Advertisement

உன் நினைவு – 4

                           

இந்த ஒரு ஜென்மம்

போதாது – உன் மீது

நான் கொண்ட நேசத்தை 

சொல்லிவிட…..

நீ ஒரே ஒரு பார்வை மட்டும்

பார்த்துவிடு – ஜென்ம

ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..

 

வசுமதி தன் மாமாவிடம் “ மாமா இங்கு ஜவுளி கடை எங்குஇருக்கிறது??”  என்று கேட்டாள்,

“ ஏன் டா குட்டிம்மா??”  

உடனே காமாட்சி “ ஏன் வசும்மா எதுவும் உனக்கு வேண்டுமா ??” என்று வினவினார்..

“ அத்தை நான் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, நாலு செட் டிரஸ் தான் கொண்டுவந்தேன், போட்டதையே மாற்றி மாற்றி போட எப்படியோ இருக்கு. அதான் வீட்டில் சாதரணமாக போட சுடிதார் எடுக்கலாம் என்று நினைத்தேன்” 

“ அதற்கு என்னம்மா தாராளமாக போய் எடுத்துக்கொள், கதிரவா அவளை அழைத்துக்கொண்டு போய்விட்டு வாப்பா “ என்றார் சிவபாண்டியன்..

“ இல்லை அப்பா “ என்று கூறும் முன்னே “ வேலையை நான் பார்த்து கொள்கிறேன் கண்ணா நீ ஒன்றும் கவலைபடாதே “ என்று கூறி சென்று விட்டார்..

வசுமதி “ அத்தை நீங்களும் கூட வாருங்களேன் “ என்று கூப்பிட்டாள்.

காமாட்சி “ இல்லை வசும்மா வீட்டில் நிறைய வேலை இருக்கிறது.  நீங்கள் வேகமாக ரெடி ஆகி சாப்பிட்டுவிட்டு போய்வாருங்கள் “ என்று கூறி தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்..

வசுமதியும் கதிரவனும் மட்டுமே ஹாலில் இருந்தனர் அப்பொழுது அன்னபூரணி பூஜையை முடித்துவிட்டு வந்தார்..

“அம்மாச்சி குட் மோர்னிங்”  என்று அவரை கட்டிக்கொண்டாள்..

கதிரவன் நினைத்துகொண்டான் “ இவள் சிறுபிள்ளை போலவும் நடந்துகொள்கிறாள் , சிலசமயம் பெரியமனுசி மாதிரியும் நடந்துகொள்கிறாள்” 

“ அப்பத்தா வெளியே கடைக்கு போறோம் உனக்கு எதாவது வாங்கி வரவேண்டுமா??”  என்று கேட்டான்.

“ எனக்கு என்ன வேண்டும் எதுவும் வேண்டாம் ஆமாம் என்ன திடீர் என்று கடைவீதிக்கு??”  என்று கேட்டார்.

“ எல்லாம் உன் பேத்திக்கு தான் அப்பத்தா டிரஸ் வாங்க வேண்டுமாம்”

 “ஓ சந்தோஷமாக பத்திரமாக போய்விட்டு வாருங்கள் “ என்றார்

நான் ரெடி ஆகிவிட்டு வருகிறேன் என்று கூறி மேலே சென்றான் கதிரவன். அதே நேரம் அன்னபூரணி வசுமதயிடம் ” என்ன கண்ணம்மா இரவு சரியாக தூங்கவில்லையா??”  என்று சற்று புன்சிரிப்புடன் கேட்டார்.

ஒரு வேலை எல்லாம் அம்மாச்சிக்கு தெரிந்து கேட்கிறாரோ என்று எண்ணியவள்  “ சூப்பர்  தூக்கம் அம்மாச்சி”  என்று கூறி நானும் ரெடி ஆகி விட்டு வருகிறேன் என்று நில்லாமல் ஓடிவிட்டாள்.

காமாட்சி, அன்னபூரணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். இருவரும் உண்டுவிட்டு காரில் கிளம்பினர்.. வசுமதி வேகமாக பின்னே அமரப்போனாள், “ நான் என்ன உனக்கு டிரைவரா ?? ”என்று கேட்டான் கதிரவன். அவனை பார்த்து சிரித்துக்கொண்டே முறைத்தபடி முன் சீட்டில் அமர்ந்தாள்.

“ ஏன் இப்படி நமக்கு படபடப்பாக இருக்கின்றது, சென்னையில் ராமுடன்,ஆபீஸ் டிரைவருடன் காரில் சென்று உள்ளேன் ஆனால் இவனுடன் செல்லும்போது மட்டும் ஏன் இப்படி உணர்கிறோம், இவன் அருகில் வந்தாலே நமக்கு எதுவோ ஆகிறது”  என்று எண்ணிக்கொண்டாள்.

கதிரவனுக்கும் மனது அமைதியாய் இல்லை, “ அப்பா இப்படி அனுப்பிவைக்கிறாரே”  என்று மனதில் நினைத்தான். ஏன் நாம் இப்படி உணர்கிறோம் என்று அவனே அவனிடம் கேட்டுக்கொண்டான்.  

கார் கிளம்பி சற்று நேரம் வரை ஒரு அமைதியான சூழ்நிலை உள்ளே நிலவியது.. வசுமதி இந்த சூழ்நிலையை மாற்ற எண்ணி அவனிடம் பேச்சுக்கொடுத்தாள்.    

“ அத்தான் இங்கு நிறைய கடைகள் இருக்குமா ??” 

“ஏன் மதி எங்கள் ஊரை பார்த்தல் பட்டிக்காடு போலா தெரிகிறது ??”

“ அய்யோ அப்படி எல்லாம் இல்லை அத்தான். சுற்றி மலைகளாக இருக்கிறதா அது தான் எப்படி இருக்கும் என்று கேட்டேன்” என்று தெளிவாக உளறினாள்..

“ அத்தான் சொல்ல மறந்துவிட்டேன் போகும் வழியில் ஏடிஎம்மில் காரை நிறுத்துங்கள்”  என்றாள்.. அவனும் முதலில் கடைக்கு சென்று விட்டு பின்  திரும்பி வரும்பொழுது  செல்லலாம் என்று விட்டான். 

இருவரும் ஒரு பெரிய ஜவுளி கடை முன் காரிலிருந்து இறங்கினர்.. இந்த ஊரில் இவ்வளோ பெரிய கடையை அவள் எதிர்பார்க்கவில்லை..

கடைவீதி அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் ஜாஸ்தியாக இருந்தது ரோட்டின் இரு பக்கமும் கடைகள் கடைகள் தான் அத்தனை கடைகளிலும் ஆட்கள் கூட்டம் இருந்தது..

“ ஹ்ம்ம் பெரிய ஊரு தான் “ என்று நினைத்து கொண்டாள்..

“ மதி கடைக்கு வெளியே நின்றாள் உனக்கு டிரஸ் கிடைத்து விடும்  எண்ணம் என்று எனக்கு தெரியாதே ” என்று கிண்டல் செய்தான்..

“ ஓ!!! இல்லை அத்தான் நான் வேடிக்கை பார்த்தேன்”

“ இன்னொரு நாள் உனக்கு ஊரை சுற்றி காட்டுகிறேன் இப்பொழுது கடைக்குள் செல்லலாம்” 

இருவரும் கடைக்குள் செல்லவும் கடையின் முதலாளி “அடடே வாப்பா கதிரவா  என்ன திடீர் என்று நம் கடை பக்கம் ??” என்று கூறியவரின் பேச்சு தான் கதிரவனிடம் இருந்தது பார்வை எல்லாம் வசுமதியின் மேல் தான்.

“யாரப்பா இது??” என்று சைகையிலேயே கேட்டார். கதிரவன் வசுமதியை ஆரோமுகம் செய்து வைத்தான்.

கடை முதலாளியின் முகத்தில் சந்தோஷம் ஆச்சர்யம் பின் சுதாரித்துக்கொண்டு,“ வசுமதி வாம்மா, அம்மா அப்பா அனைவரும் நலமா ??” என்று விசாரித்தார்.

அவளும் ஒரு சிறு புன்னகையுடனே பதில் கூறினாள் . “ மதி இவர் இந்த கடைக்கு முதலாளி மட்டும் இல்லை அப்பாவிற்கு சிறு வயதில் இருந்தே நண்பரும் கூட “ என்றான்.

 “ மதி அதோ அந்தபக்கம் சுடிதார் உள்ளது போய் பார்த்து கொண்டு இரு நான் இதோ வந்து விடுகிறேன் ” என்று கூறி சென்றான். இவளும் தனக்கு பிடித்த ஆலிவ் பச்சை,  ராயல்  ரெட், பேபி பிங்க் , ஆய்லி ப்ளூ  வண்ணங்களில் சுடிதார் எடுத்து வைத்தாள்..

“ முதல் முறை வருகிறோம் அத்தை அம்மச்சிக்கு மாமாவிற்கு கதிரவனுக்கு அனைவருக்கும் எடுப்போம்”  என்று எண்ணியவாறு நின்று இருந்தாள்.

“ என்ன மதி அதற்குள் முடித்துவிட்டாயா ஆச்சரியம்தான் , நான் கூட பொழுது சாய்ந்து விடும் போல, அம்மாவிடம் சொல்லி சாப்பாடு அனுப்ப சொல்லவேண்டும் என்று நினைத்தேன் “ என்றான் கண்ணில் மட்டும் சிரித்தவாறு..

“ போங்கள் அத்தான் என்று சினுங்கியவள்,  ஒரு முறை பார்த்து பிடித்துக்கொண்டால் வேறு எந்த டிரஸ்ஸும் பார்க்கமாட்டேன் அத்தான்.”

இது எல்லாம் நன்றாக உள்ளதா என்று அவளின் ஆடைகளை காட்டினாள். “ இதை பற்றி எல்லாம் எனக்கு என்ன தெரியும் மதி, பட் கலர்  எல்லாம் நன்றாக உள்ளது நைஸ் நைஸ் “ என்று கூறிக்கொண்டான்.

“ இன்னும் நிறைய வாங்க வேண்டும். உங்களுக்கு அத்தை மாமா அம்மாச்சி என்று அனைவருக்கும் வாங்க வேண்டும்” 

அவன் புரியாதது போல் பார்த்தான், “ இல்லை அத்தான் முதல் முறை வந்து இருக்கேன்  எனக்கு மட்டும் எடுக்க பிடிக்கவில்லை அதான் “

“ சரி சரி அப்ப அம்மாவை சாப்பாடு கட்ட சொல்லவேண்டும்” என்று அவளை கிண்டல் அடித்தவாறு சேலை பகுதிக்கு சென்றனர்..

“ ஆமாம் நீங்கள் எங்கு சென்றீர்கள்”  என்று கேட்டாள்,

“ இங்க பக்கத்தில் ஒரு சின்ன வேலை மதி” 

அத்தான் இது நன்றாக இருக்கிறதா அது நன்றாக இருக்கிறதா என்று அவனை ஒரு வழி செய்துவிட்டாள்.. அவனுக்கு ஒரு வழியாக அனைத்தையும் முடித்து அவளை இழுத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஒரு வழியாக காரில் அமரவும் தான் யப்பாடி என்று கூறினான்..

“ என்ன அத்தான் இதற்கே இவ்வளோ அலுப்பு சலிப்பு எல்லாம் ??” என்று கூறி சிரித்தாள்.. “ அத்தான் ஏடிஎம்  வருகிறது பாருங்கள் “

அவன் வண்டியை நிறுத்தவும் உள்ளே  சென்று அவளின் கார்டு போட்டு பணம் எடுத்து வந்தாள். ஏறி அமர்ந்தவுடன், கதிரவன் கிண்டலாக, “ மகாராணி அவர்களே உங்களின் அனைத்து வேலையும் முடிந்து விட்டதா, வண்டியை வீட்டிற்கு விடலாமா”  என்று பணிவாக கேட்பதுப்போல் கேட்டான்…

“ ஹ்ம்ம் போங்கள் அத்தான் ” என்று சிரித்தாள்..

“ இந்த போங்கள் அத்தானை எங்கு இருந்து மதி பிடித்தாய் ??” என்று கூறி சிரித்தான்..          

அவள் அமைதியாக வரவும் “ சரி சரி நான் எதுவும் கூறவில்லை போதுமா சமாதனம் சமாதனம் “மெதுவாக நகைத்தான்..

“ ம்ம்ம் தட்ஸ் குட் அப்படி வாருங்கள்வழிக்கு ” என்றவள், அத்தான் இந்தாருங்கள் என்று பணத்தை நீட்டினாள், என்ன இது எதற்கு என்று புரியாத பார்வை பார்த்தான்..

“ இப்பொழுது டிரஸ் வாங்கியதற்கு அத்தான். நீங்கள் தானே பில்பே செய்தீர்கள் அதான் நான் திருப்பி தரவேண்டும் அல்லவா??” என்றாள். அவ்வளோ தான் எங்கு இருந்து தான் அவனுக்கு கோவம் வந்ததோ தெரியவில்லை..

“ வாயை மூடிக்கொண்டு பேசாமல் வா”  என்று ரோட்டை பார்த்தவாறு வண்டி ஓட்ட தொடங்கினான்..

“ என்ன அத்தான் எதற்கு கோவம், ப்ளீஸ் வாங்கி கொள்ளுங்கள், நான் தானே டிரஸ் வாங்கினேன் ” என்றாள்..

“ ஹ்ம்ம்.. சரி உனக்கு எடுத்த டிரஸ் அமௌன்ட்  தவிற மீதி  பணம் குடு போதும் “

“அட இது என்ன அத்தான் பின் எனக்கு எடுத்ததற்கு யார் தருவார்களாம்?? ” என்று சிரித்தபடி கூறியவள் அவனின் பார்வையை கண்டு அமைதியாக வந்தாள்.

“ இங்கு பார் வசுமதி உனக்கு எடுத்த நாலு சுடிதார்க்கு பணம் குடுக்க முடியாதா அளவிற்கு நான் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி இல்லை புறிகிறதா”  என்று உறுமினான்..

அவள் எதுவோ கூற வரவும், “ வாயை மூடு, நானும் பார்கிறேன் என்ன நீ பேசிக்கொண்டே போகிறாய், சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா.. இடியட் “  என்று கோவமாக அதே சமயம் அழுத்தமாக கூறியவன் அதன் பின் அவள் பக்கம் திரும்பவே இல்லை..

அவள் என்ன இது ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்றே புரியாமல் விழித்தவாறே அமைதியாக வந்தாள்.. வீட்டிற்கு வந்து காரில் இருந்து இறங்கி வேகமாக கதவை அறைந்து சாத்தியவன் கடகடவென்று நடந்து உள்ளே சென்று விட்டான்.

உள்ளே காமாட்சி அன்னபூரணி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். கார் வந்த சத்தம் கேட்டு இருவரும் வாசலை பார்த்தனர், கதிரவன் கோவமாக உள்ளே வந்து அமர்ந்தான்..

வசுமதி பின்னே அனைத்து பைகளையும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு குழப்பமான முகத்துடன் வந்தாள்.. இருவரின் முகத்தை பார்த்தே 

“ என்ன கண்ணப்பா என்ன நடந்தது??” 

“ . என்னை ஏதும் கேக்காதே அப்பத்தா, இதோ வருகிறாளே உன் ஆசை கண்ணம்மா அவளிடம் கேள்.” என்று பொரிந்தான்.. காமாட்சி வேகமாக சென்று குடிக்க நீர் மோர் கொண்டு வந்து தந்தார்.. அதை வாங்கி டங்கென்று அங்கிருத்த டீப்பாய் மீது வைத்தான்..

இதை பார்த்த வசுமதி “ இதோ பாருங்கள் அத்தான் உங்களுக்கு என் மீது தானே கோவம். அதை என்னிடம் காட்டுங்கள் அதை விட்டுவிட்டு ஏன் இப்படி அனைவரின் மீதும் பாய்கிறீர்கள் “ என்றாள் வேகமாக..

“ ஏய் உன்னை என்ன சொன்னேன் வாயை மூடிக்கொண்டு அமைதியாய் இரு என்றேனல்லவா, பேசாமல் இரு”  என்று அவளை பார்த்து உறுமினான். பணம் தருகிராளாம் பணம்”  என்று முனங்கினான்..

“ வசும்மா நீயாவது சொல்லேன் என்ன நடந்தது போகும் பொது நன்றாகத்தானே போனீர்கள் இருவரும் “ என்றார் காமாட்சி..

வசுமதி ஒரு நிமிடம் அவனை பார்த்துவிட்டு ”  போகும் போது இல்லை அத்தை வரும் போது கூட நன்றாக தான் வந்தோம். ஆனால் பாதியில் வரும் போதே உங்கள் மகன் எதை கண்டாரோ இப்படி ஆகிவிட்டார்” அவள் கூறியதை கேட்ட இரு பெரியவர்களுக்கும் சிரிப்பு வந்தது ஆனால் வெளியே காட்டவில்லை..

“ ஏய் ஏன் மறைத்து பேசுகிறாய், அனைத்தையும் சொல்ல வேண்டியதுதனே, உன் வாய் தான் வடபழனி வரை போய் வருமே இப்பொழுது ஏன் பேச்சை முழுங்குகிறாய்”  என்றான் காட்டமாக..

“ என்ன கதிரவா என்னவென்று நீயாவது சொல்லு”  என்று அன்னபூரணி சற்று அழுத்தமாக கேட்கவும் நடந்ததை கூறினான்..

“ என்ன வசும்மா என்ன இது முறை என்று ஒன்று இல்லையா, நீ சிறு பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் இங்கு முதல் முறை வந்துள்ளாய், நாங்கள் தான் உனக்கு எடுத்து குடுக்க வேண்டும், நீ ஏன் பணம் கொடுத்தாய் ??” என்று ஆதரவாக வினவினார்..

“ அத்தை அப்படி எல்லாம் இல்லை, எனக்கு இந்த முறை அது இது எல்லாம் தெரியாது எங்களுக்கு அப்படி யாரும் இதுவரை செய்தது இல்லை. சிறு வயதில் அம்மா அப்பாவுடன் கடைக்கு சென்று வேண்டியதை வாங்குவோம். “

“ வேலைக்கு சென்றபின் எனக்கு வேண்டியதை எல்லாம் நானே தான் வாங்க பழகி கொண்டேன். எங்களுக்கு இப்படி யாரும் இதுவரை முறை எல்லாம் செய்யாததால் எனக்கு இந்த பழக்கம் எல்லாம் தெரியவில்லை அத்தை”  என்று கூறி அழுதுவிட்டாள்..

காமாட்சி “ சரி விடு வசும்மா அழாதே, அவன் அப்படித்தான் எதோ கோவத்தில் பேசிவிட்டான், மனதில் வைத்துக்கொள்ளாதே, அவன் கோவத்திலும் ஒரு நியாயம் இருக்கும்” 

“ அதெல்லாம் சரிதான் அத்தை, எதையும் சொல்லும் விதம் என்று ஒன்று உள்ளது அல்லவா. என்னை பேசவே விடவில்லை, இப்பொழுது நீங்கள் எப்படி பொறுமையாக எடுத்து கூறினீர்கள் அதை விட்டு அரட்டினால் நான் என்ன செய்ய முடியும் “

அவள் கூறுவது நியாயம்தானே என்கிற மாதிரி பார்த்தார் காமாட்சி கதிரவனை.. ஆனால் இப்பொழுது அவனின் கோவத்திற்கான காரணம் வேறாக மாறியது. நாம் சொல்லி கேட்காமல் அம்மா, அப்பத்தா சொல்லி கேட்கிறாள். ஆக இவ்வளோதான் இவள் நமக்கு தரும் முக்கியத்துவம் என்று எண்ணியவாறே அவளை முறைத்தவன் எதுவும் பேசாமல் மேலே சென்று விட்டான்..

“ அத்தான் ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்கள் சாரி அத்தான்” என்று அவள் கூறியது அவன் காதில் விழுந்தும் கேளாமல் சென்று அவன் அறையின் கதவை டம்மென்று அறைந்து சாத்தினான்.. வசுமதிக்கு அது அவன் அவளின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.. அவளை அறியாமல் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது..

இது போல் யாரும் அவளிடம் நடந்தது இல்லை. “ பொறுமை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பான் போல.. எப்படி அவமானபடுத்திவிட்டான், தன்னை அறைவதற்கு அறையின் கதவை அறைந்து சாத்திவிட்டான்.. சரியான காட்டான்..”

“ ச்சே இது என்ன எனக்கு பதிலுக்கு கோவம் வருவதற்கு பதில் மனது இப்படி வலிக்கிறதே.. இவன் முன் நாம் ஏன் நம் பலத்தை இழக்கிறோம் “ என்று எண்ணினாள். 

அன்னபூரணி காமாட்சி என்ன செய்வது யாரை சமாதனம் செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்..

அவன் கோவமாக அவளை பார்த்துவிட்டு மாடி ஏறும்போது ஏதோ ஒன்று தன்னை விட்டு செல்வதுபோல் உணர்ந்தாள். எதுவும்  செய்ய இயலாதவளாய் மாடி படிக்கட்டுகளை பார்த்தவண்ணம் சிலை போல் நின்றுவிட்டாள்..

“ என்ன இவன் இப்படி சென்றுவிட்டான்.. “ அவளால் எதுவும் பேசக்கூட முடியவில்லை.. அப்படியே சோபாவில் பொத்தென்று அமர்ந்துவிட்டாள்..

“ நான் என்ன தவறு செய்தேன், எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை”  என்று தானே கூறினேன்.

“ அவன் எனக்கு புரியும்படி கூறி இருந்தால் நான் சரி என்று தானே கூறியிருப்பேன்.. ஆனால் ஆனால் ஏன் இப்படி என்னிடம் முகம் திருப்பி சென்றுவிட்டான்.. நான் பேச வாய்ப்பே தரவில்லையே.. இதில் என் மீது தவறு என்ன இருக்கிறது ஆனால் நான் தான் ஏதோ தவறு செய்தது போல் என்னை எண்ண வைத்துவிட்டு அல்லவா செல்கிறான்..”

“ அவன் பார்வைக்கான அர்த்தம் தான் என்ன ?? அந்த பார்வை ஏன் நம்மை இப்படி போட்டு வாட்டுகிறது.. கண்ணில் நீர் வரவைத்து விட்டானே..”

இப்படி எல்லாம் அவள் யோசித்துக்கொண்டு அந்த யோசனையிலே மூழ்கிவிட்டாள்.. அன்னபூரணியிடம், காமாட்சி “ அத்தை என்ன இப்படி ஆகிவிட்டது. நாம் வேறு ஏதோ நினைத்தால் நடப்பது வேறாக அல்லவா இருக்கிறது”  என்று கவலையுடன் கூறினார்.. 

அன்னபூரணி “ கொஞ்சம் பொருத்து தான் போக வேண்டும் காமாட்சி, எல்லாம் உடனே நடந்து விடாது ” என்று கூறினார்.

“ கதிரவன் இதுவரை யாரிடமும் இப்படி நடந்தது இல்லை அதும் நம் முன்னால் அவன் அதிர்ந்து கூட பேசமாட்டான்..  வசுமதி செல்லமாக வளர்ந்தவள், அன்று சிவா என்ன கூறினான் அக்காவிடம் அவளுக்கு பிடிக்காத விஷயத்தை பொறுமையாக அமைதியாக கூறினாள் கூட கேட்டுக்கொள்வாள் ஆனால் அவளை யாராது டாமினேட் செய்து பேசினால் அவ்வளோதான் யாரென்றும் பாராமல் பேசிவிடுவாள் என்றானல்லவா..”

“ ஆனால் இன்று அவளை பார் எதுவும் பேசமுடியாமல் திகைத்து அமர்ந்து இருக்கிறாள்.. இருவரும் தங்கள் இயல்பை மீறி நடந்து கொள்கிறார்கள், இதுவே தெரியவில்லையா ஒருவரின் அருகாமை மற்றொருவரின் இயல்பை மாற்றுகிறது.”

“ சுற்றி யார் இருக்கிறர்கள் என்ன என்று கூட சிந்திக்க வைக்காமல் தங்கள் உணர்வை வெளிபடுத்துகிறார்கள். இதுவே நல்ல மாற்றம் தானே”  என்று கூறினார்..

“ ஆனாலும் அத்தை எனக்கு வசுமதியை பார்த்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. பாவம் அவள், பாருங்கள் எப்படி இருக்கிறாள் என்று “

“ கொஞ்சம் நேரம் செல்லட்டும், அவள் சற்று தெளியட்டும் காமாட்சி இப்பொழுது நாம் ஏதாவது பேசினாள் அவளுக்கு இன்னும் அழுகை தான் வரும்” 

சிறிது நிறம் கழித்து வசுமதி ஒருவழியாக சுயநினைவிற்கு வந்தாள்.. காமாட்சி அவளிடம் சென்று “வசும்மா நீ ஒன்றும் கவலை படாதே கண்ணம்மா அவன் கொஞ்சம் முரடன் தான்.. நான் அன்றே கூறினேன் அல்லவா அவனுக்கு பொஸஸீவ்நெஸ் ஜாஸ்தி”

“ ஆனால் அத்தை முதலிலேயே என்னிடம் எடுத்து கூறி இருக்கலாம் அல்லவா.. என்னை பேசவே விடவில்லை”

 “ நீ சொல்வது சரிதான் கண்ணம்மா ஆனால் அவன் பாசத்தையே கொஞ்சம் கரடுமுரடாக காட்டுவான். இப்பொழுது கூட அவன் எதற்கு கோவம் என்று எண்ணுகிறாய் ?? ”என்று கேள்வி கேட்டார்..

“ நான் என் டிரஸ்க்கு பணம் தந்ததற்கு தானே அத்தை” என்றாள்.

“ இல்லை இல்லை அவனுக்கு கோவம் அதற்கு அல்ல, அவன் சொன்னதும் கேளாமல் , வீட்டிற்கு வந்ததும் நாங்கள் சொன்னதும் கேட்டுக்கொண்டாயே அதற்காகதான்.. “

“ நம்மை இவள் முக்கியமாக நினைக்கவில்லை என்று எண்ணிவிட்டான் அதனால் வந்த கோவம் தான்.. அவன் ஒருவரிடம் பாசம் வைத்துவிட்டால் இப்படி தான் நீ தான் அவனை புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும் அது தான் உங்கள் இருவரின் எதிர்காலத்திற்கும் நல்லது”  என்றார்..

வசுமதிக்கு காமாட்சி கூறிய கடைசி வாக்கியத்தை கேட்டதும் புரியாத பார்வை பார்த்தாள்..  உடனே அவர் சுதாரித்துகொண்டு “ இல்லை வசும்மா அனைவருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் அல்லவா அதைத்தான் கூறவந்தேன்” 

“ சரி அத்தை நான் மாடிக்கு செல்கிறேன்” என்றவள் , “ அத்தை நான் வேண்டுமானால் அத்தானிடம் சென்று சாரி கேட்கட்டுமா??”  என்றாள்.

அவர் மெதுவாக நகைத்துக்கொண்டே “ வேண்டாம் வசும்மா அவன் கோவம் சற்று குறையட்டும் பின் அவனே வந்து பேசுவான்” 

 

உன் நினைவு

 

நீ இல்லா வாழ்கை

நிலவில்லா வானம்…..

உன் முகம் கண்டு

உயிர் வாழும் ஜீவன்…..

உன் கதிர் பெற்று

ஒளி வீசும் மதி…

ஆயிற்று அந்தா இந்தாவென்று நாட்கள் இரண்டு.  வசுமதியும் அவன் தன்னிடம் வந்து பேசுவான், பேசுவான் என்று எண்ணினாள்.. ஆனால் அவனோ அவள் இருக்கும் பக்கம் கூட வரவில்லை.

வசுமதிக்கோ பொறுமை கரைந்து கொண்டே வந்தது.. கோவமென்றால் நன்றாக திட்ட வேண்டியது தானே அதைவிட்டு இப்படி முகத்தை திருப்பினால் என்னவென்று நினைப்பது என்று எண்ணினாள்..

“ ச்சே…. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். சிவா எத்தனை சண்டை போட்டு இருக்கிறான்  அவனை எல்லாம் நானாக சென்று இதுவரை சமாதானம் செய்து இருக்கேனா??  இல்லையே.. “

“ ஆனால் இது சண்டை கூட அல்லவே.. நான் தான் அவனிடம் வாயே திறக்கவில்லையே.. கோவம் என்றதும் அமைதியாக சென்று விட்டான்.. இதுவரை பேசவில்லை.. அத்தை பாட்டி என்று அனைவரும் அவனை சமாதானம் செய்தனர்.. ஆனால் அவன் கெட்டிக்காரன் அல்லவா அனைவருக்கும் தகுந்த மாதிரி ஒரு ஒரு பதில் கூறிவிட்டான்..”

“ சரிதான் போடா “ என்று கூட எண்ணினாள்.  ஆனால் அடுத்த கணமே அவளின் மனம் சொல்ல முடியாத வேதனையை அனுபவிப்பதை உணர்ந்தாள்..

 “ ச்சே என்ன இவன் இப்படி அடம் செய்கிறான்.. சிறு பிள்ளை என்றால் கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்யலாம். ஆனால் இவனோ பனைமரம் அல்லவா ??” என்று எண்ணினாள்..

அவளை அறியாமல் அவனிடம் இவள் கொஞ்சுவது போலவும், கெஞ்சுவது போலவும் சமாதானம் செய்வது போலவும் காட்சிகள் மனதில் தோன்றின.. “ அடடா நாம் ஏன் இப்படி நினைக்கிறோம். ஓ !! கடவுளே எனக்கு என்ன ஆயிற்று “

இந்த இரண்டு நாளில் படாதபாடு பட்டுவிட்டாள் வசுமதி.. அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ” ஏன் இவனின் மௌனம் நம்மை இப்படி படுத்துகிறது.. இத்தனை ஆண்டுகள் பாராத பழகாத உறவு தானே ஆனால் இந்த சில  நாட்களில் என்ன ஆயிற்று எனக்கு ??” என்று அவளே அவளை தெளிவாக குழப்பிக்கொண்டாள்..

அவன் பேசாத ஒரு ஒரு நிமிடமும் என்னவென்றே புரியாத வேதனையை அவளுக்கு தந்தது.. அவன் தான் இவளின் பாக்கம் கூட பார்ப்பதில்லையே பின் எப்படி சமாதானம் செய்வது ??

 “ என்ன ஆனாலும் சரி நாளை அவனை ஒரு கை பார்த்து விடவேண்டும்.. என்ன நினைத்தான் என்னை “ என்று மனதினுள் கருவிகொண்டாள்.. இப்படி இவள் அவஸ்தை பட்டு கொண்டு இருக்க அதற்கு காரணமானவனோ வேறு விதமாக எண்ணினான்.

“ ஒரு வார்த்தை நான் சொன்னதை கேட்டாளா, என்ன தைரியம் என்னிடமே பணத்தை எடுத்து நீட்டுகிறாள்.. திமிர் திமிர் அனைத்தும் திமிர். அவள் வீட்டில் இவள் எது செய்தாலும் யாரும் எதுவும் சொன்னது இல்லை அல்லவா. அதுதான் இங்கும் அவள் இஷ்டத்திற்கு ஆடுகிறாள்.. “

“ அடக்குகிறேன்.. நான் சொல்வதை கேளாமல் அம்மா சொன்னதும் சரி என்று கூறுகிறாள். அப்போ அவ்வளோதான் நமக்கு தரும் முக்கியத்துவம்..  நான் அவ்வளோ வேண்டாதவன் ஆகிவிட்டேன் “ என்று வேண்டாத சிந்தனை எல்லாம் சிந்தித்து கொண்டு இருந்தான்..

மறுநாள் காலை அழகாக விடிந்தது.. வசுமதி  ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.. வானத்தில் அந்த கதிரவன் தன் ஒளியை மெல்ல பரப்பிக்கொண்டு இருந்தான்.. மனதில் ஒரு எண்ணம் சட்டேன்று வந்தது..

சிறிது நேரத்தில் தட தடவென்று கதிரவன் கிழே இறங்கும் சத்தம் கேட்டது.. “ ஆக மகாராஜா முழித்துவிட்டார்.. வீட்டை சுற்றி ஓட கிளம்பிவிட்டான் சரியான காட்டான்”  என்று எண்ணியவள் உடனே அவளும் கிழே கிளம்பி விட்டாள்..

“ ஹாய் அத்தான், என் இனிய காலை வணக்கம்”  என்று பாரதிராஜா பாணியில் சிரித்தபடியே கூறினாள்.

“ என்ன இவள் இப்படி காலையிலே வந்து முன் நிற்கிறாள்….”  என்று எண்ணியபடியே விலகி சென்று விட்டான்… 

“ சரியான முசுடு போவதை பார், ஒரு வேலை கோவமாக இருந்தால் இவனுக்கு காது கேட்காதோ??  “ என்று எண்ணியவள், லூசு மாதிரி எண்ணாதே வசுமதி என்று அவளே அவளை திட்டிக்கொண்டாள். அவனோடு சேர்ந்து அவளும் ஓட ஆரம்பித்தாள்..

“ என்னிடம் பேச மாட்டீர்களா அத்தான். நான் தான் சாரி சொன்னேன் அல்லவா இன்னும் என்ன கோவம் அத்தான் ??”..

ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன் எதுவும் பேசாமல் அவளை சுற்றிக்கொண்டு வீட்டின் கேட்டின் வழியே வெளியே ஓட சென்று விட்டான்.. கதிரவன் அவளை கூர்ந்து பார்க்கவும் பேசிவிடுவான் என்று எண்ணி சந்தோசமாக அவனை கண்டாள்.

ஆனால் நடந்ததோ வேறு.. அவனோ அவளை கூர்ந்து பார்த்தபடியே அவளை கடந்து வாசல் பக்கமாய் வெளியே சென்று விட்டான்.

 “ இதுவரை நானாக யாரிடமும் வலிய சென்று பேசியதில்லை, யாரும் என்னிடம் இப்படி முகம் திருப்பி சென்றதும் இல்லை ஆனால் இவன்.  இருக்கட்டும் இருக்கட்டும் ” என்று புலம்பியபடியே உள்ளே வந்தாள்..

அங்கு தெருவில் ஓடிகொண்டிருந்த கதிரவனோ, “ வந்து விட்டாள் செய்வதை எல்லாம் செய்துவிட்டு ,இனிய காலை வணக்கம்  அத்தான் என்று இளித்தபடி..  ஆளைப்பார் குட்டச்சி..”

“ சமாதானம் செய்ய நல்ல நாள் பார்த்தாள் போல. இரண்டு நாள் முடிந்து விட்டது ஆனால் இப்பொழுது வருகிறாள் ஆடி அசைந்து “

“ இது கொஞ்சம் உனக்கே ஜாஸ்தியாக தெரியவில்லை”  என்று அவன் மனமே அவனை இடித்தது.. 

“ ஹ்ம்ம் இப்போ நமக்கு நிஜமாகவே கோவம் இல்லையோ ”  என்று எண்ணினான்..

“ நம்மிடம் பேசுவதற்கு தானே காலையில் சுற்ற வந்தாள் பேசி இருக்கலாமோ??” என்றும் எண்ணினான்.. “இல்லை இல்லை இன்றே பேசிவிட்டால் உடனே சரி ஆகி விட்டான் என்று நம்மை மட்டமாக நினைத்து விடுவாள்.. இருக்கட்டும் என்ன தான் செய்கிறாள் பார்க்கலாம் “ என்று முடிவு பண்ணிகொண்டான்.

இந்த காலை வேலையில் எந்த ஒப்பனையும் இல்லாமல் எப்படி அழகாய் வந்தாள் சிரித்தபடி, நான் அவளை பார்த்ததும் பேசுவேன் என்று எண்ணி ஆவலாக பார்த்தாளே.. ஒரு வேலை நான் பேசவில்லை என்று வருத்த படுகிறாளோ இப்படியெல்லாம் அவனின் சிந்தனையும் ஓடியது.. ஓடிக்கொண்டு இருந்தவன் அவனை அறியாமல் நின்றுவிட்டான்…

“ டேய் மாப்ளை என்னடா ஜாக்கிங் செய்யாமல் இப்படி ஸ்டான்டிங்ல இருக்க??”  என்று கேட்டு வந்தவன் வேறு யாரும் இல்லை கதிரவனின் நெருங்கிய நண்பன் அழகேசன்..

இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஒரு முறையில் உறவும் கூட.. கதிரவனும் இருவரும் தொழிலையும் சேர்ந்தே செய்கின்றனர்.

அவனை கண்டதும், “ டேய் அழகு எப்படா வந்த ? சரி உங்கள் சித்தப்பா பொன்னு கல்யாணம் நல்லபடியாக நடந்ததா ? “என்று கேட்டான் கதிரவன்.             

அவனை ஒரு வித்தியாசமான பார்வை பார்த்தான் அழகேசன். “ நேற்று  சாயங்காலம்  வந்தேன்டா, கல்யாணம் நன்றாய் தான் நடந்தது.. ஆனால்  நீ தான்  ஏதோ வித்தியாசமாய்  இருப்பது போல இருக்கு “ என்றான்..

உடனே கதிரவன் “ இல்லையே அப்படி எல்லாம் இல்லையே எப்பொழுதும் போல் இரண்டு  கால் , இரண்டு  கை ,இரண்டு  கண் எல்லாமே சரியதான டா இருக்கிறது “ என்றான் சிரித்தபடி..

“டேய் நான் ஊருக்கு போய் இருபது நாள் தான் ஆகிறது. அதுக்குள்ள உனக்கு என்னடா ஆனது ??  இப்படி எல்லாம் பேசுகிறாய்??” என்று அவனை மேலும் கீழும் பார்த்தவாறு கேட்டான் அழகு..

“ அப்படியாடா நீ ஊருக்கு போய் இருபது நாள் ஆனதா ? நாள் போனதே தெரியவில்லை  டா “ என்று கூறியவரே தன் முடியை கோதிகொண்டான்..

“என்ன நாள் போனதே தெரியவில்லையா.. அது சரி.. கேட்கவே மறந்து போனேனடா, உன் அத்தை குடும்பம் எல்லாம் வந்தார்களா?? எப்படி வீட்டில் ஒரு பிரச்சனையும் இல்லையே, அப்பத்தா எப்படி இருகிறாங்க கதிரவா ??” என்று வினவினான்..

“ நாங்கள் போன் செய்த மறுநாளே வந்து விட்டார்கள் அழகு.. அனைவரும் நன்றாக பழகினார்கள் “ என்றான் கதிரவன்.. அழகேசனுக்கு கதிரவனின் பேச்சு அவன் தன்னிடம் எதையோ மறைப்பது போலவே இருந்தது..

“ உன் அத்தையின் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள், எப்படியோ இத்தனை ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்தீர்களே அதுவே சந்தோஷம் “

“ அத்தை, மாமா சண்முகநாதன், அவர்களின் மகள் மதி , பின் ஒரு மகன் சிவா அழகான அன்பான குடும்பம்டா அழகு.. அதிலும் சிவா நன்றாக பழகினான்..”

 “மதி யா?? மதி என்று மட்டும் கூட பெயர் வைப்பார்களா கதிரவா ??” என்று வேண்டுமென்றே வினவினான்.. இதை அறியாத கதிரவன் , லேசாக சிரித்து கொண்டே தன் கையில் எப்பொழுதும் இருக்கும் காப்பை இறுக்கி கொண்டு,

“  வசுமதி அவள் பெயர் வசுமதி டா, சிவில் எஞ்சினியர் டா , அவள் அப்பாவின் கம்பனியில் டிரைனிங் எடுக்கிராளாம். எனக்கு என்னவோ மதி என்று அழைக்க தான் பிடித்து உள்ளது”  என்று கூறினான்.. நண்பனின் பேச்சிலும் முகத்திலும் ஏற்பட்ட மாறுதலை கண்டுவிட்டான் அழகேசன்..

“ சரி அத்தை மகள் ரத்தினமா அதனால் தான் இவன் இந்த காலை வேலையில் இப்படி இளிக்கிறானா “ என்று நினைத்து கொண்டு சிரித்து விட்டான்..

“ என்னடா லூசு மாதிரி நீயாக சிரிக்கிறாய், ஊருக்கு போய்விட்டு வந்ததும் எதாவது ஆகிவிட்டதா ??”

“ எல்லாம் நேரமடா.. ஏன் சொல்ல மாட்டாய்.. ஆமாம் லூசு தான் பிடித்து உள்ளது ஆனால் அது யாருக்கு என்று தான் இனிமேல் கண்டு பிடிக்க வேண்டும் “ என்றான் அழகேசன்.

“ என்னடா அழகு வந்ததில் இருந்து ஒரு மாதிரியாகவே பேசிக்கொண்டு இருகிறாய்.. சரி சரி வீட்டிற்கு வா அம்மா கூட உன்னை கேட்டார்கள்..”

“ வருகிறேன் கதிரவா, ஆனால் இப்போ இல்லை சாயங்காலமாக வருகிறேன். இப்போ வந்தால் அம்மா சத்துமாவு  கஞ்சி குடி என்று என்னை பாடாய் படுத்துவார்கள்”  என்றான் லேசாக சிரித்து கொண்டே..

இதை கேட்டதும், வசுமதி அன்று அவனை கிண்டல் செய்ததும், இவன் மறுபடி அவளை கேளி செய்ததும் நினைவு வந்தது. அவனை அறியாமல் அவன் முகத்தில் ஒரு மென்னகை படர்ந்தது..

அழகேசன் இதை பார்த்து “ டேய் கதிரவா இப்படியே நேராக போனால் வலது புறம் ஒரு பெரிய வீடு இருக்கும், அது உங்கள் வீடு தான் பார்த்து அங்கே அங்கே நின்று இப்படி விளிக்காமல் வீடு போயி சேறு. நாம் பின்ன பார்க்கலாம் “ என்று கூறி ஓடிவிட்டான்..

“ அடப்பாவி அழகேசா!! இவ்வளோ நேரம் நம்மை கேலி செய்துள்ளான் அது தெரியாமல் நாமும் அவன் கேட்டதற்கு எல்லாம் பதில் கூறி இருக்கிறோம்”  என்று அப்போது தான் கதிரவனுக்கு உரைத்தது.. எல்லாம் அவளால் வந்தது என்று இதற்கும் அவளை காரணமாக்கினான் கதிரவன்..

“ வீட்டிற்கு போனால் ஹாலில் அனைவருடனும் அமர்ந்து இருப்பாள். வேண்டுமென்றே எல்லார் முன்னிலும் பேசி என்னை வம்பிழுப்பாள்.நான் பேசவில்லை என்றால் அனைவரும் என்னை தவறாக நினைப்பார்” என்று எண்ணியபடியே தெருவை சுற்றி ஓடி வந்து வீட்டின் பின் வாசல் வழி நுழைந்து தன் அறைக்கு நுழைத்து விட்டான்.

இது தெரியாமல் வசுமதி தன் அத்தை அம்மாச்சி உடன் அமர்ந்து அவனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.. நேரம் போய்ற்று போய்ற்று போய்கொண்டே இருந்தது..

“ அத்தை என்ன அத்தை இன்னும் உங்கள் மகனை காணவில்லை இப்படி செய்தால் எப்படி ??” என்று தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சினாள்..

காமாட்சிக்கு தெரியும் தன் மகன் இப்படி எதாவது செய்வான் என்று ஆனால் “ வந்துவிடுவான் வசும்மா”  என்றவர் மணியை பார்த்து  “ சரி வசும்மா நீ சென்று குளித்துவிட்டு வா “ என்றவர் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்..

“ என்ன செய்வது இந்த அத்தானை “ என்று புலம்பியவாறே மாடி ஏறி சென்றாள். தன் பேத்தி போவதை பார்த்து மெலிதாக சிரித்து கொண்டார் அன்னபூரணி. மேலே படி ஏறி சென்றவள் ஒரு நிமிடம் நின்று யோசித்தாள். பின் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கதிரவன் உள்ளே இருப்பதை அறியாதவள் அவன் அறையை வெளிப்பக்கம் பூட்டி சாவியை கொண்டு சென்று விட்டாள்..

“ அத்தான் எப்படியும் உங்கள் அறையின் சாவியை வாங்குவதற்காக என்னிடம் பேசி தான் ஆக வேண்டும் “ என்று எண்ணி அவளாக சிரித்தபடி அவளின் அறைக்கு சென்றவளுக்கு ஒரு அதிர்ச்சி ஆச்சர்யம்..

அவளின் மெத்தை மீது இரண்டு டெம்ப்டேசன்  சாக்லேட். அதுவும் அவள் கேட்ட இரண்டு வகையிலும்..

“ ஆகா.. சாக்லேட்..  இது நான் அத்தானிடம் கேட்டது அல்லவா. இது எப்போது இங்கே வந்தது.. நான் கிழே இறங்கும் போது இல்லையே.. ஒரு வேலை அத்தான் மேலே வந்துவிட்டாரோ. அது எப்படி மேலே வந்தார், நாம் முன்னே தானே அமர்ந்து இருந்தோம்.. ஒரு வேலை மாயமந்திரம் தெரியுமா ??” என்று வகை வகையாக யோசித்தாள்.

“ சாக்லேட் வாங்கியவன் கையில் அல்லவா தரவேண்டும்.. இப்படி மெத்தையில் வைத்துவிட்டால், மெத்தை தான் இவனின் அத்தை மகளா?? இருக்கட்டும் மெத்தையை கட்டிக்கொண்டு அழட்டும்”  என்று எண்ணியவளின் மனது, பின் உன்னை கட்டி கொள்ள வேண்டுமா? என்று கேள்வி கேட்டது.

கடவுளே நான் இப்படி எல்லாம் நான் நினைக்க கூடாது என்று எண்ணியவளுக்கு ஏதோ சத்தம் கேட்டது.. என்னவென்று வெளியே சென்று பார்த்தவளுக்கு சிரிப்பு தாங்க வில்லை.. கதிரவன் அவனின் அறை உள்ளே இருந்து கத்தி கொண்டு இருந்தான்..

“ யாராது வெளியே?? யாராவது இருக்கிறீர்களா ?? யார் கதவை சாத்தியது ?? அம்மா அம்மா எங்கு இருக்கிறீர்கள் ?? கதவை திறங்கள் “ என்று சத்தம் போட்டு கொண்டு இருந்தான்..

“ இவன் எப்படி உள்ளே வந்தான்?? எனக்கு தெரியாமல் எப்படியோ உள்ளே வந்துவிட்டு, சாக்லேட் வைத்துவிட்டு அவன் அறையில் சத்தமில்லாமல் நுழைந்துகொண்டான்.. அத்தான் என்னை மன்னித்துவிடுங்கள் “ என்று மனதினுள்  கூறியவள்…

“ என்னை இரண்டு நாட்களாக தவிக்கவிட்டீர்கள் அல்லவா.. நன்றாக அனுபவியுங்கள் இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருங்கள்.. எனக்கு நிறைய வேலை உள்ளது என்று குளிக்க சென்று விட்டாள்“ அதே சமயம் மறந்து போய் ஒரு சிறு தவறும் செய்துவிட்டாள்.        

அதே நேரம் கதிரவன் தன் அறையில் யார் இந்த வேலை செய்து இருப்பார்கள் என்று யோசித்தான். ” ஒரு வேலை இது அவளின் வேலையோ.. இல்லையே அவளுக்கு தான் நான் மேலே வந்ததே தெரியாதே… எப்படி வெளியே செல்வது என்று எண்ணியவன் தான் போன் எடுத்து அவன் அம்மாவிற்கு கால் செய்தான்.. அம்மா எங்கே இருக்குறீங்க?? “

…..

“ அம்மா நான் அப்பொழுதே பின் பக்கமாக வீட்டிற்கு வந்து என் அறையில் குளித்து கொண்டு இருந்தேன். வந்து பார்த்தால் அறை வெளியே பூட்டி இருக்கிறது அம்மா” 

……

“ சரி மா சீக்கிரம் வாங்க “  என்று போனை வைத்துவிட்டான். 

காமாட்சி வந்து கதவை திறக்கவும் , “ யாரம்மா இப்படி செய்தது, என்னிடம் இந்த வீட்டில் இப்படி விளையாடும் அளவு யாருக்கு தைரியம் ??” என்று சற்று கோவமாக கேட்டான்.

“ நீ வீட்டிற்குள் வந்ததே யாருக்கும் தெரியாதே கண்ணப்பா “ என்றார் காமாட்சி..

“ எங்கே மா அவள்??”

“ எவள் ??”

“ அது தான் அந்த குட்டச்சி ஒரு வேலை அவளின் வேலையாக இருக்குமோ” என்றான்.

மகன் பேசியதை கேட்ட காமாட்சி மனதிற்குள் நகைத்து கொண்டே, “ ச்சே ச்சே அவள் அப்படி எல்லாம் செய்யும் பெண்ணல்ல கதிரவா”  என்றவர் மகனின் பார்வை தன்னிடம் இல்லை என்பதை புரிந்துக்கொண்டார்.

வசுமதி அறையில் மெத்தை மீதி அவன் வைத்த சாக்லேட்  இல்லை அதற்கு பதிலாக அவன் அறையின் சாவி இருந்தது. சத்தம் கேட்காதவாறு மெதுவாக உள்ளே வந்து அவன் அறையின் சாவியை எடுத்துக்கொண்டு நின்றவனுக்கு ஒரு யோசனை உதித்தது..

“ மதி என்னையா அறையில் வைத்து பூட்டுகிறாய்… இரு இரு நாள் முழுதும் பாத்ரூமிலேயே இரு “ என்று நகைத்து கொண்டே மெதுவாக பாத்ரூம் கதவை வெளி பக்கம் தாழ் போட்டு சிரித்தபடி வெளி வந்தான்..

“ கதிரவா இப்படி எல்லாம் செய்யகூடாது, பாவம் அவள் உள்ளே எவ்வளோ நேரம் தான் இருப்பாள் சொல்லு… சின்ன பெண்ணடா எதோ தெரியாமல் செய்துவிட்டாள்.. விட்டுவிடேன் “

“ அம்மா நீங்க சும்மா இருங்க கொஞ்சமே கொஞ்ச நேரம் சரியா.. ஒரு சின்ன விளையாட்டு”

 “ என்னதான் விளையாட்டோ .. இந்த பிள்ளைகளுடன் பெரிய ரோதனையாய் போகிறது “என்று புலம்பியபடி கிழே சென்றார்.. இதை எல்லாம் அறியாத வசுமதியோ பாத்ரூம் உள்ளே ஹாயாக குளித்துக்கொண்டு இருந்தாள்..

“ நல்ல வேணும் அந்த பனைமரத்திற்கு என்னிடம் இரண்டு நாட்களாய் பேசாமல் சீன் காட்டினான் அல்லவா ரூமிலேயே இருக்கட்டும் “ என்று சிரித்து கொண்டாள் கதிரவன் சிரித்துக்கொண்டே ஹாலில் அமர்ந்து இருந்தான். அவன் பார்வை நொடிக்கொருதரம் மேலே சென்று வந்தது..

“ என்ன கண்ணப்பா மேலேயே பார்த்து கொண்டு இருக்கிறாய்??”  என்று அன்னபூரணி கேட்கவும், அவனை முந்திக்கொண்டு காமாட்சி நடந்ததை கூறினார்..

“ இது என்ன இருவரும் சிறு பிள்ளை போல் விளையாடுகிறீர்கள். சரி இல்லை கண்ணப்பா போ போய் கதவை திறந்து விட்டு வா “

“ இல்லை அப்பத்தா அவள் என்னை…” 

“ எதுவும் சொல்லவேண்டாம். இரண்டு நாளாய் அவள் வருத்தத்தில் இருக்கிறாளடா நீ பேசவில்லை என்று.. போ போய் பேசிவிட்டு கிழே சாப்பிட அழைத்து வா”  என்று ஒரு அழுத்தமான குரலில் சொல்லவும்.. செல்கிறேன் என்று முனங்கிய படி மேலே சென்றான்..  படி ஏற ஏற வசுமதியின் சத்தம் கேட்டது..

“ யாராவது இருக்கிங்களா?? அத்தை… அத்தை… அத்தை… இங்கு வாங்களேன்.. நான்  கூப்பிடுவது கேட்கிறதா ஐயோ ஆண்டவா.. யாராவது வந்து கதவை திறங்களேன், தங்கம் அக்கா அட்லீஸ்ட் நீங்களாது வாங்களேன் “ என்று கூப்பாடு போட்டு கொண்டு இருந்தாள்..

“ எந்த இடியட் கதவை அடைத்தது”  என்று திட்டும் சத்தமும் கேட்டது.. கதிரவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.. நான் சொல்வதை கேளாமல் இருந்தாய் அல்லவா வேண்டும் வேண்டும் உனக்கு என்று மனதில் கூறிக்கொண்டான்.. வசுமதி கத்தியபடியே இருந்தாள்.. கதிரவன் சென்று வெளி தாழை அகற்றவும், அவள் கதவை பின் புறமாக இழுக்கவும் சரியாக இருந்தது..

இருவரும் தடுமாறி ஒரு நிமிடம் நின்றனர்..  கதிரவன் நினைத்ததே வேறு மெதுவாக சென்று தாழை அகற்றிவிட்டு கிழே வந்துவிடவேண்டும் என்று எண்ணினான் ஆனால் நடந்ததோ வேறு.. விதி வலியது….

இருவருமே திகைத்து நின்றனர்..

வசுமதி இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.. காமாட்சியோ இல்லை தங்கம் அக்காவோ தான் வந்து திறந்து விடுவர் என்று எண்ணினாள் ஆனால் வெளியே நின்றதோ அவன் அந்த கதிரவன்.

கதிரவனின் நிலைமையோ வேறுமாதிரி இருந்தது..

அன்றுதான் மலர்ந்த மலர் போல அழகாய், பளிச்சென்று, தலையில் தன் நீள முடியில் நீர் சொட்ட சொட்ட நின்று தன் முகத்தை அதிர்ந்து பார்பவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.. சிலையென நின்று விட்டான்.. சந்தன சோப்பின் வாசனையும், கஸ்தூரி மஞ்சளின் நறுமணமும் அவன் நாசியை நிறைத்தது..

“ நீங்களா… நீங்கள் தானா… ??”

“என்னை பாத்ரூமில் வைத்து பூட்டியது.. பதில் சொல்லுங்கள் ஏன் இப்படி சிலையென நின்று உள்ளீர்கள் அத்தான்..”  பேசுங்க அத்தான் என்று அவள் பேசுவது எல்லாம் அவன் காதில்விழவேயில்லை.. அவளை தவிற எல்லாம் அவுட் ஆப் போகஸில் தெரிந்தது அவனுக்கு..

“ எப்படி இவளால் மட்டும் எந்த ஒப்பனையும் இல்லாமல் இவ்வளோ அழகாக இருக்க முடிகிறாது ??” என்று யோசனையில் ஆழ்ந்து விட்டான்..

“ அத்தான்.. அத்தான்.. “ என்ன ஆயிற்று இவனுக்கு, பேய் அறைந்து விட்டதோ என்று எண்ணினாள். 

“ பின் ஒருமுறை தான் நிற்கும் கோலத்தை பார்த்துவிட்டு, ச்சே இப்படியா நாம் நிற்பது.  என்ன முட்டாள் தனம் “ என்று எண்ணியவள், மெத்தை மீது இருந்த தன் துப்பட்டாவை அணிந்து கொண்டாள். தன் நீள முடியை துண்டு கொண்டு கட்டிகொண்டாள்..

இத்தனை அவள் செய்த பிறகும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.. தன் பொறுமையை இழந்தவள் அத்தான் என்று அவனை பிடித்து உலுக்கி விட்டாள்..

“ ஹா…. என்ன மதி … “ என்று ஏதோ கனவில் இருந்து விளிப்பவன் போல் கேட்டான்..

“ ஆஹா. என்ன மதி யா?? வசுமதி… நீங்கள் தானே பாத்ரூம் கதவை வெளியே அடைத்தது ?? “  கதிரவனும் இயல்பு நிலைக்கு மாறி…

“ நீதானே என் அறையின் கதவை அடைத்தது ?? “

நான் முதலில் கேள்வி கேட்டேன் பதில் கூறுங்கள் என்றாள்.. அவன் எதுவும் கூறாமல் கிளம்ப எத்தனித்தான்.. இவள் ஓடி சென்று “ பதில் கூறிவிட்டு போங்கள் அத்தான் நீங்கள் தானே அது??” 

“ இவள் வேறு மனுஷன் இருக்கிற நிலைமை  புரியாமல் “  என்று மனதினுள் நினைத்து கொண்டான்.. 

“ ஆமாம்..  நான் தான் கதிரவன் இப்போ உனக்கு என்ன வேண்டும் ??”  என்று அவளை கடுப்படிதான்..

“ ஹலோ ஹலோ எனக்கு இரண்டு கண்ணு இருக்கு. இரண்டும் நல்லா தெரியும்… நீங்க கதிரவன்னு எனக்கும் தெரியும்.. நான் கேட்டது பாத்ரூம் கதவை பூட்டியது நீங்கள்தானா என்று..”

கதிரவன் நிதானமாக அவள் கண்களை பார்த்தான்.. அவளின் பார்வை அவனை ஏதோ செய்தது.. பின் தன் கைகளை கட்டிகொண்டு அவளின் கண்களை உற்று பார்த்தபடி.. “ ஆமாம் நான் தான்.. இப்போ என்ன அதுக்கு??”  என்று சற்று தெனவேட்டாகா கேட்டான்.. என்ன இவன் இப்படி பார்க்கிறான் என்று எண்ணியபடியே….

“ என்ன அதுக்கா.. ஏன் சொல்லமாட்டிங்க.. அது சரி இப்படி தான் உங்கள் ஸ்கூல்ல சொல்லிகுடுத்தாங்களா ??”

“ அடடா சென்னை பள்ளிகூடத்தில் எல்லாம் ஆள் உள்ளிருக்கும் போதே அறையை வெளியே பூட்ட சொல்லிகொடுதார்களோ??”  என்று நக்கலடித்தான்..

“ யூ … யூ … (ஐயோ கண்டுபுடுச்சுட்டானே)..”

“ என்ன யூயூ  …??  நான் தான்… நானே தான்… பதில் சொல்லு “ என்று வேண்டும் என்றே மிரட்டினான்..

“ அட ராமா மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறுகிறதோ குரல் மாறுகிறதே”  என்று எண்ணியவள் அதை மாற்ற எண்ணினாள்..

“ அது ஒன்றும் இல்லை அத்தான்.. நான் மேலே வந்தேனா…” 

சரி

“ உங்கள் அறை திறந்து இருந்ததா….” 

சரி 

“ நான் உள்ளே எட்டி பார்தேனா…” 

சரி 

“ நீங்கள் வேறு காணவில்லையா…” 

சரி

“ சரி அறை பத்திரமாக இருக்கட்டுமே என்று பூட்டி வைத்தேன்”  என்றாள்..

“சரி” அவன் சரி ராகம் பாடவும், “ அத்தான் நான் பதில் கூறிவிட்டேன் “ என்றாள் சிரித்தபடி.. ஏனோ அவனுக்குமே சிரிப்பு வந்தது.. அவன் சிரிப்பதை பார்த்து அமைதியாக நின்றாள் அவனை பார்த்தபடி.. அவன் என்ன என்பது போல் கேட்டான் புருவம் உயர்த்தி..

“ யப்பாடி நீங்கள் பேசிவிட்டீர்கள் அத்தான்.. பேசிவிட்டீர்கள் “ என்று துள்ளி குதித்தாள்.. அதன் பிறகு தான் அவனே உணர்ந்தான் தான் அவளிடம் பேசியதை..

“ ஆனாலும் இவ்வளோ கோவமா அத்தான். நான் தான் சாரி  சொன்னேனே.. நீங்கள் மிகவும் மோசம் அத்தான்.. எனக்கு எப்படி இருந்தது தெரியும இந்த இரண்டு நாளும்.. போங்கள் அத்தான்  “ என்று சிரித்துக்கொண்டே அவனை வசைபாடினாள்..

“ சரி போகிறேன்”  என்று திரும்பினான்..

“க.. கதிர்” என்ற அவளின் அழைப்பு அவனை நிறுத்தியது.. ஏனோ அவள் இன்று கதிர் என்று அழைத்தது அவனுக்கு வித்தியாசமாகவும், மனதிற்கு நெருக்கமாகவும் தோன்றியது.. என்ன என்பது போல் திரும்பி பார்த்தான்….

“ கதிர் ஐம் சாரி“ அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது.. இதை சற்றும் எதிர் பாராதவன்.. 

“ அட மதி என்ன இது..”

 அவனுக்கு என்ன கூறி அவளை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.. அவனுக்குமே இது புது அனுபவமாக இருந்தது…“ விடு விடு அது தான் நான் பேசிவிட்டேன் அல்லவா…”  அவள் முகம் இன்னும் தெளியவில்லை..

“ ரிலாக்ஸ் மதிம்மா “ என்றான்.. மதிம்மா என்று அவன் கூறியது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.. 

“ கதிர் என்ன கோவமாக இருந்தாலும் சரி என்னிடம் நேராக சண்டை போடுங்கள், திட்டுங்கள் சரியா ஆனால் பேசாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள் “

“ ஏன் மதி” 

“ காரணம் எனக்கு தெரியவில்லை.. இதுவரை யாரும் என்னிடம் இப்படி நடந்தது இல்லை.. ஆனால் பேசாமல் மட்டும் இருக்க வேண்டாம் ப்ளீஸ்” 

“ நீயும் என்னை புரிந்து நடந்துகொள்ள வேண்டும் மதிம்மா “ என்றான் சிரித்தபடி.. அவளும் சிரித்தவாறே தலையை ஆட்டினாள்..

“நன்றாக தலையை ஆட்டு.. சரி நான் கிழே போகிறேன் மதி.. நீயும் சீக்கிரம் ரெடி ஆகி வா.. எல்லாம் காத்துகொண்டு இருக்கிறார்கள்..”

“ அத்தான் அத்தான் ஒரு நிமிஷம் “

“ அடடா இன்னும் என்ன மதி. ”   இந்தாருங்கள் என்று அன்று அவள் அவனுக்கு எடுத்த ட்ரெஸ்ஸை கொடுத்தாள். அவன் வாங்குவதா வேண்டாமா என்று தயங்கியபடி நின்றான்..

“ என்ன தயக்கம் உங்களுக்கு, நீங்கள் தந்த இல்லை இல்லை மெத்தையில் வைத்துவிட்டு போன சாக்லேட் எல்லாம் நான் எடுத்துகொள்ளவில்லையா??  நியாயமாக பார்த்தால் நான் அதை தொட்டு கூட இருக்க கூடாது.. ஏன் அத்தான் நான் உங்களுக்கு அத்தை மகளா ?? இல்லை அந்த மெத்தையா ???”  என்று சிரித்தபடி கேட்டாள்..

“ அது அது வந்து மதி…”

“ அதேதான். நான் மதி தான்.. இல்லை என்று கூறவில்லையே “ என்று அவனை போலவே கையை கட்டியபடி தலையை சரித்து ஒற்றை புருவம் உயர்த்தி வினவினாள்..

“ ராட்சஸி… படுத்துகிறாளே.. “ என்று எண்ணினான்.. “ சரி அந்த சாக்லெட்டை என்னிடம் திருப்பி கொடு மதி சீக்கிரம் “ ஏன் கேட்கிறான் என்றே புரியாமல் ஒரு குழப்பமான பாவனையுடன் சாக்லேடை திருப்பி தந்தாள்..

“ ஹ்ம்ம் மதி என்னிடம் சேம் பின்ச் அடித்து சாக்லேட் கேட்டாய் அல்லவா, இந்தா நீ கேட்ட சாக்லேட் “..

“ ஓஹோ…அத்தான் இதற்கு தான் கேட்டிங்களா?? நான் கூட ஏன் என்று குழம்பிவிட்டேன்.. தேங்க்ஸ் அத்தான்”  என்றாள் சிரித்தபடியே..

“ எல்லாத்துக்கும் சிரி என்ன “

“ அத்தான் இந்தாருங்கள் உங்களுக்கு நான் வாங்கிய டிரஸ் “  அவனும் சிரித்தபடியே வாங்கிகொண்டான்..

 “ தேங்க்ஸ் மதி.. சீக்கிரம் கிழே வா எல்லாரும் வெய்டிங்”  என்று கூறி சென்று விட்டான்.. வசுமதி இப்போதுதான் நிம்மதியாக உணர்ந்தாள்..இவனை பேச வைப்பதுக்குள் போதும் போதும் என்றல்லவா இருக்கிறது என்று பெருமூச்சு விட்டாள்..

கதிரவன் அவன் அறைக்கு சென்று டிரெஸ்ஸை வைத்துவிட்டு கிழே வந்தான்..

“ என்ன கதிரவா எங்கே வசுமதி ?? மறுபடியும் எதாவது சண்டை கிண்டை போட்டு விட்டீர்களா ?? ஏனடா அமைதியாய் வருகிறாய் “ என்று மகனிடம் விசாரித்தார்..

“ அடடா அம்மா அதெல்லாம் எதுவும் இல்லை ரெடி ஆகி கொண்டு இருக்கிறாள், வந்து விடுவாள்.. அப்பத்தா உன் பேத்தியை சமாதானம் செய்துவிட்டேன் இப்போ சந்தோசமா”  அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே அன்னபூரணிக்கு வேண்டிய பதிலை தந்தது..

 “ எனக்கு என்ன கண்ணப்பா காலம் போன கடைசியில், என் பிள்ளைகள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதை கண்டாலே போதும் “

அதே நேரம் அம்மாச்சி என்று அவரை வந்து கட்டிகொண்டாள் வசுமதி.. “ அம்மாச்சி அத்தான் பேசிவிட்டார்..” 

“ அப்படியா சரி சரி நல்ல விஷயம் தான்.. முதலில் சென்று சாப்பிடுங்கள் என்று கூறி அனுப்பினார்..”  இருவரும் சாப்பிட சென்றனர்.. வசுமதி எதுவோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.. கதிரவனுக்கு சாப்பிடும் போது பேசினாலே பிடிக்காது..

“ இதற்கு வேறு மகன் கோவம்கொள்ள போகிறான் “ என்று பார்த்தார் காமாச்சி.. ஆனால் அவனோ வசுமதி கேட்கும் கேள்விக்கெல்லாம் சளைக்காமல் பதில் கூறியபடி உண்டான்.. அதை ஆச்சர்யமாய் பார்த்த தன் மருமகளை கண்டு அர்த்தமுள்ள புன்னகை ஒன்றை வீசினார் அன்னபூரணி.. காமாட்சிஅம்மாள் முகத்திலும் முன்னகை…

“ மதி உனக்கு தெரியுமா சிவா அடுத்த வாரம் வருகிறானாம் ஐந்து  நாள் லீவ் வருகிறதாம்..”

 “ஐ!!!! அப்படியா???ஆனால் அவன் என்னிடம் எதுவுமே சொல்லவில்லயே“  என்று கேட்டாள்..

“ நீ தான் இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லையே கண்ணம்மா”  என்றார் அன்னபூரணி..

“ ஓ !! சரி அத்தான்.. எப்படியோ நீங்கள் சிவாவை கரெக்ட் பண்ணிடிங்க.. எனக்கு தான் உங்களை பேச வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது” என்று கூறி கலகலவென சிரித்தாள்.. பேச்சை பார் என்று எண்ணினான்.. “இவள் என்ன இப்படி பேசிக்கொண்டே போகிறாள் என்று எண்ணியவன்.. ஏன் மதி நீ இப்படித்தான் எப்பையுமேவா இல்லை இன்றுதான் இப்படியா ??”

“ புரியவில்லை அத்தான்”

“ இல்லை மனதில் தோன்றுவதை அப்படியே பேசுகிறாயே அதுதான்”  என்று கேட்டான்.. அவள் அவனை பார்த்து சிரித்தபடி..” எல்லோரிடமும் அப்படி இருக்க முடியுமா அத்தான்” என்று கேட்டாள்.. “ அதைதான் நானும் கேட்கிறேன் மதி..”  வசுமதி என்ன பதில் கூற போகிறாள் என்பதை கேட்க அன்னபூரணி காமாட்சிஇருவருமே ஆவலாக இருந்தனர்..

 

Advertisement