Advertisement

 

உன் நினைவு – 10

உன்னோடு நான் போகும் தூரம்

எல்லையில்லா பயணம்..

உன்னோடு நான் பேசும் பேச்சு

மழையின் சங்கீதம்

உன் முகம் பார்க்கும் பொழுது

என்னவென்று கூறுவேன்

என் உணர்வுகளை ???? 

கதிரவனின் i10  வேகமாக சீறி கொண்டு இருந்துதது.. “  என்ன அத்தான் வீட்டிற்கு அவர்கள் வந்து இருக்கும்போது என்னை இப்படியா இழுத்து வருவது என்ன நினைப்பார்கள் “ என்றாள்..

இதை கேட்ட கதிரவன் மெல்ல சிரித்துவிட்டு “ மதி உனக்கு வந்து இருப்பவர்கள் பற்றி சரியாக தெரியவில்லை.. சுந்தர் மாமா இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவார் ஆனால் மல்லிகா அத்தையும் பொன்மலரும் நாம் வீட்டிற்கு திரும்பி போகும் வரை அவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள்” என்றான்.. அவள் ஒரு குழப்பமான பார்வை பார்த்தாள்..

“ நிஜம் தான் மதி.. சுந்தர் மாமா மிகவும் நல்லவர்”

“ அவரை பார்த்தாலே தெரிகிறது அத்தான்”  என்றாள்..

“ ஆனால் அத்தை அப்படி இல்லை, மிகவும் மோசம் என்று கூற முடியாது. மனதில் தோன்றுவதை அப்படியே யார் என்ன என்று பாராமல் பேசிவிடுவார்கள். எதற்கும் தன்னை முன் நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கொஞ்சம் சுயநலம் ஜாஸ்தி. ஆனால் பொன்மலரோ அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று அறிவது மிக கடினம். பேச்சும் பார்வையும் வேறு வேறாக இருக்கும்.. என்னிடம் மிகுந்த பாசம் வைத்து இருப்பது போல் பேசுவாள் ஆனால் எனக்கு அதெல்லாம் நடிப்பு என்றே தோன்றும் மதி”  என்றான்..

“ ஓ !! ஏன் அத்தான் அது நிஜமான அன்பாக கூட இருக்கலாம் இல்லையா..”

“ ஏன் மதி உண்மையான அன்பிற்கும், இயல்பான பழக்கத்திற்கும் கூடவா எனக்கு வித்தியாசம் தெரியாது.. அம்மாவிற்கு பிறந்த வீட்டு சொந்தம் என்று இருப்பது இவர்கள் மட்டும் தான் மதி.. அம்மாவிற்கு தன் தம்பி என்றால் மிகவும் பாசம் அதனாலேயே இவர்கள் எது செய்தாலும் அம்மா அதை எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள்.. நானும் அம்மாவிற்காக கண்டும் காணாது இருந்துவிடுவேன் “ என்றான்..

“ ஆனால் மதி நீ புதிதாக வந்த உறவு எங்கே உனக்கு முக்கியத்துவம் குடுத்து அவர்களை ஒதுக்கி விடுவோமோ என்று நினைத்து கொண்டு உன்னை காயப்படுத்தும்படி நடந்து விடுவார்களோ என்று சங்கடமாக உள்ளது “ என்றான்..  

சிறிது நேரத்திற்கு முன்னால் இவன் என்னை நோகடித்தது என்ன இப்பொழுது பிறர் நோகடித்து விடுவார்களோ என்று அஞ்சுவது என்ன என்று எண்ணி கொண்டாள்..

“ புரிகிறது அத்தான். அவர்கள் உங்கள் சொந்தம் எனக்கும் தானே சொந்தம்.. நீங்கள் எதுவும் கவலை படவேண்டாம் அத்தான். நான் பார்த்து தன்மையாக நடந்து கொள்வேன்”  என்றாள்.. அத்தனை நேரம் வசுமதியின் மனதில் இருந்த கலக்கம் நீங்கி சந்தோசமாக உணர்ந்தாள். எது நடந்தாலும் என்னுடன் கதிரவன் இருப்பான் என்று அவள் மனது நினைத்தது..  

அவர்கள் சென்ற சாலையின் இருபுறங்களும் தென்னை தோப்பு இருந்தது.. மலைகள் எல்லாம் மிக அருகில் தெரிந்தன. இதை அனைத்தையும் வசுமதி ரசித்துகொண்டே வந்தாள்..

“ வாவ் அத்தான் எப்படி இருக்கிறது இந்த சாலை.. சூப்பர் அத்தான்”  என்று புலங்காகிதம் அடைந்தாள். கதிரவனுக்கோ வசுமதியை ரசிப்பதா இல்லை சாலையை பார்த்து வண்டி ஓட்டுவதா என்றே தெரியவில்லை.. அவள் உபயோகிக்கும் சென்ட் வாசனையோ இல்லை அவளுக்கு என்றே இருக்கும் பிரத்தியேக வாசனையோ எதுவோ ஒன்று அவனை கிறங்க செய்தது.. அமைதியாக வண்டி ஓட்டி கொண்டு வந்தான்..

“ அத்தான் உங்களிடம்தான் பைக் இருக்கிறதே அதில் அழைத்து வராமல் ஏன் காரில் அழைத்து வந்தீர்கள் “ என்றாள்..

“ பைக்கில் வரலாம் மதி ஆனால் இங்கு என்னை முக்கால்வாசி பேருக்கு தெரியும் நீயோ இந்த ஊருக்கு முற்றிலும் புதுசு.. என்ன கூறுவார்கள் தெரியுமா ?? கதிரவன் யாரோ ஒரு பெண்ணை வண்டியில் வைத்துகொண்டு சுற்றுகிறான் என்று கூறுவார்கள்… இதை விட பெரிய காமடி என்னவென்றால் நாம் வீடு போயி சேரும் முன்னே அந்த தகவல் வீடு போயி சேர்ந்துவிடும்”  என்று கூறி சிரித்தான்..

அவர்கள் போகும் வழியில் ஒரு சிறு குன்றின் மீது ஒரு கோவில் தெரிந்தது.. “ அத்தான் என்ன அது கோவில் போல இருக்கிறதே “

“ ஆமாம் மதி.. சிவன் கோவில்.. இதை தென் திருவண்ணாமலை என்று சொல்வார்கள்.  மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் “

“ ஒ !!! அப்போ அங்கே போகலாமா ???”

“இப்போ வேண்டாம் மதி. சிவாவும் வந்துவிடட்டும் அதன் பின் அனைவரும் போகலாம்“    

“ அத்தான் உங்களுக்கு என்னைவிட சிவா மீது தான் அன்பு ஜாஸ்தி”  என்று குற்றபத்திரிக்கை வாசித்தாள்..

“இது என்ன புதிதாக??”

“ நிஜம் தான்.. அன்று சிவாவை தான் தோப்பிற்கு அழைத்து சென்றீர்கள்.. இப்பொழுதும் அவன் வந்தபிறகு கோவிலுக்கு போகலாம் என்று சொன்னீர்கள்.. ஆனால் என்னை மட்டும் அன்று ஜவுளி கடைக்கும் இன்று ஹோட்டலுக்கு அதுவும் நானாக கேட்ட பிறகு தான் என்னை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்” 

“ அடடா மதி… என்ன இப்படியெல்லாம் கூறுகிறாய்..??  அன்று தோப்பிற்கு அழைத்து செல்லாதது உன்னுடன் பெண்கள் யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் அவ்வளோதான் மற்றபடி வேறு எதுவும் இல்லை.. இன்று நீயாக கூப்பிட்டு போக சொன்னாய்.. மதிம்மா ப்ளீஸ் மிகவும் பசிக்கிறது வேகமாக போய்  முதலில் சாப்பிடலாம்  “ என்றான் வேண்டும் என்றே அழும் குரலில்..

அவர்கள் செல்லும் ஹோட்டலும் வந்துவிட, தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து இருவரும் பேசியபடி உண்டு முடித்தனர்..  இருவருக்குமே மனதும் வயிறும் நிரம்பியது.. இருவருமே மற்றவர்கள் அருகாமையில் ஒரு இதத்தை உணர்ந்தனர். இவர்கள் இதத்தை உணரும் இதே வேலையில் அங்கு வீட்டில் மல்லிகாவும் பொன்மலரும் மனதில் வெந்து கொண்டு இருந்தனர்..

கதிரவன் வசுமதியிடம் கூறியது போல சுந்தர் ஏற்கனவே கிளம்பி சென்று விட்டார்.. மல்லிகாவும் பொன்மலரும் மட்டும் அங்கேயே தாங்கி விட்டனர்.. பொதுவாக பொன்மலர் காமாட்சிஅன்னபூரணி முன்பு வாயே திறக்க மாட்டாள்.. நல்ல பெண் போல் நடித்துவிடுவாள்..

எப்படியாவது இந்த வீட்டிற்கு மருமகளாக வந்துவிடவேண்டும் அதுவரை அடக்க சடக்கமாக நடந்து நல்ல பெயர் வாங்கி விடவேண்டும்.. அதிலும் கதிரவன் முன் இவள் நடிக்கும் நாடகம் இருக்கிறதே அப்பப்பா தாங்க முடியாது.. அனைவருக்கும்  இதெல்லாம் தெரியும் நாடகம் என்று.. ஆனால் கண்டும் காணமல் இருந்து விடுவர்..

காமாட்சிதன் தம்பி மனது நோக கூடாது என்பதற்காகவே அமைதியையும் பொறுமையும் கடைபிடித்து வந்தார்.. ஆனால் அன்னபூரணி வீட்டின் பெரியவர் அல்லவா அவ்வப்போது நன்றாக சொட்டிவிடுவார்.. ஆனாலும் மல்லிகா தன் மகளை நன்றாக தயார் செய்து அல்லவா வைத்து இருக்கிறார்..

“ இங்கே பார் மலரு, எக்கசக்கமான சொத்து குவிந்து கிடக்கு.. அதற்கு  எல்லாம் ஒரே வாரிசு கதிரவன் தான்.. அந்த தம்பி மனசுல எப்படியாது இடம் பிடித்திடு அப்புறோ உன்  அத்தை, அந்த கிழவி எல்லாரையும் நம்ம கவனிச்சுக்கலாம் ஆனால் அதுவரை நீ எவ்வளோ பொறுமையா போகணுமோ அவ்வளோ பொறுமையா நடந்துக்கனும் “ என்று கூறி அல்லவா வளர்த்து இருக்கிறார்.. பொன்மலரோ தாயை விட ஒரு படி மேல்..

ஆனால் இப்படி வசந்தியின் குடும்பம் வந்து சேரும் என்று இவர்கள் எதிர்பார்கவில்லை. அந்த நேரம் பார்த்து இவர்கள் வெளியூர் செல்ல நேர்ந்ததது. வசந்திக்கு ஒரு மகள் இருக்கும் விஷயம் கேள்விபட்டதும் மனதில் ஏதோ ஒரு நெருடல் தோன்றியது மல்லிகாவிற்கு..

இந்த வீட்டில் வேலை பார்க்கும் முத்து தான் சுந்தர் இல்லத்திலும் அவ்வப்போது எடுபிடி வேலை பார்த்து வந்தான்.. அவனுக்கு ஒரு பத்து ஐம்பது தந்து அந்த வீட்டின் நிலவரம், யார் வருகிறார்கள் போகிறார்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று மல்லிகா அறிந்து கொள்வார்.. முத்து தான் முதல் முதலில் வசுமதியை பற்றி மல்லிகாவிடம் கூறியது..

“ யம்மா அந்த பொன்னு அதுதாம்மா பெரியத்தாவோட மக வயித்து பேத்தி வசுமதியம்மா.. மிகவும் நல்ல குணம்.. டீ செலவுக்கு எனக்கு ஐம்பது ருவா குடுதாங்கனா பாருங்க.. மிகவும் தங்கமான மனசு.. பாக்கவும் அந்த புள்ள நல்ல லட்சணமா இருக்கு “ என்று மல்லிகா ஊரில் இருந்து வந்தவுடன் அவர்கள் வீட்டில் வேலைக்கு சென்ற முத்து கூறினான்..

இன்னும் கொஞ்சம் அவனிடம் பேசி விஷயத்தை கறந்தார்.. “ சின்னம்மா சொல்லுறது தா எல்லாரு கேக்குறாங்க… கதிரு தம்பி கூட அந்த புள்ளைக்கு முக்கியத்துவம் குடுக்குது “ என்றான்..

அவ்வளோதான் இதை கேட்டதும் மல்லிகாவின் மனம் பதறிவிட்டது.. “ இது என்ன?? இதற்கு என அர்த்தம்?? அப்படியானால் அந்த வீட்டின் அடுத்த எஜமானி வசுமதி என்று முடிவே செய்து விட்டார்களா?? அப்படியானால் நான் இத்தனை நாள் கண்ட கனவு?? என் மகளின் வாழ்கை?? கூடாது இது நடக்கவே கூடாது.. எல்லாம் அந்த கிழவி செய்த வேலையாக இருக்கும்.. விவரமாக தன் மகளின் குடும்பத்தை சேர்த்துகொண்டது மட்டுமில்லாமல் இப்பொழுது சம்பந்தம் செய்ய வேறு ஆசையா ?? இதை நடக்க விட்டால் நான் மல்லிகாவே இல்லை” என்று சூளுரைத்து கொண்டு தான் தன் கணவரையும் மகளையும் அழைத்தபடி அங்கு வந்தது..

வசுமதியை நேரில் கண்ட இருவருக்கும் எத்தனை வேகமாக இவளை இங்கு இருந்து விரட்ட வேண்டுமோ அத்தனை நல்லது என்று முடிவு செய்தனர்.. அனைவரிடமும் எட்டி நின்று பழகும் கதிரவனே அவள் கை பிடித்து அழைத்து சென்ற காட்சியை நேரில் காணவும் தாய்க்கும் மகளுக்கும் மனதில் வன்மமும் குடிக்கொண்டது..

காமாட்சியின் மனதில் என்ன இருக்கிறது என்று அறியவே மல்லிகா பேச்சு கொடுத்து கொண்டு இருந்தார்..

“ என்ன அண்ணி இத்தனை வருஷம் கழித்து எல்லாரும்  ஒன்று  சேர்ந்து இருக்கீங்க பார்க்கவே சந்தோசமா இருக்கு”  என்றார்…

“ ஆமாம் மல்லிகா.. இந்த வீட்டில் பிறந்த ஒரே பொன்னு வசந்தி. அவளோட சொந்தம் இல்லாம இத்தனை நாள் இருந்ததே தப்பு தான்.. எப்படியோ எல்லாமே சரி ஆனதே அதுவே போதும். மனசு நிம்மதியா இருக்கு”  என்றார்..

“ சந்தோஷம் தான் அண்ணி.. உங்க நிம்மதி தான் எங்களுக்கு முக்கியம்.. நீங்க சந்தோசமா இருந்தாலே போதும். இன்னும் என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்கை அமைந்து, உங்களை மாதிரி ஒரு நல்ல மனுசி மாமியராக கிடைத்து, ஒரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாக சென்று விட்டாள் போதும்.. எனக்கு வேறு எதுவும் வேண்டாம் “ என்றார் மல்லிகா காமாட்சியின் முகத்தை உற்று பார்த்தபடி..

மல்லிகாவின் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது என்பது மிக நன்றாகவே காமாட்சி அறிந்தவர். ஆகையால் சிஎதிலும் பிடிகொடுக்காமல் பேசி முடித்துவிட்டார்..

“ அதற்கென்ன மல்லிகா நாங்கள் இத்தனை பேர் இருக்கோம் சும்மா விடுவோமா என்ன ?? பொன்மலர் யார், என் தம்பி மகள் அவளுக்கு ஒரு நல்லது என்றால் நான் முன்னாடி நின்று பார்க்கமாட்டேனா என்ன??  நீ எதற்கும் கவலை படாதே”  என்று கூறினார் ஒன்றும் அறியாதவர் போல்..

இந்த பதிலை கேட்ட பொன்மலர் மல்லிகா இருவருக்குமே மனதிற்குள் காமாட்சி மீது கோவம் அப்படி வந்தது.. ஆனால் வெளியே காட்ட முடியாதே.. மெதுவாக சிரித்தபடி மல்லிகா  “ அது என்னவோ உண்மை தான் அண்ணி நீங்க இருக்க நம்பிக்கையில்  தான் நான் இருக்கேன்”  என்றார்..

இதை எல்லாம் அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அன்னபூரணி, “ ஏன் மல்லிகா காமாட்சி எங்கள் வீட்டு மருமகள்.. அவளை நம்பி நீ இருக்கியா ?? பின்ன உன் புருஷன் சுந்தர்க்கு இவ்வளோதான் மரியாதையா?? அப்ப அவனை நீ நம்பவில்லையா?“ என்று நக்கலாக கேட்டார்..

“ கிழவிக்கு.. மனதிற்குள் என்ன ஒரு எகத்தாளம்“ என்று எண்ணிய மல்லிகா பதில் ஏதும் கூறாது அமைதியாய் இருந்து விட்டார்..

ஆரம்பித்தில் எல்லாம் பொன்மலரிடம் கதிரவன் நன்றாக தான் பேசுவான்.. அவளுமே கதிரவன் பேசவேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்வாள்.. ஒருநாள் அப்படித்தான் மல்லிகா பொன்மலரை கொண்டு வந்து கதிரவன் வீட்டில் விட்டுவிட்டு வெளியே ஒரு வேலையாக சென்று இருந்தார்..

தோட்ட வேலை செய்யும் ஒரு பெண்ணின் சிறு பிள்ளை ஒன்று ஓடி வரும்போது பொன்மலர் மீது மோதி விட்டது.. பொன்மலருக்கு இந்த சிறு விஷயத்தில் கூட பொறுமை இல்லை. கோவம் தலைக்கு ஏற நாசி விடைக்க, “ ச்சி அறிவில்லை உனக்கு இப்படியா வந்து மோதுவாய்”  என்று குழந்தையை கடிந்தாள்..

உடனே அங்கு வந்த அந்த குழந்தையின் தாய், “ மலரு மன்னுசுக்க மா தெரியாம மோதிட்டான்.. அதுக்காக சின்ன பிள்ளையை போய் ச்சினுலாம் சொல்லாத தாயி”  என்றாள் மிகவும் அமைதியாக..

“ ஏய்!! என்ன என்னையே எதிர்த்து பேசுகிறாயா ?? நான் யார் தெரியுமா?? இந்த வீட்டின் மருமகளாக போகிறவள், உங்களுக்கு எல்லாம் அடுத்த எஜமானி. புறிகிறதா?? அதை மனதில் நன்கு பதிய வைத்து என்னிடம் மரியாதையாக ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டும் என்ன” என்று கத்தி விட்டு போனாள்..

இதை அந்த பக்கம் எதார்த்தமாக வந்த கதிரவன் கேட்க நேர்ந்தது.. இதே குழந்தையை நான் இருக்கும் போது தூக்கி எத்தனை முறை கொஞ்சியுல்லாள்.. இன்று இப்படி நடந்து கொள்கிறாள் என்று எண்ணினான்.. பின் அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வரப்போகிறவள் என்று கூறியதை பற்றி எண்ணினான்..

“ இப்படி பட்ட ஒரு எண்ணத்தை அவளிடம் விதைத்தது யார் ?  நிச்சயம் மாமா அப்படி செய்ய மாட்டார். ஒரு வேலை இது எல்லாம் மல்லிகா அத்தையின் வேலையா ??  இல்லை நம் வீட்டிலே இது தான் எண்ணமா?? ஏதுவாக இருந்தாலும் இதை வளர விடக்கூடாது”  என்று எண்ணியவன் வேகமாக தான் தாயிடம் சென்றான்..

அங்கு சென்று பார்த்தால் கதிரவனின் முகத்தில் அப்பட்டமாக கோவம் தெரிந்தது. அன்னபூரணியும் தன் பேரன் முகதில் இருந்த கோவத்தை கண்டு என்ன நடந்து இருக்கும் என்று யோசித்தார்..

“ என்ன அப்பத்தா, அம்மா இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா??“ என்றான் மொட்டையாக..

“ என்ன கண்ணப்பா என்ன எதாவது புரியும்படியா சொல்லு”  என்றார் அன்னபூரணி. அதை ஆமோதிப்பது போல தலை அசைத்தார் காமாச்சி..

“ பொன்மலரை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர எண்ணம் இருக்கா உங்களுக்கு ?? அதுனால தான் இப்படி அவாளை வீட்டிற்குள் சர்வ சாதாரணமாக உலவ விட்டு இருக்கிங்களா “ என்று கேள்வி கேட்டான் இருவரையும் பார்த்து..

இதை கேட்ட பெண்கள் இருவருக்குமே மிகவும் அதிர்ச்சி.. முதலில் பெண் குழந்தை இல்லை என்ற உணர்வால் காமாட்சி பொன்மலரிடம் பாசமாக நடந்து கொள்வார். ஆனால் நாட்கள் ஆக ஆக மல்லிகா, பொன்மலரின் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.. அதில் இருந்து அளவாக வைத்து கொள்வார்.. தன் தம்பிகாக முகம் சுளிக்காமல் பழகுவார்.. ஆகையால் எப்பொழுதுமே பொன்மலரை இந்த வீட்டிற்கு மருமகளாக கொண்டு வரும் எண்ணம் இருந்ததே இல்லை..

ஆனால் இன்று கதிரவன் இப்படி ஒரு கேள்வி கேட்டதும் மனதிற்குள் புது பயம் ஒன்று வந்தது.. என்னவோ நடந்து உள்ளது இல்லை என்றால் இப்படி மகன் நம்மை நிற்கவைத்து கேள்வி கேட்க மாட்டான் என்று எண்ணினார்.. அவர் நினைத்ததுபோல தான் நடந்ததும்..

தன் பேரன் கூறியதை கேட்ட அன்னபூரனிக்கு முதலில் மனதிற்குள் மிகவும் அதிர்ச்சி என்ன இவன் இப்படி பேசுகிறான்.. “ ஒருவேலை அந்த பொன்மலரும் மல்லிகாவும் என் பேரனை தங்கள் வழிக்கு இழுத்துவிட்டர்களா ?? இல்லை இருக்காது அவ்வளோ பலவீனமானவன் இல்லை என் கதிரவன் “ என்று நினைத்தார்.. ஆனால் நம் கதிரவனுக்கு தான் பொறுமை என்றால் என்னவென்றே தெரியாதே..

“ என்ன இருவரும் அமைதியாகி விட்டீர்கள் பதில் கூறுங்கள்”  என்றான்..

மகனின் கோவத்தை குறைத்து முதலில் நடந்தது என்ன என்று அறியவேண்டும் என்று எண்ணிய காமாச்சி, “ கதிரவா என்ன சாமி இது, பொன்மலர் சின்ன வயதில இருந்து இங்கு வந்து போகிறவள்.. நானும் தம்பி மகள் தானே என்று கொஞ்சம் பாசமாக நடத்துவேன்.. அந்த சலுகையில் அவள் உரிமையுடன் நடந்துகொள்வாள்.. ஆனால் அவளை மருமகள் ஆக்கும் எண்ணம் எல்லாம் இங்கு யாருக்கும் கிடையாது.. நீ ஏன் இப்படி கோவமாக பேசுகிறாய் முதலில் என்ன நடந்தது என்று கூறினால் தானே எங்களுக்கு புரியும்”  என்று அவனிடம் கூறி பின் தன் அத்தையை பார்த்தார்..

மருமகளின் பார்வையை உணர்ந்த அன்னபூரணி, “ ஆமாம் கண்ணப்பா நாங்கள் யாரும் அப்படி நினைக்கவில்லை… முதலில் நடந்ததை கூறு “ என்றார்..

பின் கதிரவன் தோட்டத்தில் நடந்த நிகழ்வை கூறினான். அதை கேட்டதும் இரு பெண்களுக்குமே சற்று அதிர்ச்சி தான்.. காமாட்சிதன் மகனிடம் வந்து “ கதிரவா, உனக்கு உன் அம்மா மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா ??  என்  மகன் மனதிற்கு எந்த பெண் பிடிக்கிறதோ, அந்த பெண் தான் இந்த வீட்டின் மருமகளாக வரமுடியும் இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் “ என்றார்..

தன் அம்மாவின் வருத்தம் நிறைந்த முகத்தை கண்டதும் கதிரவனின் கோவம் சூரியனை கண்ட பனித்துளி போல் உருகிவிட்டது.. “ அம்மா உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை என்று நான் கூரவில்லை.. காலையில் அங்கு  நடந்ததை காணவும் எனக்கு குழப்பமாகி விட்டது. என்னிடம் ஒருவார்த்தை கூட கேட்காமல் நீங்கள் அனைவரும் என் கல்யாணத்தை பற்றி முடிவு எடுத்து விட்டீர்களோ என்று அதுவும் இல்லாமல் பொன்மலர் மீது எனக்கு துளி கூட அந்த மாதிரி எண்ணம் இல்லை. ஆனால் அவளோ எல்லாம் உறுதியாகிவிட்டது போல பேசிக்கொண்டு இருக்கிறாள். இதெல்லாம் சேர்த்து வைத்து என்னை கோவம் கொள்ள வைத்துவிட்டது “ என்றான்..

“ சரி கதிரவா, இனி இந்த பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீ எதற்கும் கவலைப் படாமல் உன் வேலையில் கவனம் செலுத்து “ என்று கூறினார்..

அன்று இப்படி பொன்மலர் பேசவும் தாட்பூட் என்று குதித்த கதிரவன் இன்று வசுமதி சர்வ சுதந்திரமாகவும், அனைத்து பொறுப்புகளையும் தனதாக்கிக்கொண்டு, சில சமயம் அவனையே அதிகாரம் செய்து கொண்டு இந்த வீட்டில் சந்தோசமாக உரிமையாக வளைய வருகிறாள்..

அதற்கு கதிரவனுக்கு துளி கூட கோவம் வரவில்லை மாறாக அனைத்தையும் ரசித்துக்கொண்டும், அவளை ஆசையாக பார்த்துக்கொண்டும், மகிழ்ச்சியாக பவனி வருகிறான். இதெல்லாம் கணக்கிலிட்டு தான் அந்த வீட்டு பெரியவர்களான அன்னப்பூரணி சிவபாண்டியன் காமாட்சி அனைவரும் ஒருமனதாக வசுமதியை தங்கள் வீட்டின் மருமகளாக கொண்டுவர முடிவு எடுத்தது..

ஆனால் இதை கெடுக்கவென்றே மல்லிகா, பொன்மலர் இருவரும் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர்.. ஆனால் அவர்களின் எண்ணம், திட்டம் அனைத்தையும் உணர்ந்து இருந்த காமாட்சி ஜாடையாக வசுமதி தான் இவ்வீட்டின் மருமகள் என்று கூறி விட்டார் இருவரிடமும்..

இதை அறிந்ததும், தாய்க்கும் மகளுக்கும் தாங்க முடியவில்லை.. பின்னே இத்தனை வருஷம் அவர்கள் கட்டிய கனவு கோட்டை அல்லவா?? இப்படி சீட்டு கோட்டையாக சரிந்தால் அதை தாங்க முடியுமா?? வேகமாக மனதிற்குள் திட்டம் தீட்டினார் மல்லிகா. காமாட்சி அந்த பக்கம் சென்றவுடன், “ இங்க பாரு மலரு நான் சொல்லுறத தெளிவா கேட்டுக்கோ சரியா “ என்றார்…

“ என்னம்மா நீ இத்தனை நாளா நான் நீ சொன்னபடி தான நடந்துட்டு இருக்கேன்.. ஆனால் பாரு இப்ப அது எல்லாம் வீனா போய்விட்டது.. எல்லாத்தையும் அந்த வசுமதி வந்து கெடுத்துட்டா”  என்று ராகம் பாடினாள்..

“ அடியே அடியே மலரு கொஞ்சம் மெதுவா பேசு டி.. நீ இப்ப பேசினது மட்டும் அந்த கிழவி காதில் விழுந்தது அவ்வளோதான். முன்ன விட இப்ப நம்ம கொஞ்சம் நிதானமா இருக்கனும்.. கொக்கு எப்படி மீனுக்காக நாள் கணக்கா காத்து இருக்கு அது மாதிரி கடைசி நிமிஷம் வரைக்கும் பின்வாங்க கூடாது சரியா”  என்று மகளுக்கு தைரியம் குடுத்தார்..

“ என்னது கடைசி நிமிஷம் வரைக்குமா?? அட போமா கடைசியில் என்ன நடக்கும் அத்தான் அவள் அந்த மெட்ராஸ்காரி கழுத்தில் தாலி கட்டுவார், அதை நீயும் நானும் வேடிக்கை தான் பார்க்கனும் “ என்று முராரி பாடினாள்.. மல்லிகா தன் மகளை முறைத்து பார்த்தார்.. “ என்னம்மா என்னை எதற்கு முறைக்கிற”  என்றாள் பொன்மலர்..

“ நான் சொல்லுறதை முதலில் கேளு மலரு.. “

“ சரி சொல்லு மா நான் இன்னும் என்ன பண்ணனும்..”

“ நீ கதிரு தம்பி முன்னாடி அவள் தான் அந்த வசுமதிகிட்ட நல்ல விதமா நடக்கணும்  புரிகிறதா ??  பொறு பொறு நான் சொல்ல வருவதை சொல்ல விடு.. அந்த பொண்ணு மனதில் என்ன இருக்கு என்று நீ முதலில் தெரிந்துகொள்ளணும். அப்படி ஏதாவது உனக்கு சந்தேகமா இருந்தா, அவள் மனதை நீ குழப்பி விடனும் சரியா “ என்றார்..

“ என்ன குழப்பி விடனுமா ??”

“ ஆமாம் டி.. ஆரம்பத்தில் இருந்தே உனக்கும்  கதிரு தம்பிக்கும் நெருக்கமான பழக்கம் இருக்கிற மாதிரியே அவளிடம் பேசு.. ஆனால் அது உன் அத்தை, கதிரவன் முக்கியமா அந்த கிழவி யாருக்கும் சந்தேகம் வராமல்  செய்யணும் சரியா..”

“ சரி மா இப்படி செய்தால் என்ன நடக்கும் அவள் நேராகவே அத்தானிடம் கேட்டு விட்டால் என்ன பண்றது..”

“ அது எல்லாம் உன் கையில் தான் இருக்கு மலரு.. அவள் இந்த விஷயத்தை உன் அத்தானிடம் சொல்ல கூடாது அந்த மாதிரி நீ அவளிடம் பேசணும். அவள் பட்டிணத்துகாரி நாசூக்காய் தான் இருப்பா. எப்படியும் எதாவது ஒரு சின்ன வாய்ப்பு நமக்கு கிடைக்கும் அதை நாம் விடக்கூடாது புரியுதா, கண் கொத்தி பாம்பாக  இருந்து கவனிக்கணும்.”

“ ம்ம் சரி மா.. நான் எப்படி நடந்துக்கனுமோ அப்படி நடந்துக்கிறேன் சரி நீ என்ன செய்ய போகிறாய்  “ என்றாள்..

“ நானா?? நான் எப்படியாது அவளுக்கும் கதிரு நடுவில் பெரிய பிளவு ஏற்படுத்த முயற்சி பண்ணுவேன்.. அவளை ஊருக்கு அனுப்பாமல்  நான் ஓயமாட்டேன்”  என்றார்.

ஆனால் இதை எல்லாம் அறியாத கதிரவனும் வசுமதியும் காரில் சந்தோஷமாக சிரித்து பேசியபடி வந்து கொண்டு இருந்தனர்.. தங்களுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காது என்று இருவரும் மாறி மாறி பேசியபடியும் மாற்றி மாற்றி கிண்டல் செய்தபடியும் வந்து கொண்டு இருந்தனர்.. இருவரின் மனதிலும் உற்சாகம், மகிழ்ச்சி, நிறைவு என்று கலவையான உணர்வுகள் இருந்தது.. அவர்களின் மன உணர்வு முகத்திலும் எல்லை இல்லை மகிழ்ச்சியை காட்டியது..

“ யப்பா !!! நேரம் போனதே தெரியவில்லை அத்தான் “ என்றாள் வசுமதி..

“ ஆமாம் மதி… இனி உன்னை கொண்டு போய் விட்டுவிட்டு நான் குளித்துவிட்டு  மறுபடியும் ரைஸ் மில்லுக்கு போக வேண்டும் “ என்று அவன் கூறி முடிக்கவில்லை அவனின் செல்போன் தான் இருப்பதை சத்தம் போட்டு அறிவித்தது.. போன் செய்தது வேறு யாரும் இல்லை அழகேசன் தான்.. கதிரவன் கார் ஓட்டிக்கொண்டு இருப்பதால் வசுமதி அவன் போனை பார்த்து அழகேசன் அண்ணா தான் கூப்பிடுகிறார் என்றாள்..

“ மனதிற்குள் கரடி”  என்று “ முனங்கியபடியே அட்டென்ட் செய்து என்னவென்று கேளு மதி “ என்றான்..

“ஹலோ “ என்றாள்..

அந்த பக்கம் அழகேசனுக்கு ஒரே குழப்பம் “ என்னடா இது கதிரவன் போனில் ஒரு பெண் குரல் கேட்கிறது”  என்று நினைத்தான்.. ஒருவேலை நண்பன் நம்மிடம் விளையாடுகிறானோ என்று எண்ணியவன்,,

“ என்னடா கதிரவா எப்ப இருந்து பெண் குரலில் பேச பழகின ?? “ என்று கிண்டல் செய்தான்..

இதை கேட்ட வசுமதி சிரித்தபடியே “ ஹலோ அண்ணா நான் தான் வசுமதி பேசுகிறேன் “ என்றாள்..

“ சொல்லுமா” 

“ அண்ணா நீங்க தான் சொல்லனும் நீங்க தான் போன் செய்திங்க”  அவள் குரலே அழகேசனுக்கு உணர்த்தியது சரி ஏதோ மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது என்று எண்ணினான்.. பின் ஒருவழியாக சுதாரித்துகொண்டு “ கதிரவன் எங்கே மா”  என்று கேட்டான்..

“ அத்தான் கார் ஓட்டிக்கொண்டு இருக்கிறார் அண்ணா அதனால் தான் நான் பேசுகிறேன்..”

“ ஓ!! இருவரும் நகர்வலமா??”  என்று எண்ணியவன் “ சரிம்மா போனை ஒரு நிமிடம் கதிரவனிடம் குடு “ என்றான்.. ஆனால் அவளோ ஸ்பீக்கரில் போட்டாள்..

இதை அறியாத அழகேசனோ, “ டேய் மாபிள்ள கதிரவா”  என்றான் ஒரு கிண்டல் குரலில்..

“ ஆகா!! இவன் சும்மாவே நம்மை ஓட்டுவான் இப்போ நல்ல நேரம் பார்த்து போன் செய்து இருக்கான். மூக்கு வேர்த்துவிடும் போல என்று எண்ணியபடியே, சொல்லுடா அழகு”  என்றான் அதே குரலில்.. இவர்கள் இருவரும் பேசி கொள்வதை பார்க்கும்போது வசுமதிக்கு சிரிப்பாக இருந்தது..

“ என்னடா ஒரே நகர்வலமா உன் மதி தேவியார் கூட “ என்றான் நக்கலாக.. வேகமாக வசுமதி கதிரவன் முகத்தை பார்த்தாள்.. அவனோ அழகேசன் இப்படி சொல்லுவான் என்று சிறிதும் நினைக்கவில்லை.. மதி என்ன நினைப்பாளோ என்று வேகமாக அவளை பார்த்தான்.. அதே நேரம் அவளும் அவனை கண்டாள்… இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று உறவாடியது..

“ டேய் டேய் நீ இருக்கியா ?? டேய் கதிரவா… ”

ஒரு லாரி வேகமாக ஹோர்ன் அடித்தபடி அவர்களின் காரை தாண்டி சென்றது.. இருவரும் தங்கள் பார்வையை மீட்டு கொண்டனர்..

“டேய் டேய் கதிரவா கதிரவா..”

“ என்ன டா சொல்லி தொலை “ என்றான் பல்லை கடித்தபடி…    

“ ஹி ஹி … லைன் ல தான் இருக்கியா ?? இல்லை வானத்தில் பறந்துகிட்டு இருக்கியா ??”

“ டேய் எதுக்குடா போன் செய்த முதலில் அதை சொல் ”  என்றான் சற்று கோவமாக..

“ தெரிகிறது தெரிகிறது  இப்போ  பூஜை வேலை கரடி என்று நீ என்னை நினைக்கிற”  என்று மேலும் கிண்டல் அடித்தான்.. இதை கேட்க கேட்க வசுமதி வாயில் கை வைத்து சிரிக்க தொடங்கி விட்டாள்.. “ அப்பாடி சிரிக்கிறா.. தப்ப எதுவும் எடுக்கலை”  என்று எண்ணியவன், “ டேய் அழகு என்னடா விஷயம் சொல்லுடா “ என்றான் சலிப்பாக..

“ சரி சரி மிகவும் சலிக்காதே மாப்பிள்ள… நைட் வரவேண்டிய லாரி இப்பயே வந்துவிட்டது டா.. நாளைக்கு காலைக்குள் அவர்களுக்கு அரிசி லோடு வேண்டுமாம் “

“ என்னடா இது இப்படி சொன்ன எப்படி. நாளைக்கு மதியம் தான வேண்டும்  சொன்னாங்க..”

“ ஆமாம் டா.. ஆனால் அவர்கள் கிட்ட இருந்து இப்பதான் போன் வந்தது லோடு சீக்கிரமாய் வேண்டுமாம் அதுனால  லாரி அனுபிட்டாங்க கதிரவா..”

“ ஏன்டா நீ எடுத்து சொல்ல வேண்டியதுதான ???”

“ லாரிய அனுப்பிவிட்டுதான் டா போன் செய்தாங்க அதான் வேறு எதுவும் பேச முடியலை.  இப்ப நீ இங்கு வரணும் டா.. அதான் உனக்கு போன் பண்ணேன்..”

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தான் கதிரவன். எப்படியும் வசுமதியை வீட்டில் கொண்டு சென்று விட்டிட்டு வர நேரம் ஆகிவிடும்.. இதை அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த வசுமதி “ அத்தான் வண்டியை நேராக ரைஸ் மில்லுக்கு விடுங்கள்.. வேலை முடிந்த பிறகு நாம் வீட்டிற்கு செல்லலாம்.. அத்தைக்கு ஒரு போன் போட்டு சொல்லிவிடலாம் “ என்றாள்..

அவனோ சிந்தனையாய் நோக்கினான். 

“ என்ன அத்தான் எனக்கு உங்கள் நிலைமை நன்றாக புரிகிறது.. அதனால் தான் சொல்கிறேன் நீங்கள் நேராக ரைச்மில்லுக்கு வண்டியை விடுங்கள் “ என்றாள்..

“ ஆர் யு சியூர் மதி?? அங்கு நெல் உமி அது இது என்று தூசியாக இருக்கும்.. உனக்கு சேராது மதி… தும்மல் வரும் இருமல் வரும் பின் அப்படியே ஜலதோஷம் பிடிக்கும் மூச்சு அடைக்கும்”  என்றான்.. அவள் அவனை ஒருமாதிரி பார்த்தாள்..

“என்ன மதி ???”

“ அத்தான் நான் என்ன படித்துள்ளேன் என்று தெரியும் தானே  ?? கட்டிடம் கட்டுவதற்கு.. அங்கு மட்டும் என்ன அப்படியே மிகவும் சுத்தமான காற்றில் வேலை செய்கிறேனா என்ன ?? அங்கு மணல், சிமிண்டு, செங்கல், ஜல்லி என்று எல்லாம் தானே அத்தான் இருக்கிறது..”

 “ எத்தனை அழகாக புரிந்து இதமாக நடந்து கொள்கிறாள்.. எத்தனை ஆதுரமாக பேசுகிறாள்.. மனதை புரிந்து அதற்கு தக்க நடந்து கொள்கிறாள்.. மனதிற்கு இனிமையாக நடந்துகொள்கிறாள்..”

அப்படியே அவளை அணைத்து கொள்ள வேண்டும் போல் தோன்றிய மனதை மிகவும் சிரம பட்டு அடக்கி கொண்டான். வேண்டாம் கதிரவா இது அதற்கான சமயம் இல்லை என்று கூறிக்கொண்டான்.  வசுமதியும் மனதிற்குள் அழகேசன் உன் மதி தேவியார் என்று கூறியதை நினைத்து கொண்டிருந்தாள்..

அவளை அறியாமல் இதழில்  முறுவல் வந்தது.. முகத்தில் செம்மை பரவியது.. ஏசி காரிலும் அவளுக்கு வியர்த்தது.. மனது பட படவென்று அடித்தது.. அவளின் இதய துடிப்பு அவளுக்கே கேட்டது.. கண்களை இறுக மூடி சாய்ந்து கொண்டாள்..    

“நான் கதிரவனின் மதி யா ???” என்று மனதிற்குள் கேள்வி கேட்டாள்.. பின் தலையை உலுக்கி கொண்டாள் “என்ன இது நாம் இப்படி எண்ணுகிறோம் நமக்கு ஏன் புத்தி இப்படி போகிறது “ என்று அவளை அவளே கடிந்து கொண்டாள்….

இவளின் இந்த அனைத்து முக பாவங்களையும் தன் ஓர பார்வையால் கண்டும் காணமல் வண்டி ஒட்டிக்கொண்டு வந்தான் கதிரவன்..

“ஆகா மனதில் எதையோ எண்ணுகிறாள்.. அவள் மனதிலும் ஏதோ தோன்றுகின்றன போல… அதை நமக்கு சாதகமாக மாற்றி என் காதலையும் அவள் நேசத்தையும் அவளுக்கு உணர வைக்க வேண்டும்” என்று எண்ணிகொண்டான்..

“அழகேசா ரொம்ப தேங்க்ஸ்டா சரியான நேரத்தில் போன் செய்துவிட்டாய்” என்று மனதிற்குள் தன் நண்பனுக்கு நன்றி கூரிக்கொண்டான்..

 

 

 

                              உன் நினைவு – 11  

உன்னிடமே நான் வருகிறேன்

என்னை நானே தருகிறேன்

ஆனாலும் ஏனோ ஒரு தயக்கம்

அது உன்மீது கொண்ட

மயக்கத்தினாலா ???

 

“என்ன மதி யோசனை இறங்கு” என்று அவள் கை பிடித்து இறக்கினான் கதிரவன்.. அவன் அவள் கை தொட்டதும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள்.. அவளின் உள்ளே ஒரு நடுக்கம் ஓடியது.. அதை கதிரவனும் உணர்ந்தான்..

இருவரும் மெதுவாக நடந்து உள்ளே வந்தனர்.. அங்கு இருந்த அனைவரும் இதை ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் பார்த்தனர்.   ஆனால் வசுமதிக்கு கதிரவனை தவிற வேறு எந்த சிந்தனையும் ஓடவில்லை.. மீண்டும் மீண்டும் அவள் எண்ணங்கள் அனைத்தும் அவனையே வளம் வந்தன.. அவனை தவிற வேறு எதுவும் அவள் பார்வையில் பதியவில்லை… திடிரென்று வசுமதி என்று யாரோ கத்தும் குரல் கேட்டது..

திடுக்கிட்டு தன்னை உலுக்கி கொண்டு பார்த்தாள் அழகேசன் தான், தன் இடுப்பில் கை வைத்து அவாளை கிண்டலாக பார்த்துகொண்டு இருந்தான்…

“ அம்மா தங்கச்சி இந்த உலகிற்கு வந்துவிட்டாயா?? ஒரு நிமிஷம் பயந்து போயிவிட்டேன் ஏன் இப்படி சிலை போல் இருகிறாய் என்று.. என்ன ஆகிவிட்டது உனக்கு “ என்று கேட்டான்..

பின் தான் அவளுக்கு உரைத்தது காரில் இருந்து இறங்கி நான் எப்படி இங்கு வந்து அமர்ந்தேன் என்று எண்ணியவள், “அண்ணா நான் எப்படி இங்கு வந்தேன்” என்று கேட்டாள் சுற்றி சுற்றி பார்த்துகொண்டு.. அழகேசனுக்கு மண்டை காய்ந்தது..

“என்னமா மயக்கம் எதுவும் வருகிறதா ?? என்ன ஆயிற்று உனக்கு கதிரவனை எதுவும் மிக அருகில் பார்த்தாயா அதுதான் இப்படி பேய் அடித்தது போல இருக்கிறாயா ??”என்று கேளியாக வினவினான் .. அந்நேரம் அவன் முதுகில் கதிரவன் அறைந்தான்..

“ டேய் சும்மா இருடா “ என்று அழகேசனை அதட்டியபடி “ இந்தா மதி கொஞ்சம் தண்ணீர் குடி “ என்று ஒரு பாட்டில் நீட்டினான்.. அப்பொழுதுதான் கவனித்தாள் கதிரவன் உடை மாற்றி விட்டான்.. வேட்டி சட்டையில் இருந்தான். எந்த உடையிலும் அழகாக இருக்கிறான் என்று தோன்றியது..

“ நான் வருவதற்குள் இந்த மடையன் உன்னை ஓட்ட துவங்கி விட்டானா ??”  என்றான் தன் நன்பனை பார்த்து..

“ அண்ணா என்னை என்ன கிண்டல் செய்தார் ??” என்று தெரியாமல் கேட்டாள்..

அவளின் நிலைமையை புரிந்து கொண்ட கதிரவன், “ அது ஒன்றும் இல்லை மதி நீ இங்கு அமர்ந்து வேடிக்கை பார்.. எனக்கும் அழகேசனுக்கும் வேலை இருக்கிறது “ என்று கூறி அழகேசனையும் இழுத்துக்கொண்டு சென்றான்.. அழகேசன் திரும்பி திரும்பி வசுமதியை பார்த்தவண்ணம் சென்றான்..

“ என்னடா நேராய் பார்த்து வா அங்கு என்ன பின்னாடி பார்வை ??” என்று கேட்டான் கதிரவன்..

“ டேய் கதிரவா நில், என்ன நடக்கிறது இங்க ?? அதுசரி அந்த புள்ளையை ஏன் டா இங்கு கூட்டி வந்து இருக்க ?? வசுமதிக்கு எதும் உடம்பு சரியில்லையாடா இல்லை நீ வழக்கம் போல எதுவும் சண்டை போட்டியா??”   என்று அக்கறையாக விசாரித்தான்..

“ஏன் டா இப்படி எல்லா கேள்வியும் ஒரே நேரத்தில் கேட்டால் நான் என்ன சொல்ல” என்று நடந்த அனைத்தையும் சுருக்கமாக கூறியபடி நடந்தான்.. இதை அனைத்தையும் கேட்ட அழகேசன் தன் நண்பன் கை பிடித்து நிறுத்தி, அவன் கண்களை நேராக பார்த்து “ நீ வசுமதியை காதலிக்கிறாயா ?? “ என்று கேட்டான்..

தன் நண்பன் இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று கதிரவன் சிறிதும்  எதிர்பார்க்கவில்லை.. அவனிடம் மறைத்து எதுவும் ஆகப்போவது இல்லை என்று எண்ணியவன், ஆமாம் அழகேசா என்றான். இதை கூறும் போது கதிரவனின் முகம் லேசாக சிவந்து விட்டது.. முகத்தில் பதற்றம் தெரிந்து.. அதை அனைத்தையும் அழகேசன் கவனித்தான்..

எப்பொழுதும் தைரியமாக எதையும் தயங்காமல் பேச கூடியவன், தெளிவான முடிவு எடுப்பவன் என்று பெயர் வாங்கிய கதிரவன் இன்று தன் காதலை கூறும்போது வெட்கப்டுகிறான், பதட்ட படுகிறான் என்று எண்ணி நகைத்து கொண்டான்..எல்லாம் காதல் படுத்தும் பாடு..

“ டேய் மாப்பிள்ள நீ நிஜமாகத்தான் சொல்கிறாயா??” 

கதிரவன் பதில் கூற வரும்பொழுது அங்கே லாரி டிரைவர் மீண்டும் கத்த ஆரம்பித்தான்..இதை சற்று திரும்பி பார்த்த கதிரவன், அழகேசனிடம் “ டேய்  இப்போ எதுவும் தெளிவாய் பேச முடியாது. வேலை எல்லாம் முடிந்த பின் மதியை வீட்டில் கொண்டு சென்று விட்டு, அதன் பின் நான் அனைத்தையும் உன்னிடம் நிதானமாக கூறுகிறேன், வா இப்போ வேலையை பார்க்கலாம் “ என்று கூறி அவனை இழுத்து சென்றான்..

“ இவன் இப்படி நம்மை மாற்றி விட்டானே சரியான கள்வன்”  என்று எண்ணிக்கொண்டாள் வசுமதி..  அன்று ஒரு நாள் அவள் எண்ணியது நியாபகம் வந்தது, வானத்தில் கதிரவனிடம் ஒளி பெற்றுக்கொண்டு தான் நிலவு பிரகாசிக்கிரதாம்..

“ ஒருவேலை இந்த கதிரவன் இல்லை என்றால் இந்த மதிக்கு மதிப்பே இல்லையோ ?? ஒரு வேலை மதியே இல்லாமல் போய்விடுமோ ?? இவன் தான் என் வாழ்வின் ஜீவனா ??  கதிர் இல்லை என்றால்?? இந்த கேள்வியை அவளே அவளிடம் கேட்டு பார்த்தாள்.. இல்லையில்லை கதிர் இல்லாமல் என்னால் ஒரு வாழ்வை நினைக்க கூட முடியவில்லை பின் எப்படி அவனில்லாமல் வாழ முடியும்.. எனக்கு தோன்றும் இந்த உணர்வுகளுக்கு பெயர் தான் காதலா ??நான் காதலிக்கின்றேனா ??அதுவும் என் அத்தானை ?? என் கதிரவனை ??”

என் கதிரவன் என்று நினைக்கும் போதே மனதிற்குள் மிகுந்த நிறைவையும் சந்தோசத்தையும் உணர்ந்தாள்.“ அத்தான், அழகேசன் அண்ணன் கூறியது போல நான் உங்கள் மதி தான் அத்தான்”  என்று எண்ணி கொண்டாள்.. அவளது கண்கள் அவனை தேடின.. இப்பொழுதே அவனிடம் ஓடிசென்று தன் காதலை கூற வேண்டும் போல் இருந்தது.. எழுந்து குதிக்க வேண்டும் போல இருந்தது.. ஆட வேண்டும் பாட வேண்டும் போல இருந்தது..

“ ஆனால் அடுத்த நிமிடமே அத்தான் மனதில் என்ன இருக்குமோ என்று நினைவு தோன்றியது.. “ ஒருவேலை அவர் என்னிடம் வேறு எண்ணம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டால் நான் என்ன செய்வது.. இல்லையில்லை முதலில் அத்தான் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டும். பிறகுதான் நான் என் காதலை வெளிப்படுத்துவேன் “ என்று அவனை போலவே முடிவு செய்தாள்..

மதியோ கதிரவனை நன்றாக ரசித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.. அவளது மூளை அவளை எச்சரித்தது பொது இடத்தில இப்படியா பார்ப்பாய் என்று,  என் அத்தான், என் கதிர் நான் அப்படித்தான் பார்ப்பேன் என்று அவளே அவளிடம் கூறிகொண்டாள்.

கதிரவன் தெரிந்து கொண்டான் வசுமதி மனதில் எதையோ யோசித்து கொண்டு இருக்கிறாள் என்று.. ஆகையால் அவன் எதுவும் பேசவில்லை.. வசுமதியோ இது காதல் தான் என்று உணர்ந்த பின் அதை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள்.. அவளுக்கு அவள் மீதே ஒரே ஆச்சரியம்..

“ அங்கு சென்னையில் எத்தனை பேரை கடந்து வந்து இருப்போம்.. காலேஜில் என் பின்னே எத்தனை பேர் சுற்றினார்கள். அவ்வளோ ஏன் ராமினது அம்மாவிற்கே என்னை மருமகளாக கொண்டு போகத்தானே ஆசை.. எங்களுக்குள் அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லை என்று நானும் ராமும் கூறிய பிறகுதானே அவர்கள் அந்த திருமண எண்ணத்தையே கைவிட்டார்கள் ”

அவளுக்கு அப்பொழுதுதான் உரைத்தது அவள் இங்கு வந்து ஒரு மாதம்,  முழுதாக முப்பது நாட்கள் ஆகிறது என்று.. ஆனால் வசுமதிக்கோ காலம் காலமாக இங்கேயே இருப்போது போன்று அல்லவா ஒரு உணர்வு தோன்றி விட்டது.. ஒரு வேலை கதிரவன் மீது ஏற்பட்ட பிடிப்பினால் தான் எனக்கு இங்கு இருக்கவே தோன்றியதோ என்று பலவராக சிந்தைனையில் இருந்தாள்..

கதிரவனுக்கும் அழகேசனுக்கும் அப்பொழுதுதான் வேலை முடிந்தது.. கதிரவன் அப்பொழுதான் வசுமதியின் முகத்தை பார்த்தான்.. அவள் முகத்தில் தெரிந்த குழப்பம் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது..

“என்ன கொஞ்ச நேரம் முன்ன இருந்த தெளிவு இப்போ ஏன் இவளிடம் இல்லை.. இதற்கு மேல் இவளை சிந்திக்க விடக்கூடாது” என்று எண்ணியவன் மதி என்று அழைத்தான்.. முதலில் அவளிடம் எந்த பதிலும் இல்லை..

பின் அருகில் சென்று அவள் கையை பிடித்து உலுக்கினான் மதி என்று மீண்டும் அழைத்து.. அவள் திடுக்கிட்டு விழித்தாள்.. “ என்… என்ன அத்தான்.. ”

“வேலை முடிந்து விட்டது மதி கிளம்பலாமா” என்றான்..

“ம்ம்.. முடிந்து விட்டதா அதற்குள்ளா??”

“என்ன அதற்குள்ளா. அம்மா தங்கச்சி நீ இங்கே வந்து மூன்று மணி நேரம் ஆகிறது  தெரியுமா??” என்றான் அழகேசன்..

“ மூன்று மணி நேரமா என்ன அண்ணா சொல்றிங்க..”

“அட ஆமாம் மதி, மணி இப்போ எட்டு நாம் இங்கு வரும்பொழுது மணி ஐந்து   என்றான்” கதிரவன்..

“வாட் எட்டா ?? அவ்வளோ நேரமாவா நான் இப்படியே உட்கார்ந்து இருந்து இருந்தேன்”  என்று மனதிற்குள் எண்ணியவள் வெளியே தன்னை காட்டி கொள்ளாமல்,

“ சரி அத்தான் கிளம்பலாம் நீங்கள் டிரஸ் மாற்றி கொண்டு வாருங்கள்” என்று கூறினாள்..

“இல்லை மதி இப்படியே வருகிறேன் போய் குளித்து கொண்டால் சரியாகி போகும்.. நேரம் வேறு ஆகிறது ” என்று எழுந்து நின்று தன் சட்டையை உதறினான்..

“ஐயோ அத்தான்” என்று வசுமதியின் குரல் கேட்டது..

என்னவோ ஏதோ என்று கதிரவனும் அழகேசணும் திறும்பி பார்த்தனர்.. கதிரவன் தன் சட்டையை உதறும் போது அதில் இருந்த தூசி, அவனையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்த வசுமதியின் கண்களில் விழுந்தது..

“ என்ன மதி என்ன ஆகியது ” என்று பதறியடித்து அவளிடம் வந்து நின்றான் கதிரவன்..

“என்னடா பார்த்து சட்டையை உதரமாட்டியா ?? தங்கச்சி கண்ணில்  தூசி விழுந்தது போல  ” என்றான் அழகேசன்.. பின் “ இருடா நான் போய் தண்ணீர் கொண்டு வரேன் கழுவினால் சரியாக போகும்” என்று தண்ணீர் எடுக்க சென்று விட்டான்.. ஆனால் வசுமதியால் கண் எரிச்சலை தாங்க முடியவில்லை..

“அத்தான் எனக்கு எரிகிறது” என்று கண்களை போட்டு தேய்த்தாள்..

“தேய்க்காதே மதி” என்று கூறி அவளை தன் புறம் திருப்பினான் கதிரவன்.. இதை சிறிதும் எதிர்பார்காதவள் தடுமாறி அவன் மேலேயே மோதி விழுந்து விடாமல் இருக்க அவனையே பிடித்து நின்றாள்..

“ என்ன அத்தான்” அவளுக்கு குரலே எழும்பவில்லை..    

“ மதி ஒரு நிமிடம் கண் திற..”

அவன் தன்னை தொட்டு திருப்பியதுமே வசுமதிக்கு உள்ளே படபடவென்று அடித்தது.. இருதயம் வேகமாக துடித்தது.. கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஐயோ இவன் வேறு கண்ணை திற என்கிறானே.. கண்களை திறந்து அவனை எப்படி என்னால் பார்க்கமுடியும் என்று எண்ணியவள் பின்பு, “முடியவில்லை அத்தான் ”  என்றாள் நடுங்கும் குரலில்..

அவள் குரலில் இருந்த நடுக்கம், உடம்பில் தெரியும் பதற்றம் அனைத்தையும் உணர்ந்தான்  கதிரவன்.. அவள் கண் மூடி அப்படியே நின்று இருந்தாள் அவனை பிடித்தபடி.. அவனும் அவளை லேசாக அணைத்தபடி நின்று அவளையே ரசித்துக்கொண்டு இருந்தான்..

வசுமதிக்கு என்னவோ போல் இருந்தது.. உடல் எல்லாம் தகிப்பது போல இருந்தது.. கண்ணின் எருச்சலை வேறு தாங்க முடியவில்லை.. இவன் வேறு தன்னை பிடித்து நிறுத்தி என்னதான் செய்ய போகிறானோ என்று எண்ணினாள்…  

“ அத்தான் என்ன செய்கிறீர்கள்??”

“நீ பேசாமல் சிறிது நேரம் இரு மதி..”

“ கண் எரிகிறது அத்தான்..”

“நான் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன் மதி..” இருவருக்குமே குரலில் ஒரு குழைவு தோன்றியது..அவளை மிக ஒட்டி நின்று இருந்தான் கதிரவன். அவனது சட்டையை அனிச்சையாக பிடித்து மேலும் நெறுங்கி  நின்றாள் வசுமதி.. கதிரவனின் சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டது.. கண்ணின் எரிச்சலையும் தாண்டி அவளுக்கு ஏதோ ஒன்று இதமாக இருப்பதை உணர்ந்தாள்..            

அவள் நாடியை தன் விரலால் உயர்த்தி அவள் கண் இமைகளை பிரித்தான். மெல்ல மெதுவாக ஊதினான்.. வசுமதிக்கு ஏனோ மிகவும் கூச்சமாக இருந்தது.. உடலில் பலமே இல்லாதது போல உணர்ந்தாள்..  இரண்டு மூன்று முறை ஊதிவிட்டு “ இப்போ எப்படி இருக்கிறது” என்றான் கதிரவன்.. அவன் குரல் மிக அருகில் கேட்டது வசுமதிக்கு..

“ம்ம் பரவாயில்லை அத்தான்”  என்றாள் நடுங்கும் குரலில்.. அவன் மேலே ஏதோ கூற வரும்போது

“ ம்ம்கும் ம்ம்கும்”  என்று செருமல் சத்தம் கேட்டது.. வேறு யாருமில்லை அழகேசன் தான்.. இருவரும் சட்டேன்று விலகி நின்றனர்.. வசுமதிக்கு இப்பொழுது கண்களை திறக்க முடிந்தது.. ஆனால் லேசாக உறுத்தல் மட்டும் இருந்தது..  

 “ என்ன ஊதி ஊதி தூசி எடுத்துவிட்டாய் போல”  என்று தன் நண்பனை பார்த்து கிண்டலாக கேட்டான் அழகேசன்..

“ டேய் “  என்று அவனை பார்த்து பல்லை கடித்தான் கதிரவன்..

 “ இந்த வசும்மா தண்ணியில் கொஞ்சம் முகம் கழுவு, கண்களை தண்ணீர் கொண்டு அழுத்தி கழுவு உறுத்தல் நின்று விடும் ” என்று சட்டென்று வசுமதியிடம் சென்று விட்டான். 

வசுமதிக்கு மனதிற்குள் உற்சாகம் தாங்கவில்லை. “ கண்ணில் தூசி  விழுந்ததும் பதறி கொண்டு வந்தானே.. என் மீது நேசம் இல்லாமலா இந்த பதற்றம் வரும்.. அவனிடம் நானும் அப்படி ஒட்டிக்கொண்டு நின்றேனே மனதில் காதல் இல்லாமல் இதெல்லாம் நடக்குமா என்ன “ என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டாள்..

இவை அனைத்தையும் எண்ணும் போதே வசுமதியின் முகம் சிவந்தது.. அதை மறைக்கவே அழகேசன் குடுத்த குளிர்ந்த நீரை கொண்டு முகம் கழுவி வந்தாள்..தன் காதலை உணர்ந்த பிறகு ஏனோ கதிரவனை நேரில் பார்க்க சகஜமாக பேச கூச்சமாக இருந்தது.. இதற்கே இப்படி என்றாள் அவனோடு எப்படி தனியே வீடு வரை ஒன்றாக வண்டியில் செல்வாள் ?? வசுமதி முகம் கழுவி வருவதற்கும் கதிரவன் அழகேசன் இருவரும் கார் அருகில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது..

இவனோடு எப்படி தனியே செல்வது என்று யோசித்தபடியே வந்த வசுமதி அழகேசன் அங்கு இருக்கவும், “ அண்ணா நீங்களும் எங்களுடன் வாங்களேன் ” என்றாள்..இதை கதிரவனும் எதிர்பார்கவில்லை அழகேசணும் தான்..

“ இல்லை வசுமதி நான் நாளை வருகிறேன் ” என்று கூறினான்..

“ அண்ணா, இனி போய் நீங்கள் சமைத்து சாப்பிட வேண்டும்.. இத்தனை நேரம் வேலை பார்த்தது அசதியாக இருக்கும். அங்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு சாப்பிட்டு பின் உங்கள் வீட்டிற்கு சென்று தூங்க மட்டும் செய்யுங்கள் “  என்றாள்.. அவனோ இல்லை வசுமதி என்று தயங்கி நின்றான்..

“ அத்தான் என்ன பார்த்து கொண்டு அப்படியே இருக்கீங்க கூப்பிடுங்கள்”  என்று  கதிரவனை பார்த்து கூறி “ அண்ணனை அழைத்துக்கொண்டு வந்து ஏறுங்கள் “ என்று காரில் ஏறி அமர்ந்து விட்டாள்….

” ஆமாம் அழகு நீயும் வா, அதுதான் உன் தங்கை அழைக்கிறாளே ” என்று அவனை உற்று பார்த்தான்..

அந்த பார்வையில் “ வந்து விடு அழகேசா, நீ மட்டும் வரவில்லை, அவள் வீட்டிற்கு போவதற்குள் என்னை சாமியாடி விடுவாள் ” என்ற பொருள் பொதிந்து இருந்தது..

தன் நண்பன் தன்னை கெஞ்சும் பார்வை பார்ப்பதை எண்ணி சிரித்துக்கொண்டே, “ சரி சரி கெஞ்சாதே. வசுமதி சொல்வதால் வருகிறேன் ” என்று கூறி காரில் அமர்ந்தான்..

“ எல்லாம் என் நேரம் டா “ என்று கூறியபடியே வண்டியை எடுத்தான். 

அதேநேரம் அங்கு வீட்டில் காமாட்சியிடம் வந்த தங்கம், “அக்கா நைட்டு டிபன் என்ன செய்ய “ என்று கேட்டார்..

“வசுமதி எதுவும் கூறி செல்லவில்லையா” என்று கேட்டார் காமாட்சி.. 

“ நேத்தே இடியாப்பம் பண்ணனும்னு வசும்மா சொல்லுச்சு அப்ப அதையே பண்ணவா “ என்று தங்கம் கேட்டார்…

காமச்சியும் சிரித்தபடி “அவள் கூறிவிட்டாள் பின் எதற்கு என்னிடம் கேட்கவேண்டும் அதையே செய் தங்கம்” என்று கூறினார்.. 

“ என்ன அண்ணி வீட்டில் உங்கள் அதிகாரம் எல்லாம் குறைந்து விட்டது போல எல்லாம் வசுமதியின் கைகளில் சென்று விட்டதா?? எல்லாம் உங்கள் மாமியாரின் வேலையா ?? ”  என்று மெல்ல தூபம் போடா ஆரம்பித்தார்..

காமாட்சிக்கு மனதில் கோவம் வந்தாலும் வெளியே காட்டாமல் அமைதியாக இருந்தார்..

“ என்ன அம்மா இப்படியா அத்தை மனது நோகும்படி பேசுவது.. பாவம் அத்தைக்கு ஏற்கனவே வீட்டில் நிறைய வேலை. இப்போ விருந்தாளிகள் வேறு, எத்தனையை தான் அவர் ஒருவராக சமாளிப்பது ” என்று தன் அத்தைக்கு சார்ந்து பேசுவது போல் பேசினாள்…

தாய்க்கு மகள் சளைத்தவள் அல்ல போல என்று மனதிற்குள் எண்ணியவாரே, “ எனக்கு மனது எல்லாம் நன்றாக தான் இருக்கிறது.  ஏன் முன்னை விட இப்பொழுது மிக உற்சாகமாக இருக்கிறது.. பாதி வேலை என்ன அத்தனை வேலையையும் வசுமதி தான் இழுத்து போட்டு செய்கிறாள். அது மட்டும் இல்லை அவள் வந்த பிறகுதான் வீட்டில் ஒரு உற்சாகம் சந்தோஷம் எல்லாம் மீண்டு வந்தது போல் இருக்கிறது “  என்று பெருமையாக மற்ற இருவருக்கும் உறைக்கும்படி கூறினார்.. 

“ என்ன இருந்தாலும் அண்ணி  நீங்கள் இந்த வீட்டின் மருமகள், எங்கள் வீட்டில் பிறந்தவர்.. இங்கு முழு உரிமையும் அதிகாரமும் உங்களுக்கு தான் முதலில் இருக்கிறது. எதையும் முடிவு செய்யும் அதிகாரமும் உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.. ஆனால் இப்படி எல்லாம் மாறிவிட்டது என்று நினைக்கும் போதுதான் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. அந்த வருத்தத்தில் தான் நான் இப்படி பேசி விட்டேன் அண்ணி “ என்று வார்த்தைக்கு ஒரு அண்ணி போட்டு பேசினார் மல்லிகா..

மல்லிகா இப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அங்கு அன்னபூரணி வந்து விட்டார்.. “ என்ன மல்லிகா என்ன வருத்தம் உனக்கு, மாற்றங்கள் பற்றி வேறு எது எதுவோ பேசி கொண்டு இருந்தாயே ஒன்றை புரிந்துகொள் மாற்றங்கள் ஒன்றே உலகத்தில் மாறாதது ” என்று சற்று அதட்டலாக பேசினார்..

அவரை பார்த்ததும் பொன்மலர் மரியாதை தருபவள் போல எழுந்து நின்றுகொண்டாள்.. அதை பார்த்த அன்னபூரணி “மரியாதை எல்லாம் மனதில் இருந்தால் போதும் வா வந்து உட்கார் “ என்று அழைத்தார்..

“ இல்லை பாட்டி உங்கள் முன் நான் எப்படி உக்காருவது அது மரியாதையாக இருக்காதே, என் அம்மா பெரியவர்கள் முன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு நன்றாக கூறி உள்ளார்கள்“ என்று நயமாக பேசினாள்..

“ அப்படியா பெரியவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி குடுத்தாளா இல்லை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி குடுத்தாளா?? ” என்று அவரும் மிக நயமாக கேள்வி கேட்டு பின் ஏதோ ஒரு நகைசுவை கேட்டவர் போல் பலமாக சிரித்தார்..

அவர் இப்படி பேசியதும் பொன்மலர் என்ன கூறுவது என்று தெரியாமல் தன் அம்மாவை பார்த்தாள்.. மல்லிகாவோ அன்னபூரணியை பார்த்து, “பெரியம்மா உங்களுக்கு எப்பொழுதுமே என்னையும் என் மகளையும் பார்த்தால் கிண்டல் தான். அது சரி உரிமை உள்ளவர்களை தானே இப்படி பேச முடியும் “ என்று இல்லாத உரிமையை அவரே எடுத்துகொண்டார்..

அன்னபூரணி மெல்ல தலை அசைத்தபடி இதை கேட்டுவிட்டு “அது என்னவோ உண்மை தான் மல்லிகா உரிமை உள்ளவர்களை தான் எதுவும் கூற முடியும்”  என்று பொடி வைத்து பேசினார்.. இதற்கு என்ன அர்த்தம் வசுமதி தான் உரிமை உள்ளவள் ஆகையால் தான் அவள் கூற்று படி இங்கு எல்லாம் நடக்கிறது என்று கூறாமல் கூறுகிறதோ இந்த கிழவி என்று யோசித்தாள் பொன்மலர்..

மல்லிகா எதுவோ சொல்ல வாய் திறக்கும்  பொழுதே வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது..காமாட்சிதன் மாமியாரிடம்,“ கதிரவனும் வசுமதியும் வந்து விட்டார்கள் போல அத்தை ” என்று சிரித்தபடி கூறினார். அன்னபூரணியும் ஆவலோடு வாசலை பார்த்தார்..

“ என்ன ஒரு சிரிப்பு ?? என்ன ஒரு ஆவல் இருவருக்கும்.. ?? இருக்கட்டும் இருக்கட்டும் எல்லாம் என் மகள் இங்கு மருமகளாக வரும் வரைதான் அதன் பின் நான் வைத்ததுதான் சட்டம்” என்று மனதிற்குள் கூறிக்கொண்டார் மல்லிகா..

பேச்சும் சிரிப்புமாக வசுமதி கதிரவன் அழகேசன் மூவரும் உள்ளே நுழைந்தனர்.. அழகேசனுக்கு மல்லிகாவை கண்டாலே ஆகாது.. எப்பொழுதும் அவனை மட்டம் தட்டியே பேசியபடி இருப்பார் மல்லிகா.. இதற்கும் அழகேசன் ஒருவகையில் மல்லிகாவிற்கு நெருங்கிய உறவு வேறு..

மல்லிகாவும் பொன்மலரும் அங்கு இருப்பதை பார்த்த அழகேசன் அப்படியே கிளம்புவதாக கூறினான்.. ஆனால் வசுமதி அவனை ஒரு முறை முறைத்து உள்ளே அழைத்து வந்தாள்.. தன் அம்மாச்சியும் அத்தையும் தங்களை ஆவலுடன் காண்பதை உணர்ந்த வசுமதி ஓடி வந்து அவர்கள் கட்டிகொண்டாள்..

“ அம்மாச்சி அந்த ஹோட்டல் மிக அழகு தெரியுமா, எனக்கும் அத்தானுக்கும் நேரம் போனதே தெரியவில்லை அத்தை ” என்று தன் அம்மாச்சியில் தொடங்கி அத்தையிடம் முடித்தாள்..

“ அப்படியா வசும்மா உனக்கு பிடித்து இருந்ததா ?? நீ சந்தோசமாக இருந்தால் சரி “ என்று கூறினார் இருவரும்..

“ ஆமாம் அத்தை ஒருநாள் அனைவரும் போகலாம்  ”  என்று கூறினாள்.

அப்பொழுது அழகேசனை கண்ட அன்னபூரணி, “ என்னடா உன்னையும் இழுத்துக்கொண்டு வந்துவிட்டாளா” என்று கூறி வாஞ்சையை சிரித்தார்.

“ ஆமாம் பாட்டி நான் வரவில்லை என்று தான் சொன்னேன் ஆனால் இருவரும் கேட்டால்  தானே கதிரவனும் நன்றாக வசுமதிக்கு ஒத்து ஊதுகிறான் ” என்று தன் நண்பனையும் வம்பில் இழுத்தான்..

“ டேய் அழகு இதில் என்னை ஏன் இழுக்கிறாய், உன்னை அழைத்தது உன் தங்கை, நான் உன்னை காரில் ஏற்றி கொண்டு வந்தேன் அவ்வளவே ”  என்று கூறி கைகளை விரித்தான்..

“ சரி சரி பேசியது போதும் மூன்று பேரின் மீதும் தூசியாக இருக்கிறது, அழகேசா நீ உன் அரைக்கு போய் குளித்துவிட்டு வா..  நீங்கள் இருவரும் மேலே உங்கள் அறைக்கு சென்று வேகமாக குளித்து விட்டு வாருங்கள்” என்று உத்தரவு போட்டார் காமாட்சி..

அந்த வீட்டில் அழகேசனுக்கு என்று ஒரு தனி அறை உள்ளது.. அவன் தன் தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடிய பொழுது கதிரவன் இங்கு அழைத்து வந்து விட்டான்.. சிறிது நாட்கள் செல்லவும் அழகேசனுக்கு மனதில் சங்கடமாக இருக்கவே மீண்டும் அவனது வீட்டிற்கே சென்று விட்டான்..

காமாட்சி தூசி என்று கூறியதுமே கதிரவனும் வசுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. கதிரவன் பார்த்த பார்வையில் வசுமதியின் முகம் லேசாக சிவந்து போய்விட்டது..இருவரும் அமைதியாக மேலே ஏறினர்.. அழகேசன் தன் அறைக்கு சென்று விட்டான்..

இவை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த மல்லிகாவும் பொன்மலரும் மனதிற்குள் பொருமி தீர்த்தனர்.. “ என்ன திமிர் அந்த மெட்ராஸ்காரிக்கு, நாம் இருப்பதையே கண்டு கொள்ளாமல் அவ்வளவு ஏன் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் எப்படி அலட்சியமாக போகிறாள்.. ஆடி அசைந்து ஊரு சுற்றி வருவதும் இல்லாமல் கூடவே ஒரு தொடுப்பையும் அல்லவா அழைத்து வந்து இருக்கிறாள்.. “

இதில் கதிரவன் அவளை பார்த்தால் ஏன் அவளுக்கு முகம் சிவப்பானேன் என்று ஒரு கேள்வி எழும்பியது.. எதுவோ நடக்கிறது.. அதை என்ன என்று கண்டுபிடித்து வேரோடு வெட்டி எரிய வேண்டும் என்று முடிவு கட்டினார் மல்லிகா..வசுமதியும் அவளது அறையின் வாசலுக்கு நுழையும் பொழுது, மதி என்ற கதிரவனின் அழைப்பு அவளை உள்ளே நுழைய விடாமல் நிறுத்தி வைத்தது..

இவன் எதற்கு அழைக்கிறான் என்று திரும்பி பார்த்தாள்.. அவன் முகத்தில் என்ன உணர்வு இருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை அவளால்..

“ என்ன அத்தான்.. “

“ உன்னிடம் தேங்க்ஸ் சொல்ல வேண்டும் மதி..”

“ தேங்க்ஸ் என்னிடமா ?? எதற்கு அத்தான்..”

“ அழகேசனை வீட்டிற்கு அழைத்ததற்கு மதி, அவன் நான் கூப்பிட்டால் கூட இப்பொழுது எல்லாம் அவ்வளவாக வருவதில்லை.. அவன் வீட்டிலேயே முடங்கி விடுகிறான்.. அதுவும் இல்லாமல் ஹோட்டல் சாப்பாடு வேறு அவனுக்கு ஒத்துகொள்ளவில்லை மதி.. சாப்பிட மட்டுமாவது அவனை வா என்றால் அதையும் ஒத்துகொள்ளவில்லை.. இன்று நீ அழைத்ததும் வந்துவிட்டான் அதான் ” என்றான் கதிரவன் ..

“ ஆகா, அத்தான் அவர் உங்களுக்கு நண்பர் என்றால் எனக்கு அண்ணன் அல்லவா??,   நான் சும்மா வாய் வார்த்தைக்கு அண்ணா என்று அழைக்கவில்லை அத்தான் நிஜமாகவே தான் அழைகிறேன்.. நீங்கள் அவரை பற்றிய கவலையை இனி விடுங்கள் அத்தான்.. நான் அழகேசன் அண்ணாவை இங்கு தங்க வைக்கிறேன் பாருங்கள் ” என்று கூறி சிரித்தாள்..

 “ அனைத்தையும் சிரித்தே சமாளித்து விடு. மதி இனி இது பாடு உன் அண்ணன் பாடு “ என்று அவனும் சிரித்தபடி உள்ளே சென்று விட்டான்..

அவர்கள் நின்று பேசி சிரித்து பின் உள்ளே செல்வதை கீழே இருந்தபடி பொன்மலர் பிறருக்கு தெரியாதபடி பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.. மனதில் வசுமதயிடம் தீராத வெறுப்பு மூண்டது பொன்மலருக்கு,,

“ ச்சே எங்கிருந்தோ வந்து இப்படி என் அத்தானை கைக்குள் போட்டுக்கொண்டாளே.. அத்தானும் அவளிடம் சிரித்து  சிரித்து பேசுகிறார்.. பட்டினத்தில் வளர்ந்தவள் அல்லவா அதுதான் எப்படியோ அத்தானை பசப்பிவிட்டாள்.. இத்தனை ஆண்டுகள் நான் எத்தனை முறை இங்கு வந்து செல்கிறேன் ஒரு முறையாவது என்னிடம் இப்படி பேசி இருப்பாரா ?? மதியாமே மதி பெரிய மேனாமினுக்கி ” என்று வசுமதியை பலவாறாக கரித்து கொட்டினாள்..

அவளின் அனைத்து முக பாவங்களையும் கண்டு கொண்ட அன்னபூரணி “ என்ன மலரு ஒரே சிந்தனை?? எந்த கோட்டையை பிடிக்க இப்படி இவ்வளோ சிந்தனை ” என்று நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடி கேட்டு வைத்தார்..

“ ஆண்டவா இந்த கிழவிக்கு என்னை கவனிப்பதே வேலை போல ”  என்று எண்ணியபடியே, “ அது ஒன்றும் இல்லை பாட்டி வீட்டில் ஏற்கனவே விருந்தாளிகள் நிறைய பேர் இதில் அழகேசன் அண்ணன் வேறு, பின் நாளை வேறு யார் யாரோ வருகிறார்கலாமே. பாவம் அத்தை எப்படித்தான் இத்தனை பேரையும் கவனித்து கொள்ள போகிறாரோ என்று நினைத்து அப்படியே மலைத்து நின்று விட்டேன் ” என்றாள்..

இவள் இவ்வளவு கோடு போட்டாள் அவள் அம்மா பெரிய நான்கு வழி சாலையே போட்டுவிடுவாரே.. “ அப்படி சொல்லடி என் மகளே, பார்த்தீர்களா பெரியம்மா என் மகளுக்கு தான் எத்தனை அக்கறை, அன்பு எல்லாம்.. நீ ஏன் மலரு உன் அத்தையை நினைத்து வருத்தபடுகிறாய், வீட்டு மனுசியாய் நீயும் நானும் இருக்கும் பொழுது.. நாம் இருவரும் இங்கே தங்கிவிடுவோம் உன் அத்தைக்கு ஒத்தாசையாக இங்கேயே இருந்து வரும் விருந்தாளிகளை நன்றாக கவனித்து அனுப்பி வைப்போம் ” என்று கூறி காமாட்சியின் முகத்தை பார்த்தார்..

ஆனால் காமட்சியோ எதுவும் பதில் கூறாமல் தன் மாமியாரை பார்த்தார்.. அன்னபூரணிக்கு தன் மருமகளின் பார்வை புரிந்தது.. “ அதற்கு என்ன மல்லிகா நீங்கள் இங்கு தங்குவது என்ன புது விஷயமா ?? மாதத்தில் பத்து நாட்கள் இங்கு தானே.. பின்ன  நீ கூறியதில் ஒரு சிறு திருத்தம் ” என்று கோவமாக மல்லிகாவின் முகத்தை பார்த்தார் அன்னபூரணி..

அந்த கோவத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் “ என்ன பெரியம்மா சொல்லுங்கள் ” என்றார் மல்லிகா..

“ நீ கூறினாயே வரும் விருந்தாளிகள் என்று வருவது என் பேரன். என் மகளின் மகன்.. பின் பொன்மலர் நீ கூறினாயே ஏற்கனவே இங்கு நிறைய விருந்தாளிகள் என்று இங்கு வந்து இருப்பது என் பேத்தி என் மகளின் மகள்.. வசுமதிக்கும் சிவாவிற்கும் இங்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் இல்லை புறிகிறதா??” என்று சற்று அதிகாரமாகவே கூறினார்..

மல்லிகாவும் பொன்மலரும் பதிலே எதுவும் கூறவில்லை.. அமைதியாக நின்று விட்டனர்.. கிழவி எப்படி பேசுகிறது பார் என்று கறுவி கொண்டனர்..தங்கம் அனைவரயும் இரவு உணவு உண்ண வருமாறு அழைத்தார்..  அதே நேரம் கதிரவனும் வசுமதியும் தங்கள் அறையில் இருந்து ஒரே சமயத்தில் வெளியே வந்தனர்..

வசுமதியை கண்டதும் கதிரவனின் பார்வை மாறியது.. காதலும் மோகமும் அவனது பார்வையில்  குடிகொண்டது.. வசுமதி அவனை விழி விரித்து பார்த்தாள்.. இருவருக்கும்  பேச்சு வரவில்லை.. ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே நின்று விட்டனர்..

“ இவள் தான் எத்தனை அழகு?? .. அழகு பிசாசாக இருந்து என்னை கொள்கிறாயடி.. ஒப்பனை எதுவும் இல்லாமல் ஒப்பற்ற அழகியாய் இருக்க உன்னால் மட்டுமே முடியும் மதி ” என்று மனதிற்குள்  அவளிடம் பேசினான் கதிரவன் ஆனால் பார்வையோ  அவள் மீதே இருந்தது..

ஏனோ அவன் பார்வையின் சூட்டை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. தலை குனிந்து கொண்டாள்.. அவனை மீறி மேலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது போல் இருந்தது.. அவளுக்கு மனதில் பயம் தோன்றியது எங்கே நம்மை மீறி என் கண்களும் முகமும் காதலை வெளி படுத்தி விடுமோ என்று..

அவளின் எண்ணங்களை அவள் முகம் அப்படியே பிரதிபளித்தது..கதிரவன் ஒரு உல்லாச பார்வை பார்த்த படி “ என்ன மதி என்னிடம் எதையோ மறைப்பது போல் இருக்கிறதே “ என்று கேட்டான்..

வசுமதி சுதாரித்துக்கொண்டாள் “ மறைக்கின்றேனா ?? நானா ?? அட என்ன அத்தான் நான் என்ன மறைக்க போகிறேன்” என்று கூறி வேகமாக படி இறங்கினாள்..

கதிரவனும் அவளை பார்த்து “நான் நம்பி விட்டேன் ”  என்று கேளியாக சிரித்தபடி இறங்கி வந்தான்.. வசுமதி முகத்தில் இருந்த செம்மையும், மலர்ச்சியும் கதிரவன் முகத்தில் இருந்த உல்லாசமும் காமாச்சிக்கும் அன்னபூரணிக்கும் மகிழ்வை தந்தது.. இருவரும் சந்தோஷமான முறுவல் ஒன்றை பகிர்ந்து கொண்டனர்..

ஆனால் இதை எல்லாம் பார்க்க பார்க்க பொன்மலருக்கு மேலும் மேலும் மனதிற்க்குள் வசுமதி மீது வெறுப்பு கூடியது..அழகேசணும் அதே நேரம் வந்து சேரவும் அனைவரும் உண்ண சென்றனர்..

“ எங்கே அத்தை மாமா ?? “ என்று காமாட்சியிடம் கேட்டாள் வசுமதி..

“ அவர் பெரியகுளம் வரை சென்று இருக்கிறார் வசும்மா நாளை தான் வருவார் ”  என்றார் காமாட்சி..

 “ ஓ !! சரி அத்தை “ என்று கூறி சிரித்தாள்..

இந்த நேரத்தில் “ ஏன் கண்ணம்மா தலைக்கு நீர் ஊற்றினாய் ” என்று கேட்டார் அன்னபூரணி..

“ ரைஸ்மில் சென்றேன் இல்லையா அம்மாச்சி தலை எல்லாம் தூசியாக இருந்தது அதுதான் ” என்றாள் வசுமதி..

உடனே கதிரவன் “ அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பத்தா மதியின் தலைக்குள் இருப்பது எல்லாம் கொஞ்சம் வெளியே எட்டி பார்த்து இருக்கும் அதுதான் தலைக்கு நீர் ஊற்றி இருக்கிறாள் ” என்று கூறி அவள் தலையை தட்டியபடி அப்படிதானே மதி என்று வம்பிழுத்தான்..

“ ச்சு போங்கள் அத்தான் “ என்று அவன் கையை  தட்டிவிட்டாள்.

“ உங்களுக்கு என்னை வம்பிழுக்காமல் தூக்கம் வராதே “ என்று அவனை பார்த்தாள். கதிரவனின் பார்வை அழகேசனை ஜாடை காட்டியது. அவளும் நான் பார்த்து கொள்கிறேன் என்பதுபோல் கண்ணசைத்தால். இதை கவனித்து விட்ட மல்லிக்காவிற்கு வயிறு பற்றி எரிந்தது..

“ அடிப்பாவி அனைத்தையும் இப்படி நடுவில் வந்து கெடுத்து விட்டாயே.. கண் ஜாடையா காட்டுகிறாய்.. ஆடு ஆடு உன்னால் எவ்வளோ தூரம் போக முடியுமோ போ ஆனால் உன்னால் எப்பொழுதும் இந்த வீட்டின் மருமகள் ஆக முடியாது”  என்று கூறி கொண்டார் மனதிற்குள்.

“நான் பரிமாறுகிறேன் “ என்றாள் வசுமதி ..

“ அய்யயோ ஆண்கள் முன்பு நானும் என் மகளும் அமர்ந்து உண்பதா??  அதிலும் என் மகள் மரியாதை இல்லாமல் அவள் அத்தானின் முன் உட்காரமாட்டாள்  “  என்று அழகேசனை ஒரு பார்வை பார்த்தபடியும் அவள் அத்தானில் ஒரு அழுத்தத்துடனும்  கூறினார் மல்லிகா..  

“ இல்லை சித்தி நீங்கள் வந்து நேரமாயிற்று அதுவும் இல்லாமல் இங்கு அன்னியர் என்று யார் இருக்கிறார்கள்?? ”  என்று கூறிய படியே

 “ அண்ணா ஏன் இன்னும் நின்று கொண்டு இருகின்றீர்கள் உட்காருங்கள் ” என்று சற்று அதட்டலாக கூறினாள் வசுமதி.. அதாவது அழகேசன் எங்களுக்கு முக்கியம் என்பதை மல்லிகாவிற்கு உணர்த்தவே வசுமதி இப்படி செய்தாள்..   

“ என்ன திமிர் நேரடியாகவே என் பேச்சை மறுக்கிறாள்.. அனைவரும் இவள் மகுடிக்கு அல்லவா ஆடுகிறார்கள்.. கதிரவன் என்னவோ இதுவரை பெண்களையே கண்டது இல்லை என்பது போல் அல்லவா பார்த்து வைக்கிறான். வந்த ஒரே மாதத்தில் பெண்களை ஏறெடுத்தும் பாராத கதிரவனையே இப்படி மயக்கி விட்டாளே.. இருவரும் தொட்டு பேசுவது என்ன.. சிரிப்பது என்ன .. கண் ஜாடை செய்வது என்ன.. என் மகளை நேராக பார்த்தாவது பேசி இருப்பனா ?? படித்தவள் பார்க்கவும் அழகாக இருக்கிறாள் என்றதுமே விழுந்துவிட்டான் ” என்று மனதிற்குள் கதிரவனுக்கு வசை பாடினார் மல்லிகா.

அனைவருமே அமர்ந்து உண்ணலாம் என்று காமாட்சி கூறியவுடன் கதிரவன் தன் பக்கம் இருக்கும் இருக்கையை வசுமதியை நோக்கி தள்ளி போட்டான்.. அவனுக்கு வலப்புறம் வசுமதியும் இடப்புறம் அன்னபூரணியும் அதற்கு அடுத்து காமாட்சியும் அமர்ந்து இருந்தனர்.. அழகேசன் சென்று வசுமதியின் அருகில் அமர்ந்து கொண்டான்.. இவர்களுக்கு எதிர் திசையில் மல்லிகாவும் பொன்மலரும் அமர்ந்து கொண்டனர்..

கதிரவனுக்கும் அழகேசனுக்கும் மட்டும் வசுமதி எழுந்து பரிமாறிவிட்டு உண்ண அமர்ந்தாள்..  “ அழகேசா சும்மா சங்கட படமால்  சாப்பிடு “ என்று காமாட்சி கூறினார்.. அவனும் மெல்ல தலை அசைத்துவிட்டு உண்ண ஆரம்பித்தான் அனைவரும் அமைதியாக உண்டு கொண்டு இருந்தனர்..

வசுமதி தான் பேச்சை ஆரம்பித்தாள், “ அண்ணா நாளை உங்கள் மூட்டை முடிச்சை  எல்லாம் கட்டிக்கொண்டு இங்கு வந்து சேருங்கள் ” என்றாள் சிரித்தபடி அதே சமயம் அழுத்தமாகவும் அன்பாகவும்.. இதை அழகேசன் எதிர்பார்கவில்லை எல்லாம் கதிரவனின் வேலையாக இருக்கும் என்று அவனை பார்த்து முறைதான்.. கதிரவனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை என்பது போல பார்த்து வைத்தான்..

“ அண்ணா ! அத்தானை ஏன் முறைக்கிறீர்கள் அவர் ஒன்றும் என்னிடம் சொல்லவில்லை.  நானாக தான் சொல்கிறேன் நாளை இருந்து நீங்கள் இங்கு தான் தங்க வேண்டும் ” என்றாள் உறுதியாக..

“ அதுசரி இவளே இங்கு ஜாஸ்தி தான் இதில் இன்னொருவனை வேறு கூட்டு சேர்க்கிறாளா?? எல்லாம் தலை எழுத்து இதை எல்லாம் கண்ணில் பார்க்கவேண்டும் என்று இருக்கிறது ” என்று நினைத்தாள் பொன்மலர்.. ஆனால் அதேசமயம் வசுமதியை பார்த்து சிநேகமாக புன்னகை புரிந்தாள்..

வசுமதிக்கு ஒரு ஆச்சரியம் “கதிர் கூட நான் வெளியே போகும் போது என்னை பார்த்து வெளிபடையாக முறைத்து என்ன?? இப்பொழுது பார்த்து சிரிப்பது என்ன ?? ஒரு வேலை மனம் மாறிவிட்டளோ??  சரி என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறாளோ அப்படியே நாமும் நடந்து கொள்ள வேண்டும் ”  என்று முடிவு எடுத்து அவளும் மலரை பார்த்து சிரித்தாள்.

இதை எல்லாம் கதிரவன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அதேநேரம் வசுமதி அழகேசனை பார்த்து

 “ என்ன அண்ணா நாளை இருந்து இங்கு வந்து விடுங்கள், பொறுங்கள் பொறுங்கள் நான் பேசி முடித்து விடுகிறேன். உங்களுக்கென்று இங்கே தனியே சமைக்க போவது இல்லை புறிகிறதா அண்ணா?? நீங்கள் இங்கு இருந்தால் கதிர் அத்தானுக்கு இன்னும் ஓத்தாசையாக இருக்கும் அண்ணா.  உங்களுக்கும் அங்கு வீட்டில் தனித்து இருக்கும் கஷ்டம் இருக்காது அண்ணா..”  என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா போட்டு அவனை கரைத்தாள்..

“ இல்லை வசும்மா “ என்று அவன் எதுவோ கூற வந்தான், ஆனால் வசுமதி..

 “ அத்தை அம்மாச்சி நீங்கள் இருவரும் சொல்லுங்கள் அண்ணனை இங்கு தங்கும்படி ” என்று அவ்வீட்டின் பெரிய பெண்களையும் சேர்த்துக்கொண்டாள்.

வசுமதி ஒன்று சொல்லி அதை அன்னபூரனியும் காமாட்சியும் மறுப்பார்களா?? “ ஆமாம் அழகேசா நாளை என்ன இன்றிலிருந்தே இங்கு தங்கிவிடு “ என்று கூறிவிட்டனர்…

அனைவரும் இப்படி ஒன்று சேர்ந்து தன்னை நெருக்குவார்கள் என்று அழகேசன் எதிர் பார்க்கவில்லை.. சரி தன் நண்பனாவது உதவி செய்வான் என்று கதிரவனை பார்த்தால் அவன் இடியாப்பமே கதி என்று தன் தட்டில் மூழ்கிவிட்டன..

அழகேசனுக்கு தெரியும் இது வசுமதியாக மட்டும் கூறவில்லை. கதிரவனும் தான் கூட்டு என்று “ பாவி பாவி நீ எல்லாம் நண்பனாடா ?? இப்படி அனைவரையும் தூண்டிவிட்டு அமைதியாக உண்ணுவதை பார் “ என்று மனதிற்குள் திட்டினான்..

கதிரவனும்  இதை புரிந்தவன் போல லேசாக செறுமியபடி இருமினான், “ யாரோ என்னை திட்டுகிறார்கள் போல”  என்று கூறி கொண்டான்.. வசுமதிக்கும் இது புரிந்தது..

ஆனால் பொன்மலரோ கதிரவனை கவர்கிறேன் என்று  பெயர் பண்ணிக்கொண்டு “ அய்யயோ யார் அத்தான் உங்களை திட்டுவது ?? உங்களை திட்டுவதற்கு இங்கு யாருக்கு தைரியம் இருகிறது ”  என்று அங்கலாய்த்தாள்..

அவளை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு அமைதியாக இருந்துவிட்டான் கதிரவன்.. ஆனால் வசுமதிக்கு தான் பொன்மலரை பார்க்க பாவமாக இருந்தது.. “ ஒருவேலை இவள் நிஜமாகவே கதிரவனை விரும்புகிறாளோ?? ஆனாலும் இவள் பார்வை சரி இல்லையே ”  என்று எண்ணி கொண்டாள்.. இப்படியே அனைவரும் தங்கள் சிந்தைனையில் மூழ்கியபடி உண்டு முடித்து ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்.. அப்போது வசுமதியின் அலைபேசி அடித்தது.. யார் என்று பார்த்தவள் உற்சாகமாக சிவா என்று கூறியபடி போனை எடுத்தாள்..

“ என்னடா தம்பி தங்க கம்பி பஸ் எறிவிட்டாயா ?? “

……

“ ஹ்ம்ம் சரிசரி வந்து என்னை கிண்டல் செய்வதற்கு கொஞ்சம் மிச்சம் வைத்துக்கொள்.. சாப்பிட்டேன்.. அனைவரும் நலம்.. ”

“ அடாடா உன் அத்தான் தானே மிக மிக நலம்.. அதென்ன என் அத்தான் என்று கூறுகிறாய் ?? அவர் எனக்கும் அத்தான் தான் நினைவில் வைத்துகொள் அதுவும் இல்லாமல் எனக்கு தான் முதலில் அத்தான் அதன் பிறகு தான் உனக்கு புறிகிறதா” என்று சிவாவிடம் உரிமை போராட்டம் நடத்தினாள் ..

…..

இதை கேட்ட கதிரவனுக்கு “ தன் தம்பியிடம் கூட தன்னை விட்டு குடுக்க மாட்டேன் என்கிறாள். மனதில் அவ்வளவு உரிமையும் அன்பும் என்மேல்” என்று எண்ணி மகிழ்ந்தான்.. 

“ சரி சரி  பார்த்து பத்திரமாக வந்து சேறு.. “

…..

“ என்ன ராம்மா??? அவன் எப்பொழுது உன்னுடன் கூட்டணி சேர்ந்தான் ?? என்னிடம் ஏன் முன்னேயே கூறவில்லை ?? ”

“ பொறு கேட்டுவிட்டு சொல்கிறேன் ம்..”

….

“ நானே அழைக்கிறேன்.. சரி சரி கட் செய்யடா ” என்று கூறி போனை வைத்தாள்..

ராம் உடைய பெயரை கேட்டதும் மல்லிகா உசாரானார் “ யார் இந்த புதியவன் ராம்?? அவன் எதற்கு இங்கு வருகிறான் ?? அவனுக்கும் இந்த வசுமதிக்கும் என்ன சம்பந்தம் ?? சரி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் இது நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்..” என்று எண்ணினார் மல்லிகா.

அந்நேரம் “ அத்தை ராமும் சிவாவோடு சேர்ந்து ஊருக்கு வருகிறானாம். அம்மா உங்கள் அனைவரை பற்றியும் சொல்லவும் உங்கள் எல்லாரையும் பார்க்கவேண்டும் போல இருந்ததாம் அதனால் சிவாவோடு சேர்ந்து இங்கு வருகிறானாம். நான் என்ன கூறட்டும் அத்தை ?? “  என்று கேட்டாள்..

“ தாரளமாக வரச்சொல்.. அவர்கள் குடும்பம் தான் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை உங்களுக்கு நல்ல பழக்கம் என்று வசந்தி சொன்னாள் அதனால் தாரளமாக வரட்டும் “ என்று அனுமதி தந்தார்..

“அத்தை சரி கூறிவிட்டார், அத்தான் என்ன சொல்வரோ” என்று எண்ணியபடி கதிரவனை ஒரு பார்வை பார்த்தாள்.கதிரவனும் அவளின் பார்வையை புரிந்துகொண்டவன் போல “ தாரளமாக வரட்டும் மதி “ என்றான்.

வசுமதிக்கு மனதிற்குள் பயம் “ எங்கு கதிரவன் கோவப்பட்டு விடுவானோ வரவேண்டாம் என்று கூறி விடுவானோ ?? அப்படி கூறிவிட்டால் ராமிடம் எப்படி வேண்டாம் என்று கூறுவது ”என்றெல்லாம் ஒரு நிமிடம் எண்ணி பயந்தே போய்விட்டாள்..

ஆனால் கதிரவன் சரி என்று கூறவும் அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.. “ தேங்க் யூ  சோ  மச் கதிர் ” என்றாள் தலை சரித்து அவனை பார்த்து சிரித்தபடி..

அவனும்  அவளை பார்த்து சிரித்தபடி “ சிவாவிற்கு போன் செய்து சொல்  “ என்றான்..

பொன்மலருக்கு வசுமதி கதிரவனை கதிர் என்று கூறியதை கேட்டதும் மனதில் சொல்லமுடியாத பொறமை தோன்றியது..

சிவாவிடம் பேசியபின் வசுமதி அழகேசனிடம் திரும்பினாள்.. “ சரி அண்ணா இத்தனை நேரம் நீங்கள் யோசித்து இருப்பீர்கள் அல்லவா சொல்லுங்கள் இங்கே இருக்க போறிங்க தானே “ என்று கேட்டாள்..

“ இல்லை வசும்மா எனக்கு என்னவோ இது சரிபட்டு வரும் என்று தோன்றவில்லை “

“ ஏன் சரிபட்டு வராது அண்ணா?? ம்ம் உங்கள் தங்கை சொன்னால் கேட்க மாட்டீர்களா?? சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் நான் ஊருக்கு செல்வது வரை மட்டுமாவது இருங்களேன் அண்ணா“ என்று கெஞ்சுவது போல் கேட்டாள்..

“ ம்ம் நீ இவ்வளவு சொல்றதுனால நான் இங்கு இருக்கிறேன் வசுமதி “ என்றான் அழகேசன்..

அப்பாடி என்று ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எப்படி சம்மதிக்க வைத்துவிட்டேனா என்பதுபோல கதிரவனை பெருமையாக பார்த்தாள். அவனும் அவளை பார்த்து தன் மயக்கும் புன்னகை ஒன்றை வீசினான். அழகேசன் இங்கு தங்க சரி கூறியதில் காமாட்சி அன்னபூரணி இருவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் வசுமதி ஊருக்கு செல்வதை பற்றி கூரவும் மனதில் திடுக்கென்றது..

“ கண்ணம்மா என்ன ஊருக்கு போவதை பற்றி பேசுகிறாய் “ என்று மெதுவாக கேட்டார் அன்னபூரணி..

“ ஆமாம் அம்மாச்சி சிவா வருகிறானே அவனோடு சேர்ந்து நானும் ஊருக்கு செல்ல போகிறேன் “ என்று வேண்டும் என்றே அழுத்தம் திருத்தமாக கூறி “ அப்படிதானே அத்தான் ” என்று கதிரவனை பார்த்து கேட்டாள்.

மனதிற்குள் “ குட்டச்சி இப்படி அனைவரின் முன்னும் போட்டு உடைத்து விட்டாலே”  என்று எண்ணினான்..  

அவளின் இந்த பேச்சிலும் இந்த பார்வையிலுமே அன்னபூரணி புரிந்து கொண்டார் சரி இது கதிரவன் வசுமதி இருவருக்கும் உள்ள ஏதோ தனிப்பட்ட விஷயம் போல என்று.. ஆனால் இது எதுவும் தெரியாத காமாட்சியோ “ என்ன வசும்மா உனக்கு இங்கு எதாவது மன கசப்பா?? அதனால் தான் கிளம்பிவிட்டாயா?? “  என்று அவளது கைகளை பிடித்து கேட்டார்..

“ அய்யயோ அத்தை அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு நிஜமாக ஊருக்கு செல்லும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் என்ன செய்வது உங்கள் மகனிடம் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டுமே அதற்காகவாவது நான் சென்னை செல்ல வேண்டும் அத்தை “ என்றாள் கொஞ்சும் குரலில்..

“ என்னது சவாலா ?? என்ன சவால் ?? “ என்று கதிரவனை முறைத்தபடி வசுமதியிடம் கேட்டார் காமாட்சி..

“ அதானே என்ன சவால் வசுமதி ??” என்று சிரித்தபடி பொன்மலர் வசுமதியை பார்த்து கேட்டாள்..

ஆனால் வசுமதி பதில் கூறும்முன் கதிரவன் முந்திகொண்டான் “ அம்மா நான் முதலில் சவால் எல்லாம் விடவில்லை எல்லாம் உங்கள் வசுமதி தான் சவால் விட்டாள். அதன் பிறகு நான் பின்வாங்கினால் எனக்கு அழகல்லவே அதனால் நானும் சரி என்று சவால் விட்டேன் ” என்றான் சிரித்தபடி..

“ கள்வன்.. கள்வன்.. எப்படி சிரித்தபடி பேச்சை மாற்றுகிறான் பார் “ என்று மனதிற்குள் அவனை கொஞ்சி கொண்டாள் வசுமதி. இப்பொழுது காமாட்சியின் பார்வை வசுமதியிடம் சென்றது..

“அத்தை உங்கள் மகன் தான் அத்தை வானத்தை வில்லாக வலைத்தேனும், பூமியை பந்தாக உருட்டியேனும் , பெருங்கடலை துளி நீராக மாற்றியேனும் நான் ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்துவேன் என்று சவடால் பேசினார் நான் பதிலுக்கு சவால் விட்டேன் “ என்றாள் சிரித்தபடி..

அவள் கூறியதை கேட்ட அனைவருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் காமாட்சி தன் மகனை இது எல்லாம் என்ன வேண்டாத வேலை என்பது போல் பார்த்தார்..  அவனும் சிரித்தபடி “ அம்மா நீங்கள் கவலை படாதீர்கள் நிச்சயமாக இந்த சவாலில் நான் தான் ஜெயிப்பேன் ” என்றான் உறுதியாக வசுமதியை ஒரு பார்வை பார்த்தபடி..

“ ஆகா அத்தான், நிச்சயமாக சத்தியமாக உறுதியாக நான் ஊருக்கு போவேன். நான் சொல்லும் அனைத்தையும் உங்களை கேட்க வைப்பேன் அத்தான் “ என்று தான் புருவம் உயர்த்தினாள் வசுமதி..

“ உன் மன உறுதியை பார்த்து நான் மெய் சிலிர்க்கிறேன் மதி. இருந்தாலும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் உனக்கு..  நீ இனிமேல் கடைசி வரை என் பேச்சை கேட்டுக்கொண்டு இங்குதான் இருக்க போகிறாய்”  என்று கதிரவனும் புருவம் உயர்த்தினான்..  

வசுமதி ஊருக்கு செல்ல போகிறேன் என்று கூறியவுடன் மல்லிகாவிற்கும் பொன்மலருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை..

சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்ட பொன்மலர் வசுமதியிடம் சென்று “ நான் எப்பொழுதும் என் அத்தான் எதிலும் ஜெயிக்கவேண்டும் என்றுதான் எண்ணுவேன் வசுமதி. ஆனால் பெண்களுக்கு பெண்களே சப்போர்ட் செய்யவில்லை என்றால் எப்படி இந்த முறை நீ ஜெயிக்கவேண்டும் வேண்டும் என்று மனதார எண்ணுகிறேன் “ என்று கூறினாள்..

“ அடேங்கப்பா வசுமதியை ஊருக்கு பேக்கப் செய்ய எப்படியொரு நடிப்பு “ என்று கதிரவன், அழகேசன், அன்னபூரணி மூவரும் மனதிற்குள் நினைதுத்கொண்டனர்.. தன் மகளின் நடிப்பை பார்த்து மனதிற்குள் பாராட்டியவாறு நின்றார் மல்லிகா..

 “ இது எல்லாம் எங்கே சென்று முடியுமோ ஆண்டவா நீ தான் இந்த பிள்ளைகளுக்கு துணை”  என்று அந்த ஆண்டவனை துணைக்கு அழைத்தார் காமாட்சி..  இந்த கலாட்டாவில் வசுமதியிடம் கதிரவன் ஒரு விஷயத்தை கூற மறந்தான்.. அந்த விசயம் வசுமதியை கவலையில் ஆழ்த்தபோவது தெரியாமல்.. 

கதிரவன் அழகேசனை அவன் வீட்டில் தங்க வைப்பதற்கு இரு முக்கிய காரணமும் இருந்தது..ஒன்று அழகேசனின் தனிமையை போக்க, மற்றொன்று வசுமதிக்காக. அனைவரும் தூங்க சென்ற பின் கதிரவன் அழகேசன் அறைக்கு வந்தான்.  கதிரவனுக்கு தெரியும் அழகேசன் தன்மீது கோவமாக இருக்கிறன் என்று..

அவனை முறைத்தபடி அழகேசன் “ என்னடா இப்ப எதற்கு என் பின்னாடி குட்டி போட்ட எதுவோ மாதிரி வந்துட்டு இருக்க ?? அதுதான் நீ நினைத்தபடி என்னை தங்க வைத்துவிட்டாயே “ என்றான் கோவமாக..

“ டேய் ஏன் டா அழகு?? நீயே பார்த்தாய் அல்லவா நான் எதாவது பேசினேனா?? வசுமதி தானே எல்லா முடிவும் செய்தாள், ஏன் உனக்கு என் மீது கோவம் “ என்றான் சிரித்தபடி..

“ சிரிக்காதே எரிச்சல் எரிச்சல்லா வருகிறது. சும்மா என்றால் பரவாயில்லை கதிரவா வீட்டில் உன் அத்தை மல்லிகாவும் அந்த பொன்மலரும் வேறு டேரா போட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சும்மாவே என்னை பிடிக்காது“ என்றான் ஒரு மாதிரி குரலில்..

“எனக்கும் புரிகிறது அழகேசா, ஆனால் அவர்கள் இருப்பதால்தான் நான் உன்னை இங்கு இருக்க சொல்கிறேன் “ என்றான் கதிரவன்.. அவனை புரியாமல் ஒரு பார்வை பார்த்தான் அழகேசன்..

“அழகேசா, நான் நாளை எஸ்டேட் போகிறேன். உனக்கே தெரியும் அங்கே சென்றால் வர இரண்டு நாள் ஆகிவிடும். சும்மாவே மல்லிகா அத்தையும் பொன்மலரும் என்ன திட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. போதாத குறைக்கு நாளை சிவாவும் ராமும் வேறு வருகிறார்கள்.. ராம் வருவதை வைத்து மல்லிகா அத்தை என்ன குளறுபடி செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.. வசுமதி இதெல்லாம் சொன்னால் புரிந்துகொள்வாளா?? அதனால் தான் நான் வரும் வரை மட்டுமாவது  அவளுக்கு துணையாக உன்னை இங்கு இருக்க சொல்கிறேன் ” என்றான் கதிரவன்..

“ இதை நான் யோசிக்கவே இல்லை கதிரவா, நீ சொல்வதும் சரிதான்.. வசுமதி சாதரணமாக எதாவது பேச செய்ய என்று இருப்பாள் ஆனால் அதையே இவர்கள் திரித்து பேசி விடுவார்கள்.. சரி டா மாப்பிள்ள நீ கவலை படாமல் போயி விட்டு வா “ என்று கூறினான் அழகு..

“ ரொம்ப ரொம்ப  தேங்க்ஸ் டா அழகு “ என்றான் கதிரவன்…

அழகேசன் அவனை ஒரு முறை முறைத்தான்.. “சரி சரி தேங்க்ஸ் வாபஸ் போதுமா ?? ” என்று கூறி சிரித்தான் கதிரவன் ..

நண்பனின் சிரித்த முகத்தையே உற்று பார்த்தான் அழகேசன். அந்த பார்வையில் மாலை நான் ரைஸ்மில்லில் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ சரியான பதில் கூறவில்லை என்ற அர்த்தம் இருந்தது..

அதை புரிந்துகொண்ட கதிரவனும், ” என்னடா??” என்று வேண்டுமென்றே கேட்டு வைத்தான்..

“ உன்னை இப்படி உற்று பார்ப்பதாக வீரபாண்டி மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதல்  டா, ஆளை பார் நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை ” என்றான் பல்லை கடித்தபடி..

“ ஹா ஹா “

“ டேய் டேய் நிறுத்து இப்ப ஏன்  இப்படி சிரிக்கிற நான் என்ன ஜோக் எதும் சொன்னேனா ?? கேள்வி கேட்டா பதில் கூறாமல் சிரிக்கிறான்” என்று காய்ந்தான் அழகேசன்..

“ சரி சரி கோவப்படாதே அழகு.. இப்ப உனக்கு என்ன தெரியவேண்டும் வசுமதி பற்றி என் மனதில் என்ன இருக்கிறது என்பது தானே ?? ” என கேட்டான் கதிரவன்.. ஆமாம் என்பதுபோல் பார்த்தான் அழகேசன்..

“ வசுமதி இங்கு வந்த புதிதில் பெரிதாக எந்த ஒரு ஈர்ப்பும் எனக்கு தோன்றவில்லை அழகு. ஆனால் நாட்கள் செல்ல செல்ல என்னை அறியாமலேயே என்னுள் புகுந்து விட்டாள்.. ஆரம்பத்தில் எல்லாம் அவளுக்கும் எனக்கும் ஒரே சண்டை தான்.. வீட்டில் கூட பயந்தார்கள் அழகு.. ஆனால் ஏனோ சண்டையிட்டு சண்டையிட்டு எனக்கு காதல் வந்து விட்டது போல.. எனக்கு இதெல்லாம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை அழகு. அன்று அப்பா அவளது திருமணம் விஷயம் பேசும்பொழுது என்னை ஒரு பார்வை பார்த்தாள் பார் யப்பா..  இப்போ நினைத்தாலும் எனக்கு உள்ளம் குளிர்கிறது அழகேசா” என்று கூறிகொண்டே  கனவு உலகிற்கு சென்று விட்டான்..

என்னடா நன்றாக பேசி கொண்டு இருந்தவன் திடீரென்று அமைதியாகி விட்டான் என்று எண்ணியபடியே கதிரவன் அருகில் வந்து பார்த்த அழகேசன் கடுப்பாகி விட்டான்.. ஏனெனில் தான் இரு கைகளையும் கட்டிக்கொண்டு ஜென்னல் வழியாக வெளியே தெரியும் நிலவுடன் பேசி கொண்டு இருந்தான் கதிரவன்..

“ உலகத்திலேயே மிகவும் கஷ்டம் எது தெரியுமா?? லவ் பண்ணுகிரவனுக்கு நண்பனாய்  இருக்கிறது தான் டா “ என்று கூறியபடியே கதிரவன் முதுகில் ஓங்கி அடித்தான்  அழகேசன்..

“ ஹி ஹி சாரி டா” என்று அஷ்ட கோணலாக சிரித்தான் கதிரவன்.. பின்  “ எதில் விட்டேன் ” என்று கேட்டான்..

“ கஷ்டகாலம் டா”  என்று தலையில் அடித்துகொண்டான் அழகேசன்..

“ சரி சரி மிகவும் சலிக்காதே மாப்பிள்ள, உன்னிடம்  சொல்லாமல் வேறு யாரிடம் டா இதெல்லாம் சொல்ல முடியும் “ என்று கேட்டான் கதிரவன்..

” என்னிடம்  சொன்னதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கு புரியுது உன் மனதில் வசுமதி  தான் இருக்கிறது என்று. ஆனால்  இதை எல்லாம் நீ வசுமதி கிட்டதான் டா சொல்லணும்.. அது எப்போ சொல்ல போற ?? “ என்று முடிவாக கேட்டான் அழகேசன்..

“ ம்ம் சொல்லணும் டா அழகு.. அதை நினைத்தால் தான் எனக்கு எப்படியோ இருக்கிறது அழகு.. அவள் பட்டினத்தில் பிறந்து வளர்ந்தவள்.. சுதந்திரமாக எதிலும் முடிவு எடுத்து அதன்படி நடப்பவள். ஆனால் இங்கே அப்படி எல்லாம் இருக்க முடியாதே.. சின்ன விஷயமாக இருந்தால்  கூட வீட்டில் இருக்கும் அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அவள் சுதந்திரம் நிறைய இங்கு தடைபடும் அழகு.. என் காதல் எந்த விதத்திலும் அவளுக்கு கஷ்டம் தந்து விட கூடாது என்று யோசிக்கிறேன் ”

கதிரவனின் தோள்களில் ஆதரவாக கை போட்டபடி “ டேய் கதிரவா நீ சொல்வது எல்லாம் சரி டா.. ஆனால் வசுமதி மனதிலும் எதுவோ இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.. வேறு எதை பற்றியும் நினைத்து உன்னை நீயே குழப்பி கொல்லாதே கதிரவா.. என்றுமே வெளிபடுத்தாத அன்பிற்கும் கூறாத காதலுக்கும் மதிப்பு இல்லை டா அதை புரிந்து நடந்துக்கொள்  “ என்று கூறினான்..

“ சரி அழகு.. நான் எஸ்டேட் போயிவிட்டு வந்து விடுகிறேன். பிறகு நானே வசுமதியிடம் இது பற்றி பேசுகிறேன் ” என்றான் சிரித்தபடி  கதிரவன்..

இவர்கள் இருவரும் பேசிய அனைத்துமே அழகேசன் அறையில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வந்த காமாட்சியின் காதில் விழுந்தது..

காமாட்சிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பின்னே இருக்காதா என்ன நடக்க வேண்டும் என்று அந்த வீட்டின் பெரியவர்கள் அனைவரும் கனவு கண்டனரோ அது நிறைவேற போகிறது அல்லவா..

 

Advertisement