Advertisement

அத்தியாயம் – 4

 

 

மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.

 

 

தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா என்று சத்தமாக கூவினாள்.

 

 

“என்னாச்சுடா அப்பாவை பார்த்து மாசக்கணக்கானதும் தேடுதீங்களா?? குரல் உசத்தியா வருது என்றவரின் குரலில் இருந்தது கண்டிப்பா இல்லை பெருமையா என்பதை சத்தியமாக அவளால் உணர முடியவில்லை.

 

 

“கார்லயாப்பா வந்தீங்க??

 

 

“ஆமாம்மா நாளைக்கு விசேஷம் இல்லையா. வீட்டுல இருக்க எல்லாருக்கும் ஜவுளி எடுக்கலாம்ன்னுட்டு நான் கார் எடுத்திட்டு வந்திட்டேன். வண்டி யாருதுன்னு தெரியுதா நம்ம செல்வராசுடா

 

 

“ஹாய் செல்வாண்ணா என்று குரல் கொடுக்க அவள் தந்தை அவளை பார்த்தார். “எப்படியிருக்கீங்க, மதினி குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?? என்று சற்று இறங்கிய குரலிலேயே கேட்டாள்.

 

 

“எல்லாரும் நல்லாயிருக்காங்க மித்ரா. நீ என்னம்மா இப்படி ஒடுங்கி போய்ட்ட??

 

 

“அண்ணே சும்மா சொல்லாதீங்க நான் நல்லாத்தேன் இருக்கேன் என்றாள்.

 

 

“சரி போவோமா என்ற சொக்கலிங்கம் அவள் உடைமைகளை வண்டியில் வைத்திருந்தார். “போகலாம்ப்பா என்றாள்.

 

 

சொக்கலிங்கம் இன்று நேற்றல்ல எப்போதுமே இப்படி தான் இருப்பார். அவர் எதை உணர்த்த வருகிறார் என்பதை அவர் குரலில் இருந்து கண்டுக்கொள்ளவே முடியாது. சிறு வயதில் இருந்தே மித்ராவிற்கு சற்று பிடிவாத குணமுண்டு.

 

 

அவள் பிடிவாதம் பிடிப்பது தேவையில்லாத எதற்குமல்ல நல்ல விஷயத்திற்கு மட்டுமே அதை செய்வாள். அவள் அக்கா திரிவேணி அதே ஊரிலேயே பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து அதுவே போதும் என்று வீட்டினர் சொல்ல அவளும் தலையசைத்து விட அடுத்து என்ன அவளுக்கு உறவில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து மணமுடித்தும் அனுப்பிவிட்டனர்.

 

 

மித்ராவிற்கு படிப்பின் மீது எப்போதும் ஒரு மோகம், நன்றாக படிக்கும் அவளை அவள் ஆசிரியர் ஊக்கப்படுத்த அது கொடுத்த தைரியத்தில் பத்தாவது முடித்ததுமே வெளியூரில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்தவளை அவள் விருப்பப்படியே வெளியூரில் படிக்க வைத்தார் தந்தை.

 

 

வீட்டினர் எதிர்த்தும் அவள் படிப்பதற்காக வெளியூர் சென்றாள். கல்லூரியும் அதே ஊரிலேயே முடித்தவளுக்கு படிக்கும் போதே கேம்பஸில் தேர்வாகிவிட சந்தோசத்துடன் அந்த விஷயத்தை சொல்ல ஊருக்கு வந்தால் மீண்டும் ஒரு எதிர்ப்பலை கிளம்பியது.

 

 

அவர்களை சரிசெய்து அடம்பிடித்து அப்படி இப்படி என்று எப்படியோ சென்னைக்கு வேலைக்கும் சென்று இதோ ஒன்றரை வருடத்திற்கும் மேலேயே கடந்திருந்தது.

 

 

வீட்டில் அவள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் முதலில் எதிர்க்கும் தந்தை அவளை கடைசியில் ஆதரித்து அவள் முயற்சிக்கு ஊக்கம் கொடுப்பார்.

 

 

பார்ப்பவர்களுக்கு அவர் முரடர் போன்று தோன்றினாலும் மகளின் மீது உள்ள பாசத்தில் நம்பிக்கையில் எப்போதும் அவள் வழியே அவர் நிற்பார். அது கொடுத்த தைரியம் தானோ என்னவோ இப்போது மனதிற்கு பிடித்தவனை கைப்பிடிக்க அவர் சம்மதம் கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொண்டாள்.

 

 

“காபி எதும் குடிக்கறீங்களா?? என்ற குரலில் கலைந்தவள் “ஹ்ம்ம் சரிப்பா என்றாள்.

 

 

“பல் எல்லாம் விளக்கினீங்களா??

 

 

“அதெல்லாம் ட்ரைன்லேயே ஆச்சுப்பா

 

 

“அப்போ பலகாரம் வேணா சாப்பிடுறீங்களா??

 

 

“வேணாம்ப்பா டிபன் வீட்டுக்கு போய் அம்மா கையால சாப்பிட்டா தான் திருப்தியா இருக்கும். இப்போ காபி மட்டும் போதும்ப்பா என்றாள்.

 

 

சொக்கலிங்கத்திற்கு மகளை நினைத்து எப்போதும் ஒரு பெருமிதம் உண்டு. அவர்கள் குடும்பத்தில் மெத்த படித்தவள் அவள் மட்டுமே, என்ன தான் பெரியவள் வேணி அவர் சொல் கேட்டு நடக்கும் பெண் என்றாலும் சிறியவளின் மேல் ஒரு தனி பிரியம் அவருக்கு உண்டு.

 

 

மித்ராவை பார்த்து வெளியூருக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து சென்ற தன் மைத்துனியின் மகள் சென்னைக்கு சென்று திரும்பி வரும் போது ஜீன்ஸ்பேன்ட்டும் கண்ணாடி போன்ற டாப்புமாய் திரும்பி வந்த போது ஊரே தலையில் அடித்துக் கொண்டது அவள் உடை பார்த்து.

 

 

இப்படி அரைகுறையாய் வந்திருக்கிறாளே என்று திட்டித்தீர்த்தது, ஆனால் மித்ரா அவள் போலெல்லாம் இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாய் இருப்பதில் அவருக்கு சற்று கர்வமே.

 

 

அவர் கர்வத்திற்கு அடியாய் ஒரு நாள் ஊரில் இருந்து வந்திருந்தவளின் உடைகளின் ஊடே இருந்த ஜீன்ஸ்பேன்ட்டை பார்த்ததும் முகம் சுளித்த சொக்கலிங்கம் “என்னம்மா இது இதெல்லாம் நீ எப்போ போட ஆரம்பிச்ச, நமக்கெல்லாம் இது சரியா வருமா என்றார்.

 

பெண்களின் உடை விஷயத்தில் எப்போதுமே அவர் தலையிட்டதில்லை. அவர்களும் அப்படி இருந்ததில்லை. ஆனால் எங்கே தன் பெண்ணும் மைத்துனியின் பெண் போல் ஆகிவிடுவாளோ என்ற பயத்தில் அதை கேட்டுவிட்டார்.

 

 

அப்போது எதுவுமே அவருக்கு பதில் சொல்லாதவள் உள்ளே சென்று விட்டாள். ‘என்ன இந்த பெண் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் சென்றுவிட்டாளே. கொஞ்சமும் மரியாதை இல்லையே என்று நினைக்கும் போதே திரும்பி வந்தாள்.

 

 

“எப்படிப்பா இருக்கு?? இந்த ட்ரெஸ் எனக்கு நல்லா இல்லையா?? என்றாள்

 

 

அதே ஜீன்ஸ் பேன்ட்டை போட்டுக் கொண்டு வந்தவள் அதற்கு மேலாக முழங்காலை தொடுகின்ற டாப்பும் கழுத்தில் துப்பட்டாவுமாகவே திரும்பி வந்திருந்தாள்.

 

 

‘தப்பா ஒண்ணும் தெரியலையே என்று மனதிற்குள் நினைத்தவர் அதன்பின் மகளின் விஷயத்தில் பெரிதாய் எதுவும் கேள்வி கேட்டதில்லை.

 

 

மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கும் பெண் வாங்கும் சம்பளத்தில் இருபதாயிரத்தை அப்படியே ஊருக்கு அனுப்பிவிடுவாள். சென்னைக்கு வந்த புதிதில் ஒரு சாதாரண விடுதியில் தங்கியிருந்தவளை சொக்கலிங்கம் தான் வேறு நல்ல விடுதிக்கு மாற்றிவிட்டார்.

 

 

மீதமிருக்கும் இருபதாயிரத்தில் விடுதிக்கு மாதம் பத்தாயிரம் சென்று விடும். கையிருப்பு பத்தாயிரம் கூட அவளுக்காக அதிகம் செலவு செய்யாதவள் அக்கா பிள்ளைகள் அர்ஜுனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் உடைகள் வாங்குவதிலும் ஊருக்கு வருவதற்கு டிக்கெட் மற்றவர்களுக்கு பரிசுகள் என்று வாங்குவதற்குமே செலவு செய்வாள்.

 

 

அப்பாவும் பெண்ணுமாக ஆளுக்கு ஒரு சிந்தனையில் இருக்க மித்ராவிற்கு ஏனோ இப்போதே வந்த விஷயத்தை சொல்லிவிட்டால் நல்லது என்று தோன்ற ஆரம்பித்தது.

ஊருக்கு சென்றுவிட்டால் பண்டிகை என்பதால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதும் போவதுமாக இருப்பர்.இப்போதே சொல்லிவிட்டால் சரியாக இருக்கும் என்று மனம் உறுதியாக நம்பத் தொடங்கியது.

 

 

“அப்பா… என்று மெதுவான குரலில் அழைத்தாள்.

 

 

“இதோ வந்திடுச்சும்மா என்றவர் “ராசு வண்டியை அந்த ஹோட்டல்ட்ட நிறுத்துப்பா ஒரு காபி சாப்பிட்டுகிடுவோம் என்றார்.

 

 

“இதோ நிறுத்துறேங்க என்றவர் வண்டியை ஓரம் கட்டினார்.

 

 

“நீயும் வா ராசு என்று சொக்கலிங்கம் அழைக்க “வேண்டாம் அய்யா நான் காபி டீ கொடுக்கிறதில்லை. நான் அந்தா எதிர்த்தாப்புல இருக்கற அந்த கடையில போய் ஒரு இளநீர் சாப்பிட்டு இருக்கேன்

 

 

“நீங்க வந்துட்டா எனக்கு போன் போடுங்க என்றவன் வண்டியை பூட்டிவிட்டு எதிர்ப்புறம் நகர்ந்தான்.

 

 

‘அப்பாடா அண்ணனும் கிளம்பிட்டாரு அவரும் கூட வந்தா எப்படி பேசுறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள் தந்தையுடன் கடைக்குள் நுழைந்தாள். இருவருக்குமாக ஆளுக்கொரு காபியை சொன்னவர் வந்ததும் எடுத்து அருந்த ஆரம்பித்திருந்தார்.

 

 

மித்ரா ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக தெரிய ‘என்கிட்ட கேட்கணும்னு தயங்குறாளே, இப்போ என்ன பிடிவாதம் பிடிக்க போறான்னு தெரியலையே என்று யோசித்தவர் “என்ன மித்ரா என்ன சொல்லணும் உனக்கு?? என்றார்.

 

 

“அப்பா அது வந்து ஒரு முக்கியமான விஷயம் அதை இப்போவே உங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு தான்…

 

 

“அதான் என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கேன்??

 

“சென்னையில எனக்கு ஒருத்தரை பிடிச்சு போச்சுப்பா. அவர் பேரு சைதன்யன் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க விரும்புறோம்ப்பா என்று நேரடியாகவே விஷயத்தை போட்டு உடைத்துவிட்டாள் அவள்.

 

 

சொக்கலிங்கம் இந்த விஷயம் கேட்டு ஆடித்தான் போய்விட்டார். ஒரு கணம் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை மறுகணமே மறைத்தவர், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டார்.

 

 

மித்ரா அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் எதுவும் பேசுவாரா என்று ஆனால் அவர் அழுத்தமாய் வாய் திறவாமல் இருந்தார்.

 

 

“அப்பா… அப்பா… என்று மெதுவாய் அழைத்துப் பார்த்தாள் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

 

 

“கோவமாப்பா எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க

 

 

“என்ன பேசணும்ன்னு தெரியலை?? காபி சாப்பிட்டாச்சா போவோமா என்று எழுந்துவிட்டார் அவர்.

 

 

“ஊருக்கு வந்து எதுவும் உளறிகிட்டு இருக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் ஏறினார் அவர். அவள் வீட்டிற்கு சென்று கார் நிற்கவும் “எனக்கு அவசர வேலையிருக்கு அம்மாகிட்ட சொல்லிரு, நான் இப்படியே கிளம்புறேன் என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

 

 

அவளுக்கு தான் துக்கம் தொண்டை அடைப்பது போல் இருந்தது. உள்ளிருந்து வெளியில் வந்த ஈஸ்வரியை கண்டதும் “அம்மா என்று கூவி ஓடிச்சென்று அணைத்துக் கொண்டாள் அவள்.மித்ராவின் அன்னைக்கும் அவள் மாமியாருக்கும் ஒரே பெயர் தான்.

 

 

“என்ன மித்ரா இப்படி வந்து கட்டிக்கிற, என்னடா அம்மாவை தேடுதா. கண்ணு வேற கலங்குது இதுக்கு தான் உங்கப்பாகிட்ட சொன்னேன் உன்னை வேலைக்கு அனுப்ப வேணாம்ன்னு

 

“அவரு எங்க என் பேச்சை கேட்குறாரு. நீ கேட்டன்னு உன் இஷ்டத்துக்கு தலையாட்டுறாரு. பாரு உடம்பு எப்படி வத்திபோயிருக்குன்னு

 

 

“உங்க ஹாஸ்டல்ல ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்களா?? நல்ல இடம்ன்னு தானே உங்கப்பா சொன்னாரு என்று அங்கலாய்த்தார் அவர்.

 

 

“அம்மா அதெல்லாம் நல்ல சாப்பாடு தான். நீங்க சும்மா சொல்லாதீங்க. என்னைய ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறீங்கள்ள அதான் உங்களுக்கு அப்படி தோணுது

 

 

“ஆமா வேணியக்காவும் மாமாவும் வரலையா இன்னும். பிள்ளைங்க எங்க வீடு இவ்வளவு அமைதியா இருக்கு என்று அவள் சொல்லி முடிக்கவும் “சித்தீ… என்று அவள் அக்காவின் மக்கள் ஓவென்று இரையவும் சரியாக இருந்தது.

 

 

“அக்கா வேலைக்கு போவுதா, அவளுக்கு எங்க நேரமிருக்கு. உங்க மாமன் இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருந்தா இதெல்லாம் அவளுக்கு தேவையா

 

 

“ஏதோ எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரு அதைத்தான் நாம நினைச்சுக்கிடணும் என்றார் ஈஸ்வரி. “அம்மா!! அப்போ அக்கா என்னைய பார்க்க வராதா

 

 

“பிள்ளைங்களை அவதேன் காலையில வந்து விட்டுட்டு போனா?? வேலை முடிஞ்சு நேரே இங்க தான் வாரேன்னு சொல்லியிருக்கா. சரி சரி உனக்கு பின்னாடி தண்ணி விளாவி வைச்சுருக்கேன். போய் முதல்ல குளி

 

 

“ஹ்ம்ம் சரிம்மா என்றவள் சிறிது நேரம் அர்ஜுனிடமும் ஐஸ்வர்யாவிடமும் கொஞ்சிவிட்டு அவர்களுக்கு வாங்கி வந்திருந்த உடைகளையும் பொம்மைகளையும் எடுத்துக்கொடுத்துவிட்டே குளிக்கச் சென்றாள்.

 

 

குளித்துவிட்டு அவள் அறைக்கு செல்லும் போது தான் சைதன்யன் தன் அழைப்பிற்காக காத்திருப்பான் என்று தோன்ற கதவை அடைத்துவிட்டு அவனுக்கு போன் செய்தாள்.

 

 

ஒரே ரிங்கிலேயே போனை எடுத்தவன் “சொல்லு மித்ரா, ஊருக்கு நல்லபடியா போய் சேர்ந்துட்டியா?? ஒண்ணும் பிரச்சையில்லையே

 

 

‘இது கூட நல்லா தான் இருக்கு, நம்மையும் நல்லபடியா ஊருக்கு போயிட்டியான்னு கேட்க ஒரு ஆளு இருக்கே என்று எண்ணிய மனசாட்சியை அறிவு டொக்கென்று கொட்டியது ‘ஏன் அம்மா அப்பா எல்லாம் உன்னை கேட்டதில்லையா என்று.

 

 

அறிவு சொன்னதை மனம் கேட்டால் தானே அது நொண்டி சமாதானம் சொன்னது ‘கேட்டிருக்காங்க ஏன்னா நான் அவங்க பொண்ணு ஆனா இது வேற தானே என்று.

 

 

“மித்ரா… மித்ரா…

 

 

“ஹலோ!!! ஹலோ!!! மித்ரா இருக்கியா!!!

 

 

“ஹான் இருக்கேன், சாரி அம்மா கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் கவனிக்கலை. நான் நல்லபடியா ஊருக்கு வந்திட்டேன், அப்பா தான் வந்து அழைச்சுட்டு போனார்

 

 

“வந்து… வந்து… நான் அப்பா கூட கார்ல வரும் போதே அவர்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அவர் எதுவும் பதில் பேசவேயில்லை, என்ன சொல்லுவார்ன்னு தெரியலை

 

 

“ஏன் அவசரப்பட்டு சொன்னீங்க?? என்றதும் அவள் தந்தையிடம் பேச முயன்ற காரணத்தை அவனிடம் கூறினாள்.

 

 

“இங்க விசேஷம்னால வீட்டுக்கு ஆளுங்க வர்றதும் போறதுமா இருப்பாங்க. அப்பாகிட்ட எப்போ பேச சந்தர்ப்பம் கிடைக்கும்ன்னு தெரியலை. அதான் கிடைச்ச சந்தர்ப்பத்தை விடாம சொல்லிட்டேன் என்றாள்.

 

 

அதற்குப்பின் என்ன பேச என்று இருவருக்கும் தெரியாததால் “அப்புறம் பேசறேன் என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட்டான். அவளுக்கு தான் சற்று ஏக்கமாக இருந்தது அவன் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமோ என்று.

 

 

இரண்டு நாட்கள் பொழுது எப்படிச் சென்றதோ தெரியவில்லை அவளுக்கு. பொங்கல் பண்டிகை வேகமாக கடந்து சென்றிருந்தது. சொக்கலிங்கம் ஊரில் இருந்து வந்த அன்று மகளிடம் பேசியது தான் அதன் பின் ஒரு முறை கூட அவர் அவளிடம் பேசவில்லை.

 

 

கோவிலில் பொங்கல் வைக்கச் சென்ற போது மட்டும் மனைவியிடம் சொல்லி மகளை பொங்கல் வைக்கச் சொன்னார். வேணியும் அவள் கணவன் பாண்டியனும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு ஊருக்கு செல்லும் போது குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிட்டனர்.

 

 

“என்னக்கா அதுக்குள்ள ஊருக்கு கிளம்புற, பசங்க என்ன ஐஏஎஸ்க்கா படிக்குது. ஒரு நாலு நாள் நான் இங்க இருக்கறவரை லீவு போடக்கூடாதா என்று அங்கலாய்த்தாள்.

 

 

“வேணாம் மித்தும்மா பசங்க உன்னைய போல நல்லா படிக்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன். என்னைய மாதிரி படிக்காம விட்டா பின்னாடி கஷ்டப்படுவாங்க. நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்

 

 

“நீ ஊருக்கு போற முத நாளு நான் பிள்ளைங்களை கூட்டியாந்து விடுறேன் போதுமா என்று தங்கைக்கு சமாதானம் கூறினாள் அவள்.

 

 

“என்னமோ போக்கா நீ சொல்ற நான் கேட்டுக்கறேன் என்றவள் அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வர எதிர்வீட்டு கணேசன் “என்ன திரிவேணிசங்கமம் ரெண்டும் வெளிய நிக்கி, ரொம்ப வருஷம்க்கு அப்புறம் பாக்கேன் என்றவனை முறைத்தாள் மித்ரா.

 

 

“உன்னை எத்தனை தரம் அப்படி சொல்லாதன்னு சொல்லுறது புரியாதாடா உனக்கு என்று சத்தம் போட்டாள்.

 

 

“மித்ரா அவன்கிட்ட எதுக்கு வாயை கொடுக்குற விடு என்று அடக்கினாள் திரிவேணி.

 

 

கணேசன் உறவுவகையில் இருவருக்கும் மாமன் முறை மித்ராவை விட ஒரு வயது பெரியவன் அக்காள் தங்கை இருவரும் தெருவில் ஒன்றாக சென்றால் இப்படி தான் அழைத்து அவர்களை கிண்டல் செய்வான்.

 

 

மித்ராவுக்கு அவன் அப்படி கூப்பிடுவது பிடிக்காதென்பதால் அவனை திட்டுவதும் முறைப்பதுமாக இருப்பாள்.

 

 

“நீ சொல்றியேன்னு விடுறேன், இல்லைன்னா அவனை ஒருவழியாக்கியிருப்பேன். பொம்பிளையா அவன் எப்போ பார்த்தாலும் பொம்பிளை பிள்ளைக கூட பேசுறதும் பார்க்கறதும் கிண்டல் அடிக்கிறதுமாவே இருக்கான்

 

 

“ஒரு நாளாச்சும் இவன் ஆம்பிளைக கூட நின்னு பேசி நீ பார்த்திருக்க என்று சடைத்தாள்.

 

 

“சரி விடு மித்ரா. நான் கிளம்புறேன் உங்க மாமா பஸ்ஸை நிறுத்தப் போயிருப்பார், நேரமாச்சுன்னா சத்தம் போடுவார் என்றவள் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு நடையை கட்டினாள்.

 

 

வீடே அமைதியாக இருந்தது பேசாமல் ஊருக்கு கிளம்பிவிடலாமா என்று தோன்றிய மனதை முடிவு தெரியாமல் கிளம்பக் கூடாது என்ற எண்ணம் தடுக்க பல்லைக்கடித்து பொறுத்துக் கொண்டாள்.

 

 

அன்று இரவு வீட்டிற்கு வந்த சொக்கலிங்கம் “ஈஸ்வரி என்று உரக்க அழைத்தார் மனைவியை.

 

 

“என்னங்க என்றவாறே அவர் முன் தண்ணி சொம்பை நீட்டினார் ஈஸ்வரி.

 

 

“நாளைக்கு மதுரையில இருந்து உங்கண்ணன் சிவகணேசன் மகன் அதான் அந்த அமெரிக்காவுல வேலை பார்க்குறாரே பேரு கூட ஷியாமு. அவரை நம்ம மித்ராவை வந்து பார்க்க சொல்லலாம்ன்னு இருக்கேன்

 

 

“அவங்களுக்கும் ரெண்டு வருஷமா கேட்டுகிட்டு இருக்காங்க. நாம இந்தா அந்தான்னு இழுத்துக்கிட்டு இருந்தோம். அதான் சம்மதம் சொல்லிறலாம்ன்னு நினைக்கேன். நீ என்ன சொல்லுற என்றார்.

 

 

“நான் என்ன சொல்லப் போறேன் சரின்னு தான் சொல்லுவேன். நீங்க தான் இரண்டு வருஷமா வீணாக்கிட்டீங்க உங்க மகளுக்கு சப்போர்ட்டு பண்ணி என்று இடித்தார் அவர்.

 

 

வெளியே நடந்த பேச்சுக்குரல் உள்ளே இருந்த மித்ராவுக்கு கேட்க அவளுக்கு தந்தையின் மீது கோபம் வந்தது. தான் சொல்ல வந்த விஷயத்தை முழுதாக கேட்கவில்லை.

 

 

கேட்ட பிறகாவது அவர் இப்படி எதுவும் செய்திருந்தால் கூட ஒன்றும் தோன்றியிருக்காது போல இப்படி திடுதிப்பென்று நாளையே மாப்பிள்ளை பார்க்க வரச்சொல்லி சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கனன்றது.

 

 

“மித்ரா இல்லையா வீட்டில!!” என்றார்.

 

 

“உள்ளதேன் இருக்கா??

 

 

“கூப்பிடு

 

 

“மித்ரா… மித்ரா அப்பா கூப்பிடுறாங்க வந்து என்னன்னு கேளு என்று ஈஸ்வரி வெளியில் இருந்து சத்தமாக குரல் கொடுத்தார்.

 

 

“உன்னை எத்தனை முறை சொல்லுறது இப்படி சத்தம் போட்டு கூப்பிடாதேன்னு. அவ ரூமுக்கு போய் கூப்பிட்டு வா என்று அவர் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மித்ரா வந்தாள்.

 

 

“என்னம்மா என்றாள் அன்னையிடம்.

 

 

“கூப்பிட்டது உங்கப்பா, என்னைய வந்து என்னம்மான்னு கேக்குற

 

 

“நீங்க தான் மித்ரான்னு என்னை கூப்பிட்டீங்க. அப்பா கூப்பிடலை என்று இரண்டு நாளாக அவர் பேசாமல் இருந்த கோபத்தை மனதில் வைத்து சொன்னாள்.

 

 

“உங்கம்மா தான் கூப்பிட்டா இல்லைங்கலை. நான் பேசணும்னு சொன்னேன் அதுக்குத்தேன் கூப்பிட்டா

 

 

“நாங்க பேசினது…

 

 

“விழுந்துச்சு… என்றவள் அவர் முகம் பார்க்காமலே பேசினாள்.

 

 

“ஏய் என்னதிது புது பழக்கம் அப்பா பேசறாங்க எங்கயோ பார்த்திட்டு பதில் சொல்லுற. இதை தான் நீ ஊர்ல போய் படிச்சியா, இதுக்குத்தேன் உன்னைய ஊருக்கெல்லாம் போய் வேலை பாக்க வேணாம்ன்னு நான் அடிச்சுக்கிட்டேன் என்று மகளை கண்டித்தார் ஈஸ்வரி.

 

 

“என்ன விழுந்துச்சு??

 

 

“நீங்க சொன்னது காதுல விழுந்துச்சு. அதே போல ஊர்ல இருந்து வரும் போது நான் சொன்னதும் உங்க காதுல விழுந்திருக்கும்ன்னு நினைக்குறேன் என்று அவருக்கு ஏட்டிக்கு போட்டியாகவே பதில் கொடுத்தாள்.

 

 

“நீங்க பேசினது எதுவுமே என் காதுல விழுகலையே?? என்றார் சொக்கலிங்கம்.

 

“அப்போ இப்போ நீங்க பேசினதும் என் காதுல விழுகலை என்றாள்.

 

 

“ஏய் என்னடி பேசிக்கிட்டு இருக்க என்று முதுகில் ஒன்று வைத்தார் அவர்.

 

 

“ஈஸ்வரி பொம்பிளை பிள்ளைய அடிக்காதேன்னு சொல்லியிருக்கேன்ல. என்ன செஞ்சுட்டு இருக்க நீ?? என்று மனைவியை முறைத்தார்.

 

 

“சொல்லுங்க அன்னைக்கு என்ன சொன்னீங்கன்னு இப்போ சொல்லுங்க

 

 

“என்ன சொன்னா இவ!! ரெண்டு பேரும் எதை மறைச்சு இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க. எதுவா இருந்தாலும் உடைச்சு சொல்லுங்க என்று ஈஸ்வரி இடையில் கேட்டார்.

 

 

“உன் மவ யாரையோ விரும்புதாளாம் என்றதும் ஈஸ்வரி கோபமானார்….

Advertisement