Advertisement

அத்தியாயம் – 10

ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம் வேறு. ஆகையால் இன்னும் இன்னும் பிரச்சனை ஆகும் முன்பு ரவியின் திருமணத்தை நடத்திட துடித்தனர்.

குடும்ப கௌரவத்திற்காக அவர்கள் யோசிப்பது சரிதான், ஆனால் பெற்றோராய் ரவியின் குணம் தெரியாதா. ஆனால் அவர்களோ நம்பிக்கை என்ற வார்த்தைக்கே வரவில்லை. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் நீ வந்து ப்ரியாவை திருமணம் செய் என்று சொல்ல, அதெல்லாம் நடக்காத காரியம் என்று முறுக்கினான் மகன்.

இவர்களுக்கு நடுவில் செய்வது அறியாது திகைத்து நின்றது திவ்யபாரதி தான். ஆனால் அதுவும் சில நொடிகள் தான். பெற்ற மகனையே நம்பாதவர்கள் தான் கூறுவதை கேட்க போகிறார்களா என்ன என்று தோன்ற அடுத்த நொடி அவளது பெற்றோருக்கு அழைத்துவிட்டாள்.

சற்று தனியே சென்று தான் பேசினாள். சுருக்கமாய் விசயத்தை கூறினாலும் அவர்களும் சும்மா இருப்பார்களா?? திட்டி தீர்த்துவிட்டனர். கண்ணீர் வழிந்தாலும் மனதில் உள்ள திடம் குறையவில்லை.

“அம்மா எனக்கு லைப்னு ஒன்னு அமைஞ்சா அது ரவி கூட மட்டும் தான். நீங்க முடிஞ்சா இப்போவே வாங்க.. இல்லையா நான் பார்த்துக்கிறேன்..” என்றவளின் குரல் நடுங்கியது. 

“ஷ்.. இப்போ எதுக்கு திவ்ஸ் அழற..?? நம்மளை மீறி எதுவும் நடக்காது..” என்று ஆறுதல் சொல்லியவன், அலைபேசியை வாங்கி அவனே பேசினான். உறுதியாய் திடமாய் பேசவும், இன்னும் நான்கைந்து நாட்களில் இங்கே வருவதாய் கூறினார்கள்.  

ரவி என்ன பேசுகிறான் என்று இவர்களுக்கு தெரியவில்லை ஆனால் திவ்யாவின் ஒவ்வொரு அசைவையும் ரவியின் பெற்றோர் பார்த்துகொண்டு தான் இருந்தனர். அவள் செய்வது எல்லாம் சாதாரணமாய் தோன்றலாம் ஆனால் அதில் இருக்கும் தெளிவு அவர்களுக்கு தெரியாமல் இல்லை. பொய் சொல்பவர்களிடம் அது இருக்காது. எதோஒரு ஈர்ப்பு அவளது செயல்களிலும், பேச்சிலும். மகனது மனம் இவளிடம் எதனால் மயங்கியது என்று புரியாமல் இல்லை.  ஆனால் ப்ரியா ஊரில் கதை கட்டி விட்டாளே. 

ரவியின் பெற்றோரும் ஒரே வாரத்தில் அவனது திருமணம் என்க, திவ்யாவின் பெற்றோரோ நான்கைந்து நாட்களில் வருகிறோம் என்க, இதற்கு நடுவில் என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு, மனதில் தோன்றியது எல்லாம் ஒன்று மட்டுமே.

அது திருமணம் மட்டுமே.

“இன்னும் எத்தனை நாள் இங்க இருக்க போறீங்க??” என்று தன்னை பெற்றவர்களிடம் வந்து கேட்க,

“நீ வந்தா இப்போவே கிளம்பளாம்..” என்று ராம்பிரதாப் கூற, ஒருநொடி கண்களை மூடி திறந்தவன், “சரி ஒரு மூணு நாள் டைம் குடுங்க. எல்லாம் சேர்ந்தே ஊருக்கு போவோம்…” என்ற மகனது பேச்சில் என்ன கண்டனரோ, திவ்யாவை பார்த்தனர்.

அவள் அப்பொழுதும் அசராமல் தான் நின்றிருந்தாள். ரவி மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்றெல்லாம் அவளுக்கு தெரியாது, ஆனால் நீங்கள் உங்கள் மகன் மீது வைக்காத நம்பிக்கையை நான் வைத்திருக்கிறேன் என்று அவளது பார்வை சொன்னது.

“நிஜமா தான் சொல்றியா ரவி…”

“எஸ் ம்மா.. மூணு நாளைக்கு அப்புறம் நம்ம எல்லாருமே சேர்ந்து ஊருக்கு போவோம்..”என்றான் அழுத்தமாய்.  ‘நம்ம எல்லோருமே’வில் திவ்யாவும் சேர்த்தி என்று அவர்களுக்கு புரியாமல் போனது தான் பரிதாபம். 

“அப்போ கல்யாண வேலை எல்லாம் ஆரம்பிக்க சொல்லவா..??”

“இல்லப்பா நேர்ல போய் பார்த்துப்போம். இதை பத்தி இனிமே பேசவேண்டாம்..” என்றவன் பிறகு திவ்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ இங்கயே இரு.. வந்துடுறேன்..”என்றவன் தங்கள் வீட்டினரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

வசுந்தராவிற்கும் ராம்பிரதாப்பிற்கும் மகன் உடனே ஊருக்கு வர சம்மதம் சொன்னதில் அத்தனை திருப்தி. ஆனாலும் திவ்யாவை தனியே விட்டு வந்தது உறுத்த,

“என்னடா அந்த பொண்ண இப்படியே விட்டுட்டு வர..” என்று வசுந்தரா கேட்டார்.

அவரை பார்த்து மெல்ல புன்னகைத்தவன், “அவகிட்ட கொஞ்சம் தனியா பேசி எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா ம்மா… நீங்க கவலை படாதீங்க.. எனக்கு யாரையும் ஏமாத்தி பழக்கம் இல்லை..” என்று கூறியவன் ஒரு ஹோட்டலில் அறையெடுத்து இவர்களை தங்கவைத்து விட்டு, அடுத்து தான் செய்ய வேண்டிய வேலைகளை பார்க்க சென்றான்.

அங்கு திவ்யாவிற்கோ பக் பக் என்றது. அவளது டென்சன் எல்லாம் ரவி மீது அல்ல. ரவியின் பெற்றோர் ஏதாவது அவன் மனம் நோகும் படி பேசிடுவரோ என்று. ப்ரியாவை நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ஆக அவள் நட்புக்கும் உண்மையாய் இல்லை. காதலிலும் நேர்மையாய் இல்லை.

அவள் மனதில் நிஜமாகவே ரவியின் மீது காதலிருந்திருந்தால் அதை முதலில் ரவியிடம் சொல்லியிருக்க வேண்டும். அவன் விருப்பம் என்னவென்று அறிந்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், தங்கள் விஷயம் தெரிந்தும் இப்படி விசத்தனம் செய்ததை நினைத்தாலே அருவெருப்பாய் இருந்தது.

என்ன பெண்ணிவள், இதே புகைப்படங்கள் அவள் வாழ்வில் பிரச்சனையை கொண்டுவந்தால் இவள் என்னாவாள்?? அதெல்லாம் தெரிய வேண்டாமா?? என்று சிந்திக்கும் பொழுதே மீண்டும் அவளது அலைபேசி. யாரென்று பார்த்தால், அவளது பெற்றோர் தான்.

திவ்யாவிற்குமே அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் என்ன சொல்வது என்று தயக்கம் தான். ஆனால் எதையும் சந்தித்து தானே ஆகவேண்டும். தெளிவாகவே பேசினாள். அவள் காதலில் எத்தனை உறுதியாய் இருக்கிறாளோ அதை தன் வார்த்தைகளில் காட்டினாள்.

அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே ரவியும் வந்துவிட, அவனுமே தங்கள் சூழ்நிலையை விளக்கினான்.

“அங்கிள் ஆன்ட்டி, நீங்க என்னை கூட நம்ப வேண்டாம். உங்க பொண்ணை நம்புங்க. அவ முடிவு தப்பா இருக்குமா?? இல்லை தப்பான ஆளை தான் திவ்யா செலக்ட் பண்ணுவாளா??” என்று ஆரம்பித்து தன் குடும்பம், பின்புலம், வேலை, சம்பளம் என்று ஒன்றுவிடாமல் கூறியவன், இறுதியாக,

“நீங்க வரதுக்குள்ள எங்களுக்கு கல்யாணம் நடந்தாலும் நடந்திருக்கும்…” என்று சத்தமில்லாமல் இடியை இறக்கினான். இது திவ்யாவிற்குமே அதிர்ச்சியான ஒன்று தான். திகைத்து போய் அவனை பார்க்க, அவனோ மிகவும் தெளிவாய் பேசிக்கொண்டு இருந்தான்.

திவ்யா கல்யாணம் என்ற வார்த்தையிலேயே அவனது முடிவு கண்டு திகைத்துவிட்டாள். அவன் பேசி முடித்தபின்னும் கூட அவள் அப்படியே தான் இருந்தாள்.

“திவ்ஸ்…” என்று உலுக்கியவனை ஒரு நொடி மழங்க பார்த்தவள், பட்டென்று இறுக்கமாய் கட்டிகொண்டாள்..

“ஹேய்..!!! என்ன டி..”

“சாரி… சாரி ரவி.. என்னால தானே இதெல்லாம்.. உங்களுக்கு எவ்வளோ கெட்ட  பெயர்…” என்று அழுதவளின் முதுகை ஆதுரமாய் தடவியவன்,

“ஷ்.. திவிம்மா… நான் இருக்கும் வரைக்கும் நீ இப்படி எதுக்கும் கலங்க கூடாது.. நான் இல்லைனாலும் நீ கலங்குற நிலை உனக்கு வராது. சரி இப்போ நமக்கு வேற எதுக்கும் நேரமில்லை. உன் பர்த் சர்டிபிகேட் எடுத்து குடு. நாளைக்கு மறுநாள் நமக்கு கோவில்ல வச்சு கல்யாணம்…”

“என்.. என்ன நாளைக்கு மறுநாளா???”

“ம்ம்.. ”

“ரவி.. இந்த பிரச்சனை…”

“என்ன பிரச்சனை, கல்யாணம் முடியட்டும் முதல்ல.. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. தென் இந்த போட்டோஸ்எடுத்து பத்திரமா வை. பின்னால தேவை படும்..” என்றவன் அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

விடுதிக்கு வந்தவளுக்கோ மனம் ஒருநிலையில் இல்லை. இருவரின் பெற்றவர்களுமே இருக்கும் பொழுது யாருமில்லாமல் திருமணம் செய்துகொள்வதா?? இல்லை நிச்சயம் அப்படி நடந்திட கூடாது என்று தோன்ற, ரவிக்கு அழைத்து பேசினாள்.

“ரவி, எது எப்படினாலும் சரி, நம்ம கல்யாணம் அட்லீஸ்ட் உங்க அப்பா அம்மா முன்னாடியாவது நடக்கணும்.. ப்ளீஸ்..” என்க, அவனுக்குமே இது தான் மனதில் இருந்திருக்க வேண்டும் போல தான் பார்த்துகொள்வதாய் கூறிவிட்டான்.

நடுவில் இருந்த ஒருநாளும் ரவியோ திவ்யாவோ வேறு எதுவும் பேசிக்கொள்ள வில்லை. திவ்யா அவளது அன்னைக்கு அழைத்து விசயத்தை சொன்னாள். எந்த பெற்றோர் தான் இதை ஏற்றுகொள்வர், தாங்கள் வரும்வரை காத்திருக்க சொல்ல, இவளுக்கோ இங்கே சூழ்நிலை இப்படி. அவர்களுக்கோ அங்கே டிக்கெட் பிரச்சனை.

“ம்மா கொஞ்ச நாளோ நிறைய நாளோ பழகினது பழகினது தானே.. இதுல யோசிக்க எதுவுமே இல்லை… ”

…..

“ம்மா ப்ளீஸ்.. எனக்காக.. ரவி மட்டும் தனியா ஊருக்கு போனா கண்டிப்பா அவங்க வீட்டில அந்த ப்ரியாக்கு கல்யாணம் பண்ணிடுவாங்க. இது தப்பும்மா. என்னால ரவி இல்லாம ஒருநாள் கூட இருக்க முடியாது. முடிஞ்சா நீங்க நாளைக்கு மறுநாள் வாங்க..” என்றவள் வைத்துவிட்டாள்.

இப்படி பேசுவது தவறு என்று தெரியும். வேறு வழியும் இல்லையே.              

ரவி சென்று அவன் அப்பா அம்மாவை பார்த்துவிட்டு வந்தான். அவர்கள் நிறைய பேசினார்கள். ஊரில் நடந்தது, ப்ரியா பேசியது, அழுதது, அவர்கள் வீட்டினர் வந்து கதறியது என்று நிறைய. ரவி எதற்குமே ஒன்றும் சொல்லவில்லை.

“என்னடா நாங்க பேசிட்டே இருக்கோம்.. நீ அமைதியா இருக்க…”

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லம்மா.. நாளைக்கு மதியம் போல ஊருக்கு கிளம்பலாம். லீவுக்கு சொல்லிட்டேன்.  நாளைக்கு காலைல இதோ இங்க பக்கத்துல இருக்க அம்பாள் கோவிலுக்கு போயிட்டு ஊருக்கு கிளம்பிடுவோம்..”

“கோவிலுக்கு என்ன திடீர்னு..”

“இதுவரைக்கும் நடந்த எதுவுமே சரியில்லப்பா.. இனிமேலாவது நல்லது நடக்கட்டும்னு தான்..”

“ம்ம் அந்த பொண்ணு திவ்யா…”

“அவளுக்கு எப்போவுமே என் முடிவு தான் முக்கியம்..” என்றவன் மேலே எதுவும் பேசாமல் வேலையிருப்பதாய் கூறி கிளம்பிவிட்டான். அங்கிருந்து கிளம்பியவன் திருமணத்திற்கு வேண்டியதை ஏற்பாடு செய்துவிட்டு. நேராய் திவ்யாவை காணத்தான் வந்தான் கையில் ஒரு பையோடு.

“திவ்ஸ்.. இதில சேலை, கொஞ்சம் நகை இருக்கு. இப்போதைக்கு என்னால இவ்வளோ தான் வாங்க முடிஞ்சது..” என்று சொன்னவனை பெருமிதமாய் பார்த்தாள்.

“வேற எதுவும் தேவையா” என்று கேட்டவளிடம்,

“உங்க வீட்ல இருந்து எதுவும் எடுத்திட்டு வராத. அங்கிள் ஆன்ட்டி வந்தப்புறம் பார்த்துப்போம் அதெல்லாம்.. நாளைக்கு சரியா கிளம்பி வந்திடு..” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு கிளம்பினான்.

பொழுது புலர்ந்தால் திருமணம். ஆனால் அதற்கான மகிழ்வோ, உற்சாகமோ இருவரிடமும் இல்லை. மாறாய் அனைத்தும் சரியாய் நடக்குமா, நடந்திட வேண்டுமே என்ற பரிதவிப்பு மட்டுமே.

அதே பரிதவிப்பு மறுநாளும் இருந்தது. மாப்பிள்ளை மணப்பெண் கோலத்தில் நின்றிருந்தாலும், சுற்றி இருவரின் நண்பர்களும், உடன் பணிபுரிவோரும் நின்றிருந்தாலும், ரவியின் விழிகளோ தன்னை பெற்றவர்களை தீர்க்கமாய் பார்க்க, திவ்யா அவனது கரங்களை பற்றி நின்றிருந்தாள்.

“அப்பா நீங்களும் அம்மாவும் வந்து எங்களை ஆசிர்வாதம் பண்ணனும்..” என்று ஆரம்பித்தவனின் பேச்சில் எதுவோ புரிய, அவர்களும் வேகமாய் கோவிலுக்கு  வந்து சேர்ந்தனர்.    

“என்ன ரவி இதெல்லாம்…” என்று வசுந்தரா ஆங்காரமாய் கேட்க,

“எங்களுக்கு வேற வழி தெரியலைம்மா. விரும்பினது நானும் திவ்யாவும். இதில ப்ரியா எங்க வந்தான்னு நிஜமா எங்களுக்கு புரியலை.. இன்னிக்கு இந்த கல்யாணம் நடந்து தான் தீரும்..”

“அப்போ எல்லாரும் சேர்ந்து ஊருக்கு போலாம்னு பெரிய இவன்னாட்டம் பேசின..”

“ஆமாப்பா.. இப்போவும் சொல்றேன். கல்யாணம் முடியட்டும் திவ்யாவையும் கூட்டிட்டு எல்லாம் ஊருக்கு போலாம்..”

“டேய்….” என்று வசுந்தரா ஒரு அடி முன்னெடுத்து வைக்க, ரவியை மறைத்து திவ்யா கை கூப்பி நின்றாள்.

அவள் கண்கள் கலங்கியிருக்க, இதழ்கள் நடுங்க, கூப்பிய கரங்களுடன்,

“ப்ளீஸ்.. ரவி என்னை லவ் பண்ணதை தவிர வேற எந்த தப்பும் செய்யல. ப்ரியா சொல்றது அத்தனையும் பொய்ன்னு இங்க இருக்க எல்லாருக்குமே தெரியும். நீங்க கொஞ்சம் யோசிச்சு பாருங்க அத்தை உங்களுக்குமே புரியும். அந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா அது நீங்களே உங்க மகனை அசிங்க படுத்தினது மாதிரி. எனக்கு ரவி அவமான படுறதை தாங்க முடியாது..” என்றவள் கோவிலில் அனைவரின் முன்னும் மடிந்து அழ தொடங்கி விட்டாள்.

ரவியே அதிர்ந்து பார்க்க, அவனது பெற்றோர்களோ செய்வது அறியாது நின்றிருந்தனர். அவர்களுக்கு சம்மதமோ இல்லையோ, ஆனால் அவர்கள் கண் முன்னே தான் ரவி, திவ்யா திருமணம் நடந்தது. 

மாலையும் கழுத்துமாய் காலில் வந்து விழுந்தவர்களை ஆசீர்வாதம் செய்வதை தவிர வேறெதுவும் செய்யமுடியவில்லை அவர்களால். ஓரளவு இதை ஏற்றுகொண்டார்கள் என்ற திருப்தி ரவிக்கு.

ஆனால் திவ்யாவின் பெற்றோர்களும் வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று தோன்றியது. நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு செல்ல, இவர்களும் கிளம்பும் நேரத்தில் திவ்யாவின் தந்தை அழைத்தார், இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவோம் என்று.அவர்கள் கிளம்புவதை கூட இவளிடம் சொல்லவில்லை என்ற எண்ணம் எழ, நீ மட்டும் அனைத்தையும் சொல்லிவிட்டா செய்கிறாய் அவளது மனசாட்சி இடித்துரைத்தது.

அந்த அரைமணி நேரத்தை கடப்பதற்குள் அவளுக்கு இருப்புகொள்ள வில்லை. அவளது அம்மாவை கண்டதும் வேகமாய் ஓடி சென்று கட்டிக்கொண்டாள். முதலில் கோவமாய் பேசினாலும், அவர்களுக்கு சூழ்நிலை புரிய, ரவியின் பெற்றோர்களும் இருக்க, வேறு வழியே இல்லாமல் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.

ரவிக்கு மனதில் இப்போது தான் நிம்மதி வந்தது. திவ்யா தன் மனதில் இருக்கும் மகிழ்வாய் தெரிவுக்கும் விதமாய் ரவியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டாள்.

“ஷ்… ஏய் திவ்ஸ்… என்ன பண்ற.. ஏன் டி இப்போ கைய இவ்வளோ டைட்டா பிடிச்ச…” என்று கையை உதறிக்கொண்டே கேட்டவனை பார்த்து திரு திருவென முழித்தாள் திவ்யா.

“என்ன டி தூங்கிட்டு இருக்கிறவன் கைய ஏன் இப்படி பிடிச்ச….”

“ஹா..!! அதுவா.. நம்ம கல்யாணம் பத்தி நினைச்சேனா..” என்றவள் அவன் கரங்கள் பற்றி லேசாய் இதழ் பதிக்க,

“ஆமா டி தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி கைல கிஸ் பண்ணு…” என்றவன், அவளது இதழில் இதழ் பதிக்க, அவளுமே அவனுக்கு இழைந்து தான் கொடுத்தாள்.

                காதல் மான ரோசம் பார்ப்பதில்லை..   

 

 

 

 

 

 

Advertisement