Advertisement

மாயவனோ !! தூயவனோ – 21                                    

தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம் என்னவென்று கூறும்படி கேட்டுகொண்டதே மனோ தானே..

என்ன முயன்றும் மனோவால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. இறுகிய பாறை போல இருந்த மனோவின் முகத்தை பார்க்கவே அவனது நண்பனுக்கு மனதில் சிறு அச்சம் வந்தது. 

மனோவின் நண்பன் இரண்டே நாட்களில் அந்த சுந்தரை அவன் அறியாத வன்னம் பின் தொடர்ந்து, அவனது ஆதி அந்தம் என அனைத்தையும் கண்டறிந்துவிட்டான். இரண்டு நாட்களும் தன் தோழன் உறங்க கூட இல்லை என்பது அவனது முகம் பார்த்தாலே புரிந்தது மனோவிற்கு..

“ மனோ இப்போ நான் உன்கிட்ட சொன்ன எல்லாமே நூறு சதவிகிதம் உண்மை.. ஏன்னா இது நானே நேருல போய் பார்த்து, ஒன்னொன்னா விசாரிச்சு எல்லாம் சேகரிச்ச விஷயங்கள்..”

“ ம்ம் தேங்க்ஸ் டா.. ஆனா இதெல்லாம்…”

“ இதெல்லாம் சினிமால பாக்குற மாதிரி இருக்கா மனோ.. நிஜத்துல நடக்குற சில விசயங்கள் தான் சினிமால வருது டா.. அவன் வெளிய எத்தனைக்கு எத்தனை நல்லவன் வேஷம் போட்டு இருக்கானோ அவ்வளோ அயோக்கியன்..” என்று பற்களை கடித்தான் மனோவின் நண்பன்.

“ஹ்ம்ம் மித்ராவை கல்யாணம் பண்ண கேட்டதுலையே தெரியலையா அவன் லட்சணம். ஆனா நான் வேற ஏதோ நினைச்சேன் டா.. பட் இவ்வளோ மோசமா இருப்பான்னு நான் எதிர்பார்களை. டேமிட்.. எவ்வளோ கொடுமையான காரியத்தை ரொம்ப ஈஸியா செஞ்சுகிட்டு இருக்கான்..”

“எஸ் டா.. ஆனா இது எதுவுமே அவன் அப்பாக்கு தெரியாது.. இது ஒன்னு தான் இப்போ நமக்கு இருக்கிற சாதகமான விஷயம். ஏன்னா இதெல்லாம் அவன் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளோதான் அவன் காலி..”

“ என்னடா சொல்லுற ??? அதெப்படி அமைச்சருக்கு தெரியாம இருக்கும்.. ??”

“ அதுல தான் டா இவன் கில்லாடியா இருக்கான்.. அப்படி நடிக்கிறான்.. ஆனா அவன் பொண்டாட்டி தான் பாவம்.. ஹ்ம்ம்.. சரி சொல்லு நண்பா அடுத்து நம்ம என்ன செய்யலாம்..??”

“ இதை ஒரு நிமிசத்துல நம்ம  மீடியாக்கு கொண்டு போக முடியும்.. அவனை உள்ள தள்ள முடியும்.. ஆனா அவன் அடுத்த நிமிசமே இதெல்லாம் போயின்னு சொல்லி வெளிய வந்திடுவான்.. அதுவும் இல்லாம அப்படி நம்ம உடனே ரியாக்ட் பண்ணா இதெல்லாம் யாரு பண்ணா என்னன்னு கேள்வி வரும், நம்மதான்னு கண்டுபிடிச்சா, அப்புறம் மித்ரா பேரும் வெளிய வரும்..” என்று மனோ தயங்கும் பொழுதே

“ நீ சொல்லுறது சரிதான் டா.. ஆனா இந்த விஷயம் நம்ம பொறுமையா ஹான்டில் பண்ணறது இல்ல.. இன்னைக்கோட மித்ரா அப்பா அவன்கிட்ட கேட்ட ரெண்டு நாள் முடியுது. அவங்க ஊருல இருந்து வந்த உடனே அந்த நாய் மோப்பம் பிடிச்சு வந்திடுவான்.. அதுவும் இல்லாம அவன் மித்ராவையே கடைசியில பலி குடுக்க முடிவு எடுத்து இருக்கான் டா.. ”

இதை கேட்டதும் மீண்டும் மனோவின் முகம் கருத்தது.. கண்கள் நிலைகுத்தி ஒரே இடத்தையே வெறித்தது.. மனதிற்குள் சொல்ல முடியாத பல குழப்பங்கள். ஒருபக்கம் மித்ராவை காப்பாற்ற வேண்டும் அதே சமயம் சுந்தரையும் அடக்க வேண்டும்.. எப்படி எப்படி ??? இதை எல்லாம் செய்வது. அதுவும் மித்ராவை இதெல்லாம் அண்டாதபடி நடத்த வேண்டும்..

இந்த இத்தனை கேள்விகளுக்கும் அவன் விடை தேடிக்கொண்டு இருந்தான்.. சில வினாடிகள்.. மனோவிற்கு முதலில் இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனை தான் இருந்தது..

ஆனால் மித்ராவை சுற்றி வேறு ஆபத்துகளும் சுந்தரால் வரும் என்பதை அறிந்த பின் அவன் மனம் அமைதிகொள்ள மறுத்தது.. மித்ராவை தன் கண் முன்னே, தன்னுடனே வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேர் விட்டு விருட்சமாய் வளர்ந்து நின்றது.. “ என்னைய தவற வேற யாரும் அவளை பத்திரமா பாதுகாக்க மாட்டாங்க.. அவ என்கூட, என் முன்னாடி தான் இருக்கனும். அது தான் அவளுக்கு நல்லது” என்று நினைத்துகொண்டான். ஆனால் இதை எப்படி செயல்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது.            சில வினாடிகளே அவன் செய்வது அறியாது அமர்ந்து இருந்தது.. அதன் பின் அவன் முகம் மெல்ல தெளிவு பெற்றது போல இருந்தது..

“ என்ன மனோ ஏதோ ஒரு முடிவுக்கு வந்துட்ட போல??”

“ ம்ம் ஆமா டா.. இன்னும் பத்தே நாள்ல எனக்கும் மித்ராக்கும் கல்யாணம்..”   

“ என்ன ??!!!!”

“ ஆமா டா எனக்கும் மித்ராக்கும் இன்னும் பத்தே நாள்ல கல்யாணம்.. மித்ராவோட பாதுகாப்புக்கு இதை தவற வேற வழி இல்ல.. இதை கண்டிப்பா நான் நடத்தி காட்டுவேன் டா..”

“ அதெல்லாம் சரி டா ஆனா இந்த சுந்தர கண்ணுல மண்ணை தூவனுமே..  அவனுக்கு தெரிஞ்சா எல்லாரும் சொர்க்கம் போயிடுவோம் டா..”

“ஹா ஹா அவனை பத்தி யோசிக்கமையா நான் இந்த முடிவு எடுத்து இருப்பேன் டா.. அவனுக்கு ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன்..”

“ என்ன வழி டா..”

“ ஜோசியக்காரன் “ என்று கூறி அர்த்தமுடன் சிரித்தான் மனோ.. இதை புரிந்த அவனது நண்பனும் சிரித்துகொண்டான்.. “ஆனா அதுக்கு முன்னாடி மித்ரா வீட்டுல இதை பத்தி பேசணுமே “ என்று கூறியவன் தன் அலைபேசியில் ரவிச்சந்திரனை அழைத்தான்..

“ ஹலோ மாமா.. வீட்டுக்கு வந்துட்டிங்களா ??”

“ ஹ்ம்ம் இப்போதான் மனோ தம்பி.. வந்து ஒரு பத்து நிமிஷம் ஆச்சு. நானே உங்களுக்கு கூப்பிடனும்னு இருந்தேன்..”

“ நல்லது மாமா.. தரிசனம் எல்லாம் நல்லா இருந்ததா ?? வேற எந்த பிரச்சனையும் இல்லையே?? “

“ அதெல்லாம் எதுவும் இல்ல தம்பி.. ஆனா அந்த சுந்தர் ஓட ஆளுங்க கூடவே இருந்தது தான் கொஞ்சம் சங்கடமா இருந்தது.. மித்ரா வேற என்ன எதுன்னு கேட்க ஆரம்பிச்சுட்டா..”

“ ஓ!! சரி மாமா இன்னைக்கு நல்லா தூங்கி எழுந்து நாளைக்கு எப்பயும் போல வாங்க.. ரொம்ப முக்கியமா பேசணும்..”

அவன் குரலில் இருந்த அழுத்தமே அவருக்கு புரிந்தது விஷயம் மிக முக்கியம் என்று.. “ என்ன மனோ.. எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க.. நாளைக்கு வரைக்கும் ஏன் காத்து இருக்கனும் ??”

“ அதுக்கில்ல மாமா… “ என்று இழுத்தவன், சரி இருங்க ஒரு அரை மணி நேரத்துல நானே அங்க வரேன்..” என்று கூறி வைத்துவிட்டான்..

“ மனோகரனே நேரில் வருகிறான் என்றால், பிரச்சனை நாம் எண்ணியதை விட பெரியதாக இருக்குமோ  ??” என்று நினைத்தார் மித்ராவின் தந்தை.. மனோ வருவதை தன் மனைவியிடம் கூறியவர், மித்ராவை தேடி அவளின் அறைக்கு சென்றார்.

அவளோ ஊருக்கு சென்று வந்த அலுப்பில் நன்றாய் உறங்கி கொண்டு இருந்தாள்.. கள்ளம் கபடம் இல்லா தன் மகளின் முகத்தையே உருத்து பார்த்தவர் “ ஆண்டவா என் மக வாழ்க்கை நல்ல படியா அமையனும். எவ்வளோ நிம்மதியா தூங்குறா.. இதே மாதிரி ஒவ்வொரு நாளும் என் பொண்ணு தூங்கும் பொழுது நிம்மதியான மனசோட தூங்கனும் “ என்று வேண்டினார்..

தாமரை “ என்னங்க வெளிய வாங்க.. மனோ தம்பி வரும் போது இவ தூங்கிட்டு இருக்கிறது தான் நல்லது.. இல்ல அது இதுன்னு ஏதாவது கேள்வி கேட்பா. எழுப்பாம வெளிய வாங்க “ என்று தன் கணவரை இழுத்துக்கொண்டு வெளியே சென்றார்..

ஒரு சிறு நேர காத்திருப்பிற்கு பின் மனோகரனின் கார் மித்ராவின் வீட்டு வாசல் முன் வழுக்கிக்கொண்டு நின்றது.. வேகமாக தாமரையும் ரவிச்சந்திரனும் அவனை வரவேற்க்கும் பொருட்டு வாசலுக்கு ஓடினர்..

“ வாங்க.. வாங்க தம்பி “ என்று மித்ராவின் தந்தை சற்றே பதற்றமாக வரவேற்றார்.. தாமரை ஒரு சிறு முறுவலுடன் தன் வருங்கால மருமகனை பார்த்தபடி நின்று இருந்தார்..

“ மனோ தம்பி இவங்க தான் மித்ரா ஓட அம்மா “ என்று கூறவும் மனோ பட்டென்று தாமரையின் காலில் விழுந்துவிட்டான் “ என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை”

இது ஒன்றே போதாதா, தன் மகளை விரும்பி மணமுடிக்க மனோகரன் கேட்கிறான் என்றதும் தாமரை மகிழ்ச்சி அடைந்தார் தான். ஆனால் ஒரு அன்னையாய் அவர் மனம் சிறிது அச்சம் கொண்டே இருந்தது.. ஆனால் இப்பொழுது அனைத்தும் சூரியனை கண்ட பனித்துளி போல விலகிவிட்டது..

“ என்.. என்ன தம்பி.. என் கால்ல.. நல்லா..நல்லா இருங்க “ என்றார் தாமரை சற்றே அதிர்ச்சி, பெருமிதம், மகிழ்ச்சி கலந்த குரலில்..

அவனும் பதிலுக்கு ஒரு புன்னகை சிந்தியவன் ஒரு முறை வீட்டையும், தெருவினையும் தன் பார்வையால் அலசினான். “ வெளியவே நிக்கவேண்டாம் உள்ள போயி பேசலாம் “ என்று தாமரை கூறவும், மெல்ல தயங்கி “ மித்ரா “ என்றான்..

“ அவ தூங்குறா மனோ. அவ முழிச்சுக்கிட்டு இருந்தா தான் வம்பே” என்று ரவிச்சந்திரன் கூறவும் அதற்கும் ஒரு புன்னகையே பதிலாக தந்தான். ஆனால் அவன் மனமோ இத்தனை தூரம் வந்தும் தன் மனதிற்கு இனியவளை காண முடியவில்லையே என்ற ஏக்கம் கொண்டது..

அவனது முகமே தன் உணர்வுகள் எதையுமே வெளிக்காட்டாமல் இருந்தது.. வீட்டின் கதவை தாளிட்டுவிட்டு, மித்ராவின் அரை கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மூவரும் ஒன்றாய் அமர்ந்தனர்..

மனோவிற்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. ஆனால் வேறு எந்த வழியும் இருப்பதாகவும் தெரியவில்லை.. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு “ அத்தை, மாமா  என்னைய தயவு செஞ்சு தப்பா நினைக்கவேண்டாம்.. “ என்று கூறவுமே, மற்ற இருவரின் முகமும் மாறியது..

“ ஒருவேளை மனோ பின்வாங்குகிறானோ ??“ என்று தாமரை எண்ணினார்.. ஆனால் அவன் அத்தை மாமா என்று அழைத்த விதம் மனதிற்கு சற்று நம்பிக்கை குடுத்தது.

“ என்.. என்ன விசயம்னு சொல்லுங்க தம்பி “ என்றனர் இருவரும் ஒருசேர.. இருவரின் முகத்தையும் பார்த்தவன், பின் உறுதியாக “ எனக்கும் மித்ராக்கும் இன்னும் பத்து நாளுக்குள்ள கல்யாணம் நடக்கணும் “ என்றான்.. அவன் சம்மதம் கேட்க வரவில்லை.. தகவல் கூற வந்தது போல இருந்தது அவனது பேச்சும், தோரணையும்..

இதை கேட்ட மித்ராவின் பெற்றோர்கள் இருவரும் “ என்ன ??!!! “ என்று திகைத்தனர்..

“ ம்ம்.. ஆமாம்.. வேற வழியில்ல.. மித்ரா ஓட பாதுகாப்புக்கு இதை தவிர வேற வழியில்ல “ என்று கூற தொடங்கி சுந்தரை பற்றி அனைத்தையும் கூறி முடித்தான்..

தாமரைக்கும் ரவிச்சந்திரனுக்கும் தாங்கள் கேட்கும் அனைத்தும் உண்மைதானா என்றே நம்ப முடியவில்லை.. ஆனால் இது அத்தனையும் தங்களை சுற்றி நடந்துகொண்டு இருக்கிறது என்பது புரிய சிறிது நேரம் பிடித்தது.. தாமரை நெஞ்சில் கைவைத்து அமைதியாகிவிட்டார்..

அந்த சுந்தரிடம் தன் மகள் சிக்கினால் என்றால், அவள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டுவிடுமே என்று அந்த தாய் மனம் பதறியது.. ஆனாலும் தன் பயத்தை, பதற்றத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளி, மகளின் வாழ்வு பற்றிய எண்ணமே முன்னாக இருந்தது..

ஒரு சிறிது நேரம் யோசித்தவர், “ மனோ தம்பி, நான் இதுக்கு முன்ன உங்களை பார்த்தது இல்லை.. ஆனா மித்ரா அப்பா உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்கார்..”

“ இந்த நிமிஷம் நான் உங்களை முழுசா நம்புறேன்.. நீங்க என்ன சொல்றிங்களோ நாங்க அதை பண்றோம்.. எனக்கு என் பொண்ணு முதல்ல பாதுகாப்பா இருக்கனும்.. அது தான் முக்கியம் “ என்று மறைமுகமாக திருமணதிற்கு சம்மதம் தெரிவித்தார்..

தன் மனைவியின் இந்த பதிலை கேட்ட ரவிச்சந்திரன், “ தாமரை “ என்று அதிர்ந்தார்..

“ ஆமாங்க.. மித்ராக்கு இப்போ சந்தோசமான ஒரு வாழ்க்கையவிட, முதல்ல அவளுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். அவ பத்திரமா இருந்தாலே நிம்மதி சந்தோசம் எல்லாம் தான தேடி வந்திடும்.. ஒரு அம்மாவா இது, இது என்னோட உணர்வை புரிஞ்சுகோங்க..” என்று கண்ணீர் மல்கினார்..

சிறிது நேரம் அங்கே நிசப்தம் நிலவியது.. “ நீங்க சொல்றது எல்லாம் சரிதான் மனோ.. ஆனா பத்து நாள்ல கல்யாணம்.. இதுல நம்ம சுந்தரை சமாளிக்கணும், அதை விட மித்ராவை சம்மதிக்க வைக்கணுமே “ என்று கேள்வி எழுப்பினார் ரவிச்சந்திரன்..

மனோவின் முகத்தில் இப்பொழுது ஒரு சிறு நிம்மதி பரவியது,.. “ நீங்க எதுவும் கவலை படவேண்டாம் மாமா.. அந்த சுந்தர் இன்னும் பத்து பதினைஞ்சு நாளைக்கு உருக்குள்ள இருக்கமாட்டான்.. அதுக்கு நான் ஏற்பாடு பண்ணிக்கிறேன்.. அவன் பொறுப்பு இனிமே என்னோடது.. ஆனா மித்ரா ???”

“ மித்ராவை பத்தி எந்த கவலையும் வேண்டாம்.. அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவா “ என்றார் உறுதியாக தாமரை..

அவரின் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் “ அத்தை இதுல மித்ராவோட சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்.. ஏன்னா இது நிஜமான கல்யாணம். வேற வேற காரணத்துக்காக இந்த கல்யாணம் நடந்தாலும் என்னைய பொறுத்த வரைக்கும் மித்ராகூட வாழ போற வாழ்க்கைக்கு இது முதல் படின்னு தான் நினைக்கிறேன்.. அந்த படில மித்ராவும் முழு மனசோட கால் பதிச்சு என்கூட வரணும்.. அது எனக்கு முக்கியம் “ என்றான் உறுதியான குரலில்..

அவன் கூறுவதை கேட்ட தாமரை “ நீங்க மித்ராவை பத்தின கவலையே விடுங்க தம்பி.. நான் அவகிட்ட பேசிக்கிறேன்.. நிச்சயம் அவ கல்யாணத்துக்கு முழு மனசோட தான் வருவா.” என்றார் அதே உறுதியான குரலில்..

இன்னும் சிறிது நேரம் திருமணத்தை பற்றி பேசிவிட்டு அடுத்து மனோ சென்ற இடம் அந்த ஜோசியக்கரனின் வீடு.. மனோவின் கார் ஒரு இரண்டு விநாடி அந்த ஜோசியகாரனின் வீட்டிற்கு முன் நின்று இருக்கும்.. அதன் பின் அவனது வாகனத்தை தொடர்ந்து சென்றது இன்னொரு சிறு கார்..

அந்த ஜோசியனின் கண்கள் கட்ட பட்டு இருந்தது.. அவன் எதிரில் மனோவும், அவனது நண்பனும், குமாரும் அமர்ந்து இருந்தனர்…

அந்த ஜோசியனோ “ காப்பாத்துங்க… காப்பாத்துங்க” என்று காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தான்.. மனோ “ என்ன ஜோசியரே… இப்படி நாக்கு வெளிய வர அளவுக்கு கத்திட்டு இருந்தா எப்படி ?? கொஞ்சம் சாந்தி அடைஞ்சா நாங்களும் பேச நல்லா இருக்கும் “ என்றான் நக்கலாக.

“ டேய் யாரு டா நீங்க… ஏன் டா இப்படி என்னைய கடத்திக்கிட்டு கொண்டு வந்து இருக்கீங்க??? நான் யாருன்னு தெரியாம என் மேல கை வைச்சுட்டிங்க.. வேண்டாம் இது உங்களுக்கு நல்லது இல்ல ”என்று மீண்டும் கத்தினான்..

“ ச்சி.. என்ன இது சும்மா சும்மா கத்திக்கிட்டு இருக்க.. ஆமா என்ன மிரட்டலா ?? நல்லா மிரட்டிக்கோ.. ஆனா நாங்க அதுக்கு எல்லாம் அசர மாட்டோம்.   வெளிய நீ என்னவோ பெரிய சாமியார் அது இதுன்னு சொன்னாங்க.. கத்துன உன் வாயிலையும் துணிய வச்சு அடைச்சிடுவோம் “ என்று குமார் ஒரு மிரட்டல் போடவும் சற்றே அடங்கினான்..

“ யாரு நீங்க?? எதுக்கு என்னைய இப்படி கடத்தி”

“ ஏய்!! என்ன இப்ப ஸ்லோ மாடுலேஷன்லையும் இதையே சொல்லுற.. உன்னைய கடத்தி நாங்க என்ன பண்ண போறோம் ?? “ என்றான் மனோவின் நண்பன்..

“ அப்புறம் ஏன் இப்படி கண்ணை கட்டி கூட்டிவந்து “ என்று அவன் கேட்கும் பொழுதே

“ அடடா என்னடா இவன்.. பேசிக்கிட்டே இருக்கான்.. இங்க பாரு உன்னைய வச்சு ரசிக்க ஒன்னும் நாங்க கூப்பிட்டு வரல.. கூட்டி வந்த எங்களுக்கு எதுக்குன்னு சொல்ல தெரியாதா?? உன்னால எங்களுக்கு ஒரு காரியம் ஆகணும் “ என்றான் மனோ..

“ என்ன ?? என்ன காரியம்??? “ என்று அவன் திக்கி திணறும் பொழுதே

“ இங்க பாரு அமைதியா நாங்க சொல்லுறதை நல்லா கேட்டு அதை அப்படியே செஞ்சுட்டா, உனக்கு நல்லது, கொஞ்சம் பணமும் கிடைக்கும். அதை விட்டு எதா குழப்பம் செய்ய பார்த்த நீ ஜோசியம் பார்க்க உன் கண்ணு இருக்காது.. அவ்வளோ ஏன் நீயே இருக்கமாட்ட..” என்றான் குமார்..

ஜோசியக்காரன் சற்று அரண்டு தான் போய் விட்டான்.. தன்னை கடத்தி வந்தது யாரென்று தெரியவில்லை.. ஆனால் கேட்பது என்னவோ மூன்று திடமான ஆண்களின் குரல்கள்.. அவர்களின் குரலே சொல்வதை செய்வோம் என்று பறைசாற்றியது..

மனோவிற்கு அந்த ஜோசியனை காண காண ஆத்திரம் வந்தது “ இந்த அறைமுட்டாள் பேச்சை நம்பிதானே அந்த அயோக்கியன் மித்ராவை கல்யாணம் செய்ய நினைச்சான்.. இவனை ரெண்டு அடி போடாம விடக்கூடாது “ என்றே இருந்தான். குமார் தான் அவனை தடுத்து வைத்தான்..

“ வேண்டாம் மாப்ள இப்ப எதுவும் கை வைக்க வேண்டாம்.. எல்லாம் நல்ல படியா முடியட்டும் இவனையும் தூக்கி உள்ள போட்டுடலாம்” என்று அவனை சரிக்கட்டி வைத்து இருந்தான்.. 

குமார் “ உன் பேரு என்ன ??” என்று வினவினான்..

“ உண்மைவிளம்பி “ என்று அந்த ஜோசியன் பதில் கூறவும்  மூவருக்கும் அதிர்ச்சி.. இவனுக்கும் இவனது பெயருக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை..

“ என்ன ??? உண்மைவிளம்பியா ??? உனக்கு போய் இந்த பெயரா ?? டேய் பாருங்க டா.. கழுதைக்கு பேரு முத்துமாலையாம் “ என்று கூறி சிரித்தான் மனோ..

“ வேண்டாம் என்னைய பத்தி தெரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க “

“ ஆமாமா இவர் பெரிய மகாராஜா.. டேய் பிராடு.. உன்னைய தூக்கும் போதே உன்னைய பத்தி தெரியாம தூக்குவோமா ?? சரி இப்ப என்ன பண்ணுற நாங்க சொல்லுறதை அமைதியா கேட்டு உன் மூளையில பதிய வைக்கிற”

“ அதெல்லாம் முடியாது.. நான்.. நான் ஏன் நீங்க சொல்லுறதை கேட்கணும்” என்று பதிலுக்கு அவன் கேட்கவும் மனோவிற்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை..

“ இங்க பாரு.. நீ உயிரோட இங்க இருந்து போகணும்னா, உனக்கு நாங்க சொல்லறதை செய்யிறது தவிர வேற வழியில்ல.. புரியுதா.. ஒழுங்கா நடந்துக்க.. பொய் சொல்லி பொழப்பு நடத்திக்கிட்டு இருக்க உனக்கு இவ்வளோ வீராப்பா?? மவனே சொல்லற பேச்சு கேட்கல நடக்குறது வேற “ என்று புலியென உறுமினான்..

மனோவின் உறுமலில் சற்றே பயந்தவன் “ என்ன.. என்ன செய்யணும் “

“ ஹ்ம்ம் அப்படிவா வழிக்கு.. ஒண்ணுமில்ல, நாங்க சொல்லுறதை அப்படியே அந்த சுந்தர் கிட்ட சொல்லணும் அவ்வளோதான்..”

“ சுந்தரா.. எந்த சுந்தர்?? எனக்கு எந்த சுந்தரையும் தெரியாது “

“ மாப்ள இவனுக்கு இவன் உயிர் மேல ஆசை இல்லடா.. டேய் அந்த பாய்சன் ஸ்ப்ரே வாங்கி இருக்கல, நம்ம ஜோசியர் சாமி முகத்துல கொஞ்சம் தெளிச்சு விடு.. சொர்க்க லோகம் போகட்டும் “ என்று சிரித்துகொண்டே கூறினான் குமார்..

“ என்ன என்னைய மிரட்டுரிங்களா ??”

“ ஹா ஹா.. மிரட்டலா ??” என்று கேட்டுகொண்டே வெறும் தண்ணீர் ஸ்ப்ரேயை  ஜோசியனின் முகத்தில் தெளித்தான் மனோ.. “ இன்னும் கொஞ்ச நேரத்துல எம தூதர்கள் வந்து உன்னைய கூப்பிட்டு போவாங்க.. ஜாலியா அவங்க கை பிடிச்சு போ “ என்று கூறி முதுகில் ஒரு போடு போட்டான்..

“ வேணாம்.. வேணாம்.. நான்.. நான் நீங்க சொல்லுறதை கேட்கிறேன்.. என்னைய எதுவும் பண்ணிடாதிங்க.. வேணாம் ” என்று பயத்தில் அலறினான்..

“ஹ்ம்ம் இது நல்ல மனுசனுக்கு அழகு.. சரி அந்த சுந்தருக்கு போன் போட்டு நாங்க சொல்லுறது மாதிரி சொல்லணும் “

“ ம்ம் சரி.. ஆனா “

“ இந்த ஆனா ஆவன்னா எல்லாம் நாங்க பாத்துக்குவோம்.. நீ நாங்க சொல்லுறதை மட்டும் பண்ணு..”

“ சரிங்க “

…..

“ ஹலோ சுந்தர்வால்.. எப்படி இருக்கீங்க ??” என்று உற்சாகமாய் கேட்டது ஜோசியரின் குரல் சுந்தருக்கு தன் அலைபேசியில்..

“ உங்க ஆசிர்வாதத்துல நான் நான் நல்லா இருக்கேன்  சாமி.. என்ன திடீர்னு கூப்பிட்டு இருக்கீங்க “

“ அது ஒண்ணுமில்ல சுந்தர், நான் இமயமலைக்கு போகலாம்னு இருக்கேன்.. வர எப்படியும் ஒரு இருபது நாள் ஆகும்.. அதுக்கு முன்ன உங்களுக்கு ஒரு தகவல் சொல்லிட்டு போகணும் அதான் “

“ என்ன சாமி சொல்றிங்க?? என் கல்யாணத்தை நீங்க தான் முன்ன இருந்து நடத்தி வைக்கணும், ஆனா இப்படி இமயம் போறேன்னு சொன்னா எப்படி ??”

“ அடடா உங்க கல்யாணத்துக்கு நான் கண்டிப்பா இருப்பேன்.. கவலையே வேண்டாம்.. நேத்து என் பக்தர்களுக்காக நான் ஆழ்நிலை தியானம் பண்ணேன்.. அப்போ இறைவன்கிட்ட இருந்து உங்களுக்கு சொல்லும்படியா ஒரு தகவல் வந்தது”

“ எனக்கா ?? என்ன சாமி சொல்றிங்க ?? நீங்க என்ன சொல்றிங்களோ நான் அதை அப்படியே கேட்பேனே.. இதை சொல்ல இவ்வளோ தயக்கமா ?? சொல்லுங்க சாமி “ என்றான் சுந்தர்..

“ அது ஒண்ணுமில்ல சுந்தர்.. உங்களுக்கு இன்னும் ஒரு பதினைஞ்சு நாளுக்கு நேரம் ரொம்ப சரியில்ல.. அதான் வேற ஊருல போயி இருந்துட்டு வந்திங்கன்னா நல்லது.. “

“ என்ன சாமி சொல்றிங்க ??” அதிர்ந்தான்..

“ ஆமா சுந்தர்.. இப்போ உங்களை சுற்றி கேட்ட அலைகள் பரவி கிடக்கு.. அதுனால இன்னைக்கே வேற எங்கயாவது போயிடுங்க. ஒரு பத்து நாளைக்கு.. முக்கியமா உங்களுக்கு உங்க மனைவிகிட்டையோ, இல்ல வேற யாருகிட்டையும் எந்த தொடர்பும் இருக்க கூடாது.. நீங்க தங்கி இருக்குற இடத்திலையும் நீங்க யாரு என்னனு சொல்ல கூடாது.. இதை மட்டும் பண்ணிட்டா அடுத்து நீங்க தொட்டது எல்லாம் துலங்கும்..” என்று அந்த ஜோசியன் சரியாக மனோகரன் கூறியது போல கூறி முடித்தான்..

“ என்ன சாமி சொல்றிங்க ??? பத்து நாளைக்கு நான் [போட்டது எல்லாம் போட்டபடி ஊரை விட்டு போயிட்டா, இங்க என் பொழப்பு என்ன ஆகும். அதுவும் இல்லாம இப்ப கல்யாணம் வேற பேசி இருக்கேன்” என்று சுந்தர கூறவும்

“ எல்லாம் நல்லதா நடக்கணும்னா இதை நீங்க பண்ணித்தான் அகனும் சுந்தர்.. உங்களுக்கு ரொம்ப ஆபத்தான கட்டம் இது.. இதை தாண்டிட்டா நீங்க எதிர்பார்க்காத அளவிற்கு முன்னேற்றம் இருக்கு.. புது வாழ்க்கை நல்லா அமையனுமா இல்லையா ?? இதுக்கு மேல உங்க விருப்பம், உங்களை எச்சரிக்கை செய்யவேண்டியது என் கடமை இதற்க்கு மேல நான் எதுக்கும் பொறுப்பாக முடியாது ” என்று ஜோசியன் கூறவும்                

“ ஐயோ சாமி அப்படி எல்லாம் சொல்லாதிங்க.. நான்.. நான் கண்டிப்பா நீங்க சொல்லற மாதிரி செய்யுறேன்.. இப்போவே கிளம்பி வேற ஊருக்கு போறேன்.. நீங்க எப்ப வர சொல்றிங்களோ நான் அப்போவே வரேன்.. என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்க “

“ எல்லாம் நன்மைக்கே .. என் ஆசீர்வாதம் எப்பையும் உங்ககூட இருக்கும்” என்று பேசி முடித்துவிட்டான் அந்த உண்மைவிளம்பி..

அவன் பேசி முடிக்கவும் “ நீங்க சொன்னது போல நான் செஞ்சுட்டேன்.. இனிமேலாவது என்னைய விடுங்க.. “ என்று மீண்டும் தன் பல்லவியை தொடர்ந்தான்..

“ ஹா அது எப்படி இப்பதான் ஒருவேலையே முடிஞ்சு இருக்கு.. இந்நேரம் நீ இமய மலைக்கு போயிக்கிட்டு இருக்கன்னு உன் சிஷ்ய கோடிகளுக்கு நியூஸ் போயிருக்கும்.. அதுனால என்ன பண்ணுற.. எங்க வேலை முடியுற வரைக்கும் நீ இங்கதான் இருக்க போற.. சரியா  “ என்று கூறி அவன் கன்னங்களில் லேசாக தட்டினான் மனோ..

“ என்ன… நான்.. ஏன் இங்க இருக்கனும்.. முடியாது.. முடியவே முடியாது.. நீங்க எல்லாம் சொன்னதை நான் செஞ்சுட்டேன். இதுக்கு மேல இங்க ஒருநிமிஷம் இருக்க முடியாது..” என்று கத்தினான்..

“ அடடா இவனோட பெரிய ரோதனையா போச்சு.. ஆமா இதுக்குமேல நீ உயிரோட இருந்து என்ன சாதிக்க போற..?? இப்போ நீ நாங்க சொல்லுற மாதிரி நடக்கலைனா, இமயமலைக்கு போன ஸ்வாமிஜி, அங்கேயே முக்தி அடைஞ்சுட்டாருனு வெளிய நியூஸ் வரும், உனக்கு எது வசதி ??”

“ இல்ல இல்ல.. என்னைய ஒன்னும் பண்ணிடாதிங்க.. நான்.. நான் இங்கயே இருக்கேன்” என்று கூறி மௌனித்தான்..

“ டேய் மாப்ள இவனை பாத்துக்க ரெண்டு ஆளு ஏற்பாடு செஞ்சு இருக்கேன். நாம் போயி மிச்ச வேலைய பாப்போம் “ என்று குமார் கூறவும் மூவரும் கிளம்பி சென்றனர்..

சுந்தர் ஊரை விட்டு சென்றுவிட்டான் என்ற தகவல் கிடைக்கவும் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர் மூவரும்.  திருமண வேலைகள் ஒருபுறம், சுந்தருக்கு எதிராக ஆதாரம் திரட்டுவது மறுபுறம் என மூச்சு முட்ட வைத்தது..  

மனோகரன் முதல் வேலையாக தன் தம்பிகள் மூவரையும் அழைத்து நடந்த அத்தனையும் கூறினான்.. தன் அண்ணனின் மனதை தெளிவாக புரிந்தகொண்ட தம்பிகள் மூவரும், மற்ற எதை பற்றியும் பேசாது

“ வாவ் அண்ணா !!! சூப்பர்.. யப்பா இன்னும் பத்து நாள்ல கல்யாணம்.. செம ஜாலி.. இதுக்காகவே நம்ம அந்த சுந்தருக்கு நன்றி சொல்லனும்னா.. “ என்று ஆர்ப்பரித்தனர்..

ஆனால் மனோவோ, தங்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கோவிலில் தான் நடக்கும் என்று தெரிவித்தான்.. இதை கேட்டு சற்றே சோர்வடைந்தாலும்,” பரவாயில்ல ணா.. என்னைக்கு இருந்தாலும் அண்ணி நம்ம வீட்டுக்கு வருவாங்கதானே அப்போ அவங்களை பார்த்துக்கிறோம்..”   கூறிய இளையவர்களை பெருமையாக பார்த்தான் மனோ..

இது இப்படி இருக்க மித்ராவின் வீட்டில் நடந்த அத்தனை விசயமும் மித்ராவின் அண்ணன் சரணுக்கு தெரிவிக்க பட்டது.. அவனோ கோபத்தில் கொந்தளித்தான்.. ஆனால் தாமரை தான் மகனிடம் நயமாக பேசி சமாளித்தார்.. இது அத்தனையும் மித்ராவிற்கு தெரியாமல் செய்வது தான் மிக கஷ்டமாக இருந்தது..சரியாக திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னால் ரவிச்சந்திரன் மித்ராவை அழைத்தார்.

“ என்னப்பா சொல்லுங்க..”

“ மித்ரா அப்பா உன்கிட்ட ஒருவிசயம் சொல்லணும் டா “

அவரின் தயக்கமே அவளுக்கு புதிதாய் இருந்தது.. “ என்னப்பா என்கிட்டே பேச உங்களுக்கு என்ன தயக்கம் ?? சொல்லுங்க பா “

“ அது ஒண்ணுமில்ல டா மித்ரா.. நீ.. நீ இப்போ பாக்குற வேலைய விட்டிடு.. “ என்று ஒருவழியாக கூறி முடித்துவிட்டார்..

“ என்ன ??? என்னப்பா சொல்றிங்க ???” என்று திகைத்தாள்..

“ஆமாடா.. உனக்கு அப்பா இதை விட நல்ல வேலையா நான் வாங்கி தரேன்.. இது வேண்டாம்.. எனக்கும் அம்மாக்கும் பிடிக்கலை.. சோ இதை நீ விட்டிடு “ என்றார் அழுத்தமாக..

தந்தை இப்படி கூறவும் தன் தாயை திரும்பி பார்த்தாள். அவரும் அதே போல தான் அழுத்தமாக அவளை பார்த்தார்.. “ என்னம்மா அப்பா இப்படி சொல்றாங்க.. நீயும் அமைதியா இருக்க??”

“ அவர் சொல்லுறதுல எனக்கும் உடன்பாடு இருக்கு மித்ரா.. நீ நாளைக்கு இருந்து வேலைக்கு போகாத. ஒரு ஒருவாரம் வீட்டுல ரெஸ்ட் எடு.. அதுக்குள்ள அப்பா வேற ஏற்பாடு செய்வாரு..”

“ அம்மா!! என்னம்மா திடீர்னு..” என்று மித்ரா குழம்பி தவித்தாள்..

“ எல்லா விசயங்களும் சில நேரம் திடீர்னு தான் மித்ரா நடக்கும்.. உனக்கு எங்க மேல நம்பிக்கை இருந்தா இதை நீ செய்..”

இதற்குமேல் மித்ரா எதுவும் கூறவில்லை.. ஏன் ?? எதற்கு ?? என்ற கேள்விகள் எழுப்பவில்லை.. பெற்றோர்கள் என்ன கூறினார்களோ அதை அப்படியே செய்தாள்.. ஆனால் இதை பார்த்த பெற்ற மனமோ மெளனமாக கண்ணீர் வடித்தது..

“ஏங்க நம்ம பொண்ணை பாருங்க.. எப்படி ஒருவார்த்தை நம்ம சொல்லுறதுக்கு மறுத்து பேசல.. ஆனா நடந்தது எல்லாம் தெரிஞ்சா… எனக்கு அவகிட்ட உண்மைய மறைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க “ என்று புலம்பி தீர்த்தார் தாமரை..

“ எல்லாமே அவளோட நல்லதுக்குதான்னு தெரியும் பொழுது அவ புரிஞ்சுப்பா” என்று ஆறுதல் கூறினார் ரவிச்சந்திரன்..

“ஆனா அவ கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம நம்ம கல்யாணம் பேசி முடிச்சுட்டோமே அதை மித்ரா எப்படி எடுதுப்பான்னு தெரியலையே??” என்று கலங்கினார் தாமரை..

“ நானும் இதை தான் தாமரை யோசிச்சேன்.. ஆனா இதை தவிர நம்மகிட்ட வேற வழியில்லையே.. ஆனா கண்டிப்பா மனோ தம்பி அவ மனசை மாத்துவாருன்னு நம்பிக்கை இருக்கு.. “

“ ஹ்ம்ம் நல்ல வேலைங்க கடவுள் மனோ தம்பிய நம்ம கண்ணுல காட்டுனாரு.. இல்ல நம்ம என்ன செய்ய முடியும் ??”

“ஆமா தாமரை.. சரி மித்ரா கிட்ட எப்போ கல்யாணத்தை பத்தி பேச போற ??”

“ இப்போ பேசுனா கண்டிப்பா அவ முடியாதுன்னு தான் சொல்லுவாங்க. காரணம் கேட்பா.. உண்மைய எல்லாம் சொல்ல வேண்டியது வரும்.. எல்லாம் தெரிஞ்சா அவ நிம்மதி கெடும்.. நிச்சயமா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டா “

“ அட தாமரை நீ இப்படி சொல்லுற, மாபிள்ள என்னடான்னா மித்ராவோட சம்மதம் ரொம்ப முக்கியம்னு சொல்றாரே”

“ அதுனால தாங்க கல்யாணத்துக்கு முதல் நாள் சொல்லிக்கலாம்னு இருக்கேன். எனக்கு மட்டும் என்ன இதெல்லாம் ஆசையா ?? ஒரே பொண்ணு அவ கல்யாணம் எப்படி எல்லாம் நடக்கனும்னு நம்ம கனவு கண்டோம்.. இப்படி யாருக்கும் தெரியாம நடக்க வேண்டியதா  இருக்கு.. ஹ்ம்ம் “ என்று பேரு மூச்சு விட்டார் தாமரை..

“ முதல் நாள் சொன்னா மட்டும் மித்ரா சரி சொல்லுவாளா தாமரை ??” என்றார் கலக்கமாக..

“ அவ சம்மதிக்கிற மாதிரி நம்ம பேசனும்ங்க.. வேற வழியும் இல்லையே “ என்று இருவரும் தங்கள் மகளை பற்றி பேசியபடி நாட்களை கடத்தினர்..      இதற்க்கு இடையில் மனோ வந்து முகுர்த்த புடவையும், திருமாங்கல்யமும் தந்துவிட்டு சென்றான்..

திருமணம் முடிந்ததும் மித்ராவின் பெற்றோர்கள் வருணிடம் செல்வதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யவேண்டியதாய் இருந்தது.. முதல் வேலையாக ரவிச்சந்திரன் தன் வேலையை விட்டார்..

மித்ரா கேட்டதற்கு ஏதேதோ காரணம் கூறி சமாளித்தார், தன் அணைத்து சொத்துகளையும் தன் மகன் மற்றும் மகள் பெயருக்கு மாற்றினார். வங்கி கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டன..

இவை அனைத்தையும் மனோகரனின் உதவியோடு செய்து முடித்துவிட்டாலும் தாமரைக்கு தன் மகளை திருமணதிற்கு சம்மதம் கூற வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..                       

                                                                                           

மன்னித்துக்கொள் கண்மணி

உன் மனமறியாமல் – உன்

கரம் பற்றுகிறேன்

கோபம்கொள், சண்டையிடு

ஆனால் விலகிவிடாதே..

 

                     மாயம் – தொடரும்..

 

  

Advertisement