Advertisement

மாயவனோ !! தூயவனோ !! – 20

மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து ரவிச்சந்திரனே ஒரு நிமிடம் நடுங்கி போய்விட்டார்..

“ மனோ தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. இது.. இதுல நீங்க தலையிட வேண்டாம்.. தயவு செஞ்சு நான் சொல்லுறதை புரிஞ்சுக்கணும் “ என்று மெல்ல மன்றாடுவது போல பேசினார்..

“ எப்படி  ?? எப்படி சார் நான் எதுவும் செய்யாம சும்மா இருக்க முடியும் ?? எல்லாம் தெரிஞ்ச அப்புறமும் நான் சும்மா இருப்பேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்.. இந்த விசயம் எல்லாம் தெரியுற வரைக்கும் வேணும்னா இது உங்க குடும்ப பிரச்சனையா இருக்கலாம்.. ஆனா எப்போ என்கிட்டே வந்திடுச்சோ இது என் பிரச்சனையும் கூடத்தான்..” என்று பொரிந்து தள்ளினான்..

இதற்காகத்தான் ரவிச்சந்திரன் மனோவிடம் எதையும் சொல்லாமல் தட்டிக்கழித்தார்.. அவருக்கு தெரியும், மனோ எத்தனை எத்தனை மென்மையானவனோ அத்தனையும் இரட்டிப்பு ஆகும்படி அவனுக்கு கோவம் வரும்..

தவறு என்று கண்ணில் பட்ட ஒரு விசயத்தை தைரியமாக யாருக்கும் அஞ்சாமல் எதிர்த்து கூறுவான்.. ஆனால் அவனிடம் இந்த விஷயத்தை கூறினால் நிச்சயம் அந்த சுந்தரை எதிர்ப்பான் தான்..

ஆனால் அவனை அவனது தம்பிகள் இருக்கிறார்கள், இத்தனை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.. அவனது உயிருக்கே கூட இதனால் ஆபத்து வரலாம்.. தன் மகளை விரும்பினான் என்ற ஒரே காரணத்திற்காக மனோ ஏன் இத்தனை ஆபத்துகளையும் சந்திக்கவேண்டும்.. இதனால் தான் அவர் எதுவும் கூறாமல் இருந்தார்.

ஆனால் சுந்தரிடம் தான் அலைபேசியில் பேசியதை மனோ முழுவதும் கேட்கவில்லை தான்.. மித்ராவின் தந்தையின் முக மாறுதல்களை வைத்தே ஏதோ மிகவும் பெரிய பிரச்சனை என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாதா என்ன ??

ஒரு அளவுக்கு மேலே அவராலும் மறைக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை..

“ அங்கிள் நீங்க எதை பத்தியும் கவலைப்படவேண்டாம்.. இது இனிமே என்னோட பிரச்சனை.. நீங்க மித்ராவ எனக்கு கட்டி குடுங்க இல்லை வேற முடிவு எடுத்தாலும் அது உங்களோட விருப்பம்.. ஆனா, என்னைய பொருத்தவரைக்கும் மித்ரா எனக்கு என்னையவிட முக்கியம்..”

“ அவ கூட நான் பேசுனது இல்ல, பழகுனது இல்ல, அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.. சொல்லபோனா மித்ரா உங்க பொண்ணுன்னு எனக்கு இன்னைக்கு காலையில தான் தெரியும்.. எனக்கு மித்ரா நிம்மதி ரொம்ப முக்கியம்..”

“ சோ.. இதை இனிமேல் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்.. மித்ராவை சுத்தி எப்பையும் நிம்மதியும், சந்தோசமும் தான் இருக்கனும். அவளோட முகத்துல இருக்கிற சிரிப்பு எப்பயும் மறைய கூடாது. அதுனால சுந்தர் பத்தி நீங்க கவலை படவேண்டாம். உங்களுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். உங்களுக்கு கொஞ்ச நாள் லீவ் தரேன் “ என்று அவன்பாட்டுக்கு பேசிக்கொண்டே போனான்.

இதற்கெல்லாம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தார் ரவிச்சந்திரன்.. குளிரூட்டப்பட்ட அறையிலும் அவருக்கு வியர்த்து விறுவிறுத்தது..

“ இல்லை மனோ.. நான் மனசு தாங்காம தான் இதை உங்ககிட்ட சொன்னேன்.. ஆனா அவனை அந்த சுந்தரை எதிர்த்தா அவன் என்ன வேணா செய்வான் போல. இதுனால உங்களுக்கு தான் நிறைய “ என்று அவர் பேசும் பொழுதே

“ சோ மித்ராவை சுந்தருக்கு கல்யாணம் பண்ணி குடுக்க முடிவு எடுத்து இருக்கீங்களா ??” என்றான் கடுமையாக..

“ ஐயோ !! இல்ல தம்பி.. அவன்.. அவனை மாதிரி ஒரு அயோக்கியனுக்கு நான் என் பொன்னை குடுப்பேனா ??? கிடையவே கிடையாது.. அதுக்கு என் மகளை நானே கிணத்துல தள்ளி விடலாம் “

“ சரி அப்போ இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்னு இருக்கீங்க ??” தன்  அடுத்த கேள்வியை தொடுத்தான்..

அவரோ மெல்ல தலைகுனிந்து “ அதுவும் தெரியலை .. என்ன முடிவு செய்யுறதுன்னு எனக்கே புரியல ”

“ம்ம்.. நீங்களும் ஒரு முடிவு எடுக்க மாட்டிங்க. உதவிக்கு வரவனையும் வேணாம்னு தள்ளி வைப்பிங்க.. இதுக்கு நடுவல அந்த சுந்தர் தான் நினைச்சதை நடத்திட்டு போயிக்கிட்டே இருப்பான் “ என்று மனோ கோவமாக கூறவும் வலி நிறைந்த பார்வையோடு அவனை அமைதியாக பார்த்தார் அந்த மனிதர்..

மனோவிற்கு தெரியும் இந்த சூழ்நிலையில் அவரிடம் கடினமாக பேசினால் அவருக்கு அது கஷ்டமாக தான் இருக்கும் என்று.. ஆனால் அவனுக்கும் வேறு வழியில்லையே.. வேறு எப்படி பேசினாலும் அவர் இதற்கு சம்மதிக்கமாட்டார்..

“ பின்ன என்ன அங்கிள் பாக்குறிங்க.. இப்படியே பார்த்துகிட்டே இருக்கவேண்டியது தான்.. நான் சொல்லுறதை கேளுங்க.. இது உங்க மகளோட வாழ்க்கை.. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ??”

“ நீங்க சொல்றது எல்லாம் புரியுது மனோ தம்பி.. ஆனா இதுல நீங்க தலையிட்டிங்கன்னு அவனுக்கு தெரிஞ்சா உங்களுக்கு…”

“ எனக்கு எந்த ஆபத்தும் வராது.. அதே மாதிரி மித்ராவுக்கும் எதுவும் நடக்க விடமாட்டேன்.. இது சத்தியம்.. என்னைய எனக்கு பாத்துக்க தெரியாதா சார் ??” என்றான் ஒருமாதிரி குரலில்..

மனோ அங்கிள் என்பதும், பின் சார் என்றும் மாற்றி மாற்றி கூறுவதை கவனித்தே இருந்தார்.. இப்படியே சில நொடிகள் மனோவிடம் பேசிய ரவிச்சந்திரனிற்கு மனதில் ஒரு புது நம்பிக்கை பிறந்தது..

மெல்ல சிரித்தபடி “ அங்கிள்னே சொல்லுங்க தம்பி “ என்றார்..

அவர் கூறுவது புரிந்ததும் மனோவின் முகத்திலும் புன்னகை ஒட்டிகொண்டது.. அது அவரது மறைமுக சம்மதத்தை கூறுவது அல்லவா.. “ அங்கிளை விட மாமா இன்னும் நல்லா, வசதியா இருக்குமே ??” என்று கேட்டான் புன்னகை மாறாத குரலில்..

அவனுடைய சாமர்த்தியம் புரிந்த ரவிச்சந்திரனும் “ உங்களுக்கு எது வசதியோ அப்படியே கூப்பிடுங்க “ என்று தன் ஒப்புதலை வழங்கினார்..

மனோ முகத்தில் இன்னும் மகிழ்ச்சி பரவியது.. சிரித்தபடி “கவலையே படவேண்டாம் மாமா.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க வீட்டுக்கு போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. அவன் ஏதாவது கேட்டா இன்னும் ரெண்டு நாள் டைம் கேளுங்க சரியா ??” என்றான்..

அவன் கூறுவதும் சரியென பட ரவிச்சந்திரன் புதிய தெம்போடு வீட்டிற்கு சென்றார்.. அவர் சென்ற மறுநொடியே மனோவின் முகம் மாறிவிட்டது.. அவனது மனதில் அடுத்தது என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியே வியாபித்து இருந்தது..

சுந்தரை நினைக்க நினைக்க கோவம் தலைக்கேறியது.. என்ன முயன்றும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை..

“ இன்னும் ரெண்டே நாள்ல அவனை பத்தி எல்லாம் நமக்கு தெரிஞ்சாகனும்.. அப்போதான் சீக்கிரமா ஏதாவது பண்ண முடியும் “ என்று முடிவு எடுத்தவன் தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்தான்..

மனோவின் நண்பன் உளவு துறையில் சிறிது காலம் பணியாற்றினான். பின் தனியாக வந்து ஒரு துப்பறியும் நிறுவனம் நடத்திக்கொண்டு இருக்கிறான்.  அலுவலகத்தில் வைத்து எதுவும் பேச முடியாது என்பதால் தன் வீட்டிற்கே வரவழைத்தான் மனோ.

“ வா டா நண்பா.. எப்படி இருக்க??? “

“ நான் நல்லா இருக்கேன் டா மனோகரா.. இப்பதான் என் நியாபகம் எல்லாம் வந்ததா ?? ஆமா உனக்கு எப்படி போகுது வாழ்க்கை?? “ என்று கேட்டபடி கை குலுக்கினான்..

“ ஹ்ம்ம் எனக்கென்ன டா ராஜா மாதிரி இருக்கேன்..”

“ ஆமா என்ன திடீர்னு உடனே பார்க்கணும்னு வர சொன்ன?? எதுவும் பிரச்சனையா ??”

“ ஹ்ம்ம் ஆமா டா.. ஆனா இது உனக்கு அல்வா சாப்பிடுற விஷயம் “ என்று கூறி சிரித்தான்.. இது தான் மனோவின் சிறப்பு.. எப்படிபட்ட சூழ்நிலை என்றாலும் அதை இலகுவாக மாற்றிவிடுவான்..

“ என்ன சொல்லுற அல்வா சாப்பிடுற விஷயமா ?? ஏன் டா அங்க இருந்து இங்க அல்வா சாப்பிடவா கூப்பிட்ட ??” என்று நக்கலடித்தான் நண்பன்..

இருவருக்கும் தேனீர் வரவும் பருகியபடி மெல்ல விசயத்தை கூறினான் மனோ.. தேநீரோடு சேர்ந்து மனோ கூறியதும் அவனது நண்பனுக்குள்ளே புகுந்தது.. அனைத்தயும் அமைதியாக கிரகித்துகொண்டான்..

அனைத்தையும் கூறி முடித்த மனோ “ என்ன டா அமைதியா இருக்க??”

“ஹா !! நத்திங் மேன்.. நீ சொன்னதை எல்லாம் ஓட்டி பார்த்தேன்.. இவன் இந்த சுந்தர், அமைச்சர் தர்மதுரையோட மகன். ஆனா அப்பாவுக்கு நேர் எதிர்.. ஹ்ம்ம் இவனை பத்தி முன்னமே ஒருசில விஷயங்கள் வெளிய வந்துச்சு மனோ. ஆனா பயப்புள்ள எப்படியோ எல்லாத்தையும் அமுக்கிட்டான்..”

“ஹ்ம்ம் “

“ சரி இப்போ இதுல உனக்கு நான் என்ன செய்யணும்??”

“ அவனை பத்தி ரெண்டே நாள்ல எனக்கு எல்லாம் தெரியனும் டா.. ஏன்னா அதுக்கு மேல அவன் பொறுமையா இருக்கமாட்டான்”

“ ஜஸ்ட் ரெண்டு நாளா ?? ஹ்ம்ம் நான் கண்டிப்பா முடிக்க பாக்குறேன் மச்சி.. விஷயம் வெளிய தெரிய கூடாது சோ இதுல நானே தான் கலத்துல குதிக்கணும்.. ஹ்ம்ம் சரி.. உன்னைய ரெண்டு நாள் கழிச்சு வந்து பாக்குறேன்” என்று கூறவும்

மனோ “ தேங்க்ஸ் டா மாப்ள… “

“ அட இதை கேட்டதுல உன்னைய விஸ் பண்ண கூட மறந்துட்டேன் பாரு.. கன்க்ராட்ஸ் டா மனோ.. கடைசியா நீயும் காதல் என்னும் கடலில் விழுந்துட்ட.. கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ மச்சி..”

“ ஆமாடா இப்போதைக்கு மித்ரா அப்பா சரி சொன்னதே பெரிய விஷயம்.. எல்லாம் நல்லதா நடக்கணும் “

“ கண்டிப்பா நடக்கும் “ என்று நம்பிக்கை கூறி சென்றான் மனோவின் நண்பன்..

தன் நண்பன் சென்ற பின்னும் மனோகரன் மாடியில் நிலவினை வெறித்தபடி நின்று இருந்தான்.. அந்த நிலவின் மித்ராவின் சிரித்த முகமே தெரிந்தது..

வீட்டிற்குள் நுழைந்த ரவிச்சந்திரனை திகில் கலந்த பார்வையோடு எதிர்கொண்டார் தாமரை..

“ என்னங்க ?? என்ன இவ்வளோ சீக்கிரமே வந்துட்டிங்க ?? எதுவும் பிரச்சனையா ??” என்றார் பதற்றமாக..

“ அதெல்லாம் இல்ல தாமரை.. முதல்ல கொஞ்சம் தண்ணி குடு “ என்று கேட்டவருக்கு வேகமாய் தண்ணீர் கொண்டு வந்தார் மனைவி..

சிறிது நேரம் கணவர் தன்னை சமன் படுத்திகொள்ளட்டும் என்று அமைதி காத்தவர் “ என்னங்க அந்த.. அவன்.. அவன் இன்னைக்கு வீட்டுக்கே போன் பண்ணிட்டான் “ எனவும்

“எல்லாம் தெரியும்மா.. தெரிஞ்சு தான் வந்து இருக்கேன்.. “

“ எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்குங்க.. “ என்ற அழ ஆரம்பித்த மனைவியிடம் மெதுவாக விசயத்தை கூறினார் ரவிச்சந்திரன்..

இதை கேட்ட தாமரைக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. கடவுள் மகளின் வாழ்கையில் தென்றலையும் புயலையும் ஒருசேர தந்துவிட்டாரே என்று எண்ணினார்..

“ என்னங்க அந்த தம்பிக்கு இதுனால “ என்று அவர் கூறும் பொழுதே

“ அதை தான் தாமரை நானும் சொன்னேன்.. ஆனா மனோ தம்பி கேட்கவேயில்ல.. அந்த சுந்தர் போன் பண்ணா இன்னும் ரெண்டு நாள் டைம் கேளுங்கன்னு மட்டும் சொல்லி இருக்கார் “

“ ஹ்ம்ம் நம்ம மித்ராவ நினைச்சா தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. இப்பவரைக்கும் அவளுக்கு எதுவும் தெரியாது.. ஆனா தெரிஞ்சா என்ன நடக்குமோ ??” என்று தன் மகளின் குணமறிந்த அன்னை பயந்தார்.

“ வேணாம் தாமரை மித்ராகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் இப்போ.. எதுனாலும் ரெண்டு நாள் போகட்டும்.. அதே மாதிரி வருண் கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்.. பாவம் பயந்திடுவான்..”

“ ஹ்ம்ம் சரிங்க.. ஆனா இவ வேலைக்கு போற வர இடத்துல அவனுங்க வந்து எதாவது பிரச்சனை பண்ணா என்ன பண்ணுறது ??”

“ ஹ்ம்ம் அது வேற ஒன்னு இருக்கோ.. ஹ்ம்ம் ஒன்னு செய்யலாம் இந்த ரெண்டு நாள் நம்ம குலசாமி கோவிலுக்கு போறோம்னு சொல்லிட்டு போகலாம். நம்ம திரும்பி வரதுக்குள்ள நிச்சயமா மனோ ஏதாவது ஏற்பாடு பண்ணி இருப்பார்.. அது படி நடக்கலாம்..” என்று தன் கணவர் கூறுவதை ஒருமனதாக ஏற்றுகொண்டார் தாமரை..

அதே போல மித்ரா வீட்டிற்கு வரவும் ஊருக்கு செல்ல வேண்டும் என்று தாமரை கூறவும் “ என்னம்மா திடீர்னு ??” என்று வியந்தாள் மகள்..

“ அது ஒண்ணுமில்ல மித்ரா, உனக்கு கல்யாண பேச்சு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அதான் குலசாமி கோவிலுக்கு போயி பொங்கல் வைச்சுட்டு வந்தா நல்லதுல அதான் “

“ ஓ !!! ஆனா இதுக்கு அப்பா எப்படிமா சரி சொன்னாங்க.. அவருக்கு தான் தீபாவளி பொங்கல் அன்னைக்கு கூட வேலை இருக்குமே..” என்று தன் தந்தையை வம்புக்கு இழுத்தாள்..

“ச்சு.. சும்மா இரு மித்ரா.. நானே அவரை கஷ்டப்பட்டு சம்மதம் சொல்ல வைச்சு இருக்கேன்.. ரெண்டு நாள் தானடா.. நீ உன் ஆபிஸ்ல லீவ் சொல்லிடு “

“ ஹ்ம்ம் இதை அப்பவே போன் பண்ணி சொல்லி இருந்தா நான் அங்கேயே லீவ் சொல்லிட்டு வந்து இருப்பேன்ல மா.. “ என்று தாயிடம் பேசிக்கொண்டே தன் அலுவலக மேனேஜருக்கு அழைத்து விடுமுறைக்கு கூறினாள்.

ஒருவேளை மகள் வரமுடியாது, அது இதென்று கூறி முரண்டு பிடிப்பாளோ என்று பயந்து கொண்டிருந்த தாமரைக்கு மனம் சிறிது நிம்மதி அடைந்தது.. ரவிச்சந்திரனோ தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை..

“ என்னம்மா அப்பா வந்துட்டாங்களா என்ன ?? ஆளையே காணோம் ??”

“ அவர்.. அவருக்கு கொஞ்சம் தலை வலி மித்ரா அதான் படுத்து இருக்காரு..”

“ என்ன ?? படுத்து இருக்காரா ?? ஹ்ம்ம் வேலைய விடுங்கன்னு சொன்னா கேட்கிறாரா ?? நான் வேலைக்கு போறேன். அண்ணன் லட்சலட்சமா சம்பாதிக்கிறான்.. சொந்த வீடு இருக்கு. இத்தனை நாள் சேத்து வச்சது எல்லாம் இருக்கு.. தினமும் இந்த தலைவலி வேணுமா ??” என்று கூறியபடி தன் தந்தையை காண விரைந்தாள்..

“ அப்பா என்னப்பா ரொம்ப தலை வலிக்கிதா ??” என்று அக்கறையாய் கேட்கும் மகளின் முகத்தை அன்போடு பார்த்தார் அவர்..

“ இல்லடா.. லேசா தான்.. “

“ ஹ்ம்ம் இந்த வேலைய விடுங்கப்பா.. நான் சொல்றதை கேளுங்க.. போதும் நீங்க கஷ்ட பட்டது எல்லாம்.. வீட்டுல கொஞ்ச நாள் ரிலாக்ஸ்டா இருங்க.. “ என்றாள் தன் தந்தையின் தலையை பிடித்துவிட்டபடி.

தன் மகளின் அக்கரையிலும் அன்பிலும் அந்த தந்தையின் மனது நிரம்பியது. ஆனால் இவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து குடுக்கவேண்டுமே என்ற எண்ணம் வந்தது மனதில் இருந்த சிறு மகிழ்வும் துணி கொண்டு துடைத்து போலானது..

அவரின் முக மாற்றங்களை கண்டவள் “ என்னப்பா??? வேற ஏதாவது பிரச்சனையா என்ன ?? நானும் பாக்குறேன் ரெண்டு நாளா உங்க முகமே சரியில்ல”

“ அதெல்லாம் இல்லடா மித்ரா குட்டி.. அப்பா நல்லா தான் இருக்கேன்.. கொஞ்சம் வொர்க் டென்சன். அவ்வளோதான். அதான் ரெண்டு நாள் லீவ் போட்டு ஊருக்கு போறோமே.. வரும் போது எல்லாம் சரியாகிடும் “ என்றவர் மனதில் “ கடவுளே வரும் பொழுது எங்களுக்கு ஒரு நல்ல வழிய காட்டு சாமி “ என்று வேண்டினார்.

“ ஹ்ம்ம் அண்ணனும் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் இல்லையா பா.. அவனை பாருங்க போன புதுசுல தினமும் போன் பண்ணான்.. இப்போ எல்லாம் வாரத்துக்கு ரெண்டு தடவை தான்.. வெள்ளக்காரி கூட கடலை போட்டிட்டு இருக்கான் போல “ என்றாள் தன் வழமையான கேலி கிண்டலுக்கு தாவி..

“ அதான பார்த்தேன் என் மகனை இழுக்கலைனா உனக்கு நிம்மதியா தூக்கமே வராதே..” என்றபடி உள்ளே வந்தார் தாமரை கையில் காப்பி டம்பளருடன்..

“ஆமாமா உனக்கு உன் மகனை சொல்லிட்டா உடனே வந்திடுமே “ என்றபடி அவர் குடுத்த காப்பியை ரசித்து குடித்தாள்.. அவள் குடிப்பதையே அமைதியாக பார்த்துகொண்டு இருந்த பெற்றவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து பெரு மூச்சு விட்டனர்..

“ என்ன மூச்செல்லாம் பலமா இருக்கு?? எனக்கு தெரியாம எதுவும் பிளான் பண்ணுரிங்களா என்ன ??” என்றாள் விஷமமாய் மித்ரா..

அவள் என்னவோ சாதரணமாக தான் கேள்வி கேட்டாள்.. ஆனால் இந்த கேள்வியை கேட்ட இருவருக்கும் இதயம் பக்கென்று அடித்து கொண்டது.. இருவருமே என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் மீண்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்..

அதை கண்ட மித்ரா கலகலவென சிரித்தாள். ” ஹா ஹா… அப்பா அம்மா.. நீங்க ரெண்டு பெரும் இருக்கிங்களே… சரியான ஜாடிக்கு ஏத்த மூடி..  சரி சரி அம்மா வாங்க அப்பா கொஞ்ச ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று கூறியவள் முன்னே நடந்தாள்..

தன் கணவரை அர்த்தமுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகளை தொடர்ந்து நடந்தார் தாமரை.. இருவரும் வெளியே செல்லவும் அறையின் கதவை தாளிட்டுவிட்டு மனோகரனுக்கு அழைத்தார் ரவிச்சந்திரன்..

“ ஹலோ மனோ தம்பி “

“ சொல்லுங்க மாமா…”

“நான்.. நாங்க எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு குல சாமி கோவிலுக்கு போய்ட்டு வரலாம்னு இருக்கோம். அதை சொல்ல தான் கூப்பிட்டேன் “

“ஓ !! தாராளமா போயிட்டு வாங்க. நல்லது தானே.. அப்புறம் அவன் மறுபடியும் எதா பேசுனானா ?”

“ இல்ல.. ஆனா எப்படியும் கூப்பிடுவான். அதான் நீங்க சொன்ன மாதிரி அவகிட்ட ரெண்டு நாள் டைம் கேட்கலாம்னு இருக்கேன். அதுவரைக்கும் மித்ராவை சமாளிக்கனுமே அதான் கோவிலுக்கு போகலாம்னு “

“ஓ !! ஹா ஹா!! மகளுக்கு அவ்வளோ பயமா ?? ஆனாலும் இது நல்லது தான். உங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குமே.. தென் நீங்க எதுவும் பயமில்லாம போயிட்டு வாங்க, உங்க சேப்டிக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன் மாமா “

“ அதெல்லாம் வேண்டாம் தம்பி… நான்… நாங்க பார்த்து போய்ட்டு வந்திடுவோம் “

“ ப்ளீஸ் மாமா இது என்னோட நிம்மதிக்காக. வேண்டாம் சொல்லாதிங்க. அப்புறம் நான் ஒரு ஏற்பாடு பண்ணிருக்கேன் மாமா. நீங்க ஊருக்கு வரும்போது அந்த சுந்தரை பத்தி எல்லா தகவலும் நம்ம கையில இருக்கும். ஆனா அவன்கிட்ட பேசுறதை மட்டும் கொஞ்சம் பார்த்து பேசுங்க சரியா மாமா ??”

“ சரிங்க தம்பி.. ஆனா மித்ராக்கு தான் இதுவரைக்கும் எதுவும் தெரியாது. அவ முகத்தை பார்க்கவே கொஞ்சம் சங்கட்டமா இருக்கு..”

“ நீங்க ஒன்னும் கவலை படவேண்டாம். ரெண்டே நாள் தானே ஊருக்கு போயி நிம்மதியா சாமிய வேண்டிக்கிட்டு வாங்க. எல்லாம் நல்லதே நடக்கும்.” என்று தைரியம் கூறினான் மனோ.

சாத்தானை நினை உடனே வந்து நிற்கும் என்பது போல அந்த சுந்தரிடம் இதை எப்படி சொல்வது என்று நினைக்கும் பொழுதே அவனிடம் இருந்து அழைப்பு வந்தது..

அலைபேசியில் அவனது எண்களை கண்டதுமே முகமெல்லாம் வியர்க்க தொடங்கியது அவருக்கு..

“ ஹ.. ஹலோ..”

“ என்ன மாமா ??? ஆபிஸ் விட்டு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டிங்களோ ?? ஏன் உடம்பு எதுவும் சரியில்லையா ??” என்று விசாரித்தான் மிக அக்கறையாக..

“ அது.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நா.. நான் நல்லா தான் இருக்கேன்.. நான் வீட்டுக்கு வந்தது உங்களுக்கு எப்படி தெரியும் ?? ”

“ அட என்ன மாமா நீங்க..?? நான் யாரு உங்களுக்கு மருமகன் ஆகா போறேன். உங்க மேல கொஞ்சமாது அக்கறை இருக்காதா என்ன?? அதான் நீங்க போற வர இடமெல்லாம் உங்களை கவனிக்க ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன். உங்களுக்கு மட்டுமில்ல நம்ம மித்ராவுக்கும் சேர்த்து தான் “ என்றான் உல்லாசமாக சிரித்தபடி.     

இதை கேட்டதும் அவருக்கு பகீரென்றது.. “ என்ன பாலோ பண்ணுறான ??? கடவுளே இவனுக்கு எல்லாம் தெரிஞ்சிட்டா என்ன பண்ண ??” என்று எண்ணியவர் பதிலேதும் கூறாமல்  “ம்ம் “ என்றார்.

“என்ன ம்ம் ??? இங்க பாருங்க..” என்று கூற வந்தவன் “ சரி.. சரி..  நாள் குறிக்க ஏற்பாடு பண்ணிடிங்களா ??? அத்தைகிட்ட வேற நான் காலையில இதை பத்தி பேசுனேன்.. என்ன மாமா நீங்க ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க.. “

“ இல்ல அது வந்து… அது “

“ என்ன வந்து போயின்னு… ?? என்ன மாமா வேற எதா ஐடியா பன்றிங்கலோ ?? இங்க பாருங்க நீங்க என்ன பண்ணாலும், என் பார்வை உங்க குடும்பத்து மேல தான் இருக்கும். புரியுதா ?? நீங்களா சம்மதிச்சு இந்த கல்யாணம் நடந்தா நல்லது.. இல்ல நான் நடத்தி காட்ட வேண்டியது இருக்கும் ” என்றான் மிரட்டலாக..

“ பு.. புரியுது.. அதான் குல சாமி கோவிலுக்கு போயி பொங்கல் வைச்சிட்டு வரலாம்னு “ என்று அவர் கூறும்பொழுதே..

“அடடே.. நல்ல விசயம்தானே.. அதுக்கேன் இவ்வளோ பம்முரிங்க?? தாராலமா போய்ட்டு வாங்க.. ஆனா வரும்போது நல்ல முடிவோட தான் வரணும்.. புரியுதா ??”

“ ம்ம் சரிங்க…”

“ சரி எப்ப போய்ட்டு எப்ப வருவிங்க ??”

“ நாளைக்கு கிளம்புறோம், ரெண்டு நாள் ஆகும் வர..”

“ ம்ம்ம் !!! சரி சரி ஆமா கூட என் பொண்டாட்டியும் வராளா ?? ஏன் கேட்கிறேனா காலம் கேட்டு கிடக்கு பாருங்க வயசு பொண்ணு அதுவும் தேவதை மாதிரி இருக்கா போற இடத்துக்கு எல்லாம் கூப்பிட்டு போக முடியுமா?? பேசாம ஒன்னு பண்ணுங்க என்கிட்டே விட்டிட்டு போங்க நான் நல்லா பத்திராமா பார்த்துக்கிறேன் “ என்று கூறி பயங்கரமாக சிரித்தான்..

அவனது சிரிப்போ மித்ராவின் தந்தைக்கு இரத்த கொதிப்பை உண்டாக்கியது.” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நாங்க பத்திரமா போய்ட்டு வந்திடுவோம் “

“ ஹ்ம்ம் சரி நான் சும்மா தான் சொன்னேன். கோவிலுக்கு போனமா வந்தோமான்னு இருக்கனும்.. விஷயம் வெளிய தெரிஞ்சது அவ்வளோதான் புரியுதா.. அப்புறம் இன்னொன்னு என் ஆளுங்க ரெண்டு பேர் உங்களை தொடர்ந்து வருவாங்க “ என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

ரவிச்சந்திரனுக்கோ ஏதோ புயலில் சிக்கி வெளிவந்தது போல இருந்து. “ ஐயோ இவன் வேற ஆளை அனுப்புறேன்னு சொல்லுறானே “ என்று எண்ணியவர் வேகமாக மனோவிற்கு அழைத்து அனைத்தையும் கூறினார்..

“ நீங்க எதுவும் கவலை படாதிங்க மாமா.. நான் பார்த்துக்கிறேன்.. நான் அனுப்புற ஆளுங்க யாருக்கும் சந்தேகம் வராதபடி தான் நடப்பாங்க. தைரியமா போயிட்டு வாங்க” என்று கூறி அனுப்பி வைத்தான்..

        

                     மாயம் – தொடரும்                                        

                       

                                    

Advertisement