Advertisement

அத்தியாயம் – 5

 

 

“என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது என்றார் ஈஸ்வரி.

 

 

“நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன் என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.

 

 

“ஈஸ்வரி கொஞ்சம் இரு

 

 

“இப்படி தான் எப்போ பார்த்தாலும் என் வாயை அடைக்கறீங்க. சின்ன வயசுல இருந்து பிடிவாதம் பிடிச்சு பிடிச்சு அவ நினைச்சதை சாதிச்சே பழகிட்டா, எல்லாத்துக்கும் நீங்க கொடுத்த இடம் தான் காரணம்

 

 

“பேசாம நாளைக்கே எங்கண்ணனை வரச்சொல்லி பரிசம் போடுவோம். ஒரு வாரம் பத்து நாள்லயோ கல்யாணத்தை முடிச்சு அனுப்பிருவோம். இப்போவாச்சும் நான் சொல்றதை நீங்க கேளுங்க என்று கணவரிடம் பாய்ந்தார் ஈஸ்வரி.

 

 

“அம்மா என்னால யாரையும் கட்டிக்க முடியாது. எனக்குபிடிச்சவரை உங்களுக்கு பிடிக்கலன்னா எனக்கு கல்யாணமே வேணாம். இப்போ மட்டுமல்ல எப்பவும் வேணாம்”

 

 

“சரி இன்னும் வேற என்ன எல்லாம் முடிவெடுத்து இருக்கீங்க??” என்றார் சொக்கலிங்கம் ஒரு அமைதியான பார்வையுடன்.

 

 

“உங்களை மீறி நான் எதையும் செய்ய விரும்பலைப்பா. உங்களுக்கு பிடிக்கலைன்னா இந்த கல்யாணம் வேண்டாம். ஆனா அதுக்காக எல்லாம் நீங்க வேற யாரையாச்சும் கூட்டிட்டு வந்து காமிச்சு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா அது என்னால முடியாது” என்றவளின் குரலில் தெரிந்த உறுதி அவள் சொன்னதை செய்வாள் என்பதாய் இருந்ததை கண்டு சற்று அசந்து தான் போனார் சொக்கலிங்கம்.

 

“உன்னையலாம் மெத்த படிக்க வைச்சாகல அந்த திமிருதேன் உன்னைய பேச வைக்குது. உங்கக்காவை மாதிரி உன்னையும் அப்போமே ஒரு பையனை பார்த்து கட்டி வைச்சிருந்தா இன்னைக்கு இப்படி வந்து பேசுவியா??” என்றஅழ ஆரம்பித்துவிட்டார்.

 

 

“அம்மா இப்போ எதுக்கு அழறீங்க. நீங்க அழற அளவுக்கு ஒண்ணும் நான்எந்ததப்பும் பண்ணிடலை. உங்களை மீறி எதையும் நான் செய்ய மாட்டேன்”

 

 

“அப்போ என் அண்ணன் மவனை நீ கட்டிக்கோ” என்று கிடிக்கிப்பிடி போட்டார் அவர் அழுகையுனூடே.

 

 

“அம்மா உங்களை மீறி போக மாட்டேன்னு தான் சொன்னேன். அதுக்காக உங்க விருப்பப்படி உன்னோருத்தரை கட்டிக்க எல்லாம் என்னால சம்மதிக்க முடியாது”

 

 

“நீ கல்யாணம் கட்டிக்காம இருக்க வா உன்னை பெத்தோம். உன்னை ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்தா தானே எங்களுக்கு நிம்மதி ஏன்டி இப்படி எங்களை வதைக்குற”

 

 

“ஊருக்கு தெரிஞ்சா என்னாகும். நம்ம சாதி சனமெல்லாம் காரி துப்பாது இதெல்லாம் கேட்டா” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

 

 

“அம்மா அந்த சாதி சனம் தான் என் கூட வந்து இருக்க போறாங்களா என்ன?? நான் ஒண்ணு கேட்கறேன் அதுக்கு பதில் சொல்லுங்க” என்றவளைஎன்ன சொல்லப் போகிறாள் என்று சொக்கலிங்கமும் ஈஸ்வரியும் பார்த்தனர்.

 

 

“எதுக்காகம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறீங்க??”

 

 

“எதுக்குடி பண்ணி வைப்பாங்க நீ நல்லா இருக்கணும்ன்னு தானே, நீ சந்தோசமா இருக்க தானே நாங்க உனக்கு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறோம்”

 

 

“எனக்கு பிடிச்ச மாதிரி தானேம்மா மாப்பிள்ளை பார்ப்பீங்க??” என்று அடுத்த கேள்வி கேட்டாள்.

 

 

“ஏம்மா உனக்கு என் அண்ணன் மவனை பிடிக்கலையா?? வேற மாப்பிள்ளை உங்கப்பாவை பார்க்க சொல்லவா” என்றார் அன்னை கரிசனமாக.

 

 

“எனக்கு பிடிச்சவர் தான்ம்மா எனக்கு வேணும். அவரை எனக்கு கட்டி வைப்பீங்களா. நான் சந்தோசமா இருக்கணும் நல்லா இருக்கணும்ன்னு நீங்க நினைச்சாஎனக்கு பிடிச்சவரை கட்டி வைங்க”

 

 

“இல்லை சாதி சனம்என்ன சொல்லுவாங்க. ஊர்க்காரங்கஎன்ன சொல்லுவாங்கன்னு நினைச்சா தயவு செஞ்சு என்னை என் போக்குல விட்டுடுங்க” என்றாள்.

 

 

அதுவரையிலும் தாயையும் மகளையும் பேசவிட்டு பொறுமையாய் வேடிக்கை பார்த்திருந்த சொக்கலிங்கம் வாயை திறந்தார். “நீ ஊருக்கு கிளம்ப முன்ன அவங்களை இங்க வந்திட்டு போக சொல்லும்மா” என்றார் சலனமேயில்லாமல்.

 

 

அவளுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.பிரமிப்பாய் திரும்பி அவரை பார்த்தாள் ஆனால் அவர் முகத்திலிருந்து எதையும் எப்போதும் போல் அவளால் கண்டு கொள்ள முடியவில்லை.

 

 

“நீங்க என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா?? இப்படியே அவ இஷ்டத்துக்கு நாம ஆடிக்கிட்டே இருந்தா நாளைக்கு பெரியவ கண்ணை கசக்கிட்டு வந்து நிக்குற மாதிரிதேன் இவளும் நிப்பா” என்று மூக்கை உறிஞ்சினார் ஈஸ்வரி.

 

 

“ஈஸ்வரி என்ன பேசறேன்னு புரிஞ்சு தான் பேசறியா?? பெரியவளுக்குநாம தான் கல்யாணம் பண்ணி வைச்சோம்”

 

 

“அதனால தான் நாம இப்பவும் அவளுக்கு துணையா இருக்கும். இவளுக்கு நாம அப்படி இருக்க முடியுமா. அவங்க யாரோ எப்படியோ நமக்கு என்ன தெரியும்”

“அம்மா போதும் நிறுத்துங்க. நானும் அக்கா மாதிரியே கஷ்டப்படுவேன் அப்படிங்கறது தான் உங்க எண்ணமாம்மா. நான் கஷ்டப்படணும்ன்னு தான் நீங்க விரும்பறீங்களா??”

 

 

“அப்படி நீ கஷ்டப்பட்டா யாருடி வந்து பார்ப்பா நாங்க தானே” என்று சீறினார் அவர் கோபத்தில்.

 

 

“ஈஸ்வரி போதும் நிறுத்து. நம்ம பிள்ளைங்க சந்தோசம் தான் நமக்கு முக்கியம் பெத்தவ நீயே உன் வாயால எதுவும் சொல்லாத. மித்ராம்மா நீ உள்ள போ. அவங்களை இன்னும் ரெண்டு நாளுக்குள்ள வரச்சொல்லு” என்றார்.

 

 

“கடைசியா ஒண்ணும்மா, நான் கஷ்டப்பட மாட்டேன். அப்படியேநான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இங்க வந்து எந்த காலத்திலும் நிக்கவே மாட்டேன்ம்மா. அவர் அப்படி என்னை நிக்கவும் விட்டிற மாட்டார்” என்று உறுதியாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

 

 

அவள் அறைக்கு சென்றதும் தான் தனக்கு எப்படி அவனிடம் இவ்வளவு உறுதி வந்தது என்ற கேள்வி பிறந்தது அவளுக்கு. தனக்கு அவனை அந்த அளவுக்கு பிடித்திருக்கிறதா அதனால் தான் இவ்வளவு தூரம் அவனுக்காய் பேசுகிறோமா என்று அவளை நினைத்து அவளேஆச்சரியம் கொண்டாள்.

 

 

தன் யோசனையில் தந்தை சொன்னதை மறக்கக்கூடாது என்றெண்ணியவள் உடனே சைதன்யனுக்கு அழைத்தாள். அவள் அழைப்பை கண்டதும் இரண்டு ரிங்கிலேயே போனை எடுத்தவன் “ஹலோ” என்றான்.

 

 

அவன் குரலை ஒரு கணம் ஆழ்ந்து கண்களை மூடி கேட்டவள் “நான் மித்ரா பேசறேன்”

 

 

“சொல்லுங்க… சாரி சொல்லு மித்ரா” என்றான்.

 

 

“அப்பா உங்களை நேர்ல வந்து பேச சொன்னாங்க” என்றவள் சற்றுமுன் நடந்தவைகளை அவனிடம் கூற அப்புறம் சிறு மூச்சு சத்தம் கூட கேட்காதவாறு வெகு அமைதியாய் இருந்தான் அவன். ஹ்ம்ம் என்ற முனகல் கூட அவனிடத்தில் இல்லை.

 

 

“ஹலோ இருக்கீங்களா??” என்றாள்.

 

 

“ஹ்ம்ம் இருக்கேன் மித்ரா”

 

 

“நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்க” என்றாள்.

 

 

“என்னோட சுயநலத்துக்காக உங்களை அதிகமா பொய் பேச வைச்சுட்டோமோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு” என்றான்.

 

 

அவன் என்ன பேசுகிறான் என்று புரியாதவளாய் “என்ன பொய்??” என்று கேட்டு வைத்தாள் அவள்.

 

 

“என்னை விட்டா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு உங்க வீட்டில பேசி இருக்கீங்களே. அதுக்கு நான் உங்களுக்கு கொடுத்த நெருக்கடி தானே காரணம்” என்றான் அவன்.

 

 

‘அய்யோ நான் உண்மையை தானே சொன்னேன். ஒரு வேளை இவன் என்னிடம் அப்படி கேட்காவிட்டால் நான் என்ன செய்திருப்பேன்’ என்று நினைக்க நினைக்க நெஞ்சில் பாரம் ஏற ஆரம்பித்தது.

 

 

“ஹலோ மித்ரா இருக்கியா??” என்று அவன் கேட்கவும் “இல்லை… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. நான்பொ…” என்று பாதியிலேயே நிறுத்தியவள் “நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம்”

 

 

“உங்களுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் வேண்டாம். நடக்கறது எல்லாம் நன்மைக்கே. இது தான் விதியா இருந்திருக்கு அது தானா நடக்குது. நான் எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்னு எங்க வீட்டில இருக்கவங்களுக்கு தெரியும்” என்று ஏதேதோ சமாளிக்க முயன்றவள் கடைசியில் மனதில் இருந்ததை சொல்லிவிட்டாள்.

 

 

எதிர்புறம் மீண்டும் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது. பின் தன் தொண்டையை செருமிக் கொண்டவன் “நான்இன்னைக்கு நைட்டே டிக்கெட் கிடைக்குதா பார்க்கறேன்”

 

 

“இல்லன்னா நாளைக்கு கிளம்பறேன். கிளம்புறதுக்கு முன்னாடி உனக்கு போன் பண்ணுறேன். தேங்க்ஸ் மித்ரா” என்றான்.

 

 

“எதுக்கு??” என்றாள்.

 

 

“எல்லாத்துக்கும் தான்” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பது இப்போதும் அவளுக்கு புரியவில்லை.

 

 

சொன்னது போலவே ஊருக்கு வந்து சேர்ந்தான் அவன்.அதற்குள் வேணிக்கு விஷயம் தெரிந்து அவள் வந்து அவள் பங்குக்கு ஒரு குதி குதித்தாள். ஈஸ்வரியும் அவளுமாக சேர்ந்துக் கொண்டு அவளுக்கு பூமாரி தேன்மாரி(!) பொழிந்து தள்ளினார்கள்.

 

 

அவள் அக்காவின் கணவன் மட்டும் அவளருகில் வந்தவன் “நீ ஒரு முடிவெடுத்தா தப்பாயிருக்காதுன்னு தெரியும்மா மித்ரா. நீ உன் மனசுப்படி நல்லாயிருப்ப” என்ற வார்த்தையை அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

 

 

“தேங்க்ஸ் மாமா” என்றாள் மனமார்ந்து.இந்த வீட்டு ஆண்கள் தன்னை புரிந்த அளவுக்கு பெண்கள்புரிந்து கொள்ளவில்லையே என்று கவலை கொண்டாள் மித்ரா.

 

 

இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவதாக சைதன்யன் போன் செய்திருந்தான். அவளின் தந்தை வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரை தேடிச் சென்றாள்.

 

 

“அப்பா அவர் வந்திட்டு இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவார்ப்பா” என்று கையை பிசைந்த வாறே வந்து நின்ற அவர் மகள் அவருக்கு புதிதாய் தெரிந்தாள்.

 

 

“சரிம்மா எங்க இருக்காங்கன்னு கேளு. வீடு தெரியாம இருக்க போறாங்க நான் போய் அழைச்சுட்டு வர்றேன்” என்றார்.

 

 

“மாமா… மாமா தான் வழிக்காட்ட போயிருக்காங்கப்பா. அவங்க வீட்டுக்கு வந்திடுவாங்க”

 

 

“சரி நீங்க உள்ள போங்க. அம்மாவை வரச் சொல்லுங்க” என்றார். அவளோ நகராமல் தயங்கி நிற்க “என்னம்மா” என்றார்.

 

 

“அம்மா கோவமா இருக்காங்கப்பா. நான் கூப்பிட்டா திட்டுவாங்க, நீ… நீங்களே கூப்பிடுங்கப்பா”

 

 

“சரிம்மா நீ உள்ள போய் வேறசேலைய கட்டு. அம்மாவை நான் கூப்பிட்டுகிடுதேன்” என்றார்.

 

 

அவசரமாய் அவள் அறைக்கு சென்று அவளுக்கு பிடித்த புடவையை எல்லாம் அலச ஆரம்பித்தாள். அவளுக்கு மிகப்பிடித்த மயில்பச்சை நிற பட்டுப்புடவை கண்ணில் பட அதையே எடுத்து உடுத்தினாள்.

 

 

வேணிதனக்கு வேலை இருப்பதாக சொல்லி கிளம்பிவிட்டிருந்தாள். புடவையை கட்டும் போது உள்ளூர ஒரு வலி எழவே செய்தது அவளுக்கு.

 

 

அம்மா, அக்கா என்று சுற்றி நின்று மாப்பிள்ளை பார்க்க தயாராகி இருக்க வேண்டியவள் இப்படி தனக்கு தானே அலங்காரம் செய்துக் கொள்ள வேண்டிய நிலையை எண்ணி லேசாய் கண்ணீர் அரும்பியது விழியோரத்தில்.

 

 

மனதிற்கு பிடித்தவனுக்காக தானே என்று எண்ணி தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். கண்ணில் மைத்தீட்டி முடிக்கவும் சைதன்யன் அழைக்கவும் சரியாக இருந்தது.

 

 

“சொல்லுங்க” என்றாள்.

 

 

“வீட்டு நம்பர் ரெண்டு கீழ ஒண்ணு தானே” என்றான்.

 

 

“ஆமா” என்றாள்.

 

 

“உங்க வீட்டு வாசல்ல தான் நிக்கறேன்” என்றான்.

 

 

“இதோ வர்றேன்” என்றவள் வேகமாய் வெளியில் வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்த தந்தையை காணவில்லை. அலங்காரத்துடன் வெளியில் வந்தவளை ஒரு நிமிடம் திகைத்து தான் பார்த்தான் அவன்.

 

 

“உள்ள வாங்க” என்றாள். அவனுடன் அவன் அன்னையும் வந்திருந்தார். இருவர்மட்டுமே வந்திருந்தனர்.

 

 

“உட்காருங்க” என்று இருக்கையை எடுத்து போட்டு இருவரையும் அமரச் சொன்னவள் “இதோ வந்திடறேன்” என்று உள்ளே சென்றாள். பின்கட்டில் தந்தையின் குரல் கேட்க “அப்பா அவங்க வந்தாச்சு” என்று சத்தமாய் குரல் கொடுத்தாள்.

 

 

அவரும் அவசரமாய் உள்ளே வந்தார். அதற்குள் சமையலறைக்கு சென்ற மித்ரா யாரிடமோ சொல்வது போல் “அவங்க வந்திருக்காங்க” என்று அன்னைக்கு கேட்குமாறு சொல்லிவிட்டு தண்ணியை இரு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

 

சொக்கலிங்கம் இரு கைக்கூப்பி இருவரையும்பார்த்து“வாங்க.. வாங்க… சுகமா இருக்கீங்களா…” என்றார்.

 

 

“நல்லாயிருக்கோம்” என்ற சைதன்யனை அளவெடுப்பது போல் பார்த்தார். என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று இருபுறமும் சற்று அமைதி காக்க சொக்கலிங்கமேஆரம்பித்தார்.

 

 

அதற்குள்ஈஸ்வரி கையில் காபி கோப்பையுடன் உள்ளே வந்தவர் அவள் அறை வாயிலில் நின்றிருந்த மித்ராவை ஒரு பார்வை பார்க்க அவசரமாய் அன்னையின் கையில் இருந்ததை வாங்கி இருவருக்கும் கொடுத்து தந்தைக்கும் கொடுத்தாள். “வணக்கங்க, சுகமா இருக்கீங்களா…” என்று வந்தவர்களை ஈஸ்வரியும் கேட்டு வைக்க மித்ரா ஆச்சரியமாக அன்னையை நோக்கினாள்.

 

 

எப்படியோ வந்தவர்களை அவர் மரியாதை குறைவாக நடத்தவில்லை என்பதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “தம்பி என்ன பண்றீங்க தெரிஞ்சுக்கலாமுங்களா??” என்றார்.

 

 

அவன் அதற்கு பதில் சொல்வதற்குள் மித்ரா அவசரமாக “அப்பா அவர் ஐஏஎஸ் பரிட்சை எழுதப் போறார்ப்பா” என்றாள்.

 

 

மகளையும் அவனையும் மாறி மாறி பார்த்தார். “அப்போ இப்போ எந்த வேலையும்” என்று அவர் சொல்வதற்குள் “அப்பா அவர் பிரிலிமினரி முடிச்சுட்டார். மெயின் எக்ஸாம் மட்டும் தான் அது முடிச்சதும் இண்டர்வ்யூ அப்புறம் ஒரு வருஷம் டிரைனிங்ப்பா” என்றாள்.

 

 

சொக்கலிங்கம் மகளை கண்டிப்பாய் பார்த்தார். “மித்ராப்ளீஸ் நானே பதில் சொல்லிக்கறேன்” என்று அவளை பார்த்து சொல்லிவிட்டு “மித்ரா உங்ககிட்ட என்னை பத்தி என்ன சொன்னான்னு எனக்கு தெரியாது”

 

 

“இப்போ நான் சொல்றேன் என்னை பத்தி முழுசா சொல்றேன். இவங்க என்னோட அம்மா மகேஸ்வரி. எனக்கு அப்பா இல்லைங்க கொஞ்ச வருஷம் முன்னாடி தவறிட்டாங்க”

 

 

“ஒரு தம்பியும் தங்கையும் தான் எனக்கு. எங்க குடும்பத்துக்கு நான் தான் இப்போ எல்லாமும். அப்பாவோட திடீர் இழப்பு எங்க குடும்பத்தை நிலை குலைய வைச்சுடுச்சு”

 

 

“அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு என்னை படிக்க வைச்சுட்டாங்க. படிப்புக்கு தகுந்த வேலைக்கு நான் ஒரு பக்கம் முயற்சி பண்ணிட்டு இருந்தாலும் டிரைவிங் கத்துக்கிட்டு வண்டி ஓட்டினேன்”

 

 

“அங்க தான் மித்ராவை பார்த்தேன். அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்”

 

“என்னடா மித்ரா ஐஏஎஸ் படிக்கறார்ன்னு சொன்னாளேன்னு யோசிக்க வேண்டாம். அது முழுக்க முழுக்க உண்மை தான். நான் கலெக்டர் ஆகணும்ங்கறது எங்கப்பாவோட விருப்பம்”

 

 

“எப்படியோ பிரிலிமினரி முடிச்சுட்டேன். இனி மெயின் எக்ஸாம் தான் எப்படியும் நான் கலெக்டர் ஆகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”

 

 

“உங்க பொண்ணை நான்கடைசிவரைநல்லா பார்த்துக்குவேன். எந்த நிலையிலயும் கஷ்டப்படவிட மாட்டேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு என் மேல இருந்தா என்னை நம்பி உங்க பொண்ணை எனக்கு கொடுங்க” என்றான் அவன்.

 

 

சொக்கலிங்கம் ஒரே நிமிடம் கண்ணை மூடி யோசித்தார். அதற்குள்அவன் அன்னை பேச ஆரம்பித்தார். “தப்பா எடுத்துக்காதீங்க அய்யா. நான் குறுக்க பேசறேன்னு”

 

 

“இந்த மாதிரி நல்ல காரியத்துக்கு நான் முன்ன நிற்க கூடாது தான். ஆனா என் மகன் நீங்க தான்ம்மா எனக்கு எல்லாம்ன்னு சொல்லி என்னை அழைச்சுட்டு வந்துட்டான்”

 

 

“தப்பிருந்தா மன்னிச்சிருங்க. இவன் என் மகன் அப்படிங்கறதால சொல்லலை, மத்த பிள்ளைங்க மாதிரி இவன் கிடையாதுங்க. நல்ல உழைப்பாளி. இவங்க அப்பா போன பிறகு இவனோட படிப்புக்காக நான் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்”

 

 

“படிப்பை முடிச்சதும் முத வேலையா நான் வேலைக்கு போகக் கூடாதுன்னு சொன்னான். இதோ இப்போ வரைக்கும் எங்க குடும்பத்தை அவன் தான் நல்லபடியா பார்த்துட்டு வர்றான்”

 

 

“உங்க பொண்ணை நீங்க நம்பி கொடுக்கலாங்க. நாங்க நல்லபடியா பார்த்துப்போம்” என்றார்.

 

 

இப்போது சொக்கலிங்கம் பேசவாரம்பித்தார். “என் பொண்ணு மேல எனக்கு எப்பவும் நம்பிக்கை உண்டுங்க. அவ தப்பா எதையும் செய்ய மாட்டான்னு நான் நம்புறேன்”

 

 

“உங்க வார்தையிலையும் எனக்கு நம்பிக்கை இருக்குங்க.இந்த நம்பிக்கை கொடுத்த தைரியத்துல சொல்றேங்க. எம் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுக்கறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேங்க” என்று தன் சம்மதத்தை மனைவியையும் கேளாமலே கொடுத்தார் அவர்.

 

 

“இந்த கல்யாணம் நீங்க கலெக்டர் படிப்பை முடிச்ச பிறகு வைச்சுக்கலாமே. நீங்க கலெக்டர் ஆனா தான் எம்பொண்ணுன்னு நான் சொல்ல வரலை

 

 

“அவளுக்கு நீங்க தான்னு இருந்தா அதை யார் தடுத்தாலும் ஒண்ணும் ஆகாது. உங்க படிப்புக்கு இடையூறா இருக்க வேண்டாமே. அதான் யோசிக்கறேன், நீங்க திரும்பி வந்து கேட்கரவரைக்கும் என் பொண்ணு உணளுக்காக காத்திட்டு இருப்பா என்றார் அவர்.

 

 

அவன் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் மித்ரா குறுக்கிட்டாள். “அப்பா அவர்க்கு தான் என்னை கட்டிக் கொடுக்கணும்ன்னா அதுக்கு எதுக்கு கால நேரமெல்லாம் பார்க்கறீங்க

 

 

“அவரோட படிப்புக்கு நான் எந்த வகையிலையும் தொல்லையா இருக்க மாட்டேன். இந்த கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்ன்னு நான் தான் அவ… அவர்கிட்ட சொன்னேன்

 

 

“அவர் ஊருக்கு போறதுக்கு முன்னாடியே எங்க கல்யாணம் நடக்கட்டும் என்றாள் அவள். எப்போதும் பேச்சின் குறுக்கே பேசுவது சொக்கலிங்கத்திற்கு பிடிக்காது என்பதால் வீட்டினர் அவர் பேசும் போது எதையும் தடுத்து கூறமாட்டார்கள்.

 

 

ஆனால் இன்றோ மித்ரா அவர் பேச்சின் குறுக்கே அடிக்கடி இடையூறு செய்வதை ஒரு புருவ நெளிப்புடன் பார்த்தார் அவர். கணவரின் முடிவு தனக்கு பிடிக்காத போதும் அவர் குறுக்கே எதுவும் பேசவில்லை.

மித்ரா பேசியதும் சைதன்யன் ஏதோ கூற முற்பட இம்முறை அவள் அவனை எதுவும் பேசாமல் இரேன் என்பது போல் விழிகளால் கெஞ்ச அவனும் எதிர்த்து ஒன்றும் கூறாமல் அமைதியானான்.

 

 

தனக்காக தான் அவள் அப்படி பேசுகிறாள் என்று தெரியும் அவள் பேசியதை மறுக்கவும் முடியாமல் அவள் தந்தையிடம் தன்னால் என்று கூறவும் முடியாமல் தன் இயலாமையை எண்ணி தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன்.

 

 

ஏறிட்டு மகளின் முகத்தை பார்த்த சொக்கலிங்கம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று ஓரிரு நிமிடம் தவித்தவர் ஒரு முடிவுடனே பேச ஆரம்பித்தார்.

 

 

“கல்யாணம் சிம்பிளாவே இருக்கட்டும். உங்க ஊர்ல வேணாலும் கல்யாணம் வைச்சுக்கிடலாம். இந்த ஊர்ல வைச்சா சாதிசனமெல்லாம் தேவையில்லாம பேசுவாங்க”

 

 

“கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லி ஒரு விருந்து வைச்சுட்டா அதுக்கு பிறகு எவனும் எதுவும் பேச மாட்டான்”

 

 

“இங்க கல்யாணம் வைச்சா எதாச்சும் விவகாரம் செஞ்சு அதை கலைச்சு விட்டிருவாங்க. அந்த ரசாபாசம் எல்லாம் வேண்டாம்”

 

 

“சீக்கிரமே ஒரு நல்ல நாளா பார்த்து நீங்களே சொல்லுங்க. நாங்களும் ஏற்பாடு எல்லாம் பண்ணணும். எங்க பொண்ணுக்கு சீர்… என்று அவர் ஆரம்பிக்கும் போது இம்முறை குறுக்கிட்டது சைதன்யன்.

 

 

“சீர்செனத்தி நகைநட்டுன்னு எதுவுமே வேண்டாம். எனக்கு உங்க பொண்ணு மட்டும் போதுங்க என்றான்.

 

 

ஒரு நிமிடம் அதை கேட்டு அகமகிழ்ந்து போனாலும் சொக்கலிங்கம் அதை ஒப்பவில்லை. “உங்களுக்கு எதுவும் தேவையில்லாம இருக்கலாம். என் ஆசைக்காக என் பொண்ணுக்கு நான் செய்ய வேண்டியது செஞ்சு தான் அனுப்புவேன்

 

“நான் சொல்றதை சொல்லிட்டேன் அதுக்கு மேல உங்கஇஷ்டம் என்றான்.

 

 

இந்த கணம் மித்ராவிற்கு சற்று பெருமிதமாய் இருந்தது. எதுவுமே வேண்டாம் தான் மட்டும் போதும் என்று சொல்லும் சைதன்யன் ஒரு புறம். என் பெண்ணுக்கு நான் செய்கிறேன் என்று சொல்லும் தந்தை ஒரு புறம் மனதிற்குள் மிகவும் மகிழ்வாக உணர்ந்தாள் அவள்.

 

 

விரைவிலேயே ஒரு நல்ல நாள் பார்த்து அவர்கள் சொல்ல அந்த நாளும் இதோ அதோ என்று நகர்ந்து விடிந்தால் திருமணம் என்றதில் வந்து நின்றது…

Advertisement