Advertisement

அத்தியாயம் – 4

“ரவி…. ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு….” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.

“ஹா…!! என்… என்ன திவ்ஸ்.. கல்யாண…” என்று ஆரம்பித்தவனை முறைத்தவள்,“என்ன ரவி இந்நேரம் கூட ட்ரீம்ஸா.. அங்க என்னவோ சத்தம் கேட்குது ரவி.. வெளிய எதோ பிரச்சனை போல…”  என்று அழுத்தமாய் சொல்ல,

“ஹா.. சத்தமா…!!!” என்று அதிர்ந்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது இத்தனை நேரம் தான் கண்டது கனவு என்று.

“அப்.. அப்போ கல்யாணம்….”

“டேய்… லூசா டா நீ… இங்க நின்னு கல்யாணம் கல்யாணம்னு சொல்லிட்டு இருக்க.. பொண்ணு நான்.. மாப்பிள்ள அங்க இருக்கான். வெளிய போனாதான் கல்யாணம் நடக்கும்…” என்று அவள் சொன்னதும், சற்று நேரத்திற்கு முன்னே திவ்யாவின் கழுத்தில் தான் தாலி கட்டியது போல் இருந்தது எல்லாம் மனதில் வந்து போனது.

கனவா ?? கற்பனையா ?? கனவென்றால் இந்நேரத்தில் வருமா?? ஆக இது கற்பனையா?? அப்படியானால்…. என்று அவன் யோசிக்கும் பொழுதே,

“ரவி… அங்க என்ன சத்தம்னு போய் பாரு…” என்று இவள்தான் பிடித்து தள்ள வேண்டியதாய் இருந்தது.

“சத்தமா… கனவுலயும் சத்தம் தானே… ஒருவேளை அந்த ராகவ் நிஜமாவே ஓடிட்டானா????!!!!” என்ற எண்ணத்திலேயே மாப்பிள்ளையின் அறைக்கு செல்ல, அங்கே ராகவ் சகிதம் அனைவரும் இருந்தனர்.

ஆனால் கலங்கி நின்றதோ ரவி மற்றும் திவ்யாவின் பெற்றோர்கள்.

“என்னங்க நாங்க கேட்டுட்டே இருக்கோம்.. நீங்க நாலு பேரும் இப்படி பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி இருந்தா என்ன அர்த்தம்..” என்று ராகவ்வின் அம்மா கத்திக்கொண்டு இருக்க இவர்களோ செய்வது அறியாது இருந்தனர்.

“என்… என்னப்பா…” என்று தர்மலிங்கம் அருகில் வந்த ரவியை கண்ட அவரோ, அவனை எத்தனை கோவமாய் பார்க்க முடியுமோ அப்படி பார்த்து வைத்தார்.

“வாங்க சார் வாங்க… உங்க பேச்சு தான் மண்டபம் முழுக்க.. ஏன் தம்பி உங்களுக்கு திவ்யாவ தான் பிடிக்கும்னா நீங்களே கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தான..” என்று மேலும் அந்த அம்மாள் தொடர, ரவியோ திகைத்து பார்த்தான்.

“என்ன சொல்றீங்க???!!!!”

“பின்ன.. ரவிக்கு தான் திவ்யாவ குடுப்பாங்கன்னு நினைச்சோம்… இப்போ உங்களுக்கு எப்படி பேசினாங்க??? ரெண்டும் சின்னதுல இருந்து ஒன்னுமுன்னா சுத்துனாங்களேன்னு எல்லாம் கேக்குறாங்க.. எங்களுக்கு பதில் சொல்ல முடியல.. இல்ல பொண்ணுக்கு எதுவும் குறையா???!!!!” என்று வாய்க்கு வந்தபடி பேச, பெரியவர்களோ என்ன சொல்வது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க,

ரவிக்கு அத்தனை கோவம் வந்தது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் அறையில் இருந்த திவ்யாவும் இங்கே வந்திருந்தாள். இந்த பேச்செல்லாம் காதில் விழ, அவளுக்கு தீயை மிதித்தது போல் இருந்தது.

“என்.. என்ன சொல்றீங்க….??!!!!” என்று ஆங்காராமாய் கேட்டவளை,

“வாடியம்மா… யாரும் சொல்லும் போது கூட நான் நம்பள.. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த ரூம்ல கூத்தடிச்சீங்களே, அந்த கன்றாவிய பார்த்ததுக்கு அப்புறம் தான் நாங்க ஏமாந்து இருக்கோம்னு புரிஞ்சது….”

“இங்க பாருங்க… வார்த்தைய அளந்து பேசுங்க….” என்று ரவி எகிறிக்கொண்டு வர,

“ரவி……..”  என்ற தர்மலிங்கத்தின் அழைப்பு அவனை அப்படியே நிற்க வைத்தது.

“இப்போ உங்க பையன அடக்கி என்ன பிரயோஜனம்… முன்னமே செஞ்சு இருக்கணும்.. இல்ல எல்லாம் தெரிஞ்சும் கண்டுக்காம இருந்தீங்களா ???”

“இங்க பாருங்க சம்பந்தி என் பொண்ணு அப்படியெல்லாம் இல்ல.. ரவியும் அப்படி இல்ல…” என்று தெய்வேந்திரன் கெஞ்சலாய் பேச, விசாலமோ மகேஸ்வரியின் தோளில் சாய்ந்து அழுதபடி இருந்தார்.

தர்மலிங்கமோ, “எத்தனை தடவ சொல்லிருப்போம் பாப்பா கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருன்னு.. இப்போ பார் உன்னால பாப்பா வாழ்க்கையே கேள்விகுறியா இருக்கு…” என்று மகனை நோக்கி கர்ஜிக்க, அவனுக்கோ தாங்கள் செல்பி எடுத்துக்கொண்டது எல்லாம் கண் முன்னே வந்தது.

அவள் போதும் போதும் என்று சொன்னாலும் விடாது எடுத்தது இவன் தானே.. தள்ளி நின்றவளையும் தன்னருகே நிற்க வைத்து எடுத்தது அவன் தானே.

“அதான் அந்த லட்சணத்தை கண்ணால பார்த்தேனே… ரெண்டு பேரும் தோள் மேல கை போட்டதும், ஓரசிகிட்டு நின்னதும்னு.. ச்சே ச்சே என்ன கண்றாவியோ.. எல்லாரும் இருக்கும் போதே இப்படி.. சென்னைல யாரும் இல்லாம் என்னென்ன பண்ணாங்களோ… நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா, நீங்களே உங்க மகன் போனை வாங்கி பாருங்க..” என்று அந்தம்மாள் நொடிக்க,

“அப்பா… நாங்க ஜஸ்ட் போட்டோ தான் எடுத்தோம்….” என்றபடி ரவி, வேகமாய் ராகவ்விடம் விரைந்தான்.

“ராகவ்.. அவங்களை விடுங்க,நீங்க இதெல்லாமா நம்புறீங்க.. ஒரு பொண்ணு பையனும் பிரண்ட்ஸா பழக கூடாதா…?அவங்க எதோ தப்பா புரிஞ்சிட்டு பேசுறாங்க…”

திவ்யாவிற்கு நடப்பது அனைத்தும் எதுவோ கனவில் நடப்பது போல் இருந்தது. இதுவரைக்கும் தங்கள் பெற்றோர்களுக்கே தவறாய் தெரியாத ஒருவிசயம் இவர்களுக்கு ஏன் தெரிகிறது. அதிலும் அவர்கள் நால்வரும் தலைகுனிந்து நிற்க, ரவி ராகவ்விடம் கெஞ்சிக்கொண்டு இருக்க, இது அனைத்தும் இவளது வாழ்விற்கா என்று நினைக்கும் பொழுது, இப்படி ஒரு வாழ்வு வேண்டுமா என்று தோன்றியது.

தீர்க்கமாய் ராகவ் என்ன சொல்ல போகிறான் என்று பார்த்தாள். ஆனால் அவனோ மிகவும் அலட்சியமாய், “நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.. ஆனா ஊர் வாய்னு ஒன்னு இருக்கே.. அதுவும் இல்லாம எதுவுமே இல்லாமையா எல்லாரும் பேசுவாங்க…” என்றான்.

அவ்வளவு தான் ரவிக்கு ஆத்திரம் பொங்கி விட்டது. இவனுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க வேண்டுமா என்ற கர்வம். அதிலும் திவ்யாவிற்கு இவன் ஒன்றும் வாழ்க்கை பிச்சை போட தேவையில்லை என்ற எண்ணம் மனதில் வேர் விடவும் அவன் உடல்மொழியே மாறிவிட்டது.

வேட்டியை மடக்கி கட்டிக்கொண்டு, “கிளம்பு டா.. இன்னும் பத்து நிமிஷம் உனக்கு டைம்… நீயும் உன் குடும்பமும், சொந்த பந்தமும் இங்க இருக்கு ஓடியிருக்கனும்.. எவனும் கண்ணுல பட கூடாது.. உங்களுக்கு என்ன டா தெரியும் எங்க திவ்யா பத்தி.. உனக்கு எல்லாம் பொண்ணு குடுக்கிறோம்னு சொன்னதே பெருசு.. நீ என்ன அவளை வேண்டாம்னு சொல்றது.. நான் சொல்றேன்… நீ எங்க திவ்யாவுக்கு வேணாம்..” என்று முறுக்கிக்கொண்டு முன்னேற,

“ரவி….!!!!!!!!” என்று அங்கே அனைவருமே அதிர்ந்தனர்.

தர்மலிங்கமும், தெய்வேந்திரனும் ரவியை அடக்க, அவனோ மீறி பேசினான்.

“கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க குணம் இப்படி கோணலா போகுது.. இதுல எங்க திவ்யாவ உங்க வீட்டுக்கு அனுப்பினா அவ்வளோதான்.. கிளம்புங்க டா…” என்று கர்ஜிக்க,

தர்மலிங்கம், “ரவி போதும்… இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் நடக்கணும்.. நீ சும்மா இரு..” என்று அதட்ட,

தெய்வேந்திரனோ, “சம்பந்தி கோவிச்சுக்காதிங்க… சின்னதுல இருந்து ஒண்ணா பழகின பாசம். அதான் இப்படி பேச வைக்குது.. இவ்வளோ தூரம் வந்திட்டு இப்போ கல்யாணம் நின்னா நல்லாவா இருக்கும்..” என்று கெஞ்ச,

திவ்யா “அப்பா…” என்று அலறினாள்.

ஆனால் விசாலாமோ, “பாப்பா… நீ சும்மா இரு…” என்று அழுகையினூடே சொல்ல, “பாப்பா நீ எதுக்கு பயப்படாத.. இந்த கல்யாணம் நடக்கும்…” என்று மகேஸ்வரி ஆறுதல் சொல்ல,

“ம்மா.. போதும்… பாப்பா பாப்பானு சொல்லி நம்ம திவ்ஸ் வாழ்கைய நம்மளே  நரகத்துல தள்ளனுமா??? சாதரணமா சிரிச்சு பேசினதுக்கே சந்தேக படுற குடும்பம்.. இதுல நம்ம திவ்யா வாழனுமா?? டேய் கிளம்புங்க டா…” என்று அவன் கத்த, அந்த இடமே களேபரம் ஆனது.

உள்ளே நடக்கும் பிரச்சனை ஒன்றிற்கு இரண்டாய் வெளியே பரவ, கல்யாணம் நின்றது என்றளவில் அனைவர்க்கும் தெரிய, வந்த கூட்டம் பாதி கலைந்தது. மீதமிருந்த ஆட்களோ அடுத்தது என்ன என்ற ஆவலில் அமர்ந்திருக்க, சரியாய் ப்ரியாவும் தன் அன்னையோடு வந்து சேர்ந்தாள்.                      

 

யார் சொல்லியும் ரவி அடங்குவதாய் இல்லை. என்னவோ அவனுக்கு இந்த திருமணத்தை நிறுத்திடவே மனம் துடித்தது. இப்படி ஒருவனுக்கு திவ்யாவை கொடுப்பதா என்ற எண்ணம். வேண்டாம் அவளை அனுப்பாதே.. அதுவும் இவர்களோடு அனுப்பிவிடாதே என்று மனம் வேறு கூப்பாடு போட அவனோ அனைவரின் பேச்சையும் இன்னும் மீறினான்…

திவ்யாவோ ஒரு வார்த்தை பேசவில்லை. அமைதியாய் நடப்பதை பார்த்திருந்தாள். ராகவ்வோடு திருமணம் என்பது நிற்கும் நிலையில் இருந்தாலும் அவள் மனம் அதற்காய் வருத்தப்படவே இல்லை, மாறாய் தன்னிலை இப்படி வர வேண்டுமா என்று இருந்தது.

இனி அனைவரின் வாய்க்கும் அவலாக வேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு சலிப்பை கொடுத்தது.  

உள்ளே வந்த ப்ரியாவிற்கு நடப்பது கண்டு அதிர்ச்சி தான். ஆனாலும் அங்கே ரவியின் செயல்கள் சற்று அதிகமாய் இருப்பது போல தோன்றியது. என்ன இது? இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று நினைக்கும் பொழுதே திவ்யா வந்து இவளை கட்டிகொண்டாள்.

“ஷ்.. ஒண்ணுமில்ல டி.. நீ கலங்காத..” என்று ப்ரியா ஆறுதல் சொல்லும் பொழுதே,

“ஏய் எல்லாரும் சொல்றத விட, இப்போ நீ இவ்வளோ எகிறிட்டு வர்றதுல தான் டா எனக்கு சந்தேகமே இருக்கு.. நீ இவ்வளோ கத்துறா.. அவ கம்முனு நிக்கிறா…” என்று ராகவ் பேச, ரவி அவன் சட்டையை பிடித்திருந்தான்.

“மரியாத.. மரியாதையா பேசு.. அவ கிவன்னு சொன்ன மவனே சங்கு இருக்காது.. என்ன டா தெரியும் உனக்கு.. இல்ல தெரியும் உனக்கு திவ்யா பத்தி… அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது ஏதாவது தெரியுமா?? இல்ல அவ குரல் எப்படி இருக்கும்னாது உனக்கு தெரியமா??  எப்படி டா இப்படி இருக்கீங்க.. எதுவுமே தெரியாம என்ன இதுக்கு டா நீ மாப்பிள்ளையா வந்த…”

இதற்குமேல் அமைதியாய் இருந்தால் சரி வராது என்று இரு குடும்பத்து பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளை மிகவும் சிரமபட்டே இழுத்து அமர வைக்க, ப்ரியாவிற்கு ரவியிடம் எதுவோ மாறுதல் தென்பட்டது. அவன் இயல்பில் இல்லை என்று புரிந்தது.

அங்கே பெரியவர்களின் பேச்சு தொடங்க உஷ்ண மூச்சுகளை வெளிவிட்டபடி திவ்யாவிடம் தான் வந்து அமர்ந்தான்.

“ஐயோ இவ்வளோ நடந்தும் இவனுக்கு புத்தி இல்லையே..” என்று அனைவரும்  ரவியை காண, ராகவ் நக்கலாய் ஒரு பார்வை பார்க்க, ராகவ்வின் அம்மா தன் பஜனையை ஆரம்பித்து இருந்தார்.

இதற்கு நடுவே ஒருவழியாய் ப்ரியா ரவியை தனியே இழுத்து வந்திருந்தாள்.

“என்ன ரவி இப்படி பீகேவ் பண்ற.. சாதரணமா பேசி தீர்க்கிற பிரச்சனைய இவ்வளோ பெருசு பண்றதே நீ தான்..” என்று கடிந்தாள்.

ஆனால் அவனுக்கோ அவளை பார்த்து இன்னும் எரிச்சல் தான் அதிகமானது. அது ஏன் என்று தெரியவில்லை.

“என்ன பேசுற நீ..?? அவனுங்க வாய்க்கு வந்த மாதிரி திவ்ஸ் பத்தி பேசுறாங்க.. நான் பொறுமையா இருக்கனுமா???”

“அவங்க உன்னை பத்தியும் தான் பேசுறாங்க…”

பட்டென்று வந்து விழுந்தது வார்த்தைகள் அவளிடம். ரவி மீது இன்னதென்று புரியாத ஒரு கோவம் கனன்று கொண்டே தான் இருந்தது ப்ரியாவிற்கு. ஒருவேளை தங்கள் திருமண பொறுப்பை அவன் திவ்யாவிடம் ஒப்படைத்ததினாலா?? இருக்கலாம். அது இந்நேரத்தில் பிரதிபலித்தது.

“ம்ம்ச் என்னை பத்தி என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை… திவ்யா பத்தி எவனும் பேச கூடாது…”

ப்ரியாவிற்கு இவனது மனநிலை சிறிதும் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பிடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். தேவையில்லாமல் ரவி அலட்டுவது போல் தோன்றியது. தங்கள் திருமண விஷயம் பேச சொன்னதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னவனா என்று இருந்தது. 

அங்கே பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, லேசாய் சலசலப்பு ஏற்பட மீண்டும் ரவி அங்கே விரைந்தான்.

“மாமா.. அப்பா… இவனுங்ககிட்ட என்ன கெஞ்சல் வேண்டிக்கிடக்கு.. போக சொல்லுங்க முதல்ல.. டேய் இன்னும் என்ன நீ சேர் போட்டு உட்கார்ந்து இருக்க.. உன் மாப்பிள்ள கெட்டப்லாம் முடிஞ்சு போச்சு.. கிளம்பு…” என்று விரட்டினான்.

“என்னங்க நீங்க நானும் பாக்குறேன், சின்ன பையன பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க.. ராகவ் எந்திரி டா போவோம்..பொண்ண பெத்த இவங்களுக்கே இல்லாத அசிங்கம் என்ன நமக்கு…” என்று ராகவ்வின் அம்மா கிளம்ப விழைய, தர்மலிங்கமும் தெய்வேந்திரனும் அவர்கள் பின்னே செல்ல,

“அப்பா விடுங்கப்பா போகட்டும். நம்ம திவ்ஸ்க்கு இவன விட நல்ல மாப்பிள்ளை பார்த்து நம்ம இன்னும் பிரமாதமா கல்யாணம் செய்யலாம். இந்த சந்தேக பிசாசுங்ககிட்ட திவ்ஸ் வாழவே வேண்டாம்…” என்று உறுமினான்.

“அடேங்கப்பா… என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைப்பானா??? போனா போகுதேன்னு நானும் பொறுமையா இருந்தா நீ ரொம்ப பேசுற…” என்று ராகவ் இவன் பக்கம் திரும்ப,

“டேய் டேய் போ டா.. நீ எவ்வளோ பெரிய அப்பாடக்கரா வேணா இருந்துட்டு போ.. ஆனா எங்க திவ்ஸ் உனக்கு இல்ல…” என்றான்.

“பெத்தவங்களே அமைதியா இருக்க… நீயேன்டா ரொம்ப துள்ளுற.. சரியில்லையே… ஒருவேளை எல்லாரும் சொல்ற மாதிரி….” என்று ராகவ் இழுக்க,

“என்னடா சொன்ன…” என்று ரவி அவனை அடிக்க முன்னேற, திவ்யா தான் நடுவில் வந்து தடுத்தாள்.

“விடு திவ்ஸ்….” என்று திமிறியவனை கண்டு, “ரவி….” என்று ஆழ்ந்து நோக்க, அவனோ அப்படியே நின்றான்.

இதையெல்லாம் அமைதியாய் பார்த்துகொண்டு இருந்த ப்ரியா மற்றும் அவள் அம்மாவிற்கும் மனதில் என்னவோ போல் இருந்தது. பேசி தீர்க்க வேண்டிய ஒன்றை ரவி அதிகப்படுத்தி விட்டானோ என்று தோன்றியது.பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறையும் பொறுப்பும் இவனுக்கு என்ன என்று தோன்றியது.

“ரவி கொஞ்சம் பொறுமையா போ டா.. நம்ம பாப்பா வாழ்க்கை…” என்று தெய்வேந்திரன் சொல்ல,

“மாமா… திவ்ஸ் வாழ்க்கை கண்டிப்பா நல்லபடியா அமையும்… நீங்க வருத்தப்படாதீங்க….” என்றவன்,

“நீ என்ன டா எங்க திவ்யாவ வேணாம்னு சொல்லிட்டு போறது.. நாங்க சொல்றோம் டா…” என்றவன், “திவ்ஸ் வா.. நீ இங்க இருந்தா உன்னை ஒரு வழி செஞ்சிடுவாங்க.. நாம கிளம்புவோம்..” என்று கூறியபடி அனைவரின் முன்னும் அவளை கை பிடித்து அழைத்து சென்றான்.

பெயருக்கு கூட ப்ரியா மற்றும் அவள் அம்மா பக்கம் அவன் திரும்பவே இல்லை. வீட்டினர் அனைவரும் திகைத்து நிற்க, அவனோ திவ்யாவை கூட்டிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தான்.

ப்ரியா தான் சட்டென்று சுதாரித்து, வேகமாய் அவர்களை நோக்கி சென்றாள்.

“ரவி நில்லு… நில்லுன்னு சொல்றேன்ல…” என்று அவனை நெருங்கும் போது, திவ்யாவை காரில் அமரவைத்து கதவடைத்து இருந்தான்.

உள்ளே அவள் அமர்ந்திருக்க, “என்ன???” என்று ப்ரியாவை கண்டு எகிற,

“இங்க பாரு.. இது ரொம்ப சாதாரண பிரச்சனை.. பேசி தீர்த்திருந்தா இந்நேரம் எல்லாமே சரியாகி இருக்கும்.. ஆனா நீ ஏன் இப்படி இருக்க???  நீ ஏன் இவ்வளோ ரியாக்ட் பண்ற.. ஒண்ணுமில்ல இப்போ போய் நம்ம லவ் பத்தி சொன்னா ஆட்டோமேட்டிக்கா இந்த பிரச்சனை சரியாகிடும்.. வா…” என்று ப்ரியா அவன் கரங்களை பிடித்து இழுத்தாள்.

ஆனால் ரவியோ ஒரே உதறு உதறிவிட்டான்.

“என்ன பேசுற நீ… இங்க என்ன நடக்குது, இப்போ போய் நம்ம லவ் பத்தி பேசலாம்னு சொல்ற?? ஹொவ் செல்பிஷ் யு ஆர்… ” என்று கத்தியவன்,

“பாரு…. திவ்ஸ பாரு எப்படி உட்கார்ந்து இருக்கான்னு… இப்போ போய் நம்ம காதல் கல்யாணம்னு பேச சொல்றியா.. ச்சே…” என்றதும் ப்ரியாவிற்கு அத்தனை அதிர்ச்சியாய் இருந்தது.

“நான்… நான் செல்பிஷா….” என்று லேசாய் தனக்கு தானே சொல்லிக்கொண்டவள், ஒன்றுமே பேசாமல் நின்றுவிட்டாள்.

“அம்மாவ கூட்டிட்டு ஊருக்கு போ.. அங்க வந்து பேசிக்கலாம்…” என்றவன் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டான்.

எதோ அவனுக்கு மட்டுமே திவ்யாவின் மீது அக்கறை இருப்பதாய் நினைப்பு. அவன் மட்டுமே அவளது அனைத்திற்கும் பொறுப்பு என்பது போல் ஒரு உணர்வு. திவ்யாவின் சகலத்திற்கும் ரவி மட்டுமே காரணமாய் இருந்திட வேண்டும் என்ற ஆணவம்.. திவ்யாவை எதிலிருந்தோ காத்து அழைத்து செல்வது போல் ஒரு பாவம்..

ரவியின் முகத்தையே திகைத்து பார்த்தபடி வந்தாள் திவ்யா.

அவர்கள் போவதையே செய்வது அறியாமல் பார்த்தபடி நின்றாள் ப்ரியா…

விதியின் காய் நகட்டலில் காயம் பட்டது யாரோ…..

 

 

Advertisement