கிறார் ” என்று எண்ணியபடியே “ அவளை பற்றி எனக்கு தெரியும் அத்தான் “ என்று மட்டும் கூறி வைத்தான்..

பொன்மலர் நினைத்தாள்“ உடன் பிறந்த தம்பி நடுவில் பேசினதற்கே இத்தனை பேசிவிட்டாள்.. நாம் செய்யும் வேலை தெரிந்தால் அவ்வளோதான் வெளியே அனுப்பிவிடுவாள் போல.. “ முதல் முறையாக அவள் மனதில் ஒரு பயம் வந்தது..

கதிரவன் வேகமாக மாடி ஏறி சென்றான்.. “ என்னடா நடக்குது இங்கு ”  என்பது போல ராமும் சிவாவும் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்..

     உன் நினைவு –13

 

கதிரவனே…

நீ இல்லாத என் வானில் …

இருள் மட்டுமே சூழ்ந்திருக்கிறது..

வந்துவிடு

வெளிச்சம் தந்துவிடு…

தேடி தவித்தேன் ..

துடித்திருந்தேன்…

வந்துவிடு..

கைகள் கோர்த்துவிடு…                  

 

வசுமதி தன் அறையில் ஜென்னல் பக்கம் திரும்பி நின்று இருந்தாள்.. மெல்ல மெல்ல இருள் சூழ்ந்து கொண்டு இருந்தது.. ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் எட்டி பார்த்தன.. இருளை வெறித்தபடி நின்று இருந்தாள்..

“ மதி “ என்று கதிரவன் உள்ளே வந்து அழைத்தான்.. அவன் அவளை தேடி வந்தது அவளுக்கு சந்தோஷம் அளித்தது. இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை.. திரும்பவும் இல்லை…

“ மதிம்மா திறும்பி என்னை பார் “ என்றான்.. அசைவே இல்லை அவளிடம்.. “ மதி ப்ளீஸ் என்ன கோவமாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம்.  “ என்று கூறியபடி அவன பக்கம் திருப்பினான் அவளை.. திரும்பியவள் நிமிர்ந்து அவனை பார்கவே இல்லை..

“ எப்போ வந்தீங்கன்னு கூட கேட்க மாட்டியா மதி ? உன்னை பார்த்து இரண்டு நாள் ஆனது மதி ” என்று கூறியபடி மிக அருகில் வந்து நின்றான் அவளிடம்..

வசுமதிக்கு உள்ளே நடுங்க ஆரம்பித்தது இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “ எப்போ சென்றீர்கள் என்றே தெரியாது எனக்கு,  இதில் எப்போ வந்தீர்கள் என்று வேறு கேட்டு நான் என்ன செய்ய ? ” என்று அவனை நக்கலாக கேட்டாள்..

“ அப்பாடி பேசிட்டா “ என்று எண்ணியவன் “ என்ன மதி என் மேல் உனக்கு கோவம் நிறைய இருக்கு போலவே.. உனக்கு சாரி கேட்டாலும் பிடிக்காது.. பின் உன்னை எப்படித்தான் சமாதானம் செய்வது ?? ” என்று அவளிடமே பாவமாக கேட்டான்.. அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது ஆனாலும் கட்டுபடுத்தி கொண்டாள்..

“இப்படி பேசாமல்  இருந்தால்  எப்படி மதி குட்டி ” என்றான்..

“என்ன இவன் நான் கோவமாக இருக்கிறேன், வந்து கொஞ்சி கொண்டு இருக்கிறான்..” என்று எண்ணியவள் அவனிடம் இருந்து விலக நினைத்து தள்ளி போனாள்.. ஆனால் அவள் எதிர்பாராத சமயத்தில் கதிரவன் அவளை ஒரு இழு இழுத்து சுவரில் சாய்த்து நிறுத்தினான்.. அவள் நகராதவாறு இரு பக்கமும் கைகளை வைத்துகொண்டான்..

வசுமதிக்கு அவ்வளோதான் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. அவளின் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது.. “என்ன மதி உன் இதயம் மிகவும் வேகமாக துடிக்கிறது போல ” என்றான் சிரித்தபடி.. அவனை முறைத்து பார்த்தாள்.. “ தள்ளி நில்லுங்கள் “ என்று கூறினாள்..

“ இன்னும் தள்ளி நின்றால் நான் உன் மீது தான் சாய்ந்து நிற்க வேண்டும் மதி எனக்கு ஓகே, உனக்கு சம்மதமா ?? ” என்றான் தன் மயக்கும் புன்னகை புரிந்து.

“ ம்ம்ச் என்ன இது இப்படி நின்றுகொண்டு பேசுகிறீர்கள்.. செய்வது எல்லாம் செய்துவிட்டு இப்போது வந்து இப்படி நிற்க உங்களுக்கு வெட்கமாக இல்லை “ என்றாள் கோவமாக..

“ மதி உன் கோவம் எனக்கு புரிகிறது செல்லம்.. ஆனால் நீ என்னையும் புரிந்து கொள்ளவேண்டும். என் மதி தானே நீ.. புரிந்துக்கொள் மதி.. உனக்கு எப்படி நான் கோவப்பட்டால் தாங்க முடியவில்லையோ அதுபோல நீ இப்படி என்னிடம் முகம் திருப்பி நிற்பதை தாங்க முடியவில்லை மதிம்மா “ என்றான்..

அவளுக்கு மெல்ல உள்ளே மனம் உருக ஆரம்பித்தது.. அவனை நிமிர்ந்து பார்த்து “ ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றீர்கள் ? ”

“ நான் சொல்லத்தான் நினைத்தேன் மதி. இரவு உன் அரறைக்கு வந்து சொல்ல எண்ணினேன்.. ஆனால் அந்த நேரத்தில் இங்கு வர சங்கடமாக இருந்தது.. பின் ஒரே வீட்டில் இருந்து கொண்டு போனில் சொல்லவும்பிடிக்கவில்லை.. அதுதான் அம்மாவிடம் சொல்லிவிடும் படி சொல்லி சென்றேன் ” 

“ காலை நீங்கள் கிளம்பும்போது கூட சொல்லி இருக்கலாம். நான் எவ்வளவு  தேடினேன் என்று எனக்கு தான் தெரியும் ” என்று அவள் கூறும்போதே.. கண்கள் கலங்கியது.. உதடுகள் துடித்தன…

“மிகவும் ஏங்கிவிட்டாள் போல“ என்று எண்ணியவன். அவளது கைகளை பிடித்து கொண்டான்.. “ நான் வந்தேன் மதி ஆனால் நீ நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாய்.. உன்னை எழுப்ப மனம் வரவில்லை.. மற்றபடி உன்னிடம் சொல்லாமல் செல்ல வேண்டும் என்றெல்லாம் எதுவும் இல்லை மதிம்மா ”

“ சிவாவிற்கு எல்லாம் போன் போட்டு பேசி இருக்கிறீர்கள் “

அவன் மெல்ல நகைத்தபடி “ அவன் முதல் முறையாக ராமை அழைத்துக்கொண்டு வருகிறான்.. அந்த நேரத்தில் நான் இல்லை என்றால் நன்றாய்  இருக்காது.. ஆனால் நான் அங்கு சென்றே ஆகவேண்டும்.. அதனால் தான் நான் அவனிடம் பேசினேன் ” என்று தன்மையாக அவளது கைகளை வருடியபடி கூறினான்.. அவள் பதில் கூறாமல் நின்று இருந்தாள்.. அவள் காதருகே  “ மதி பேசு டி  “ என்றான்..

“ என்ன டி யா ?”

“ஆமாம் டி தான்.. ஏன் டி நான் உன்னை டி போட்டு பேசக்கூடாத டி ??”என்று பல டி போட்டன்.. அவளுக்கும் பிடித்து தான் இருந்தது..  அவளது இடுப்பை வளைத்து மேலும் அருகில் நின்று கூறினான்  “ பதில் சொல்லு டி “     

அவளுக்கு கூச ஆரம்பித்தது “சொல்ல வேண்டும் என்று நினைத்தால் சொல்லி இருக்கலாம்.. உங்களுக்கு மனம் இல்லை “ என்று கூறி அவள் பாட்டிற்கு சண்டை போட ஆரம்பித்தாள்.. அவனும் அவளை எப்படி எப்படியோ சமாதானம் செய்து பார்த்தான்.. அவள் அடங்குவதாக தெரியவில்லை.. பொருத்து பொருத்து பார்த்தான் முடியவில்லை.. ஓயாமல் பேசும் அவள் இதழ்களை சிறை செய்தான்..

அவள் முதலில் திடுக்கிட்டு போனாள். இவன் இப்படி தன்னிடம் நடந்து கொள்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்கவில்லை.. அவனிடம் இருந்து விலக நினைத்தாள் ஆனால் முடியவில்லை.. நேரம் ஆக ஆக அந்த முத்தத்தில் அவள் தன்னை தொலைத்தாள்.. கரைந்தே போனாள்.. எத்தனை நேரம் அப்படி அவர்கள் நின்றனறோ ?? அது அவர்களுக்கே தெரியவில்லை.. கதிரவன் தான் முதலில் அவளை விடுவித்தான்.. கண்கள் மூடி மோன நிலையில் நின்று இருந்தாள்..

அவனது காதலின் முதல் பரிசு அல்லவா.. அதை நினைக்க நினைக்க அவள் உள்ளம் அனந்த கூத்தாடியது.. முகம் சிவந்து நின்று விட்டாள் .. கதிரவனும் மீண்டும் அவளை இறுக அனைத்து கொண்டான்..  மேலும் அவனை ஒன்றினாள்.. அவன் மார்பில் முகம் புதைத்தாள்.. அவளது கண்களில் நீர் வந்தது.. அது அவனது மார்பை நனைத்தது..

” மதி.. மதிம்மா அழுகிறாயா ? மதி நான்.. நான் உன்னை மிகவும் கஷ்டபடுத்தி விட்டேனா ? மதி குட்டி இங்கே என்னை பார்” என்று அவளது முகம் நிமிர்த்தினான்.. கண்கள் மூடிக்கொண்டாள்..

“ மதி உனக்கு.. உனக்கு பிடிக்கவில்லையா   ? ”

மெல்ல கண் திறந்து அவனது கண்களை பார்த்தாள் “ என்னை ஏன் கதிர் இப்படி தவிக்கவிட்டு போனிர்கள்?? நான் எத்தனை தேடினேன் தெரியுமா ? நீங்கள் போன் செய்வீர்கள் என்று எத்தனை எதிர்பார்த்தேன் தெரியுமா கதிர் “

“ அங்கு சரியாக சிக்னல் இருக்காது டி மதி செல்லம்.. போன மாதமும் போகவில்லை.. இரண்டு மாத கணக்குகள் நிறைய இருந்தன.. எப்பொழுதும் மூன்று நாட்கள் தான் இருப்பேன் ஆனால் இப்போ என் மதிக்காக இரண்டு நாளில் ஓடிவந்தேன் “ என்றான்  அவளது மூக்கில் இவன் மூக்கை வைத்து உரசியபடி..

“ ம்ம் ஏனாம் ? ”

“ஏன் என்று உனக்கு புரியவில்லையா மதி “

“சொன்னால் தானே எதுவும் புரியும்.. தெரியும்.. ” என்றாள் மெல்ல அவன் மார்பை குத்தியபடி.. அவள் குரல் மிக குழைந்து விட்டது.. அவளுக்கே நம்ப முடியவில்லை “ நானா இப்படி பேசுகிறேன் “ என்று நினைத்து கொண்டாள்.. 

“மதி “  என்று அழைத்து அவளை இறுக அனைத்துக்கொண்டான்.. அவனுக்கு புரிந்து விட்டது அவள் என்ன தன்னிடம் இருந்து எதிர்பார்கிறாள் என்று.. அவனுக்கு இதற்குமேல் தன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை.. இறுக அணைத்தபடி முத்தங்கள் பதிக்க ஆரம்பித்தான்.. ஒவ்வொரு முத்தத்தின் இடை வெளியிலும் “ ஐ லவ் யு மதி .. ஐ லவ் யு சோ மச் டியர்.. ஐ லவ் யு மதி டார்லிங் ” என்று கூறியபடியே  கொஞ்ச  ஆரம்பித்தான்..

இதை கேட்கதானே அவள் இத்தனை நேரம் காத்திருந்தாள்.. அவளும் அவனுக்கு பதில்கள் தந்தாள்.. சிரித்தாள்.. அனந்த கண்ணீர் வடித்தாள்.. இறுதியாக “ ஐ லவ் யு கதிர்.. ஐ நீட் யு டில் மை லாஸ்ட் ப்ரீத் “ என்று கூறி அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்… இருவரும் தங்கள் காதலை பகிர்ந்து கொண்டனர்.. சந்தோசமாக  மனம் விட்டு பேசினார்கள்.. அவளை மீண்டும் மீண்டும் வெட்க பட வைத்தான் கதிரவன்..

இரவு அனைவரும் உண்டு விட்டு அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டு இருந்தனர்.. சிவபாண்டியனும் ஊரில் இருந்து வந்து இருந்தார். கதிரவன் யாருக்கும் அஞ்சாமல் முழு உரிமையோடு வசுமதி அருகில் அமர்ந்து இருந்தான்.. ஆனால் அவளுக்கு தான் சற்று கூச்சமாக இருந்தது..

 

“என்ன இவன் எல்லார் முன்னும் இப்படி வந்து உட்கார்ந்து இருக்கானே” என்று நினைத்தாள்.. ஆனாலும் அவள் முகம் சந்தோசத்தையும், வெட்கத்தையும் மாற்றி மாற்றி  பிரதிபளித்தது..

 

 “ கொஞ்ச நேரம் முன்னாடி ரண பத்ரகாளி மாதிரி கோவப்பட்டு பேசிவிட்டு போனாள். இப்போ என்னடானா யார் மேல் கோவமாக இருந்தாலோ அவனிடமே சிரித்துகொண்டு இருக்கிறாள்  “ இப்படி நினைத்து வேறு யாரும் இல்லை நம் சிவா தான்.. வசுமதியிடம் தனியாக பேச வேண்டும் என்று சிவா முடிவு செய்தான்.. ராமின் மனதிலும் அதுவே இருந்தது… 

 

கதிரவன் அழகேசனை பார்த்து கட்டை விரலை உயர்த்தினான் எல்லாம் வெற்றி என்பதை குறிக்கும் விதமாக.. அழகேசணும் அதை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக சிரித்தான்.. வசுமதி மற்றும் கதிரவன் முகம் பார்த்தே காமாட்சி அன்னபூரணி சிவபாண்டியன் அனைவரும் புரிந்துகொண்டனர்..

 

“ அவ்வளோ கோவமாய்  மேலே  போனாள்..  பின்னாடியே அத்தானும் போனார். ஆனால் திரும்பி வரும்போது  இரண்டு பேரும் பேசி சிரித்தபடி வந்தாங்க.. அப்படி என்ன நடந்து இருக்கும் இரண்டு பேருக்குள்ளையும் ” என்று குழம்பி தவித்தாள் பொன்மலர்…

 

ஏனோ வசுமதிக்கு பொன்மலரை கண்டால் பாவமாக இருந்தது.. அதை கதிரவனிடமே தனிமையில் இருக்கும் பொழுது கூறினாள் “ அத்தான் எனக்கு பொன்மலரை பார்த்தால்  பாவமாய் இருக்கு.. இத்தனை வருசமா அவள் ஆசை பட்டதை நான் வந்து தட்டி பரித்துவிட்டேனோ ?? பாவம் அத்தான் “

 

“உனக்கு நிஜமாவே கிறுக்கு தான் மதி “

 

“இல்லை அத்தான்.. நீங்க ஊருக்கு போய் இருக்கும் பொழுது கூட அவள் உங்களை பற்றிதான் பேசிக்கொண்டே இருந்தா.. உங்கள் மேல்  நிஜமாவே அவளுக்கு பாசம் இருக்கு “

 

“ சரி இப்ப என்ன செய்யலாம் அதற்கு ? ” என்றான் சற்று கடுப்பாக…

 

“ இல்லை அத்தான் அது வந்து ….”

 

“இங்கே பார்  மதி ஒரு விஷயத்தை நன்றாய் புரிந்துகொள்,  பொன்மலர் மனதில் ஒரு வேலை என் மீது நிஜமாகவே அன்பு இருந்தாலும் நான் எதுவும் செய்ய முடியாது.. என் மனதில் இருக்கிறது நீ தான்.. நீ மட்டும் தான்.. புரிகிறதா??  பின்ன அவள்  நிஜமாகவே என்னை விரும்பவில்லை அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் ஆசை எல்லாம் இந்த சொத்து, பணம், வசதியான வாழ்கை மேல் தான்.. என்ன நான் சொல்லுவது எல்லாம் மண்டையில்  ஏறுகிறதா ?? ”

 

“ ஹ்ம்ம் புரியுது அத்தான் “ என்றாள் மெல்ல சிரித்தபடி..

 

“என்ன சிரிப்பு??  “

 

“ இல்லை நான் இங்கு வந்த முதல் நாள் என்னிடம்  எப்படி பேசினிர்கள்?? இப்போ  மட்டும் இவ்வளோ பாசம் எப்படி ? ”

 

அவளை தான் புறம் இழுத்து அணைத்தவாறே “ அது தான் டி எனக்கும் தெரியவில்லை  சென்னையில் இருந்து வரும் போதே சொக்கு பொடி எதுவும் கொண்டு வந்தாயோ என்னவோ ? “

 

“ ச்சி  போங்க அத்தான் “

 

“ இது என்ன டி மதி குட்டி, முதலில் ச்சு போங்க அத்தான் என்று  சொல்லிட்டு இருந்த… இப்ப ச்சி போங்க அத்தான் என்று எப்போ  மாறிடனது ? ”

 

“ இந்த ஆராய்ச்சி எல்லாம் மிகவும் முக்கியம் இப்ப “ என்றாள் சிணுங்கியபடி..

 

“அப்ப வேறு என்ன மதி ஆராய்ச்சி பண்ணட்டும் ? சொல்லு டி ” என்றான் அவளை இறுக அணைத்தபடி.. அவனிடம் இருந்து திமிறி விலகியபடி

 

“ இங்கு பாருங்க கதிர் இப்படி எல்லாம் பண்ணாதிங்க சொல்லிட்டேன் ”

 

“ஏன் டி பண்ணுனா என்ன செய்வ ? ”

 

“ சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுவேன் “

 

“  எங்கே சத்தம் போடு பார்க்கலாம் “ என்று கூறியபடி அவள் அருகில் வந்து விட்டான்..

 

“ வேண்டாம் அத்தான் நான் நிஜமாவே கத்திருவேன் “

 

“ அடடா நானும் அதை தான சொல்லுறேன் கத்து டி..” என்றான் சிரித்தபடி 

 

அவள் சத்தம் போட வாய் திறந்தாள்.. அது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது.. அவள் எப்பொழுது அவன் அணைப்பிற்கு வந்தாள்? அவன் எப்படி அவள் இதழை சிறை செய்தான் என்று எதுவும் அவளுக்கு புரியவில்லை.. கதிரவன் அவளை தன் சிறையில் இருந்து விடுதலை செய்தான்.. சிரித்தபடி ..

 

“ எங்கே மதி இப்போ கத்து…. தைரியமாய்  இப்போ கத்து டி பார்க்கலாம்.. “

 

“சரியான ரௌடி “ என்று மனதில் நினைத்துகொண்டு “ போங்கள் அத்தான்” என்று சிணுங்கினாள்..

 

“போங்கள்  போங்கள் சொல்கிறாய்  எங்க டி போக  ? “

 

“ ஹா !! காசி ராமேஸ்வரம் இப்படி போய்விட்டு வாருங்கள்  “ என்றாள் சிரித்தபடி..

 

“ அடிப்பாவி, ஹனிமூன் போக வேண்டிய வயசு டி.. காசி ராமேஸ்வரம் போக சொன்னால் எப்படி  உன்னை “ என்று கூறி மீண்டும் அவள் அருகில் நெருங்கினான்.. அவள் அதற்கு முன் தள்ளி நின்று கொண்டு

 

 “ போயிவிட்டு வாங்க அத்தான் புண்ணியம்  கிடைக்கும் “

 

“எனக்கு புண்ணியம் எல்லாம்  வேண்டாம் மதி “

 

“பின்ன ?? “

 

“எனக்கு என்ன வேண்டும் என்று  கேட்டால்  நீ கொடுப்பாயா  ? ” என்றான் குறும்பாக..

 

அவளுக்கு புரிந்து விட்டது.. “ வேறு வம்பே வேண்டாம்.. நீங்கள் பேசாமல் தூங்கி ரெஸ்ட் எடுங்கள்.  நான் என் ரூமுக்கு போகிறேன் “ என்று கூறி ஓடியே விட்டாள்..

 

“ குட்டச்சி ஒரு நாள் என்னிடம்  மாட்டுவ டி “ என்று நினைத்தபடி மெத்தையில் வந்து விழுந்தான் கதிரவன்..

 

அவனுக்கு உறக்கம் வர மறுத்தது.. கண்களை மூடினால் வசுமதியின் நினைவு தான்… அன்று அவன் வீட்டிற்கு வந்ததிலில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தான்..

 

“ சரியான கோவம் வரும் போல.. அவள் தம்பியையே எப்படி பேசிவிட்டாள்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. ஒரு நாள் என்னிடம்  நன்றாய் மாட்ட போகிறாள்  அப்போ  இருக்கு கச்சேரி “ என்று நினைத்தபடி படுத்து இருந்தான்..

 

 “ என்ன இது எப்பொழுதும் எஸ்டேடில இருந்து வந்தால்  அடித்து  போட்ட மாதிரி தூக்கம் வரும்.. இன்று  ஏன் இப்படி இருக்கு.. சரி கொஞ்ச நேரம் மாடியில் நடந்துவிட்டு வந்து படுக்கலாம் ” என்று மாடிக்கு கிளம்பினான்..  

 

படிகளில் ஏறும் பொழுதே மேலே ஏதோ பேச்சுக்குரல் கேட்டது ..” இந்த நேரத்தில் மாடியில்  யாராய் இருக்கும் ?? “ என்று நினைத்தவாறே வேகமாக ஏறினான்.. ஒருகுரல் அப்படியே அவனை நிறுத்தி வைத்தது..

 

அது வேறு யாருமில்லை வசுமதி தான்.. “என்ன இரண்டு பேரும் என்னிடம் எதுவோ பேசவேண்டும் என்று சொல்லி மேல் கூட்டிட்டு வந்து பேசாமல்  அமைதியாக  நின்று இருந்தால் என்ன அர்த்தம்  ??“  வசுமதியின் குறேலே தான்..

 

“ ஆனால்  இந்த நேரத்தில் இவள்  யாரிடம்  பேசிகொண்டு  இருக்கிறாள்  ” என்று மெல்ல எட்டி பார்த்தவன் அப்படியே  நின்று விட்டான்.. சிவாவும் ராமும் அவள் முன்பு கை கட்டி அவள் முகத்தையே பார்த்தபடி நின்று இருந்தனர்…

 

“இவனுங்க இரண்டு பேரும் இந்நேரத்தில் என்ன பண்ணுறானுங்க ? ம்ம் கொஞ்சம் பொருத்து இருந்து பார்க்கலாம் ”  என்று நின்று விட்டான்..

 

“ஹே என்னடா இது, இப்ப இரண்டு பேரும் பேச போறீங்களா இல்லையா “ வசுமதி..

 

சிவா தான் முதலில் ஆரம்பித்தான் “ நீ என்ன பண்ணிக்கொண்டு  இருக்க என்று  உனக்கு புரிகிறதா ??

 

“ஏன் நான் என்ன பண்ணேன் ? ”

 

“ ஏன் நீ செய்வது உனக்கு தெரியவில்லையா ? ” இது ராம்..

 

“ ஆகா இவனுங்க எதாவது கண்டு பிடித்துவிட்டானுங்களா ? கேள்வி கேட்கிற விதத்தை பார்த்தால் அப்படி தான இருக்கு.. சரி எதாவது மதியை திட்டினால் நானே போய் பேசிக்கிறேன் “ என்றபடி நின்று வசுமதி என்ன பேச போகிறாள்  என்பதை அறிய காத்திருந்தான்..

 

“ ஏய் இரண்டு பேருக்கும் கிறுக்கு பிடித்திருக்கா என்ன?? கேட்கிறது எதுவானாலும்  தெளிவாக கேளுங்கடா ” வசுமதி..

 

“ நீயும்  கதிரவனும்  / அத்தானும் லவ் பண்றீர்களா ? ” ராமும் சிவாவும் ஒன்றாகவே கேட்டனர்..

 

இதை கதிரவன் வசுமதி இருவருமே சற்றும் எதிர் பார்கவில்லை.. வசுமதி அப்படியே இருவரையும் பார்த்து நின்று விட்டாள்..

 

” எப்படி தெரியும்? ஒருவேளை அத்தான் எதுவும் சொல்லி இருப்பாங்களோ ? ச்சே ச்சே இருக்காது.. பின்ன எப்படி  ” யோசித்தபடியே நின்று விட்டாள்..

 

இந்த பக்கம் கதிரவனோ “ அடடா என்ன இது ? எப்படி தெரிந்தது? இப்ப என்ன செய்வது  பயத்தில் இல்லை என்று சொல்லிவிடுவாளோ ? “ என்று நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே..

 

“ ஆமாம் நானும் அத்தானும் லவ் பண்ணுகிறோம்.. இப்ப என்ன அதற்கு  ??  “ அழுத்தம் திருத்தமாக கூறினாள் வசுமதி..

 

“ அப்படி போடு டி என் மதி குட்டி…  யப்பா…  என்ன அழுத்தம் “ என்று மனதிற்குள் பாராட்டினான் ..

 

“ என்ன வசுமதி இப்படி சொன்னால் எப்படி ? “ இது ராம்..

 

சிவா எதுவும் பேசவில்லை.. அவளது குரலே அவனுக்கு உணர்த்திவிட்டது.. வசுமதி எத்தனை உறுதியாக  இருக்கிறாள் என்று..

 

வசுமதி “ ஏன் லவ் பண்ணுவதை லவ் பண்ணுகிறேன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும் ??  ”

 

“ ராம் அண்ணா ஒரு நிமிஷம் “ என்று கூறிவிட்டு இப்பொழுது சிவா ஆரம்பித்தான்.. “ இங்க பாரு கா, கதிர் அத்தான் நல்லவர் தான்.. நான் இல்லை என்று  சொல்லவில்லை.. பட் உனக்கு இதெல்லாம் ஒத்துவருமா? “

 

“ டேய் டேய்… இதற்குத்தான் சென்னையில்  இருந்து இரண்டு பேரும்  வந்ததீர்களா டா? “ என்று புலம்ப ஆரம்பித்தான் கதிரவன்..

 

வசுமதி சற்று கடினமாகவே கேட்டாள் “ ஏன் ஒத்துவராது ? ”

 

“ அக்கா எங்களுக்கு புரிகிறது  ஆனால்  கொஞ்சம் யோசித்து பார்,  இப்போ  அவசரப்பட்டு பின்னால் வருதப்படுகிற மாதிரி ஆகிவிட கூடாது.. பொறு பொறு நான் பேசிக்கொள்கிறேன். உனக்கும் அத்தானுக்கும் ஒரு டிரஸ் விசயத்தில்  கூட ஒதுவரவில்லை  அக்கா.. இப்படியே இருந்தால் நீ எப்படி எல்லாத்திலும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டே இருக்க முடியுமா ??? “ என்றான் அமைதியாக.

 

வசுமதிக்கு இதை கேட்டதும் சிரித்துவிட்டாள் “ டேய் சிவா… நீ என் நல்லதற்கு சொல்வது  எனக்கும்  புரிகிறது.  ஆனால்  டிரஸ்லாம் ஒரு மேட்டரே இல்லை.. அத்தானுக்காக நான் எதையும் விட்டு குடுப்பேன், மாற்றிக்கொள்வேன்.  எனக்கு அத்தான் தான் முக்கியம்.. அவருக்கு என்ன பிடிக்குமோ அதுபோலவே நானும் இருந்துவிட்டு போகிறேன்..  வேறு எதுவும் வேண்டாம்  ஐ நீட் மை கதிர் ஒன்லி  ”

 

“இரண்டு பேரும் கேட்டுகொள்ளுங்கள் நான் கதிர் அத்தானை  லவ் பண்ணுகிறேன்… இதில் எந்த மாற்றமும் இல்லை.. எனக்கு லைப் பார்ட்னர் அது அத்தான் மட்டும் தான்.. எனக்கு தெரியும் நிறைய விஷயங்கள் நான் மாற்றிக்கொள்ள வேண்டி வரும் என்று  ஆனால்  என் அத்தானுடைய காதலுக்கு முன்னால் மற்ற விஷயம் எல்லாம் எனக்கு தூசிக்கு சமானம் “ என்று பேசி முடித்தாள்.. 

 

ராம் பேசினான் “ நீ சொல்வது எல்லாம் சரிதான் வசுமதி.. ஆனால் நீ படித்த படிப்பென்ன ? வளர்ந்த விதம் வேறு.. இதை எல்லாம் யோசிக்கவேண்டாமா  ? ”

 

“ டேய் அவதான் தெளிவாக  பேசுகிறாலே அப்புறமும் என்ன கேள்வி” என்று மனதில்   கருவினான் கதிரவன்..

 

“ யப்பா!! உங்கள் இரண்டு பேருக்கும் எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா ? சிவா நீயும் கேட்டுக்கோ.. ராம், நான் சென்னையில்  பிறந்து வளர்ந்தவள்  தான்.. அதற்காக இங்கு  வந்து வாழகூடாது என்று எதுவும் இருக்கிறதா?? இல்லையே.. பின்ன காதலில்  படிப்பு, பணம், அந்தஸ்து இது எதற்கும் இடம் இல்லை.. எனக்கு கதிர் அத்தானை  மிகவும் பிடித்து  இருக்கிறது அவருக்கும் அப்படித்தான்.. எனக்கு வேறு எதுவும் வேண்டாம் “

 

“எனக்கு படித்தவள், பட்டினத்தில்  வளர்ந்தவள், சுதந்திரமாக வாழ்ந்தவள், அது இது என்று  எதுவுமே வேண்டாம்.. திருமதி. கதிரவன்ங்கற பெயரே  போதும்.. கதிர் உடைய நிழலில் வாழும் வாழ்க்கையே போதும் எனக்கு.. அத்தானுக்கு பிடித்த மாதிரி இருந்துவிட்டு போகிறேன்..  உங்களுக்கு என்ன ??  “ என்று கூரியவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது..

 

இதை கேட்ட கதிரவன் ஆடிபோய்விட்டன் “ இவளுக்கு என் மீது இத்தனை அன்பா ?? இத்தனை நம்பிக்கையா? இத்தனை காதலா ?? இது எப்படி இவளால் தன் சுயத்தை அழித்துக்கொண்டு என் மீது இத்தனை நேசமாக இருக்க முடிகிறது.. இவள் கிடைப்பதற்கு நான் என்ன அப்படி செய்துவிட்டேன்.. இவளை இதற்குமேல் அழ விடக்கூடாது ” என்று எண்ணியவன் மேலே ஏறி சென்றான்..

 

சிவாவும் ராமும் வசுமதி இப்படி எல்லாம் கூறுவாள் என்று நினைக்கவில்லை.  அவர்கள் கவலை எல்லாம் எதிர்காலத்தில் வசுமதி கவலைப் படும்படி எதுவும் நடந்து விடக்கூடாதே என்றுதான்..

 

“ என்ன விசாரணை எல்லாம் முடிவிற்கு வந்தாயிற்றா ? ” கதிரவன் கேட்ட படி அவர்கள் அருகில் வந்தான்..

 

 

 

Advertisement