Advertisement

அத்தியாயம் – 6

மெல்ல அசைந்தாடும் ஊஞ்சல், ஆட்டம் நிற்கும் பொழுது கால்களை தரையில் ஊன்றி ஊஞ்சலை லேசாய் முன்னே நகர்த்தி, தன்னை தானே ஆட்டிக்கொண்டு கையில் இருந்த கதை புத்தகத்தில் மூழ்கியிருந்தாள் திவ்யா. அவ்வபோது அவளது பார்வை கடிகாரத்தையும் தழுவி மீள்வதை நிறுத்தவில்லை.

கிட்ட தட்ட மூன்று நாட்களாய் இந்த கதையை படிக்கிறாள், ஆனால் ஏதாவது ஒரு முக்கிய திருப்பம் வரும் போதெல்லாம் அவள் கணவன் வந்து விடுகிறான். அதற்குமேல் அவன் படிக்க விட்டால் தானே.

ரவி வீட்டில் இருக்கும் நேரம் திவ்யா அவனை மட்டுமே கவனித்திட வேண்டும். அவனும் அப்படிதான் இருப்பான். எப்பொழுது பார் ‘திவ்ஸ் திவ்ஸ்…’ என்று அவள் முன்னே பின்னே சுற்றிக்கொண்டு இருப்பான். திருமணம் முடிந்து ஆறேழு மாதங்கள் கடந்துவிட்டது ஆனாலும் அவனது ‘திவ்ஸ்..’ மட்டும் குறையவே இல்லை.

எத்தனையோ போராட்டங்கள், மன கசப்புகள் அனைத்தையும் தாண்டி வீட்டினறது எதிர்ப்பையும் மீறி தான் இவர்களது திருமணம் நடந்தது. ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் விதத்தில் திருமணத்திற்கு பிறகான இவர்களது வாழ்வு அத்தனை மகிழ்ச்சியாய்  உலகின் மொத்த சந்தோசத்தையும் இவர்கள் காலடியில் கொண்டு வந்து போட்டது. வேறு வழியில்லாமல் இரு வீட்டார்களும் இவர்களது இம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள்.

என்ன ஒரு விஷயம் ரவி காட்டும் அதீத அன்பு சில நேரங்கள் அவர்களுக்குள் சண்டையை வரவைக்கும். அதில் ஒன்று தான் அவன் வீட்டில் இருக்கும் நேரம், திவ்யா வேறு எதிலும் கவனம் செலுத்திட கூடாது. அவனை சுற்றியே, அவனோடு பேசிக்கொண்டு, அவனக்கு தேவையானதை செய்துகொண்டு இருக்கவேண்டும்.

ஏதாவது சொன்னால், “நான் அப்படிதானே இருக்கேன்…” என்பான். அவன் சொல்வதும் சரிதான். ஒரு தந்தையாய், ஒரு சகோதரனாய், ஒரு காதலனாய், ஒரு நண்பனாய் இப்படி அனைத்துமே ரவியிடம் கண்டாள் திவ்யா. அவனுக்கு திவ்யாவை தாண்டிய உலகம் என்று வேறெதுவும் இல்லை. அனைத்தும் அவளே.

தன் கணவனை பற்றியே சிந்தனைகள் வந்ததும், கையில் இருக்கும் புத்தகத்தில் கவனம் சிதற, “ஷ்.. திவ்யா சீக்கிரம் முடி.. ரவி வந்தா அவ்வளோதான்… இன்னிக்கும் இதை முடிக்க முடியாது…” என்று தன் தலையில் தானே குட்டிக்கொண்டு படிக்கத் தொடங்கினாள்.

“போதும் ரவி.. இதுக்குமேல என்னை நானே ஏமாதிக்க ரெடியா இல்ல.. என்னை பொருத்தவரைக்கும் என் லைப் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்.. எனக்கு இம்பார்டன்ஸ் குடுக்கிற ஒருத்தர் தான் எனக்கு வேணும்.. ஆனா சில நேரம் நம்ம உண்மைய ஏத்துக்க தானே செய்யணும்..” என்று ப்ரியாவுமே கசப்பாய் சற்றே அழுத்தமாய் பேச, ரவிக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தது.

கண்டுகொண்டாள் என்றும் தெரிந்தது.

ஆனால் திவ்யாவிற்கு தான் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. திவ்யா முன்னே பேச ரவிக்கு தயக்கமாய் இருந்தது. 

தயக்கங்களை தகர்த்தெரியுமோ இவன் கொண்ட மயக்கம்…!!!!

“ஹப்பா… படிக்கும் போதே டென்சன் ஆகுதே…. இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.. ஆண்டவா ரவி இன்னிக்கு மட்டும் ஒரு டென் மினிட்ஸ் லேட்டா வரட்டும். அதுக்குள்ள இந்த ரவி என்ன செய்ய போறான்னு பாப்போம்..” என்று வேகமாய் அவள் பக்கத்தை திருப்ப,

“திவ்ஸ்……மை டார்லிங்…” என்று வந்து அவள் பின்னே அணைத்தான் திவ்யாவின் ஆருயிர் கணவன் ரவி பிரதாப்..!!

அவ்வளவு தான் அவளுக்கு சப்பென்று ஆகிவிட்டது. ‘ஹ்ம்ம் இன்னிக்கும் இதை முடிக்க மாட்டோம் போலவே…’ என்று எண்ணியபடியே கணவனை திரும்பி பார்த்தவள், அவன் பார்வை அவள் கையில் இருக்கும் புத்தகத்தில் இருக்க, வேகமாய் அதை தன் பின்னே மறைத்தாள்.

“ஹ்ம்ம் இன்னிக்கும் இந்த வேலை தானா?? அப்படி என்ன தான் டி இருக்கு இந்த கதைல நான் பார்க்கும் நேரம்லா இதையே தூக்கி வச்சிட்டு இருக்க…” என்று லேசாய் கடிந்தபடி, அவனது அணைப்பையும் விளக்காமல் கேட்டவனை முறைக்க முயன்று தோற்றாள் திவ்யா.. திவ்ய பாரதி..!!!!

“திவ்ஸ்… மேக் டூ டேஸ் ப்ளான்.. எங்கயாவது போகலாம்…” என்று அவள் தோளை பிடித்தபடி அவளை நடத்தி சென்றவனுக்கு அவளது கையில் இருக்கும் புத்தகத்தை பிடுங்கும் வழி தெரியவில்லை. இவன் தான் அதன் பக்கம் கையை கொண்டு போனாலே அவள் தட்டிவிடுகிறாளே.

“ரெண்டு நாள் ட்ரிப்பா.. என்ன ரவி திடீர்னு.. லாஸ்ட் மன்த் தானே ஊருக்கு போயிட்டு வந்தோம்..”  

“திடீர்னு போனா தான் திவ்ஸ்.. ட்ரிப் ஜாலியா இருக்கும்…” என்று அவன் கூறும் பொழுது கதையில் வரும் ரவியின் ‘திவ்ஸ்..’ தான் அவளுக்கு நினைவு வந்தது.

“ஓய்… என்ன நான் பேசிட்டு இருக்கேன்… நீ வேற திங்கிங்ல இருக்க..??”

“அது ஒண்ணுமில்ல மை லவ்வர் பாய்.. இந்த கதைல வர ஹீரோ பேரும் ரவி தான். அவனும் இப்படிதான் திவ்ஸ் திவ்ஸ்னு உருகுறான்..அதான்…” என்று லேசாய் புன்னகை புரிய..

“ஓஹோ!!!!! அதான் மேடம் விழுந்து விழுந்து படிக்கிறீங்களோ… என்ன திவ்ஸ் ஒரே ரொமான்ஸா கதைல…” என்று கண்ணடித்தான்.

“ச்சி புத்தி போகுது பாரு… இன்னும் அவன் லவ்வே சொல்லலை.. ஹே!!! ரவி இந்த கதையில ப்ரியான்னு கூட ஒரு கேரக்டர் வருது…” என்று சொல்ல,

ரவியின் முகம் அப்படியே மாறிவிட்டது.

“இனி அவ பேரை கூட சொல்லாத திவ்ஸ்.. ப்ளீஸ்…” என்று திவ்யாவை இறுக கட்டிகொண்டான்.

“என்ன ரவிம்மா இது..!! எல்லாம் சரியா போகும் அவளும் பாவம் தானே…” என்று கணவனை இறுக அணைத்து கொண்டாள்.

எத்தனை நேரம் இப்படியே இருக்க முடியும், “சாரி டியர்… என்னால நீ ரொம்ப கஷ்டபட்டுட்ட…” என்று ரவி திவ்யாவின் நெற்றியில் இதழ் பதிக்க,

“அதெல்லாம் கடந்து வந்தாச்சு ரவி.. இப்போ இந்த நிமிஷம் தான் நமக்கு சொந்தம்.. அதை மட்டும் சந்தோசமா அனுபவிக்கனும்..” என்றவளை கண்டு வேண்டுமென்றே சிறுவன் போல் சிணுங்கினான்.

“அட இது என்ன ???!!!!”

“பின்ன உன் கையில் இந்த புக் இருந்துட்டு என்னை ரொம்ப தொல்லை பண்ணுது திவி.. தூக்கி போடேன்…” என்றான் கெஞ்சலாய்கொஞ்சலாய்..

“ம்ம்ஹும் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ரவி. உனக்கு தெரியுமா இந்த கதை நிறைய விஷயங்கள்ள நம்ம லைப்போட மிங்கிள் ஆகுது ரவி.. அதான் விடாம படிச்சு முடிக்க பாக்குறேன்.. நீ விடவே மாட்டேன்கிற… ” என்றாள் அவள் அவனை விட கொஞ்சலாய்.

“நோ வே… எனக்கு கொஞ்சம் டீ போடு பொண்டாட்டி முதல்ல.. கதை அல்ல நிஜம் நானே உன் முன்னாடி இருக்கும் போது இது எதுக்கு…” என்றவன் அவள் அசந்த நேரம் அவள் கையில் இருந்த புத்தகத்தை பிடுங்கி சென்றுவிட்டான்.

“அதானே பார்த்தேன்.. கண்ணெல்லாம் அந்த புக்ல தான் இருந்ததா…” என்று கத்தியவள், அவன் கேட்ட டீயை போட சென்றாள்.

திவ்யா, ரவியின் ஆத்மர்த்த தோழி, ஆருயிர் காதலி. இன்று அவனது சரி பாதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு யாராவது நீங்கள் இருவரும் காதலிப்பீர்கள் என்று கூறியிருந்தால் திவ்யா அவர்களை கல்லை கொண்டு அடித்து விரட்டியிருப்பாள்.

ஆனால் இன்று, அனைத்திற்கும் நேர்மார். ரவி வேலைக்காக சென்னைக்கு வந்தவன். திவ்யா பிறந்தது வளர்ந்தது அனைத்துமே சென்னை தான். என்ன தினமும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து வேலைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட அலுவலகம் அருகிலேயே ஒரு வொர்க்கிங் வுமென்ஸ் ஹாஸ்டலில் தங்கிக்கொண்டாள். அப்படி அறை எடுத்து தங்கும் போது திவ்யாவுடன் அந்த அறையை பங்கிட்டவள் தான் ப்ரியா.

ரவியும் பிரியவும் ஒரே ஊர் தான். மூவரும் ஒரே அலுவலகம் தான். திவ்யாவிற்கும், ரவிக்கும் அத்தனை நேரடி தொடர்பு இல்லை. இந்த ப்ரியா தான் அவனை பற்றி நன்கு அறிந்தவள் போல ரவி இப்படி ரவி அப்படி என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

திவ்யாவிற்கும் பொழுது போக வேண்டுமே. உடன் இருப்பவளை பகைத்துகொள்ள முடியாதே. முகம் திருப்பாமல் அவள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டும் நிலை. ரவியின் அப்பா அம்மாவை ப்ரியா அத்தை, மாமா என்று தான் சொல்வாள்.

ரவியோடு பேசும் பொழுது கூட இப்படிதான் சொல்வாள். அதை திவ்யாவே கேட்டும் இருக்கிறாள் தான். சரி இருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல என்று நினைத்துக்கொள்வாள். ஆனாலும் அவள் மனத்தில் எதுவோ ஒன்று நெருடும்.

“ஏன் ப்ரியா.. நீயும் ரவியும் ஒரே பேமிலி தானே.. பின்னே நீ தான் ரவியை தேடி போய் பேசுற.. ஒருநாள் கூட ரவி வந்து உன்கிட்ட பேசின மாதிரி இல்லையே…” என்று தன் சந்தேகத்தை கேட்க,

“ஹா…!!! அதுவா.. அது.. இங்க எல்லாம் அத்தை பொண்ணு மாமா பையன்னு சொன்னா கிண்டல் பண்ணுவாங்க.. சோ வெளிய யாருக்கும் தெரியாத மாதிரி தான் இருக்கணும்னு நான் இங்க வரும் போதே சொன்னாங்க.. அதான்..” என்று என்று பூசி மொழுகினாள் ப்ரியா.

“ஹ்ம்ம்…!!!!!”என்று கேட்ட திவ்யாவிற்கு அவள் கூறிய பதில் அத்தனை திருப்தியாய் இல்லை. ஆனாலும் நமக்கெதற்கு இவர்கள் கதை என்று இருந்துவிட்டாள்.

ரவி ப்ரியாவிடம் என்று இல்லை, தேவையில்லாமல் யாரிடமுமே பேசிட மாட்டன். அவன் நண்பர்கள் கூட்டத்தோடு அடிக்கடி வெளியில் எங்காவது பார்த்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் இவளை தெரிந்த மாதிரி கூட காட்டிக்கொள்ள மாட்டான்.

“ஹ்ம்ம் சரியான ஹெட் வெய்ட்… ஒரு ஸ்மைல் பண்ணா என்னவாம்..” என்று கடிந்தவளுக்கு அடுத்த ப்ராஜெக்ட் அவனோடு சேர்ந்த செய்யவேண்டிய சூழல் ஏற்பட வேண்டா வெறுப்பாகவே அவனது டீமில் இணைந்தாள். ஏற்கனவே ப்ரியாவும் அதே டீமில் தான் இருந்தாள்.

“ஹே!!! திவி… நீயும் எங்க டீம்ல ஜாயின் பண்ணது ரொம்ப ஹேப்பி டி…” என்று கட்டிக்கொள்ள,“கொஞ்சம் வேலையை பார்க்கலாமா???” என்ற ரவியின் குரல் தான் தடுத்தது.

அதன் பிறகு வேறு எதுவும் யாருக்கும் சிந்திகக் நேரமில்லை. வேலை வேலை வேலை  மட்டுமே.. ஆனால் அவ்வப்போது ரவியின் பார்வை இவளிடம் படிந்து மீள, திவ்யாவிற்கு குழப்பமாய் போனது.

“என்ன இது..!!!” என்று யோசனையாய் அவன் முகத்தை திவ்யா பார்க்க, அவனோ பார்வையை வெடுக்கென்று திருப்பிக்கொண்டான்.

இவளுக்கு எப்படியோ ஆகிவிட்டது. ஆனாலும் மனதில், “போ.. எனக்கென்ன..” என்று தோளை குளுக்கிவிட்டு வேலையை கவனிக்க, அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ரெக்கை கட்டி பறந்தது.

இதற்கு நடுவே திவ்யா ப்ரியாவின் நட்பும் பலப்பட, திவ்யாவின் நாட்கள அழகாய் தான் பயணித்தது.

அன்று ஞியாயிற்று கிழமை, பொதுவாய் விடுமுறை தினமென்றாலே யாரும் அத்தனை சீக்கிரம் எழுந்திட பிடிக்காது தானே. திவ்யா உறக்கத்தை கொஞ்சிக்கொண்டு இருக்க, ப்ரியா என்ன செய்கிறாள் என்றெல்லாம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

ஆனால் அவளது கொஞ்சலை குழி தோண்டி புதைக்கவென்றே அவளது அலைபேசி விடாமல் அடிக்க, “ஹலோ!!!” என்றால் சோம்பல் குரலில்.

“ஹாய்..!! திஸ் இஸ் ரவி… ப்ரியாகிட்ட பேச முடியுமா???” என்ற குரலில் வேகமாய் எழுந்து அமர்ந்து வேகமாய் அலைபேசியின் திரையை தான் பார்த்தாள்.

புதிய எண் தான். அது ரவியாகவே கூட இருக்கலாம். ஆனால் தனக்கு ஏன் இத்தனை காலை பொழுதில் அழைக்கிறான். ப்ரியாவிடம் பேசவேண்டும் என்றால் அவளுக்கே அழைக்க வேண்டியது தானே. என்று ஆராய்ச்சி செய்ய, அதற்குள் அழைப்பில் இருந்தவன் ஹலோ ஹலோ என்று கத்தி தீர்த்துவிட்டான்.

“ஹா. சாரி.. சொல்லுங்க…”

“ப்ரியா கிட்ட பேசணும்…” வார்த்தைகளை கடித்து குதறியது அவன் குரல்.

முகத்தை சுளித்தபடி பார்வையை அறைக்குள் ஓடவிட்டவளின் கண்களுக்கு ப்ரியா சிக்கவேயில்லை. ‘எங்க போனா இவ…’ என்று யோசித்தபடியே பாத்ரூமை திறந்து பார்த்தவள் அங்கேயும் அவள் இல்லது போகவும், “ஷி இஸ் நாட் இன் ரூம்…” என்று ரவிக்கு பதில் அளித்தாள்.

“நாட் இன் ரூம் மீன்ஸ்… கூட இருக்கிறவ எங்க போனான்னு கூட தெரியாதா உனக்கு… என்ன செஞ்சிட்டு இருந்த நீ…” கத்தினான்.

“தூங்கிட்டு…” என்று இவள் சொல்லி முடிக்கவில்லை.

“ச்சே.. எப்போவுமே பொறுப்பில்லாம… உன்ன மாதிரி ஒருத்தியை பார்த்ததே இல்லை…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.இவளுக்கு வெகு நேரம் என்ன நடந்தது என்றே புரியவில்லை. அழைத்தான் ப்ரியாவை கேட்டான், இல்லையென்றதும் திட்டிவிட்டு வைத்துவிட்டான். என்ன மனிதன் இவன்.. என்று அவளும் அவனை திட்டியபடி மீண்டும் படுத்துக்கொண்டாள். ஆனால் உறக்கம் வரவில்லை.

“இந்த நேரத்துல இந்த ப்ரியா எங்க போயி தொலைஞ்சா…” என்று அவளை தேடிக்கொண்டு வெளியே சென்றாள்.அந்த ப்ரியாவோ அலைபேசியை சைலன்ட்டில் போட்டுவிட்டு மாடிக்கு சென்று இருந்தாள்..

நடந்தது எல்லாம் இது தான், ப்ரியாவின் பெற்றோர் ப்ரியாவிற்கு அழைத்து பார்க்க, ரிங் போய்கொண்டே இருந்ததே ஒழிய எடுத்தபாடில்லை. உடனே அவர்கள ரவிக்கு அழைத்துவிட்டனர். என்னவோ ஏதோவென்று அவர்கள் அவன் தூக்கத்தை கெடுத்து பேசிய கடுப்பில் அவனும் ப்ரியாவிற்கு அழைத்து பார்க்க அவனது அழைப்பும் எடுக்கபடாமலே போனது.

வேறு வழியில்லாமல் தான் திவ்யாவிற்கு அழைத்தான். ஆனால் இதெல்லாம் தெரியாத ப்ரியாவோ ரவியை நன்றாய் திட்டி தீர்த்தாள்.

“எருமை எருமை..” என்று திட்டியபடி நின்றிருக்க,

“ஹேய்!!! திவ்ஸ்… ஒரு டீ போட சொன்னா.. என்ன தனியா பேசிட்டு இருக்க…” என்று அவளை தன் பக்கம் திருப்பியவனை கண்டு லேசாய் அசடு வழிந்தாள் திவ்யா.

“என்ன திவ்ஸ்…”

“ஹ்ம்ம்..!!! ஒன்னுமில்ல.. கொஞ்சம் பழைய நியாபகங்கள்..” என்றபடி அவனுக்கு கோப்பையை நீட்ட, அவனோ முறைத்துக்கொண்டே,

“ஒன்னு கதையை பத்தி நினைக்கிற, இல்ல கடந்து போனது பற்றி நினைக்கிற.. எப்போதான் உன் மனசில என்னை பற்றி மட்டும் நினைப்பு இருக்குமோ..” என்று லேசாய் சலித்தான்.

ஆனால் அவளோ சிரித்துக்கொண்டே, “இந்த ரவியை பத்தின நினைப்பு இருக்கிறதுனால மட்டும் தான் அந்த கதையும், கடந்து போனதையும் ரொம்பவே நினைக்க தோணுது…” என்றாள்.

“சரி.. சரி… சீக்கிரம் கிளம்புவோம்… மேக் இட் பாஸ்ட் திவ்ஸ்.. டூ டேஸ்.. ஊட்டி ஸ்டே… ரீசார்ட்ல ரூம் புக் பண்ணிட்டேன்.. இப்போ கிளம்பினா தான் பிளைட் பிடிக்க முடியும்….” என்று அவளை துரித படுத்தினான்.

கடந்து போன நினைவுகள் எல்லாம் நிழலாய் தொடர்ந்தால் என்ன செய்வது…!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement