மங்களத்தின் மகனும் முத்துவாப்பாவும்_3

மறு நாள் காலை வேளையில் கோவிலிருந்து வில்வாஷ்டகம் ஒலிக்க, எப்போதும் போல் கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டு கொண்டு எழுந்தார் மங்களம். இன்று அவரருகேத் தூங்காமல் கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் வாசுதேவன்.

“ஏன்னா..எப்ப முழிச்சிண்டேள்?”

“தூக்கம் வரலைடி மங்களம்.” என்றார் வாசுதேவன்.

“ஏன்னா..உடம்புக்கு ஒண்ணுமில்லையோனோ?”

“மனசு சரியில்லடி.”

“என்னன்னா ஆச்சு திடீர்னு?”

“சமித்த நினைச்சாக் கவலையா இருக்குடீ…இந்த தரம் மாப்பிள்ளை, அர்ச்சனாகிட்ட சொல்லிடூ அவாதான் அவனைப் பார்த்துக்கனும்னு.” என்றார் வாசுதேவன்.

“என்னன்னா காலங்கார்த்தால என்னென்னமோ பேசறேள்.”

“இல்ல..நேக்கு இங்க வந்ததுலேர்ந்து இதே நினைப்பாதான் இருக்கு…அவனும் மனசுல இருக்கறத சொல்லமாட்டன்..நாமதான் அவனுக்கும் சேர்த்து யோஜிக்கணும்டி.” என்றார் வாசுதேவன்.

வாசுதேவன் படுக்கையிலிருந்தபடிக் கோவில் கோபுரத்தைப் பார்த்து கொண்டிருந்தார், மனதிற்குள் சமித்துக்காக இறைவனிடம் கையேந்திக் கொண்டிருந்தார்.  அவர்கள் பேச்சைக் கேட்டபடி அறைக்குள் நுழைந்த சமித்,

“காலங்கார்த்தால ஏன் அம்மாவ அப்ஸெட் பண்றேள்..இன்னிக்கு காபி கோவிந்தா.” என்றான்.

“நான் அவள ஒண்ணுமே சொல்லலைடா..ஏதோ இன்னிக்கு விடிகாலம்பறேயே முழிப்பு வந்துடுத்து அதனால தூங்கமா முழிச்சிண்டிருந்தேன்..என்ன ஏதுன்னு கேட்டா..உன்னைப் பத்தி நினைச்சிண்டுயிருந்தேன்னு சொன்னேண்டா.” என்றார் வாசுதேவன்.

“ஆயிரம் தடவை சொல்லியாச்சு கவலைய விடுங்கோன்னு..ஏன் சொன்னப் பேச்சேக் கேட்கமாட்டேங்கறேள்..நீங்க ஏதாவது பேசி அம்மா மனச மாத்திடாதீங்கோ..அம்மாவ அர்ச்சனா ரொம்ப எதிர்ப்பார்த்திண்டிருக்கா.” என்றான் சமித்.

“நான் இனிமே வாயேத் திறக்கல..காபி வேணும் நேக்கு.” என்றார் வாசுதேவன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்களுக்கானக் காபியுடன் திரும்பி வந்தான் சமித்.

“நீங்க இரண்டு பேரும் காபிக் குடிச்சிண்டு இருங்கோ..நோ டாக்கிங் நான் ஜாக்கிங் பண்ணிட்டு வரவரைக்கும்.” என்று இருவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் சமித்.

சமித் அங்கிருந்து சென்றதும் வாசுதேவனும், மங்களமும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

ஜாக்கிங் முடித்து வந்த சமித் உடனேக் குளிக்கச் சென்றான். அவன் ரூமிலிருந்து வெளியே வந்துபோது வேஷ்டி, சட்டை அணிந்திருந்தான்.

கிட்சனில் டிபன் செய்து கொண்டிருந்த மங்களத்தைப் பார்த்து, “அம்மா, நான் கோவில் வரைக்கும் போயிட்டு வந்து டிபன் சாப்பிடறேன்.” என்றான் சமித்.

“ஏண்டா, காபிக்கூட இன்னும் குடிக்கலையே..அதையாவது குடிச்சிட்டுப் போ.” என்றார் மங்களம்.

“இல்லமா..சுப்பிரமணி சன்னிதியச் சாத்தறத்துக்கு முன்னாடிப் போயி பார்க்கணும்..சமையலுக்கு ஆள் தேடி தரச் சொல்லணும்.” என்று சொல்லி கொண்டே மங்களத்தின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான் சமித்.

பாடல்பெற்ற ஸ்தலம் அந்த சிவன் கோவில்.  இன்று சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியில் வீடுகளுக்கு நடுவே மறைந்துக் கிடந்தது.

சமித் கோவிலுள் நுழையும்போது, சுப்பிரமணி சன்னதி சாத்துவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தான்..சமித்தைப் பார்த்தவுடன்,

“வாங்கோ வக்கீல் ஸர், நானே உங்களப் பார்க்க வரணும்னு நினைச்சிண்டு இருந்தேன்..பிள்ளையாரே உங்கள இன்னிக்கு இங்க வரவழைச்சுட்டார்.” என்றான்.

“தம்பி நினைக்கறத அண்ணன் நிறைவேத்திட்டர்.” என்றான் சமித்.

“போங்கோ ஸர்..வக்கீல்னு நிரூபிக்கறேள்..பெயரலதான் அண்ணா தம்பி, அவர் பகவான்..நான் அவருக்கு சேவை செய்யறப் பிராமணன்.” என்றான் சுப்பிரமணி.

சமித் அதற்குமேல் பேசாமல் வினாயகர் சன்னதியில் கண் மூடி நின்று “கஜானனம் பூதகனாதி சேவிதம்” சொல்லி, ஒன்பது முறைத் தோப்புக்கரணம் போட்டு..பிள்ளையாருக்கு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தான். சமித் வேண்டி முடிக்கும் வரை காத்திருந்த சுப்பிரமணி,

“சொல்லுங்கோ ஸர்.” என்றான்.

“அம்மா கொஞ்ச நாளைக்கு என் அக்காக்கு ஒத்தாசைக்காகப் பெங்களூர் போறா அதனால நேக்கும், அப்பாக்கும் சமைச்சு போட ஆள் தேவையாயிருக்கு..யாராவது தெரிஞ்சவா இருந்தா சொல்றேளா?” என்று கேட்டான் சமித்.

“மாமி எத்தனை நாளைக்கு போறா?” என்று கேட்டான் சுப்பிரமணி.

“ஒரு மாசத்துக்கு.” என்றான் சமித்.

“நான் விசாரிச்சு சொல்றேன்..கோவில் நைவேத்தியத்துக்கு ஒரு மாமி மடியா சமைச்சுத் தருவா..அவாகிட்ட கேட்கறேன்.” என்றான் சுப்பிரமணி.

“சுருக்க யாராவது கிடைச்சா நல்லது..அம்மா என்னிக்கு வேணும்னாலும் கெளம்பிடுவா..அக்கா டிக்கெட் புக் பண்றதுக்குதான் காத்திண்டிருக்கோம்.” என்றான் சமித்.

“இந்த மாமி எங்காத்துப் பக்கத்துலதான் இருக்கா..இன்னிக்கு சாயந்திரம் இல்ல நாளைக்கு காலம்பற உங்காத்துக்கு ஆள் வருவா..கவலைய விடுங்கோ.” என்றான் சுப்பிரமணி.

“நீங்க எதுக்கு என்னை மீட் பண்ணனும்னு நினைச்சேள்?” என்று கேட்டான் சமித்.

“கோவில்ல மஹாருத்ர யக்ஞம் நடத்தப் போறா..நீங்களும், மாமாவும் வந்து கலந்துண்டேள்னா நன்னாயிருக்கும்..அப்படியே உங்களால முடிஞ்சுது கோவிலுக்குன்னு கொடுக்கலாம்.” என்றான் சுப்பிரமணி.

“ருத்ர ஜபத்துக்கு நானும், அப்பாவும் வந்துடறோம்..அப்பாவல நிறைய நாழி உட்கார முடியாது..ஏகாதஷாக்கு இருந்துட்டுக் கிளம்பிடுவோம்..கோவிலுக்குச் செய்ய வேண்டியது பத்தி அப்பாக்கிட்ட கேட்கணும்..கீதா கிட்டச் சொல்றேனே.” என்றான் சமித்.

“தாராளமா வந்து கலந்துக்கோங்கோ..எவ்வளவு பேர் ஜபிக்கறாளோ அவ்வளவு குளிர்ந்து போவர் சர்வேஸ்வரர்..எல்லாம் லோக ஷேமத்துக்காகப் பண்றது. மாமாகிட்டப் பேசிட்டூ மெதுவா சொல்லிவிடுங்கோ கீதாகிட்ட. ” என்றான் சுப்பிரமணி.

“சரி..நான் கிளம்பறேன்..உங்களுக்கும் ஆபிஸ் போகணுமே.” என்று விடைப்பெற்றுக் கொண்டான் சமித்.

சமித் வீடு வந்து சேர, அவனுக்காக டிபன் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தார் வாசுதேவன்.

“ஏன்பா வெயிட் பண்றேள்? நீங்க சாப்பிட வேண்டியதுதானே.” என்றான்.

“இன்னிக்கு நோக்கும் லேட்டாயிடுத்து அதனால சேர்ந்தேச் சாப்பிடலாம்னு நினைச்சேன்.” என்றார் வாசுதேவன்.

“டேய் சமித்..இது நன்னாயில்லடா..காலம்பறலேர்ந்து ஒண்ணும் சாப்டாம அவசரமாப் போயி விஜாரிக்கணுமா?”

“அர்ச்சு டிக்கெட் புக் பண்ணிட்டான்னா நீ கிளம்பியாகணுமே..அப்ப நீ சமைக்க ஆளில்லைன்னு கிளம்பாம அழிச்சாட்டியம் பண்ணினேன்னா உன் பொண்ணு என்னை சும்மாவிட மாட்டா.” என்றான் சமித்.

“சுப்பிரமணி என்ன சொன்னாண்டா?” என்று கேட்டார் வாசுதேவன்.

“அவருக்குத் தெரிஞ்ச மாமி இருக்காளாம்..கோவில் நைவேத்தியத்துக்கு மடியா செய்யறவாளாம்..அவாகிட்டப் பேசறேன்னு சொன்னர்.” என்றான் சமித்.

“நேக்கு மடிசார் மாமிலாம் சரிப்படாதுடா..ஆர்டனரி மாமியாப் பார்க்கச் சொல்லு.” என்றார் மங்களம்.

“அம்மா, அதுக்குள்ள ஆரம்பிக்காதீங்கோ..முதல்ல மாமி வரட்டும்..நமக்கு சரிபட்டாதான் வெச்சுப்போம்.” என்றான் சமித்.

“அப்பா, நீங்க கிளம்புங்கோ..மணி கீழ காத்திண்டிருக்கர்..கீதா வேற வெயிட் பண்ணிண்டு இருப்பா..நான் வேஷ்டிச் சட்டைய மாத்திண்டு என் பைக்ல உங்க பின்னாடியே வந்துடறேன்.” என்றான் சமித்.

வாசுதேவன் கிளம்பியவுடன் அவரை லிஃப்டில் கீழ் தளம் வரை அழைத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தான் சமித். அவன் கிளம்பும் போது மங்களம் அவனைப் பார்த்து,” சாயந்திரம் சமைலுக்கு ஆள் வந்தா எப்படிடா.. நீ ஆத்துல இருக்க வேண்டாமா? நீ வாப்பாவ வேற பார்க்கப் போகணுமேடா இன்னிக்கு.” என்றார்.

“கரீம் அண்ணாக்கு போன் பேசறேன்..அவன்கிட்டச் சொல்லிடறேன் நாளைக்கு வரேன்னு.” என்றான் சமித்.

“வேண்டாண்டா..வாப்பா உன்னை எதிர்ப்பார்திண்டு இருப்பர்…நீ போயிட்டு வா..நானும், அப்பாவும் பார்த்துக்கறோம்..எத்தனை சம்பளம் பேசியிருக்க?” என்று கேட்டார்.

“அதெல்லாம் பேசலமா..அவாதான் சொல்லணும்..இங்க எவ்வளவு ரேட்டுன்னு நேக்குத் தெரியாது.” என்றான் சமித்.

“நாம மும்பைல பத்தாயிரம் கொடுத்திண்டு இருந்தோம்..அங்க மாமி ஒரு வேளை வந்து மூனு வேளைக்கும் சேர்த்து சமைச்சு வெச்சிடுவா….நான் பார்த்துக்கறேன்..நீ மறக்காம சாயங்காலமா வாப்பா ஆத்துக்குப் போயிடு.” என்று மறுபடியும் சொன்னர் மங்களம்.

“சரி நீயே மனேஜ் பண்ணிக்கோ.. நான் இன்னிக்கு முத்துவாப்பாவப் பார்க்கப் போறேன்.” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான் சமித்.

சந்தியாகால வேளையில் வாசல் கதவைத் திறந்து வைத்து விளக்கேற்றி கொண்டிருந்தார் மங்களம். அழைப்பு மணி ஒலி கேட்க, கையில் தீப்பெட்டியுடன் வாசலுக்குச் சென்றார்.

கிரில் கேட்டுக்கு வெளியே ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.

“யார் வேணும்மா?” என்று கேட்டார் மங்களம்

“வக்கீல் ஸர் ஆமா மாமி?” என்று கேட்டாள்.

“என் புள்ளைதான்.” என்றார் மங்களம்

“சுப்பிரமணி அனுப்பிச்சான்..சமைக்க ஆள் வேணும்னு சொன்னேளாமே.” என்றாள் அந்த இளம் பெண்.

“ஆமாம்..அவன்கிட்ட சொல்லி வைச்சிருந்தது..கொஞ்சம் வெயிட் பண்ணு.” என்றார் மங்களம்.

“நான் இங்க வெளிய வெயிட் பண்றேன் மாமி..நீங்க விளக்கேத்திட்டூ வாங்கோ.” என்றாள் அந்த இளம் பெண்.

மங்களம் உடனேயே கேட்டைத் திறந்து..”உள்ள வந்து உட்காரு..வந்துடறேன்.” என்று அவளைச் சோபாவில் உட்காரவைத்துவிட்டு சென்றார்.

மங்களம் விளக்கேற்றியவுடன் விபூதியுடன் வாசுதேவன் அறைக்குச் சென்று வந்தார்.  பின் ஹாலில் அமர்ந்திருந்த அந்த இளம் பெண்ணுக்கு குங்குமச் சிமிழை நீட்டினார், ”குங்குமம் எடுத்துக்கோ..இப்பதான் விளக்கேத்தினேன்.” என்றார்.

அந்தப் பெண் எழுந்து நின்று லேசாகக் குங்குமத்தை எடுத்து நெத்தியில் இட்டுக்கொண்டாள். மங்களம் அவளைப் பார்த்து,”உட்காரு..வரேன்.” என்று சொல்லி குங்குமச்சிமிழுடன் உள்ளே சென்றார்.  ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்த மங்களம் அவளெதிரே உட்கார்ந்து கொண்டார். 

“சொல்லு மா.” என்றார்.

“சுப்பிரமணி ஆத்து பக்கத்தில இருக்கோம் மாமி..எங்கம்மாதான் கோவில் நைவேத்தியத்துக்குப் பண்ணிக் கொடுப்பா..யார் ஆத்துக்கும் போயி சமைச்சதில்ல…வேணும்னா எங்காத்துலப் பண்ணி இங்க கொண்டு வந்து தரோம்.” என்றாள் அப்பெண்.

மங்களம் எதிரில் இருந்த பெண்ணை ஆராய்ந்தார்.  இருபத்தைந்து வயதுக்குள் இருந்தாள். தலையை எண்ணெய் போட்டு வாரி, இறுக்க ஒற்றைப் பின்னல் பின்னியிருந்தாள். கைகளில் பிளாஸ்டிக் வளையல்களும், காதுகளில் சின்னதாகத் தங்க தோடுகளும் அணிந்திருந்தாள். இயல்பாகவே சிரித்த முகமாகத் தெரிந்தாள். மஞ்சள் நிறத்தில் சூடிதார், துப்பட்டா அணிந்து, மா நிறத்தில், சராசரி உயரத்துடன், சற்றே சதைப்பிடப்பானத் தோற்றத்தில் சாதாரணமாகத் தெரிந்தாள்.

“நான் ஒரு மாசத்துக்கு என் பொண்ணாத்துக்குப் போறேன்..அப்ப எங்காத்து மாமாக்கும், என் புள்ளைக்கும் சமைக்கறத்துக்குதான் ஆள் தேடிண்டு இருக்கேன்..எங்காத்துக்கு வந்து சமைச்சிட்டுப் போணும்..உங்காத்திலேர்ந்து சமைச்சு கொண்டு வரறது சரிப்படாது.” என்றார் மங்களம்.

“எங்கம்மாக்கு வர முடியாது மாமி..உட்கார்ந்த இடத்துலேயேச் சமைப்பா..நாலு பேர் ஆத்துக்குப் போயி பழக்கம் கிடையாது.” என்றாள் அப்பெண்.

“உங்க ஆத்துல எத்தனை பேர்? நீ என்னப் பண்ற? படிச்சிண்டு இருக்கியா?” என்று விசாரித்தார் மங்களம்.

“ஆத்துல நானும், அம்மாவும்தான் மாமி..நேக்கு அப்பா இல்ல…ஒரு அண்ணா இருக்கான்..அவன் பாங்க்ல வேலை பார்க்கறான்..மன்னியும் வேலை பார்க்கறா..அவனும், மன்னியும் தனியா சிடில இருக்கா..அவா இரண்டு பேரும் வேலைப் பார்க்கறதுனால அங்க இருக்கறது அவனுக்குச் சௌகரியமா இருக்கு….எங்கண்ணா எங்கள அவனோட இருக்கக் கூப்பிடறான் ஆனா இது பழக்கமான இடம்னு நானும், அம்மாவும் இங்கையே இருந்திண்டிருக்கோம்..

எங்கப்பா இங்க பக்கத்தில ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருந்தா…அப்ப இங்க இவ்வளவு மனுஷா, வீடெல்லாமில்ல..இப்ப எல்லாவிதமான மனுஷாலும் இங்க வீடு கட்டிண்டு வந்துட்டா.”

“நான் msc maths கரஸ்லப் படிக்கறேன்..இரண்டு பேப்பர் பாக்கி இருக்கு….இந்த தடவை ஒரு பேப்பராவது முடிக்கணும்..சாயந்திரம் ஸ்கூல் குழந்தேல்க்கு எங்காத்துல maths tuition சொல்லிக் கொடுக்கறேன்.” என்று குடும்பச் சரித்திரத்தை சொன்னாள் அவ்விளம்பெண்.

“நீ எங்கையும் வேலைக்குப் போகலையா?”

“இல்ல மாமி..நானும் எங்கப்பாப் போல டீச்சர் வேலைக்குதான் போகணும்னு நினைச்சிண்டு இருக்கேன்..அதுக்கு பி.எட் படிக்கணும்..அப்பறம் பிரைவெட் ஸ்கூல்ல டெபாஸிட்க் கட்டினாதான் வேலைக்குச் சேர்த்துப்பா..எங்கண்ணா இந்த வருஷம் ஏதாவது ஏற்பாடு பண்றேன்னு சொல்லியிருக்கான்.” என்று பதில்லளித்தாள்.

“மங்களம், யாரோடப் பேசிண்டிருக்க?” என்று உள்ளேயிருந்து குரல் கொடுத்தார் வாசுதேவன்.

“இதோ வரேன்னா.” என்று பதில் குரல் கொடுத்தார் மங்களம். பின் அந்தப் பெண்ணைப் பார்த்து, “நீ கிளம்புமா..ஆத்துக்கு வந்து சமைக்கறவாத் தெரிஞ்சா சொல்லு.” என்றார்.

“சரி மாமி..வரேன்.” என்று சொல்லிக் கொண்டுப் புறப்பட்டாள் அப்பெண்.

“உன் பெயரேச் சொல்லலையே.” என்றார் மங்களம்.

“விசாலாக்ஷி, மாமி.” என்றாள்.

விசாலாக்ஷி சென்றவுடன் வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு வந்தார் மங்களம்.

மங்களம் படுக்கையறையில் நுழைந்தவுடன், “யாரு மங்களம்?” என்று விசாரித்தார் வாசுதேவன்.

“சமையலுக்கு ஆள் வேணும்னு சொன்னோமோல்யோ..சின்னப் பொண்ணு ஒருத்திய சுப்பிரமணி அனுப்பிச்சிருந்தான்..அவா அம்மா நம்மாத்துக்கு வரமாட்டாளாம்..அவா ஆத்துலையே சமையல் பண்ணியக் கொண்டு வந்து கொடுக்கட்டான்னு கேட்டா..அது சரிப்படாதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்.” என்றான் மங்களம்.

“ரொம்ப சின்னப் பொண்ணா? கீதாவாட்டமா?” என்று கேட்டார் வாசுதேவன்.

“இல்லன்னா..இருபத்தி நாலு இல்ல இருப்பத்தி அஞ்சு வயசிருக்கும்..msc கரஸ்லப் படிக்கறாளாம்..இரண்டு பேப்பர் அரியர்ஸ்..அவா அப்பாவாட்டம் டீச்சர் வேலைக்குப் போகணும்னு நினைக்கறா..இப்போதைக்கு ஆத்துலையே குழந்தைல்க்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கறாளாம்..அவ அண்ணா, மன்னி சிடில இருக்காளாம்..ரெண்டு பேரும் வேலைக்குப் போறவாளாம்..அப்பா இல்ல..பழக்கப்பட்ட இடம்னு அம்மாவும், பொண்ணும் இங்கத் தனியா இருக்கா.” என்றார் மங்களம்.

“ஸ்கூல் வாத்தியாரா இருந்தரா அவ அப்பா?”

“ஹம்..என்னாட்டாம்.” என்றார் மங்களம்

“வேற யாராவது வருவா..வெயிட் பண்ணலாம்.” என்றார் வாசுதேவன்.

அன்று இரவு வீடு திரும்பிய சமித்திடம்,”இன்னிக்கு அந்த மாமியோடப் பொண்ணு வந்திருந்தாடா..மாமிக்கு நம்மாத்துக்கு வந்து சமைக்க முடியாதாம்..அவாத்துலேர்ந்து சமைச்சுக் கொடுப்பாளாம்..நான் சரிப்படாதுனுட்டேன்.” என்றார் மங்களம்.

“உன் இஷ்டம்மா.” என்றான் சமித்.

“வாப்பா ஆத்துல எல்லாரும் சௌக்கியமா இருக்காளாடா?”

“எல்லாரும் நன்னா இருக்கா..கரீம் அண்ணா வெளியே போயிருந்தான்..மதனி, குழந்தேள் ஆத்துல இருந்தா..குழந்தேள் எல்லாரும் பாடம் படிச்சிண்டிருந்தா..முத்துவாப்பா எப்பவும் போல இருந்தா..கொஞ்சம் நாழிப் பேசிண்டு இருந்தேன்..பாத் ரூமுக்கு உதவிப் பண்ணினேன்.” என்றான் சமித்.

“குழந்தேள்க்கு ஏதாவது சாப்பிட வாங்கிண்டு போனியாடா?”

“பிஸ்கெட், சாக்லெட்தான்..அவாள ஒரு நாள் வெளில அழைச்சிண்டு போறேன்னு சொல்லியிருக்கேன்.” என்றான் சமித்.

“ஏண்டா..வாப்பாவப் பார்த்துக்கற ஆள் எங்க போனன்?”

“காலம்பற இருந்திருக்கான்..சாயந்திர வெளில வேலையாப் போயிருக்கான் போன இடத்துல டிராஃபிக்ல மாட்டினுட்டான்..நான் கிளம்பறத்துக்குச் சித்த நாழி முன்னாடிதான் திரும்பி வந்தான்..நல்ல வேளை நான் இன்னிக்கு அங்கப் போனேன் இல்லட்டா சையது உதவியோடதான் பாத் ரூம் போயிருப்பா முத்துவாப்பா.” என்றான் சமித்.

“சையதுக்கே பன்னெண்டு வயசுதான்..அவனால முடியுமா?” என்று மங்களம் கேட்க

“மத்த இரண்டு பேரும் பொண் குழந்தேள்..ஒருத்தி சையதவிடச் சின்னவ…இன்னொருத்தி அவனவிடப் பெரியவ..அதான் நான் அவாளோட இருந்திட்டூ அவன் திரும்பி வந்த அப்பறம் புறப்பட்டு வந்தேன்.” என்றான் சமித்

“படுக்கைல விழுந்துட்டா சமாளிக்கறது கஷ்டம்தான்..வாப்பாக்கு போறாதக் காலம்..கீழ விழுந்தது ஒரு வருஷமாப் படுத்தறது..பகவான் விட்டவழி..இன்ஷா அல்லாஹ்.” என்றார் மங்களம்.

“கரீம் அண்ணா என்ன பண்ணுவான்..முத்துவாப்பா ஆபரேஷன் பண்ணிக்க மாட்டேன்னுட்டார்..ஊலேர்ந்து உதவி செய்யறதுக்கு ஆள் அழைச்சிண்டு வந்து வெச்சிருக்கான்..நாமளும் இங்க பக்கத்தில இருக்கறதுனாலக் கொஞ்சம் கவலையில்லாம இருக்கான்.” என்றான் சமித்.

“வாப்பாவ நம்மாத்துக்கு அழைச்சிண்டு வரணும்டா..நானும் அவருக்கு என்னால முடிஞ்சதச் செய்யறேன்..பெங்களூர் போயிட்டு வந்தவுடன நம்மகூட ஒரு பத்து நாள் இருக்கட்டும்.” என்றார் மங்களம்.

“இங்க வந்ததுலேர்ந்து நம்மாத்துக்கு கூப்டிண்டுதான் இருக்கேன்..அவா ஆத்தவிட்டு கிளம்ப மாட்டேங்கறார்.” என்றான் சமித்.

“இல்லடா..நானும், அப்பாவும் ஒருதரம் அவா ஆத்துக்குப் போயிக் கூப்பிடறோம் எங்ககிட்ட மாட்டேன்னு சொல்லமாட்டர்.” என்றார் மங்களம்.